‘நாகூருக்கு வந்துச் சென்ற பிரபலங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சுதந்திரத் தியாகிகள் மொளானா முஹம்மது அலி, செளகத் அலி முதல் பக்ருத்தீன் அலி அஹ்மது, ஜெயில் சிங், ராஜீவ் காந்தி வரை – எத்தனையோ தேசத்தலைவர்கள் இந்தச் சிற்றூருக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது மகாத்மா காந்தி வேதாரண்யம் வந்தது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. நாகூருக்கு அவர் வந்தாரா இல்லையா என்ற விவரம் தெரியாது. மூத்தக் குடிமகன் யாரிடமாவது கேட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற “நாகூருக்கு காந்திஜி வந்திருக்காரா?” என்று நண்பர் ஆபிதீனிடம் கேட்டேன். “சாரி எனக்கு அவ்வளவு வயசு கிடையாது” என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருக்கலாம். கூடவே “வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? வந்ததாக நினைத்துக்கொண்டு ஒரு பதிவை போட உங்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்?” என்று தூண்டியும் விட்டு விட்டார். என் கற்பனைக்கு விட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டியது என் இலக்கியக் கடமையாகிவிட்டது.’ – அப்துல் கையூம்
**
காந்திஜியின் நாகூர் விசிட்
– அப்துல் கையூம்
காந்திஜியை ஏற்றிக்கொண்டு வரும் நாகூர் பாஸ்-பாஸன்ஜர்ஸ் இரயில் பிளாட்பாரத்தை அடைய இன்னும் சற்று நேரமே எஞ்சி இருந்தது.
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜப்பார் மரைக்காயர், சூர்யமுத்துச் செட்டியார், யூசுப் ரஹ்மத்துல்லா சேட் உட்பட அனைத்து கதர்ச் சட்டைக்காரர்களும் புகைவண்டி நிலையத்தில் திரளாக வந்துக் குழுமியிருந்தனர். நாகூர் காதி கிராப்ட் நிறுவனத்தார் வரவேற்பு பேனர் ஒன்றைத் தொங்கவிட்டிருந்தனர்.
ஊர்வலமாக அழைத்துச் செல்ல பக்தாத் நானா தலைமையில் கெளதிய்யா பைத்து சபையினர் “தப்ஸ்” ஏந்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். முஸ்லிம் சங்கத் தொண்டர்படை வீரர்கள் மெய்நகுதா காக்கா தலைமையில் விசிறி பேட்ஜை அணிந்துக் கொண்டு அணிவகுத்திருந்தனர்.
காந்திஜி வந்து இறக்கியதும் “நாரே தக்பீர்” என்ற முழக்கம் வானைப் பிளந்தது. தர்கா யானையில் காந்திஜியை உட்கார வைத்து ஊர்வலம் அழைத்துப் போவதாகத்தான் ஒரிஜினல் ஏற்பாடு. காந்திஜி மறுத்து விட்டதால் பாத யாத்திரையாகவே அழைத்துச் சென்றனர்.
நல்லவேளை அப்படிச் செய்யவில்லை. காந்திஜி கையில் எப்போதும் கம்பு வைத்திருந்ததால், யானைமீது அவர் உட்காரும்போது, யானை மிரண்டு தாறுமாறாக ஓடினால் என்னாகும்?
தெருப் பள்ளித்தெரு நெடுகிலும் செட்டியார் பள்ளி, தேசிய மேல்நிலைப்பள்ளி, கோஷா ஸ்கூல், கெளதிய்யா பள்ளி மாணவ மாணவிகள் மலர்த்தூவி வரவேற்றனர். நாகூரில் இரண்டே இரண்டு பூக்கடைகள்தான் இருந்தன. அன்று அவர்களுக்கு நல்ல வியாபாரம். யாரோ ஒருவர் காந்திஜிக்கு ‘சேரா’ கட்டிவிட்டு, கையில் பூச்செண்டு கொடுத்து, பக்கியில் அழைத்து வந்தால் என்ன என்று கூட ஐடியா கொடுத்தாராம். மயில் டான்ஸ் ஆட ‘வாடா சுல்தான்’ கூட ரெடியாக இருந்ததாகக் கேள்வி.
ஓவியர் நாகை ஜீவியின் கைவண்ணத்தில் ஆளுயர கட்-அவுட் அலங்கார வாசல் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தர்காவிற்குள் நுழையும்போது செருப்பை கழற்றி வைப்பது வழக்கம். காந்திஜி செருப்பில்லாமலேயே பாதயாத்திரை மேற்கொண்டிருந்ததால், குடை ரிப்பேர் பார்க்கும் ரஜ்ஜாக் பாய்க்கு, செருப்பை காவல் காக்க வேண்டிய வேலைகூட இல்லாமல் போய் விட்டது.
அலங்கார வாசல் வந்ததுமே காந்திஜி ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அதற்கு காரணம் இருந்தது. கடைத்தெருவில் சுடச்சுட வறுத்தெடுக்கும் மல்லாக் கொட்டையின் வாசம்தான் அது. போகும்போது மறக்காமல் பார்ஸல் கட்டிக் கொடுக்கிறோம் என்று கட்சித் தொண்டர்கள் கூற, பொக்கை வாய் மலர புன்னகை புரிந்தார் காந்தியடிகள்.
அலங்கார வாசலில் நிறுவப்பட்டிருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்து, தான் லண்டனில் பார்த்த Big Ben கடியாரத்தை போன்றே இருக்கிறது என்று நினைவுக் கூர்ந்தார் காந்திஜி. அருகிலேயே சுவீட் கடைக்காரர் ராவ்ஜி.
தர்கா உள்ளே நுழைந்ததுமே யாரோ ஒரு சாபு காந்திஜிக்கு குலாம் காதர் கடையிலிருந்து வாங்கி வந்த Fur தொப்பியை சாய்வாக அணிவிக்க, காந்தி ஜின்னாவின் சாயலில் தெரிய ஆரம்பித்தார். உடனே போட்டோகிராபர்கள் தத்தம் தகரப்பெட்டி காமிராவை கையில் ஏந்தி ‘கிளிக்’ செய்யத் தொடங்கினார்கள்.
மகாத்மா காந்தியை புறாக்கூண்டு வழியாகத்தான் அழைத்துச் சென்றார்கள், வழக்கம் போல அவர் ‘விறுவிறு’வென்று வேகநடை நடந்ததால் அதை அவர் கண்டுக் கொள்ளவில்லை. மேனகா காந்தியாக இருந்தால் இது ஜீவகாருண்யத்திற்கு மீறியச் செயல் என்று கூண்டுப்புறாக்களைப் பிடித்து பறக்க விட்டிருப்பார்.
நேர்த்திக்கடனுக்காக நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒன்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தது. காந்திஜி, திடீரென்று பிரேக் அடித்து நிற்க, “தங்களுக்கு ஆட்டுப் பால் என்றால் பயங்கர இஷ்டம் என்பது எங்களுக்குத் தெரியும், இது கிடா ஆடு” என்று ஒருவர் சொல்ல காந்திஜி புரிந்துக்கொண்டார்.
சின்ன எஜமான் வாசலில் பாத்திரத்தில் நீரை நிரப்பி கூரையில் தொங்கிய சங்கிலியை ‘சலக் சலக்’ என்று நனைத்துக் கொடுக்க அதை தீர்த்தமென வாங்கி மேனியில் அப்பிக் கொண்டார் காந்திஜி. பாரதத்தின் அடிமைச் சங்கிலி அறுபட்டதை சிம்பாலிக்காக காட்டுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.
நீங்கள் கண்டு களிப்பதற்கு முக்கியமான இடமொன்று இங்கு இருக்கிறது என்று கூற, காந்திஜிக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. தர்கா முற்றத்தில் இருந்த உப்புக் கிணறுக்கு அழைத்துச் சென்றார்கள். காந்திஜிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாம் செய்யும் உப்பு சத்யாகிரகத்தை விளம்பரப் படுத்துவதற்காகவே இப்படி இதை அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்து உணர்ச்சி வயப்பட்டார்.
காந்திஜிக்கு வரவேற்பு நல்கியவர்கள் பேசாமல் தர்கா தோட்டம், மையத்தங்கொல்லை, முதுபக், பீர் மண்டம், குளுந்த மண்டபம் என்று சுற்றிக் காண்பித்துவிட்டு அவரை அப்படியே அனுப்பி வைத்திருக்கலாம். கிழக்குப்புற வாசலுக்கு அழைத்துச் சென்றால் அவர் மொட்டையடிக்க ஆசைப்படலாம் என்று நினத்ததால்தான் வினையே வந்தது.
தர்காகுளம் அருகே வந்ததுதான் தாமதம், காந்திஜி மூக்கைப் பிடித்துக் கொண்டார். அப்படி ஒரு மூத்திர நெடி. மனுஷர் வாழ்க்கையே வெறுத்துவிட்டார். அப்புறமென்ன? பட்டது போதுமென்ற பாதயாத்திரியாகவே புறப்பட்டுவிட்டார். பின்னாலேயே கதர்ச்சட்டைக்காரர்களும் மூக்கைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினர்.
வேர்க்கடலை பார்ஸலைக்கூட அவருக்கு வாங்கிக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.
***
காந்திஜி ஜோக்ஸ்
சாபு : 1869 வது வருஷத்துலே என்ன நடந்துச்சு?
சிஷ்யன் : தெரியலே ஹஜ்ரத்து
சாபு : இதுகூட தெரியலியா உம்பருக்கு? இந்த வருஷத்துலேதான் காந்திஜி பொறந்தாஹா
சிஷ்யன் : அப்படியா ஹஜ்ரத்து?
சாபு : அது போவட்டும். 1871 வது வருஷத்துலே என்ன நடந்துச்சு?
சிஷ்யன் : காந்திஜிக்கு ரெண்டு வயசு. அஹ எந்திரிச்சு நடந்தாஹா ஹஜ்ரத்து.
*
சின்ன மரைக்கான் : காந்திஜி செருப்பு ரப்பர் போட மாட்டாஹா. அஹலுக்கு மிதிரிக்கட்டைதான் புடிக்கும். ஏன் சொல்லு?
சேத்த மரைக்கான் : தெரியலே
சின்ன மரைக்கான் : செருப்புலேதான் “வார்” (War) இருக்குதே அதனாலதான்.
*
சி. மரைக்கான் : காதர்பாய், காஜாபாய், கரீம்பாய் இது எல்லாமே முஸ்லீம் பேருதானே?
சே.மரைக்கான் : ஆமா அதுக்கு என்ன இப்போ?
சி,மரைக்கான் : காந்திஜி கல்யாணம் முடிச்சிக்கிட்டஹ முஸ்லீமா?
சே.மரைக்கான் : இல்லியே? யாரு சொன்னாஹா.
சி.மரைக்கான் : காந்திஜியோட வூட்டுக்காரஹ பேரு கஸ்தூரி பாய்ன்னு சொல்லுறாஹலே.
*
காந்திஜிக்கு பிடிச்ச டூத் பேஸ்ட்?
Promise டூத் பேஸ்ட்
காந்திஜிக்கு பிடிச்ச பிஸ்கட்?
True பிஸ்கட்
காந்திஜிக்கு பிடிச்ச சினிமா கொட்டகை?
சத்யம் தியேட்டர்
காந்திஜிக்கு பிடிச்ச பாடகரு?
ஹரிஸ்சந்திரா
*
சி.மரைக்கான் : குன்னக்குடி வைத்யநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?
சே.மரைக்கான் : இஹ வயலோனிஸ்ட், அஹ நான்-வயலோனிஸ்ட்
*
சி.மரைக்கான் : காந்திஜி சிலைக்கு மேலே காக்கா எச்சம் பண்ணாது. ஏன் தெரியுமா?
சே.மரைக்கான் : தெரியலியே !!
சி.மரைக்கான் : அஹ கையிலே அஸா குச்சி வச்சிருக்காஹல்லே. அதுக்கு பயந்துதான்.
*
நாகூர் அலங்கார வாசலில் பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு நிற்கும் மிஸ்கீன் ஒருவருக்காக கவிஞர் மு.மேத்தா எழுதிய கவிதை
இது :
“அமுதசுரபியைத்தான்
நீ தந்துச் சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”
**
நன்றி : காந்திஜி, சாரி, கய்யும்ஜி