ரமளான் சிந்தனை – 3 : ஏ.ஹெச்.ஹத்தீப்

நாம் ‘ஜியாரத்’என்று கூறுவதை, நவீன ஏகத்துவவாதிகள் ‘வழிபாடு’என வர்ணிக்கிறார்கள். ‘அல்லாஹு மன்ஃபஅனா பிஹிம் வபரகாதிஹிம்’என்றுதான் அவர்களது பிரார்த்தனைகள் துவங்குகின்றன. ‘எல்லாம் வல்ல இறைவா, இங்கே அடக்கமாகி இருக்கும் மகானின் பொருட்டால் எங்களுக்கு அருள் பொழிவாயாக’ என்பதே மொழியாக்கம். இங்கே ஏகத்துவ விரோதம் அல்லது ஓரிறைத் துரோகம் என்ன இருக்கிறது என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். எத்தனையோ தடவை எடுத்துக் கூறியும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதாகவோ திருத்திக்கொள்வதாகவோ தெரியவில்லை. ‘அரபி’ ஞானமற்றவர்கள்தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்றால் மெத்தப்படித்த பி.ஜெய்னுல் ஆபிதீன் போன்ற மாமேதைகளும்கூடத் திரும்பத் திரும்ப அப்படித்தான் சொல்கிறார்கள். ‘ஜியாரத்’ என்றால் ‘சந்திப்பு’ எனப் பொருள். “யாரைச் சந்திப்பது? உயிரோடு இருப்பவர்களையல்லவா சந்திக்க முடியும்? இறைநேசர்கள்தான் இறந்துவிட்டார்களே?”என்ற ஒரு குதர்க்கவாதம் இங்கே குறுக்கிடுகிறது. இதைப்பற்றி நிறையப் பேச வேண்டியுள்ளதால், பிரிதோர் இடத்தில் விவாதிக்கலாம். எனவே ஒருவேளை ஒரு பொய்யைப் பலமுறை உரைப்பதால் அதனை உண்மையாக மாற்றும் வித்தை தெரிந்தவர்களோ என்னவோ; தர்காவுக்குச் செல்பவர்களையெல்லாம், “அவர்கள் இறைநேசர்களை வழிபடச் செல்கிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே சொந்தம். எனவே ஜியாரத் என்பது இறைவனுக்கு இணைவைப்பது” என்று சொல்லிச்சொல்லியே தனது ஆதரவாளர்களை அவர்கள் மூளைச்சலவை செய்துவிட்டார்கள்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்: “ஜியாரத் செய்யுங்கள். பெண்களும் ஜியாரத் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்ற நபிமொழி, அவர்கள் நம்பும் நபிமொழித்தொகுப்புக்களிலிருந்தே நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களாகும். ஆக, இஸ்லாம் அனுமதி தந்த காரியங்களைக்கூடச் செய்வதற்கு அவர்கள் தடையிடுவதையும் சொற்போர் புரிவதையும் கூர்ந்து கவனிக்கையில், மார்க்கம் சார்ந்த விஷயத்தைத் தாண்டி வேறு ‘ஏதோ’ ஓர் உள்நோக்கம் அவர்களிடத்தில் மலிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

குடி,வட்டி,விபசாரம் போன்ற கொடுஞ்செயல்களைச் சாடுவதைக்காட்டிலும் ரமளான், ஹஜ் காலங்களில் ‘ஜியாரத்’தைத் தாக்குவதில்தான் அவர்கள் சொல்லெணா ஆர்வமும் ஆவேசமும் காட்டுகிறார்கள். அதனாலேயே அதை ‘வழிபாடு’ என்று வாதிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சமுதாயக் கொடுமைகள் அத்தனையையும் விடுத்துவிட்டு, இஸ்லாம் அனுமதித்த ஜியாரத்தை அவர்கள் முழுமூச்சுடன் எதிர்ப்பதற்கு அப்படி என்ன சிறப்புக் காரணம் இருக்க முடியும்?

அவர்கள் ஜியாரத்தைக் கையிலெடுக்கும் காலகட்டத்தைக் கூர்ந்து கவனிக்கையில் ஒரு சராசரி ஐயம் எழுகிறது: ஜக்காத், பித்ரா,குர்பானி போன்ற தானதர்மங்கள் இடம் பெறும் சமயங்களிலெல்லாம் முஸ்லிம்கள் பெருமளவில் தர்காவுக்கு வந்து அங்குள்ள எளியவர்களுக்கு அவற்றை அளிப்பது நீண்ட நாட்கள் பழக்கம். அதில் அவர்கள் மிகுந்த மனநிறைவும் திருப்தியும் அடைகிறார்கள். இல்லையெனில் இஸ்லாத்தில் புதுமையைப் புகுத்த விரும்புகிற மார்க்க ஜாம்பவான்கள் கூறுகின்ற லாஜிக்கையெல்லாம் மீறி, நோன்பைக் கடைபிடித்துக்கொண்டு நீண்ட தூரத்துக்கு வந்து இத்தகைய ‘மதவிரோத’ காரியங்களில் ஈடுபடப் போவதில்லை. ( “ஜக்காத்தை தர்காவில் இருக்கும் ஏழை எளியவர்களுக்குத்தான் அளிக்க வேண்டுமென்று எந்த குரானில்  கூறப்பட்டிருக்கிறது?”என்றுகூட வினாக்கள் எழுப்படுகின்றன.) ஜக்காத், பித்ராத் தொகைகளை முஸ்லிம்கள் உண்டியலில் இடுவது கிடையாது என்பது பகிரங்க உண்மை. எனினும் பாமர முஸ்லிம்கள் தர்கா போன்றதொரு புண்ணிய ஸ்தலத்தில் அப்படிப்பட்ட தர்ம காரியங்கள் செய்வதிலேயே திருப்தியடைகிறார்கள். அதில் தவறோ சட்டமீறலோ எதுவுமில்லை. வழங்க வேண்டிய தொகைகளை உரியவர்கள் அவர்கள் கைகளினாலேயே செய்கிறார்கள். ‘எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்கிறோம்’என்ற விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் அவர்கள் ஏற்பதில்லை. இப்படிப்பட்ட பிராக்ஸிகளுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதுகூட நவீன ஏகத்துவவாதிகளின் கூற்றுதான்.

இந்நிலையில், ‘ஜியாரத்’தை ஒரு மத விரோதக் காரியம் என்ற எண்ணத்தை மக்களின் மனத்தில் திணித்து விட்டால் ,ஜக்காத்தையும் பித்ராவையும் வழங்குவதற்கு ஓர் இடைத்தரகர் தேவைப்படுகிறார். அவர் மார்க்க அழைப்புப்பணி செய்பவர் என்று முத்திரை குத்தப்பட்டவராக இருந்தால் காரியம் இன்னும் சுலபம்.இங்கே ஜியாரத்தைத் தாக்குவதற்கு ஒரு நோக்கமிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது நிச்சயம் லௌகீகம் சார்ந்த விஷ்யமே தவிர, மார்க்கம் சார்ந்தது அல்ல. “ஜக்காத்தையும் பித்ராவை எங்களுக்கு அனுப்புங்கள்”என்று விளம்பரம் செய்யாமல் பிரச்சாரம் செய்யட்டுமே, பார்ப்போம்.
 

மற்றப்படி ஜியாரத், இஸ்லாத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலா என்பதை, இன்ஷா அல்லாஹ், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

ரமளான் சிந்தனை-2 : ஏ.ஹெச்.ஹத்தீப்

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய முக்கியத் தேடல்: இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா? குதர்க்கவாத மாமேதை இப்னு தைமிய்யா காலத்தில் விதைக்கப்பட்ட இந்த உருப்படாத சிந்தனை, இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

இந்தக் கோணத்தில்கூட நாம் சிலவற்றை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; ஏனெனில் திருமறையின் பற்பல இடங்களில் இலக்கியத்தின் வாசனை நம்மை வசீகத்திருக்கிறது. இந்த இலக்கியத்தன்மையை நுகராத மார்க்க அறிஞர்கள்தான் ‘முரண்பாடு’ எனப்படும் மாயையில் சிக்குண்டுத் தவிக்கிறார்கள் எனலாம்.

“மனிதன் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் அவனை நோக்கிப் பத்தடி எடுத்து வைக்கிறேன்”என்ற இறை வசனத்துக்கு, ‘இறைவன் கால்களால் விரைகிறான்’என்ற விளக்கம் பொருட்செறிவற்றது. ‘கால்கள் இல்லாமல் எப்படி அடியெடுத்து வைப்பது?’என்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமானது.

“எனது இரு விரல்களுக்கிடையே உங்கள் உள்ளம் இருக்கிறது. நான் எப்படி விரும்புகிறேனோ அப்படி இயக்குகிறேன்”என்ற இன்னொரு வசனம் இறைவனது விரல்களைக் குறிக்கிறது. ‘விரல்களின் இயக்கம்’என்பது இங்கே இறைவனது விருப்பதை மட்டுமே குறிக்கும். வெறுமனே விரல்களைப் பிடித்துக்கொண்டுத் தொங்க வேண்டியதில்லை. ‘அப்படித் தொங்கித்தான் தீருவேன்’என்பது வீண் பிடிவாதம்.அவர்களைத் திருத்த முயற்சிப்பதற்குப் பதிலாக அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

மற்றுமோர் இறைக்கருத்து இப்படி: “எங்கு திரும்பினும் என் முகம் இருக்கிறது.” –இது அங்கிங்கெணாதபடி இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பதற்குச் சான்றாகும். ‘முகம் என்று குறிப்பிடப்படுவதால் முகத்திற்குரிய அடையாளங்களான கண்கள்,கன்னங்கள்,தலை,மூக்கு,நெற்றி என்றெல்லாம் இருக்கத்தானே வேண்டும்’ என்று அடம் பிடிப்பது அறிவாளிகளின் செயலன்று.

மேலே குறிப்பிட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதாரமாகக்கொண்டு, இறைவனுக்கு ‘உருவம் உண்டு’என்று வாதிடுவது, இலக்கியத்தில் நிபுணத்துவம் பெறாத மார்க்க அறிஞர்களின் அறியாமை. அவர்களுடைய கண்டுபிடிப்புக்களை ஆமோதித்தால்,இறைவனின் உருவ அமைப்பு எப்படிப்பட்டது என்ற கேள்வி எழும். மனிதனா அல்லது டைனோஸர் போன்ற பிரம்மாண்டமான வடிவமா என்று கூறியாக வேண்டும். ஏனெனில் எல்லா உருவத்திற்கும் கால்கள்,கைகள், முகம், வயிறு ஆகியவை உண்டு. இதில் ஏதாவதொன்று என்று வைத்துக்கொண்டால்கூட அது ஆண்பாலா பெண்பாலா என்ற வினா வெடிக்கும். இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நபிமொழியுடன் முரண்படும் அபாயங்கள் உண்டு. அப்படியொரு போராட்டத்திற்கு உட்படுகிற சமயத்தில் “இந்த இரண்டில் எது ஏது தேவை? இறைவனா, நபிமொழியா?”என்று நமது இளைஞர்களிடம் கேட்கப்படும். “நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களோ அதையே அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் நீங்களே எங்களது நேரிய வழிகாட்டி”என்று நமது சமுதாய இளைஞர்கள் கூறுவார்கள். நமது மதப் பண்டிதர்கள் இப்போதைக்கு இறைவனை இழக்கத் தயாரில்லை. ஆதலால், பெருமானார் அவர்களை இஸ்லாத்திலிருந்து சமூகப் பகிஷ்காரம் செய்து விடலாம் என்று அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த நேரத்தில் நாம் ஒரு முக்கியப் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. அரபிக் கல்லூரிகளில் பாடம் துவங்குவதற்குமுன் சொல்லித் தந்தார்களே, அதே இறை வேண்டல்: “இறைவா,ஷைத்தான்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!”

மேலே கூறப்பட்ட இறைக்கருத்துக்கள் அனைத்தும் அபாரமான இலக்கியத்தன்மை பொருந்தியவை. ‘கண்கள் குளமாயின’ என்ற சொற்கள் அழுகையைக் குறிக்கும். அழுவோரின் கண்களுக்குள் குளங்களும் அதனுள் இருபடி ஆழத்தில் தண்ணீரும் கிடக்கிறதா எனத் தேடக்கூடாது. ‘தலைக்குனிவு’என்றால் அவமானத்தை விளக்கும் வார்த்தை. அவமானமடைந்தோரைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களது தலை குனிந்து கிடக்கிறதா என்று ஆராய்வது, அசல் பைத்தியக்காரத்தனம். ‘அவனுக்குக் கை நீளம்’என்றால், குறிப்பிடப்பட்டவனுக்கு திருட்டுப் பழக்கமுள்ளது எனப் பொருள். அதை விடுத்துவிட்டு, அவனது கையை அளந்துகொண்டிருப்பவர்கள், உலகத்தின் முதல்தர மடையர்கள். ‘பேரீச்சம்பழத்தின் சுவையைப்பற்றிக் கழுதைக்குத் தெரியாது’என்ற பழமொழி இத்தகையோர்களுக்காகச் சொல்லப்பட்டதுதான்.

***

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ‘ 150 கோடி முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த ஒரு சில பகுதி மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கின்றன. ‘இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா என்ற மகா உன்னதமான வினா சமுதாயத்தைப் புயலெனக் கவிழ்ந்து கிடக்கிற இந்த வேளையில், மேலே குறிப்பிடப்பட்டவை உரிய விடையாக அமையுமென நம்புகிறேன்.
இறைவனை அறிதலுக்கு நடுவீதி விவாதங்கள் தேவையில்லை; உணர்வுப்பூர்வமான தேடலே அவசியம்.

***

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

ரமளான் சிந்தனை-1 : ஏ.ஹெச்.ஹத்தீப்

“வணக்கம்”என்று இந்திய பாணியில் முகமன் கூறினால் இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்ற பலரது கேள்விக்கு நவீன ஏகத்துவவாதிகள் “ஆம்”என்று பதிலளிக்கின்றனர். இந்தக் கேள்வியையே ஒரு வணக்கமாக மாற்றியதில் அவர்களது கைவண்ணமும் வாய்வண்ணமும் அரும்பணியாற்றியிருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று “பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை செய்வதுகூட ஒருவகை வணக்கம்தான். வணக்கம் இறைவனுக்கு மட்டுமே சொந்தம். ஆகவே பெற்றோரை மதிப்பதுகூட இஸ்லாத்திற்கு விரோதமானது’ என்று தங்களைப் பின்பற்றுவோருக்கு எடுத்துரைத்ததில்கூட உள்நோக்கம் இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமது சமுதாயத்தில் பெரும்பான்மை இளைஞர்கள் பெற்றோர்களை மதிப்பவர்கள். அவர்களின் அறிவுரைகளுக்குச் செவி சாய்ப்பவர்கள். இத்தகைய முஸ்லிம்கள், பெற்றோர்களின் புத்திமதிக்கு எதிரான எந்தப் பிரச்சாரத்தையும் ஏற்பதில் கஷ்டமிருக்கிறது. எனவே முதலில் பெற்றோர்களிடமிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மேற்கண்ட பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்குமோ என்று நம்புவதற்கு அதிகக் காரணமிருக்கிறது.

முதலில் ‘வணக்கம்’ என்று சொன்னவுடனேயே அது இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்று பார்க்க வேண்டும். தொழுவதும் வணங்குவதும் ஒரே மாதிரிச் செயல்களா என்பதை அவர்கள் விளக்க வேண்டும். ஏனெனில் தொழுகைக்குமுன் செய்துகொள்ள வேண்டிய உலூ, நிய்யத், கிப்லாவை நோக்குதல் போன்ற முக்கியக் காரியங்கள் உண்டு. தொழுகை போன்றதுதான் வணக்கமும் என்றால், அதற்குமுன்னால் செய்துகொள்ள வேண்டிய முக்கிய செயல்கள் இருக்கவே செய்யும். வணக்கம் என்பது திக்ரு, துஆ போன்ற செயல்கள்; அவற்றிற்கு உலூ போன்றவை தேவையில்லை என்றாலும் மிக முக்கியமாக நிய்யத் கட்டாயம். இயந்திரகதியில் செய்யப்படுகின்ற எந்தக் காரியத்திற்கு இஸ்லாத்தின் ஆசீர்வாதம் கிடையாது. மனம் ஒன்றிச் செய்யாத எந்த வணக்கமும் முழுமையானதல்ல. அதனால்தான், தக்பீர் கட்டிவிட்டால், இதரச் சிந்தனைகள் மற்றும் இதரக் காரியங்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.( தக்பீர் தஹ்ரீமா)

‘இறைவனை வணங்குகிறோம்’ என்ற உறுதி ஏற்பின்றி ‘வணக்கம்’என்று சொன்னவுடனேயே அது வணக்கமாகிவிடுகிறது என்று பிடிவாதம் பிடிப்பது இஸ்லாம் சார்ந்த சிந்தனையல்ல. சமுதாயத்தில் புதுமையாக அல்லது சர்ச்சைக்குரியதாக ஏதாவது சொல்ல வேண்டுமென்ற மன அரிப்பின் அடிப்படையில் கூறப்பட்டவையே.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்: ‘வணக்கம்’என்றவுடனேயே இறைவனை வணங்குவதாக ஆகிவிடும் என்றால், தொழுகை என்றதும் தொழுததாகவும், நோன்பு என்றதும் நோன்பு நோற்றதாகவும் ஜகாத் என்றதும் ஜகாத் அளித்ததாகவும் ஆகிவிடுகிறதா?

பெற்றோர்களுக்கு மரியாதை செய்வதுகூட இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆணித்தனமாக வாதிடுகிறார்கள். இறைவனுக்கு இணை வைக்காமல், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் பெற்றோர்களை மதிக்கும்படியும் கண்ணியப்படுத்தும்படியும் திருமறை கட்டளை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு தொழுகையில் மட்டுமின்றி, அவர்களது மரணத்திற்குப் பின்னரும்கூட அவர்களுக்காகப் பிரார்த்திப்பது ஒவ்வொருவருக்கும் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
“பெற்றோர்களைப் புறக்கணியுங்கள்” என்ற அறிவுரை பிறச் சமூகத்தினரிடையே இஸ்லாத்தின் கண்ணியத்தைக் குறைக்கவே உதவுகிறது என்பதை மார்க்க மாமேதைகள் சீர்தூக்கிப் பார்ப்பது இன்றைய இன்றியமையாத கடமை.

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

மதராச பட்டினம் – ஏ.ஹெச்.ஹத்தீப்

மதராச பட்டினம் – விமர்சனம்

ஏ.ஹெச்.ஹத்தீப்

அழுக்கடையாத சென்னை; துர்நாற்றம் வீசாத கூவம்; சுதந்திரத்தைப்பற்றியோ அதற்கான போராட்டத்தைப்பற்றியோ அதிகம் அக்கறை கொள்ளாத தமிழன்; சர்வாதிகாரமும் அதிகார மிடுக்கும் நிறைந்த வெள்ளையர்கள்; இத்தனைக்கும் நடுவே ஒரு கறுப்பு மனிதனுக்கும் வெள்ளைக்கார அழகிக்குமிடையே தோன்றிய பசுமையான தூய காதல்.

அவ்வப்போது ‘டைட்டானிக்’கை நினைவூட்டினாலும் எதார்த்தத்துக்கும் பிரமாதத்துக்கும் சற்றும் பஞ்சமில்லை. சலவைத் தொழிலாளிகளின் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு வெள்ளைக்காரக் கதாநாயகி சொல்கிறாள்: “நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டால், உங்களுக்கு ஸ்கூல் கட்டித் தருவேன். நல்லப் படிப்பு கற்றுத் தருவேன். நல்ல ஆஸ்பத்திரிகள் உருவாக்குவேன்.”

இந்திய குழந்தைகளில் ஒரு சிறுமி குறுக்கிடுகிறாள்: “ எங்களிடமிருந்து பிடுங்கிய துணி துவைக்கும் இடத்தைத் திருப்பித் தருவீங்களா?”

பசிக்கும்போது பிழைப்புக்குமுன்னால் சுதந்திரம் ஒன்றும் பிரமாதமில்லை என்பதை மிக நுண்ணியமாக விளக்கிய விதம் பிரமாதம்.

படம், இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாயில் துவங்குகிறது. (1945) சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால், ஓர் அற்புதமான சூழலில், மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் பசுமையானதொரு காதல் கதை. காதலி ஒரு மாநில ஆளுநரின் செல்வப்புதல்வி; காதலனோ ஒரு சாதாரணச் சலவைத் தொழிலாளி. மொழி தெரியாது. நிறம்கூட ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. ஆனாலும் ‘இது சாத்தியம்தானா?’ என்று யாரும் ஐயமுற முடியாமல் அவ்வளவு அழகாகக் காதல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான மசாலாக்கள் இல்லாமல், தமிழ் ரசிகர்களின் பழக்கமான களத்தைவிட்டு முற்றிலும் விலகி, ஒரு பரிசுத்தமான காதல் கதை சொல்ல முடியும் என்ற துணிச்சலான முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காதலிப்பவர்கள் கல்யாணம் செய்தே தீர வேண்டுமென்ற அவசியமில்லை என்ற புதிய சிந்தனைக்கும், காதலர்கள் சிறந்த லட்சியவாதியாக உருவாக வேண்டும் என்ற அபாரமான படிப்பினைக்கும் ‘சபாஷ்’ போட்டே தீர வேண்டும்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிஜ சிங்காரச் சென்னையை இப்போது கண்முன்னே கொணர்ந்து நிறுத்தியிருக்கிறார்கள்  கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ரயில் பெட்டிகள், ரிப்பன் கட்டிடம், டிராம் வண்டி, ஆஸ்டின் கார், எண்ணெய்ப் பிசுக்கெடுத்த முகங்கள், இன்னும் எத்தனையோ… நல்ல முயற்சி. கடும் உழைப்பு.

சற்றும் அலுப்புத் தட்டாத திரைக்கதையமைப்பு. மணி ரத்னத்தையும் மிஞ்சும் நறுக் சுருக் வசனங்கள். “முப்பது கோடியில் தொலைத்துவிட்டு, நூத்திபத்து கோடியில் தேடறீங்க.”

குறையே இல்லையா?

ஏன் இல்லை? இத்தனை நவீன யுகத்தில், தகவல் தொடர்பின் புரட்சி சகாப்தத்தில், கதாநாயகி நீண்ட காலத்துக்குமுன்னரே காதலனைத் தேடியிருக்கலாம் என்ற நெருடல் எழாமலில்லை. ஒருவேளை கதைக்கு இன்றைய காலகட்டம்தான் பொருந்துகிறதோ என்னவோ!

இவ்வளவு இருந்தும் அரங்குகளில் ஏன் கூட்டமில்லை என்ற கேள்விக்கு, அரைகுறை உடை, ஆபாசங்கள், கிராஃபிக் சண்டைக்காட்சிகள் இடம் பெறாததே காரணமோ? இருக்கலாம்.

எனினும் இயக்குனர் விஜய்க்கும் கலைஞரின் கலைவாரிசு உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பலத்த கைதட்டல். அதற்கு அவர்களுக்கு அருகதை இருக்கிறது.

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | hatheeb@gmail.com

*

மேலும் பார்க்க : மதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்

« Older entries Newer entries »