மறக்கவொண்ணா மாமேதை

ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் மறைவின்போது ‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை இது (முஸ்லிம் முரசு – நவம்பர் 2002).

ஹஜ்ரத்சிலர் பிறந்த ஊரினால் சிறப்படைவார்கள். வேறு சிலர் பிறந்த ஊருக்குச் சிறப்பு சேர்ப்பார்கள். வெகுச்சிலர் சீரிய சிந்தனையாலும் செம்மையான செயல்பாட்டினாலும் தானும் புகழ்பெற்று, பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இத்தகு மேன்மக்களில் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கடந்த 9.9.2002 அன்று இறைவனின் நாட்டப்படி மறுமைப் பேறு அடைந்த மார்க்க அறிஞர் , பன்னூலாசிரியர், மௌலானா மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு காதிரி ஆவார். கூடுதல் சிறப்பு நாகூரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வர், கருணைக் கடல் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் அவர்.

1933ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் கே.எஸ். முஹம்மது கௌஸ் சாஹிபு. தாயார் பெயர் செல்ல நாச்சியார்.

வேலூர் பாக்கியத்துல் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் மாணவராக ஞானம் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறை அவரைக் கவர்ந்து ஈர்த்தது. அப்போதே எழுத்துலகப் பிரவேசம். ஆரம்ப காலத்தில் விந்தியன், எஸ்யே.பி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதினார். தமிழகத்தின் வார, மாத இதழ்களில் அவை இடம் பெற்றன. பின்னர் மணிவிளக்கு இதழில் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன. அவருக்கு சமுதாயத்தில் தனி மதிப்பையும் மேன்மை சிறப்பையும் பெற்றுத் தந்த எழுத்தாற்றல், மொழித் திறன், சிந்தனைச் செறிவு வெளிப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கீகாரம் அவருக்கு உரித்தானது!

அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யாவு உலுமித்தீன்’ பேரறிவுப் பெட்டகமான பெருநூலினை இனிய-எளிய- எல்லோருக்கும் படிக்கக் கூடிய, மொழி நடையில் தமிழுருவாகக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தனித்துவம் அதில் ஒளிர்ந்தபோது முத்திரை பதித்து முழுவெற்றியையும் ஈட்டினார். எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெருகினர். வாசகர் வட்டம் உருவானது. அது காலப்போக்கில் விரிந்து பரந்து தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் அவரது பெயர் ஒலிக்க வழி கோலியது.

மார்க்க அறிஞர் என்ற மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான அவர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், வரலாற்று விற்பன்னர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்க பெற்றமைக்குரிய தெளிவான சரியான காரணம் அவர் பெற்றிருந்த பன்முகத் திறனே ஆகும்.

இஹ்யா நூல் வரிசையில் முதல் நூலாக 1957ஆம் ஆண்டு ‘பாவமன்னிப்பு’ அச்சில் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பிலான நூல்வரை அத்தனையும் பொற் குவியல்கள். போற்றுதற்கும் புகழுதற்கும் உரிய அவர் நம் காலத்தில் வாழ்ந்தது நாம் பெற்ற பேறு எனில் அது பொய் அல்ல.

அறிவுக்கோட்டையின் தலைவாயில் ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்களையும், கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய நூலின் தலைப்பு ‘மகனுக்கு’ என்பதாகும்.

பாரசீகம் தந்த ஞான வள்ளல் மௌலானா ரூமி அவர்களில் அறிவுக் கருவூலங்களையும் தமிழுரு கொடுத்துள்ளார். அவை முறையே ‘மௌலானா ரூமியில் தத்துவங்கள்’ மற்றும் ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்’ ஆகும்.

ஆத்மீகத் தந்தை ஹலரத் இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக – தெளிவாக தமிழில் தந்த தனிச்சிறப்பு இவருக்கு உரியது.

மணிவிளக்கு இதழில் தொடர்ந்து கட்டுரையாக வந்த ‘மக்கா யாத்திரை’ பின்னர் அத்தொகுப்பு ‘அரேபியாவில் சில நாள்’ என்னும் நூலாக வெளிவந்தது. மணிவிளக்கில் கட்டுரைத் தொடராக வந்தபோதும், தனி நூலாக வந்தபோதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இஹ்யாவு உலுமித்தின் பெருநூலின் மொழிபெயர்ப்பாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு அல்லது அந்த அளவுக்கோட்டைக் கடந்து இஹ்யாவின் விரிவுரையாளர் என்ற அளவில் உயர்ந்தார். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் கருத்துரைத்து அடையாளம் காட்டினார்கள்.

அவருடைய எழுத்துக்களால் உருப்பெற்ற நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியிடவும் பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் போட்டிபோட்டுக்கொண்டு முன் வந்தன. அப்படி ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் யாரும் இழப்பிற்குள்ளாகவில்லை. ஏமாற்றம் அடையவும் இல்லை. அத்தனை நூல்களும் பல பதிப்புகளைக் கண்டது.

அவருடைய நூல்களுக்குரிய வாசகர் வட்டம் உலகளாவியது என்று சொன்னால் கூட அது தவறு அல்ல. தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவருடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டாக அப்படியொரு நிலை நீடிக்கிறது. நிலைத்த பயன் தருகிறது.

இஹ்யா வரிசையிலான நூல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவற்றுள் ‘இறைவணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’ , ‘தர்க்கத்துக்கு அப்பால்’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் முஸ்லிம் வாச்கர்களையும் கடந்து முஸ்லிம் அல்லாத தமிழர்களும் வாங்கி விரும்பி படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். நாம் பெருமையும், பெருமிதமும் கொள்ள வழி அமைத்துள்ளது.

மாண்பமை ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய ஜாபர் சாதிக் (ரலி) வரலாற்று நூலின் முதற்பதிப்பு (1965) 209ஆம் பக்கத்தில் இமாம் அவர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பை விவரித்த நூலாசிரியர், “…ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்றி வைத்தார்கள், உறவினர்கள். அணைந்த விளக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய விளக்கினால் நிரப்ப முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.

அது இவருக்கும் – எங்கள் ஹஜ்ரத் அவர்களுக்கும் – பொருந்தும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

*

Jafer Mohiyudeen1

‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன்
*

நன்றி : முஸ்லிம் முரசு

வலை (2000 ) – முன் குறிப்புகள் : ஆபிதீன்

’பாலம் இடிஞ்சப்ப ’பாலம்’ண்டு ஒரு கதை எழுதுனீங்க. இப்ப பாலம் கட்டியாச்சே.. இதுக்கும் ஒரு கதை எழுதுவீங்களா?!’ என்று கிண்டல் செய்த ’சொல்லரசு’ ஜாபர் முஹ்யித்தீன் மாமாவின் கடிதமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் எழுதிய கடிதம். மாமா இப்போது இல்லை; மவுத்தாகிவிட்டார்கள். இருதய ஆபரேஷனுக்காக அவர்கள் சென்னை சென்றபோது நான்தான் வழியனுப்பினேன். இதை நண்பன் பாஸ்கரனிடம் சொல்லி கண்ணீர் விட்டபோது டேபிளை ஓங்கி அடித்துச் சிரித்தான். ’வழியனுப்ப நீ போனீலே? எப்படி திரும்புவாங்க உசுரோட!’ என்றான். ’மவுத்’துக்கும் வாய்திறந்து சிரிக்கும் ஊர். நானும் நண்பர் நாகூர் ரூமியும் சேர்ந்து இந்த ஊர் எழுத்தாளர்களுக்காக ஒரு இணையதளம் – இலவசமாக கிடைக்கும் இடத்தில் – நடத்தத் தீர்மானித்தபோது , விபரங்கள் கேட்க ’சொல்லரசு’ மாமாவையும் மற்ற படைப்பாளிகளையும் சந்தித்தது , இதைவைத்து ’வலை’ என்ற கதையை நான் எழுதி அதையும் அந்த தளத்திலேயே வெளியிட்டது ஆகியவற்றை இப்போது சொல்லத் தோன்றுகிறது. இந்த ’வலை’ எனது முதல் சிறுகதைத் தொகுதியில் இடம்பெறவில்லை. காரணம் நாகூர் ரூமிதான். ‘இது வாணாம்.. டாகுமெண்ட்ரி மாதிரி இக்கிது’ என்றார். ‘நான் எழுதுறது எல்லாமே அப்படித்தானே இக்கிம்ங்கனி’ ‘இல்லே.. இது ரொம்ப மோசமா இக்கிது’.

இந்த ’டாகுமெண்ட்ரி’யில் ஒரு பிரபலமான எழுத்தாளரை மட்டும் நீக்கிவிட்டேன் – பிரச்சினையைத் தொடர விருப்பமில்லாததால். மற்றபடி என் எல்லா கதைகளையும் போல இதுவும் மோசமாகவே இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். என்னை நம்பலாம்.

முதலில் ’சொல்லரசு’ மாமாவின் கடிதத்தைப் படியுங்கள்.

***

23.5.2000

கண்ணியத்திற்குரிய இளவல்களான பேராசிரியர், முனைவர், முஹம்மது ரஃபி, நாவலாசிரியர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சென்னைக்குச் செல்லும்போது மறவாமல் முயற்சித்து நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதியரசர் M.M.I அவர்களை சந்திக்க வேண்டும். அதை அடுத்து, நாகை தந்த நல்லறிஞர், மதிப்பிற்குரிய ஸையிதுனா, M. செய்யது முஹம்மது ஹஸன் சாஹிபு அவர்களை சந்தித்து பேசிட மறவாதீர்கள். வாழும் காலெமெல்லாம் உறவாடி – உரையாடி பயன் பெறுங்கள்.

நமதூரில் வித்துவான் ஜனாப் S.M.A. காதிர் , கவிஞர் ஜனாப் EM. அலி மரைக்காயர், சகோதரர் கவிமணி M.S. தாலிப் சலீம் செய்க், இளவல் கவிமுகில் இஜட். ஜபருல்லாஹ் ஆகியோரை அணுகி, இலக்கிய வட்டத்தை விரிவுபடுத்துங்கள். விளைச்சல் நிறைந்த பயன் தரும்; நம்புங்கள்.

நம் பணி சிறக்க நல்லருள் துணை நிற்க, நாம் துஆ இறைஞ்சுவோம். பிற பின்னர், நேரில் –

நிறைந்த அன்புடன்

மு. ஜாபர் முஹ்யித்தீன்

*

கவனிக்கவும்!

முன்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மக்களில் ஒருவர் விடப்பட்டுள்ளார். தவறாக நேரிட்டது அது. இப்போது நம்மிடையே வாழுவும் முதிர்ந்த வயதினரான – நமதூர் நூல்கடைத் தெருவில் வாழும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜனாப் (லாயர்) முஹம்மது காஸிம் ஆன்மீகத்துறையில் ஈடுபாடு கொண்டவர். மௌளானா ரூமி அவர்களின் மஸ்னவியை மூல மொழியில் பாடக்கூடியவர். நாகை அந்தாதியை நீண்ட காலத்திற்கு முன்பு சிறிய அளவில் பதிப்பித்து தந்தவர் ஆவார். நேரத்தை ஒதுக்கி அந்த பெரியவரையும் கண்டு வந்தால் நிரம்ப செய்தி தெரியவரும்.

முயற்சி முழுமை பெற்று, வெற்றியாளர்களாக நீங்கள் இருவரும் வலம்வர, வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.

நமக்கு – எளியவன் என்னையும் உள்ளடக்கிய – நமக்கு நல்லருள் பொழியுமாறு நாயனிடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் அருள்வானாக!

அன்புடன், துஆவுடன்,

மு. ஜாபர் முஹ்யித்தீன்
அருளகம் , 13 , மிய்யாத்தெரு
நாகூர் – 611002 , நாகப்பட்டினம் மாவட்டம்

***

’வலை’ நாளை ‘திண்ணை‘யில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ். நாளைக்கு என் பிறந்தநாள் + கல்யாண நாள். அதனால் இந்தப் பரிசு. பல சமயங்களில் பரிசே தண்டனையாகப் போவதுமுண்டு! 

நன்றி.

ஆபிதீன்

நாகூரார் சதகம் நான்கு – ‘சொல்லரசு’

மத ஒற்றுமைக்கு மகத்தான எடுத்துக்காட்டு நாகூர்தான்.  சலீம் மாமா, இஜட். ஜபருல்லா, முஹம்மது ரஃபி  , ஹத்தீப் சாஹிப், ஆபிதீன், அப்துல் கய்யூம்,  இஸ்மாயில் போன்றவர்கள் ஒற்றுமையாக இருப்பதே சான்று 😉 .  கிண்டல் இருக்கட்டும், ஆபிதீன் பக்கங்களின் தரம் தாழ்ந்து விட்டதாக ‘நாகூர்மாமி’ சொன்னதைக் கேட்டு மனம் தாளவில்லை. அதனால் இந்தப் பதிவு.  ‘நாகூர் – ஒரு வரலாற்றுப் பார்வை‘யைத்தான் (முனைவர் ஜெ.ராஜா முகமது எழுதிய கட்டுரை) பதியலாம் மீண்டும் என்று எண்ணினேன். அது பல தளங்களிலும் காப்பி செய்யப்பட்டு விட்டது. எனவே புதிதாக , இந்த ‘நாகூரார் சதகம் நான்கு’ . காலஞ்சென்ற, என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய , சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன் எழுதியது.

கீழ்க்கண்ட கட்டுரையில் இடம்பெறாத சில வரிகள் – ‘சொல்லரசு’ மாமாவின் கையெழுத்தில் – எனக்கு அவர்கள் கொடுத்த மலரில் – இருக்கிறது. அவை :’ 1. நாகூர் நாயகம் அவர்கள் பற்றிய சதகங்களில் காலத்தால் முந்தியது – 1923 – மீரான் சாஹிபு புலவர் பாடிய தரிசன மாலை சதகம் ஆகும். இக்கட்டுரை எழுதிய பின்னர்தான் அந்நூல் கிடைத்தது. 2. இலங்கை தமிழ் முஸ்லிம் புலவரான அப்துல் காதர் லெப்பை அவர்கள் இரண்டு சதகங்கள் பாடியுள்ளார். ஒன்று இரசூல் சதகம், மற்றொன்று தஸ்தகீர் சதகம். அவர் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.’

ஆக, நாகூரார் சதகம் நான்கு அல்ல, ஐந்து!

இஸ்லாமிய இலக்கியக் கழகம்.’ மறுமுறை இந்தக் கட்டுரையை பதிப்பித்தால் தலைப்பை திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படியே, மாநாட்டு மலர்களில் இடம்பெறும் படைப்புகளை ஒரு CD/DVDயில் – யூனிகோடில் – பதிவுசெய்து இலவசமாக விநியோகிக்குமாறும்.

மலரைத் தூக்குவதற்குள் மார்வலி வந்துவிடுகிறது!

கட்டுரை ‘போர்’ என்று நினைப்பவர்கள் கமால்கான் பாடுவதைக் கேட்கலாம். Kamal Khan sings Naina Thag Lein Ge on 22nd October episode of ‘saregamapa’. A song by Rahat Fateh Ali Khan from the movie Omkara, Music by Vishal Bhardwaj.

நன்றி!

ஆபிதீன்

***

நாகூரார் சதகம் நான்கு – சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன்

அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பு மலரிலிருந்து.. (1999)

*

பத்துப் பத்தாக நூறு பாடல்கள் அல்லது தனி நூறு பாடல்கள் கொண்டு பாடப்படுபவை பதிற்றுப்பத்து, பிள்ளைத்தமிழ் ஆகியவனவாகும். சதகம் என்ற சொல் நூறு என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும்.

‘விழையும் ஒருபொருள் மேலோடு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப’ – (இலக். பாட். 87)

வடமொழியில் தத்துவம் உணர்த்தும் நீதிபோதனைகளைக் கொண்டு நூல்களாக அமைந்தவை சதக நூல்களாக விளங்கின.

அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள்
ஒன்றன் மேலாதல் கற்பித்ததொரு
நூறு செய்யுள் உரைப்பது சதாகமாமென்ப (முத்துவீரி. 1117)

அகப்பொருள் பற்றி அல்லது புறப்பொருள் பற்றி பாடப்பட்டவையாக அமைந்து, வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி, வட்டாரப் பழமொழிகளை வெளிப்படுத்துவனவாக அவை மிளிர்ந்தன; ஒளிர்ந்தன. தமிழில் மாணிக்க வாசகர் பாடிய திருச்சதகம் முதற் சதகமாகும் என்பர். அவிநாசி ஆறைக்கிழாரின் கார்மண்டலச் சதகம் முதற் சதகம் என்பாரும் உண்டு. அதனைத் தொடர்ந்து பாடப்பட்ட சதகங்கள் நீதி நூல்களாக சிறப்பினைப் பெற்றுள்ளன.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து அதன் இன்பத்தில் தோய்ந்த அறிஞர் பெருமக்களின் உண்மையை அடிப்படையாகக் கொண்ட முடிவின்படி இரண்டாயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளைப் பெற்றுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில், சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும். அவற்றில் சதகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இஸ்லாமியச் சதக இலக்கியங்களுள் மேலப்பாளையம் தக்கடி ஷெய்கு பஷீர் லெப்பை கலீபா அவர்கள் இயற்றிய ‘மெய்ஞ்ஞானச் சதகம்’ மிகப் பழமையானது என்றும், அதன் காலம் 1801ஆம் என்றும் கூறலாம்.

மெய்ஞ்ஞானச் சதகம் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பாடப்பட்டுள்ளது. இதுதவிர எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ள சதகங்கள் சில உண்டு. இஸ்லாமியச் சதகங்கள் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், இறைநேசச் செல்வர்களான வலிமார்கள் மீதும் பாடப்பட்டுள்ளன. தவிர இஸ்லாமிய நெறிமுறைகள் அறிவுரைகள் – வழிபாடுகள் உள்ளடக்கியவை மற்றவை. தமிழ் இலக்கிய உலகில் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் புலமைச் செறிவுடன் ஆக்கங்களைத் தந்து புகழ் முகட்டில் நிற்கிறார்கள் என்கிற உண்மை சதகங்களிலும் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. சதகம் பாடுவது முஸ்லிம் தமிழ்ப் புலவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.; சாதனையே புரிந்திருக்கிறார்கள். சமய அடிப்படையில் பாடப்பட்டுள்ள சதகங்களில் சைவத்திற்கு அடுத்த நிலையில், அதாவது எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில், இஸ்லாமியத் தமிழ் சதகங்கள் எண்னத்தக்கவை; ஏற்றம் பெற்றவை. அதே நேரத்தில் மற்ற சதகங்களைப் போன்ற சீரும் சிறப்பும் கொண்டு காலத்தை வென்று நிற்கும் நிலைக்கும் திறனும் தகுதியும் அவை பெற்றுள்ளன. அது தனிச் சிறப்பு, தலையாய சிறப்பு எனில் மிகைப்பட்ட புகழுரை அல்ல.

தமிழ் இலக்கிய வரலாறு என்ற தலைப்பிலான நூல்கள் பல உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்களை இருட்டடிப்பு செய்து, தமிழுக்குச் சேர்க்க வேண்டிய சிறப்பை ஏனோ சேர்க்காமல் தவிர்த்துள்ள உண்மை தமிழறிந்தோர் அறிந்த ஒன்று.. அவற்றைப் புறம் தள்ளிவிட்டு, உண்மையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்த வேறு சில நூல்கள் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சில நூல்களிலும் சரியான தெளிவான தகவல்கள் தரப்படவில்லை. அதனைத் தவிர்த்து வந்துள்ளது போன்ற தோற்றம் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது.

இஸ்லாமியத் தமிழ் சதகங்களின் எண்ணிக்கையத் தரமுற்பட்ட வரலாற்று நூலாசிரியர் ஒருவர் ஆய்வின்மையின் காரணத்தாலோ ஆதாரங்களைப் பெற முடியாத காரணத்தாலோ இஸ்லாமியச் சதகங்களாக ஐந்து சதகங்களையே குறிப்பிட்டுள்ளார். 1994ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறை வெளியீடான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதி மூன்று, பக்கம் 354) இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தனவாக ஏறக்குறைய இருபத்துமூன்று சதகங்கள் காணப்படுகின்றன என்கிற உண்மையக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை தந்த மூதறிஞர், முனைவர், ம.மு. உவைஸ், முனைவர் பீ.மு. அஜ்மல்கான் ஆகியோரின் அன்றைய முடிவையும் மிஞ்சிவிட்டது இன்று நாம் பெற்றுள்ள சதகங்களின் என்ணிக்கை.

இஸ்லாமியத் தமிழ் சதகங்களாக நாம் பெற்றுள்ள சிறப்பிற்குரிய இலக்கியச் செல்வங்கள் 1. மெய்ஞ்ஞானச் சதகம் – தக்கடி ஷெய்கு பஷீர் லெப்பை, 2. இரசூல் சதகம் – அப்துல் காதர் லெப்பை, 3. சலவாத்துச் சதகம் – மீரான் நயினார் புலவர், 4. சீறாச் சதகம் – முஹம்மது சுல்தான் மரைக்காயர், 5. திரு முகமது நபி சதகம் – பகீர் முஹம்மது, 6. திருநபி சதகம் – பொதக்குடி அப்துல் ரஹ்மான், 7. மஹமூதர் சதகம் – ஹாஜி மீரா ஹூசைன் ஆலிம் சாஹிபு, 8. மதீன மாநகர் தோத்திர சதகம் – கருணை அகமது தாஸ், 9. சல்லல்லாஹு அலைஹிவசல்லமே (சலவாத்துச் சதகம்) – அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா. 10. அகத்தீசர் சதகம் – குணங்குடி மஸ்தான் சாஹிபு. 11. முகையித்தீன் சதகம் – குணங்குடி மஸ்தான் சாஹிபு. 12. எதார்த்த சதகம் – மச்சரேகைச் சித்தர்., 13. காரண சதகம் – மச்சரேகைச் சித்தர், 14. காருண்ய சதகம் – மச்சரேகைச் சித்தர், 15. பூரண சதகம் – மச்சரேகைச் சித்தர், 16. பேரின்பச் சதகம் – மச்சரேகைச் சித்தர், 17.  நாதாந்த சதகம் – மச்சரேகைச் சித்தர். 18. சிதானந்த சித்தர் சதகம் – மச்சரேகைச் சித்தர், 19. மெய்ஞ்ஞானச் சதகம் – மச்சரேகைச் சித்தர். 20. மோக்ஷ சதகம்- மச்சரேகைச் சித்தர், 21. வேதாந்த சதகம் – மச்சரேகைச் சித்தர், 22. மெய்ஞ்ஞானச் சதகம் – முகையித்தீன் சாஹிபு, 23. அப்துர்ரகுமான் அரபிச் சதகம் – பவானிப் புலவர்.(எ) செய்யது புகாரிப் புலவர். 24. குதுபு சதகம் – கிலுறு முஹம்மது, 25. முகையித்தீன் சதகம் – பேகம்பூர் அப்துல் காதிர், 26. கௌது சதகம் – வா.அ.. ஷெய்கு முஹம்மது பாவலர், 27. வைத்திய சதகம் – எச்.பி. முகம்மது அப்துல்லா, 28.  நாகூர் வாழ் நாகூர்மீரான் சதகம் – புலவர் ஹாஜி.பி. ஷவ்கத் அலி, 29. நாகூரார் சதகம் – வரகவி நாச்சிகுளத்தார் முஹம்மது யூசுப், 30. நாகூர்ப் போற்றிச் சதகம் – கலைமாமணி கவி.கா.மு.ஷெரீப், 31. நாகூர் வாழ் தவ வேந்தே – பேராசிரியர் கா. முஹம்மது பாருக், 32. தரிசனமாலை சதகம் – மீரான் சாகிபு ஆகிய 33 சதகங்களைப் பட்டியல் இட்டுப் பெருமிதமும் கொள்ளலாம். அந்தப் பேறு பெற்றவர்கள் நாம்.

எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டவை எண்ணிக்கையில் அதிகம். அதற்கு அடுத்த நிலையில் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் பற்றிப் பாடப்பட்ட சதகங்கள். அதனை அடுத்து மூன்றாம் நிலையில் நாகூர் நாயகம் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது மீரான் சாஹிப் அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட சதகங்களாகும்.  அவை முறையே (அ) மலேஷியாவின் பினாங்கு நகர்ப் புலவர் ஹாஜி .பி. ஷவ்கத் அலி எழுதிய ‘நாகூர்வாழ் நாகூர் மீரான் சதகம்’ (ஆ) அதே நகரில் வாணிபம் புரியும் நாச்சிகுளம் வரகவி முஹம்மது யூசுப் பாடிய ‘நாகூரார் சதகம்’, (இ) அண்மையில் கடந்த காலத்தில் நம்மிடையே வாழ்ந்து , நற்றமிழ் பணியாற்றிய கலைமாமணி கவி.மா.மு. ஷெரிப் வழங்கிய ‘நாகூர் போற்றிச் சதகம்’, (ஈ) கல்லூரிப் பேராசிரியர் கவிமணி . கா. முஹம்மது பாரூக் இயற்றிய ‘நாகூர் வாழ் தவ வேந்தே’ ஆகியவனவாகும்.

இவை நான்கும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சில் வந்தவை. ‘நாகூர் வாழ் நாகூர் மீரான் சதகம்’ மலேஷியாவின் பினாங்கில் 1981ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. ‘நாகூரார் சதகம்’ சென்னை திரியெம் பிரிண்டர்ஸில் 1993ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு  நாச்சிகுளம் உதயமார்தாண்டபுரத்தில் வெளியிடப்பட்டது. ‘நாகூர்ப் போற்றிச் சதகம் ‘ நாகூர் ஹலரத் ஹாஜி எஸ்.டி. செய்யது ஹஸன் குத்தூஸ் சாஹிபு காதிரி அவர்கள் வெளியீடாக 1993இல் வெளியிடப்பட்டது.  பேராசிரியர் கவிமணி கா. முஹம்மது பாருக் யாத்த ‘ நாகூர் வாழ் தவவேந்தே சதகம்’ விரைவில் அச்சில் வரவிருக்கிறது.  ன்றாலும் அதன் பெரும்பகுதிப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர் சாஹிபு அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மதிநா’ இலக்கிய இதழிலும் , சொல்லரசு மு.ஜாபர் முஹ்யித்தீன் பதிப்பித்த நாகூர் இஸ்லாமியக் கலாச்சாரக் கழகத்தின் வெளியீடான ‘கடல் நாகூர் கருணை வள்ளல்’ சிறப்பு மலரிலும் திருநெல்வேலி பேட்டை முஸ்லிம் மாணவர் கல்வி நிறுவன வெளியீடான மஹான் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவுச்சுடர் இதழிலும் இடம் பெற்றவை. பரவலாகப் படிக்கப் பெற்று புகழ் ஈட்டிய சதகம் அது எனலாம்.

பினாங்குப் புலவர் ஹாஜி. பி. ஷவ்கத் அலி பாடிய ‘நாகூர் வாழ் நாகூர் மீரான் சதகம்’ நூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும் தனியே துணைத்தலைப்புகள் கொடுத்துள்ளார். அவரது எண்ணம், விருப்பம், வேண்டுகோள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ள பாடல்களை ‘அணைப்பீரே இது சமயம்’ ‘அணைத்திடுவீர் இது சமயம்’. ‘காப்பீரே இது சமயம்’ ‘காட்டுவீர் இது சமயம்’ ‘நயம் தருவீர் இது சமயம்’ ‘துணை புரிவீர் இது சமயம்’ என்பன போன்ற ஈற்றடி கொண்டு முடிக்கின்றார். அவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப இறைநேசச் செல்வர் அருளாசி புரிவார்கள். அல்லாஹ்வின் அருள் துணை நிற்கும் என்பது ஆன்றோர் வாய்மொழி. அதனை மெய்ப்பித்த நிகழ்வுகள் புலவரின் வாழ்வில் கண்டிருப்பார் என்கிற நம்பிக்கை மேலோங்கப் பாடல் வரிகள் பளிச்சிடுகின்றன. பாகாய் இனிக்கின்றன.

எம்பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அன்னை பாதிமா நாயகி, ஹலறத் அலி (றலி), ஹலறத் அலி (றலி) ஹலறத் ஹுஸைன்( றலி) ஆகியோரையும் முன்னிலைப்படுத்தி அவரது வேணவாவை வெளியிடுவது நமது முன்னோர்கள் காட்டிய வழிமுறை. அனுமதிக்கப்பட்ட அழகிய செயல்பாடு. அதில் அவர் கொண்டுள்ள பிடிப்பு அழுத்தமான பின்பற்றுதல் ஆங்காங்கே மின்னுகின்றன.

காயினுள் புழுவாழும்
விதம்பார்த்து மலைக்கின்றேன்
வாய்மைள்ள கல்லினுள்ளே
தேரைவாழப் பார்க்கின்றேன்.
தேயமதுள் புகுந்த உயிர்
வாழும்வகை தந்துமெனை
ஆயநபி அன்புப்பேரா
அணைத்திடுவீர் இதுசமயம்.

எளிய எல்லாருக்கும் புரியக்கூடிய வார்த்தைகளால் எழிலார்ந்து கவிதைகள் வழங்கும் ஆற்றல் பெற்றவராக நம்முன் நிற்கும் புலவரின் மற்றொரு பாடல் இப்படி :

கொய்தபூக் கொண்டு வந்து
குவிப்பார் உமதிடத்தில்
நெய்தபட்டும் ஏந்திவந்து
நின்றிடுவார் நின்னடியில்
எய்தநின்று இறைகண்ட
ஏந்தலெங்கள் நாயகரே
செய்தபிழை சார்ந்திடாமல்
அணைத்திடுவீர் இதுசமயம்.

நாகூர் நாயகம் காதிர்வலியின் தர்காவில் கூடிநிற்கும் பெருமக்கள் நாடிவந்த காரியங்கள் நிறைவேறி, நெஞ்சம் நிறைவுபெறுவதைப் பாடிக் காட்டுகிறார். இங்கே கருணைப் பார்வைக்காக ஏங்கி நிற்பவர், காலங்கடந்துவிடுமோ என்று அஞ்சி, பாடும் நேரத்திலே பயண்காணத் துடிக்கின்றார். தேவை ஒவ்வொன்றும் வேண்டும்., ‘இது சமயம்’ என்கிற வார்த்தைகள் உளவேட்கையை உணர்த்துகின்றன..

‘நாகூர் சதகம்’ பாடிய நாச்சிகுளத்தார் முஹம்மது யூசுப் நாடறிந்த பாவலர். எண்ணிக்கையில் ஏராளமான பாடல்களைப் பாடி, எண்ணற்ற நூல்களை அச்சில் கொணர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கவிஞராக வலம் வருகின்றார். நாகூரார் சதகம் என்ற பெயரிலான அவரது நூலில் சதகத்துடன் நாகூரார் வெண்பா, ஆதியும் அந்தமும் ஆகிய தலைப்பிலான கனிச்சுவைக் கவிதைகளும் இடம்பெற்று நூலுக்கு கனம் சேர்ந்துள்ளன. ஆக இந்நூல் இனிய நன்னூல் – ஒன்றில் மூன்று உவக்கும் உயர்நிலைக்குச் சான்று.

நாச்சிகுளத்தார் போற்றும் நாகூர் நாயகம் அவர்கள் பற்றிய பாடல்கள் அனைத்தும் பலாப்பழத்தின் சுளைகளாச் சுவை தருகின்றன. பாடப்பாடச் சுகம் தருகின்றன. இதோ ஒரு பாடல் :

கூடுவீர் நல்லவழி தேடுவீர் இன்பமதைக்
கூட்டாகப் பெற்றுவருவீர்
குணமா யிருந்துபல தர்மங்கள் செய்துமே
குறையாத புகழடைவீர்
பாடுவீர் மங்களம் பண்ணுவீர் தொழுகைபல
பரகதிக் காகுமலவோ
பாவத்தை விட்டுமே பணிவோடு பேசுவீர்
பண்டிதரை யண்டிவருவீர்
நாடுவீர் நல்லகதி நண்ணுவீர் சொர்க்கபதி
நாணாளும் இன்பமலவோ
நாயக வாக்கினை நயமா யறிந்துபிற
நாடெல்லாம் ஓதிவருவீர்
சாடுவீர் புலைநெறியை நம்புவீர்
மறைநெறியைச்
சற்குருவைச் சார்ந்து வருவீர்
தவராஜ சிங்கமே பவம்போக்குந் தங்கமே
சாகுல் ஹமீதரசரே

பாடல் ஒவ்வொன்றும் தவராஜ சிங்கமே பவம் போக்குந் தங்கமே சாகுல் ஹமீதரசரே என்ற ஈற்றில் முடிகிறது. வரகவி நாச்சிகுளத்தார் நாகூர் நாயகம் அவர்கள் மீது கொண்டுள்ள பற்றையும் பாசத்தையும் கூடவே பக்தி உணர்வையும் எடுத்துரைக்கும் ஏற்புடைய வரிவடிவங்களாக் காண்கிறோம்.

நாம் வாழும் காலத்தில் நம்மிடையே நமக்கு முன்னோடியாக நம்மின் முதியவராக நல்லறிவில் முதிர்ந்தவராக வாழ்ந்த கலைமாமணி கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் தம் புலமையின் காரணத்தால் தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கினார்கள். வீறுகொண்ட கவிஞராக விளங்கினார்கள். கலைமாமணி கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் தேடிய நன்மைகள் கூடி வந்ததைக் கண்டவர். களி கூர்ந்து நின்றவர். பாடிய பாடல்கள் நெடிகிலும் புகழ்விரிக்கின்றார். பூரித்து நிற்கின்றார். வல்ல இறைவனின் நல்லருளை முன்வைத்து வள்ளல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பொருத்தத்தை நெஞ்சத்தின் அடித்தளத்தில்  நிறுத்திப்பாடும் பாங்கு பக்தி உணர்வை மட்டுமா உணர்த்துகின்றது? இல்லை! பண்பையும் பணிவையும் அல்லவா படம்பிடித்துக் காட்டுகின்றது. இதோ ஓர் இனிக்கும் பாடல்;இதயம் பிணைக்கும் பாடல் :

அழிவிலாஇறைவன் தனிப்பெருந் தூதர்
அஹ்மது நபிதிருப் பேரர்
இழிந்தவர் தாமும் உயர்ந்தவர் ஆக
இடர்பல ஏற்றுமே உழைத்தோர்
பழிபட வாழும் பவவினை யாளர்
பதம் பெற நேர்வழி காட்டும்
பொழில்நிறை நாகூர்ப் பதியுறரை மேலாம்
புனிதரை வாழ்த்துவோம் போற்றி.

நாகூர் நாயகம் அவர்கள் வாழ்ந்து வல்ல இறைவன் நாட்டம்போல் மறைந்த இடம் புனித இடமாகக் கருதப்படுகிறது. அது பொருளுடைய பொருத்தமான மதிப்பீடு என்று உணர்பவர்கள் – ஒப்புக்கொள்பவர்கள் உண்மை தெரிந்தவர்கள், உள்ளம் தெளிந்தவர்கள் என்போம். அந்த நல்லார்களிடையே தன்னை ஒருவராக அடையாளம் காட்டும் கலைமாமணி கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் பாடிய பாடல்களில் மற்றொன்று இங்கே இடம் பெறுகிறது. படித்துப் பாருங்கள். பிடித்து ஈர்க்கும். பெரும் பயன் தரும்.

எண்ணத்தினாலும் செயல்களி னாலும்
எவரையும் நேசித்த லாலும்
உன்னதப் பண்பாடு டையவர் வாழும்
ஊரதாம் புகழ்மலி நாகூர்
அன்னநல் லூரின் சிறப்புகட் கெல்லாம்
அடிப்படை காதர் மீரா
என்னுமா ஒலிகள் ஆவராம் அந்த
ஏந்தலை வாழ்த்துவோம் போற்றி!

பேராசிரியராக அடையாளம் காட்டப் பெற்று, புலமைமிக்க பாவலராக அங்கீகாரம் பெற்றவர் கவிமணி. கா. முஹம்மது பாரூக். நாகூர் நாயகம் அவர்களின் வழிமுறையையும் வாழ்வியலையும் விவரித்து, அவர்களின் அறப்பணியை அழகிய திருப்பணியை வைரவரிகளில் துளிரச் செய்துள்ளார். பேராசிரியர் முஹம்மது பாரூக் பாடுகின்றார் இப்படி.

கற்பனையைக் காலத்தைக் கடந்துறையும்
இறையருளால்
நற்கலைகள் நிறைந்திலங்கும் நன்னாடாம்
பாரதத்தின்
பொற்பதியாம் மாணிக்கப் பூர்தன்னில்
வந்துதித்த
நற்குணத்தின் நாயகரே! நாகூர்வாழ்
தவவேந்தே!

கரைகண்டு
பெற்றவரின் ஆசியுடன் பேரூராம்
குவாலியரை
உற்றங்கே ஞானமென்னும் உயர்கல்வித்
துறைதேர்ந்த
நற்றவத்து நாயகரே! நாகூர்வாழ்
தவவேந்தே!

பேரொளியே! வையத்தைப் பேணவரும்
பேரொலியே
சீரொளியே! சிந்தைகவர் ஷாஹுல்ஹ
மீதொலியே!
ஆரொளியே! அழகொளியே! அப்துல்கா
தீரொலியே!
பாரொளியே! நாயகரே! பதிநாகூர்
தவவேந்தே!

பாரூக்கின் பாடல்கள் என்றால் அவை யாருக்கும் இளைத்ததல்ல. வேருக்கு நீர்பாய்ச்சி விளைச்சலை எதிர்பார்ப்பவர் அவர். மாணிக்கமான கருத்துக்களைக் கடல் நாகூர் கருணை வள்ளல் அவர்களுக்கு காணிக்கையாக்கிக் கசிந்துருகியுள்ளார். கற்கண்டாக, கன்னல் சாறாகக் கவிதைகள் இனிக்கின்றன.

இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள நாகூரார் சதகம் நான்கு. இவற்றுள் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நாகூர்ப் போற்றிச் சதகப் பாடல்களில் அரபிமொழிச் சொற்கள் விரவிக் காணப்படுகின்றன. அவை தமிழக முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் வழங்கப்படுபவை. ஆனால் முஸ்லிம் அல்லாத .தமிழர்கள் பொருள் புரியாமல் தவிப்பர் என்கிற உண்மை, கவிஞர் அவர்கட்கு நன்றாகத் தெரியும். என்றாலும் அவற்றைத் தவிர்க்காமல் பயன்படுத்தியிருக்கின்றார் எனில் இடம் பெற்றுள்ள திசைச் சொற்களுக்கு நேரடியான வார்த்தைகளாக நாம் நினைப்பவை முழுமையான பொருள் தரக்கூடியவையாக அமையாது போகலாம் என்ற அச்சம் காரணம் ஆகலாம். முந்திய இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் பாடி வைத்துள்ள இலக்கியங்களிலும் இப்படி அரபி பார்ஸி மொழிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. நமது முன்னோர் மரபு நடைமுறையில் ஆக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு பாடியிருப்பார் என்று நம்பலாம்.

கலைமாமணி அவர்கள் பாடி நமக்கு அளித்த சதகத்தில் அவரது பன்முகத்திறன், புலமை, மார்க்கப் பற்று அனைத்தும் ஒருசேரக் காணமுடிகிறது. என்ற உண்மை மறுக்கவொண்ணாதது. அதில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தனிச்சிறப்பு, வழிகாட்டும் வான்மறை, குர்ஆனின் வாழ்வு, அளிக்கும் வளமார் அல்ஃபாத்திஹா, சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் பலக், சூரத்து நாஸ் ஆகிய சூறாக்களுக்கு தமிழ்க் கவிதை உருக்கொடுத்து அவற்றின் நூலின் ஆரம்பப் பக்கங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அருள் பொழிவுக்கு அடித்தளம் இட்டுள்ளார்.

சதகங்கள் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் – நெஞ்சில் உறைந்தவற்றை நாவு உரைக்க முற்படும்போதெல்லாம் – அண்மைக் காலத்தில் அச்சுருப்பெற்ற ஹாஜி மீராஹூஸைன் ஆலிம் சாஹிபு (ஓதுகிற அப்பா) அவர்கள் பாடி, புகழ் குவித்த மஹ்மூதர் சதகம் நிழலாடுகிறது. 1901ஆம் ஆண்டில் பாடப்பெற்ற அந்தச் சதகம் முதன்முதலாக 1927இல் அச்சிடப்பட்டது. அதன் புதிய பதிப்பு அச்சிலும் அமைப்பிலும் அழகொளிர, பாடல் ஒவ்வொன்றுக்கும் குறிப்பு, பொருள் ஆகியவற்றை உடையதாக, கூடவே உரைவிளக்க அகராதி (பாடல்களின் எண்களை)யும் இணைப்பாகக் கொண்டு கடந்த 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கென கட்டிமேட்டில் வெளியிட்டு விழாவும் எடுத்தார்கள். அந்தச் சாதனையை நிகழ்த்தி, வெளிவரவிருக்கும் நூல்களுக்கு முன்மாதிரியைத் தந்தார் பேராசிரியர் முனைவர் சௌ. மதார் மைதீன் ஆவார். அவர் பணி பாராட்டத்தக்கது.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் பாடி வைத்துள்ள சதகங்கள் சாகாவரம் பெற்றவை. முத்திக்கு வித்தாகும் சத்தனைத்தும் கொண்டவை. பாடுபொருளாகக் கொண்ட அவை பேரருள் பொழிவுக்கு உரியவையாக, பாடியோர்க்கும், படிப்போர்க்கும் பொலிவைத் தருபவையாக மிளிர்கின்றன.

சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன்

*

நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம்

‘சொல்லரசு’ மாமா நினைவுகள் – கபீர்

Jafer Mohiyudeen1

அன்பிற்கினிய ஆபிதீன் அண்ணன் அவர்கட்கு …

ஜாபர் முஹ்யித்தீன்  மாமாவைப் பற்றி மிக முக்கியச் செய்திகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். நான் 80-களில் சிங்கையில் இருந்தபோது எனது தகப்பனாரின் இனிய நண்பர் என்ற முறையில் அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்று இருந்தேன்.

சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிக்கையில் அவர்களுடைய கட்டுரை, இலக்கியப் படைப்புகள் வாரந்தோறும் வரும். நம்மூர் ஜனாப் L.S.M. தாஹா மாமா அப்பத்திரிக்கையில் பணி புரிந்துள்ளார்கள்.

மேலும் நாகூரில் இன்று அதிகமாக இஸ்லாமியப் பெண்கள் இளங்கலை, முதுகலை என பட்டங்கள் பெறுகிறார்கள். இதில் ஜாபர் மொஹைதீன் மாமாவின் பங்கு மிக முக்கியமானது. நாகூரில் கிரசண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் மாமா. ஒவ்வொரு வீடாகச் சென்று “நான் தகப்பன்போல் உங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன், வயதுக்கு வந்த பிள்ளைகளாக இருந்தாலும் தயக்கம் வேண்டாம்” என்று கெஞ்சிக் அழைத்துச் சென்று இந்த அளவுக்கு பட்டதாரிகள் முஸ்லிம் பெண்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள்.

கீழக்கரையில் நடைபெற்ற 5-வது இஸ்லாமிய உலகத்தமிழ் மாநாட்டு நிர்வாகிகளில் ஒருவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு அந்த மாநாடு சிறக்க பாடுபட்டவர்கள் என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அன்புடன்
S.கபீர் அஹ்மது / பஹ்ரைன்

***

சுட்டிகள் :

‘சொல்லரசு’  மு.  ஜாஃபர் முஹ்யித்தீன்

நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள் – ஜாஃபர் முஹ்யித்தீன்
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு (15-16 பிப்ரவரி 1992 புதுக்கோட்டை) சிறப்பு மலரிலிருந்து

சித்தி ஜூனைதா பேகம்   ஒரு நேர்காணல் –  சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன்  (முஸ்லிம் முரசு ( பொன்விழா மலர் / 1999 )

 

« Older entries