மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்

மதிப்பிற்குரிய SLM ஹனீபா அவர்களைப் பற்றிய ‘மக்கத்துச்சால்வை மண்ணும் மணமும்’ சிறப்பு மலரில் நான் எழுதியது:

***

‘… அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா? உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன். இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது’ என்று இந்தப் பீத்த எழுத்தாளனுக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார் மரியாதைக்குரிய ஹனீபாக்கா – பத்து வருடங்களுக்கு முன்பு. நண்பர்கள் மூலம் முன்னரே அவரைப் பற்றி கேள்விப்பட்டு, ‘நூலகம்’ தளத்தில் ரசித்துப் படித்து, ’எத்தனை நாளைக்கு ‘மக்கத்து சால்வை’யையே போர்த்திக் கொண்டிருப்பது? அல்லது பக்கத்து ‘பஷீர்’-ன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பது?’ என்றொரு வரியை ’இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்!’ கதையில் குறிப்பிட்டிருந்தேன். என்றாலும், மெயில் அனுப்பியது அவராக இருக்காது என்ற சந்தேகத்தில் இருந்தேன். சந்திக்கிற நண்பர்களிடத்தில் எல்லாம் இவனுடைய வாழைப்பழத்தை பிடித்துப் பாருங்கள் என்றே கிண்டலாக சிபாரிசு செய்பவர் இவரேதான் என்று அப்புறம்தான் தெரிந்தது, நண்பர் உமா வரதராஜனும் ’அவர் வம்பளப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில் தன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயணைனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.’ என்று எழுதியிருந்தார். உண்மைதான்.

என்னுடைய ’ச்சோட்டா’ இணையதள வாசகர்களுக்காக இலங்கை எழுத்தாளர்கள் பலரை காக்கா அறிமுகப்படுத்தியிருக்கிறார். நானாக ‘உருவுஉருவுண்டு உருவி’ (சாதாரண அர்த்தம்தான்..) வாங்கிய கதைகளும் (உம்.: எஸ்.பொ அவர்களின் ’ஆண்மை’) உண்டு. காக்காவின் ’சிவப்புக்கல்லு மூக்குத்தி’ என்ற காதல் கதை வந்து தளத்தில் கண் சிமிட்டும். ’ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும்’ , ’புலவர் மாமா’ என்று தொடர்கள் எழுதுவார் – நளீமின் ஓவியத்தோடு. தான் ரசித்த கட்டுரைகளை அவ்வப்போது அனுப்பிவைப்பார். என் பக்கங்களை எந்த வகையிலும் மலினப்படுத்தி விடக் கூடாது என்பதில் என்னைவிட அவருக்கு அக்கறை அதிகம் இருந்தது. அனார், அறபாத் , ஸபீர் ஆகியோரின் அன்பும் அவர் மூலம்தான் கிடைத்தது,

எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னைப் புத்தக விழாவுக்குச் சென்றபோது புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரை சந்தித்துவிட்டு (அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை – ஜெயமோகன்) அப்படியே நாகூரும் சென்று என் மனைவி மக்களைப் பார்த்து வந்ததைக் குறிப்பிட வேண்டும். ’அரசரை (ஷாஹூல் ஹமீது பாதுஷா) காணாமல் அஸ்மாவை தரிசித்தேன்’ என்று என் ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் பின்னட்டையில் அவர் குறிப்பிட்டதற்கு நான் ஏழு ஜன்மம் தவம் செய்திருக்க வேண்டும்.

அஸ்மாவைக் கிண்டல் செய்து முகநூலில் பதிவு எழுதினால் மட்டும் இந்த மனுசனுக்குப் பிடிக்காது. ’ எண்ட தம்பிக்கு உங்கையாலேயே ஒரு சொட்டு பொலிடோல கொடுத்து இந்தக் கிழட கைகழுவி விடு.. கவனம் கை பத்திரம்’ என்று அவளுக்கு அறிவுரை போகும். வாட்ஸப்பில் எனக்கும் திட்டு வரும்! அவ்வளவு கரிசனம் என் உயிர் மேல்!

நாகூர் சென்றுவிட்டு அவர் அனுப்பிய மெயில் இது :

நாகூர் நகரத்தையும் அந்த வீடுகளின் அமைப்பையும் எந்நாள் மறக்க முடியவில்லை. அத்தனை வீடுகளிலும் நமது மூதாதையர்களின் இரத்தமும் வீரமும் பாரம்பரியமும் ஊடுருவியிருப்பது போல் உணர்கிறேன். ஐம்பதுகளின் இறுதியில் எனது வாப்பாவுக்கு நாகூரிலிருந்து கொடியேற்றத்திற்கான அழைப்பிதழ் தபாலில் வரும். வாப்பா, எங்களின் தலையைச் சுற்றி விட்டு, எப்பாடுபட்டாவது ஐந்து ரூபா பணத்தை காணிக்கையாக தபால் மூலம் நாகூருக்கு அனுப்பி வைப்பார். அப்படியானவொரு காலம் இருந்தது. வாழைச்சேனை ரயில்வே நிலையத்திலிருந்து நாகூருக்குச் செல்வதற்கான டிக்கட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் போர்ட் வீசா என்ற பிரச்சினையெல்லாம் மனிதன் மனிதனாக வாழ்ந்த போது இருக்கவில்லை. நான் நம்புகிறேன். இன்னும் 25 வருடங்களில் அந்தக் காலம் திரும்பி வரும். அந்த நாளில் நாங்கள் இருக்க மாட்டோம்.

இடையிடையே, ’உன்னைப் பயம் காட்ட விரும்பவில்லை; என் உடல்நலம் சரியில்லை’ என்று சமயத்தில் அவர் குண்டு போடும்போதுதான் பகீர் என்கிறது. அந்த நிலையிலும், ’உன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், நமது பிரார்த்தனைகள்தான் படச்ச ரெப்புவின் காதுக்கு எட்டுவதில்லையடா!’ என்றுதான் எழுதுவார்.

நிச்சயமாக எட்டும். காக்காவின் நலத்திற்கு – இந்த நினைவுக் கொறிப்புகளுடன் – துவா செய்கிறேன்.

அவருடைய ஆசிகளுக்கு ஏங்கும்,

ஆபிதீன்
*.
மலரின் பிரதிகளுக்கு:
மக்கத்து சால்வை வாசகர் வட்டம்

No. 159, MPCS Front Road, Mavadichenai, Valaichenai – 30400,
Sri lanka.
arafathzua@gmail.com

***

தொடர்புடைய பதிவுகள் :

மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்
மல்லியப்புசந்தி திலகர்

படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
முருகபூபதி

ஹே, ஷைத்தான்! (சிறுகதை)

நன்றி : திண்ணை (Sep’2003)
***

‘பக்வான் ‘ டி.வியில் மாட்டிக் கொண்ட ஒரு எழுத்தாளனின் பரிதாப நிலையைப் படித்தபோது இதேபோல் மாட்டிய என் காஞ்சூர் நண்பனின் கதையையும் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது வேறு டி.வி. ஷைத்தான் டி.வி! அவர்கள் Saturn T.V என்று அழகாய் தமிழில் பெயர் வைக்க தமிழக ஜனங்கள் ஏனோ ‘ஷைத்தான் டி.வி ‘ என்று செல்லமாக அழைக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். சனிபகவானுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு என்று டி.விக்காரர்களும் கவலைப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. ‘மலம் டி.வி ‘ என்று வைத்தால் கூட மாலை போட்டு வணங்க மகா ஜனங்கள் ரெடியாக இருப்பார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்.

ஷைத்தான் டி.வி, உலகத்தில் தெரியாத இடமே இல்லை. ஷைத்தான் இல்லாத உலகமும் இல்லை அல்லவா ? ‘ஈமான் கொண்டவர்களே ! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ‘ என்று பயான் செய்யும் ஒரு காஞ்சூர் மெளலவி கூட பார்ப்பதெல்லாம் ஷைத்தான் டி.வி. ஷைத்தானின் சகோதரனான இன்னொரு டி.வி நாள் முழுக்க சினிமாக்களை காட்டிக் கொண்டிருப்பதால் நோன்பு காலத்தில் கூட இப்போதெல்லாம் களைப்பே தெரிவதில்லையாம் அவருக்கு. ஷைத்தான் டி.வியின் பெரும் சாதனையாக , பச்சை வண்ன சால்வையையே எப்போதும் அணியும் பகுத்தறிவுத் தலைவரின் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதைச் சொல்லலாம். சிவப்பு வண்ண சேலையே எப்போதும் அணியும் அக்கா (68 வயது)வை ஒரு ஜக்கம்மா டிவி, சாட்சாத் பார்வதி தேவியாகக் காட்டும்போது தாத்தாவின் மூளையைக் காட்டுவதில் தவறுமில்லைதான். ஆனால் அவரைக் காட்டியது போக மீதி நேரங்களில் எல்லாம் பாவாடையை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு பின்பக்கத்தை குலுக்கி ஆட்டியபடியே பின் நகரும் வினோத நடனங்களை காட்டிக் கொண்டிருக்க வேண்டுமா ? ‘நாங்கள் எங்கே அய்யா காட்டுகிறோம் ? சினிமால வர்றதைதானே போடுறோம்.. ‘ என்கிறார்கள். நம்மால் பதில் சொல்ல முடியாது. போடட்டும்! மீதி நேரங்களில் எல்லாம் என்றா சொன்னேன் ? தப்பு. இடையில் மங்காக்கா வழங்கும் மாலைப்பாட்டு இருக்கிறது. நேயர் விருப்பம். ‘அன்புள்ள மங்காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்..! ‘ என்று அரபுநாட்டு தமிழ் ஜனங்கள் எல்லாரையும் மடல் எழுத வைத்திட்ட மகோன்னத நிகழ்ச்சி. அப்புறம் குறட்டை அரங்கம் , சட்டி ஒலி என்று நான்காயிரம் வாரமாக தொடரும் பத்து நிமிட நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

ஷைத்தான் டி.வியில் நான் விரும்பும் ஒரே நிகழ்ச்சி ‘காலேயே வா! ‘ தான். காலைக்கடன் முடிக்காமலேயே வரும் அறிஞர்களை பேட்டி காண்பார்கள் அதில். பேட்டி கண்ட பிறகு அவர்களாலேயே மறுபடியும் பேட்டி காண இயலாது! பே.மு , பே.பி என்ற ஒன்று இருக்கிறது.

பேட்டிக்குப் போனவர்கள் பேயறைந்த மாதிரி திரும்புவதற்கு பேட்டி எடுத்தவர்களின் கேள்விகள்தான் காரணம் என்று பேச்சு நிலவுகிறது. பேட்டி கொடுப்பவர்களின் சாதனைகள் பற்றி முன்பே தெரியவில்லை ஷைத்தான் டி.விக்காரர்களுக்கு என்பது இன்னொரு குற்றச் சாட்டு. தெரிந்ததினாலும் மதிக்காமல் இருக்கலாம் அல்லவா ? போகிறவர்களை இருக்கிறவர்களை முதலில் மதிக்க வேண்டும். இருப்பவர்களை சாதாரணமாக நினைக்கலாமா ? நான் பார்த்த பேட்டி ஒன்றில் ‘கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்று சின்ன வயதில் நடத்தியதுண்டு ‘ என்று ஒரு எழுத்தாளர் வானத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னபோது ‘அப்படியாங்க..எவ்வளவு காப்பி பிரிண்டிங் பண்ணுனீங்க ? ‘ என்று நிதானமாகக் கேட்டது ஒரு அம்மணி! கூட இருந்த இஞ்சிமுரபாவோ , offsetலெ எவ்வளவு, screen printingலெ எவ்வளவுண்டு சொல்லிடுங்க சார். நேயர்களுக்கு உதவியா இருக்கும் ‘ என்றார்.

‘அங்கே அப்படித்தான் கேள்வி கேப்பாங்கண்டு தெரியாதா ? ஏன் போனே ? நான்லாம் போவ மாட்டேன். முகம் பூரா பவுடரும் ஒதட்டுக்கு சாயமும் பூசிக்கிட்டு என்னாலெ நடிக்க முடியாது ‘ என்று வீராவேசமாகப் பேசிய எழுத்தாளர் பரதேசி (பர என்றால் கடந்த, தாண்டிய என்று அர்த்தம்) பின்னர் அத்தோடு கண்ணுக்கு மையும் சேர்த்து விட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தார். ஆசை காட்டியே ஆட்சியைப் பிடிக்கும் ஷைத்தானுக்கு தெரியும் சைக்காலஜி! எல்லோரையும் தள்ளிக் கொண்டு மேலே வந்து காட்சி தருவதற்கு பல வித்தைகள் தெரிய வேண்டியதிருக்க பரதேசியோ தானாகவே ஷைத்தான் டி.வி தன்னைக் கூப்பிட்டதாகவும், தன் கருத்துக்களை எடுத்து வைக்க ஒரு வாய்ப்பாக எண்ணியே ஒத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். Roman Polanski பற்றி பேசிக் கொண்டு சிங்கத்திற்கு மதம் பிடிக்க வைக்கிற திரைப்படங்களை அளிக்கும் சினிமா கள்ளர்களும் அப்படித்தான். பார்த்தாகிவிட்டது எல்லாப் பாசாங்குகளையும்…

‘அசையும்போது உணர்ந்து அசைய வேண்டும் ‘ என்று ஆன்மீகம் பேசும் நண்பனும் ஆசையில் இப்போது மாட்டியதெப்படி ?

எப்படியோ, எனக்கு மட்டுமல்ல. ஊர்க்காரர்களுக்கும் அவன் அசைவில் கொஞ்சம் பெருமிதம்தான் என்று ஒத்துக் கொள்ளவே வேண்டும். தவிர வளர்ந்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏதாவதொன்று இருக்கவே செய்யும். இதற்கு முன் இவனை விட 10 செ.மீ வளர்ந்திருந்த இவனது பெரிய தந்தை ஹலீம் மரைக்காயர் இதே நிகழ்ச்சியில் தன் முகத்தை அசைத்துக் காட்டினார். காட்ட வேண்டிய முகம். ஒரு எழவும் தெரியாத கவிஞர்களே உலகத்தை நெம்புகோலால் நிமிர்த்து விட்டதாகச் சொல்லும்போது பெருமழையாகக் கொட்டும் இவரது சாரலில் அனைவரும்நனைவது அவசியம். ‘ஜூட்டு போலே கவ்வா காட்டே ‘ என்று நாம் பாடிய மறு நொடியில் ‘சாப்ப்ட்டு பாரு ரவா தோசை.. ‘ என்று அம்பு புறப்பட்டு வரும்!

குலாம் அலியின் ஒரு பஞ்சாபி நாட்டுப் புறப் பாடலுக்கு ஹலீம் மரைக்காயர் எழுதிய எளிமையான பாடல் மனதை என்னமோ செய்யும். ஊரில் அடங்கியிருக்கும் இறைநேசரை – வழக்கம்போல – கெஞ்சுவார்.

‘ஒரே நம்பிக்கையில் ஓடி வந்தேன் நாதா
ஒதுங்க ஒரு இடமில்லையா உதவி தர மனமில்லையா
இன்னும் எத்தனை நாள் இந்தநிலை – மீரா
எதற்கும் ஒரு முடிவில்லயா எனக்கும் ஒரு விடிவில்லையா ? ‘

விடிவு வந்து, இவர் ‘காலையே வா! ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை கேள்விப்பட்டேனேயொழிய பார்க்க முடியவில்லை. அந்த சமயத்தில் அபுதாபி எல்லையில் உள்ள ஒரு பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு , 160 செல்லப்பெயர்களில் அரேபியர்களால் அழைக்கப்படும் ஒட்டகம் பற்றி பல உண்மைகள் புரிந்திருந்தேன். (ஒட்டகத்தின் மலத்தை அது போட்ட ஒரு மணி நேரத்திற்குள் பற்ற வைத்து விடலாம். அத்தனை சக்கை. etc..) அந்த இடத்திலிருந்து தப்பித்து வேறு துபாய் கம்பெனியில் சேர்ந்து , விசா மாற்றவும் (அப்படியே ‘டி.வி ‘ பார்க்கவும்தான்!) ஊர் போயிருக்கும்போதுதான் மறக்காமல் அவர் வீட்டுக்குப் போய் பதிவு செய்த நிகழ்ச்சியை சற்றுப் போடச் சொன்னேன். ‘இறைவனை யாருக்குத் தெரியும் நபி இரசூல் இல்லையென்றால் ‘ என்ற அவரின் பாடல் இஸ்லாமிய உலகில் ஒரு புயலையே கிளப்பியதாயிற்றே (அந்த உலகு சும்மாவே புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் !). இது சம்பந்தமாக ஏதும் சொல்கிறாரா என்று கேட்கத்தான். என் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது ? நேரில் உட்கார்ந்திருந்தவிடம் கேட்கவில்லை பாருங்கள்! அவர் எங்கே உட்கார்ந்தார் ? கேசட்டைப் போட்ட மருமகனின் முகத்தைப் பார்த்ததுமே தலைதெறிக்க வெளியே ஓடிவிட்டார்!

எனக்கு ஆச்சரியாக இருந்தது. உலகப் புகழ் பெற்ற ஷைத்தான் டி.வியில் தன் மாமனார் வந்திருக்க இந்த மருமகனின் முகத்தில் ஏன் இப்படி வெறுப்பு – கொத்துப் புறாட்டா போடும் ‘தவ்வா ‘ மாதிரி!

அவனிடமே கேட்டேன்.

‘வந்து கேக்குற தெரிஞ்சவங்க அறிஞ்சவங்களுக்குல்லாம் போடுறேன். இதோட முன்னூத்தி எழுபதாவது தடவை! எப்படி நானா இவரை பாக்குறது! ? ‘

ஹலீம் மரைக்காயர் , பார்க்க சாபுவீட்டு ஆள் மாதிரி இருப்பார். அவருக்கே இப்படி என்றால் வந்து போகும் சில கவர்ச்சித் திலகங்களைப் பார்த்து எப்படிக் கதறுவானோ, தெரியவில்லையே!

நண்பன் நல்லவேளையாக அப்படி முகம் கொண்டவனல்ல. அழகன். நிஜமாகவே சாதனை செய்தவன். பட்டினி போட்ட காஞ்சூரிலிருந்து இப்போது திருவண்ணாமலையில் ஏறியிருக்கிறான். பெரிய துணிக்கடை முதலாளி இப்போது. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான். கண்ணை மூடிக்கொண்டு, முன்னே உள்ள முன்னூறு படிகளை சுயமாக ஏறிக்கடந்தவனின் எழுத்து ஈர்க்கவே செய்யும். ‘காந்தக் கண்கள் ‘ என்ற அந்த புத்தகம் இப்போது விற்பனையில் போடு போடென்று போடுகிறது. நடந்து முடிந்த பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சியில் கூட கண்ணைக் கட்டிக் கொண்டு அந்த புத்தகம் வாங்க வந்தார்கள் கூட்டம் கூட்டமாக.

எனக்கு அவனைப் பிடித்துப் போனது அவன் எழுத்தால் அல்ல. என் மேல் அவன் காட்டும் அநியாய பாசம்…..இவனைப் புகழ ஆயிரம் பேர் இருக்க இவன் என் எழுத்தை புகழ்கிறானே! நான் எழுதிக் கிழித்தவைகளை என் பெயரிலேயே வெளியிட்டவன். நிறுத்தற்புள்ளிகளே இல்லாமல் ஒரு புண்நவீனத்துவ தொகுதியாக மாறிவிட்டிருந்த அதில் வரும் அநியாய அச்சுப் பிழைகள் சம்பந்தமாக மறு புத்தகமும் – அவனது சொந்தச் செலவில் – வெளியிடப்போகிறான். இந்த காலத்தில் நண்பர்கள் செய்யும் வேலையா இது ?

‘புதன் கிழமை ஷைத்தான் டி.வியில் வருகிறேன் ‘ என்று அவனிடமிருந்து என் கைத்தொலைபேசிக்கு தகவல் வந்ததுமே மனம் உற்சாகத்தில் பறந்தது. சற்று நேரத்தில் இதே தகவலை என் ஊர்க்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எரிச்சலாக இருந்தது. ஒரே செய்தியை ஒன்பதாயிரம் பேருக்கு ஒரு நொடியில் அனுப்பும் உயர்சேவைகள் ஒழிக!

‘கூட்டாளி வர்றாஹா போலக்கிதே ‘ என்ற ஊர்க்காரர்கள் அதோடு விட்டு விடவில்லை. விட்டால் காஞ்சூர் பட்டியலிலிருந்தே நீக்கப்பட்டு விடுவார்கள் இல்லையா ?

‘ஏன் நானா, நீங்க எப்போ ஷைத்தான்லெ வரப்போறீங்க ? ‘

‘உலகத் தொலைக்காட்சிகளிலே முதன்முறையாக ‘ , ஷைத்தானை பேட்டி காணும்போது வேண்டுமானால் என்னைக் கூப்பிடலாம். இதுவரை என்ன சாதித்திருக்கிறேன் ? ஒரு 6X8 அடி அறையில் , தனிமையின் துயர் தீர்க்க நாலுலட்சம் தடவை குறுக்கும் நெடுக்குமாக நடந்திருக்கிறேன். இதைச் சொல்லலாமென்றால் இதற்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்கிறார்கள். ‘காலையே வா ‘ அல்லவா காண்போருக்கு அறிவு தருவது!

முன்பெல்லாம் முப்பதுபேருடன் ஒரு அறையில் வசித்தபோது அந்த கட்டிடத்தின் மேலிருந்த ஒரு பெரிய analog டிஷ்ஷில் ஷைத்தான் வந்து கொண்டிருக்கும். நான் மட்டும் பிரேதம் டி.விக்கு திருப்பச் சொன்னால் என்னைக் கொன்றே போட்டு விடுவார்கள். முக்கியமாக மலையாளிகள்! ஒரு மணற்புயலில் நல்லவேளையாக அந்த டிஷ் தூக்கியெறியப்பட்டதும் எனக்கென்று ஒரு தனி ரூம் கிடைத்ததும் அதிர்ஷ்டம். அந்த தனிஅறைக்குப் பக்கத்தில்தான் டிஜிடல் டிஷ் பொருத்த எண்ணினேன்.சின்ன முதலாளி ஷஹீன் மாலிக் என்னிடம் பிரியமாக இருப்பான். கெஞ்சியபடி கேட்டேன்.

‘உண்மையை ஒத்துக் கொள். 24 மணி நேரமும் தெரியும் ‘ஜிக்ஜிக் ‘ சேனல்களைப் பார்க்கத்தானே வேண்டும் என்கிறாய் ? ‘ என்று தன் வலது கையை மடக்கி பக்கவாட்டில் வேகமாக அசைத்துக் கொண்டே குறும்பாகக் கேட்டான்.

‘அதுவும்தான் அப்புறம் இசை சம்…. ‘

‘அது மட்டும்தான் என்று சொல் என் மலபாரி இதயமே ‘

‘மதறாஸி யா அஹூக் ‘

‘கனீஸ்! எல்லாருமே வீணாப்போனவர்கள்தான். சொல் ‘

‘அது மட்டும்தான் ‘

‘யல்லா! உஸ்கோ ஏக் டிஷ் தியோ ‘ என்று மேலாளரிடம் சொல்லிவிட்டுப் போனான். எனக்கு ‘ச்சோட்டா ‘ டிஷ் கிடைத்தது (receiverஉடன்தான்). உலகம் அற்புதமான ஒன்றாக மாறிப் போனது.

அற்புதத்திற்கு காரணம் அதில் ஷைத்தான் வராததுதான். autoscan செய்தால், டி.வி சேனல்கள் தவிர உலகம் முழுக்க உள்ள FM ரேடியோ அலைகளும் முன்னூறுக்கு மேல் கிடைத்ததில் எனக்குப் பிடித்த இசையைக் கேட்க முடிந்தது. அதைக் கணினியுடன் இணைத்து , zetaudio அல்லது soundforge உதவியுடன் mp3யாக மாற்றிக் கொண்டிருந்ததில் (Tips : ‘creative live gold ‘ sound card , ‘ஸ்ஸ்ஸ் ‘சைக் குறைக்கும்) கொஞ்சம் குடும்பச் சண்டைகளை மறக்க முடிந்தது.

மனிதன் சந்தோஷமாக இருப்பதாவது ? அப்புறம் இறைவன் எதற்கு இருக்கிறான் ?

ஷைத்தான் வந்து விட்டது!

இப்போது அதில் நண்பனும் வருகிறான்.

நான் என் பங்குக்கு இணைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். ஜெர்மனியானாலும் கனடாவானாலும் கிழமைகள் சரியாகவே வருகின்றன! துபாயில் தெரியும் ஷைத்தானின் கால் தற்போது UKயில் இருப்பதால் ஒளுபரப்பில் நேரக் குழப்பம் இருந்தது. ஷைத்தானின் அடிமைகள் இதை வைத்து ஒரே நிகழ்ச்சியை இருமுறை பார்த்தார்கள்! எல்லாம் வானிலிருந்து வரும் அலைகளுக்கே வெளுச்சம்! என்னிடம் ‘evision ‘ கிடையாது.

அலுவலக நேரம் உதைத்தாலும் மேலாளரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, புதன் கிழமை சரியாக துபாய் நேரம் 9.30க்கு ஷைத்தான் முன் உட்கார்ந்தேன். இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்பே நண்பனும், அவனது தகவலால் பரபரப்பான ஊரும் பார்த்திருக்கும் என்ற விஷயம் என் நேரம் சரியில்லை என்று உணர்த்தியது.

வரப் போகும் நண்பன் , என்னைப் பற்றியும் ஒரு வரி சொல்லக் கூடுமென்று மனதில் ஒரு நப்பாசை. ‘உன்னெட்ட உள்ள ஒரே குறை வள வளண்டு எழுதுறது ‘ என்றதற்கு பதிலாக நான் ஐயன் கோட்டத்து ஆதிமூலமாய் மாறி ‘அ ‘ என்று மட்டும் எழுதி ஒரு கதை அனுப்பியதில் அவன் கோபமாகியிருந்தான். இதைப் பற்றி சொல்வானா ? வளர்ந்தவனின் வசையும் ஒரு இசையே! அல்லது ‘கோத்ரா ‘ நிகழ்ச்சியை கோமாளித்தனமாக சித்தரித்துக் காட்டிய ஷைத்தானைக்கு சூடு வைப்பானா ? ஷைத்தானுக்கு சூடு வைக்க மனிதனால் முடியுமா ? பார்ப்போம்.

வந்தான் பிரதான விருந்தாளி -cum -அறிஞனாக நண்….., இல்லை, வந்தாள் நைஜீரியாவின் பிரபல தமிழ் எழுத்தாளினி திருமதி. மங்களா சந்திரன்!

ஐயோ, பருப்பு ரசமும் கீரை மசியலும் தவிர வேறென்ன தெரியும் உனக்கு ? முகவை மோகனா போல மூர்க்கமாக எழுத முன்னூறு வருடமாகுமே மாமி உனக்கு!

எப்படியாவது தொலையட்டும், நண்பன் எங்கே ?

ஒருவேளை அவன்தான் ஆன்மீகப் பயிற்சியின் உச்சத்தில் மங்களாவாக மாறிப் போனானோ ? சகோதர மதத்தைச் சார்ந்த சில சாதுக்களுக்குத்தான் அவர்கள் தங்களை பெண் தெய்வமாக நினைக்கும்போது ஸ்தனங்களும் முளைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவனுக்குமா ? அநியாய பயிற்சி எடுத்திருப்பான் போலிருக்கிறதே!

நான் சொன்னதற்காக அந்த நேரத்தில் உட்கார்ந்த சில நண்பர்களுக்கும் குழப்பம் இருந்திருக்க வேண்டும். கத்தினார்கள். அவர்கள் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல.

எனக்கு குழப்பமும் எரிச்சலும். டி.வியை அடக்கிப் போட்டுவிட்டு ஃபோன் போட்டேன். அவனது மூத்த மகள் ஹசீனா எடுத்தாள்.

‘வாப்பா கோவமா இக்கிறாஹா. எங்கேயோ வெளிலே போனாஹா ‘ என்றாள்

ஊர் மாறினாலும் அவள் பேச்சு இன்னும் மாறாதது சந்தோசத்தை அளித்தது ( ஊர் பாஷையில் சொன்னால் ‘ஹல்புலாம் குளுந்து போச்சு! ‘)

‘ஏங்கண்ணு ‘ என்று கேட்டேன் தெரியாதது மாதிரி

‘அஹ ப்ரொக்ராம் நேத்தே வந்திடிச்சாம். இங்கேயும் நாங்க யாரும் பாக்கலே அங்கிள் ‘ ‘

‘இபுலீஸ்ட்டேர்ந்து தப்பிச்சிட்டொம்ங்குறே! ‘

‘வாப்பாட்டெ சொல்லிக் கொடுத்துடுவேன்! ‘

‘ஏ வாலு, கலாட்டா பண்ணி வுட்டுடாதே..! வாப்பாவை திட்டுறதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன். சரி , வெள்ளிக் கிழமை காலைல உங்க ஊரு டைம் பதினொன்றரை மணிக்கு ஃபோன் பன்றேன். வாப்பாவை இருக்கச் சொல்லு ‘

வெள்ளிக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் ஃபோன் ரேட் , நிமிடத்துக்கு 2.69 திர்ஹம்தான். சேமித்து பங்களா கட்டலாம்!. சரியாக துபாய் டைம் காலை பத்துக்கு ஃபோன் செய்தேன். ஊரில் யாராவது அவனது நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தால் அதில் ஒரு பிரதி எடுத்து எனக்கும் அனுப்புமாறு சொல்லவும்தான்.

ஹசீனாதான் போனை எடுத்தாள்.

‘நேத்து காலைல நீங்க சொன்ன டயத்துக்கு கரெட்க்டா வாப்பா காத்துக்கிட்டிருந்திச்சி அங்கிள்! ‘

(End)

அருஞ்சொற்பொருள்

அஹூக் – சகோதரன்
கனீஸ் – ஆபாசமான திட்டு
யல்லா – ‘ஆகட்டும் ‘ என்று சொல்வது
ஹல்பு – இதயம்
இபுலீஸ் – ஷைத்தான்

கனவுக்குள் கனவு – ஆபிபாய் விமர்சனம்

ஃபேஸ்புக்கில் முந்தாநாள் எழுதியது. பகிர்கிறேன். கனவிலாவது வாசியுங்கள். நன்றி. –  AB
**
 
’.. என்னுடைய ’கனவுக்குள் கனவு’ சூஃபிஸ நாவலை இதுவரை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஏன் அதுபற்றி முகநூலில் நீங்கள் எழுதவில்லை?’ – மெஸ்ஸெஞ்சரில் மிரட்டியிருந்தார் பிரியத்திற்குரிய நூருல் அமீன் ஃபைஜி.
 
படித்ததால்தான் என்று சொல்லமுடியவில்லை!
 
உயிர் நண்பரான மர்ஹூம் தாஜ் எழுதிய ‘தங்ஙல் அமீர்’ புத்தகம் உள்பட எதற்குமே விமர்சனம் நான் எழுதியதில்லை. எழுத்தாளனா நான்? அப்படியெல்லாம் எழுதவும் வராது. ஏன் அனுப்பிவைத்தார்? தெரியவில்லை. ‘சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் சூஃபி’ என்று ஏதோ ஒரு கதையில் எழுதியதாலா? இருக்கலாம். அதெல்லாம் என் கிறுக்கல்கள் அமீன். சூஃபிஸத்தைக் கரைத்து ஊற்றும் பேராசிரியர்கள் நாகூர் ரூமி ரமீஸ் பிலாலி , கவிஞர் ஹைமா ஹாத்துன், மன்னிக்கவும், நிஷா மன்சூர் போன்றவர்களே இந்த நூலைப் பாராட்டிய பிறகு நானும் எதற்கு?
 
இருந்தாலும் கொஞ்சம் சொல்ல முயற்சிக்கிறேன் தயவுசெய்து அமீன்பாய் கோபிக்கக் கூடாது. நாவல் நன்றாக வந்திருக்கிறது!
 
தமிழின் நல்ல நாவல்கள் எதையுமே படிக்காமல், ‘இது பின்நவீனத்துவ முறையில்’ வந்திருக்கிறதென்று ஒருவர் சொன்னபோது சிரிப்பாக இருந்தது. எந்த முறையோ, இந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு – ’லா இலாஹா இல்லல்லாஹ்’வுக்கு விளக்கம் என்று உலூஹிய்யத், உஜூது, சிஃபாத், அஃஆல், ஆஸார் என்று விரியும் பக்கங்களையும், தக்வா – தவக்கல் – கியால் – தஜல்லி என்று விளக்கும் பக்கங்களையும் தவிர. ‘அஃப்யானே தாபிதா’வும் அப்படித்தான். ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள்படும் முராக்கபாவையும் அகவிழிப்பு எனும் முஷாஹதாவும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம் (இதில் ஐம்பது பக்கங்கள் போய்விடும்!)
 
தெரியாமல் கேட்கிறேன், இது நாவலா அல்லது ’ஏகத்துவ இறைஞானம்’ இரண்டாம் பாகமா?
 
படிக்கிற முஸ்லிம்கள் பரவசப்படலாம். மற்றவர்கள் பயந்து ஓடிவிடுவார்களே…
 
இவர் நேரில் கண்ட ஹஜ்ரத்தை விட தான் காண விரும்பிய ஹஜ்ரத்தை காட்டியிருக்கிறார் என்பதும் என் அபிப்ராயம்.. William Chittic – Annemarie Schimmel – ஜே. கிருஷ்ணமூர்த்தி – விவேகானந்தர் ஓஷோ நூல்கள் , கிரேக்க ஞானி Epictetus சொல்வது , மேக்ஸ்வெல் மால்ட்ஸ்-ன் Self Image Pshychology , எமிலி கூ பிரபலப்படுத்திய Auto Suggestion பயிற்சி , குர்ஆனை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்த Toshihiko Izutsu எழுதிய Sufism and Taoism புத்தகம், Ontology எனும் கடலில் கால் வைத்தல் , பிரம்மத்தின் தரிசனம் பற்றி சுஜாதா எழுதிய வாசகங்கள் , இப்னு அரபி பற்றி பேசும் Claude Addas , Inception படம் பார்த்த Oludamini Ogunnaike, ‘இல்முல் கியால்’ பற்றி விளக்கும் Hendry Corbins, அல்லாமா இக்பாலின் கவிதை என்று சகலமும் தெரிந்த – பிறர் மனதில் உள்ளதை விளங்கிக் கொள்ளும் கஷ்ஃபுடைய – ஹஜ்ரத்…
 
துபாய் மால்-ல் உள்ள Kinokuniya புத்தகக் கடலை மொய்க்கும் அமீன்தான் இது – பார்ப்பதற்கு இவர் பாலகுமாரன் போல இல்லாவிட்டாலும்.
 
நூர் (ஒளி) பற்றி விளக்கும் பாடத்தில், பிரபஞ்சம் என்பதே அவன் பேரழகை வெளிப்படுத்தும் சினிமாதான் என்று அற்புதமாகச் சொல்கிறார்கள் ஹஜ்ரத்.
 
இடையிடையே மெய்ஞானியர்களின் மேன்மையான மேற்கோள்கள் , அவர்கள் சொல்லும் அருமையான கதைகள்… நிதானமாக வாசிக்க நமக்கு வருடங்கள் வேண்டும். ஆனால், இவ்வளவு தகவல்கள் ஒரு நாவலுக்குத் தேவையா?
 
சில விசயங்கள் தேவைதான். கழுத்துக்குக் கீழே டை போல – பெண்களின் சடை பின்னல் போல – அமீரக அரபிகள் அணியும் தர்பூஷுக்கு காரணம் இவர் சொல்லித்தான் தெரிந்தது . அந்தக் காலத்தில் அரபிகள் முத்துக்குளிப்புக்கு சென்றால் திரும்பிவர பல மாதங்கள் ஆகுமாம். அதற்காக, தர்பூஷை அத்தர் பாட்டிலில் நனைத்து இவர்களின் மனைவிமார்கள் கொடுப்பார்களாம். நினைப்பு வந்தால் மோந்துக்கோ. நான் ஏதோ இழுத்து நாலு சாத்து சாத்துவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!
 
அரேபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஜூஹா என்ற நகைச்சுவைப் பாத்திரம்தான் செர்வாண்டஸின் டான் குயிக்ஸோட்டுக்கு Inspiration என்பதும் அமீன் தரும் அபூர்வ தகவல்தான்.
 
என்னடா இது, வசதியானவர்களின் ஆன்மிகச் சிந்தனைகளை அறியவிரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல் போல இருக்கிறதே.. பாவப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றி இவர் லட்சியமே செய்யலையே என்று யோசித்துக்கொண்டே படிக்கும்போது ஹஜ்ரத்தின் முரீதுகள் (சீடர்கள்) ஜலாலும் பஷீரும் வந்தார்கள். வெறும் 600 திர்ஹம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கடும் வெயிலில் கட்டிடப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள். தங்குமிடத்தில் ஏசியும் கிடையாது. ஆனால் முகங்களில் வாட்டமில்லை. வேலை கஷ்டமா இருக்கா என்று கேட்டால் ஊரில் வேலை இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்காங்களே.. இந்த வேலையாச்சும் கொடுத்த இறைவனுக்கு நன்றி ஹஜ்ரத் என்று சொல்கிறார்கள். என்ன ஆச்சரியம், இப்போது சௌதியில் மாதம் 5000 ரியாலுக்கு மேல் சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். இதற்காகவே மூதேவிகள் நாமும் மூரிதுகளாக மாறலாம்!
 
”மாப்புள, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊர். மீதி நாளெல்லாம் துபாய்லன்னு வாழ்க்கை பத்து வருசமாப் போவுது. இப்பவே எனக்கு 40 ஆவுதுடா. இன்னும் பத்து இளமையான வருசம் கழிச்சி ஊருக்கு கொஞ்சம் காசோட போயி என்னாத்த கிழிக்கப் போறேன்னு தெரியலே’ என்று சொல்லும் ஆசிக்கும் இருக்கிறான். நம்ம ஆள். ஒன்னு தெரியுமா ஆசிக், நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இருக்கிறேன். கையில் ஒரு பைசா கிடையாது. இருப்பதெல்லாம் அவமானங்களும் துயரங்களும்தான். அல்லாஹ்வின் நாட்டம் போலும். Accept the inevitable!
 
இப்படியே போனா எப்படிங்னி என்று என்மேல் அக்கறை கொண்ட நண்பர் நாகூர் ரூமி கவலையோடு ஊரில் கேட்டார். அப்டியே போயிடவேண்டியதுதான் என்றேன்.
 
‘ஏதேது செய்திடுவோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ’
– குணங்குடி மஸ்தான்
 
மனைவி ஷஹீதாவை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் ‘தேவையை’ தலவாணியில் தீர்த்துக்கொள்ளும் ஆஷிக், தேவை பற்றி ஹஜ்ரத் சொன்னதாக வரும் அழகிய பகுதி இது :
 
“எப்ப நம்ம தேவை நிறைவேறும் போது அல்லா தான் நெறைவேத்துறான்னு பாக்கலயோ,அப்ப நாம தேவையுடையவர்கள். அல்லாஹ் தேவையை நிறைவேத்துறவங்கிற உணர்வு அந்த நேரத்துல நம்மல வுட்டு போயிடுச்சு. எப்பவாச்சும், ஏதாச்சும் கிடைக்கும் போது அல்லாஹ் தந்தான்னு நன்றி சொல்றவங்களுக்கு நாகூர் ஹனிஃபா பாடுவாஹல்ல “தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்”னு, அப்புடி தேட மனிதருக்கு அல்லாட கருணைல கிடைக்கிதுல்ல, அந்தளவு பங்கு தான் கிடைக்கும். ஒவ்வொரு தேவையிலும் ஹக்கை முன்னோக்கி கேட்பவர்களுக்கு அல்லாஹ் தன் நேசர்கள் எனும் அவுலியாக்கு கொடுக்கிற மாதிரி விசேஷ கருணயோடு வழங்குவான். ‘ரிஜ்குன் கறீம்’னு சொல்ற சங்கை மிகுந்த வாழ்வாதாரங்கள கொடுத்து கண்ணியப் படுத்துவான். அவனுடைய வாழ்க்கையே ‘ஹயாத்தன் தய்யிபா’வான மணமிக்க வாழ்க்கையாகிடும்”னு சொல்லி, “இது ஷெய்கு எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அத நான் புடிச்சுகிட்டேன் அதுல வந்தது தான் இந்த செல்வச் செழிப்பான வாழ்க்கை. நீங்களும் இத புடிச்சுக்கங்க. இது தான் அடிப்படை. மத்த பாடம்லாம் அப்படி தேவைய நிறைவேத்துற ஹக்கை நீங்க உங்க கூட இருக்கிறவனா இன்னும் எல்லா சிருஷ்டிகள் கூடவும் இருக்கிறவனா விளங்கனுங்கிறதுக்காகத் தான், விதவிதமா சொல்றேன்”
 
தேவை பற்றி அன்பில் முஹம்மதுவின் கேள்வியோ இப்படி இருக்கிறது : எந்த யானை எல்கேஜியில் ஆரம்பித்து இருபது வருடங்கள் புத்தகங்களை தூக்கி சுமந்துச்சு? எந்த எறும்பு எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் கால்கடுக்க நிண்டுச்சு?
 
அதானே?
 
இப்னுல் அரபி (ரலி) அவர்களின் கவிதை வரிகளை இங்கே சேர்ப்போம்:
 
இன்னமுல் கௌனு கியாலுன்
ஃபஹூவ ஹக்குன் ஃபில் ஹகீக்கா
குல்லுமய் யஃப்ஹமு ஹாதா
ஹாஸ அஸ்ராறத் தரீக்கா
 
எதாவது புரிகிறதா? புத்தகம் வாங்கிப் படியுங்கள். அழகான தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு.
திடீரென்று, கிருத்துவப் பள்ளியில் ஒரு பையன் பாடும்
 
‘என் திரு யாழிசை இறைவா
உன் பண் தரு மருந்துண்டேன்
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
நீர் இசைத்திட வேண்டும் இசையரசே’
பாட்டு நாவலுக்கு பெருமை சேர்க்கிறது.
 
நியாஸின் சபராளி வாப்பாதான் நிஜமாகவே என்னைக் கலங்க வைத்தார். ’ஏன் புள்ளைய அடிச்சி வளர்க்க மாட்டேங்குறீங்க?’ என்று உம்மா கேட்கும்போது ‘நானே சீசனுக்கு சீசன் வரும் பொன்னாந்தட்டான் பறவை மாதிரி வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வர்றேன். இதுல என்ன கண்டிக்கிறது? அவன் சிறப்பாக்கி வைன்னு அல்லாஹ்ட்ட அழுது கேக்குறேன்மா’ என்கிறார். நாலைந்து வருடங்களுக்கொரு முறை மலேயாவிலிருந்து வந்த என் சீதேவி வாப்பாவின் குரல்…
 
நாவலின் தலைப்பான ‘கனவுக்குள் கனவு’ மிகவும் பிடித்தது (யாரோ ஒருவன் விழித்திருக்கும்போது கண்ட கனவு நான் என்று கௌஸி ஷாஹ் (ரலி) சொன்ன மேற்கோளுடன் அத்தியாயம் நான்கு தொடங்குகிறது.). தலைப்பு பிடித்திருப்பதற்கு காரணம். என் மகன் நதீம். சோறு உண்ணும்போது கறியை தனியே சாப்பிடாமல் சோற்றின் உள்ளேயே வைத்து அமுக்கி சாப்பிடுவான். கேட்டால் ‘உணவுக்குள் உணவு வாப்பா’ என்பான். இதற்காகவே என் நினைவில் என்றும் இந்த நூல் இருக்கும்.
 
ஆதவனின் அங்கத எழுத்தை ரசிக்கும் அமீன், தன் ஹஜ்ரத் பற்றி ஒரு வரி கூட எதிர்மறையாக எழுதாதற்குக் காரணம் அவருடைய அளப்பரிய அன்பாகத்தான் இருக்க வேண்டும்.
 
ரொம்ப சீரியஸாக நான் எழுதியது போலத் தெரிகிறதே… நூருல் அமீனுக்கு சுலபமாகக் கைவசப்படும் (ஆனால், போட மாட்டார்) நகைச்சுவையோடு முடிக்கிறேன்.
 
பார்த்து… உங்க கூட்டாளி ஆஷிக் சொல்றதைக் கேட்டு தொழுகை, ஹஜ்ரத்துன்னு அலைஞ்சா அப்புறம் அல்லாஹ் பயித்தியமா மாறிடுவீங்க என்று எச்சரிக்கை விடுக்கிறாள் நஜீரின் மனைவி. மனைவிக்கு கொஞ்சமும் பயப்படாதவன். நஜீர், என்னைப் போல. அன்றிலிருந்து ஹஜ்ரத் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை! என்னப்பா, தொழுகையிலே உன்னோட ஹால் (மனநிலை) மாறிடுச்சா என்று கேட்கும் ஆஷிக்கிடம், ‘ஆமா மாப்புளே. அனுஷ்கா நெனப்பு இப்பல்லாம் ஒரு தடவை கூட வர்றதில்லே’ என்று பதில் சொல்கிறான். இங்கே அமீன் எழுதுகிறார் : அனுஷ்காவுக்குப் பதில் ஹன்ஷிகாவின் முகம்தான் மனதில் வருகிறது என்பதை அப்பாவி ஆஷிக்கிடம் சொல்ல நஜீருக்கு ஏனோ மனமில்லை!
 
அப்பாவி முஸ்லிம்களுக்கு என் குறிப்பு: அனுஷ்கா, ஹன்ஷிகா இருவரும் விண்வெளி வீராங்கனைகள்.
 
அன்பையும் இறையருள் பற்றிய நினைப்பையும் பெருக்க உதவும் நூல்கள் பல நூருல் அமீன் ஃபைஜி ஆக்கத்தில் மேலும் வெளிவரட்டுமாக.
 
பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
ஆபிதீன், துபாய்
12.12.2020

Kindle Book : ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’

எனது மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’ இப்போது அமேசான் கிண்டிலில். ஆதரவு தாருங்கள். சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG

*

நன்றி: திண்ணை, பதிவுகள், வார்த்தை, விமலாதித்த மாமல்லன் & அஷ்ரஃப் சிஹாப்தீன்.

« Older entries