நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் பற்றி ’நாயகன் குரல்’ என்ற தலைப்பில் , விகடன் தீபாவளி மலரில் (1970) வெளியான பகுதி இது. மீள்பிரசுரமாக (பொக்கிஷம் பகுதியில்?) 22/10/2008 விகடனில் இதழில் வெளீயானது. ’அனுஷ்டானம்’, ‘நியம நிஷ்டை’ என்றெல்லாம் ஜஸ்டிஸ்மாமா சொல்வதால் இஸ்லாமியர்கள் பயப்படவேண்டாம். பிராமண நண்பர்களுடன் அவ்வளவு நெருக்கம் அவர்கள்; அவ்வளவுதான். நண்பர் பி.கே. சிவகுமார் கேட்டதற்காக எழுதிய ‘கிணறு’ சிறுகதையில் (அதே 70 பக்கம்! ) கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ‘ஏன் கதையே எழுதலே?’ என்று என்னைக் கேட்பவர்கள் முதலில் எழுதியதை வாசித்தார்களா என்று தெரியவில்லை. போகட்டும், ’எம்.எஸ்.ஸின் தகப்பனார் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் படத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பரிசளித்தவர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். 1990-ல் கம்பராமாயணப் பாடல்களைப் பதிவு செய்தார் நீதிபதி இஸ்மாயில். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய பிறகு அவரின் பெரிய புகைப்படத்தை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.எஸ்ஸுக்குக் கொடுத்தாராம். வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதை எம்.எஸ்.மாட்டி வைத்தாராம்!’ ( நூல் : ’எம்.எஸ். அன்ட் ராதா’; செய்தி : தினமணி).
அதெல்லாம் இருக்கட்டும், தம்பி இஸ்மாயில் ‘ஜட்ஜப்பா’ என்ற தலைப்பில் மு.மு. இஸ்மாயில் பற்றி எழுதும் பதிவுகளைப் படிக்கிறீர்களா? இதுவரை 8 பகுதிகள் வலையேற்றியிருக்கிறார். அபூர்வமான செய்திகளும் புகைப்படங்களும் அதில் உள்ளன. மறைந்த என் சீதேவி மாமனார் – பாங்காக்-ல் இருந்த ‘நாகூர் ஸ்டோர்’ கடை வாசலில் – நிற்கும் புகைப்படத்தை (வலது ஓரத்தில், தொப்பியோடு நிற்பவர்தான் என் மாமனார்) அங்கேதான் பார்த்து கண் கலங்கினேன். சரி, ஒன்றுங்கள்… – ஆபிதீன்
***
‘யார் வெளிப்படையான அனுஷ்டானங்களையும் நியம நிஷ்டைகளையும் தவறவிடுவது இல்லையோ, அவர்களைச் சமயப்பற்று மிக்கவர்கள் என்றும் தெய்வ பக்தி மிக்கவர்கள் என்றும் பொதுவாக நாம் சொல்கின்றோம். ஆனால் எந்த அனுஷ்டானமும் நியம நிஷ்டையும் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்குமேயன்றி அதுவே ஓர் இலட்சியமாக அமைந்துவிட முடியாது. ஓர் இலட்சியம் அல்லது குறிக்கோளை அடைவதற்குச் செய்கின்ற முயற்சிக்கு அவை பயிற்சிகளாகத்தான் இயங்க முடியும். இந்தப் பயிற்சிகளுக்கு அப்பால், முயற்சியின் முடிவாக அந்தப் பரம்பொருளை அடைந்து , அவனோடு ஒன்றிவிடுவது என்பதுதான் இலட்சியமாகும்.
உலகிலுள்ள பல்வேறு சமயங்களின் அனுஷ்டானங்களும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன. இப்படி அனுஷ்டானங்கள் வெவ்வேறாக இருப்பதன் காரணமாக இறைவனுடைய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதில் மயக்கமும் குழப்பமும் உண்டாகத்தான் செய்யும். ஆனால், எப்பொழுது ஒருவன் இந்த அனுஷ்டானங்களை எல்லாம் கடந்து உணர்வுபூர்வமாக தன்னுடைய இறைவனோடு ஒன்றிவிடுகிறானோ, அப்பொழுது இந்த மயக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடமில்லாமல் போய்விடும்’ – நீதிபதி மு.மு. இஸ்மாயில்
***
நன்றி : ஆனந்த விகடன்
***
சுட்டிகள் :
கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்! – தினமணி ( மீள்பதிவு : ANUSHAM)
நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் – நாகூரி