தினமலரில் சித்தி ஜுனைதா பேகம்

எல்லாம் இந்தப் பக்கங்களிலுள்ள பழைய செய்திகள்தான். சுட்டி அனுப்பிய தம்பி தீனின் வரிகள்தான் புதுசு. ’தாய்மைக்கும் தூய்மைக்கும்  பெயர் பெற்றவள்! , வாய்மைக்கும் இவள்தானே  பெயர் இட்டவள்! , ஒரு ’மகிழம்பூ’  தினமலரில்  மீண்டும் மலர்ந்திருக்கிறது… ,  கத்திப் பேசாமல் – மௌனமாய்  சித்தி பேசுகிறாள்! , இதோ கேளுங்கள்..’ என்கிறார்.  புதுக்கவிதை என்று நினைக்கிறேன். ‘ I think Aachima is the only writer who gave two titles for almost every one of her writings . Haleema or Karpin Maanbu /  Vanaja or Kanavanin Kodumai / Pen Ullam or Suthanthira Udhayam… – so the readers can choose what they wish!   May be Rafee Nana can clarify this..!’ என்கிறார் இன்னொரு தம்பி நிஜாம்.  நல்லது, ஆச்சிமாவுக்காக என் அஸ்மாவை ’செத்தநேரம்’ சும்மா விடுகிறேன்!

ஜனாப். ஜே.எம்.சாலி தொகுத்த கட்டுரைக்கான சுட்டி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7854&ncat=2

***

நன்றி : தீன் , தினமலர்

***

தொடர்புடைய பதிவு :  சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்

சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்

‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்கள் எழுதிய கட்டுரை (தினகரன் – ரம்ஜான் மலர் 2002 ) :

***

siddhi-2இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

***

தொடர்புடைய சுட்டி : திரைக்குப் பின்னால் – எஸ். ராமகிருஷ்ணன்

அலிபாதுஷா கதை

‘பாசவலை’ என்ற படத்தின் மூலக்கதையே ‘அலிபாதுஷா’ நாடகத்தின் கதைதான் என்கிறது அம்ருதா  (ஜூன் 2008 ,பக் 14-15 ) ! எம்.ஜி.ஆரின் குருவான கே.பி கேசவனைப் பற்றிய கட்டுரையில் திரு. சர்வேஸ்வரன் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ‘1930 களின் இறுதியில் நாடகங்கள் பிரபலமாக விளங்கிய நாட்களில் ‘அலிபாதுஷா’ என்ற நாடகம்  ஜனரஞ்சகமாக விளங்கியது.  இதே ‘அலிபாதுஷா’ 1936ல் திரைப்படமாகவும் வெளிவந்தது. தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் முதலியோர் என்ற விபரம் தெரியவில்லை. 1957ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பாசவலை’ படத்தின் மூலக்கதையே ‘அலி பாதுஷா’ நாடகத்தின் கதைதான். அலிபாதுஷா கதையில் வரும் முஸ்லிம் பாத்திரங்களை இந்துக்களாக மாற்றி ‘பாசவலை’ தயாரிக்கப்பட்டது.’

***

‘அலிபாதுஷா நாடகம்’ , வண்ணக்களஞ்சியப் புலவரால் (‘சுலைமான நபி சரித்திரம்’ கூறும் புகழ்பெற்ற ‘இராஜநாயகம்’ காப்பியம் படைத்தவர்) இயற்றப்பட்டது என்ற விபரம் மட்டும் எனக்குத் தெரியும். படித்ததில்லை; பார்த்ததுமில்லை. அது குறித்த சினிமா செய்திகளை இப்போதுதான் அறிகிறேன். வண்ணக்களஞ்சியத்தாரின் பரம்பரையில் வரும் சித்தி ஜூனைதாவின் ‘காதலா கடமையா?’ நாவல் , எப்படி ‘நாடோடி மன்னன்’களால் சுலபமாக மாற்றப்பட்டது என்பதையும் பிறகு பதிய வேண்டும், இன்ஷா அல்லாஹ். கம்பம் சாஹூல் ஹமீது அவர்களின் அந்தக் கட்டுரை என் கணினியில் இன்னும் தூங்குகிறது. பிறகு பதிகிறேன்.

ஒரு ரகஸ்யம், இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் சொல்லிவிட வேண்டாம், ‘காதலா கடமையா?’வே ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்! அந்த நாவலின் பெயரைச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு நாகூர் எழுத்தாளர் இலவசம் – 🙂

சரி, இப்போது ‘அலிபாதுஷா’ கதைச் சுருக்கம், அம்ருதாவுக்கு நன்றியுடன்…:

அலிபாதுஷா என்ற ஓர் அரசர் தன் தம்பி செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக தன் பட்டத்தையே துறந்து வேற்று நாட்டுக்குச் சென்று விடுகிறார். செல்லும் வழியில் , காட்டில், மனைவிக்கும் இரு பிள்ளைகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டுவரச் செல்கையில் விஷத் தண்ணீரைப் பருகி, தன் சித்தஸ்வாதீனத்தையே இழந்து , கால்போன போக்கில் தன் குடும்பத்தை நிராதரவாக விட்டுச் சென்று விடுகிறார். காட்டில் விடப்பட்ட ராணி தன் கணவரைத் தேடிக் குமாரர்களுடன் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு மிகுந்த ஒரு காட்டாற்றைக் கடக்க நேரிடுகிறது. ஆற்றைக் கடக்க முயற்சிக்கும்போது இரண்டு குமாரர்களும் கூடவே வருவதாக அடம் பிடிக்கவே மூத்தவனை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு , இளையவனை மட்டும் தூக்கிச் சென்று பத்திரமாக மறுகரையை அடைகிறாள். பின் மூத்தவனை மீட்க ஆற்றில் இறங்குகையில் இளையவனும் ‘கூடவே வருவேன்’ என்று அடம்பிடிக்கவே  இப்போது இளையவனையும் இக்கரையில் உள்ள மரத்தில் கட்டிவைத்து விட்டு மூத்தவனை அழைத்து வர ஆற்றில் இறங்குகிறாள். நடு ஆற்றை கடந்து கொண்டிருக்கும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவே, அவ்வேகத்தைத் தாங்கமுடியாத ராணி ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாள். குமாரர்கள் இருபுறமும் கரைகளில் அனாதைகளாக விடப்படுகின்றனர். கதை இவ்வாறாக நகர்கிறது…

அவ்வளவுதான் கதை சொல்லியிருக்கிறார் சர்வேஸ்வரன்.

கண் கலங்கவோ கவலைப்படவோ வேண்டாம்,  கரையின் ஒருபுறத்தில் கட்டப்பட்ட மூத்த இளவரன் சாதரணமானவன் இல்லை. பி.யூ. சின்னப்பா (9 வயது) ; மறுகரையில் கட்டப்பட்ட இளவரசனோ எம்.ஜி. ஆர் (8 வயது).

விரிவான கதை பிறகு சொல்லப்படும்.

– ஆபிதீன் –

**

தொடர்புடைய தகவல் (சகோதரர் பத்ரி எழுதியது) :

’(சித்தி ஜூனைதாவின் ‘காதலா கடமையா) நாவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். ’மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி’ என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் நாடோடி மன்னன் படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே காதலா கடமையா நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரிய நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து சுட்டுவிட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ’

***

இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா

இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா – முனைவர் அ.அய்யூப்
(நவமணி பதிப்பகம், 44 எல்டாம்ஸ் சாலை, சென்னை – 600 018 பக்கம் 160, ரூ. 90) நூலிலிருந்து…

நன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை

***
அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடத்துக்குப் போய்ப் படிப்பதில்லை. அரபிப் பள்ளியில் சேர்ந்து திருக்குரான் ஓத மட்டும் கற்றுக் கொள்ளுவார்கள். பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, நாலு, ஐந்து வகுப்புப் படித்த முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தாவூத் ஷா தன்னுடைய 4 மகள்களையும், பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை (எஸ்.எஸ்.எல்.சி) படிக்க வைத்தார்.
நான்கு மகள்களுமே நல்ல எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களாக விளங்கினார்கள். தாவூத் ஷா சில நேரம் அவர்களுடன் அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை விவாதிப்பது உண்டு.
நான்கு மகள்களையும் நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தார், தாவூத் ஷா. யாருக்கும் வரதட்சணை கொடுக்கவில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று சொன்னார். முதல் மூன்று மகள்களுக்கு உள்நாட்டு மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். கடைசி மகள் சிராஜ் பேகத்துக்கு மட்டும் மலேசியா மாப்பிள்ளை. அந்நாளைய வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திருமணம் முடிந்ததும் பெண்ணை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விடுவார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வந்து, ஓரிரு மாதம் இருந்து விட்டுப்போவார்கள். ஆனால், பெண்ணை கையோடு அழைத்துப் போய் விடவேண்டும் என்று மலேசியா மாப்பிள்ளைக்கு தாவூத் ஷா நிபந்தனை விதித்தார். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், திருமணம் முடிந்ததும் அவசரமாக மலேசியாவுக்குப் போக வேண்டியதாகி விட்டது. போனவர் உடனடியாகத் திரும்பி வரவில்லை. இதற்கு இடையே சிராஜ் பேகம் குழந்தை உண்டானார். கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு, தனியே விமானம் ஏறி, மலேசியாவுக்குப் பறந்து, கணவருடன் சேர்ந்தார்.

பெண்கள் கல்லூரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசராக இருந்த பசீர் அகமது, சென்னையில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.
இதற்கு முஸ்லிம் உலகமாக்களிடம் பலத்த எதிர்ப்பு. பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது. இது மார்க்கத்துக்கு விரோதமானது என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள். அப்போது தாவூத் ஷா, நீதியரசர் பசீர் அகமதுக்கு முழு ஆதரவு அளித்தார். பெண்களுக்குக் கல்லூரி அமைப்பதை ஆதரித்துப் பேசினார்; அறிக்கைகள் வெளியிட்டார்; தாருல் இஸ்லாம் இதழிலில் காரசாரமாக எழுதினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதற்குத் திருக்குரானில் இருந்தும், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வார்த்தைகளில் இருந்தும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறி, தாவூத் ஷா ஆதரவு திரட்டினார். கல்லூரி நிறுவப்பட்டு இப்போது சிறப்பாக நடந்து வருகிறது. அந்தக் கல்லூரிதான் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.டி.டி. மகளிர் கல்லூரி.

முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்

இன்று எத்தனையோ முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். அந்த நாளில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளரையும் தாவூத் ஷாவே உருவாக்கினார்.

நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணிதான் எழுத்தாளரான முதல் தமிழ் முஸ்லிம் பெண். அவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது!
தாருல் இஸ்லாம் வாசகியான சித்தி ஜுனைதா பேகம தனது முதல் சிறுகதையை முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவூத் ஷாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு பெண் எழுதிய சிறுகதை என்றதும், தாவூத் ஷாவுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்று பெருமிதத்துடன் சிரித்தார். அந்தக் கதையை தாருல் இஸ்லாம் இதழில் உடனே வெளியிட ஏற்பாடு செய்தார்.
சித்தி ஜுனைதா பேகம் படிப்பறிவு இல்லாதவர். தாருல் இஸ்லாம் படித்துத் தான் செந்தமிழைக் கற்றுக் கொண்டார். எழுதவும் தொடங்கினார். பிற்காலத்தில் நிறையச் சிறுகதைகளும், பெருங்கதைகளும் எழுதினார்.
முஸ்லிம் பெண்களைத் தமிழ் படிக்க வைத்தது, தாருல் இஸ்லாம் தான். அதன் இனிய செந்தமிழ் நடை பெண்களைப் படிக்கத் தூண்டியது. தாருல் இஸ்லாம் படித்த பெண்கள் விடுதலை வேட்கை பெற்றார்கள்!

பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்!

ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நியமித்தார்கள். நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர் என்று அவரிடம் நாயகம் (சல்) அவர்கள் கேட்டார்கள்.
திருக்குர்ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் என்று ஜபல் சொன்னார்.

குர் ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?

உங்கள் வாக்குகளைப் பின்பற்றி நடப்பேன்

அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?

எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன்

அதுதான் சிறந்த வழி என்று நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள்.

***

நன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை

***

நூல் விமர்சனம்  பார்க்க இங்கே சொடுக்கவும்

« Older entries