நாம் காலமெல்லாம் தோல்வி அடைந்தே பழக்கப்பட்டுப் போனதனால், தோல்விக்கும் நமக்கும் ஒரு அழுத்தமான தொடர்பு, ஒரு நட்பு, ஒரு ’முஹப்பத்’ ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் ஒரு நேரத்தில் இருக்கும் மனநிலை இன்னொரு நேரத்தில் நமக்கு இருப்பதில்லை. ஒரு நேரத்தில் இருக்கும் முகம், இன்னொரு நேரத்தில் ‘மொஹரக் கட்டை’யாக மாறிவிடுகிறது! இப்படிக் கசங்கிப் போன மனதை வைத்துதானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?
ஆனால் மனதில் அழுத்தமான, ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தால் வெற்றியும் சந்தோஷமும் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ’காற்றடித்தால் மலை ஆடுமா’ என்று மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அழகாகக் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட மலையைப் போன்ற மனநிலையை ’இப்ராஹீம் மனநிலை’ என்று நான் பெயரிட விரும்புகிறேன்.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக்குண்டத்தில் எறியப்பட்டபோது தர்க்க ரீதியாக, அறிவுப்பூர்வமாக யோசித்தால் ஒரு மனிதர், ஆமாம் ஒரேயொரு மனிதர், உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த நெருப்புக் குண்டத்தின் அருகில்கூட யாரும் போக முடியவில்லை. வெகு தூரத்தில் இருந்து சர்க்கஸில் பீரங்கிகளுக்குள்ளிருந்து ’க்ளௌவுன்’கள் வெளித்தள்ளப்படுவதுபோல, தூரத்திலிருந்தே இப்ராஹீம் நபியவர்கள் அதற்குள்ளிருந்து நெருப்புக் குண்டத்தினுள் எறிந்து தள்ளப்பட்டார்களாம்.
அப்போது நடந்ததாக ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. அப்போது வானவர் ஜிப்ரயீல் (அலை) தோன்றி ’உங்களை நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டி இறைவனிடம் முறையிடுங்கள்’ என்று சொன்னார்களாம். அதற்கு இப்ராஹீம் நபி கொடுத்த பதில்தான் இங்கே மிக முக்கியமானது.
’இறைவனுக்காகத்தான் நான் இதில் விழுந்துகொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? எனக்கு அவன் போதுமானவன் (ஹஸ்புனல்லாஹு வ நி’மல் வகீல்). நான் தனியாக எதுவும் அவனிடம் கேட்கத் தேவையில்லை’ என்று சொன்னார்களாம்! அந்த உறுதியான, மலைபோன்ற, அசைக்க முடியாத, பரிபூரண நம்பிக்கைதான் இப்ராஹீம் மனநிலையின் குறியீடு.
அந்த இப்ராஹீம் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்குமானால், இன்ஷா அல்லாஹ் இப்போது பற்றி எரியத் தொடங்கி இருக்கும் தீயையும் இறைவன் நிச்சயம் குளிர்விப்பான். ”யா நாரு, கூனி பர்தன்” (நெருப்பே, குளிர்ந்து விடுவாயாக’) என்று நிச்சயம் உத்தரவிடுவான். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்
நாகூர் ரூமி