சங்கமித்திரை

தமிழ்பேப்பரில் பத்மா எழுதும் ‘ஜென்வழி’ கதைகளைப் படிக்கிறேன் – என் வழி ஜின்வழியாக இருந்தாலும்! ‘துறவியின் மனைவியும் துளி தங்கமும்‘ என்று ஒரு கதை. ஆசிபெறுவதற்காக துறவியிடம் ஏராளமான தங்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறான் ராஜா. ‘உடனே எடுத்துச் சென்றுவிடு’ என்று மறுக்கும் துறவி, ’மகனே, நான் ஆசைகளைக் கடந்துவிட்டேன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. இத்தனை தங்கத்தைப் பார்த்ததும் அவள் சபலப்பட்டுவிடுவாளோ என்றுதான் எனக்குக் கவலை.’ என்கிறார்.  அடுத்த நிமிடம் உள்ளே இருந்து அவருடைய மனைவியின் குரல் கேட்கிறது, ’நீங்க பெரிய துறவிதான். தங்கத்துமேல உள்ள ஆசையைத் துறந்துட்டீங்க. ஆனா அடுத்தவங்களுக்கு அந்த ஆசை இருக்குமோங்கற கவலையை உங்களால விடமுடியலையே! அப்படீன்னா நீங்க இன்னும் தங்கத்தை ஒரு பெரிய விஷயமா நினைக்கறீங்கன்னுதானே அர்த்தம்?’ என்று. ஆஹா!

‘காந்தி மஹான் சிரிக்கிறார்’ என்று ஜபருல்லாநானா அனுப்பிய எஸ்.எம்.எஸ்தான் ஞாபகம் வந்தது. ‘பேப்பரை கொடுத்துட்டு மண்ணை வாங்குறான், மண்ணுக்கு கீழே உள்ளதயும் வாங்குறான். பிறகு அதையும் கொடுத்துட்டு மறுபடி பேப்பரை வாங்குறான். அதான் நோட்டுலெ காந்தி சிரிக்கிறாரு’ என்று சொல்லிவிட்டு அதை அனுப்பிவைத்தார். பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மனதை இழந்துவிட்ட பணக்காரர்களைப் பார்த்து காந்தி சிரிப்பதாக அந்தக் ‘கவிதை’ வரும். சிரிக்கட்டும் சிரிக்கட்டும், அவருக்கென்ன?  இந்த ஜபருல்லா நானாவுக்கு 1500 ரூபாய் நேற்று கிடைத்திருக்கிறது. தன் உம்மாவிடம் 500 கொடுத்துவிட்டு மீதி 1000த்தில் இவர் 250 எடுத்துக்கொண்டு (இடிந்த வீட்டுக்கான செலவாம்!) மீதியை தர்ஹாவில் மழையால் வாடிக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை?’ என்று ஒரு பெண் சொல்லும் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. அவள் சங்கமித்திரை. புலவர் ஆபிதீனின் ‘சங்கமித்திரை’. ‘அழகின் முன் அறிவு’ நூலில் அந்த அழகான பாடல் வருகிறது. ஊரிலிருந்தபோது , ஏதோ ஒரு உற்சாகத்தில் , அந்தப் பாடலை (‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை? மட்டும் இருமுறை) இந்த புண்ணாக்கு ஆபிதீன் உற்சாகமாக உரக்கப் பாடி முடித்த அன்று ‘அது’ கிட்டவில்லை. சாப்பாட்டைச் சொல்கிறேன்! ‘ஹூம்.., நீங்களும் ஒங்க சபரும்..’ என்று ஒரே சத்தம்!

அஸ்மாக்கள் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்!

ஆபிதீன்

***

சங்கமித்திரை

புலவர் ஆபிதீன்

கீ.மூ இருநூ றாண்டுகள் முன்னர்
கோமா னசோகச் சக்கர வர்த்தி
ஒரிஸா என்னுங் கலிங்க நாட்டை
முறியடித் திடவே கருதிய போது
படைகள் புறப்படப் பணித்தார் ராணுவம்
நடைகள் போட்டுக் கெடுபிடி செய்ய
வானும் தெரியா வண்ணந் தூசுகள்
காணும் பரிதிக் கதிரை மூடின
திடுதிடு வெனவே முரசு முழங்கின
தடபுடல் செய்தார் இருதரப் பாரும்
வில்லும் வாளும்  வேலும் தத்தம்
கொல்லுந் தொழிலைச் செய்தன மின்னி
தார்க்குலை போலும் குடல்கள் சிதையப்
போர்க்கள முடிவு பிணக்கா டாயது!
முக்கல் முனகல் மெல்லொலி யார்ப்ப
மக்கள் புழுவாய் மடிந்து போயினர்
தாவின பரிசுகள் கரிகள் நகருள்
ஆவிகள் அமரர் உலகிற் கேகின!
நாற்றம் நுகர்ந்த கழுகுக் கூட்டம்
காற்றாய் மேலே வட்டம் இட்டது
கணவன் பிரிவால் கண்ணீர் சிந்திப்
பிணத்தைப் புரட்டினர் பெண்டி ரனேகர்
லக்ஷக் கணக்கில் சேதம் செய்த
தக்ஷத் தவரால் தோற்றது கலிங்கம்
பொன்னும் பொருளும் சூறை யாடி
இன்னம் பலரைச் சிறையாய்க் கொண்டு
சென்றனர் வெற்றி முரசுகள் கொட்டி
நன்றெனத் தக்ஷ சீலம் நோக்கி
பின்னர் ஒருநாள் சங்க மித்திரை
என்னும் மகளை அருகில் அழைத்து
‘வலிமை செறுக்கில் வீழ்ந்து சிதைந்த
கலிங்க மளித்த காணிக் கையிவை
ஈண்டுள தங்கக் குவியலில் நீயும்
வேண்டிய மட்டும் வாரிக் கொள்க’
என்றார் அசோகர் அம்மொழி கேட்டு
நின்றாள் மலைத்துப் பிறகு சொன்னாள்:
‘கூரிய மதிசேர் குரிசிற் பெரும்!
மௌரிய மரபின் மன்னர் மன்ன!
மன்னித் தருள்க மாற்றம் உண்டேல்
பொன்னோ நமது பிறவியின் நோக்கம்?
ஏனோ இந்த எளியோர் ஊனம்?
நானோ சுமக்க நாற்றப் பொன்னை?
எத்தனை மக்கள் உயிரை மாய்த்து
இத்தனை செல்வம் சேர்த்தீ ரிங்கு?
உதிரம் என்னும் ஆற்றில் தோய்ந்த
உதவா நகைக ளெனக்கு எதற்கு?
மாண்டா ருயிரில் ஒன்றை யேனும்
மீண்டும் அளிக்க முடியுமோ நம்மால்?
குருதியின் வாடை வீசுது அம்ம!
அறிவில் திரையும் விழுந்த தெங்ஙன்?
உலகைக் கட்டி ஆண்டும் ஆசை
விலகிப் போக வில்லை கொடுமை
பொன்னை உணவுப் பொருளாய் வைத்து
உண்ணச் சிறிதும் உதவுமோ என்ன?
முள்ளைப் பறித்து முடியில் சூடிக்
கொள்வது சற்றும் நல்லது அன்று.
ஆயிரம் ஆண்டும் வாழ்பவ ரென்று
பாயிரம் பெற்றுப் பிறந்தோ மல்லோம்
இன்றோ அல்லது என்றோ ஒருநாள்
சென்று நெருப்பில் சாய்வது உறுதி
அன்பின் வடிவம் புத்தர் பெருமான்
இன்பம் விழைவார்க் கிதுவா நீதி?
தருமம் செய்க தடைகூ றாமல்
கருமப் பொருளே கொஞ்சமும் வேண்டா’
இப்படிப் பெரிதும் இதமாய்ப் போதம்
செப்பிய மகவின் செஞ்சொற் கேட்டு
‘உண்மை கூறினை உத்தம மகளே!
நன்மை உரைத்தாய் நன்றி உனக்கு;
பாரில் வறுமைப் பட்டார்க் கெல்லாம்
வாரி இறைத்து விடுவாய் இவற்றை
எதுவோ அரசியல் ஏய்த்தது என்னை
இதுவே போரில் இறுதி’
என்று அசோகர் எழுந்தா ரன்றே.

***

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், இஜட். ஜபருல்லா  ,  பத்மா / தமிழ்பேப்பர்

தாய்க்குலம் வாழ்க!

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ ஆபிதீனைத் தாங்கும் ,சாதாரண அர்த்தம்தான், ‘அஸ்மா’வுக்கு இன்று பிறந்த நாள். ஆதலால் ஒரு ஆபிதீன்காக்கா பாட்டு – 1960இல் வெளியான ‘அழகின் முன் அறிவு’ நூலிலிருந்து. எப்படியெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது! என்ன, வயசா? அதெல்லாம் சொல்ல முடியாது. வாங்கிய அடிகள் போதும்.

***
தாய்க்குலம் வாழ்க!

புலவர் ஆபிதீன்

தாலாட்டும் பெண்கள் தீர்ப்புகள் தந்து
தரணியை யாள்வதும் என்றோ?
பாலூட்டும் தாய்மார் பண்போ டுழைக்கும்
போருக்கு எழுவது என்றோ?

வளையல்கள் சூடும் வனிதையர் கைகள்
வாளேந்தி ஓங்குதல் என்றோ?
தளைபோன்ற காப்பு நகையா மெல்லாம்
தூரவே வீசிடல் என்றோ?

பேனூரும் கைம்பென் கூந்தல் மணக்கப்
பூவைத்து மகிழ்வது என்றோ?
தேனூறப் பாடித் தொட்டிலை யாட்டுந்
தையலர் முன்னேறல் என்றோ?

சேய்களை ஈனும் பொறியாக நம்பும்
சிந்தனை சாவதும் என்றோ?
தாய்க்குலம் வாழச் செங்கோல் சுமந்து
தேசத்தைக் காப்பதும் என்றோ?

பல்கலைக் கழகத் தாசிரி யையாய்ப்
பாவையர் வந்திடல் என்றோ?
அல்லோடு பகலும் அடுப்பூத நாடும்
அறியாமை மாய்வதும் என்றோ?

துடைப்பமே தூக்கும் தங்கையர் இங்கே
துப்பாக்கி தாங்குதல் என்றோ?
கடைப்பொரு ளன்று காதலென் றோதிக்
கற்பிக்கும் காலமும் என்றோ?

***

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

நரகம் நடுங்குகிறது, சுவனம் வரவேற்கிறது!

‘முஸ்லிம்களின் மோசமான எதிரி முஸ்லிம்களே’ எனும் இந்த கட்டுரையை முதலில் படித்துவிட்டு (நன்றி : இஸ்லாம்கல்வி டாட் காம்) பிறகு புலவர் ஆபிதீனின் ‘அழகின் முன் அறிவு’ நூலிலுள்ள இந்த இரண்டு பாடல்களையும் படியுங்கள். ‘இன்பம் என்று ஒன்றும் இல்லை , இல்லை வேறு தனியே இன்பம், துன்பம் என்ற எண்ணம் அல்லால், துயரம் எனஒன் றில்லை கண்டேன்!’ என்பார் புலவர்.

*

நரகம் நடுங்குகிறது! – புலவர் ஆபிதீன்

கண்டபடி வாணாளில் கலிமாவை வாய்விட்டு
விண்டகொடு பாதகனே விளையாட்டா யன்றுலகில்
ஆண்டவனை ஏய்த்துவிட்டு அழுதுவரும் உன்வரவால்
மாண்டிடுவேன் நீமிதித்தால் மாபாவி போய்விடடா!

வீண்பெருமை காட்டுதற்கு விறைப்பாகப் பள்ளியிலே
தூண்எனவே நின்றிருந்தாய் தொழுதாயோ உண்மையுடன்
காண்பவர்கள் மெச்சும்படி காசையள்ளி வீசிவிட்டு
மாண்பினர்செய் தர்மமதை மறைத்தாயே போய்விடடா!

வேதமெனும் குர்ஆனை ஓதவில்லை நீயுணர்ந்து
தூதர்நபி அடிச்சுவட்டைத் தூய்மையுடன் பேணவிலை
ஆதரவாய்ப் பெருநாளை ஆசித்தாய் கொண்டாட
நீதமுற நோன்பங்கே நோற்றாயோ போய்விடடா!

நல்லோரைப் போல்நடித்து நானுமொரு முஸ்லிமெனச்
சொல்லாலும் கூறியபின் செய்தாயே தீங்கனைத்தும்
பொல்லாத செய்கைக்குப் புகலிடமே பூஷணமே
நில்லாதே என்னருகில் நீவிலகிப் போய்விடடா!

உள்ளமதை நோக்குகின்ற உண்மையிறை தண்டனையை
எள்ளளவும் மதியாமல் இணைவைத்து ஈமானில்
கள்ளமனப் பான்மையுடன் கஃபாவை நோக்கிவிடின்
கொள்ளவழி உண்டுமோடா கூடாதே போய்விடடா!

சுவனம் வரவேற்கிறது! – புலவர் ஆபிதீன்

பள்ளிக்குச் சென்றஉங்கள் பாதார விந்தங்களை
அள்ளிய ணைத்துப்பெரு மாவலுடன் முத்தமிடத்
துள்ளித்து டிக்குதுளந் தூய்மைய வாயமுகம்
வெள்ளரிக்க திர்வீசும் வித்தகரே வாரீர், வாரீர்!

நில்லாமல் ஓடுகின்ற நீரருவி தன்னருகில்
எல்லாநன் னயங்களையும் என்றென்றுந் தாங்கிமன
நல்லோரின் கூட்டத்தில் நாடோறும் வாழுதற்கு
அல்லா(ஹ்)வி னாணையிது அன்பர்காள் வாரீர், வாரீர்!

நெஞ்சத்த ழுக்கறுத்து நேயத்தைக் குடியேற்றிக்
கிஞ்சித்தும் மறைநீதி கோணாத உங்களுக்குக்
கஞ்சமலர் கண்ணழகுக் கன்னியரும் வாலிபரும்
விஞ்சையொடு பணிபுரிய வரவேற்பர் வாரீர், வாரீர்!

பற்றுடனே இறையேவல் பழுதின்றிக் காத்துஅறம்
வெற்றியுளப் பேணியுளம் வெம்பினவர்க் கீந்துதவி
சுற்றியுளோர் சுகங்கண்டு சுமுகநபி சொற்பேணி
முற்றிலுமே வழிபட்ட முஸ்லிம்காள் வாரீர், வாரீர்!

*

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

மாதருக்கு மட்டும்…

இந்த கார்ட்டூனையும் வேறொரு குறும்பான ஃபோட்டோவையும் அனுப்பி, கூடவே புர்காவின் சிறப்புகளைச் சொல்லும் ஒரு சுட்டியையும் அனுப்பிய அண்ணன் ஹமீது ஜாஃபருக்கு பொன்.சுதாவின் ‘மறைபொருள்’ குறும்படச் சுட்டியையும் புலவர் ஆபிதீன் காக்காவின் இந்தப் பாடலையும் ( நூல் : ‘தேன்கூடு’) அனுப்பி வைத்தேன். தர்காவை மட்டுமல்ல புர்காவையும் இடிப்பார் ஆபிதீன் காக்கா. சகோதரர்களின் ‘பிர்கா’க்களை எதிர்பார்க்கிறேன். 

இன்று உண்டு எனக்கு தர்ம அடி!

*

மாதருக்கு மட்டும்
புலவர் ஆபிதீன்

கணவன் தலையணைப் போல – வெகு
காலம் கடத்தினீர் அந்தோ!
மணவினைச் செய்வித்த போது – மாய
மயக்கம் மிகுந்ததோ சொல்வீர்!

முக்காடு என்றொரு திரையை – யிட்டு
மூலையில் குந்தினீர் பாபம்!
எக்கேடு கெட்டாலு மென்ன – என்று
எண்ணிய தாணினம் போலும்!

காப்பெனப் பெயரிட்டு ஐயோ! – நும்
காலுக்கு விலங்கிட்டார் – காளை
தோப்புக் கிளிகளே உங்கள் – காதில்
தொளாயிரம் பொத்தல்க ளேனோ?

வளையலுக் கவசியம் ஏதோ? – ஆணின்
வசைமொழி யானது அல்லால்
களையவும் மனமில்லையானால் – என்றும்
கட்டியே அழுகிவீர் பெண்காள்!

பிள்ளைப் பெறும்யந்ர மல்ல – என்று
பிரியமாய் ஆணிடம் சொல்வீர்
கொள்ளைப் போய்விடவில்லை – உரிமை
கொட்டிக் கிடக்குது பாரீர்!

போனது போகட்டும் தோழீ – காலப்
போக்கில் திருந்தியே கல்வித்
தேனது உண்டினி வாழ – பெண்
தெய்வங்கள் முன்னேறி வாரீர்..

**
ஆபிதீன் காக்காவின் தற்சிறப்புப் பாயிரம் (நேரிசை வெண்பா) :

‘அன்பாலே யாவரையும் ஆதரிக்கும் வல்லவனே!
என்பாலே நீயிரங்கி என்னாளும் – பண்பெய்த
வான்கூடு மேகங்கள் வாரிமழைப் பெய்தற்போல்
தேன்கூடு பேரோங்கத் தா.’

« Older entries Newer entries »