கவிஞர் இதயதாசன்

‘மீரா ஒரு கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை’ என்பார் சுப்ரமண்ய ராஜூ (நன்றி : கசடதபற) . என் ஊர்க் கவிஞர்கள் பற்றி அப்படிச் சொல்ல மாட்டேன். ஒரு வரியும் எழுதாவிட்டாலும் கூட அவர்கள் ஒப்பற்ற கவிஞர்கள்தான்! ஏதும் எழுதாத நானே எழுத்தாளனாகி விடவில்லையா,  அப்படி 🙂

ஊர்ப்பற்று வாழ்க!

– ஆபிதீன் –

***

இதயதாசன்

சமூக நல்லிணக்கத்திற்கு  பாடுபடும் கவிஞர் இதயதாசனின் இயற்பெயர் S.M.A. காசிம் மரைக்காயர். பிறந்தநாள் 10.9.1954. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து கிளைத்த தமிழ்ப்பற்று. இதுவரை எழுதிய பாடல்கள் 10000 த்திற்கும் மேல் என்கிறார். அவைகளில் பெரும்பாலானவை சோபனப் பாடல்கள், பைத்து சபா பாடல்கள். E.M, ஹனீ·பாவைத் தவிர எல்லா இஸ்லாமியப் பாடர்களுக்கும் பாடல் எழுதியிருக்கிறார். எழுதிய நூற்கள் : நாகூர் மீரானின் காரண வரலாறு, இசுலாமிய இசையமுதம், அஜ்மீர் ஹாஜா, ஆரிபு நாயக பாமாலை, வசந்த காலம், நோன்பின் மாண்பு, ரமலான் சிறப்பு, அறுவடைக் காலம். ‘பார் போற்றும் ஆலயம் – நாகூர் தர்கா’ என்ற சிறப்புக் கட்டுரை மாலைமலர் நாளிதழில் சுமார் 3 மாதங்கள் வெளியானது. திருச்சி/காரை வானொலியில் சிலமுறை உரையாற்றியிருக்கிறார். பட்டிமன்றம் கவியரங்கம் பல கண்டதுண்டு.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக நூல் திரட்டுக் குழு உறுப்பினராகவும், நாகூர் தர்கா ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நாகை வட்ட இளம் எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். தற்போது நாகூர் தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலாளராகவும், நாகூர் காவல் சரக வி.வி.சி  கமாண்டர் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.

‘பாய்மரக் கப்பல்’ என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார். (எனவே) படம் வெளிவரவில்லை!. அடைப்புக்குறியை உபயோகிக்க அனுமதி தந்தமை இவரின் ஹாஸ்ய உணர்வுக்குச் சான்று!

குலாம் காதர் நாவலரின் மகனார் வா.கு. ஆரிபு நாவலர் அவர்களிடமும் அவர்களின் மகனார் வா.கு.மு. குலாம் ஹூசைன் நாவலர் அவர்களிடம் பாடம் பயின்றவர். நாகூர் தர்கா பீர்ஜமாவின் ஆஸ்தான கவிஞர் , இன்றளவும். இசை வழியில் , நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்களிடம் வர்ணம் வரை சங்கீதப் பயிற்சி. கூடவே பகுதாது நானா அவர்களிடம் குஸ்தியும் பயின்றிருக்கிறது இந்தக் ‘கவிப்புயல்’. பேரறிஞர் அண்ணாவிடம் 1967ல் வில்லியம் பேனா பரிசு பெற்றதையும், ‘புலவர் கோட்டை’ என்று தன் ஊர்ப் பெயரை குறிப்பிட்டிருந்ததற்காக ஜஸ்டிஸ் இஸ்மாயில் அவர்களிடம் 1979ம் வருடம் பாராட்டு பெற்றதையும் மறக்க இயலாத ‘புயலின்’ ஒரு பாடல் இங்கே :

க(¡)ட்சிகள்
————
நால்வர் சேர்ந்தால் ஒரு கட்சி
நத்தைகள் போல உருவாச்சு
நண்டு சொண்டு இதுகளெல்லாம்
நாலா புறமும் வந்தாச்சு…!

வட்டம் நகரம் ஒன்றியங்கள்
வகையாய் பிரித்து வைத்தாச்சு
மாவட்டம் தோறும் மாநாடு
நடத்திட உண்டியல் எடுத்தாச்சு…!

கொடிகள் தோரணம் கட்டவ்ட்டு
கோஷங்கள் போட்டு வீதியிலே
போக்கு வரத்தைத் தான் தடுத்து
போகுது பாரு ஊர்வலங்கள்..!

எத்தனை நிறங்கள் கொடிகளிலே
எண்ணிப் பார்க்க முடியவில்லை
எத்தனை அணிகள் இவைக்குள்ளே
எல்லாம் பதவியின் தாக்கங்களே…!

மாணவர்க்கென்று ஒரு அணியும்
மகளிர்க்கென்று ஒரு அணியும்
மீனவர்க்கென்று ஒரு அணியும் – விவ
சாயத்திற்கென்று ஒரு அணியும்

இளைஞர்க்கென்று ஒரு அணியும்
இலக்கியம் பேச ஒரு அணியும்
தொழிலா ளர்அணியும் உண்டாமே
தொண்டர் அணியும் உண்டாமே…!

வக்கீல் மருத்துவர் அணிகளுடன்
வகை வகையாக பல முடிச்சு
சட்டை வேட்டையில் கரையிருக்கும்
சமூக அக்கறை இருக்காது…!

***

‘மகசூல் பெருக்கிய மாநபி உம்மத்
மாநிலமெங்கும் மாண்பினைக் கண்டது’ என்று ‘பன்முகப் பெருமான்’ஐப் பாடும் இவருடைய மற்ற பாடல்கள், இன்ஷா அல்லாஹ், விரைவில் !