கடன் – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘Look with positive intention, speak with inner conviction, listen with intense attention. And you will move in the right direction. ENJOY A HAPPY n prosperous NEW HIJRI YEAR‘ என்று எஸ்.எம்.எஸ் வந்தது ஜபருல்லா நானாவிடமிருந்து, நேற்றிரவு . காலையில் பார்த்தால் , ‘கடன்’ வருகிறது – ஹத்தீப்நானாவிடமிருந்து. திட்டாதே தேவி, என் கடன் வலையேற்றுவதே!

**

கடன் – ஏ.ஹெச்.ஹத்தீப்

அன்றையிலிருந்துதான் ஸ்நேகா இப்படியிருக்கிறாள்.

அவளுக்கு வயது ஐந்து. நல்ல வளர்த்தியில் வயதைச் சற்றுக் கூட்டித்தான் சொல்ல வேண்டும். பார்ப்பவர்கள் யாரையும் சட்டெனக் கிள்ளத் தூண்டும் கொழுகொழு கன்னங்கள். துருதுருப் பார்வையிலிருந்த கும்மாளம் முற்றிலுமாக வற்றிவிட்டது. கன்னத்தில் குழி விழ அவள் சிரித்து ரொம்ப நாளாயிற்று.

நன்கு விடிவதற்குமுன்பே படுக்கையில் அன்னையின் காலைச் சுரண்டுவாள். “ஸ்கூலுக்கு நேரமாச்சு; எழுந்திரம்மா!” என்று எழுப்புவாள். அம்மா தூக்கத்தில் முனகினால், அவளது நெஞ்சில்மேல் ஏறி உட்கார்ந்து செல்லமாகச் சிணுங்குவாள்.

அந்த நாள் மலை ஏறிவிட்டது. இப்போது அதெல்லாமில்லை.

அம்மா ஊட்டிவிடும் காலைச் சிற்றுண்டியைத் தட்டாமல் சாப்பிட்டுவிட்டு, பொறுமையாகச் சீருடையணிந்துகொண்டு,தானே சாக்ஸையும் ஷூவையும் மாட்டியவாறே பள்ளிக்கூட பஸ் வருவதற்குமுன்பே வாசலில் காத்திருப்பாள். முரண்டோ பிடிவாதமோ அவளது அகராதியில் கிடையாது. இப்போதோ “ஸ்கூலுக்கு டயமாயிடுச்சம்மா” என்று எழுப்பினால்கூடத் திரும்பிப் படுத்துக் கொள்கிறாள்.

எல்லாம் அன்றையிலிருந்துதான்.

“என் கண்ணல்ல. பஸ் வேணாம். அம்மா கொண்டுபோய் விடட்டுமா?” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள் சரோஜினி.

வாய் திறந்து ஒரு வார்த்தை? ஊஹும்!

அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் ஓடிப்போய்க் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமாரி பொழிபவள், இப்போது செயலற்று…உணர்வற்று…மரக்கட்டையாய்….

என்னவாயிற்று செல்லக் குழந்தை ஸ்நேகாவுக்கு?

கணேஷும் சரோஜினியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடினார்கள்.

அவர், குழந்தையை நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். இமையைப் பிதுக்கிச் சோதித்தார். ஸ்டதாஸ்கோப்பை நெஞ்சில் ஒத்தி மூச்சிழுக்கச் சொன்னார். நாடி பிடித்துப் பார்த்தவாறே, “குழந்தைக்கு என்ன செய்யுது?” என்று கேட்டார், கடைசியாக.

“அதான் தெரியலே டாக்டர். சரியா சாப்பிடமாட்டேங்கிறா.ஸ்கூல் போறதுக்கு அடம் பிடிக்கிறா. ராத்திரியெல்லாம் திடீர் திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு அழறா டாக்டர்” என்று விசும்பினாள் சரோஜினி.

“என்ன சொல்லி அழறா?”

“எதுவுமே சொல்லாமெ அவளோட அப்பாவைப் பார்த்து அழறா.ரொம்ப பயமாயிருக்கு டாக்டர்! ”

நீண்ட நேர மௌனத்துக்குப்பின், “குழந்தை அதிர்ச்சியடையும்படியா ஏதாவது நடந்ததா?”என்று கேட்டார் டாக்டர்.

அன்றைக்கு வீட்டில் நடந்ததை வெட்கத்தைவிட்டு, அவமானத்தை மறைத்து எப்படி விவரிப்பது?

அதற்காக டாக்டரிடம் உண்மையை மறைக்க முடியுமா?

“வீட்டிலே ஒரு கடன் தகராறு. குழந்தை அதயே பார்த்துக்கிட்டிருந்தா. அன்னையிலேருந்துதான் இப்படியாகிட்டா டாக்டர்.”

கணேஷையும் சரோஜினியையும் முறைத்துப் பார்த்து டாக்டர் நெடுமூச்செறிந்தார். “குழந்தையை பார்க், எக்ஸ்பிஷன், பீச்சுன்னு அழைச்சுக்கிட்டுப் போங்க. அன்பு செலுத்துங்க. குழந்தை பார்க்கும்படியா தகராறெல்லாம் பண்ணாதீங்க. படுக்கிறதுக்கு முன்னாடி இந்த மாத்திரையை தவறாமெ கொடுங்க. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறிவிட்டு தன் மேஜைமீதிருந்த பஸ்ஸரை அழுத்தினார்.

‘மற்றவர்கள் வர வேண்டும்; நீங்கள் போகலாம்’ என்ற வியாபார சமிக்ஞை. தொழில் யுக்தி. புனிதமான மருத்துவம்கூட ஓர் இரக்கமற்ற தொழிலாகிவிட்டதா?

மருத்துவரின் ஆலோசனையைத் தொடர்ந்து ஸ்நேகாவைக் கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி போன்ற கேளிக்கைகளும் வேடிக்கைகளும் நிறைந்த இடங்களுக்கு அழைத்துப் போவாள் சரோஜினி. பல நேரங்களில் சினிமாவுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போயும் ஸ்நேகாவிடம் பழைய சிரிப்பும் கலகலப்பும் திரும்பக் காணோம்.

வட்டிக்கடைக்காரர் அடியாட்களுடன் வந்து வீட்டிலுள்ள, அதிலும் ஸ்நேகா விரும்பிப் பார்க்கும் டி வியைக்கூட விடாமல், அனைத்துப் பொருட்களையும் ஒன்று விடாமல் பதைக்கப் பதைக்க அள்ளிச் சென்ற அந்தத் துர்ச்சம்பவத்திலிருந்துதான் அவள் இப்படிப் பிரமை பிடித்தவள் போலாகிவிட்டாள்.

சரோஜினி மரத்துப்போய் நிற்க, அவளது இடுப்பை இறுகப் பற்றியவாறே முகத்தை மட்டும் வெளியே நீட்டி நடப்பவற்றை உன்னிப்பாக மிரட்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேகா.

“இன்னும் இரண்டு நாள் அவகாசம் கொடுங்க சார். உங்க பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்திடறேன். ப்ளீஸ் சார் ” என்று கெஞ்சுகிறான் கணேஷ், காலைப் பிடிக்காத குறையாக.

முறைக்கிறான் முரட்டு மீசைக்காரன். கண்கள் சிவந்து தீ பறக்கிறது. “இன்னும் எத்தனை ரெண்டு நாள் அவகாசம் கொடுக்கிறது?”என்று வெறி பிடித்தவன் மாதிரி கர்ஜிக்கிறான் கடன்காரன்.

குழந்தை வெடவெடத்துப் போகிறாள். பயத்தில் முகம் வெளிறிவிட்டது.

“இது கடைசி சான்ஸ் சார்.” – அவமானத்தாலும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் காதில் விழுந்துவிடப் போகிறதே என்ற ஜாக்கிரதை உணர்வாலும் கணேஷின் குரல் சற்றே தாழ்ந்து ஒலித்தாலும் கல்லும் கரைகிறாற்போல் மன்றாடுகிறான்.

அவன் கல்லேதான். கரையக் காணோம்.

குழந்தையின் முகத்தில் அச்சத்தின் ரேகைகள்.

“முடியவே முடியாது”என்று குரைக்கிறான் அந்த முரடன். மேலும் பேசினாலோ அல்லது அவன் செய்வதைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ பளாரென்று கன்னத்தின் அறைந்து விடுவான் போலிருந்தது.

வாசலில் அக்கம்பக்கத்தாரின் தலைகள். எதிர்வீட்டு ஜன்னல்களில் நிழலுருவங்கள். யாரும் கணேஷுக்காக யாரும் இரக்கப்படக் காணோம்.

இத்தகைய காட்சிகள் அவர்களைப் பொறுத்தவரை புதிது இல்லையென்றாலும் மனச்சாட்சிகூடவா மரத்துப் போய்விட்டது? அவனுக்காகப் பரிந்து பேச இந்த உலகத்தில் ஒருவர்கூடவா இல்லை?

குழந்தையின் விழிகளில் ‘யாராவது துணைக்கு வரமாட்டாங்களா?’என்ற ஏக்கம். அம்மாகூடக் கையைப் பிசைந்துகொண்டு மௌனமாகத்தானே நிற்கிறாள்?

“இன்னும் ஒரேயொரு சந்தர்ப்பம் கொடுங்க சார் ”என்று கண்களில் நீர் மல்க கணேஷ் ஈனஸ்வரத்தில் முனகியதெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் வீணாயிற்று.

அந்த மீசைக்காரனுடன் வந்தவர்கள் அவனைவிட மூர்க்கத்தனமாகவும் கர்ணகொடூரமாகவும் இருந்தார்கள். அனைவரும் பனியன் அணிந்திருந்ததால் அடியாட்களா வேலையாட்களா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

“என்னய்யா, சும்மா தண்டத்துக்கு நின்னுகிட்டு. தூக்குங்கய்யா எல்லாச் சாமான்களையும். ப்ரிட்ஜ், கிரைண்டர், சோபா எல்லாத்தையும் ஒண்ணு விடாமெ தூக்கி லாரியிலே ஏத்துங்கய்யா ”என்று அரக்கத்தனமாக உத்தரவிடுகிறான் மீசை.

இதற்கு முன்பு இப்படி ரசாபாசமாக இரண்டு மூன்று தடவை நடந்திருக்கின்றன. அப்போது ஒரு முறை சரோஜினி குறுக்கிட்டு, “இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே உங்க பணம் வீடு தேடி வரும். இந்த ஒரு வாட்டி கருணை காட்டுங்கய்யா”என்று விழிகளில் நீர் திரண்டு வர உருக்கமாக வேண்டியது வீண் போகவில்லை.

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்களே? இறுதியாக பேயும் இரங்கிவிட்டது. மீசை சொன்னான்: “பொம்பளேன்னு விடறேன். சொன்ன மாதிரி ஒரு வாரத்திலே பணம் வந்து சேரலேன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.வாங்கடா!”

அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. இப்போது எந்த முகத்தோடு மீண்டும் கெஞ்ச முடியும்? ஏதாவது பேசப் போய், “நீயும் ஒரு மனுஷியா?” என்று காறி முகத்தில் உமிழ்ந்துவிட்டால்?

இதோ ஒவ்வொரு பொருளாக லாரியில் ஏற்றுகிறார்கள். ஸ்நேகா ஆசை ஆசையாய் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருப்பாளே, அந்த டிவியும் லாரியில் அடைக்கலம். அதை ஏக்கத்தோடு பார்க்கிறாள் குழந்தை. அவள் ‘போகோவும் டாம் அண்ட் ஜெர்ரியும் ரசிக்கும் தொலைகாட்சிப் பெட்டி தலை குப்புறக் கிடக்கிறது.

சற்றைக்கெல்லாம் வீடே வெறிச்சோடிப் போகிறது.

அன்றிலிருந்துதான் ஸ்நேகா பித்துப் பிடித்தவள்போலாகிப் போகிறாள்.

மூன்றாண்டுகளுக்குமுன்னால் புக்ககத்திலிருந்து சரோஜினி தனிக்குடித்தனம் பெயர்ந்தபோது சகல ஐஷ்வர்யங்களுடந்தான் வந்தாள். வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக ஒரு லட்ச ரூபாய். முப்பது பவுன் நகைகள். ப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர் உட்பட குடும்பத்துக்குத் தேவையான அத்தனை சமான்களுடன் விடை பெற்றுக்கொண்டபோது, உடைந்த குரலில் அம்மா சொன்னாள்: “இந்த லட்ச ரூபாய்ப் பணமும் சாமான்களும் உன் வாழ்க்கையின் ஆதாரங்கள். பாதுகாத்துக்கொள்.”

“கணவன்தான் வாழ்க்கையின் ஆதாரம்”என்று அம்மா ஆசீர்வதித்து அனுப்பி வைப்பாள் என்று எதிர்பார்த்திருந்த சரோஜினிக்கு அப்போது மிகுந்த ஏமாற்றம். உள்ளம் உடைந்து போனாள். எனினும் காட்டிக் கொள்ளவில்லை. அம்மா உலகம் புரிந்தவள். அனுபவசாலி.என்ன நடக்கும் என்பதை மூன்றாண்டுகளுக்குமுன்னரே ஊகித்துக்கொண்ட புத்திசாலி. அவளது அறிவுரைகள் இப்போது உறைக்கின்றன.

கணேஷ் பெண் வீட்டில் பெருமையடிக்கும் டைப். திருமணமான புதிதில், நண்பனின் மாருதி காரை ஓசியில் எடுத்துக்கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தியதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிசயித்துப் போனதென்னவோ உண்மை. தனது சம்பளத்தை ஆஹா ஓஹோ என்று அவன் அளந்தபோது எல்லோருமே வாயைப் பிளந்துகொண்டு பார்த்தார்கள்.

சரோஜினிக்கு அப்போது பெருமையாகத்தான் இருந்தது.

இங்கே வந்தபிறகுதான் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தன: கணேஷுக்கு ஒரு சாதாரணத் தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலை. கல்யாணத் தரகர் அவிழ்த்துவிட்ட மாதிரி பங்களா பந்தாக்கள் எதுவுமில்லை. வெறும் ஆறாயிரம் ரூபாய் வருமானம். எல்லாச் செலவுகளும் அதற்குள்தான். அப்புறம்தான் வேறு சில பொல்லாத சகவாசங்களும் அவனுக்கு இருப்பது தெரிய வந்தது.

இடைவிடாத சிகரெட் பழக்கம். அவ்வப்போது குடிப்பானாம். சூது விளையாடுவானாம். நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு விபசார விடுதிக்குப் போகும் பழக்கம்கூட உண்டாம்.

இதற்கெல்லாம் பணம் ஏது? மாதக்கடைசியில் கடன். வட்டிக்கடன். அதுவும் கந்து வட்டிக்காரனிடன் மீட்டர் வட்டி. உருப்படுமா குடும்பம்?

இதற்கிடையில், ஐம்பதாயிரம் ரூபாய் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தது போக, மீதிப்பணமும் நகைகளும் இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிட்டன.

சரோஜினி ஆரம்பத்தில் விநயமாகச் சொல்லிப் பார்த்தாள். கெஞ்சிப் பார்த்தாள். திட்டிப் பார்த்தாள். ஆர்ப்பரித்தாள். கணேஷ் எதுக்கும் மசியக்காணோம்.

திடீரென்று ஒருநாள். போதையில் வீட்டுக்கு வந்த கணேஷ், “எனக்கு ஒரு உதவி செய். உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவை. உங்க அம்மாவிடம் கேட்டு வாங்கிட்டு வா. கடனை அடைச்சுட்டு எல்லா சகவாசத்துக்கும் முழுக்குப் போட்டுடுறேன்”என்று ஒரு குண்டைத் தூக்கி சரோஜினியின் தலையில் போட்டான்.

சரோஜினிக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதென்ன அராஜகத்தனம்? அம்மா கூறிய அறிவுரையையெல்லாம் தூக்கிக் குப்பையில் எறிந்தாயிற்று. இப்போது அவளிடமே போய் நின்று,
‘வட்டி கட்டுவதற்குப் பணம் தேவை’ என்று சொன்னால், ‘செல்லமகள் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாள்’என்று நம்பிக்கொண்டிருப்பவள் மனமுடைந்து போய் விடமாட்டாளா? பெற்று ஆளாக்கியவளுக்கு இப்படியோர் அதிர்ச்சியைக் கொடுக்கலாமா?

“முடியவே முடியாது.”

“ஏன்? தரமாட்டாங்களா?”

“ஆமா. அவங்ககிட்ட பணம் கிடையாது.”

“அப்ப்டின்னா நீ உனக்குத் தெரிஞ்சவங்ககிட்டே போய்ப் பணம் தோது பண்ணிட்டு வா. ஒரு மாசத்திலே திருப்பி அடைச்சுடலாம்.”

“எப்படி?”

“எனக்கு அடுத்த மாசம் ப்ரமோஷன், இன்க்ரிமெண்டெல்லாம் கிடைக்கப் போகுது”என்று கோணலாகச் சிரித்தான். சிகரெட் புகை முகத்தை மறைத்தது.

ஒரு குடும்பப் பெண் வெளியே கையை நீட்டிக் கடன் வாங்குவதாவது? இதைவிட ஒரு கண்ணியமான பெண்ணுக்கு வேறென்ன சோதனை இருக்க முடியும்?

சரோஜினி மடேர் மடேரென்று சுவரில் மோதிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

வரவர உடல் துரும்பாக இளைத்துக்கொண்டு வந்தது ஸ்நேகாவுக்கு. விழிகளைச் சுற்றிக் கருவளையங்கள். முகத்தில் சதா வாட்டம். அநேகமாகப் பேசுவதை நிறுத்திவிட்டாள். நடையில் துள்ளல் இல்லை. ஸ்கூல் சீருடை தொளதொளத்துவிட்டது.

கன்னத்தில் தாரை தாரையாக நீர் வழிய நெடுமூச்செறிந்தாள் சரோஜினி.

அவமானத்தால் மனமுடைந்து போயிருந்தான் கணேஷ். தனது குடும்பத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் தனது போக்கும் தீய பழக்க வழக்கங்களுமே காரணம். அவற்றின் கோரப்பசிக்குத் தனது செல்லக்குழந்தையையே காவு கொடுக்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஓயாமல் வாட்டியது. ஸ்நேகாவின் வைத்திய செலவுக்குக்கூடப் பணமில்லாமல்… சே! என்ன வாழ்க்கை இது?

கணவனை உற்று நோக்கினாள் சரோஜினி. தாடையெல்லாம் முடி வளர்ந்து அவன் சோகத்தின் உச்சாணியில் உழல்வது புரிந்தது. சற்று நேரம் யோசித்தாள் அவள். அப்புறம் சொன்னாள்: “ஸ்நேகாவுக்கு எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. அவளை ஸ்கூலில் போய் விட்டுட்டு, அங்கேயே இருந்து அவளை அழைச்சுட்டு வந்துடுங்க. இல்லாவிட்டால் அவ ஸ்கூல் போகமாட்டா. ”

ஸ்நேகாவைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது கணேஷுக்குப் பெரும்பாடாக இருந்தது.

மாலை ஐந்து மணி.

ஸ்கூல் பஸ் வந்து வாசலில் நின்றது. பஸ்ஸிலிருந்து ஸ்லோ மோஷனில் இறங்கிய ஸ்நேகா, வீட்டுக்குள் நுழைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. தூசும் ஒட்டடையுமாக இருளடைந்து கிடந்த வீடு பளிச்சென்று காட்சியளித்தது. சமையலறை வாசலில் ப்ரிட்ஜ். எப்போதும் போல கிரைண்டரில் மாவு அரைந்துகொண்டிருந்தது. அதே சோபா அதே இடத்தில்.

மரமேஜைமீது அதே வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியில் ‘போகோ’ஓடிக்கொண்டிருந்தது.

ஸ்நேகாவின் முகத்தில் குபீரென்று விளக்குப் போட்டாற்போல் ஒளி பாய்ந்தது. ‘ஹைய்யா’என்று கரகோஷம் செய்கிறாள். முகத்தில் பழைய வசீகரச் சிரிப்பு. விழிகளில் வெளிச்சம்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சரோஜினி. பூரிப்பும் நிம்மதியும் அவளது இதயத்தை நிறைத்துக்கொண்டிருந்தன.

வீட்டுக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் இவ்வளவு அரிய சாதனை படைக்குமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. என்ன, இனிமேல் குறைந்த அட்வான்ஸில் இன்னொரு வீடு தேடி அலைய வேண்டும்.

அதனாலென்ன? 

***

Published in “Devi” weekly 15.12.2010 issue.

நன்றி : ‘தேவி’, ஏ.ஹெச். ஹத்தீப் | E-Mail :  hatheeb@gmail.com

பச்சென்று முதல் முத்தம் – ஏ.ஹெச். ஹத்தீப்

“மிஸ் வித்யா, நீங்கள் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்க முடியுமா?”என்று பிரபல யுனிவர்ஸல் மூவீஸிலிருந்து தொலைபேசியில் கேட்டபோதுதான், வித்யாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவளை வைத்துப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனம் அது. அவளால் பல கோடிகளைச் சம்பாதித்த கம்பெனி. தமிழ்த்திரைப்பட உலகத்தில் தானொரு முடி சூடாப்பேரரசியாக உலா வந்த காலம் மலையேறிவிட்டது என்று இப்போது அவர்கள் நாசூக்காக உணர்த்திய விதம் அபாரம். இனி அந்தக்கனவு உலகத்துக்கு அவளொரு கழிவுப்பொருள் என்று பளிச்சென்று உறைத்தது.
கண்மூடித் திறப்பதற்குள் பத்தாண்டுகாலம் பறந்தோடிவிட்டன. கோடி கோடியாகப் பணம். குவியல் குவியலாகப் புகழ். மாநில அரசிலிருந்து மத்திய அரசுவரை போட்டிப் போட்டுக்கொண்டு அவளுக்கு விருதுகளையும் பரிகளையும் வாரி வாரி வழங்கிக் கௌரவித்த பொற்காலம் கைக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது. சினிமா உலகத்தின் உச்சாணிக்கொம்பில் வீற்றிருந்தபோது வித்யா காலத்தின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தாள். இப்போது காலம் கைவரிசை காட்டுகிற சமயம். அவளை எட்டி உதைத்துவிட்டது.
இதுதான் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய உலகத்தின் நித்தியச் சுழற்சி.
என்றாலும் ஒரு நப்பாசை. “ஹீரோயினாக யார் நடிக்கிறாங்க?”என்று கேட்டாள்.
மறுமுனை: “அதுக்கெல்லாம் மும்பையிலிருந்து ஒரு புதுமுகம். உங்க முடிவைச் சொல்லுங்க?”
“முடியாது”என்று வெடுக்கென்று கூறி ரிஸீவரைக் கோபத்துடன் வைத்த வித்யா, புத்தக மேசைக்கு முன்னால் நின்று அன்றைய செய்தித்தாள்களை நோட்டமிட்டாள். அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளோ உற்சாகத்தில் மிதக்க வைக்கிற சங்கதிகளோ எதுவும் எந்தச் செய்தித்தாளிலும் இடம் பெறவில்லை. ஒரு காலத்தில் அட்டைப்படங்களையும் முக்கியப் பக்கங்களையும் வியாபித்துக்கொண்டிருந்த அவளது உருவம் இப்போது எங்கும் காணோம். எதிலும் காணோம்.
“என்னம்மா சொல்றாங்க?”என்று கேட்டுக்கொண்டே மாடிப்படி இறங்கி வந்தாள் அம்மா.
ஒரு நெடிய பெருமூச்செறிந்தாள் வித்யா. “ஒரு குணச்சித்திரம் வேடம் இருக்குதாம். செய்யுறியான்னு கேட்கிறாங்க.”
“நீ என்ன சொன்னே?”
விடையளிக்காமல் ஆளுயர நிலைக்கண்ணாடிமுன் நின்றாள் வித்யா. இமைகள் வீங்கிச் சுருங்கியிருந்தன. கழுத்தில் கொழகொழவென்று ஊளைச்சதை. உடல் ஒரு சுற்றுப் பெருத்திருந்தது.
அம்மா: “கேக்கறேன்ல?”
கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்திலிருந்து பார்வையைப் பெயர்க்காமலேயே, “முடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றாள் வித்யா.
அம்மாவின் முகத்தில் ஒரு நிச்சலனமான புன்னகை. “வித்யா! உனது பத்து வருஷத் திரையுலகப் பிரவேசத்தை நாளைக்கு ஜாம் ஜாம்னு கொண்டாடப்போறேன். உனக்கும்கூட ஒரு சந்தோஷமான செய்தி உண்டு. ஐயாம் கோயிங் டு அனௌண்ஸ் இட் பை டுமார்ரோ”என்று பூடகமாகக் கூறினாள் அம்மா.
“இஸிட்?” என்று கேலியாகக் கேட்டபோது அந்த முதல் முத்தக் காட்சி நினைவில் நிழலாடிற்று.
பச்சென்று முதல் முத்தம்.
உணர்வுக் கொந்தளிப்பால் உதடுகளில் மிக மெல்லிய மைக்ரோ துடிப்பு. நொடிப்பொழுதில் மேனியெங்கும் பரவிய மின்சாரம், அதற்குமுன் எப்போதுமே கிடைத்திராத புதிய கிளுகிளுப்பை வழங்குகிறது. நேற்றுவரை இத்தகைய விரகதாபத்துக்கு வித்யா அந்நியவள். அம்மா ஒரு லட்சத்தடவை இப்படி முத்தமிட்டிருப்பாள். சென்ற இரண்டாண்டுகளுக்குமுன் அவள் பூப்பெய்தியபோது அண்ணன்கூட முத்தமிட்டான். அதே சடங்கு நாளன்று ஆணென்றும் பெண்ணென்றும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் முத்தம் மழை பொழிந்தார்கள். எதுவுமே அவளை எவ்விதச் சலனத்துக்கும் ஆளாக்கியதில்லை. அதெல்லாம் உள்ளத்தைத் தொடாத ஒருவிதச் சம்பிரதாயம். உடலின் முதல் லேயர் தோளோடு விடை பெற்றுக்கொள்கிற சமாச்சாரங்கள்.
இந்த முத்தம் வித்தியாசமானது. நிச்சயமாக முற்றிலும் பரிச்சயமில்லாதது. சுனாமி மாதிரிப் பிரளயத்தில் ஆளை மூழ்கித் திணறடித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விடுவித்து, அப்புறம் முன்பின் அறிமுகமற்ற அபூர்வ இனிமையை மூட்டை மூட்டையாக நாடி நரம்புகளில் பரப்புகிற முதல் முத்தம். இது செயற்கையானதோ பலவந்தமானதோ இல்லை. முதல் முதலாக இத்தனை சிலிர்ப்பை உள்ளமெங்கும் வாரி இறைத்த இனிய முத்தம்.
“கட்!”என்று கத்துகிறார் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வன்.
வலது கையால் இடுப்பை வளைத்து, இடக்கரம் கழுத்தை மென்மையாக இறுக்க, மீசைமுனைகள் மூக்கில் குத்தினாற்போல் கதாநாயகன் பதித்த அந்த மந்திர முத்தம் ஒரு நடிப்பா? நடிப்பென்றால் விழிகள் ஏன் சொக்குகின்றன? அது செயற்கை என்றால் இதழ்கள் ஏன் தடித்துத் துடிக்க வேண்டும்? அது ஒரு மாயை என்றால் உள்ளத்துள் ஏன் மத்தாப்பு சிதற வேண்டும்?
முத்தம் பொய்யென்று மனம் பிடிவாதமாக ஒத்துக்கொள்ள மறுக்கிறது.
சற்றுத்தள்ளி ராட்சதக்குடை நிழலில், ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறாள் வித்யா. ஒரு முத்தக் காட்சியில் தனது மகள் சிறப்பாக நடிக்கும் பெருமிதம் தாயின் அகன்ற முகத்தில் சற்றும் லஜ்ஜையின்றிப் பிரகாசிக்கிறது. என்றாலும் மகள் மனத்தளவிலே அழுகிறாளோ என்ற பதைபதைப்பில் கையமர்த்திச் சமாதானம் கூறுகிறாள் அன்னை. .
யாருடைய அதிருஷ்டமோ; சென்ற மாதம் வித்யாவின் கல்லூரி ஆண்டுவிழாவின்போது, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த இளம் டைரக்டர் செந்தமிழ்ச்செல்வன், வித்யாவைப் பார்த்துவிட்டார். தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக வித்யாவை ஒப்பந்தம் செய்த அடுத்த கணத்திலிருந்து அம்மாவின் நடையில் புதிய கம்பீரம் (நெஞ்சைச் சற்றே நிமிர்த்தி, தளராமல் அழுத்தமாக அடியெடுத்து வைக்கிறாள்). உடையில் புதிய டாம்பீகம் (மகளுடன் படப்பிடிப்புக்குச் சென்றாலும் வெளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் விலையுயர்ந்த சாமுத்ரிகாப்பட்டில் ஜொலிக்கிறாள்). பேச்சில் புதிய பாணி ( தொனியை உயர்த்திக் கொண்டாலும் அளவுக்கதிகமாக ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை). சிரிப்பில் புதிய நளினம் (கண்கள் கிறங்க, உதட்டைச் சுழித்து அவள் புன்னகைக்கும் அழகே தனி – அதுவும் தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் ). எல்லாமே புதிய பரிணாமம். ஒரு நடிகையின் அன்னை என்பதற்கான அத்தனை லட்சணமும் அவளை வந்தடைந்துவிட்டன. பெற்றெடுத்த மகளைக்கூட பதினாறு வருடங்களுக்குப்பின் கொஞ்சமும் விகற்பமின்றிப் புதுவிதமாக உபசரித்தாள் தாய்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் நெற்றியைச் சுருக்கிச் செந்தமிழ்ச்செல்வனை உற்று நோக்குகிறான். அவனது விசனமெல்லாம் புதிய ஸ்க்ரிப்டுடன் அடையாறு பார்க்கில் காத்திருக்கும் பிரபல எழுத்தாளர் ஒருவரோடு சேர்ந்துகொண்டு கதை கேட்கும் சாக்கில் வெளிநாட்டு மதுவில் நீந்த வேண்டும். அதுதான் இன்றைக்கு முக்கியமான ப்ரோகிராம். இப்போதே நாழியாகிவிட்டது. ‘ஷாட்’ முழுமையடையும்வரை கற்சிலையாக நிற்க வேண்டிய லைட் பாய்களில் சிலர் அலுப்புடன் நெளிந்தார்கள். ‘பேக்கப்’ சொல்லும்வரை அவர்களுக்கு விடுதலை கிடையாது.
சுள்ளெனறு பிடரியில் விழுந்த காலை வெயிலை அலட்சியப்படுத்திய ஒளிப்பதிவாளர், “”உங்களுக்குத் திருப்தி இல்லைன்னா, ஒரு கிரேன் ஷாட் வைக்கலாமா, சார்?” என்று இயக்குனரிடம் கேட்கிறான், ஸூமைச் சரி செய்தவாறே.
பச்சை பசேலென்ற பச்சைப்போர்வையால் போர்த்தப்பட்ட ஒரு வயற்வெளி அது. இளஞ்சிவப்பு நாடா மாதிரி ஓர் ஒற்றையடிப்பாதை. அதையொட்டிய புளிய மரத்தடி நிழலில் வித்யா. கத்திரிப்பூப் பாவாடையும் கருமஞ்சள் ரவிக்கையும் தாவணி தரிக்காத அவளுக்குக் கனக்கச்சிதம். சினிமாவுக்கென்று அவளது அங்கப்பிரதேசங்களில் ஆங்காங்கே செய்யப்பட்டிருந்த கூடுதல் கவர்ச்சியைக் காரிலிருந்து இறங்கும்போதே பார்வையால் மேய்ந்த இளம் கதாநாயகன், வீட்டிலிருந்து கொண்டுவந்த பழரசத்தைப் பிரத்தியேகக் கண்ணாடித்தம்ளரில் சுவைத்துக்கொண்டே குறும்பாகச் சிரிக்கிறான்.
தயாரிப்பாளர் தர்மலிங்கம்தான் துணிந்து கேட்கிறார்: “ஏன் டைரக்டர் சார், ஷாட் ஓகேதானே?”-கதையம்சம் பிடித்துப் போயிருந்ததால் அவர் மீட்டர் வட்டிக்குப் பணம் கடன் வாங்கியிருந்தார்.
செந்தமிழ்ச்செல்வன் உடனடியாகப் பதிலளித்துவிடவில்லை. சிகரெட் பாக்கெட்டுடன் பக்கவாட்டில் வந்து நின்ற உதவியாளனைக்கூடக் கவனிக்காமல், சுட்டுவிரலால் நெற்றியை வருடிக்கொண்டே இருக்கிறான். முகத்தில் அதிருப்தியின் ரேகை.
ஏனோ வித்யாவுக்கு இதயம் படபடக்கிறது.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தாற்போல் இயக்குனர் இமை திறக்கிறான். “கதாநாயகனின் பிடரியிலிருந்து ஷாட்டை க்ளோஸ் பண்ணலாமென்றிருந்தேன். இப்போ அப்படி வேண்டாம். அந்தப்பெண்ணின் உதட்டிலேயே க்ளோஸ் பண்ணுவோம். கமான், கெட் ரெடி! ஒன் மோர் ஷாட்!”
வித்யாவின் உள்ளம் சிறகடித்துப் பறக்க, இன்னொரு புது முத்தம் கிடைக்கப் போகிறது.
‘பட்டக் காலிலே படும்’ என்பார்கள். வித்யாவைப் பொறுத்தவரை அது மெத்தப்பொருத்தம்.
மறுநாள். படுக்கையறைக் காட்சி.
பார்வையாளர்கள் யாரும் செட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.என்றாலும் தொழில் நுட்பக் கலைஞர்களும் அவர்களது உதவியாளர்களும் அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது வித்யாவுக்கு. ஜோடிக்கப்பட்ட படுக்கைக்கு வெகு அருகில் கேமரா நிற்கிறது. இயக்குநரின் கண்களில் ஏகப்பட்ட சுறுசுறுப்பு. “ரெடியா?”
“ரெடி”என்கிறார் கேமராக்குள் முகத்தைப் புதைத்திருந்த ஒளிப்பதிவாளர்.
வித்யாமீது போர்த்தப்பட்டிருந்த பட்டுத்துணியை உதவியாளன் ஒருவன் நிர்த்தாட்சண்யமாக விருட்டென்று உருவ, மெகாவாட் வெளிச்சமழையில் கட்டிலின் நடுவே அரைகுறை உடையுடன்(அதுவும் சென்சாருக்கு பயந்து) வித்யா. வெட்கமும் சன்னமான வேதனையும் அவளைப் பிடுங்கித் தின்கின்றன.
மார்பு நிறையப் பொசுபொசுவென்ற ரோமக்கற்றையுடன் அவள்மீது முழுமையாகப் படர்கிறான் அதே கதாநாயகன். இதை வெறும் நடிப்பென்று அவன் நினைத்திருந்தால் முகத்தை மட்டும் வித்யாவின் கன்னத்தருகே கொண்டு வந்திருக்கலாம். டைரக்டரும் ‘பேஃஸ் மட்டும் க்ளோஸப்’ என்றுதான் கூறியிருந்தார். ஆனால் கதாநாயகன் வேண்டுமென்றே அவளை முழுமையாக ஆக்ரமித்தான். அவளது மார்பகங்கள் அவனது நெஞ்சுக்குள் புதைகின்றன. நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்புகின்றன.செவ்வரியோடிய விழிகளில் போதையின் கிறக்கம்.வித்யாவின் மெல்லிய மேனி அழுந்தினாலும் வலிக்கவில்லை. உதடுகள் சன்னமாகத் துடிக்கின்றன. இருவரது புஜங்களுக்கிடையே இருந்த இடைவெளி அகன்றுவிட, அவனது மூச்சுக்காற்று அவளது இதழைச் சுள்ளெனச் சுடுகிறது. உடம்பெல்லாம் தகிக்க, அவள் பட்டு மஞ்சத்தில் நெளிகிறாள்.
இன்னொரு தரம் இதே காட்சியை எடுக்கமாட்டாரா என்று வித்யா ஏகத்துக்கும் ஏங்கி என்ன பிரயோஜனம்?
“ஷாட் ஓகே!” என்கிறார் டைரக்டர்.
படுக்கையைவிட்டு எழ மனமின்றி நித்யா நீண்ட நேரம் அப்படியே கிடக்கிறாள்.
இரவு, தனிமை, காமவேட்கை மைனஸ் காதலன்: கொடிய நரகம்.
வித்யாவுக்கு நினைவறிந்த நாட்களாக இப்படியோர் அவஸ்தையை அனுபவித்ததில்லை. மெத்தென்ற படுக்கை, முட்களாய் உறுத்த அவள் வெகுநேரம்வரை புரண்டு புரண்டுப் படுக்கிறாள். மிதமான ஏஸிக்காற்று அறையெங்கும் வியாபித்திருந்தாலும் எரிமலைமீது எறியப்பட்ட மாதிரி உடல் தகிக்கிறது. உறக்கம் விழிகளைத் தழுவ வெகுவாக முரண்டு பிடிக்கிறது.
எங்கு திரும்பினும் மென்மையான முத்தம். இறுக்கமான அணைப்பு. உஷ்ணமூட்டும் கிளுகிளுப்பு…
சென்ற வாரம் கல்லூரிச் சினேகிதி சுகுணாவைச் சந்தித்தாள். அவளது விழிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து வித்யா கேட்டாள்: “ராத்திரியெல்லாம் வீட்டில் சண்டையா?”
“யார் சொன்னது?”
“பின்னே ஏன் கண்களெல்லாம் இப்படி சிவந்து கிடக்குது?”
சுகுணா குறும்பாகச் சிரிக்கிறாள். “இரவு முழுவதும் டேட்டிங்”.
டேட்டிங் என்றால் என்னவென்று தெரியாத பாப்பா அல்ல வித்யா. இருந்தும், “டேட்டிங் என்றால்?” என்று வெறுப்பில் புருவத்தை நெரிக்கிறாள்.
“டேட்டிங் என்றால் டேட்டிங்தான்”என்று இமைகளைச் சிமிட்டுகிறாள் சுகுணா.
எவ்வளவு மோசமானதொரு விஷயத்தைப் பத்மபூஷன் விருது பெற்றாற்போல் இவ்வளவு அப்பட்டமாகத் தம்பட்டம் அடிக்கிறாள் இவள்?
இன்றைக்கு ஏறத்தாழ சுகுணாவின் நிலையில்தான் வித்யா. தனது தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த அம்மாவின் நினைவை ஒதுப்புறமாக ஒதுக்கித் தள்ளுகிறாள். அவளுக்கு ஆசை ஆசையாக ஆப்பிள் வாங்கி வந்த அண்ணனின் உருவத்தை வேண்டுமென்றே சிதைக்கிறாள். வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு “காலேஜ் போகலாமா?” என்று விளித்த அடுத்த வீட்டு சங்கீதாவின் பிம்பத்தைக் கசக்கி எறிகிறாள்.
அவளது இதயத்தை நிரம்பி வழிந்ததெல்லாம் அந்த இனிய முதல் முத்தம். அந்த இனிய முதல் இறுக்கம்.
காலையில் மாடிப்படி இறங்கி வருகையில், அம்மா எதிர்ப்படுகிறாள், காபிக்கோப்பையுடன்.
“ராத்திரியெல்லாம் தூங்கவில்லையா? அறையில் விடிய விடிய விளக்கு எரிஞ்சுகிட்டிருந்ததே?”
பதிலளிக்கவில்லை. ஆமென்று தலையசைக்கிறாள், காபியை ஒரு மிடறு விழுங்கிக்கொண்டே.
“ஏண்டிச் செல்லமே ஒருமாதிரியாக இருக்கே? தலை கிலை வலிக்கிறதா?”
“ப்ச்.”
“அப்புறம் ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கே?”
இதுதான் சந்தர்ப்பம். செம வாய்ப்பு. ஒழுக்கமும் நாணமும் மிக்க ஒரு யுவதி, தன்னைப் பெற்றவளிடம் வைக்கக்கூடாத கோரிக்கை. என்ன செய்வது? வேறு வழியில்லை. சொல்கிறாள்: “எனக்கொரு கல்யாணம் பண்ணி வச்சுடேன்…”
சவுக்கால் சொடுக்கினாற்போல் அம்மா துவண்டு விழப்பார்க்கிறாள். அவளது எண்ணவோட்டத்தை ஓரளவுக்குப் படிக்கத் தெரிந்தவள் வித்யா. எனவே சற்றும் தாமதிக்காமல் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறாள்: “…ஒருத்தன் பின்னாடி நானே ஓடிப்போறதுக்கு முன்னாடி! ”
ஓடிப்போய் மேஜைமீது இறைந்து கிடந்த நாளிதழ்கள், பத்திரிகைகள் அத்தனையையும் ஒரே எட்டில் எடுத்து வருகிறாள் அம்மா. எல்லாவற்றையும் வித்யாவின் கைகளில் திணிக்கிறாள். “படித்துப்பார். எல்லா பேப்பர்லேயும் உன்னைப்பத்தித்தான் நியூஸ் வந்திருக்கு. பார்.எல்லாத்தையும் புரட்டிப்பார்.”
சுவாரஸ்யமின்றி அவற்றைப் பிரித்துப் பார்க்கிறாள் வித்யா. உண்மைதான். எல்லாச் செய்தித்தாள்களும் இயல்பான தோற்றத்தைவிட அவளைப் படுகவர்ச்சியாகப் பிரசுரித்திருந்தன. அவளது மெலிதான மார்பகங்கள் பிதுங்கிக்கொண்டு…இடுப்பு மடிப்புக்கள் பளிச்சென்று தெரிய…தொடைகள் விரசமாக…’தரமான இலக்கிய நாளேடு’என்று பீற்றிக்கொள்ளும் ஒரு பிரபல பத்திரிகை, இவ்வாண்டு கனவுக்கன்னி வரிசையில் வித்யாவுக்கு முதலிடம் அளித்திருந்தது.
வித்யா படித்து முடித்ததும் சற்றும் தாமதமின்றி, “இதையெல்லாம் வேஸ்ட் பண்ணிடாதேடி என் செல்லமே!”என்று கெஞ்சுகிறாள் அம்மா. ‘ஆராரோ ஆரிரரோ என்னாத்தா நீதானோ’ என்று தாலாட்டுப் பாடிய அன்னை, பெற்ற மகளின் அந்தரங்க அழகைக் காட்சிப்பொருளாக்க வேண்டி ஒரு பிச்சைக்காரியைப்போல் மன்றாடுகிறாள்.
“ கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்ம்மா. ராத்திரியிலே என்னால் தூங்க முடியலேம்மா.”
ஒரு விநாடி வித்யாவை வெறித்துப் பார்க்கிறாள் தாய். மறுகணம் வானமே பொடிப்பொடியாகப் பொடிந்து தலையில் வீழ்ந்தாற்போல், “ டேய், சுகுமாரா! எங்கேடா இருக்கே? இங்கே ஓடி வாடா!”என்று கூப்பாடுப் போட்டவாறே தரையில் தொப்பென்று உட்கார்கிறாள்.
“என்னம்மா? ஏன் இப்படி அலர்றே?”என்று கேட்டபடி எங்கிருந்தோ ஓடி வருகிறான் அண்ணன்.
“அவ என்ன சொல்றான்னு கேளடா.”
“என்ன கவிதா இதெல்லாம்?”-அவனது குரலில் பாசத்திற்குப் பதிலாக கோபம். அன்புக்குப் பதிலாக ஆவேசம்.
வித்யாவிடம் பரிபூரண மௌனம்.
ஏன் யாருமே அவளைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? வித்யா தாகமென்று முணுமுணுத்தால், ஜாடி நிறையப் பழரசத்துடனும், ‘பசி’என்று வாய் திறந்தால் வகை வகையான உணவுப் பதார்த்தங்களுடனும் ஓடி வரும் அண்ணன்; “தூக்கம்”என்று கண் ஜாடை காட்டினால் மடியில் போட்டுத் தாலாட்டும் அன்னை; அவளது ‘மற்றத்தேவை’களை மட்டும் ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறார்கள்?
அவர்களுக்குப் புரியாமலில்லை. வேண்டுமென்றே புரியாத மாதிரி நடிக்கிறார்கள். வித்யாவின் குரலுக்குச் செவி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அவர்கள் ஆகாயத்தில் கட்டி வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை சுக்கல் சுக்கலாக நொறுங்கி விழுந்துவிடும். அதனால் ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரி நடிக்கிறார்கள்.
முகத்தை விகாரமாக்கிக்கொண்டு, “வாய் திறந்து சொல்லேன்” என்று அண்ணன் கத்துகிறான்.
எல்லாம் அவனுக்கும் தெரியும். இருந்தும் கேட்கிறான். சொல்லிவிட வேண்டியதுதான். “நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”
“அவ நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு யாருடனோ ஓடிப்போகப் போறாளாம்.”-அன்னை மடை திறக்கிறாள்.
“ எப்ப உனக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். அதுவரை மூச்சுவிடக்கூடாது. “இனிமேல் நீ எங்கே போறதாயிருந்தாலும், யாருடன் பேசுறதாயிருந்தாலும் எங்க அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. புரிஞ்சுதா?”என்று ஆவேசமாகச் சத்தமிட்டு உச்சி மயிரைப் பிடித்து உலுக்குகிறான்.
‘அறம் செய விரும்பு’ என்று ஆத்திச்சூடி கற்பித்த உடன்பிறந்த சகோதரனா இவன்?
வெடுக்கென்று ஏறிட்டுப் பார்க்கிறாள் வித்யா.
சாவு வீட்டில் தலையில் அறைந்துகொள்கிறாற்போல் அடித்துக்கொண்டு ஓவென்று ஒப்பாரி வைத்த அம்மா, என்ன நினைத்துக்கொண்டாளோ திடீரென்று எழுந்து ஓடிப்போய் டிராயரைத் திறந்து எதையோ எடுத்து வந்து வித்யாவின் முகத்துக்கெதிரே நீட்டுகிறாள். “என்ன இது?”
ஒரு சிறிய மூட்டைப்பூச்சி மருந்து பாட்டில்.
“குடிச்சுட்டு ஒரேயடியாச் செத்துடுவோம்.”
அம்மா சொன்னால் சாதிக்காமல் விடமாட்டாள். அவளது பிடிவாதமும் ஆக்ரோஷமும் வித்யாவை நிலை குலைய வைக்கின்றன.
வண்ண வண்ணப் பூச்சரங்களும் மாவிலை தோரணங்களும் சரவிளக்குகளுமாக வீடே விழாக்கோலம் பூண்டு கிடந்தது. வெள்ளைச்சீருடையணிந்த வேலையாட்கள் கைகளில் குளிர்பானத்தட்டை ஏந்தியபடி குறுக்கும் நெடுக்குமாக அலைய, திரைப்படப் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள், நண்பர்கள்,உறவினர்கள் என்று ஏக அமர்க்களம்.
பரந்து விரிந்த ஹாலின் நட்டநடுவே போடப்பட்டு மலர்க்கொத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜை விளிம்பில் வித்யா. பக்கத்தில் மைக்கைப் பிடித்தபடி அம்மா: “… எனது செல்ல மகள் வித்யா திரை உலகத்துள் நுழைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அவள் இன்றும் முடிசூடா ராணிதான். நேற்றுகூட நலைந்து கம்பெனியிலிருந்த ஒப்பந்தம் செய்ய வந்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.காரணம், அவளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டேன்.”
படபடவென்ற கரவொலி.
அன்னை தொடர்ந்தாள்: “மாப்பிள்ளைகூடப் பார்த்தாகிவிட்டது. பிரபல தொழிலதிபர் சந்தோஷ்தான் அவர்.”
மீண்டும் பலத்த கரகோஷம்.
மைக்கை வித்யாவின் கையில் பிடிவாதமாகத் திணித்தபடி, “ஆமோதித்து நீயும் இரண்டொரு வார்த்தை பேசு”என்று கிசுகிசுத்தாள் தாய்.
“எனக்குக் கல்யாணமே வேண்டாம்.”
அங்கே குழுமியிருந்தவர்களின் உடலியக்கம் சட்டென முடங்கிப்போக, அனைவரது பார்வையும் வித்யாவை மொய்க்க, அம்மா அதிர்ச்சியில் முறைக்க, அண்ணன் ஒரு மூலையிருந்து பாய்ந்தோடி வர-
“ஏன்?”
“ஏன்?”
“ஏன்?”
வித்யா வேதனையுடன் சிரித்தாள். “பத்து வருஷத்துக்குமுன்னால் எனக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட இல்லறம் இப்போது அநாவசியம். உள்ளம், உணர்வுகள்,உடல் மூன்றும் முழு வேகத்துடன் செயற்பட்டபோதுதான் இல்லறம் தேவைப்பட்டது. இப்போது நான் வெறும் மரக்கட்டை. எனக்கு எதுக்குக் கணவன், இல்லறம், வாழ்க்கை? ”என்று கூறிக்கொண்டே மலேரென்று கீழே சரிந்தாள் அவள்.
பத்தாண்டுகளுக்குமுன் வித்யாவை அச்சுறுத்துவதற்குப் பெற்றன்னை பயன்படுத்திய அதே சிறிய மூட்டைப்பூச்சி மருந்து பாட்டில் அவளது வலக்கரத்தில், காலியாக.

**

Published in “Devi” weekly 05.05.2010 issue.

***
நன்றி : ‘தேவி’, ஏ.ஹெச். ஹத்தீப் | E-Mail :  hatheeb@gmail.com

தலாக் (சிறுகதை) – ஏ.ஹெச். ஹத்தீப்

‘போபால் பேரழிவு ஒரு திட்டமிட்ட சதி’ என்று ஆதாரங்களுடன் சொல்கிறது நம் ஹத்தீப் சாஹிபின் அரசியல்  புதினமான ‘இரும்பு மங்கை’ . ‘போபால் தீர்ப்பு’  என்ற இன்னொரு சதி கசிவதற்கு 6 மாதம் முன்னரே வெளிவந்த நாவல் அது. கத்தி மேல் ஹத்தீப் நடந்த அதன் சில பகுதிகளை அப்புறம் பதிவிடுகிறேன்.  இன்னும் அதை எனக்கு டைப் செய்து அனுப்பாமல் சதி செய்யும் அவரை ,  ‘சரி சாபு… அதென்ன ‘இரும்பு மங்கை’ – இந்திராகாந்தியின் புகைப்படத்தோடு?’ என்று கிண்டல் செய்தால் ‘அது (மணிமேகலை) பதிப்பகத்தின் சதி’ என்கிறார்! இறைவனோடு இகலோகத்தையும் சிந்திக்கும் சகோதரர் ஹத்தீப் அவர்களின் புதிய சிறுகதை –  சவுதி நண்பர் ஹாஜாவுக்காக…

ரமளான் க்ரீம்!

*

தலாக்

ஏ.ஹெச். ஹத்தீப்

ஜமீலாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது.

அதிர்ச்சியில் ரத்தம் தலைக்கேறி மூலை கலங்கிவிடவில்லை. வானம் பொடிந்து தலையில் விழுந்து அவளை நிலை குலைத்துவிடவில்லை. கடந்த மூன்று மாதக்காலமாக இந்த நோட்டீஸ் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த விஷயம்தான் என்றாலும், அக்தாருடன் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்த காலங்கள் நினைவில் நிழலாட, அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வரவே செய்தது. உதட்டைக் கடித்து அடக்கப் பார்த்தாள். முடியவில்லை. அவளது வெளிறிய முகம் பளிச்சென்று காட்டிக் கொடுத்துவிட்டது.

“என்னம்மா அது கடுதாசி?”என்று நடுங்கும் குரலில் வினவினாள் அம்மா, மகளின் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு.

உடனடியாக விடையளிக்கவில்லை ஜமீலா. சற்று நேரமேனும் தாயின் உள்ளம் உடைந்து போவதைத் தவிர்க்க நினைத்தாள். ‘உன் மானத்தைக் காக்கும் ஆடையாக இருப்பேன்’என்று நிகாஹ் மஜ்லிஸில் உறுதியளித்த அக்தார் அஹமதா இவ்வளவு சீக்கிரத்தில் தலாக் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான் என்று நம்புவதற்கு வேறு யாரும் யோசிக்கலாம். ஜமீலாவைப் பொறுத்தவரை அதொன்றும் மகாக் கஷ்டமாக இல்லை. என்றாலும் அவனது உருவம் உள்ளத்தை ஆக்ரமித்து சகிக்க முடியாத சோகத்தைக் குவித்துக் கொண்டிருந்தது.

இதை அறிந்தால் அம்மா என்ன ஆவாள்? முற்றிலுமாக நிலை குலைந்து விடமாட்டாளா?

ஜமீலா குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அதுவும் பெண்.  பிளஸ் டூவரை படித்திருக்கிறாள். அதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இட ஒதுக்கீட்டுக்கெல்லாம் பெண் லாயக்கற்றவள்.  குடும்பத்தின் ஏழ்மையை அகற்றுவதற்கு பெண்கள் தரப்பில் எதுவும் செய்ய முடியாத சமூகச் சூழல். போதாக்குறைக்கு இப்போது அவளது கையில் ஆறு மாதக் கைக்குழந்தை நுஸ்ரத்!

அதனாலென்ன? அவளுக்காவும் குழந்தைக்காவும் அக்தார் சம்பாதித்து வைத்துவிட்டுப் போன ரொக்கமும் சொத்தும் லட்சக்கணக்கில் இருக்கையில் பழைய ஏழ்மையை நினைத்து வருந்துவானேன்?

அனாலும், நபிகள் நாயகத்தின் சொல்லொணா வெறுப்புக்கு ஆளான விவாகரத்து, ஒரு பெண்ணின் வாழ்வில் மிகக் கொடுமையான துர்நிகழ்வு இல்லையா?

“ஏம்மா அழறே?”என்று கேட்டுக்கொண்டே தாய் அழுதாள்.

‘அகத்திலும் புறத்தில் இறையருள் கிடைக்கட்டுமாக. சிறப்பானவற்றில் ஏகன் உங்களை இணைத்து வைப்பானாக’ என்று திருமணத்தின்போது ஊரார்  உளமாரப் புரிந்த பிரார்த்தனைகள் அத்தனையும் ஒன்றரையாண்டுக்குள்ளேயே பொய்த்துப் போய்விட்டனவா? இதைப் பெற்ற தாயால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்றாலும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கெட்ட செய்தியை மறைத்து வைக்க இயலும்?

மீண்டும் ஒரு முறை நோட்டீஸைப் பார்த்தாள் ஜமீலா. அதில் அவள்மீது குற்றம் எதுவும் சுமத்தவில்லை. ‘ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியவில்லை’ என்று மட்டும் நாசூக்காகவும் நாகரீகமாகவும் குறிப்பிட்டிருந்தான் அக்தார். “உன் மருமகன் தலாக் நோட்டீஸ் அனுப்பி இருக்கார்ம்மா” என்று முணுமுணுத்தாள் ஜமீலா, மெல்லிய விசும்பலினூடே.

“தலாக்கா?”என்று கேட்டுக்கொண்டே ஒடிந்து போய்த் தொப்பென்று கீழே உட்கார்ந்தாள் அம்மா. “உங்களுக்குள்ளே என்னம்மா நடந்தது? நீ எதுவும் தப்புப் பண்ணினியா? மாப்பிள்ளை தங்கமான மனுஷர்ல? நீ என்னம்மா பண்ணினே? சொல்லும்மா?”

அம்மா சொல்வதில் துளியும் தப்பில்லை. அக்தார் அஹமத் போன்ற ஒரு கணவன் வாய்ப்பதற்கு ஜமீலா கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிசயிக்கத்தக்க அழகன். நல்ல சிவப்பு. எடுப்பான உயரம். கடைத்தெருவில் ஒரு கம்ப்யூட்டர் சென்டர். எல்லாவற்றுக்கும் மேலாக ஜமீலாமீது உயிரையே வைத்திருந்தான்.

ஆனால் என்ன நடந்தது என்பதை எப்படிச் சொல்வது? இந்த நோட்டீஸுக்கு ஒருவகையில் அவளும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை எப்படி விளக்குவது?

திருமணமான இரண்டொரு மாதத்துக்குள் வேறொரு வீட்டுக்குத் தனிக்குடித்தனம் வந்துவிட்டார்கள். சீதன நகைகளையெல்லாம் விற்று ஒரு சின்னஞ்சிறு வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்ததுபோக மிஞ்சிய பணம் சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கே போதுமானதாக இருந்தது. அதிகமான வசதிகள் இல்லாவிட்டாலும் இல்வாழ்க்கையில் இன்பத்துக்குப் பஞ்சமில்லை.

வறுமை, கஷ்டத்துக்கிடையே நுஸ்ரத் பிறந்தாள்.

திடீரென்று ஒருநாள் அக்தார் உற்சாகத்துடன் சொன்னான்: “ஜமீலா, இன்னிக்கு குழந்தையை தூக்கிட்டு ரெண்டுபேரும் ஜாலியா மாயாஜல் போறோம். ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிடறோம். எல்லாம் டாக்ஸியில்தான். இன்னிக்குச் சமையல்கட்டுக்கு டாடா. ”

வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த ஜமீலா வெடுக்கென்று நிமிந்து பார்த்து, “அதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும்?”என்று கேட்டாள்.

“எங்க வீட்டு மஹாராணிக்கு செலவைப்பத்தி என்ன கவலை? ”

“மஹாராணிதான் கேட்கிறாள். சொல்லுங்க: எவ்வளவு செலவாகும்?”

“ மிஞ்சி மிஞ்சிப் போனால்  ஆயிரம்  ரூபாய்.”

ஜமீலா தலையை உயர்த்தாமலேயே, “அதை அப்படியே சேமிச்சு வையுங்க! குழந்தையின் கல்யாணக் காலத்தில் உதவும் ”என்றாள்.

அனல் பட்டாற்போல் முகம் வாடிப் போனான் அக்தார். இமையோரத்தில் நீரின் மினுமினுப்பு. ஒரு சராசரிப் பெண்ணின் விருப்பத்தைக்கூட உணராத அறியாமை,அவனுள் வெட்கத்தையும் வேதனையையும் ஊற்றெடுக்க வைத்துவிட்டது. அன்றிரவு வெகுநேரம்வரை இருவருக்குமிடையே கனத்த மௌனம்.

படுக்கையில் தூக்கம் கொள்ளாமல் கணவன் புரண்டுக்கொண்டிருப்பதைக் கண்டு ஜமீலாவுக்கே இதயம் ரணமாகிப் போயிற்று.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.

‘இஷா’த் தொழுகையை முடித்துவிட்டு ஜமீலா முஸல்லாவை மடித்துக் கொண்டிருந்தாள்.

‘டண்டணாய்’ என்று வாயால் ஒரு வினோத ஒலி எழுப்பிக்கொண்டே அவள் முகத்துக்கெதிரே ஒரு கை நீண்டது.அதன் ஆள்காட்டி விரலில் இரண்டு வளையல்களும் ஒரு மொத்தக் கழுத்துச் சங்கிலியும் தொங்கிக்கொண்டிருந்தன.

எல்லாமே சுத்தத் தங்கம்.

ஜமீலாவுக்கு மூச்சே நின்றுவிடும்போலிருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் வியப்பு முகத்தை ஆக்கிரத்துக்கொண்டிருந்தது. தனது மனைவி ஓடி வந்து ஆசை ஆசையாய் அதை எடுத்து அணிந்து கொள்வாள் என்று எதிர்பார்த்த அக்தாருக்குச் செம ஏமாற்றம்.

“இது எவ்வளவு?” என்று கேட்டாள் ஜமீலா, குரலில் சுரத்தையில்லாமல்.

தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழகை ரசித்துக்கொண்டே,“ஒரு லட்சம்”என்று பதிலிறுத்தான் அவன்.

“பணம் ஏது?”- புருவங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, பார்வையில் சுள்ளென்ற உஷ்ணம்.

அக்தார் சோர்வுடன் சாய்வு நாற்காலியில் விழுந்தான். “சென்டரை வித்துட்டேன்.”

“இனிமேல் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?”

“அல்லாஹ் தருவான். உனக்கு நம்பிக்கையில்லையா?”

“சாப்பிடுறதுக்கு வசதியாக அல்லாஹ் கொடுத்த சென்டரையே வித்துட்டு, நாளைக்கு அல்லாஹ் தருவான்னு சொல்றீங்களே, இது உங்களுக்கே சரியாப்படுதா? இதுதான் ஈமானா?”

சுரீரெனச் சாட்டையடி பட்டாற்போல் அவனுக்கு வலித்தது. “உன்னை மூளியாகப் பார்க்கறதுக்கு எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இரு்க்கு ஜமீலா. உன்னை மகிழ்ச்சிப்படுத்துறதுக்கு எனக்கு வேறு வழி தெரியலே.”

“வயித்துலே பசியை வெச்சுக்கிட்டு நகையெல்லாம் போட முடியாது. நீங்க நிறையச்
சம்பாதிப்பீங்க’ல? அப்ப தங்கமா எடுத்து வந்து என் தலயிலே கொட்டுங்க. சரியா?”

அவன் வெறுமனே தலையாட்டினான்.

“இந்த நகைகளை மறுபடியும் வித்துட்டு ஏதாவது பிஸினசுக்கு ஏற்பாடு பண்ணுங்க ”என்று ஒரு வாத்தியார் மாதிரி அவள் அதட்டினாள்.

“சரி மேடம்”என்று பயந்த பாவனையில் அவன் ஒப்புக்கொண்டான்.

“இப்ப ஒழுங்கா சாப்பிட வாங்க.”

அவனது சிந்தனை எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

ஒருவாரம் கழித்து…

ஜமீலா சமையல்கட்டில் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தபோது, படுகுஷியாகச் சீழ்க்கையடித்தவாறே அக்தார் வீட்டுக்குள் நுழைந்தான். கைலிருந்த பிளாஸ்டிக் பையை அடைத்துக்கொண்டு இனிப்புப் பலகார அட்டைப்பெட்டிகள். ஒன்றை எடுத்துத் திறந்தான். நெய் மைசூர்பாகு. “எடுத்துக்கோ”என்றான் உற்சாகத்துடன்.

ஜமீலா ஒரு மைசூர்பாக்கை எடுத்துக்கொண்டு, “மஹாராஜாவுக்கு இன்னிக்கு என்ன மகிழ்ச்சி ஊற்றெடுக்குது?” என்று வினவினாள்.

“ஐயாவுக்கு லண்டனில் வேலை கிடைச்சுருக்கு. மாதம் லட்ச ரூபாய் சம்பளம்.இரண்டு நாளில் கிளம்பணும்.”

“ப்பூ! இவ்வளவுதானா?” என்று புன்னகைத்தாள் ஜமீலா.

“இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?”

“கணவனைவிட்டுப் பிரியுறது ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியான விஷயமா?”

“நம்ம சமுதாயத்துலே இது புதிதல்லவே?”

“வாஸ்தவம்தான்”என்று அவள் ஆணித்தரமாக ஆமோதித்தாலும், “கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சுட்டு ஒவ்வொரு பெண்ணும் என்ன சித்திரவதை அனுபவிக்கிறான்னு உங்களுக்குத் தெரியுமா?”என்று கேட்டாள்.

“கணவனுக்கு மட்டும் வேதனை இல்லையா?”என்று குறுக்கிட்டான் அக்தார்.

“அப்படியானா இங்கேயே இருக்க வேண்டியதுதானே?”என்று மடக்கினாள் ஜமீலா.

“இங்கேயே இருந்தா சமுதாயத்துலே எப்படி தலை நிமிர்ந்து நிக்கிறது? உனக்கு நகை நட்டெல்லாம் போட்டு எப்படி அழகு பார்க்கிறது? நம்ம பொண்ணுக்கு எப்படி நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணுறது? அதையெல்லாம் உத்தேசித்துத்தானே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ஒன்றை இழந்தாதான் இன்னொன்றை அடைய முடியும்.”

“தத்துவமா?”

‘ஓஹோஹோ’என்று உற்சாக மிகுதியால் அக்தார் கூவினாலும்,என்னவோ தெரியவில்லை அவனது சிரிப்பில் அவ்வளவாக ஜீவன் மிளிரவில்லை. என்றாலும் சொன்னான்: “ எல்லாம் உனக்காகத்தான்.”

மறுநாளே, கையில் ஒரு புத்தம் புதிய கோப்புடன் உள்ளே வந்தான் அக்தார். மனைவியிடம் அளித்தான்.

“என்ன அது?”

“நகரின் மையப்பகுதியில் ஓர் ஆடம்பரமான தொகுப்பு வீடு. பங்களா என்று வைத்துக்கொள்ளேன். அதன் ஃபைல்.”

“ஏது?”

“அல்லாஹ் கொடுத்தான்.”

பார்வையால் துளைத்தாள் ஜமீலா. கேள்வியில் சந்தேகக் கணைகள். “இன்னும் வெளிநாடே புறப்படலே. அதுக்குள்ளே இவ்வளவு பெரிய சொத்து வாங்க பணம் ஏது?”

“இப்போது இனிஷியல் பேமண்ட் நாற்பதாயிரம் மட்டும் கட்டுறோம். மீதித் தொகையை மாதாமாதம் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள். கம்பெனி  ஃப்ளாட்.”

“அதானே பார்த்தேன்.”

“ஓகே! நாளைக்கே புது வீட்டுக்குக் குடி போயாகணும். சாமானையெல்லாம் எடுத்து வை. நான் லண்டலிருந்து திரும்பிவரும்வரை துணைக்கு உங்கம்மாவைக் கூப்பிட்டு வச்சுக்கோயேன்.”

“நீங்க திரும்பி வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்?”

“அது சொல்ல முடியாது. ஒரு வருஷம்கூட ஆகலாம்.”

ஜமீலா நெடுமூச்செறிந்தாள்.

‘ஓரண்டு உத்தியோகம்’ என்று சொல்லிவிட்டு, லண்டன் புறப்பட்டுச் சென்ற அக்தார் மறுமாதமே திரும்பி வந்தான். கை நிறைய விலையுயர்ந்த பொருட்கள். ஒரு பிரீஃப்
கேஸைத்  திறந்து காட்டினான். பாம்புக்குட்டி மாதிரி மொத்த மொத்தச் சங்கிலிகள், பத்து வளையல்கள், கவர்னர் மாலைகள், காசு மாலைகள், நெத்திச்சுட்டி, கால் கொலுசுகள், தொங்கல், மாட்டல், தோடு, வைர மூக்குத்தி என்று அவ்வளவும் தங்க நகைகள். “எல்லாம் உனக்குத்தான்.போதுமா?”என்று சிரித்தான் அக்தார்.

“மொத்தம் எத்தனை சவரன்?”

“இந்தப் பெண்களே இப்படித்தான்”என்று பொய்க்கோபம் காட்டினான் அவன். “ கணவன் ஒருமாதம் கழித்து வந்திருக்கானே, அவன் தேவை என்னன்னு கேட்டுப் பரிமாறுவோம்னு கிடையாது” என்று கண் சிமிட்டிப் புன்னகைத்தவன், “எதுக்கெடுத்தாலும் கேள்விக்குமேல் கேள்வி” என்று செல்லமாகச் சலித்துக்கொண்டான்.

அவள் விடவில்லை. “மொத்தம் எத்தனை சவரன்?”

“நூத்திஐம்பது.”

“அந்தப்பணத்தை வச்சு இந்த வீட்டின்மேலுள்ள கடனை அடைச்சிருக்கலாம்ல? ”

“அதானே உன் கவலை?”

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“வீட்டுக்கடனை அங்கேயே அடைச்சுட்டேன். போதுமா?”

அவள் ஒரு புதிய பார்வையால் அவனைத் துழாவினாள். அவளுள் ஆயிரக் கேள்விகள். அதற்கெல்லாம் விடை பெறுகிற சமயமல்ல இது. என்றாலும் தெளிவு பெற்றே தீர வேண்டும்.
அவளது ஐயத்தை வலிமைப்படுத்துகிறாற்போல் பல பொருள்கள் அவளது கண்களில் தென்பட்டன.

“வாயேன் ஜமீலா”என்று அவன் ஆசையாய் அவளது இடுப்பை வளைக்க, அவள் இயந்திரமாய் அறைக்குள்  பின்தொடர்ந்தாள். 

வைகறைப்பொழுதிலேயே எழுந்து, சில்லென்ற நீரில் குளித்து, ‘சுபுஹு’ தொழுகையை முடித்து, கணவருக்கு காபி தயாரிப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தபோது தொலைபேசி ஒலித்தது.

ரிரீவரை எடுத்து, “அஸ்ஸலாமு அலைக்கும்”என்றாள்.

மறுமுனையில், “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்று பதில் முகமன் கூறியது ஒரு கரடு முரடான ஆண்குரல். “நேற்று ராத்திரி அக்தார் பத்திரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தானா?”

ஜமீலாவுக்குத் திக்கென்றது. “ வந்துவிட்டார். நீங்க யார்?”

“அவன் நண்பன். அவனுடன் இப்போது பேச முடியுமா? ஒரு முக்கியமான செய்தி.”

“அவர் அசந்து தூங்கிக்கிட்டிருக்கார். உங்க பெயர் என்ன?”

“நம்பர் டூ என்று சொல்லுங்கள். புரிந்துகொள்வான்”- தொடர்பு துண்டித்துவிட்டது.

ஜமீலாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. வெறும் அநாமதேய தலைபேசி அழைப்பை வைத்துக்கொண்டு கைப்பிடித்த கணவனைச் சந்தேகிப்பது ஒரு குடும்பப்பெண்ணின் லட்சணமல்ல. இருந்தாலும் இதயத்தை என்னவோ இம்சித்தது. அதற்குத் தீனி போட்டாக வேண்டும். என்ன செய்வது? எப்படி இந்தக் குழப்பத்திலிருந்து மீள்வது?

நேற்று தங்கநகைகள் வைத்து எடுத்து வந்த கறுப்புநிற சூட்கேஸைத் திறந்தாள். ஒவ்வொரு ஆபரணமாக எடுத்துப் பரிசோதித்தாள். ஆனால் எல்லாவற்றிலுமே விலையும் அளவும் பொறிக்கப்பட்ட அட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. பெட்டியின் இன்னோர் அறையைத் திறந்து கையைவிட்டுத் துழாவினாள். பாஸ்போர்ட்டும் குடி இருக்கும் வீட்டின் கிரயப் பத்திரமும்
கிடைத்தன. முத்திரைத்தாளின் பக்கங்களைப் பரபரப்புடன் புரட்டினாள். இரண்டு நாட்களுக்குமுன்தான் அது சென்னை பதிவாளர் அலுவகத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது. அப்படியானால் வீட்டுக்கே வராமல் அவன் சென்னையில்தான் இருந்திருக்கிறான்.  பரபரப்பில் பயம் கலக்க உடலெல்லாம் பதறியது ஜமீலாவுக்கு. நடுங்கும் விரலால் பாஸ்போர்ட்டைப் புரட்டினாள். அக்தார் லண்டன் சென்று வந்ததற்கான சுங்கத்துறை முத்திரைகள் எதுவும் குத்தப்படவில்லை. ஆக, அவன் லண்டனுக்கும் செல்லவில்லை.

அப்படியானால் கட்டிய மனைவியிடமே பொய்யுரைக்கிற அளவுக்கு அவனது ரகசியம் என்ன? அவனுள் மறைந்து கிடக்கிற மர்மங்கள் என்னென்ன?

“எல்லாத்தையும் சோதனை போட்டாச்சா?”என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஜமீலா.

அக்தார். அவனது விரலுக்கு நடுவில் ஓர் ஏ.டி.எம்.அட்டை. “இதைப் பிடி”என்றான் அன்பாக.  குட்டு உடைந்துவிட்டதே என்ற ஆத்திரத்திற்குப் பதிலாக முகத்தில் அபூர்வ சாந்தம். குரலில் அமானுஷ்ய வருத்தம். திடீரென்று அழுதான். விசும்பலினூடே சொன்னான்: “நீ சிரமப்படுவதை என்னாலே தாங்கிக்க முடியலே ஜமீலா.”

“நான் சிரமப்படுறதாக யார் சொன்னது? பிரியாணி சாப்பிட முடியலேன்னாலும் பசிக்கு உணவு கிடைக்குது. பங்களா இல்லைன்னாலும் ஒரு சின்ன ஓட்டு வீடு போதும். கண்ணுக்கு நிறைஞ்ச கணவன் நீங்க இருக்கிறீங்க. அழகான குழந்தை.எல்லாத்துக்கும்மேலே அல்லாஹ் இருக்கிறான். எனக்கென்ன சிரமம்?”என்று கரகரத்த குரலில் கூறினாள். ஒரு வகையில் அவளது ஏழ்மைக்கோலமும் வறுமைமுகமும் அவனை வெகுவாகச் சிரமப்படுத்திக் கொண்டிருப்பதை அவளால் இப்போதுதான் உணர முடிந்தது.

அதற்குள் என்னென்ன விபரீதமெல்லாம் நடந்திருக்குமோ?

நினைத்துப் பார்க்கவே பகீரென்றது ஜமீலாவுக்கு.

குறுக்கிட்டான் அக்தார்: “என்னைச் சமாதானம் பண்ண முயற்சிக்காதே! இதிலே இருபது லட்சரூபாய் இருக்கு. நீயும் நம்ம குழந்தையும் எக்காரணத்தைக்கொண்டும் எதிர்காலத்தில் சிரமப்படக்கூடாது என்பதற்காக நான் செய்த ஏற்பாடு. இதையெல்லாம் எடுத்துக்கிட்டு உன் அம்மா வீட்டுக்கே போய்டு!”

இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, “நீங்க?”என்று கேட்டாள் ஜமீலா. அவளை விட்டுப் பிரிந்து கைக்கெட்டாத தூரத்துக்கு, கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு அவன் போகப்போகிறான் என்று மட்டும் உள்ளத்தில் உறைத்தது.

அவன் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தான். மனப்போரட்டத்தில் சிக்குண்டுக் கிடந்தான் என்பதே சரியான பதம். அப்புறம் , “நான் ஜிஹாதுக்குப் போறேன்”என்று திடமாக முணுமுணுத்தான்.

‘ஜிஹாத்’என்றால் என்னவென்றே தெரியாதவளல்ல ஜமீலா. 1400 ஆண்டுகளுக்கு முன்னால், நபிகள் நாயகத்தின் காலத்தில், இஸ்லாத்தின் பகையாளிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போருக்குப் பெயரே ‘ஜிஹாத்.’

இப்போது அதெற்கென்ன அவசியம் வந்தது? ஜிஹாத் புரிவதற்கான சூழலோ நிர்ப்பந்தமோ எங்கே இருக்கிறது? குறிப்பாக இந்தியாவில்?

சினத்தையும் சோகத்தையும் மிஞ்சி, விரக்தியான சிரிப்புடன், “மனைவியோடு, குழந்தைக்காக, சமுதாயத்தோடு வாழ்றதைவிட ஜிஹாத் அவசியமா?” என்று வினவினாள் ஜமீலா.

அவன் விடை எதுவும் அளிக்கவில்லை. கன்னத்தில் தாரை தாரையாக நீர் கொட்ட, அக்தார் எதுவும் பேசாமல் ஜமீலாவின் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

அதுதான் அவனின் கடைசி ஸ்பரிசம்.

பட்ட காலிலே படும் என்பார்கள். ஜமீலாவின் வாழ்க்கையில் அது நிரந்தரம் போலும். நேற்றுதான் விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது. மறுநாள் சாயங்காலமே பேப்பர் பையன் விட்டெறிந்துவிட்டுப் போன நாளிதழில் இன்னொரு பயங்கரச் செய்தி: ‘ போலீசுக்கு உளவு சொன்னவர் சுட்டுக் கொலை. தீவிரவாதி அக்தார் அஹமதுக்குப் போலீஸ் வலைவீச்சு.’

‘யா அல்லாஹ்’ என்று தொப்பென்று தரையில் விழுந்தாள் ஜமீலா.

தொலைபேசி ஒலித்தது. “உங்க கணவர் தீவிரவாதியாமே?”-முகம் தெரியாத யாரோ விசாரித்தார்கள். தெருவில் நடந்து செல்பவர்களின் பார்வை மொத்தமும் அந்த வீட்டின்மீதே மொய்த்தது. அக்கம் பக்கத்துப் பெண்களில் சிலர் வேண்டுமென்றே வேண்டியவர்கள் மாதிரி ‘நலம்’விசாரிக்க வந்தார்கள். அடுத்துப் பெண் காவலர் துணையுடன் பெரிய பெரிய போலீஸ் அதிகார்களின் படையெடுப்பு. ஜமீலா கற்சிலை என நின்றிருக்க, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சோதனை. கேள்விமேல் கேள்விகள். குத்தலான, கிண்டலான, இதயத்தைக் கீறிப் பிறாண்டும் விசாரணைகள்.

அப்புறம் இன்னொரு போன். வெட்கமும் வேதனையும் பிடுங்கித்தின்ன, நடுங்கும் விரல்களால் ரிஸீவரை எடுத்து, “யார்?’’ என்று கேட்பதற்குள் ஜமீலாவுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

“சிறப்புப் புலனாய்வுத் துறை. உன் கணவனை இன்றிரவே பிடித்துவிடுவோம். அதற்குள் உண்மையைக் கூறிவிடு: அவன் எங்கே மறைந்திருக்கிறான்?”

ஜமீலா போனிலேயே குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

பால்கனியில் நின்றவாறு குழந்தைக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த அம்மா, “என்னம்மா? என்னம்மா?”என்று பதறினாள்.

விளக்கமளிக்கும் மனோநிலையில் ஜமீலா இல்லை. “உடனடியாக நம்ம கிராமத்துக்கே திரும்பிப் போறோம்மா”என்று கூறியவள், அந்தக் கறுப்பு சூட்கேஸை எடுத்து அக்தார் ஆசை ஆசையாய் வாங்கிக்கொடுத்த தங்க நகைகள், வீட்டுப் பத்திரங்கள், நேற்று பேங்க்கில் மாற்றிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள், விலையுயர்ந்த பொருட்கள் அத்தனையும் அதனுள் திணித்துக் கொண்டிருந்தாள்.

இரயில் புறப்படும் நேரம்.

பெட்டியில் அதிகக் கூட்டமில்லை. அங்கொருவரும் இங்கொருவருமாக பிரயாணிகள். குழந்தை வேடிக்கை பார்ப்பதற்கு வசதியாக ஜமீலா ஜன்னல் பக்கம் இடம் தேர்ந்தெடுத்திருந்தாள். பக்கத்தில் அம்மா. அவளது பார்வை எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

எதிரே ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மூன்று குழந்தைகள், ஒவ்வொரு வயது வித்தியாசத்தில். மகிழ்ச்சி தவழ்ந்து வருடக்கணக்கில் ஆகியிருக்கும் போலும். முகத்தில் அவ்வளவு சோகம். அடிக்கடி அழுதாள். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகத் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். என்றாலும் அவளது தோள்பட்டையின் குலுக்கல் அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. வெளிர் மஞ்சள் நிறக் கசங்கிய சேலைத் தலைப்பை மடக்கி  போட்டிருந்த முக்காடு, அவளது சோகத்தையும் முதுமையையும் இன்னும் அதிகமாகக் காட்டிற்று.

ரயில் நிலையத்துக்கு வரும்போது அம்மா வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டுக்களும் பழங்களும் ‘கேரி’ப்பையில் அப்படியே கிடந்தன. எதிர் இருக்கைக் குழந்தைகள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன. முகத்தின் வாட்டத்தைப் பார்த்தால் சாப்பிட்டு வெகுநாட்களாகி இருக்கும் போலிருந்தது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலை. அவரவர் கஷ்டம். அவரவர் வேதனை. ஆனால் ஜமீலாவைவிட துர்ப்பாக்கியசாலியாக நிச்சயம் இருக்க மாட்டாள். மிகவும் ஏழ்மையிலும் இயலாமையிலும் உழன்ற ஜமீலா, கையிலிருந்த அத்தனை ஐஷ்வர்யங்களையும் புயல் தட்டிச் சென்றாற்போல் பறிகொடுத்தவள். அப்படிப்பட்ட துக்கிரி உலகத்தில் ஜமீலாவைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது.. வாழ்வதற்கான வசதிகள் இருந்தும் வாட்டி வதைக்கும் தனிமை. கணவன் உயிருடன் இருந்தும் விதவை. இத்தனை சிறுவயதில் எந்தப் பெண்ணும் இவ்வளவு கொடுமையை அனுபவித்திருக்க மாட்டாள்-எதிரே விநாடிக்கொரு தரம் குலுங்கிக் குலுங்கி அழுகிற அந்தப் பெண் உட்பட. இறைவன் அருளிய இன்பமயமான வாழ்க்கை, இவ்வளவு விரைவில் கை நழுவிப் போகுமென்று அவள் கனவுகூடக் காணவில்லை. இப்போது அவளுடன் துணை இருப்பதெல்லாம் குழந்தை நுஸ்ரத்தும் பாழாய்ப்போன தனிமையும்தான்.

பெட்டி நிறையப் பணமும் தங்க ஆபரணங்களும் இருந்தென்ன? மனத்தில் சற்றும் நிம்மதி இல்லையே? இதயம் பாறாங்கல்லாய்க் கனக்கிறதே? இந்த நரக வேதனைக்கு என்றைக்குத்தான் விடிவுகாலமோ?

ஆறுதல் தேடி மனத்தை வேறு எதிலாவது செலுத்த நினைத்தாள் ஜமீலா.எதிர் இருக்கைக் குழந்தைகள்தான் கண்ணில்பட்டன. பக்கத்திலிருந்த கேரிப்பையிருந்து பிஸ்கட் பாக்கெட்டுக்களை எடுத்து குழந்தைகளுக்கு அளித்தாள்.  ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்து அந்தப் பெண்ணின் கையில் திணித்தவாறே, “ஏம்மா ரொம்பவும் சோகமா யிருக்கிறீங்க?”என்று விசாரித்தாள். ‘இன்னொருவரின் துக்கத்தில் பங்கெடுத்தால் நமது துன்பம் பாதி குறைந்த மாதிரி’ என்று சிறுவயதில் மத்ரஸா உஸ்தாத் அடிக்கடிச் சொல்வது நினைவில் நிழலாடிற்று..

ஜமீலா சற்றும் எதிர்பாராத விதமாக அந்த அம்மாள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். கண்களில் மடை திறந்து கண்ணீர் கொட்டியது. அந்த அழுக்கடைந்த முந்தானைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்க்கொண்டாள். கண்ணீர் மீண்டும் மீண்டும் பிரவாகமெடுத்தது. அழுகை ஓயவில்லை.

ஜமீலாவுக்கு ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

விசும்பலினூடே அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்: “போலீசுக்கு உளவு சொன்னார்னு தீவிரவாதிகள் என் புருஷனை சுட்டுக் கொன்னுட்டானுங்கம்மா”என்று மீண்டும் கதறினாள்.

‘யா அல்லாஹ்’ என்று ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே பின்னால் சாய்ந்தாள் ஜமீலா.”இதென்ன சோதனை யா அல்லாஹ்?’- உள்ளத்தில் ஏற்பட்ட மரண வேதனையை  அப்படியே கண்ணைப் பொத்திக்கொண்டு குறைக்க நினைத்தாள் ஜமீலா. அது அவ்வளவு எளிய காரியமாகத் தோன்றவில்லை. மேலும் மேலும் ரணமாகிக்கொண்டிருந்த இதயம் சகிக்க முடியாதபடி கனத்து வலித்தது. நெடுநேர மயான மௌனத்துக்குப்பின் படீரென இமையைத் திறந்தாள்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றுகொண்டிருந்தது.

குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டாள் ஜமீலா.அம்மாவைப் பரபரவென்று எழுத்துக்கொண்டு பெட்டியைவிட்டு இறங்குபோது, எதிர் இருக்கைப் பெண்ணிடம் ஜமீலா சொன்னாள்: “ நாங்க காபி குடிச்சுட்டு வந்துடறோம்.”

அந்தப் பெண் எதேச்சயாக கேட்டாள்: “இந்தப் பெட்டி?”

ஜமீலா பதிலேதும் கூறவில்லை. ‘அதற்குரியவள் நீதான்!’என்று நினைத்துக்கொண்டபோது, இதயத்தின் வலியும் கனமும் ஜமீலாவுக்கு வெகுவாகக் குறைந்திருந்தன.

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

அழகிய சிந்தனைகள் – பழ. கருப்பையா மற்றும் ஏ.ஹெச். ஹத்தீப்

‘அழகிய திருக்குர்ஆன் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் , இந்த வார துக்ளக்-ல் (ஆமாம், துக்ளக்-ல்தான்) பழ. கருப்பையா அவர்களின் கட்டுரை வெளியாகியிருக்கிறது. தட்டச்சு செய்து மாளாது என்பதால் அப்படியே பதிகிறேன். ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர் தாஜுக்கு நன்றி. க்ளிக் செய்து பெரிதாக்கிக்கொள்ளுங்கள். அதையடுத்து நம் ஹத்தீப் சாஹிபின் ரமலான் சிந்தனைகள் 4 & 5 பதிந்திருக்கிறேன். கண்ணியமாக கருத்து சொல்வீராக!

நன்றி : துக்ளக், பழ. கருப்பையா

***

ரமலான் சிந்தனைகள் – 4 :  ஏ. ஹெச். ஹத்தீப் சாஹிப்

இன்றிரவு ஓர் ஏகத்துவவாதியின் பேருரை இப்படித் துவங்கியது: “பொய் சொல்லலாம்.புறம் பேசலாம் – அவை மார்க்கத்துக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் பட்சத்தில்.” இடைச்செருகலாக நபிகள் நாயகமே அப்படித்தான் உபதேசித்திருக்கிறார்களாம். நல்லக் கருத்து. புதுமையான, நவீனமான சிந்தனை. திருவள்ளுவர்கூட, “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாது சொலல்”என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே எடுத்துரைத்திருக்கிறார். “WISE MEN THINK ALIKE” என்பது உலகப் பிரசித்தியடைந்த ஒரு முதுமொழி. மேலோர் எல்லோருமே ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள் என்பது மகத்தான உண்மை.

ஆனால் பாமர மக்களுக்கு நாம் என்ன சொல்ல விரும்புகிறோம்? ஒழுக்கத்தின் உன்னதத்தையா? வாய்மையின் வலிமையையா? புறம் பேசுவதற்கு மார்க்கம் தந்துள்ள அனுமதிபற்றியா? நிறைய ஒழுக்கத்தைப்பற்றிப் பேசியாகிவிட்டது; அளவுக்கு அதிகமாகவே சத்தியத்தைப்பற்றிப் புகழ்ந்துரைத்தாயிற்று. மக்களுக்கு போரடித்துவிட்டது. இனிமேல் அவற்றைப்பற்றிப் பேசினால் எழுந்து ஓடிவிடுவார்கள். எனவே டாப்பிக்கை மாற்றியாக வேண்டும். இனிமேல் சற்றுப் புதுமையான விஷயங்களை எடுத்துரைக்கலாமே என்ற தணியாத ஆதங்கம் அவரது பேச்சில் இழையோடிக் கிடந்ததைக் கவனிக்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த மார்க்க அறிஞர், தமது பிரச்சாரத்தில் அழகிய சம்பவங்களையும் அதிஅற்புதமான கருத்துக்களையும் அதிகம் சொல்வதற்குப் பதிலாக ‘புதுமை’என்ற அடிப்படையில் எதிர்மறைக் கருத்துக்களையே ஓயாமல் முன்வைப்பவர். அதிலொன்றும் தவறில்லை எனினும், அவரைப்போன்ற சொல்லாற்றல் மிக்கவர்கள் ‘பாஸிடிவா’ன சமாச்சாரங்களை மக்கள்முன் வைப்பதே மார்க்கத்துக்கு நலன். தன்னையும் தனது அபார அறிவாற்றலையும் முன்னிறுத்திக்கொள்ளாமல், மார்க்கத்துக்குச் சிறந்த சேவையாற்ற விரும்பும் எவரும் அப்படித்தான் செய்வார்கள். ‘நான் கூறுவதுதான் இஸ்லாம்’என்கிற பாணியில், ‘இது எனது மார்க்கம். நான் எது சொல்கிறேனோ அதுதான் என் மக்களுக்குத் தேவை’என்று முடிவெடுத்துவிட்டால், ‘லகும் தீனுகும் வலியதீன்’தான்.

ஆனால் பொதுமேடைகளிலோ அல்லது மக்கள் கூடும் மகாசபைகளிலோ தொலைக்காட்சியிலோ பேசும்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அத்தியாவசியம். மிக நவீனமான கருத்துக்களை எடுத்துரைப்பதாக நினைத்துக்கொண்டு பெரும்பாலான சமயத்தில் எதிர்மறை விஷயங்களை மக்கள்முன் வைக்கிறோம்.

உதாரணத்திற்கு:

1) பன்றிக்கறியைத்தான் சாப்பிடக்கூடாது. அவற்றின் எலும்புகளையும் வால்களையும் ‘சூப்’ வைத்து உட்கொள்ளலாம். உண்மையிலேயே மிகப்புதுமையான கருத்து. ஆனால், “பன்றிக்கறி சாப்பிடாதீர்கள்”என்பதல்ல நபிக்கருத்து. காலின் குளம்பு வெடித்த மிருகங்களை உண்ணாதீர்கள் என்பதே சட்டம். இந்தச் சட்ட வரம்புக்குள் பன்றியும் அடக்கம். இங்கே எலும்பு என்ன, கறி என்ன? யாருக்குப் பன்றியின் எலும்பைச் சாப்பிட வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே? ஏன் இஸ்லாத்தின் சட்டத்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்?

2) “ஜட்டி அணிந்துகொண்டு தொழுவதில் தவறில்லை.” உண்மையில் ஜட்டியணிந்துகொண்டு    தொழுபவர்களைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமும் கைவசமில்லை. “உங்களது மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ளுங்கள்”என்று மட்டுமே சட்டம் பிரகடனப்படுத்துகிறது. ஜட்டிகூட இல்லாதவனுக்குத் தொழுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை. ஒருவன் உரிய வயதடைந்தவனாக, சீரான மூளை இயக்கம் கொண்டவனாக இருப்பின், எந்த மறைவிடத்திலேனும் ஒளிந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றியே தீரவேண்டும். ஆனால் நல்ல ஆடைகள் வைத்திருப்பவன், தொழுகையின்போது மட்டும் ஜட்டியை அணிந்துகொண்டு பள்ளிக்கு வருவதைத் ‘தடை’ செய்து ‘ஃபத்வா’ வழங்கிட வேண்டும். இதிலெல்லாம் போய்ப் புதுமையையும் நமது மேதாவிலாசத்தையும் காட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

– இதுபோன்ற இன்னும் எத்தனையோ புதுமையான விஷயங்களில், இப்போது ‘இஸ்லாத்துக்கு நன்மை புரிவதற்காகப் பொய்-புறம் பேசுதலும் இடம் பிடித்திருக்கிறது. நிஜத்தையே பேசி, ஒழுக்கநெறியில் வாழ்ந்து, சத்தியப் பாதையில் பயணித்து இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பிய ஞானிகளையும் சூஃபிகளையும்விட, புறம் பேசுவதாலும் பொய்யுரைப்பதாலும் மார்க்கத்துக்கு என்ன நன்மையைக் குவித்துவிடப் போகிறார்கள்?

*

ரமலான் சிந்தனைகள் – 5  :  ஏ. ஹெச். ஹத்தீப் சாஹிப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர் ஷாஹுல் என்பவரிடத்திலிருந்து, எனது ‘ரமளான் சிந்தனை-3’ கட்டுரைக்கு எதிருரைக் கிடைக்கப் பெற்றேன். எந்த விஷயத்தையும் மறுப்பதற்கோ திருத்துவதற்கோ முன்பு தன்னைக் கோபத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் சமநிலை படுத்திக்கொள்வது நலம்; நாகரீகமும்கூட. எடுத்த எடுப்பிலேயே ஜியாரத் செய்பவர்களைக் ‘கப்ரு வணங்கிகள்’ என்று வசைப் பாடுவதைத் தவிர்த்தல் நன்று. ஏன் இப்படியொரு ஆவேஷம் என்பதை என்னால் ஊகிக்கவே முடியவில்லை. ஒருவேளை மார்க்கத்தை வியாபாரத்துக்குப் பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை நான் ஓரிரு இடத்தில் வெளிப்படுத்தியதே காரணமாக இருக்கலாம். எது எப்படியோ; சுவைமிக்க சொற்கள் இருக்கையில், கடுமையான வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்ப்பது, பிறச் சமூகத்தினருக்கு நம்மீது மதிப்பைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.

தவிர, ஒரு விஷயத்தை விவாதிக்கும்போது, விவாதம் முற்று பெறாதநிலையில், ஒருவர் தோற்றார் என்பதோ இன்னொருத்தர் வென்றார் என்பதோ அர்த்தமற்ற பிதற்றல்கள் என்பதை அனைவரும் ஏற்றே ஆகவேண்டும். ‘ஜியாரத்’ இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் என்பதே விவாதத்துக்குரிய பொருள். ஒரு சாரார் அதை மறுப்பதும், மறுதரப்பினர் நபிமொழி வழியில் அதை ஏற்றிருப்பதும் இன்றும் தொடர்கிறது.  யார் கூறுவது சரி என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ‘ஜியாரத்’ செய்பவர்களை மிகவும் ஆக்ரோஷத்துடன் ‘கப்ரு வணங்கிகள்’ என்று விளிப்பதைத் தவிர்ப்பதே ஆரோக்கியமானது. முஸ்லிம்களைத் திட்டுகிற ஒரு முஸ்லிமே இணைவைத்தல் குற்றத்துக்கு ஆளாகிறான் என்று சுட்டுவிரல் நீட்டுகிறது புனித புகாரி. எனவே மற்றவர்களைப் பார்த்து ‘காஃபிர்’ என்போரே இங்கே குற்றம் புரிகின்றனர். குற்றவாளிகள், மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது விந்தையிலும் விந்தை.ஆகவே விவாதம் நீடிக்கிறது. அறிவித்தலும் கற்பித்தலும் இறைவனது விருப்பப்படியே ஆகட்டும் என்ற பிரார்த்தனையுடன் துவங்குகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும்: நானொரு முழுநேர இஸ்லாமியப் பிரச்சாரகன் அல்ல; பிரச்சாரத்தை ஒரு தொழிலாகக் கொண்டவனுமல்ல. நான் ஒரு சாதாரணப் பாமர முஸ்லிம். சுமார் 200 கோடி பாமர முஸ்லிம்களின் அடையாளம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். எனினும் நேர்மையாக, வணிகக்கலப்பின்றி இஸ்லாத்தைப் பேசக்கூடிய அருகதை எனக்குண்டு. மத்ரஸாவுக்குச் சென்று, ‘சனத்’ பெற்றவர்கள்தான் இஸ்லாம் பேச வேண்டுமென்ற பத்தாம் பசலித் தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட யுகம் இது.

விஷயத்துக்கு வருவோம்: “இறைவா, இங்கே அடக்கமாகியிருக்கும் இறைநேசரின் பொருட்டால் எனக்கு அருள் புரிவாயாக!”என்ற வாக்கியம்தான் சகோதரர் சாஹுலை மிகுந்த கலவரத்துக்கு ஆளாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். ஜியாரத்துக்குச் செல்பவர்கள் இறைவனை நோக்கி வைக்கிற ஒரு பிரார்த்தனை அது. அதை ஒரு முஸ்லிம் இறைவன்மீது திணிக்கிற ஒரு நிர்ப்பந்தம் என்றோ கட்டாயம் என்றோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.  எடுத்த எடுப்பிலேயே அவர்கள் ஏன் குதர்க்கமாக அர்த்தம் கற்பித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏக இறைவன் முதுகுமீது எந்தச் சுமையையும் வலுக்கட்டாயமாக ஏற்றி வைப்பதற்கு நானொன்றும் மார்க்கம் கற்ற மாமேதையல்ல. ஒருவனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் இறைவனது ஏகாதிபத்திய உரிமை. அதில் தலையிடவோ, இப்படிக் கேட்டால் நடந்திருக்கும் என்று ஆரூடம் கூறவோ எவருக்கும் ஞானமில்லை. அத்தகைய பாவத்திலிருந்து இறைவன் என்னைப் பாதுகாப்பானாக! ஏனெனில் நானொரு பாமர முஸ்லிம்!

‘ஏகத்துவவாதி’ என்று பெயர் சூட்டிக்கொண்டவுடனேயே ‘சொர்க்கத்தி’ல் மாளிகை நிச்சயம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு, தொழுகை,நோன்பு, ஸக்காத் போன்ற முக்கியக்கடமைகளில் அலட்சியம் காட்டுகிற மேதாவிலாசக் குழுக்களைச் சேர்ந்தவனல்ல நான். நான் என்ன நற்காரியம் செய்தாலும், இறைவன் உறுதி அளித்திருந்தாலன்றி, சொர்க்கம் நிச்சயமில்லை என்று நம்புகிற சாதாரணப் பாமரன். ‘அவனே சரணம்; அவனே கதி’ என்று நம்பும் ஒரு நாதியற்ற யாசகன். மறுமையிலே வெற்றி பெறுவதற்கு இந்தச் சிந்தனை போதுமென்று உறுதியாக நம்புபவன்.
தவிர, ஜியாரத்துக்குச் செல்பவர்கள், நீங்கள் சொல்வது போன்று கப்ருகளை வணங்குவதில்லை. இஸ்லாம் அனுமதித்த வரம்புக்குள் நின்றே ஜியாரத் செய்கின்றனர். அதாவது அவர்கள் தக்பீர் கட்டுவதில்லை. உறுப்புக்களைச் சுத்தம் செய்து கொள்வதில்லை. கிப்லாவை முன்னோக்குவதில்லை. திருமறை வசனங்கள் சிலவற்றை ஓதுகிறார்கள். அவ்வளவுதான். இதற்குப் போயா அவர்களுக்கு ‘காபிர்’ பட்டம்?

நஊதுபில்லாஹி மின்ஹா! 

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

« Older entries