தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

முனைவர் பர்வீன் சுல்தானா

**

தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி..!

நோன்புப் பெருநாளன்று (14-10-2007) , மக்கள் தொலைக்காட்சியின் ‘சங்கப்பலகை’ நிகழ்ச்சியில் , தோழர் தியாகுவுடன் முனைவர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடலை இங்கே பதிகிறேன். சித்தி ஜூனைதா ஆச்சியைப் பற்றி , ‘இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால்’ என்று பர்வீன் சுல்தானா சொன்னது மட்டும் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ஏனெனில் அப்போது ஜூனைதா ஆச்சி பிறக்கவே இல்லை! அதை திருத்தியிருக்கிறேன். அவர் சொன்ன மற்ற தகவல்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எதற்கும் நீங்கள் ‘இஸ்லாமும் தமிழிலக்கியமும்’ என்கிற முனைவர்.பீ.மு. அஜ்மல்கான் அவர்களின் கட்டுரையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சித்தி ஜூனைதாவைப் பற்றி சொல்லும்போது மட்டும் மகிழ்ந்து போகிற இஸ்லாமிய இலக்கியவாதிகளிலிருந்து மாறுபட்டு,  ‘சல்மா’வின் மறுக்கமுடியாத பங்களிப்பையும் சேர்த்துச் சொல்லும் அந்த ஒரு விஷயத்துக்காகவே பர்வீன் சுல்தானாவைப் பாராட்டுவேன்.

மக்கள் தொலைக்காட்சிக்கும் தியாகுவுக்கும் முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கும் நன்றிகள்.

– ஆபிதீன் –

***
பர்வீன் சுல்தானா : …பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அதாவது பதினான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் , பல்சந்த மாலை என்கின்ற ஒரு நூல் கிடைப்பதாக களவியற்காரிகை நமக்குச் சொல்கிறது. ஆனால் அது முழுமையான நூல் வடிவத்தில் கிடைக்கவில்லை. ஒரு  எட்டுப் பாடல்கள் மட்டுமேதான்
கிடைக்கின்றன. ஆக , எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னமேயே தமிழகத்திற்கு இஸ்லாமியர்களுடைய வருகை இருந்திருக்கிறது; அல்லது அரேபியர்களுடைய வருகை இருந்திருக்கிறது. அரேபியர்களுக்கே இஸ்லாம் அறிமுகமானதற்குப்  பிறகு – அவர்கள் வணிகம் பொருட்டு தமிழகத்திற்கு வருகின்றபோது –  அந்த  இஸ்லாத்தை பற்றி அவர்கள் இங்கே சொல்லி இங்கே இருக்கின்றவர்களும் இஸ்லாமாகியிருக்கிறார்கள்; அவர்களும் இங்கே குடும்பத்தை விருத்தி செய்திருக்கிறார்கள்.

தியாகு : அதனால்தான் இவங்க இஸ்லாம் ‘ஆனவர்கள்’?

ப : ஆமாம்.. இஸ்லாமியர்கள் என்று சொல்லுகின்ற வார்த்தையை விட தமிழகத்தில் பரவலாக நாம் கேட்கின்ற சொல் – ‘இஸ்லாம் ஆனவர்கள்’ – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்கின்ற பொருளில். ஆனால் ஒரு குறிப்பு என்னவென்றால் , இஸ்லாத்தைப் பரப்புகின்ற பொருட்டு அரேபியர்கள் தமிழகத்திற்கு வரவில்லை. அவர்கள் வணிகத்தின் பொருட்டுத்தான் வந்தார்கள். இவர்களுடைய மார்க்கத்தினுடைய செய்திகளைக் கேட்டு – எப்பொழுதும் ஒரு மாற்று விசயத்திற்காக தயாராகக்கூடிய சமூகச் சூழல் – இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது; அப்படித்தான் பார்க்க முடியும்.
பதினான்காம் நூற்றாண்டின் நடுவிலே கிடைத்த நூல் (பல்சந்த மாலை) முழுமையாக கிடைக்காதபோது , முழுமையாக கிடைக்கக்கூடிய முதல் இஸ்லாமிய இலக்கியம் எது என்றால்… 1572ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நூல். ‘ஆயிரம் மஸ்லா’ என்ற அந்த நூலுக்குப் பெயர். இந்த மஸ்லா என்ற சொல்லடைவு தமிழுக்குப் புதியது. இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள்..- இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, வேறு எந்த மார்க்கத்திற்கு உரியவர்களாக இருந்தாலும் –  அந்த மார்க்கம் மூலமாக அவர்களுக்கு ஒருமொழியானது கொடையாக கிடைக்கிறது.  அப்படி கொடையாக கிடைத்த அந்த மொழிதான் இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி. அது மட்டுமல்லாமல் பாரசீக (ஈரான்) மொழி அவர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த பாரசீக மொழியிலும் அரேபிய மொழியிலும் கவித்துவம் பெற்ற அளவுக்கு பாண்டியத்தியம் பெற்றவர்களாக இஸ்லாமியப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் புலமைகளை தமிழுக்குக் கொண்டு வருவதற்காக தமிழிலும் அவர்கள் பாண்டியத்தியம் பெற்று , தமிழிலே அவர்கள் பல சிந்தனைகளை கொண்டு வருவதன் மூலமாக இஸ்லாத்தினுடைய கொடையாக தமிழுக்குப் பல புதுவகை இலக்கியங்களை தந்து சென்றிருக்கிறார்கள். தமிழுக்கு இத்தனை பிரபந்த வகை என்று பண்ணிருபாட்டியல் நமக்கு ஒரு பட்டியல் தருகிறது. 96 வகை பிரபந்தங்கள் என்று நமக்கு பல இலக்கண நூல்கள்.. தண்டியலங்காரமும் அதைச் சொல்கிறது. 96 வகை பிரபந்தங்களைக் கடந்த நிலையில் , நூற்றுக்கும் மேற்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் படைத்திருப்பதாக நமக்கு அறிய வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய வடிவங்களை , ஆயிரக்கணக்கான இலக்கியங்களை தமிழுக்கு அவர்கள் தந்திருக்கிறார்கள்.

தி : அரபிமொழி கற்று அரபி மொழிப் புலமையோடு தமிழுக்கு வருகிறார்கள்; தமிழையே அரேபியில் எழுதுவதாகச் சொல்கிறார்களே. அரபித்தமிழ் இலக்கியம்..அதைப்பற்றிச்  சொல்லுங்கள்

ப : குர் ஆன் என்ற வேதநூல் அரேபிய மொழியில்தான் வாசிக்கப்படுகிறது. அந்த அரேபிய மொழி என்பது இறைவனோடு அளவளாவக்கூடிய ஒரு மொழியாக, ஒரு மொழியிலேயே மிக அதிகபட்ச மரியாதைக்குரிய மார்க்கமொழியாக , இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். புனித மொழியாகக் கருதுகிறார்கள். புனிதமாக அந்த மொழியைக் கருதுவதன் விளைவாக இஸ்லாமிய செய்திகளை எழுதுகின்றபோது – இவர்களுக்கு அரபியை வாசிக்கத் தெரியும்;எழுதத் தெரியும்; பேசத் தெரியாது – இந்த பிரச்சனை உண்டு. தமிழகத்திலே எல்லா இஸ்லாமியக் குழந்தைகளும் குர் ஆன் ஓதும். எல்லோருக்கும் அரபி வாசிக்கத் தெரியும். இதைப் போல எழுத்து லிபியும் தெரியும். ஆனால் பேசத் தெரியாது. எழுத்தை வாசிக்கவும் எழுதவும் மட்டுமே அறிந்திருப்பவர்கள் , இஸ்லாமிய எழுத்துக்களை இலக்கியமாக தமிழில் எழுதுகின்றபோது அரேபிய லிபியைப் பயன்படுத்துகிறார்கள். Ttransliteration என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; ஒலிபெயர்ப்யாக – மொழி பெயர்ப்பாக அல்ல –  அரேபிய இலக்கியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல கையெழுத்துப் பிரதிகள்.. ஆனால் பிற்காலங்களில் அது குறைந்து போனது. சிலர் இதிலேயே உயில் எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அரேபியிலெ வாசிக்கிறதுக்காக எழுதுகின்றபோது , புனிதமாக விசயத்தை எழுதுகிறோம்; தன்னுடைய சந்ததிகளுக்காக எழுதுகிறோம் என்று.. அப்படி எழுதிவச்ச பிரதிகளும் காணக் கிடைக்கின்றன.

தி : சிற்றிலக்கியங்கள்..

ப: சுவையான விசயம் இதுலெ என்னவென்றால்..பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமக்கு இஸ்லாமிய இலக்கியங்கள் அறிமுகமாகின்றன – தமிழகத்தில். ஆக, அரேபியர்கள் இங்கே வேரூன்றி, தமிழ் கற்று, அல்லது தமிழகத்தில் இருக்கக்கூடியவர்கள் இஸ்லாத்தை ஏற்று, கல்வி பெற்று மேலே போவதற்கு ஒரு நான்கு ஐந்து நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிலே அவர்கள் எழுதத் தொடங்குகின்றபோது – அந்தக் காலகட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய ஓட்டம் என்பது சிற்றிலக்கிய காலமாகத்தான் இருந்திருக்கிறது. காப்பிய காலம் அப்போது இல்லை. காப்பிய காலத்ததை நாம் கடந்திருக்கிறோம். பக்தி இலக்கிய காலத்தையும் கடந்து , அந்த சிற்றிலக்கிய காலக்கட்டத்தில் இஸ்லாமியப் புலவர்கள் எழுதுகோலை கையில் எடுத்தபோது பலவிதமாக இஸ்லாமிய இலக்கியங்களை அவர்கள் எழுதுகிறார்கள். கோர்வை, அந்தாதி, கீர்த்தனை, இசைப்பாடல்கள், ஞான நூல்கள், தூது, குறவஞ்சி என்று பல இலக்கிய வடிவங்களை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய இலக்கியங்களாக படைக்கிறார்கள். படைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்களுக்கு இயல்பாக வாசிக்ககூடிய பிறமொழி அறிவை, சிந்தனையைப் பயன்படுத்தி புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்கிறார்கள். இதில் ஐந்து புதுவகை வடிவங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த ஐந்தில் ஒன்றைத்தான் என்னுடைய ஆய்வுத் தலைப்பாக நான் எடுத்தேன். அந்த ஐந்து என்பதில்,  ஒன்று : ‘மஸ்லா’, மஸ்லா என்பது புதிர். கேள்விகள் கேட்டு பதில் வரக்கூடிய இலக்கியம் – விடுகதை போல. அடுத்தது : ‘நாமா’. ‘நாமா’ என்றால் பெயர். இறைவனுடைய பெயர்களைச் சொல்லி பல பாடல்கள் எழுதப்பட்ட ஒரு இலக்கியம் – ‘நாமா’. அடுத்ததாக கிடைக்கும் இலக்கியம் : ‘கிஸ்ஸா’. கிஸ்ஸா என்றால் கதை. கதை வடிவம். பழையான கதை வடிவங்கள் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டவை இந்த கிஸ்ஸாக்கள். பிறகு வருவது : ‘முனாஜத்’. முனாஜத் என்பது இறைவேட்கை பாடல்கள். முழுமையாக இறைவனிடத்தில் வேட்கை நிகழ்த்துகிற பாடல்கள். வழிபாடு வேறு, வேட்கை வேறு. இறைவனிடத்தில் மன்றாடுதல். அடுத்ததாக வந்த இலக்கியம்தான் ‘படைப்போர் இலக்கியம்’. படையும் போரும். போர்க்கதைப் பாடல்களாக பல இலக்கியங்கள் கிடைக்கிறது. இதில் செவ்வியல் இலக்கியமும் கிடைக்கிறது, நாட்டார் இலக்கியமும் கிடைக்கிறது – பரணி இலக்கியம் மாதிரி. ஆனால் பரணி இலக்கியத்திற்குப் பிறகு தமிழகத்தில் எந்தப் போரும் தோன்றவில்லை என்பதனை மாற்றி அமைக்கும் பொருட்டு இவர்கள் இந்த இலக்கிய வகையை அறிமுகப்படுத்தினார்கள். பரணியிலிருந்து இதை ஒப்பிட்டுப் பார்த்தால் படைப்போர் இலக்கியம் தனித்த வகை. இதன் இலக்கண வடிவமைப்புகள் எல்லாம் வேறு வேறு. தமிழுக்கு இவைகள் புதுவரவு. இஸ்லாம் தந்த கொடையாக அதை சேர்த்துக் கொள்ளலாம்

தி : நீண்ட இலக்கியங்கள்… உமறுப்புலவருடைய சீறாப்புராணமெல்லாம் நெடுங்காப்பியத்தினுடைய தன்மைகளில் இல்லையா?

ப: ஆமாம், படைப்போர் இலக்கியத்தை பார்த்திர்கள் என்றால் சிற்றிலக்கிய வகை. அளவால் சின்னது; அதுதான் சிற்றிலக்கியம்டு சொல்ல முடியாதபடிக்கு வகைகள் வருகிறது. படைப்போர் இலக்கியங்களிலேயே சல்ஹா படைப்ப்போர், சைதத்து படைப்போர் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் ‘சல்ஹா படைப்போர்’ என்பது காப்பியம்.  படைப்போர் இலக்கிய வகையை புதுவகை இலக்கியமாக, கண்ணிகளாக , பாடல்களாக எழுதியிருக்கிறாகள். முழுக்க விருத்தங்களால் ஆன செவ்வியல் இலக்கியமாக அது இருக்கிறது. நாட்டார் பாடல்களாகவும் எழுதியிருக்கிறார்கள். பலவகையான வடிவங்களில் இந்த பாடல்கள் நமக்கு கிடைக்கிறது. நீண்ட இலக்கியங்களாகவும் அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள்.

தி : இதனுடைய காலம் எப்படி..உமறுப்புலவருடைய..

ப: அது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். முதல்லே கிடைக்கிற இலக்கியமென்று – மஸ்லாவை – 1572ஐ சொல்லிட்டோம். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது (சீறாப்புராணம்) கிடைக்கிறது.

தி : சீறாப்புராணம் அனைவரும் அறிந்து பெயரென்று வைத்துக் கொள்ளாலாம். அதே போல பெயர் தெரியாமல் போன இலக்கியங்கள்..

ப: என்னுடைய வேதனையான இன உணர்வுகளை இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள். என்னவென்றால், இஸ்லாமிய இலக்கியங்கள் என்று பார்த்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான இலக்கியங்கள்.. பதிப்பிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே இருக்கின்றன இன்னும்.. இந்த இலக்கியங்களையெல்லாம் வாசிக்கும் தோறும் அந்த இலக்கியத்தினுடைய செழுமை வசீகரிக்கிறது. செம்மொழியாக இருப்பதற்கு அவ்வளவு தகுதிப்பாடுகளும் இந்த இலக்கியத்திற்கு உண்டு.  சீறாப்புராணம் போல அனைத்துத் தகுதிகளும் பெற்ற பல (இஸ்லாமிய) இலக்கியங்கள் இருந்தாலும் வாசிப்புப் பயிற்சி இல்லாத காரணத்தால் அல்லது அவைகள் அறிமுகம் செய்யப்படாத காரணத்தால் அவை மக்களைப் போய்ச் சேரவில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து

தி : சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தினுடைய வரலாறுதானே?

ப: சீரத்து வரலாறு என்பதுதான் பொருள்.

தி : அதை எழுதுவதற்கு சீதக்காதியின் கொடை துணையாக இருந்தது இல்லையா?

ப: ஆமாம். நிச்சயமாக.

தி: சீதக்காதி ஒரு புரவலர். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல், உமறுப்புலவருக்கு ஒரு சீதக்காதி. சரி, அச்சு வடிவம் பெறாத இலக்கியங்களும் ஏராளமாக இருக்கிறது என்கிறீர்கள்

ப: என்னுடைய ஆய்வுக் களத்திற்காக நான் தேடித்திரிந்தேன். கள ஆய்விலே படைப்போர் இலக்கியத்திற்காக தேடி அலைகின்றபோது …’இபுறாஹிம் படைப்போர்’ என்கின்ற ஒரு நூல் கீழ்த்திசை சுவடி நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. மூவாயிரம் கண்ணிகள் இருக்கக்கூடிய அந்த நூலை நான் வாசிக்க நேர்ந்தபோது… ஏர்வாடியில் இருக்கக்கூடிய அந்த இபுறாஹிம் பாதுஷாவைப் பற்றிய வரலாறு – தீன் விளக்கம்டு ஏற்கனெவே ஒரு நூல் வந்திருக்கிறது – அதை அடியொட்டி படைப்போர் இலக்கியமாக இந்த இபுறாஹிம் படைப்போர்  இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நூல் இன்னும் பதிக்கப் படவில்லை. என்னுடைய தனித்த முயற்சியின் காரணமாக , நான் சேகரித்த அத்தனை நூல்களையும் – அது மிகப் பழமையாக , xerox என்கிற நகலெடுத்தபோது உதிர்ந்து விழுந்த காரணத்தால்  பொடிப்பொடியாகப்போன அந்த நிலையில்கூட – நான் பதிப்பித்திருக்கிறேன் –  பார்க்கர் பதிப்பகம் என்ற என்னுடைய பதிப்பகத்தின் மூலமாக. தமிழியல் ஆய்வு நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் அடிப்படையில் இதை நான் முழுக்க பதிப்பித்திருக்கிறேன். ஆனால் இன்னும் பதிக்கப்படாமல் இன்னும் சற்றுவேலை பாக்கியிருக்கூடிய ஒரு..

தி: அதெல்லாம் தாள் சுவடிகள்தான், இல்லையா?

ப: இல்லையில்லை. ஓலைச் சுவடிகள்!

தி: எழுத்து முறையிலே அதில் வேறுபாடு இருக்கிறதா?

ப: ஆமாம். புள்ளி வைத்திருக்காது. இஸ்லாமிய இலக்கியங்களை வாசிப்பதென்பது சற்று சிரமமான விஷயம். நான் சுவடி இலக்கியத்தைத் தேடித்தான் என்னுடைய ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். இஸ்லாமிய இலக்கியத்திற்கு வந்து நின்றேன்.  என்ன காரணம் என்றால்,  இதை நான் செய்யாமல் யார் செய்வது என்கிற பெரிய கேள்வி எனக்குள் எழுந்து விட்டதுதான் காரணம். என்னவென்றால் நீங்கள் வாசிக்கும்போதும் – இப்படி இருக்குமென்று வைத்துக்
கொள்ளுங்களேன் ஒரு வார்த்தை – ‘அவன் சபுர் செய்து கொண்டிருந்தான்’, ‘மக்ரிப் நெருங்கிக் கொண்டிருந்தது’… ‘சபுர்’ என்றால் என்னவென்று தெரியாமல் வாசிப்பைத் தொடர முடியாது. இஸ்லாமிய இலக்கியங்களில் இருக்கக்கூடிய வாசிப்புச் சிக்கல்களில் இஸ்லாமிய இலக்கியங்கள் புகழ்பெறாமல் போவதற்கு , அல்லது மற்றவகளுடைய வாசிப்பிற்கு  காரணாமாகாமல் இருப்பதற்கு இதைக் கூடச் சொல்லலாம். ‘மக்ரிப்’ என்பது தொழுகைக்கான நேரம் , அது ஆறு மணிக்கு மேல் தொழக்கூடிய நேரம், ‘சபுர்’ என்பது பொறுமையாக இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடு.. இதைப் புரிந்தால்தான் சரியாக வாசிக்க முடியும்.

தி: சமயம் என்றில்லை, மீனவர்கள் குறித்து ஒரு புதினம் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்; அந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய சொற்களில் பரிச்சயமில்லையென்றால் அதைப் படிக்க முடியாது.

ப: ‘ஆழி சூழ் உலகு’ என்கிற புத்தகம் படித்தேன்.

தி: அதைத்தான் சொல்ல வருகிறேன். ஜோ.டி. குரூஸ¥டைய அந்த நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது நிறைய அவர்களின் புழக்கச் சொற்கள்… அவங்க தனியா பெயர் வச்சிருக்காங்க!

ப: ஆமாம்…’நீவாடு’ண்டு ஒரு சொல் வரும்…நமக்குத் தெரியாது.

தி: அதுபோல கடல் நீரோட்டங்களுக்கு அவர்கள் வைக்கிற பெயர்கள்.. இதெல்லாம் தெரியாம நாம  வாசிக்கவே இயலாது.

ப: ஆனால் ஒரு உள்ளன்போடு, இது நம்ம தமிழ் சார்ந்ததென்று அக்கறையோடு வாசிக்க ஆரம்பித்தால் புரிந்து விடும்.

தி: நிச்சயமாகப் புரியும். போகிற போக்குல படித்துவிட முடியாது. முயற்சி தேவை.

ப: வாசிப்பு முயற்சி

தி: எழுதுகிறவனுக்கு முயற்சி தேவைப்படுகிறமாதிரி வாசிப்புக்கும் ஒரு முயற்சி தேவை

ப: இந்த முயற்சி இருந்தா இஸ்லாமிய இலக்கியங்கள் பிரபலமாவதற்கும் மற்றவர்கள் கையில் அது தவழ்வதற்கும் அதிக காலம் கிடையாது.

தி: வாசகன்  வசதிக்காக வேண்டி இந்த தனித்தன்மைகளை விட்டுடக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தனித்தன்மையை பாதுகாத்துக்கொண்டுதான் வாசகனை பழக்கிக்கிட்டு வரணும். அந்த வார்த்தைகளை நீர்த்துப்போக விடக்கூடாது. சரி, நவீன இலக்கிய வடிவங்களிலே இஸ்லாத்திண்டைய பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

ப:  ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது எது? நிறைய பேர்கள் என்ன சொல்கிறார்கள், ‘இது இஸ்லாமியப் புலவர் எழுதினார்; அதற்காக அது இஸ்லாமிய இலக்கியம்’ என்று. அப்படியல்ல. எழுதப்படக்கூடிய பொருள் , அது இஸ்லாமுடைய வாழ்வியல் நெறிமுறைகளுக்கும், அந்த கோட்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கின்றபோது அது இஸ்லாமிய இலக்கியமாக பெயர் பெறுகிறது. இப்படிப் பெயர் பெறுகிற நேரத்தில் உலகியல் விசயங்களை நிறைய பாடக்கூடிய வாய்ப்பில்லாமல் பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தினுடைய குறிக்கோள்களாக சில விசயங்களை காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நிகழ்த்துதல்கள், நிகழ்த்துக் கலைகள்..இவைகள் இஸ்லாத்தில் இல்லை; ஆனாலும் வாழ்வியல் நிலையிலே நம்முடைய மண்ணிற்குரிய விசயமாக நிகழ்த்துதல் இருக்கின்றபோது அதைத் தவிர்க்க முடியாமல் போகின்ற சூழலையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக, மார்க்கம் சொல்கின்ற ஒரு விசயம் இருக்க , உலகியலோடு ஒத்துவாழக்கூடிய பண்பாட்டு ரீதியான ஒரு விசயம் இருக்க , இரண்டு நிலையிலும் இஸ்லாமியர்கள் தன் நிலையை வழுவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தி: செயற்கையாக இல்லாமல் இயற்கைப் போக்கிலேயே ஒரு மண்ணின் பண்பாடும், மதத்தின் பண்பாடும் கலந்துவிடுகிறது. நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தமிழ் பேசுகிறவர்கள் தமிழரல்லாதவராகவும் அரேயியர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள். எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் சந்தனக்கூடு என்பதற்கும் கோயில் திருவிழாவிற்கும் பெரிய வேறுபாடு இருக்காது. எல்லோரும் போய் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்கள். இதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்கிறார்போல் அதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ப: சந்தனம் நிறைந்த கூடு இருக்கும்.

தி: அதேபோல் இங்கே ஒரு கோயில் திருவிழா என்றால் ஒருநாளைக்கு மண்டகப்படி – மாமா வீட்டு மண்டகப்படிண்டு சொல்வார்கள் – மாமா மச்சான் என்று பழகுவார்கள். ஒன்னும் வேற்றுமை இருக்காது; எல்லோரும் மண்ணின் மக்கள் என்கிற உறவுமுறையிலே பழகுவார்கள்.

ப: இன்றைக்கும் வேற்றுமை இல்லே.  வேற்றுமை என்பது அவர்களுடைய வாழ்வியலோடு இல்லாமல் இருக்கிறது. அது ஏதோ அரசியல் தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் வாழ்வியலோடு அது ஒன்றுகலக்கவே இல்லை என்பதுதான் தமிழகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

தி: மதம், அந்த மதத்தைப் பேசுகிற பிறந்த ஒரு பகுதி, அந்த மதம் அதிகப்பேர் கடைப்பிடிக்கிற ஒரு பகுதி என்றால் அந்த பகுதிக்குரிய தேவைகளுக்கேற்ப உடைகள் , அந்த பழக்க வழக்கங்கள் வருது. ஒரு மணல் வீசுகிற பாலைவனத்தில் உடுத்துகிற அந்த உடையையே வெயில் கொளுத்துகிற இன்னொரு நாட்டிலேயோ வேறொரு இடத்திலேயோ போய் பயன்படுத்த முடியாது. அதனாலேயே அது மத உடை ஆகிவிடாது. மண்ணின் தேவைக்கேற்பத்தான் உடை மாறுபடுகிறது. அதிலேயே சில வேறுபாடுகள் – சமயத்துக்கு சமயம் – இருக்கலாம். அந்த முறையில் பார்க்கிறபோது இஸ்லாத்திற்கென்று , இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் , மார்க்கத்தைப் பரப்புவதற்கென்று உருவான பல்வேறு இலக்கியங்கள் – அவை இந்த மண்ணுக்குரிய இந்த மொழிக்குரிய தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஒரு பண்பாட்டுப் பங்களிப்பை செய்திருக்கிறது. நான் என்ன கேட்கிறேன் என்றால், அப்படி வரும்போது – இஸ்லாத்தினுடைய தாக்கத்தினால் – இஸ்லாம் அல்லாதவர்கள் படைத்திருக்கிற இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கலாம் இல்லையா?

ப: நிச்சயமா இருக்கும். நீங்க கேட்ட இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லிட்டு அப்புறம் நவீன இலக்கியங்களுக்கு  வருகிறேன். இஸ்லாம் என்கின்ற மார்க்கத்தின் அடிப்படையான விசயங்களை உள்வாங்கிக்கொண்ட பிறமார்க்கத்து சகோதரர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்கிறேன்: ‘நபிநாதர் பிள்ளைத்தமிழ்’ என்கிற நூலை மு. சண்முகனார் என்கிற ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார். அற்புதமான ஒரு நூல். இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளையோ கோட்பாடுகளையோ ஒழுகலாறுகளையோ முழுக்க உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட ஒரு இலக்கியமாக அது திகழ்கிறது. அதே போல ‘கோட்டாற்றுக் கலம்பகம்’ என்கின்ற ஒரு நூலை கருத்தையா பாவலர் என்பவர் எழுதியிருக்கிறார். இவருடைய தமிழ் பங்களிப்பு என்பது இஸ்லாத்தினுடைய உலகத்தில் மிக அருமையான ஒன்றாக கருதப்படுகின்றது.

தி: இதை இஸ்லாமிய வாசகர்கள் மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள்?

ப: நிச்சயமாக. நான் ஒரு விசயத்தை தெளிவாக்குகிறேன். இஸ்லாமிய இலக்கியம் என்பது எழுதப்படுபவர்களைப் பொறுத்து பெயர் பெறுவதல்ல. எழுதப் படுகின்ற பொருளை வைத்து பெயர் பெறுவது. அடுத்ததாக, நவீன இலக்கியங்கள் என்று வரும்போது இஸ்லாமிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு , இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கையையோ அல்லது மனிதர்களுடைய மேம்பாட்டு நிலையையோ சொல்லக்கூடிய வகையில் மீட்டுருவாக்கத்தையோ அல்லது மறு வாசிப்பிற்கோ உட்பட்ட பல இலக்கியங்கள் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறன.  அதை இல்லையென்றே சொல்லிவிடமுடியாதபடி பல நவீன இலக்கியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நவீன இலக்கியங்கள் இஸ்லாமியர்களுடைய வாழ்வியல் நிலைகளை நவீன நோக்கோடு பார்க்கக்கூடிய சூழலை இன்றைக்கு நாம் காணமுடிகிறது. இன்னும் ஒரு விசயம் என்னவென்றால் , பல விசயங்கள் பேசக்கூடாது என்கின்ற நிலை இருந்தது; இதற்கு மதப்பூச்சு வைத்திருந்தார்கள்; ஆனால் , மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதனை இன்றைய நவீன இலக்கியங்கள் சொல்லிக் காட்டுகின்றன. ஏனென்றால் ஒருவர் எழுத வருகின்றபோது – அது நவீன இலக்கியமாக இருக்கின்றபோது – சமயமும் மதமும் எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்படாது என்பதனைப் புரிந்துகொண்ட படைப்பாளிகள் இன்றைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஒரு மிக நல்ல விசயமாகத்தான் எனக்குப் படுகிறது.

தி: அவர்கள் உலகியல் அரங்கிலும் பங்களிப்பு செய்கிறார்கள்..

ப: நிச்சயமாக. இதுவே பெரிய உலகியல் பங்களிப்புதானே.. ஒரு சாதாரண இஸ்லாமியனுக்கும் வேற்று மார்க்கத்தவருக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் , காலையில் எழுந்திருப்பதிலிருந்து ராத்திரி தூங்கும் வரைக்கும், முழுக்க முழுக்க இஸ்லாமியராகவே இருக்கிறார்கள். எப்படி? நாட்களைத் தொடங்குகின்றபொழுது, யாரேயேனும் சந்திக்கிறபொழுது , சாப்பிடுகின்றபொழுது, படுக்கின்றபொழுது, பேசுகின்றபொழுது… எங்கே போனாலும் அவர்கள் இறைவனை மறப்பதில்லை. இறைவார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கல்யாணத்திற்கு கூப்பிடுங்கள், ‘இன்ஷா அல்லாஹ். வருகிறேன்’ என்பார்கள்.  ‘இறைவன் நாடினால் வருகிறேன்’ என்று அர்த்தம். ‘இந்தப் பொருள் நல்லாயிருக்கா?’ என்றால் , ‘மாஷா அல்லாஹ். நல்லாயிருக்கே’ என்பார்கள். ‘இறைவன் படைப்புக்கு நன்றி’ என்று சொல்வது அது. சாப்பிடுவதற்கு ஏதாவது நீங்கள் கொடுங்கள், ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள் – ‘இறைவன் பெயரால் தொடங்குகிறேன்’ என்று. ஆக, அவர்கள் முழுக்க முழுக்க இறைவேட்கையோடும் இறை எண்ணங்களோடும் வாழக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். அவர்களின் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள்ளாக நடக்கின்ற சிக்கல்களை பேசுகிற இலக்கியம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது வந்திருக்கிறது ‘ரெண்டாம் ஜாமத்துக் கதைகள்’ மாதிரி. சல்மா அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் சமூகத்தின் உள்ளேயிருக்கக்கூடிய விடயங்களை அந்தப் பெண் தைரியமாக எழுதியிருக்ககூடிய ஒரு நூலாக அது இருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கும் இதற்கும் முரண்பாடு இருக்கிறதா என்றால் ஒண்ணும் கிடையாது. ஏனெனில் மார்க்கக்கருத்துகளுக்கு எதிராக எதுவும் அதில் பேசப்படவில்லை. பதிலாக , அந்த சமயத்தைச் சார்ந்த மக்களுடைய
சிக்கல்களை அந்த நூல் பேசுகிறது. இப்படிப் பார்த்தால் நிறைய கவிதைகள்.. இன்றைக்கு பல கவிதைகள் வருகின்றன..ஏன், இலங்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் , இப்போது அங்கே முஸ்லீம்கள் காணும் பிரச்சனைகள் என்று பல கவிதைகள், பல இலக்கியங்கள், பல புதினங்கள்.. இன்றைக்கு வந்துகொண்டேயிருக்கின்றன… அதையும் நாம் இஸ்லாமிய இலக்கியங்களிலே சேர்க்கலாம்.

தி: கடைசி கேள்வி.. தமிழுக்கு இஸ்லாத்தினுடைய பங்களிப்பு என்பதில் சமூகத்தில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

ப: என்னைப்பார்த்து தொடுக்கப்படும் பழகிப்போன கேள்விகளில் இதுவும் ஒரு கேள்வி! எப்போதும் பெண்களுக்கு இரண்டாம் நிலையான பார்வைதான் சமூகம் தந்திருக்கிறது. அதில் நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்வதற்கு பெருமைப்படுகிறேன். என்ன காரணம் என்றால், இஸ்லாம் ஆண்-பெண் என்கின்ற வித்தியாசத்தை எப்போதும் பேணவில்லை. கல்வி , இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. எனக்கு நிரம்பப் பிடித்த ஒரு ஹதீஸ் : ‘தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி’. ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்திருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு கல்வி என்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடியது. அந்தக் கல்வித் தளத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பெண்கள் , எழுதுவதற்காக வருகின்றபொழுது தன்னுடைய உள்ளக்கிடக்கை படைப்பாளியாக நின்று எழுதுகின்றபொழுது , அதை வாசிப்பதற்கான பயிற்சியோ ஏற்றுக்கொள்வதற்கான பயிற்சியோ இன்னும் சமூகத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. (1917ம் ஆண்டு நாகூரில் பிறந்த) சித்தி ஜூனைதா பேகம் என்கின்ற ஒரு பெண்… அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு போனது கிடையாது; மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறார்கள்; வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்து தனக்குக் கிடைத்த தாள்களிலெல்லாம் எழுதியெழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் தேடிப்பார்த்தீர்கள் என்றால் பெண்களுடைய ஆக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் கூட அது இருக்கலாம், சொல்ல முடியாது. ஆனால், பெண்கள் எழுதுகிறார்கள். என்னுடைய உள்ளக்கிடைக்கையும் வேட்கையும் என்னவென்றால் அந்தப் பெண்களுடைய எழுத்துக்களை அவர்களுடைய மொழியை புரிந்துகொண்டு வாசிப்பதற்கான பயிற்சி வந்தால் பெண்கள் இன்னும் எழுத ஆரம்பிப்பார்கள். நிறைய பெண்கள் வருவார்கள்.

தி: எழுத்தைக்கூட இறுதியாக தீர்வு செய்வது சமூகம்தான். சமூகம் எந்த அளவுக்கு தகுதி படைத்ததோ அந்த அளவுக்குத்தான் அதற்கு இலக்கியங்கள் கிடைக்கும். ‘சங்கப்பலகை’யின் சார்பாக உளமார்ந்த நன்றி.

***

தொடர்புடைய சில சுட்டிகள்:
1 : இஸ்லாமும் தமிழிலக்கியமும் / முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

2 : சித்தி ஜூனைதா பேகம்

3 : சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ பற்றி நாகூர் ரூமி

4. நாகூர் ரூமி மொழிபெயர்த்த ஹோமரின் ‘இலியட்’ பற்றி பர்வீன் சுல்தானா

5. தமிழில் சிறுபான்மை இலக்கியம் – ஜெயமோகன்

6. பல்சந்தமாலை பற்றி – நாகார்ஜுனன்

சித்தி ஜூனைதா பேகம் – கனவுலகும் படைப்புலகும்

sithijunaithabegam.jpg 

சித்தி ஜூனைதா பேகம் – கனவுலகும் படைப்புலகும்

அ. வெண்ணிலா

(உயிர் எழுத்து – ஆகஸ்ட் 2007)

சித்தி ஜுனைதா பேகம் – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி. 1917-ஆம் ஆண்டு பிறந்தவர். 81 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர். பன்னிரெண்டு வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டவர். நான்கைந்து ஆண்டுகளே நீடித்த இவரின் திருமண வாழ்க்கையின் பலன் நான்கு குழந்தைகள். பதினேழு வயதிற்குள்ளேயே விதவையான இவருக்கு வழக்கமான பெண்களைப் போல வாழ்க்கை ஒடுங்கிப் போய்விடவில்லை. சித்தி ஜூனைதா பேகம் எழுத்தாளராயிருந்தார். அவருடைய கல்வித்தகுதி மூன்றாம் வகுப்பு.

தாத்தா மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர்,  தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். நாகை நகரசபை துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு தலைமுறைகளாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட குடும்பத்தினராக இருந்த காரணத்தினால் வழக்கமான குடும்பங்களை விட இறுக்கம் குறைவாக இருந்திருக்கலாம். வண்ணக் களஞ்சியப் புலவர் பெருமானின் குடும்ப வழித்தோன்றலாகத் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அறிமுகம் செய்கிறார்: ‘எங்கள் குடும்பத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித்திறமை எல்லாம் உண்டு’

குடும்பத்தின் இலக்கிய ஆளுமைகளாக அவர் சுட்டும் எல்லோரும் ஆண்களாக இருக்கலாம். காரணம், சித்தி ஜூனைதா மட்டுமே எழுத வந்த முதல் பெண் என குறிப்புகளில் காண முடியும். இத்தனை இலக்கிய ஆளுமைகள் இருந்தும் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் ‘எந்தப் பெரியவர்களும் என்னை எழுதத் தூண்டியதில்லை; துணை செய்ததுமில்லை. எப்போதும் எனது சொந்த முயற்சியும் ஆவலும்தான்’ என்கிறார். தூண்டல் நிகழாமல் போனதற்கு எண்ணிறந்த காரணங்கள் இருந்திருக்கலாம். பெண்ணாயிருப்பது உட்பட. ஆனால் அவர் எழுத்திற்கு எந்தத் தடையும் குடும்பத்தினரால் உண்டாக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க மேடைகளில் ஆவலாதிகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் சிலர் இவரின் தெளிவைக் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம்.

தன்னுடைய 21-ஆம் வயதில் அவர் எழுதிய முதல் நாவல் ‘காதலா ? கடமையா?‘ 1938-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இச்சரித்திர நாவல் இஸ்லாமிய உலகில் ‘காதல்’ என்ற வார்த்தைக்காகவே பெரும் கண்டனத்தைக் கண்டிருக்கிறது. கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல். ஒன்றுபோல் உருவ ஒற்றுமை கொண்ட இரு இளைஞர்கள், ஒருவர் இளவரசர், மற்றொருவர் சாதாரணக் குடிமகன். இளவரசி ஒருவர். வழக்கம்போல் இடம் மாறுதலும், காதலும், சண்டையும் நடைபெறுகிறது. இறுதியில் காதலா கடமையா என்ற கேள்வி வருகையில் தனி நபர் சுகத்தை விட பொதுமக்களின் நலம் கருதும் கடமையுணர்வே உயர்வானது என்ற சுபம். திருப்பமான காட்சிகளும் சுவாரசியமான சம்பவங்களும் என நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ‘எழுத வந்துள்ள மகமதியப் பெண்’ என உ.வே.சா முன்னுரையில் பாராட்டுகிறார்.

சரித்திர நாவலாக இருந்தாலும் சமகால சீர்திருத்தக் கருத்துக்களைக் கதாபாத்திரத்தின் மூலம் முன்வைக்கிறார். குறிப்பாக அனைவருக்கும் கல்வியறிவு, சமத்துவம் இதனோடு பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல் என்பதையும் குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பெண்களுக்குக் கல்வியறிவு வழங்க இன்னும் போதிய முன்னுரிமை தராத காலத்திலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன் அவர் முன்வைத்துள்ள கருத்து அவரின் தெளிவைக் காட்டுகிறது.

1947-இல் வெளிவந்த ‘சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல்’ என்ற நாவல் இஸ்லாமியர்கள் நடத்திய மதமாற்ற நடவடிக்கையை எதிர்த்தும், இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போரிடும் அப்பா, மகனைப் பற்றிப் பேசுகிறது. தந்தையைக் கொன்றவனையே காப்பாற்றும் மானிட உணர்வையும், அதே நேரத்தில் தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரபார்ந்த வீரத்தையும் முன்னிறுத்துகிறது சண்பகவல்லி பாத்திரம். இறுதியில் தன் நாட்டை ஆக்ரமிக்கும் வஜீர் அப்பாஸை மணந்து சலீமாவாக மாறுகிறார்ள். அவள் குழந்தை ‘முகமது ரஷீத்பே’வாக மாறுகிறது. பல்வேறு வரலாற்றுச் செய்திகளின் பின்புலத்தில் இக்கதை நாவலாக்கப்பட்டுள்ளது.

சித்தி ஜூனைதா பேகம் எழுதிய சில கட்டுரைகள் தொகுக்கப்பெற்று ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற நூலாகியிருக்கிறது. இஸ்லாம் மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்ணென்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘அடக்கம், பொறுமை, தியாகம், தொண்டு முதலிய இயல்பாக அமைந்த ஒன்றே பெண் என்பது’ என்கிற மரபார்ந்த பெண் பற்றிய பார்வையில் இருந்து எந்த மாற்றுக் கருத்தையும் உட்கொள்ளாத பார்வை இது கூடவே ‘பெண்ணில்லையேல் உலகில் அழகேது? நீலவானத்தில் திங்கள் போலவும் பாலைவனத்தின் பசுஞ்சோலை போலவும், மலரின் நிறம் போலவும், மலரின் நிறம் போலவும் பெண்ணெனும் அழகு உலகை அழகு செய்கிறது’ என்கிறார்.

பெண் உரிமைகளைப் பற்றிப் பேச நேரிடுகையில் ‘பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளுள் முக்கியமானது சொத்துரிமையாகும். அவர்தன் கணவனது அனுமதி, மற்றவரது அனுமதியின்றி, தன் சொத்தை தான் நினைத்தபடி செய்து கொள்ளலாம்’ என்கிறார். இன்றுவரை சாத்தியப்பட்டுள்ளதா இவ்வுரிமை என்பது கேள்விக்குறி.

‘இஸ்லாத்தில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இல்லை’ என்கிறார். ஆனால் ஆண் வன்மையுடையவன், பெண் மென்மையுடையவள் என்ற தன்னுடைய கருத்தைக் கொண்டு, அவரே இஸ்லாத்தின் நீதிக்கு விதிவிலக்கு அளித்துவிடுகிறார். ‘ஆண்மகன்; ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை அடையலாமே, பெண்ணுக்கு ஏன் அந்த உரிமை வழங்கப் படவில்லை?’ என்ற கேள்விக்கு முதலில் அத்தகைய உரிமை பெண்களுக்குமுண்டு என்று இறைவன் கூறுவதாக தன் வாதத்தை முன்வைக்கிறார். உடனே மறுப்பாக ‘ஆண்மகன் வல்லியல்பு வாய்ந்தவன், பெண்மகள் மெல்லியல்பு வாய்ந்தவள். எனவே அவரவர் உடல் அமைப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப கடமைகளும் உரிமைகளும் மாறுபட்டிருக்கலாம். ஒரே சமயத்தில் நான்கு கணவரை ஒரு பெண் பெற்றிருப்பாளாயின் அவள் தன் நிலை என்னாகும். பிறக்கும் குழந்தையின் பொறுப்பை எந்தக் கணவன் ஏற்றுக் கொள்வான்? இன்னும் வெளியில் கூறத்தகாத பல்வேறுபட்ட கேலிக்கூத்துக்கும் அவள் ஆளாக வேண்டிவரும்’ என பெண்ணின் பலதார மண உரிமையை மறுக்கிறார்.

‘ஒருத்தியிடம்தான் ஒருவனுக்கு உள்ளன்பு ஏற்பட முடியும்’ என ஒருவனுக்கு ஒருத்தி தத்துவத்தை முன்னிறுத்த வரும் அவர் உடனே, ‘எதற்கும் விதிவிலக்கு உண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத , விலக்க முடியாத ஏதோ ஒரு காரணம் பற்றியோ ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம் என்கிறார். உடன், ‘ஒருவன் தன் சமூக நலம் கருதியோ இனநலம் கருதியோ அல்லது அரசியல் நலம் கருதியோ பல பெண்களை மணக்கலாம்’ என்கிறார். தன் காலத்தை ஒட்டி சிந்திக்கும் கட்டாயமும், பெண்களுக்காக அதை மீறி யோசிக்க வேண்டும் என்ற போராட்டமும் இவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது.

பெண்கள் சினிமா பார்க்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார். ‘ஆண்கள் பார்க்கலாமென்றால் பெண்களும் பார்க்கலாம்’ என்கிறார். சிந்தையைக் கலைக்கும் படங்களை ஆண் பெண் இருவரும் பார்க்கக்கூடாது என்ற பொதுவான நியாயத்தையும் கூறுகிறார். சினிமா பித்தால் கணவன், குழந்தை, குடும்பம் எதையும் கவனியாது குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றனர் பெண்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

பெண்கள் சமையல் கலையில் தேறவேண்டும். காரணம், உன்னத உணைவைக் குடும்பத்தினருக்கும் பிறர்க்கும் பதமாகச் சமைந்தளிக்கும் பாக்கியம்  இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்துள்ளது என்று நம்புகிறார். அதனால்தான் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற வரியில் அடுப்பூதும் என்ற சொல் சுட்டும் இழிவைக் கண்டு கோபப்படுகிறார். தாய்மையும் சமையற்கலையும் பெண்ணுக்கு மிக அவசியமான அம்சங்களாக முன்னிறுத்தும் இவர், ‘இவர்கள் தம் காலமும் பொழுதும்  பேறு காலத்திலும் சமையலறையிலும் கழிக்கப்படும்போது இவர்கள் மனம் ஏனைய மாற்றங்களில் எங்ஙனம் செல்லும்? எனப் பெண் , கல்வியில் ஆர்வம் இல்லாதிருப்பதை சுட்டுகிறார். பழமையிலிருந்து புதுமைக்கு முழுமையாகத் தன் சிந்தனையை நகர்த்திக் கொள்ள இயலாத தடுமாற்றங்கள் ஆங்காங்கே உள்ளன.

பெண் ஆணைத் தொழலாமா என்ற கேள்விக்கு மனிதனை மனிதன் தொழலாம் என்றால் பெண் ஆணைத் தொழலாம் என்கிறார். மனிதனை மனிதன் தொழுவது இழிவு; அப்படியென்றால் பெண்ணும் ஆணைத் தொழத் தேவையில்லை என்கிறார். வள்ளுவரை சுட்டிக் காட்டி கணவர்கள் மனைவிகளின் வணக்கத்திற்கு ஏற்றவராக இருந்தால் அவரைப் பெண்கள் தொழலாம் என்கிறார். இலட்சியக் கணவர்களை உண்டாக்கி விடலாம் என்ற பேராசையாகக் கூட இருக்கலாம்.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் முதல் பெண் எழுத்தாளராக அறிமுகமானவர் சித்தி ஜூனைதா பேகம். குறைந்த கல்வியறிவும், கொஞ்சமும் நிகழாத இலக்கியச் சந்திப்புகளும் அற்று அவர் தன் சூழலில் இருந்து எழுத்துக்களை முன்வைத்துள்ளார்.

நாவல்களைப் படைக்கும்பொழுது அவருக்குள் எழும் சம்பவக் கோர்வைகளும் கதாபாத்திரங்களின் படைப்புகளும் அவரை அனுபவமிக்க எழுத்தாளராக முன்னிறுத்துகிறது. நாவல்களில் இடையிடையே கூறப்பட்டுள்ள இலக்கிய உதாரணங்கள் அவரைத் தேர்ந்த தமிழிலக்கிய வாசிப்பாளராகவும் காட்டுகிறது. கவிதை உலகில் பாரதிவரை உதாரணங்களை அடுக்குகிறார்.

மதம் சார்ந்த கருத்துக்களில் அவர் வாழ்க்கை முறையை ஒட்டி மிகவும் உயர்நோக்கு தன்மையிலேயே அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன. அவர் தன்னை நிறைந்த இறைப்பற்றாளாராக உருவாக்கிக் கொண்டதும் ஒரு காரணாமாயிருக்கலாம்.

பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் உரிமை குறித்து தன் வாழுங்காலத்தை மீறிய சிந்தனைகள் அவரிடம் இருந்தால் சில இடங்களில் நிறுவ அவர் முயன்றுள்ள போதிலும் அவருடைய மரபார்ந்த சிந்தனை மறுப்பையும் எழுப்பியுள்ளது. தான் வரையும் சித்திரத்தை அழித்தழித்து எழுதும் ஓவியன் போல.

சமகால நிகழ்வுகள் பற்றியும் , இவருடைய சமகால படைப்பாளிகள் குறித்த பாதிப்புகளையோ இவருடைய படைப்புகளில் காணக் கிடைக்கவில்லை. உ.வே.சாவை சென்றடைந்த இவர் பாரதிதாசனையும் பெரியாரையும் உள்வாங்கியுள்ளாரா என்ற பதிவுகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து இதழ்களில் எழுதுபவராகவும், நூல்களை வாசித்தபடி இருப்பவராகவும் இருந்துள்ளமையால் இந்தக் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

1960களின் இறுதிவரை , எழுதும் பெண்கள் என்றாலே ஓரினத்தைச் சார்ந்த பெண்களின் பெயர்களையே பட்டியலிட்டுக் கொண்டிருக்க வேண்டிய சமூக
நிலையில் , மாற்று எழுத்தை முன்னிறுத்திய , மாற்று இனத்தைச் சார்ந்த இரண்டு பெண்களாக இரண்டு பேரை என்றும் கொண்டாடலாம். ஒருவர் மூவலூர் ராமாமிர்தம். மற்றொருவர் சித்தி ஜூனைதா பேகம்.

**

நன்றி : அ. வெண்ணிலா மற்றும் ‘உயிர் எழுத்து’

**

சித்தி ஜூனைதா பேகம் தொடர்பாக மேலும் அறிய…

சித்தி ஜூனைதா பேகம்

sithijunaithabegam.jpg  

* 

சித்தி ஜூனைதாவின் ‘காதலா? கடமையா?’  நாவல் 

* 

ஆச்சிமா ஒரு அறிமுகம் 

நாகூர் ரூமி 

 ஆச்சிமா என்று எங்களால் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள இரண்டு நாவல்கள் மற்றும் கட்டுரைகளின் ஆசிரியை மட்டுமல்ல. உறவு முறையில் என் தாயாரின் மூத்த சகோதரியும் என் பெரியன்னையும் ஆவார். என் குடும்பத்தைப் பற்றி நானே சொல்வதா என்ற கேள்வி நியாயமானதே. அதற்கு நியாயமான பதில் உண்மையை யாரும் சொல்லலாம் என்பது மட்டுமல்ல ஆச்சிமாவின் விஷயத்தைப் பொறுத்து சொல்லவேண்டியது என் கடமையும் ஆகும் என்றே நான் நினைக்கிறேன். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அந்தக்கால இஸ்லாமிய உலகில், நாகூரிலிருந்து, புரட்சி செய்த ஒரு படைப்பாளி என்று சொன்னால் மிகையாகாது. இன்னும் ஒருபடி மேலே போய் வரலாறு படைத்தவர், படிக்காத மேதை என்று வர்ணித்தாலும் பொருத்தமானதே.இந்த சிறப்புக்கெல்லாம் காரணம் கதைகள் கட்டுரைகள் எழுதிவிட்டார்கள் என்பதல்ல. அவைகள் எழுதப்பட்ட காலம், சூழல், பின்புலம், ஆச்சிமாவின் பள்ளிப்படிப்பின்மை மற்றும் அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்ப்போமேயானால், இவற்றையெல்லாம் மீறி அவர்கள் எழுதி, தனது பெயரையும் போட்டு, தன்வீட்டு முகவரியையும் கொடுத்து, உருவப்படங்களுடன் கூடிய புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள் என்பதுதான்! ஆச்சிமாவின் துணிச்சலும் அந்த இளம் வயதிலிருந்த முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்துகிறது.அந்தக்காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதில்லை. அப்படியே எழுதினாலும் தங்கள் பெயரை வெளியிடுவதில்லை. (இந்த தகவலை எனக்கு ஆச்சிமாவே சொன்னது). அந்தக் காலத்தில் பெண்கள் செருப்பு போட்டு நடப்பது மரியாதைக் குறைவான செயலாகக் கருதப்பட்டதாம்! ‘ என்ன இது? மரியாதையில்லாம ஆம்புளைங்க முன்னாடி டக்கு டக்குன்னு செருப்பு போட்டுகிட்டு நடக்குறா! ‘ என்று பேசுவார்களாம்! (இந்த தகவல் ஆச்சிமாவின் மூத்த மகளார் சொன்னது).
என்னுடைய பாட்டியார் செல்லம் என்கிற அலிமுஹம்மது நாச்சியார்தான் நாகூரில் முதன் முதலில் ஹைஹீல் செருப்பு போட்டு நடந்தது என்று சொல்லப்பட்டபோது இதில் என்ன உள்ளது என்று நான் அப்போது நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது செருப்பின் மீதிருந்த வெறுப்பின் வரலாற்றுப் பின்னனி ! அப்படிப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களுக்கு கொடுக்கப்பட்ட செருப்படிதான் ஆச்சிமாவின் படைப்புக்கள்.இந்த துணிச்சல், தமிழறிவு, இலக்கிய அறிவு, ஆன்மீகத்தேடல் இவற்றின் வேர்கள் எங்கிருந்தன என்ற குறிப்பையும் எனக்குக் கொடுத்தது ஆச்சிமாவின் பேச்சும் எழுத்தும்தான். அதைப் புரிந்துகொள்ளுமுன் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை சற்று தெரிந்து கொள்வது பயனளிக்கும்.
பிறப்பும் வளர்ப்பும்

  

ஆச்சிமா பிறந்தது கி.பி. 1917 ஆம் ஆண்டு. மாதம் நாள் கிழமை போன்ற தகவல்கள் இல்லை. நாகூர் தெற்குத்தெருவில் ஆச்சிமாவின் வளர்ப்புத் தாயார் வீட்டில் பிறந்தார்கள். தந்தையார் பெயர் எம். ஷரீப் பெய்க். தாயார் முத்துகனி. (பொதுவாக முத்துகனி என்பது கூப்பிடும் பெயர்தான். உண்மையான பெயர் என்னவென தெரியவில்லை. ஃபாத்திமுத்து என்பதன் மரூஉவாக அது இருக்கலாம் என்பது என் யூகம் ). 

ஆச்சிமாவின் கூடப்பிறந்தவர்கள் நாலு பேர். மூத்தவர் ஆச்சிமா. இரண்டாவது சகோதரர் ஹூசைன் முனவ்வர் பெய்க். இவர் படித்தவர். அந்தக்காலத்தில் போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்தவர். இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் பலமொழிகள் அறிந்த அறிஞருமாவார். ஆச்சிமாவின் வரலாற்று புதினமான சண்பகவல்லிதேவிக்கு முன்னுரை வழங்கியிருப்பவரும் இவரே. 

ஒருமுறை தைப்பொங்கல் பற்றி நாகூருக்கு பேசவந்திருந்தார் அறிஞர் அண்ணா. அந்தக் கூட்டத்தில் பேசிய முனவ்வர்பெய்க் அவர்கள் தைப்பொங்கலைப் பற்றி அரைமணி நேரம் கவிதை நடையில் ஒவ்வொரு வாக்கியமும் தை தை என்று முடியுமாறு பொங்கலைப் பற்றிய அத்தனை கருத்துக்களையும் பேசினாராம். அதைத்கேட்ட அறிஞர் அண்ணா, இப்படி ஒரு அறிஞர் உங்கள் ஊரில் இருக்கும்போது என்னை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லி தனக்கு போடப்பட்ட மாலையை எடுத்து முனவ்வர் பெய்க் கழுத்தில் அணிவித்து கௌரவித்தாராம். 

பிரதமர் ஜவாஹர்லால் நேரு அவர்கள் இறந்தபொழுது வானொலியில் கொடுக்கப்பட்ட நேரடி ஆங்கில வர்ணனையை அவர் தமிழில் எங்களுக்கெல்லாம் மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. (அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்). இந்த முனவ்வர் பெய்க் அவர்கள் ஆச்சிமாவின் சகோதரர் மட்டுமல்ல, ஆச்சிமாவின் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

மூன்றாவதும் ஒரு சகோதரர். முஜீன் பெய்க். இவர் காரைக்காலில் பால்யன் என்ற ஒரு பத்திரிகைளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது. 

அடுத்து பிறந்த இரண்டு ஆண்குழந்கைளும் இறந்துவிட்டனராம். எந்த வயதில் என்று தெரியவில்லை. ஆச்சிமா வளர்ந்தது, வாழ்ந்து மறைந்தது எல்லாம் நாகூர் தெருப்பள்ளித்தெருவில்தான். தற்போது அவர்களுடைய இரண்டு மகளார்கள் மற்றும் பேத்தி பேரன்மார்கள் வாழ்ந்து வருவதும் அந்த வீட்டில்தான். 

படிப்பு 

ஆச்சிமா படிக்கவில்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தாலும் தந்தை அனுமதியோடு மூன்றாவது வரை தன் தெருப்பள்ளித் தெரு வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படித்ததாம். அதற்குமேல் படிக்க தாயார் அனுமதி தரவில்லையாம் ! (இந்த தகவலை தந்தது ஆச்சிமாவின் மூத்த மகளான எங்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் சித்தி ஹமீதா அவர்கள்.) 

இது ஒரு சோகமான விஷயம்தான். என் தாய்வழிப் பாட்டனாராகிய ஆச்சிமாவின் தந்தையார் படித்தவரா என்று தெரியாது. ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர். அந்தக் காலத்திலேயே நாகூரில் நெல்சன்ஸ் என்சைக்ளோபீடியா படித்துக்கொண்டிருந்தவர்! (என் சின்னம்மாகூட அதன் பக்கங்களைக் கிழித்து கிழித்துதான் அடுப்பெரிக்க பயன்படுத்தியது!) ஒரு ஆங்கிலேய கப்பலின் கேப்டனாக வேலை பார்த்தவர். அவருடைய ஆங்கில எழுத்துக்கள் கர்சிவ் ரைட்டிங்கில் ப்ரின்ட் எடுத்த மாதிரி இருக்கும். அவருடைய ஒரு கடிதம்கூட இப்போது என் கையில் கிடைக்காதது துரதிருஷ்டமே. 

இதில் விஷேஷம் என்னவெனில், இந்த அளவு படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்த ஒரு தந்தையாக இருந்த போதும் மூன்றாவதுக்கு மேல் படிக்க வைக்க அவரால் முடியவில்லை. அல்லது முதல் மனைவியின் விருப்பத்தை மீறமுடியவில்லை! இந்த சவால்களையெல்லாம் மீறித்தான் ஆச்சிமா தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. 

இது எப்படி சாத்தியமானது என்று நான் பலமுறை யோசித்துள்ளேன். வெறும் தூண்டுதல்கள்களால் இவ்வளவு செய்ய முடியுமா என்ற கேள்வி நிற்கிறது பதிலில்லாமலே. தனக்குத் தூண்டுதல் தானேதான் என்று ஆச்சிமாவும் பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு பதில் விதி என்று வைத்துக்கொள்வதா? விதியை விட சிறப்பான பதில் ஒன்று உண்டு. அதுதான் பரம்பரை வித்து என்பது. பல காலமாக தொடர்ந்து ஊறிக்கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது. 

ஆச்சிமா தன்னை வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை எனவும் டெல்லியில் அடக்கமாகியுள்ள ஷாஹ் ஒலியுல்லாஹ் என்ற இறைநேசச் செல்வரின் பௌத்திரி என்றும் எப்பவும் சொன்னார்கள்.( பார்க்க காதலா கடமையா தலைப்புப் பக்கம்). முதலில் வண்ணக்களஞ்சியப் புலவர். யார் இவர்? 

பல்லவி 

மனமே வாழ்வைச் சதமென் றனுதினம் நபிபதம்
வாழ்த்தா திருந்தாய் மனமே 

சரணம் 

நண்ணும் திருமதினத் தண்ணல் அப்துல்லா பெறும்
நாத ராமகு முதர்
வண்ணக் களஞ்சியமும் விண்ணோரெவரும் துதி
வணங்கும் கமலப் பாதர்
கண்ணீர் பெருகிவரும் அந்நாள் மகுஷரிலே
காப்போ ரவரல்லாமல் தீர்ப்போம் துயரமெவர் 

இது வண்ணக் களஞ்சியத்தின் வண்ணங்களில் ஒன்று. பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடியதால் அவருக்கு வண்ணக் களஞ்சியம் என்ற கௌரவப்பட்டத்தை நாகூர் வாழ்ந்த கவிஞர்கள் அளித்தனர். இவரது இயற்பெயர் சையது ஹமீது இபுராஹீம். இவர் ராமநாதபுரத்திலுள்ள மீசல் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் நாகூர் வந்து சில காலம் வாழ்ந்து பின் மீசல் திரும்பி அங்கேயே இந்த உலக வாழ்வை நீத்து அடக்கமானவர். 

அவர் நாகூரில் வாழ்ந்த காலத்தில் நாகூருக்குப் பக்கத்தில் உள்ள பிறையாரு (பொறையார்) என்ற ஊரின் பதாயி மரைக்காயர் என்ற செல்வந்தரின் குடும்பத்தில் பெண் கேட்டு, முதலில் இவரின் வறுமை காரணமாக மறுக்கப்பட்டு பின் பதாயி மரைக்காயரின் செல்வம் மர்மமான முறையில் சரிவடைந்து இதன் காரணம் கவிஞரை மனவருத்தப்படுத்தியதே என்பதை உணர்ந்து பின் பதாயி மரைக்காயரே நாகூர் தர்காவிற்கு வந்து அங்கே நாகூராரிடம் முறையிட்டுக்கொண்டிருந்த வண்ணக் களஞ்சியத்தை தனது மருமகனாக்கிக் கொண்டார் என்பது வரலாறு. இது நாகூராரின் அற்புத சக்திக்குச் சான்றாகவும் அந்தக்கால கவிஞர்களின் பெருமைக்குச் சான்றாகவும் பதியப்பட்டுள்ளது. அறம்பாடி அற்புதங்கள் செய்த ஜவ்வாதுப்புலவரும் வண்ணக் களஞ்சியமும் சமகாலத்தவரே. நாகூரிலேயே வாழ்ந்தவர்களும்கூட. 

வண்ணக்களஞ்சியப் புலவருக்கு ஒரு சிறப்பு உண்டு. தமிழ்ப்புலவர்களில் காப்பியம் இயற்றியவர்கள் ஒரு சிலரே. கம்பன் இளங்கோ போன்றவர்கள் காப்பியங்கள் இயற்றியிருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு காப்பியம்தான் இயற்றியுள்ளனர். 

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்;ட காப்பியங்களை தமிழில் இயற்றிய பெருமை மூன்று முஸ்லிம் புலவர்களைச் சேரும். ஒருவர் ஷெய்குனாப் புலவர் என்று அறியப்பட்ட சையது அப்துல்காதிர் நய்னாப் புலவர். இவர் நான்கு காப்பியங்கள் இயற்றியுள்ளார். இன்னொருவர் நாகூர் மஹாவித்வான் வா.குலாம் காதிரு நாவலர். இவர் மூன்று காப்பியங்கள். மூன்றாவது வண்ணக் களஞ்சிய ஹமீதுப்புலவர். இவரும் மூன்று காப்பியங்கள் இயற்றியுள்ளார். (1) இராஜ நாயகம். இது நபி சுலைமான் அவர்களைப் பற்றியது. (2) குதுபு நாயகம். (3) தீன் விளக்கம். இது தனது மூதாதையரும் ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள இறைநேசருமான சையிது இபுராஹீம் ஷஹிது வலியுல்லாஹ்வைப் பற்றியதாகும். இதுவன்றி அலி பாதுஷா நாடகம் என்று ஒரு நாடகத்தையும் இயற்றியுள்ளார். அவருடைய காப்பியமான இராஜநாயகத்திலிருந்து ஒரு கடவுள் வாழ்த்து : 

ஆரணத் தினிலகி லாண்ட கோடியி
லேரணக் கடல்வரை யினின்மற் றெங்குமாய்
பூரணப் பொருளெனப் பொருந்ருமோர் முதற்
காரணக் கடவுளை கருத்திருத்துவாம் 

இப்படி காப்பியங்களும் வண்ணங்களும் இயற்றிய புலவரின் பரம்பரை ஆச்சிமாவுடையது. வண்ணக்களஞ்சியப் புலவர் நாகூரைச் சேர்ந்தவரல்லவாகையால் அவர் திருமணம் புரிந்த வகையில்தான் ஆச்சிமாவின் முன்னோர்கள் இருந்திருக்க முடியும். இது இலக்கிய வேர். 

ஆன்மீக வேரொன்று உண்டு. அது ஷாஹ் ஒலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களிடமிருந்து வருகிறது. இவர்கள் டெல்லியில் அடக்கமாகியுள்ள இறைநேசரும் மார்க்க அறிஞரும் ஆவார்கள். அவர்கள் எழுதிய ஹூஜ்ஜதுல்லாஹுல் பாலிகா என்ற நூல் இன்றுவரை உலக அறிஞர்களால் இஸ்லாமிய சட்டதிட்;டங்கள், திருமறை, ஹதீது மற்றும் ஆன்மீக விஷயங்களுக்கான விளக்கங்களுக்கு ஆதாரப்பூர்வமான நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஃபௌஜூல் கபீர் என்பது அவர்களுடை இன்னொரு நூலின் பெயர்.இந்த நூலை ஆச்சிமா தனது முதல் நாவலின் தலைப்புப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இறைநேசரின் பேத்தியின் பேத்தி (பௌத்திரி)என ஆச்சிமா தன்னை அடையாளம் காண்கிறார்கள். ஆச்சிமாவின் சிறிய தந்தையாரின் பெயரும் ஷாஹ் வலியுல்லாஹ் என்பதேயாகும். 

ஒரு பக்கம் தூய இலக்கியம். இன்னொரு பக்கம் தூய மார்க்கம் மற்றும் ஆன்மீகம். ஆச்சிமா அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தொகுக்கப் படாமலும் வெளியிடப்படாமலும் உள்ளது. அவற்றில் பல ஆன்மீகச் செல்வர்கள் பற்றிய கட்டுரைகள். உதாரணமாக நாகூரில் அடங்கியுள்ள காதிர்வலி பற்றி திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு : பெருமானார் ஷாஹூல் ஹமீதின் பேரின்ப வாழ்க்கை என்ற பெயரில் ஒரு சிறு நூலே எழுதியுள்ளார்கள் ஆச்சிமா.மேலும் இறைநேசர்கள் ஹசன் பசரி பற்றியும் ராவியதுல் பசரியா பற்றியும் நீண்ட கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். இது ஆச்சிமாவின் இன்னொரு பரிமாணம். இன்னும் வலுவாக அறியப்படாதது. இஸ்லாமும் பெண்களும் கட்டுரைத்தொகுப்பில் அறச்செல்வி ராபியா என்ற ஒரு கட்டுரை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

இலக்கியமும் ஆன்மீகமும் கலந்த இந்த பாரம்பரியம் ஆச்சிமாவோடு முடிந்து போய்விடவில்லை. இந்த காலக்கோட்டில் ஆச்சிமா நடுவில் வருகிறார்கள் என்று சொல்லலாம். ஆச்சிமாவுக்கு முந்திய பெரும்புள்ளிகளாக வண்ணக் களஞ்சியப் புலவரும் ஷாஹ் வலியுல்லாஹ்வும் உள்ளார்கள் என்றால் ஆச்சிமாவுக்குப் பின்னும் சிலர் எங்கள் குடும்பத்தில் இலக்கியம் மற்றும் கலைத்துறைகளில் பங்காற்றிக்கொணடும் மிளிர்ந்து கொண்டும்தான் உள்ளார்கள். 

எனது தாய்மாமா முராது பெய்க் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர். அவருiடைய கம்பீரமான குரலும் பேச்சு வன்மையும் கேட்பவரை வேதனை மறந்து சிரிக்க வைக்கும். 

இன்னொரு தாய்மாமா அக்பர் அவர்கள். தூயவன் என்ற பெயரில் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து முத்திரைக் கதைகள் எழுதி பரிசு பெற்று அந்தக் கால சினிமா சூபர் ஸ்டார்களான ஏவிஎம் ராஜன் போன்றோரால் அணுகப்பட்டு பால்குடம் என்ற படத்தின் மூலம் சினிமாத் துறைக்குவந்து பின் திரைப்பட வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர். 

ஆட்டுக்கார அலமேலு, பொல்லாதவன், மனிதரில் மாணிக்கம் போன்ற படங்களுக்கு வசனம் அவரே. வைதேகி காத்திருந்தாள் (விஜய காந்துக்கு திருப்பு முனையாக அமைந்த படம்), அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற படங்கள் அவருடைய சொந்த தயாரிப்புகளே. அவற்றில் சில படங்களுக்கு (உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் )வசனமும் அவரே. தன்னிடத்திலே பணிபுரிந்த பாக்யராஜ் போன்றவர்களை பாரதிராஜாவிடம் அறிமுகப் படுத்தியவரும் அவரே. 

இன்னொரு தாய்மாமா கவிஞர் நாகூர் சலீம். இவர் கிட்டத்தட்ட மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இஸ்லாமிய பாடகர்கள் பல பேரை இவர் உருவாக்கியுள்ளார். ஆரம்ப காலத்து ஈ எம் ஹனிபா பாடல்கள் மற்றும் புகழ்பெற்ற ஷேக் முகம்மது பாடிய ‘ தமிழகத்து தர்காக்களை ‘ என்ற பாடலையும் இயற்றியவர் இவரே. சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி பட்டமும் வழங்கப்பட்டார். இவர்களெல்லாம் ஆச்சிமாவின் சகோதரர்கள் என்பது சொல்லாமலே விளங்கியிருக்கும். இதில் ஒரு வேடிக்கையான ஒற்றுமை என்னவெனில் மேற்கூறிய மூன்று தாய்மாமாக்களுமே பள்ளிப்படிப்புக்கு மேல் போகாதவர்கள் ! 

கடைசியாக என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். நதியின் கால்கள் என்றொரு கவிதைத் தொகுதியும் குட்டியாப்பா என்றொரு சிறுகதைத் தொகுதியும் ஸ்நேகா வெளியீடாகவே வந்துள்ளன. நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் குட்டியாப்பா என்ற சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியீடாக பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஆச்சிமா என்ற ஆலமரத்தின் வேர்கள் மற்றும் கிளைக் கொழுந்துகளின் வரலாற்றுச் சுருக்கம் இது. 

திருமணம் 

ஆச்சிமாவுக்கு திருமணம் நடந்தபோது அவர்கள் வயது பனிரண்டு ! பால்ய விவாகம் மாதிரிதான். கணவர் பெயர் ஏ. ஃபகீர் மாலிமார். இவர் ஆச்சிமாவின் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் சகோரதரர் ஆவார். ஃபகீர் மாலிமார் ஒரு அற்புதமான மனிதர் என்றும், எனினும் ஆச்சிமா கற்பனை செய்து வைத்திருந்த லட்சிய கணவரல்ல என்றும் அம்மாவும் ஆச்சிமாவின் பேத்தியும் சொன்னார்கள். அவர் நாகூரிலேயே ஒரு மளிகை கடைவைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். பின் சில வருடங்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள பூலோசாம்பு என்ற தீவுக்கு சென்றாராம். ஓரிரு முறை வெளிநாட்டிலிருந்து திரும்பியும் வந்திருக்கிறார். ஆனால் அவர் அங்கேயே இரண்டாவது உலகப்போரின்போது பெரிபெரி என்ற நோய்வாய்ப் பட்டு இறந்து போனார்.(தகவல் அம்மா). 

குழந்தைகள் 

ஆச்சிமாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்தவர் பொன்னாச்சிமா என்றழைக்கப்பட்ட சித்தி ஜபீரா. இரண்டாவது சித்தி ஹமீதா (அம்மா). மூன்றாவது சித்திமா என்றழைக்கப்படும் சித்தி மஹ்மூதா. நான்காவது சித்தி சாதுனா (இறந்து விட்டார்). முதலிரண்டு குழந்தைகள் கணவர் நாகூரிலிருந்தபோது பிறந்தவை. மற்றவை அவர் வெளிநாடு சென்று திரும்பி வந்து போனபோது. 

ஆச்சிமாவின் திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகள்தான். தனது இளமைப் பருவத்திலேயே விதவையாகிவிட்டார். எனினும் தனது குழந்தைகளை 11வது வகுப்புவரை படிக்க வைப்பதற்காக, நாகூரில் இருந்த தனது வீட்டை விட்டுவிட்டு நாகப்பட்டினம் சென்று — அங்கேதான் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளும் இருந்தன — வாடைகை வீட்டில் தங்கி படிக்கவைத்தார் அந்த விதவை என்பது குறிப்பிடத்தக்கது.(தகவல் அம்மா). 

சித்தி என்ற பெயர் 

சித்தி ஜூனைதா பேகம், சித்தி ஹமீதா என்று எல்லாம் சித்தி சித்தி என்று வருகிறதே இது என்ன சித்தி ? ராதிகாவின் மெகாசீரியலாக உள்ளதே என்று ஒரு நண்பர் கிண்டலாகக் கேட்டார். இது தமிழ் சித்தி அல்ல அரபி சித்தி. என் தாயாரின் பெயர்கூட சித்தி ஜெமீமாதான். சித்தீக் என்றால் அரபியில் உண்மையாளர் என்று பொருள். அதன் பெண்பால்தான் சித்தி. அதே பொருள்தான் இங்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார்களுக்கு இந்த பெயர் இருந்தது. சித்தி ஜைனப், சித்தி உம்மு குல்சும் என்று இரண்;டு மகளார்களின் பெயர்களிருந்தன என்று சஹீஹில் புகாரி கூறுகிறது. எனவே சித்தி என்று பெயர் வைப்பது சுன்னத் (நபி வழியை பின்பற்றுதல்) ஆகிறது. 

எழுத்து 

ஆச்சிமா எழுத ஆரம்பித்தது திருமணத்திற்குப் பிறகுதான். அல்லது விதவையான பிறகு என்றுகூடச் சொல்லலாம். தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்தார்கள். கட்டுரைகள் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் முதலில் நாவலுக்கே நேரடியாகப் போய்விட்டார் என்றுதான் தெரிகிறது. ஒரே தாவல்! இஸ்லாமும் பெண்களும் கட்டுரைத் தொகுப்பின் ஆச்சிமாவின் முன்னுரையை கவனமாகப் படிப்பவர்கள் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

காதலா கடமையா 

அவருடைய முதல் நாவல் காதலா கடமையா? அது உவேசா அவர்களால் முன்னுரை வழங்கப்பட்டது என்பது முக்கியமானது. புதுமைப் பித்தன்கூட தனது கடிதங்களில் ஒன்றில் ஆச்சிமாவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று என் நண்பரும் கவிஞருமான தாஜ் சொன்னார். இன்று வரை அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. 

ஆச்சிமாவின் மனக்கிடக்கையையும் பெண்களுடைய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் மிகவும் விரும்பியதையும் அந்த முதல் நாவலைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 

இந்த நாவலை எழுதிய பிறகு எழுந்த எதிர்ப்புகள் சுவாரசியமானவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுகூடச் சொல்லலாம். நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப்பள்ளித்தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம் ! சும்மா அல்ல. ஒரு கெட்டுப்போன நல்ல குடும்பத்துப்பெண்ணை விசாரிக்க வருவதுபோல! இந்த தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப்பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப் படுத்தினார்கள். ஒரு முஸ்லிம்பெண்! நாவல் எழுதுவதா?! அதுவும் காதல் என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்;சழுத்தம் வேண்டும்? 

இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் மாமா தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் நாடோடி மன்னன் படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே காதலா கடமையா நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிர நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து சுட்டுவிட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். 

மற்ற படைப்புகள் 

1. செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் – இது ஒரு சின்ன வரலாற்று நாவல். ஆச்சிமா ஆராய்ச்சி செய்து எழுதி 1947 ல் வெளியிடப்பட்டது. 

2. மகிழம்பூ – நாவல் 

3. இஸ்லாமும் பெண்களும் – கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நூருல் இஸ்லாம், செம்பிறை, ஷாஜஹான் போன்ற பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைத் தொகுப்பு. நான் 1995 ல் வெளியிட்டது. 

4. மலைநாட்டு மன்னன் – நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வந்த தொடர்கதை. 

5. ஹலிமா அல்லது கற்பின் மாண்பு 

6. பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை 

7. திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு – நாகூர் ஆண்டவர் என்று அறியப்படும் காதிர் வலீ ஷாஹூல் ஹமீது ஆண்டகை அவர்களின் வாழ்க்கை வரலாறு. நான்கே நாட்களில் அவர்களுடைய கணவரின் தூண்டுதலால் எழுதி முடிக்கப்பட்டது. 1946 ல் சிறு நூலாக வெளிவந்தது. 

8. காஜா ஹஸன் பசரீ (ரஹ்): முஸ்லிம் பெருமக்கள் வரலாறு – இஸ்லாமிய ஞானி ஹஸன்பசரி அவர்களைப்பற்றியது.நூருல் இஸ்லாம் பத்திரிக்கையில் வந்த தொடர் கட்டுரை. 

இன்னும் சில நாவல்கள் எழுதப்படாமலோ அல்லது முடிக்கப்படாமலோ இருந்திருக்கலாம். மூவாமூவர் என்றொரு நாவலுக்கான விளம்பரம் செண்பகவல்லிதேவியின் பின் அட்டையில் காணப்படுகிறது ஹலிமா அல்லது கற்பின் மாண்பு போன்ற கதைகளும் எழுதி முடிக்கப்;பட்டனவா என்று தெரியவில்லை. 

ஆச்சிமா இறந்தபிறகே அவர்கள் பெருமை எனக்குப் புரிந்தது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது இதுதான். உன் அன்புள்ள அன்னை என்று தூய தமிழில் இனி எனக்கு யார் கடிதம் எழுதப்போகிறார்கள்? 

ஆச்சிமாவுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் டைரி எழுதிக்கொண்டே இருக்கும். அவைகளை படிக்கும் வாய்ப்பும் அவகாசமும் ஏற்படும்போது எங்கள் பாரம்பரிய வரலாறு பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் ஆழமான அற்புதமான உண்மைகள் காணக்கிடைக்கும் என்று நம்புகிறேன். அவசியம் ஏற்பட்டால் அவற்றையும் பிரசுரிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆச்சிமாவின் நோய் 

ஆரம்பத்திலிருந்தே உடல்; நலக்குறைவினால் அவதிப்பட்டதாக ஆச்சிமா பேட்டியில் கூறியுள்ளார்கள். 1979 — 80 களில்தான் அவர்களுக்கு மார்புப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 1998 வரை வாழ்ந்த ஆச்சிமா தனது நோய்க்காக ஆங்கில மருத்துவத்தை நாடவில்லை. சித்த மருத்துவம் செய்து கொண்டார்கள். புகழ்பெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பலராமய்யாதான் அவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். 

ஆச்சிமா ஒரு வஸ்வாஸ். அதாவது மிகவும் அதீதமாக சுத்தம் பார்ப்பவர்களை நாங்கள் வஸ்வாஸ் என்று கூறுவோம். ஆச்சிமா அப்படிப்பட்ட ஒரு மனநிலையிலேயே வாழ்ந்தது. அடிக்கடி தனது வாய்க்குள் ஏதோ தூசி புகுந்து விட்டதைப்போல கற்பனை பண்ணிக்கொண்டு தூ தூ என்று துப்பிக்கொண்டு தன் வெள்ளைத் தாவணியால் வாயை அடிக்கடி துடைத்துக்கொண்டே இருப்பார்கள். 

இது பரவாயில்லை. ஒரு முறை வைத்தியர் மீன் ஆகாது என்று சொல்லிவிட்டார். அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஆச்சிமா அவருக்கு இரண்டு கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பியிருந்தது . 1. இளநீர் குடிக்கலாமா? 2.கிணற்று நீரை கைகால் கழுவ பயன்படுத்தலாமா? மீன் ஆகாதென்றதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே பார்க்கிறீர்கள்? சம்பந்தம் உள்ளது. அது ஆச்சிமாவுக்குத்தான் தெரியும். மீன் சாப்பிடுகின்ற ஒருவன்தானே மரத்தின்மீதேறி இளநீர் பறிக்கிறான்? அவன் கையால் பிடித்த அரிவாளால் வெட்டப்பட்ட தேங்காயினுள் உள்ள இளநீரை குடிக்கலாமா? ! 

அடுத்தது. ஆற்று நீரும் கடல் நீரும் சங்கமமாவதால் – நாகூரில் கடல் உள்ளது – அதில் உள்ள மீன்களின் மேல் பட்ட தண்ணீர்தானே கிணற்றுக்கும் வரும்? அதைப் பயன்படுத்தலாமா? ஆச்சிமாவின் சந்தேகங்களுக்கான ஆச்சிமாவின் விளக்கம் இதுதான்! 

இது கேட்ட பலராமய்யர் இனிமேல் இதுபோல் சந்தேகங்கள் வேண்டாமென்றும் இப்படியெல்லாம் சிந்திப்பதைவிட மீனே சாப்பிட்டுவிடலாம் என்று கடிதம் கொண்டுபோன என் தம்பி நிஜாமிடம் சொல்லியிருக்கிறார் நொந்து போய்! 

கடைசியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து சென்னைக்கும் போயாச்சு. இன்னும் இரண்டொரு நாளில் ஆபரேஷன். தங்கியிருந்த வீட்டில் இருந்த டி.வி.பெட்டியில் புற்று நோய் வந்த மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையைக் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆபரேஷன் வேண்டாம் என்று ஊருக்குத் திரும்பியாச்சு! புரட்சிப் பெண்ணின் மருட்சிப் பக்கம் இது! 

மறைவு 

ஆச்சிமா அவர்கள் 19-3-1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19ஃ20 ல்) இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களை எனக்குத் தந்துதவியது அவர்களுடைய மகளார் அம்மா என நாங்கள் அழைக்கும் சித்தி ஹமீதா அவர்களும், ஆச்சிமாவின் பேத்தியும் பேரர் செல்வமணி ஆஜாதும் மேலும் நாகூரின் நடமாடும் கலைக்களஞ்சியம் தமிழ்மாமணி சொல்லரசு ஜாபர்முஹ்யித்தீன் அண்ணனும் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னிடமிருந்த காதலா கடமையா நாவலின் ஒரே (ஜெராக்ஸ்)காப்பியைக் கொடுத்துதவியதும் சொல்லரசு அவர்கள்தான். அதை வைத்துத்தான் ஸ்நேகா டிடிபி செய்ய முடிந்தது. 

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளை (தமிழ் ஹெரிடேஜ் ஃபவ்ண்டேஷன்) இதை டிஜிடைஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். ஜெர்மனியின் என்.கண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது என்னிடம் ஒரிஜினல் காதலா கடமையா இருக்கவில்லை. அதிருஷ்டவசமாக நண்பரும் எழுத்தாளருமான காரைக்கால் சாயபு மரைக்காயர் தன்னிடமிருந்த ஒரேயொரு ஒரிஜினல் காப்பியைக் கொடுத்துதவினார். அவருக்கு என் நன்றியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். இப்போது அந்த ஒரிஜினல்தான் டிஜிடைஸ் செய்;யப்பட்டுக்கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியினருக்காக ஆச்சிமாவின் நாவலை ஆர்கைவில் வைத்துதவும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் என். கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். 

ஆச்சிமாவின் நாவலை எம்.ஃபில் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ள உதவியரும் மற்றும் ஆச்சிமா பற்றி ஆர்வத்தோடு எழுதியவருமான என் நண்பர் பேராசிரியர் நத்தர்ஷா அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

ஆச்சிமாவின் இரண்டு நாவல்களையும் என் சொந்த முயற்சியில் நான் வெளிக்கொண்டு வந்த கட்டுரைத்தொகுதியையும் சேர்த்து அழகான முறையில் வெளிக்கொண்டு வரும் ஸ்நேகாவுக்கும் அதன் உயிர் நாடியான திரு பாலாஜி மற்றும் திரு சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றிகள். 

ஆச்சிமா பற்றிய தகவல்களை நாகூர் பற்றிய தனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ள நண்பர் ஆபிதீனுக்கும் ஆச்சிமாவின் பேட்டியை மறுபிரசுரம் செய்த நண்பர் வெங்கடேஷ் அவர்களுக்கும் என் நன்றிகள். 

கடைசி நேரத்தகவல் 

தமிழ் மரபு அறக்கட்டளையினர் ஆச்சிமாவின் காதலா கடமையா முழு நாவலையும் அவர்களுடைய பேட்டியையும் வெளியிட்டுள்ளார்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட டாக்டர். என்.கண்ணன், சென்னை சாஃப்ட்வ்யூ இயக்குனர் ஆண்டோ பீட்டர், துபாய் எழுத்தாள நண்பர் சடையன் அமானுல்லாஹ், எழுத்தாளர் இரா.முருகன் ஆகியோருக்கு என் நன்றிகள். 

ஆச்சிமாவின் உடல் மறைந்துவிட்டது. ஆனால் மனிதரிடையே எந்த வேற்றுமையும் பாராட்டாத மகாஉள்ளம் ஆச்சிமாவுடையது. ஒரு உதாரணம் தருகிறேன். நாகூரில் ஆண்டுதோறும் கந்தூரி உற்சவம் நடைபெறும். அதை மார்க்க அறிஞர்கள் சிலர் பித்அத் (புதுமை) என்றும் ஷிர்க் (இறைவனுக்கு இணைவைக்கும் காரியம் ) என்றும் எதிர்க்கின்றனர். அதைப்பற்றி ஆச்சிமா எழுதியதை கீழே தருகிறேன் : 

‘ உலகிலே எல்லாரும் அறிவாளிகளாயும் ஞானிகளாயும் துறவிகளாயும் இருத்தல் இயலாது. பாமர உலகம் ஆடம்பரத்தை விரும்புவதியல்பு. ஆடம்பரத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், உலகம் அவர்கட்குச் சூனியமாகத் தோன்றும். அன்றியும் மற்றொரு விஷயத்தையும் நாம் ஊன்றி நோக்கல் வேண்டும். 

பணக்காரரின் வாழ்வு, எப்போதும் வேடிக்கை விளையாட்டிலும், கேளிக்கைக் கூத்திலும், வருவார் போவாரிலுமே கழிகின்றது. ஏழைகளின் வாழ்வு களியாட்டத்துக்கு இடமேயின்றி, இன்பமற்ற மந்த வாழ்க்கையாய்க் கழிகின்றதென்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். எனவே, ஆண்டொன்றுக்கு வரும் கந்தூரி, பாலைவனத்தில் உண்டாக்கப்பெற்ற பசிய பூங்காவைப் போலும், அப்பூங்காவினூடே தோண்டப்பெற்ற தெளிந்த நீரூற்றுப் போலும் அவ்வேழை மக்கள்தம் உள்ளத்தில் சிறிது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையுமளிக்கும். 

இயந்திரத்தைப்போல் சென்று கொண்டிருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் இன்பத்தேன் வந்து பாய செவ்வி ஏற்படும். சிரித்துக் களிப்பதற்கே சந்தர்ப்பமில்லாத ஏழைகட்கு, இந்தக் கந்தூரி கொண்டாட்டங்கூட இருக்கக்கூடாதென்று சொல்ல முடியுமா? எந்த வகையிலும் வீண் செலவையும் அனாச்சாரத்தையும் நிறுத்த வேண்டியதுதான். அதற்கென்று எளியவர்களுடைய களியாட்டச் சந்தர்ப்பங்களை அடியோடொழித்துவிட்டு, அவர்களது வாழ்க்கையை இன்னும் இன்பமில்லாது பாழாகச் செய்ய வேண்டுமா? 

நடுத்தர வகுப்பார்க்கும் இது பொருந்தும். இம்மாதிரி விழாக்களிலேதான் உறவினர்களையும் பழைய நண்பர்களையும் நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்க இயலும்! அவர்களையெல்லாம் அடிக்கடி சந்திப்பதென்பது முடியாததொன்று. மேலும், பலர் ஒரே சமயத்தில் சந்திப்பதும் கஷ்டமாகும். 

அன்றியும், கந்தூரி எத்தனை இலட்சக்கணக்கான மக்கட்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையுமளித்து வருகிறது ! எத்துனை சிறு குழந்;தைகள் இக்கொண்டாட்டத்தில் குதூகலத்தோடு கலந்து கொள்ளுகின்றன! அக்குழந்தைகட்கு எவ்வளவு உற்சாகம் ! 

இஃது ஒரு முஸ்லிம் விழாவாக இருப்பினும், திரளான இந்துக்களும் இதில் கலந்துகொள்ளுகின்றனர். 

இக்கொண்டாட்டத்தின்போது எங்கு நோக்கினும், உற்சாகமும் மகிழ்ச்சியுமே காணப்படும். வர்த்தகம் பெருகும். ஏழைகட்கும் ஏராளமான வரும்படி கிடைக்கும்.’ 

இது ஆச்சிமா தன் கைப்பட எழுதிய தாளிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த கட்டுரையின் பகுதி இது என்று தெரியவில்லை. இதை ஆச்சிமாவே நேரில் என்னிடம் ஒப்படைத்தது. 

ஜாதி மத பேதம்; பாராத அந்த தூய இலக்கிய ஆன்மா அவர்களது எழுத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும். எப்போதும். 

நாகூர் ரூமி 

23-6-2002 

ஆம்பூர் 

 
 

  

  


மண்ணில் மறைவது சில்லடியா ?
சித்தி ஜுனைதா பேகம்
(தமிழின் முதல் முஸ்லீம் பெண் நாவலாசிரியை)
நூருல் இஸ்லாம் 9.8.68 ல் வெளி வந்த கட்டுரை
 
 

“மாசற்ற பைம்பொன் மணிமுடி மன்னர்
தாமும் பாசத்தடைந்து பணிந்தேத்தும்
அருண்மிக்க நாகூர்த்-தேசுற்ற கோயிற்
சிறப்பெய்திய வாழுங் கோமான் – காசற்ற
வொண்பூங் கழல்யா முடிகொண்டு தாழ்வாம்”
 


புலவர் பெருமன் குலாம் காதிறு நாவலர் அவர்கள் வெண்திரை வீசும் வியன் நாகூர் அண்ணல் பெருமானார் ஷாஹ¤ல் ஹமீது ஆண்டவரவர்களைப் பற்றி உருகி, உருகி ஏத்துகின்றார். ஆண்டகையவர்கள் ஹிஜ்ரி தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டு மானிக்கப்பூரில் பிறந்தார்கள். மாணிக்கப்புர் இந்தியாவின் வட கிழக்கிலிருக்கும் அயோத்தி மாகாணத்திலுள்ளது. அயொத்தியிலுள்ள முக்கிய பட்டணங்களில் ஒன்றான அலாஹாபாத்தின் அண்மையிலுள்ளது. பெருமானார் பிறந்தது அயோத்தியிலுள்ள மாணிக்கப்பூர் அன்றென்று கருதுவாருமுளர்.
இவர்கள் ‘ஒலி’ ,’குத்பு’ என்றழைக்கபடுகின்ற இஸ்லாமியப் பெரியோர்களில் தலைசிறந்தவர்கள். அரபியர் பரம்பரையில், குரைஷிக் குலத்தில் ஹாஷிம் கிளையில் பிறந்தவர்கள். பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்களின் வழித்தோன்றல். இப்பெரியார் முஸ்லீம் உலகில் மட்டுமேயன்றி சாஅதி சமய வேறுபாடின்றி, அஞ்ஞான்றும் இஞ்ஞான்றும் எல்லாராலும் நன்கு மதிக்கப்பெற்றவர்.
 
 

குணங்குடியார் மஸ்தான் சாகிபைத் தமிழ்நாடு நன்கறியும். இவர் பெருமானார்(ஸல்) அவர்களின் திருவாய் மொழிகள் மூவாயிரம் அமைந்துள்ள பொன்னரியா மாலை என்னும் நூலைப் பாடிய மின்னா நூருத்தீன் புலவர் மரபில் வந்தவர். தமது 17வது ஆண்டிலேயே துறவு பூண்டு ‘ஏர் தரும் மதனவேள் எரிமலர்க்கணையும், வளர்தரும் கூந்தலார் வடிவிழிக்கணையும்’ ஏறப்பெறாத எழிலுரு மேனிஞர்; இத்தகைய பெருமானார் வாயிலாக இதோ கேளுங்கள். திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்புகள் பற்றி ,
 
 

“திக்குத் திகந்தமுங் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி
சிங்காச நாதிபர்க ளநசரேந்தி யேவந்து
ஜெயஜெயா வென்பர் கோடி
ஹக்கனருள்பெற்ற பெரியோர்க ளலிமார்களணி
யணியாக நிற்பர் கோடி
மக்க நகராளும் முகம்மதி ரசூல்தந்த
மன்னரே யென்பர் கோடி
அஞ்ஞான வேரறுத் திட்டமெய்ஞ் ஞானிக
ளனைந் தருகு நிற்பர் கோடி
வசனித்து நிற்கவே கொலுவீற் றிருக்குமுன்
மகிமை சொல வாயு முண்டோ
தக்க பெரியோனருட் டங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே
தயைவைத் தென்னையாள் சற்குணங்குடிகொண்ட
ஷாஹ¤ல் ஹமீதரசரே”
 
 

இவ்வாறு ஞானிகளாலும், இருடிகளாலும் புகழ்ந்தேத்தப் பெற்ற பெருமானார் ஷாஹ¤ல் ஹமீதாண்டகை அவர்கள், இஸ்லாத்தின் ஞான விளக்கைப் பரந்த பாருலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று இருளகற்றி ஒளி பெறுமாறு செய்ய வடநாடு விட்டுப் புறப்பட்டார்கள். தந்நல மறுத்து மக்களுக்கு அறிவு புகட்டி, தொண்டு செய்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஊன் ஒடுக்கி உற்றார், உறவினரைத் துறந்து, இறைவனது வழி நடந்து, எல்லோரையும் இன்ப வாழ்க்கையில் ஆழ்ந்த உன்னி, தெய்வத்தொண்டாற்றப் புறப்பட்ட இப்பெருமானார் பல நாடு நகரஙகளையும் சுற்றிக்கொண்டு, மக்கா மதினா முதலிய நகரங்களுக்குச் சென்று, தமது இறுதிக் கடனாம் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு தெந்நாடு வந்தார்கள்.
அப்போது தஞ்சையில் அச்சுதப்ப நாய்க்கன் என்னும் நாய்க்கர் குலத் தொன்றல் அரசாண்டு வந்தான். அவன் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்ததால், அதனைக் கண்டு மனம் வருந்திய பெருமானார், இறைவனிடம் மன்றாடியதில் அந்நோய் நீங்கியதாயும் சொல்லப் படுகின்றது. இப்படி நாடு நகரங்களையும் சிற்று–ர் பேரூர்களையுஞ் சுற்றிக்கொண்டு, தம்மைச் சூழ்ந்து அறிவுரை பெற்று வந்த தவத்திரு செல்வர் குழாம்கள் புடைசூழ கடற்கரையருகே தங்கியிருந்தார்கள்.
பெருமானார் அன்று தங்கியிருந்த அக்கடற்கரை மைதானமே இன்று விண்ணவர் ஏத்தும் வியன் நாகூராய் விளங்கி நிற்கின்றது. நாகூர் பெருமானார் வந்து தங்கிய அஞ்ஞான்று ஒன்றோடொன்று அடர்ந்து நெருங்கிய பல மணல் மேடுகளையும், பெரும்பாலும் புன்னை மரங்களும், நாவல் மரங்களும், பனை மரங்களும் செறிந்த தோப்புகளையும் உடைத்தாயிருந்தது. இவ்விடத்திற்கு வந்து தங்கியபோது பெருமானார்க்கு வயது ஏறத்தாழ வயது நாற்பது.
 
 

பெருமானாரின் மாண்பையும் மாட்சியையும் அளவிட நாகூரே ஓர் அளவு கோலாய் அமைந்து கிடக்கின்றது. அடர்ந்து நெருங்கிய பல்வேறு மரங்களையும், மணல் மேடுகளையும் உடைத்தாயிருந்த இவ்விடம், ‘ஓதையுற்ற மேகமுற்றுறங்குகின்ற உச்சிவாய்த் தீதை விட்ட வம்பொனாற் சிறந்த தூபி கரலவாற் கேதையிட்ட நீண்மரங் கிளர்ந்து வானமேகுநேர், பாதையொத்து மீயுயர்ந்த பஞ்ச கோபுரங்களே’ என்ற குலாம் காதிறு நாவலர் அவர்களின் புகழுரைப்படி இத்துணை சிறப்பெய்தியதற்கு ஏற்ற காரணம் பெருமானாரின் மகிமையேயன்றி வெறன்னவாகத் தான் இருத்தல் கூடும் ?
 
 

பெருமானார் ஷாஹ¤ல் ஹமீது ஆண்டவர்கள் பகல் முழுவதும் நோன்பிலும், இரவு தொழுகையிலும் கழிப்பார்கள். ‘நான்’, ‘எனது’ என்னும் அகங்கார மமகாரங்களை அறுத்தெறிந்தவர்கள். ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்’ என்பது வள்ளுவர் கண்ட இலக்கணம். உலகப் பற்றுக்களை உதறியெறிந்த பெருமானர் அவர்கள், அக்கடற்கரை மைதானத்தில் ‘சில்லா’ இருந்தார்கள். அச்சில்லா இருந்த விடத்தில் ஒரு கட்டடம் எழுப்ப வேண்டுமென்று விரும்பிய, நாகூரில் சீருடைச் செல்வரய்த் திகழ்ந்த மகுதூம் காதர் மலுமியார் என்னும் கண்ணிய மிகுந்த பெருமகனார் ஹிஜிரி 1288ஆம் ஆண்டு இரமலான் திங்கள் அக்கட்டட வேலையைத் துவங்கினார்கள்.
 
 

நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே..! அக் கட்டட வேலை முடிவு பெறுமுன் இடைவன் திருவடி நிழலை யெய்தினார் அச்செல்வத் திருமகனார். எனவே அவ்வேலையின் முழுப் பொறுப்பும் அவர்கள் தம் அருமைப் புதல்வர்களான செய்கு முகம்மது மாலுமியார், செய்கு பாவா மாலுமியார் இவர்களைச் சேர்ந்ததாயிற்று.
தங்கள் தந்தையாரின் விழாவை இனிது முடிக்க வேண்டி, தந்தை விட்டுச் சென்ற பணியை மீண்டும் தொடர்ந்து ஹிஜிரி 1289-ம் ஆண்டு துல்ஹஜ் திங்கள் பெருமானார் ‘சில்லா’ இருந்த விடத்தில் நல்ல கருங்கற்களால் ஒரு கட்டடத்தைக் கட்டி முடித்தார்கள். அக்கட்டடத்தைதான் இன்று நாம் ‘சில்லடி’ என்று நாம் அழைக்கின்றோம்.
 
 

உயர்திரு திரு மகுதூம் காதர் மாலுமியார் அவர்கள் சிறந்த நோக்கம் ஒன்றிற்காக, பொது நலத்திற்காக ஷாஹ¤ல் ஹமீது ஆண்டகை அவர்களின் சில்லா இருந்தவிடத்தின் நினைவுக்கறிகுறியாக கடற்கரை சென்று நினைத்து வரும் பொதுமக்களின் களைப்பாறும் விடுதியாக, தபோதவனர்களின், தவத்திருச்செல்விகளின் தவநிலையமாக, குழந்தைகளின் உல்லாச விடுதியாக, தம் ஆருயிர் கணவர்களை அந்நிய நாட்டில் நீண்ட காலம்விட்டுப் பிரிந்து, ஏங்கித் தவிக்கும் இளம் பெண்கள் இந்த சில்லடிக்குச் சென்று மோதிரக் கவிபாடி தம் வறண்ட வாழ்விற்கு வழி பிறக்கும் என்று நம்பும் நம்பிக்கை நிலையமாக அமைக்கபெற்ற இச்சில்லடி, இன்று தனிப்பட்டோரின் தந்நலத்திற்காக உபயோகப்படுத்தப் படுகின்றது.
 
 

நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகின்றது. பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடி கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வர முயன்று கொண்டிருக்கிண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது. எனவே பெருமானார் ‘சில்லா’ இருந்ததன் நினைவுச் சின்னமான சில்லடி எல்லா மக்கட்கும் பயன்படுமாறு செய்ய முயலுங்கள். அல்லாஹ் உங்கட்கு நன்மையளிப்பானாக ! 


சித்தி ஜூனைதா பேகமும் முதுசொம் இலக்கியக் கூடமும்
நா.கண்ணன்
 


(உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு – 2002 இலங்கை சிறப்பு மலர்)
 
 

முஸ்லிம் சமூகம் தமிழகத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். மற்றைய சமூகங்களை ஒப்பு நோக்கையில் படித்தவர் விழுக்காடு குறைவாகவுள்ள சமூகம். மொத்த இந்திய நாட்டிலே பெண்களின் படிப்பறிவு குறைவாக இருக்கும்போது சிறுபான்மை இனத்தைச் சொல்ல வேண்டியது இல்லை. மேலும் பெண்கள் குடும்பம் தவிரக் கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்த வைத்த ஒரு பெண் ஆசிரியை, பதிப்பாளர் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள். ஆச்சரியத்திலும் ஆச்சர்யமான விஷயம் சித்தி ஜூனைதா பேகம் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதை விட எழுதிக் குவித்தார் என்பதே உண்மை. ஒரு பெண் எழுதும்போது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்தும் இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார்.
 
 

இத்தகைய ஆச்சர்யமான பெண்மணியை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது துபாய் நகரில்தான். ஷார்ஜா தமிழ் மன்றத்தில் என்னைப் பேச அழைத்திருந்த திரு.சடையன் அமானுல்லாஹ் அவர்கள் இந்த அம்மையார் பற்றி திரு. ஜாபர் முகைதீன் முஸ்லீம் முரசு 50வது பொன்விழா மலரில் வெளியிட்ட முதல் முஸ்லீம் பெண் எழுத்தாளர் என்ற கட்டுரையைக் காட்டினார். இப்படி நூதனமாக இலக்கியப் பாதை வகுத்த சித்தி ஜூனைதா பேகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரது படைப்புகளை இலத்திரன் பதிவுகளாக முதுசொம் கூடத்தில் (http://www/infitt.org/thf) நிரந்தரப்படுத்த நான் அவர் வாழ்ந்த நாகூருக்குப் பயணப்பட்டேன்.
 
 

நண்பர் அமானுல்லாஹ் அவர்கள் சொல்லரசு அவர்களுக்கு என்னை கடிதம் மூலம் அறிமுகப் படுத்த எமது நோக்கத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி உதவி செய்தார்.
தஞ்சையிலுள்ள டாக்டர் அரங்கராசனுடன் சேர்ந்து நாகூர் பயணித்தேன். முகைதீன் அவர்கள் உடல் நோயுற்ற நிலையிலும் எங்களுக்காக காத்திருந்தார். அவரைக் கண்டபோது பெரிய புத்தகக் குவியலுக்கு நடுவே வீற்றிருந்தார்.
இலக்கிய சம்பந்தம் என்பதால் மிக்க ஆர்வமுடன் பேசினார். ஆச்சி (சித்தி ஜூனைதா பேகம்) பற்றி அவர் எழுதிய கட்டுரைகளைத் தந்தார். மேலும் பல இஸ்லாமிய இலக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். சூ·பிஸம் பேசினார். இவையெல்லாம் எனக்குப் புதியவை என்றாலும் நான் கண்ணும் கருத்துமாக ‘காதலா ? கடமையா ?’ என்ற நாவலைப் பெறுவதிலேயே அவதானமாக இருந்தேன். சொல்லரசு ஜாபர் முகைதீன் அவர்கள் ஆச்சியின் பிள்ளை போன்றவர். ஆச்சிக்கு பெண் பெண்ணும் பெண் வயித்துப் பேரனும் உண்டு. பிள்ளை கிடையாது. எனவே இவரிடம் அந்த நூல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் நாகூர் சென்று விட்டேன். ஆனால் இவரிடம் அந்த நூல் இல்லை. என்னை ஆச்சியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களிடமும் அந்த நூல் இல்லை! ஆனால் புத்தகத்தின் ஜெராக்ஸ் நகலொன்று நாகூர் ரூமி என்ற கலைஞரிடம் தான் கொடுத்ததாக சொல்லரசு என்னிடம் சொன்னார். ஆனால் ரூமி அவர்கள் நாகூரில் இல்லை!
 
 

இதுதான் தமிழ்ப் புத்தகங்களுக்கு நேரும் கதி. சித்தி அவர்கள் வீட்டிலே கூட புத்தகம் இல்லை. உடனே எனக்கு ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் மால்டன் சொன்னது ஞாபகம் வந்தது. அது என்னவெனில் பத்து வருடங்கள் தாண்டி விட்டாலே தமிழ்ப் புத்தகங்கள் ஏடுகள் போல் காணாமல் போய் விடுகின்றன. மறுபதிப்பு என்பது மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே நிகழக்கூடிய ஒரு நிகழ்வு என்பதாகும். இதனாலேயே தமிழ் புத்தகங்களை நிரந்தரப் படுத்த தமிழர்கள் முனைய வேண்டுமென்பது அவரது அபிப்ராயம். தமிழகம் தவிர்த்து வெளி நாட்டிலுள்ள பெரிய நூலகம் என்பது கொலோன் நூலகமாகும். இது இக்காரணத்திற்காகவே நடத்தப்படுகிறது. எனவே தமிழர்களும் தங்களாலான அளவில் தமிழ் நூல்களை பாதுகாத்து நிரந்தரப்படுத்த முயல வேண்டும். இந்த நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் முதுசொம் அறக்கட்டளை என்பது. இவ்வியக்கத்தில் தமிழ்ச் சுவடிகளையும், பழைய புத்தகங்களையும் இலத்திரன் பதிவுகளாக்கி கணினி சார்ந்த மின் உலகில் சாசுவதமாக்குகின்றோம். இதில் சித்தி ஜூனைதா பேகம் அவர்களின் படைப்புகளை நிரந்தரமாக்கவே நான் நாகூர் வரை சென்றது.
 
 

நாகூர் சென்றதே ஒரு வித்தியாசமான அனுபவம். ஆச்சியின் வீட்டிற்கு சொல்லரசு அழைத்துச் சென்றார். சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண். அது அவரது இல்லத்தின் நுழைவாயிலில் தொங்கும் பலகையிலேயே தெரிகிறது. ‘எழுத்தாளர்’ என்று தமிழ் ஆண்கள் பெருமையாக போர்டு போட்டுக் கொள்ளும் சூழலில் இவர் ‘ சித்தி ஜூனைதா பேகம் – பன்னூலாசிரியை’ என்று பலகை போட்டுள்ளார். இவரது பெண் என்னிடம் சொன்ன சேதி சித்தி ஜூனைதா பேகம் தனது பெண்ணின் படிப்பில் மிக கவனமாக இருந்தார் என்பது. தான் படிக்காத படிப்பை தனது பெண் படித்து விட வேண்டும் என்று அவரை பள்ளி இறுதிவரை படிக்க வைத்துள்ளார். பேரன் மேல்படிப்பு படித்து ஆங்கில விரிவுரையாளராக உள்ளார்.
 
 

சித்தி ஜூனைதா பேகம் அவர்களின் பேரன் செல்லமணி, ஆச்சி கைப்பட எழுதிய பல டைரி போன்ற பக்கங்களையும், அவர் நூருல் இஸ்லாம் என்ற பத்திரிகையில் எழுதிய மலைநாட்டு மன்னன் என்ற தொடர் கதைகளையும் முதுசொம்மில் நிரந்தரப்படுத்த என்னிடம் தந்தார். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த ஆச்சி அவர்கள் தனது டைரியில் தெள்ளிய தமிழில் எழுதி இருப்பதுடன் ஆங்கிலமும் எழுதியிருப்பது அதிசயமே. சுயமாக கல்வி கற்றுக் கொண்ட ஆச்சி, இஸ்லாமிய நூல்களுடன் தமிழ் இலக்கியமும் நன்கு அறிந்திருந்தார் என்பது அவர் எழுத்தைப் படிப்பவர்களுக்குப் புரியும். சித்தி ஜூனைதா பேகம் தீர்க்கமான கொள்கையும் விடுதலை உணர்வும் கொண்ட பெண்ணாகத் திகழ்கின்றார். தனது இஸ்லாம் சமூகத்தில் சாதிகள் கிடையாது எனினும் தமிழக சாதி வேறுபாடுகள் பற்றி மிக அக்கறை கொண்டிருக்கிறார். திருமூலரின் வசனமான ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டுமென வலியிறுத்துகிறார். இவரது சமய, சன்மார்க்க நோக்கு இவரது கதைகளில் மிளிர்கிறது. இஸ்லாத்தை முதன்மைப் படுத்தி இவர் எழுதியிருந்தாலும் முன்றில் ஒரு பங்கு கதைகள் இந்துப் பாத்திரங்களை வைத்தே எழுதப் பட்டுள்ளது. மேலும் இவர் சரளமாக திருமூலர், மாணிக்க வாசகர் போன்றோரை மேற்கோள் காட்டுவதிலிருந்து இவருக்கு சைவ சிந்தாந்தப் பரிட்சயமும் இருப்பது தெரிகிறது. இவரது நடை மென்னடை என்று பலர் போற்றுகின்றனர்.
 
 

சித்தி ஜூனைதா பேகம் அவர்களின் வீட்டிற்கு சென்ற பிறகு சொல்லரசு அவர்கள் எங்களை நாகூர் தர்காவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது மதியமாகியிருந்தது. எப்படி இறைமை என்பது ஒன்றோ அது போலவே மனித நம்பிக்கைகளும் ஒன்றாகவே உள்ளன. நாகூர் சந்ததிக்கு வேண்டிக் கொண்டு வந்தவர்கள் தர்கா முழுவதும் மண்டிக் கிடந்தனர். இக்காட்சி திருப்பதியிலும் சரி தர்காவிலும் சரி ஒன்றாகவே உள்ளது. கோயில்களில் வேதம் ஓதுவது போல் தர்காவில் குர்ஆன் ஓதப்படுகிறது. ஏறக்குறைய ஒரே தொனி. கோயில்களில் கர்ம காரியங்கள் செய்விக்கும் புரோகிதர் போல் முஸ்லிம் புரோகிதர்கள் நிரம்பியிருந்தனர். நாகூர் ஆண்டவரும் சாதி, மதம் பார்க்காமல் அரள் பாலித்துக் கொண்டிருக்கிறார். இவை எனக்குப் புரிந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. தர்காவின் கதவுகள் ஒன்று மாறி ஒன்று திறந்து கொண்டன. சொல்லரசு அவர்களுக்கு ஆச்சரியம். மாலையில்தானே திறக்கும்; இப்போது உங்களுக்காகவே திறப்பது போலுள்ளதே என்றார். தர்காவின் உள் நிலைகளுக்குள் சென்றபோது பிரசாதமாக மல்லிகை மலர்கள் தந்தார்கள். வாங்கி பையில் போட்டுக் கொண்டு நாகூர் கடற்கரைக்குப் போய் வீடு திரும்பினோம். தர்கா பார்த்து விட்டு கடற்கரைக்கு வருவது ஐதீகம் என்றார். வீடில் வந்து பார்த்தால் பாதி மல்லிகை வெண் சர்க்கரையாகி கையில் பிசு பிசுத்தது. சொல்லரசு அவர்களிடம் சொன்னால் அவருக்கு இன்னும் ஆச்சரியம் கூடியது. உங்கள் நோக்கம் புனிதமாக இருப்பதால் நாகூர் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிதுள்ளார் என்று நாம் கொள்ள வேண்டியது என்றார். அதுவே அந்த அதிசயத்திற்கு நல்ல விளக்கமாக அமைந்தது.
 
 

எழுத்தாள நண்பர் இரா.முருகன் அவர்கள் ரூமியை எனக்கு தொலைபேசி மூலம் அறிமுகப் படுத்தி அந்த நூலைச் சென்னையில் பெற்றுத் தந்தார். அது 1938ல் வெளியாகியுள்ளது. அதன் இலக்கியப் பதிவை சென்னை சா·ப்ட் வியூ நிறுவன இயக்குனர் ஆண்டோ பீட்டர் அவர்கள் செய்து தந்தார்கள்.
நாகூரில் அதிசயம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. சித்தி ஜூனைதா பேகம் என்ற அதிசயத்தைக் காணச் சென்ற எனக்கு மேலும் அதிசயங்களைக் காட்டி திகைக்க வைத்துள்ளது நாகூர். இவ்வினிய நினைவுகள் முதுசொம் வலைப் பக்கத்தில் பதிவாகியுள்ளன. ஆச்சியின் இலக்கியம் ஆண்டவரின் ஆசியுடன் இலக்கியப் பதிவாகி இன்று சாஸ்வதப் படுத்தப்பட்டுள்ளது.
 


எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’
– சித்தி ஜூனைதா பேகம். (‘காதலா கடமையா’ நாவல்)
 


சித்தி ஜூனைதா பேகம் – ஒரு நேர்காணல்
– சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன் –
 


1. தாங்கள் எழுதி முதலில் அச்சில் வந்தது சிறுகதையா, கட்டுரையா? அது எப்போது எழுதப்பட்டது, எதில் இடம் பெற்றது?
 
 

என் சிறுபருவம் முதல் படிப்பதும் எழுதுவதும்தான் என் தொழில். அரபுத் தமிழிலும், அரபியிலும், தமிழிலும் எழுதிக்கொண்டே இருப்பேன். பன்னிரண்டு வயது முதல் எழுதி கிழித்துக்கொண்டிருப்பேன்! முதன் முதலில் அச்சில் வெளிவந்தது சிறுகதையும் கட்டுரையும்தான். 1929இல் ‘தாருல் இஸ்லாமில்’ வெளிவந்தது
 
 

2. தங்களின் எழுத்துலக நுழைவுக்கு யார் காரணமாக இருந்தார்? ஏதேனும் சம்பவங்கள் அதற்குரிய காரணமாக அமைந்ததா?
 
 

என் எழுத்துலக நுழைவுக்குக் காரணம் முன்னாள் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எனது பாட்டனாரும், ஒரு காசுக்கடை முதலாளியுமான மு.யூ.நவாபு மரைக்காயர் அவர்கள். எந்த நிகழ்ச்சியும் காரணமாக அமைந்ததா? என்றால் இல்லை என்பதுதான் என் பதில்.
 
 

3. அச்சில் வந்த முதல் எழுத்தோவியத்திற்கு வரவேற்பு அல்லது அன்றைய நிலையில் ஏதேனும் எதிர்ப்பு இருந்ததா?
 
 

அச்சில் வந்த என் முதல் எழுத்தோவியத்திற்கு, பிற ஊர்களில் எப்படியோ? ஆனால் என் சொந்த ஊரில், நாகூரில் எதிர்ப்பு என்றால்…ஊரே திரண்டு, கும்பல் கும்பலாக என்னைப் பார்க்கவந்து, கேலி செய்தது.
 
 

4. தங்களின் எழுத்துலக பிரவேசத்திற்கு அக்காலத்திற்கு முந்திய அல்லது சமகாலத்து எழுத்தாளர் யாரையாகிலும் முன்மாதிரியாக தாங்கள் பின்பற்றினீர்களா?
 
 

நான் என் எழுத்துலக நுழைவிற்கு எனக்கு முன்மாதிரியாக யாரையும் பின்பற்றவில்லை. என் இறந்துபட்ட, அஞ்சலகத் தலைவர் என் சகோதரர் ஹ¥ஸைன் பேயும், நானுந்தான் ஒன்றாய் உட்கார்ந்து படிப்போம்; எழுதுவோம்.
 
 

5. தங்களின் எழுத்துக்களில் குறிப்பாக சிறுகதை, நெடுங்கதை, ஆகியவற்றில் எந்த எழுத்தாளரின் எழுத்துநடை – கதை சொல்லும் முறை – தாக்கம் உண்டு என்று நினைக்கிறீர்கள்? அல்லது தனித்த தங்களின் சொந்த நடை, பாணீ என்றால் அதனை யாரேனும் அந்த காலத்திலோ அதற்குப் பின்னரோ பின்பற்றினார்கள் என்று நினைக்கிறீர்களா?
 
 

எனது சிறுகதை, நவீனம் எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்தநடை என்றே நினைக்கிறேன். சிலர் எனது எழுத்து நடையை மென்னடை என்று புகழக் கேட்டுள்ளேன். ஒருசிலர் கடினநடை என்பர். எனது சகோதரர் ஹ¥ஸைன் முனவ்வர் பேயின் நடை அழகு மிகுந்தது. எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அந்த நடையைப் பின்பற்றி எழுத என்னால் முடியாது;எழுதத் தெரியாது.
 
 

6. தங்களின் முதல் நெடுங்கதை எழுதப் படுவதற்குக் காரணமாக அமைந்த பின்புலம் என்ன?
 
 

நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை ‘காதலா? கடமையா?’ என்பது. இந்த நவீனத்தை நான் எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான். இந்த எனது சிறுநவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா.தாவுது சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். அவர் எனது தந்தையாரின் நண்பரும் ஆவார். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா? என்று ஏளனமாகப் பேசியதாக அக்காவிடம் சென்னையில் படித்துக் கொண்டிருந்த மர்ஹ¥ம் என் சகோதரர் ஹ¥சைன் முனவ்வர் பேயி சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தட்சிணாய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்.
 
 

7. அந்தக் கதை அச்சில் வந்த காலத்தில் தங்களின் எதிர்பார்ப்பு என்ன?
 
 

நான் எந்தப் பள்ளியிலும் படித்ததில்லை; எந்தத் தேர்விலும் கலந்து கொண்டதில்லை, என்றாலும் என் கல்வி அறிவுபற்றி உ.வே.சாமிநாத ஐயர் அவர்களே புகழ்ந்தெழுதினார்கள் என்றால் நான் இதைப்பற்றி மகிழ்ச்சி அடையத்தான் செய்தேன். மற்றவர்கள் ஆதரவும் வேண்டும் என்று விழைந்தேன்.
8. சமுதாயத்தில் அதற்கு ஆதரவு – எதிர்ப்பு எப்படியிருந்தது?
நமது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல, நமது தமிழகத்தில் , அண்டை நாடுகளிலும் கூட மிகவும் ஆதரித்தார்கள். ஆங்கிலப் பத்திரிக்கைகளும், தமிழ் பத்திரிக்கைகளும் மதிப்புரைகள் வழங்கின. சிங்கையில் பல்வேறு தொழில் அதிபர்கள், தமிழ் முரசு போன்ற பத்திரிக்கைகள் விரும்பி வரவழைத்தன. ஒரே ஆண்டில் நிறைய புத்தகங்கள் விற்றுவிட்டன. எங்களுக்கே புத்தகங்கள் இல்லாமல் சுதேசமித்திரன் பத்திரிக்கை நிலையத்தில் நாங்கள் எழுதிக் கேட்டு வாங்கினோம் பாருங்கள்!
 
 

9. தமிழ் முஸ்லிம்களிடையே எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமில்லாத அன்றைய நிலையில் அதுவும் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எவருமில்லாத அன்றைய நிலையில் தனித்துத் தலைதூக்கி நின்ற தங்களின் எழுத்தார்வம் இலட்சியத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் இல்லையா? அந்த இலட்சியம் எது? அது நிறைவேறியதா?
 
 

நான் புத்தகம் எழுதிய காலத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, இந்துப் பெண்களிலும் நல்ல எழுத்தாளர்கள் அதிகம் இல்லை. எழுத்தாளர் மட்டுமென்ன? ஒரு முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடமும் இல்லை. நன்றாகப் படிக்கத் தெரியாத ஒரு தமிழ் உபாத்தியாயினி ஒருவரும் சரியான முறையில் பயிற்சி பெறாத உர்து உபாத்தியாயினி ஒருவரையும் உடைத்தாயிருந்த ஒரு முஸ்லிம் கோஷா பள்ளிக்கூடம் இருந்தது. இந்து-முஸ்லிம்கள் பெரிதும் ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்த காலத்திலேயே ஒரு முஸ்லிம் சிறுமியை நாகூரில் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சேர்க்க மறுத்து விட்டார்கள்.
 
 

10. தங்களின் இளமைப் பருவத்தில் குடும்பத்தில் – பெரியவர்கள் தூண்டுதல் செய்து, துணை நின்ற காலகட்டத்தில் எழுதத் துவங்கியுள்ளீர்கள்..இப்போது அத்தகைய சூழல் இல்லை. அதோடு கூடவே முதுமை நோய்களின் அலைக்கழிப்பு இவற்றினிடையே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.இதற்கான ‘கிரியா ஊக்கி’ எது என்று சொல்லுங்கள்.
 
 

எந்தப் பெரியவர்களும் என்னை எழுதத் தூண்டியதுமில்லை; துணை செய்ததுமில்லை. எப்போதும் எனது சொந்த முயற்சியும் ஆவலும்தான். இன்று மட்டிலும் என்னை நோய் தொல்லைபடுத்தவில்லை; நான் என்னை அறிந்த பருவமுதல் நோயில் உழன்று கொண்டுதான் இருந்திருக்கின்றேன். என் நோயினால் என் கல்வி முன்னேற வழியின்றி என் காலம் வீணானதுதான் கண்ட பலன்.
 
 

11. அந்த நாளில் தங்களின் மனநிலையும், இந்நாளில் தங்களின் மனநிலையும் வளர்ச்சி – முதிர்ச்சி – தளர்ச்சி என்றவாறு வேறுபட்டிருக்கலாம். அவற்றை விளக்கி விரிவாகச் சொல்லுங்கள்.
 
 

அன்றிலிருந்து இன்றுவரை கல்விபற்றி என் மனோநிலை ஒரேமாதிரிதான். கல்வியின் ஆர்வம் குறைந்ததில்லை. சமயங்களில் நோயின் கடுமையால் நினைவு ஆற்றல் குறைந்திருக்கலாம். அப்போதுங்கூட என் படிப்பாற்றல் குறையவில்லை. சான்று நாகையிலுள்ள மனநோய் வைத்திய டாக்டர் சேக்தாவுது அவர்கள். ஒருமுறை கடுமையான அறுவை சிகிச்சியினால் என் மனநலங் கெட்டிருந்தது. மனநோய் அறிஞர் டாக்டர் சேக்தாவுது அவர்கள் என்னைப் பார்க்க வந்தார். அப்போது நான் டாக்டர் வரதராஜனார் எழுதிய ‘நெஞ்சில் ஒரு முள்’ என்ற உயர்ந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் குதூகலத்தோடு என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
 
 

12. தங்களின் நெடுங்கதைகளில் முதலில் அச்சில் வந்த ‘காதலா?கடமையா?’ தொட்டு தொடர்ந்து அச்சில் வந்த ‘மகிழம்பு’, ‘சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தென்றல்’ ஆகியவற்றில் பெரும்பாலும் அதாவது மூன்றில் இரண்டு முஸ்லிம் கதை மாந்தர்கள் இல்லை..இதற்கான காரணம் என்ன?
 
 

தங்களின் இந்த கேள்விக்கு சரியான முறையில் பதில் அளிக்க என்னால் முடியவில்லை.
 
 

13. தங்களின் எழுத்து தாங்கள் விரும்பிய பயனை விளைவித்ததா? விளைவித்தது எனில் அது எத்தகையது?
 
 

நான் எந்த பயனையும் கருதி நூல் எழுதவில்லை. பிறர்நலங் கருதாமல் தன்நலத்தையே கருதி செருக்கிலும் அறியாமையிலும் புதைந்து போகுமாறு மக்களை நெருக்கியழுத்தும் சாதி வேற்றுமை, சமய வேற்றுமைகளைக் களைந்து ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற அடிப்படையில் மக்கள் இனம் வாழ வழிவகுக்கும் ஒரு சிறு நூலை உரைநடையில் எழுதவேண்டும் என்ற அவா என்னை நீண்ட நாட்களாகத் தூண்டியது. எழுதினேன்; வெளியிட்டேன். ஆனால் நான் விரும்பிய பயன் கிடைத்ததா? அதுதான் இல்லை. மொழி வளர்ச்சி பற்றி பேசுகிறோம், எழுதுகிறோம். பல்வேறு இலக்கிய மாநாடுகள் கூட்டுகிறோம். ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறோம். பயன்? திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவஞானத்தைப் பற்றியும், நல்லொழுக்கத்தப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்து கொள்கிறோம். ஆடம்பரத்திற்காக செலவு செய்யும் இந்த ஆயிரக்கணக்கான தொகைகள் எந்த பயனைத் தந்தன? என்றால் அதற்கு ஏற்ற பதில் கிடைக்குமா?
 
 

14. சமுதாயத்தினர் குறிப்பாக இலக்கிய வட்டத்தினர் தங்களுக்கு வழங்கிய சிறப்புகள் என்ன?
 
 

எனக்கு சிறப்பாக இலக்கிய குழுவினர் வழங்கிய சிறப்புகள் வருமாறு. புதுக்கோட்டையில் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு வழங்கிய பாராட்டுச் சான்றிதழ். கீழக்கரை அல்ஹாஜ் டாக்டர் ஷெய்கு நூர்தீன் அவர்களின் சார்பில் பொற்கிழி வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் சிறப்புச் செய்தார்கள். புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகத்தார் ஒரு இலக்கிய விருதும் தனிச் சிறப்புப் பாராட்டுப் பத்திரமும் 30.6.1996ல் வழங்கினார்கள். காரைக்காலில் சிற்றிலக்கிய மாநாடு சார்பாக ஒரு சால்வை போர்த்தினார்கள். சமீபத்தில் புதுக்கல்லூரியில் நிகழ்ந்த ஒரு இலக்கிய மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளின் சார்பாக மேஜர் மு.ஜெய்லானி அவர்கள் மூலம் ஒரு இலக்கிய விருது அளித்தார்கள். அது நன்றாக அழகிய முறையில் இருந்தது.
 
 

15. தங்களின் இலக்கியப்பணிக்கு சமுதாயம் வழங்கிய சிறப்புகள் அனைத்தும் சமுதாயத்தினர் செலுத்திய நன்றிக் கடன்கள் என்றே நம்புகிறோம். தாங்கள் இலக்கிய வட்டத்தினர் – இதழாளர் யாருக்கேனும் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
 
 

எனக்கு இலக்கிய வட்டத்தினர் செய்த நன்றிக்குப் பகரமாக யாருக்கும் நான் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் என்னை கௌரவிக்க வேண்டும் என்று ஆசையுள்ள கலைமாமணி டாக்டர் கவி.கா.மு.ஷெரிப் அவர்கட்கும் கீழக்கரை அல்ஹாஜ் டாக்டர் ஷெய்கு நூர்தீன் அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றிக் கடனைச் செலுத்துகின்றேன்.
 
 

16. தங்களின் குடும்பத்தில் பலர் எழுத்தாற்றல் – பேச்சாற்றல் – கவித்திறன் – கொண்டவர்களாக மிளிர்கின்றனர். அது பெருமைக்குரியது. அதற்கான தங்களின் பங்களிப்பு எத்தகையது?
 
 

களஞ்சியத்தின் குடும்பத்தினர் என்று சொல்லிக் கொள்வார்கள் எங்களை. வன்ணக் களஞ்சிய புலவர் பெருமானின் குடும்பந்தான் எங்களது. எங்கள் குடும்பத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவித்திறன் எல்லாம் உண்டு. ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு கவி இயற்றத் தெரியாது.
 
 

17. இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் எழுத்தாளர்கள் – பெண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இதழ்களும் தமிழ் முஸ்லிம் பெண் ஆசிரியர்களாக பொறுப்பேற்று பணியாற்றும் இதழ் உட்பட – பல இதழ்கள் உள்ளன. எழுத்தாளர்களில் யார் உங்களைக் கவர்ந்தவர்? எந்த இதழ் தாங்கள் விரும்பிப் படிக்கும் இதழ்?
 
 

இன்றைய நிலையில் முஸ்லிம் எழுத்தாளர் பலர் உண்டு. பெண் எழுத்தாளருந்தான். ஆனால் என் சிறுவயது முதல் நான் மாநாடுகளில் அதிகம் கலந்து கொண்டதில்லை. நல்ல பேச்சாளர் எவர் என்பதும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. தனக்கென வாழாப் பிறர்க்குரியவரான ஒரு சில பேச்சாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களையும் நான் நேரில் சந்தித்துள்ளேன் என்று கூற முடியாது. குன்றக்குடி அடிகளார் , மகரிஷி சுத்தானந்த பாரதியார் இவர்களைப் பற்றியும் கேள்வியுற்றுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை.
 
 

18. இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும் – வளரும் எழுத்தாளர்களுக்கும் தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
 
 

இன்றைய சமுதாயத்தில் வளர்ந்த எழுத்தாளர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் என் ஆலோசனையைக் கேட்க விரும்பினால் நான் கூற விரும்புவது இதுதான்; நீங்கள் உங்களுக்காக மட்டிலும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டிற்காக – உங்கள் இனத்திற்காக – உங்கள் சமுதாயத்திற்காக – உங்கள் மக்கட்காக வாழுங்கள். பிறர் நலத்திற்காக வாழுங்கள். உங்கள் நலத்திற்காக மட்டிலும் வாழாதீர்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.
நன்றி : முஸ்லிம் முரசு ( பொன்விழா மலர் / 1999 )
 

Newer entries »