கி. ராஜநாராயணன் : சாகித்திய அக்காதெமி விருது ஏற்புரை (1992)

kira - koballakiramaththumakkal book-bஎன் வாழ்வில் நினைவில் கொள்ளவேண்டிய இந்நாளில், எனக்கு இங்கே விருதுவழங்கி கௌரவித்த சாகித்ய அக்காடமிக் கமிட்டியாளர்களுக்கும் என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமான அனைவர்க்கும் முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய நாட்டின் ஒரு தெற்குக் கடேசி மூலையில் இருக்கிறது எனது கிராமமான இடைசெவல். 250 வீடுகளே கொண்ட சிறிய கிராமம்தான். இப்போது அங்கே என்னையும் சேர்த்து சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று ஆகிறது.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அந்த மற்றொரு எழுத்தாளன் எனது நண்பன் கு. அழகிரிசாமி எனது தெருவைச் சேர்ந்தவன்.

மரணத்துக்குபின் அவனுக்கும், உயிரோடு இருக்கும்போதே எனக்கும் விருதுவழங்கி எங்களைக் கௌரவித்திருக்கிறது சாகித்ய அக்காடமி.

நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் இடம் சிரபுஞ்சி என்று சொன்னால், நாட்டின் மிகக்குறைந்த அளவு மழை பெய்யக்கூடிய இடம் எனது வட்டாரமான கரிசல் பிரதேசம்.

இந்த மண்ணைக் ‘கரும்பாலைவனம்’ என்று ஒரு விதத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

என்றாலும் இந்த வறண்ட மண்ணில்தான் பல மகத்துவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

பெருங்கவிஞர் வரிசையில் ஸ்ரீ ஆண்டாளும் பெரியாழ்வாரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதியாரும், ரசிக ஞானி என்று புகழ்பெற்ற ரசிகமணி டி.கே.சி.யும் இசையோகி விளாத்திகுளம் சுவாமிகளும், தேசபக்தச் செம்மல்களான வீரபாண்டிய கட்டபொம்மனும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும். (இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்து அடங்கிய மண்ணும் இதுதான்).

‘கருப்புக்காந்தி’ என்று புகழ்பட்ட காமராஜூம், இப்படியான இன்னும் பலர் பிறந்த மண் இது.

இந்தக் கரிசல் மண் வட்டாரம் ஒரு காலத்தில் வெறும் கள்ளிச் செடிகளும் முள்ளுக்காடுகளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசமாகவே இருந்தது. இந்த இடத்திற்கு ஆந்திர நாட்டிலிருந்து வந்த தெலுங்கு மக்களும் கன்னட நாட்டிலிருந்து வந்து கன்னடம் பேசும் கவுண்டர் இன மக்களும் வந்து, இந்தக் காடுகளையெல்லாம் திருத்தி நாடாக்கினர்.

இந்த மக்கள், அவர்கள் பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டுவிட்டு இங்கேவந்து இப்படிக் குடியேறப் பலப்பலக் காரணங்கள் இருந்தன.

தமிழ் மொழியில் ஒரு பாடல் உண்டு.

‘கொடிய மன்னன் இருக்கும் நாட்டில் வசிப்பதைவிட கடும்புலிகள் வாழும் காடு நன்றே’ என்கிறது அப்பாடல்.

ஆந்திர நாட்டிலிருந்து தெலுங்குபேசும் மக்களில் ஒரு பகுதியினர் இந்தக் காட்டுக்குள் வந்து ஒரு கிராமத்தை அமைத்த சோகமான நீண்டகதையை வர்ணிக்கிறேன் – இப்போது இங்கே விருது பெற்ற ‘கோபல்ல புரத்து மக்கள்’ நாவலின் முதல் பாகமான ‘கோபல்ல கிராம’த்தில்.

இப்படியாக அந்த மண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு குடிபெயர்ந்து வந்த நடப்பை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே கதைகதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பிறந்த அந்தக் கதைகளை, தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரன் பேத்திகளுக்குச் சொன்னார்கள். அந்தப் பேரன்மாரும் பேத்திமாரும் கிழவர்களாகித் தங்கள் பேரன் பேத்திகளுக்குச் சொன்னார்கள்; இப்படியாக அந்த நடப்புச் சம்பவங்கள் கதையாகி, கதை புராணமாக உருவெடுத்து, மனசைத் தொடும் கதைகளாக் கேட்ககேட்க தெவிட்டாதபடி ஆகிவிட்டது! ‘கோபல்லபுரத்து மக்க’ளின் முதல் பாகமான ‘கோபல்ல கிராம’ நாவலுக்கு அடிப்படையாக இந்த நாட்டுப்புறக் கதைகளே அமைந்தன.

இந்நாவலின் முதல்பாகம், கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கே கால்ஊன்றி, ஆட்சியைக் கைப்பற்றியதோடு முடிகிறது.

இரண்டாம் பாகமான ‘கோபல்லபுரத்து மக்களில்’ பிரிட்டிஷ் ஆட்சி வந்ததின் விளைவால் இந்த கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்த ஆட்சியை எதிர்ந்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய போராட்டம், அப்போராட்டம் இந்தச் சிறிய கிராம மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைச் சொல்லுகிறேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு இந்நாவல் இப்போதைக்கு முடிவடைகிறது.

சாகித்ய அக்காடமி விருது பெறும் ‘கோபல்லபுரத்து மக்க’ளோடு ‘கோபல்லகிராம’த்தையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஒரு முழுமை கிடைக்கும்.

நாளைக்கு சாகித்ய அக்காடமி இந்நாவலை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க விரும்பும்போது இந்த எனது யோசனையையும் மனதில் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதை இங்கே கூற விரும்புகிறேன்.

இந்நாவலைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறுவது இங்கே பொருத்தம் எனப்படுகிறது.

பொதுவாக,

வட்டாரமொழி இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்வது என்பது கடினமான காரியமாகவே இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

என்றாலும், உலகின் பிற பகுதிகளில் இவைகளை சிரமம் மேற்கொண்டு செய்துகொண்டிருப்பதாகவே அறிகிறேன். நமது நாட்டிலும் அவ்வகை முயற்சியில் சாகித்ய அக்காடமி முனைந்து செயல்படுமானால் வெற்றிகாண இயலும் என்று நம்புகிறேன்.

சாதாரண மேம்போக்கான பொதுமொழி நடையை விட வட்டாரவழக்கு நடைமொழி ஆழமானது. அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது. அதற்கே என்று ஒரு மொழிச்சிறப்பு உண்டு.

வட்டார வழக்குச் சொற்களை சரியாகப் புரிந்துகொள்ள விஸ்தாரமான ஒரு அகராதி தமிழில் இல்லாதது பெரிய்ய குறை. எனது கரிசல் வட்டாரத்துக்கு என்று ஒரு சிறிய அகராதி ஒன்றைத் தமிழில் முதன்முதலாக எனது நண்பர்களின் உதவியோடு செய்து வெளியிட்டியிருக்கிறேன். என்றாலும் எனக்கு அது நிறைவு தருவதாக இல்லை.

இன்னும் திருத்தமாகவும் சிறப்பாகவும் அதை மறுபதிப்பாகக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அதன் இரண்டாவது பதிப்பு வெளிவரும்போது அக்குறைகளைக் களைந்து சீராக்கலாம் என்றிருக்கிறேன்.

சாகித்ய அக்காடமி எனக்கு வழங்கியிருக்கும் இந்த விருது எனக்கு மட்டுமல்ல, கரிசல் இலக்கிய எழுத்தாளர்களுக்குக் எனது மக்களுக்கும் கிடைத்த ஒரு விருதாகவே கருதி ஏற்றுக் கொள்கிறேன்.

இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியயும் கூறி அமர்கிறேன்.

*

தட்டச்சு : ஆபிதீன்
நன்றி : கி. ராஜநாராயணன், அன்னம் பதிப்பகம், ஒரத்தநாடு கார்த்திக் . Download PDF 

என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி. ஏற்புரை

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.
***

M-V-Venkatramஒரு நீண்ட யாத்திரைதான். ஆயினும் எனக்குச் சோர்வோ விரக்தியோ ஏற்படவில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 57 ஆண்டுகளாய் என் இலக்கியப் பிரயாணம் நிகழ்கிறது. படைப்பாளிக்கு மரபு ஏது? கைகள் எழுத மறுக்கின்றன, சில ஆண்டுகளாய். எனினும், சிருஷ்டி வேட்கை என்னுள் தகித்துக்கொண்டு இருக்கிறது. போன வருடம்கூட என் புத்தகம் ஒன்று வெளிவந்தது.

வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.

வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்.

மனித சமுதாயம் குற்றம் குறைகள் நிரம்பியதாகத்தான் இருக்கும். அதைக் கண்டு எந்தக் கலைஞனுக்கும் ஆற்றாமையும் ஆத்திரமும் உண்டாவது இயற்கை. சமுதாயத்தைக் கண்டிக்கவும் கேலி செய்யவும் இலக்கியப் படைப்பாளி முனைகிறான். சமுதாயத்தைத் திருத்தவும் புரட்சி செய்யவும் தன் எழுத்தாற்றலையும் படைப்புத் திறனையும் பயன்படுத்துகிறான்.

சொல்லுக்குள்ள வசிய சக்தி மகத்தானது. படைப்பாளியின் சொல் முதலில் அவனையே தன்வசப்படுத்திக் கொள்கிறது. பிறகு மக்களைக் கவருகிறது. அவனுடைய சொல்லினால், சொல் வெளியிடுகிற கருத்தினால் மக்கள் மயங்குகிறார்கள். அவனுடைய கருத்தைப் பின்பற்றி அநீதியற்ற சமூகத்தை நிறுவவும் முற்படுகிறார்கள்.

ஆனால், ஒரு நோயை குணப்படுத்தும் அரிய மருந்து மற்றொரு நோய்க்கு வித்திடுவதுபோல் ஒரு கருத்தினால் உருவாகும் சமூக அமைப்பை மற்றொடு கருத்து குலைக்கிறது. ஒரு கருத்து மற்றொரு கருத்தைக் கொல்லும்போது புதியதொரு கருத்து முளைவிடுகிறது. பகுத்தறிவில் பிறந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு மனிதன் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பான். சமூகத்தில் குற்றம் குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் பஞ்சம் இராது. எனவே கலைஞனுக்கு எல்லாக் காலத்திலும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்த  அடிப்படைத் தத்துவ அமைதியைக் கண்டவன்தான் முழுமையான இலக்கியக் கர்த்தாவாக இருக்க முடியும்.

இந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற, அகவாழ்க்கையே என் இலக்கியமாகப் பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அறிந்ததையும் சிந்தனை செய்ததையும்தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிறேன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான்தான் நிரம்பி வழிகிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘நித்தியகன்னி’ என்றொரு நாவல் எழுதினேன். அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

திருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித் தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.

பதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது.  மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

ஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.

mvv-book

***

தட்டச்சு : ஆபிதீன், பிரதி உதவி : சென்ஷி

***

தொடர்புடைய சுட்டிகள் :

எம்.வி.வி நேர்காணல்

ஜானகிராமனுக்காக ஒரு கதை – எம்.வி. வி

“மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் –  பா.முத்துக்குமரன்

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை… – மணி செந்தில்

அடுத்த வீடு – எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.வி.வி. சிறுகதைகள்

நாகிப் மாஃபௌஸ்

mahfouz.gif 

நாகிப் மாஃபௌஸ் – நோபல் பரிசு (1988) ஏற்புரை
(தமிழில் : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’ )அன்பார்ந்த சீமாட்டிகளே, கனவான்களே,முதலில் நான் ஸ்வீடிஸ் அகாதெமிக்கும், அதன் நோபல் குழுவிற்கும் என்னுடைய நீண்ட, இடைவிடாத இலக்கிய முயற்சிகளை அங்கீகரித்து கௌரவப் படுத்தியிருப்பதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, எனது உரையை பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் உங்களில் பெரும்பான்மையினருக்கு பரிச்சயமில்லாத மொழியில் நான் பேசுகிறேன். ஆனால் உண்மையில் இந்த மொழிதான் பரிசை வென்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். எனவே உங்களுடைய கலாச்சார, நாகரீகச் சோலையில் இந்த மொழியின் இசை மிதந்தே தீர வேண்டும். இத்துடன் இது முடிந்துவிடாதென்றே நான் நினைக்கிறேன். கவலை மிகுந்த நம் உலகத்தில், இன்பத்தின் சுகந்தத்தைப் பரப்பிவரும் மாபெரும் சர்வதேச படைப்பாளிகள் அலங்கரிக்கும் இச்சபையில் எனது தேசத்தின் எழுத்தாளர்கள் பலரும் எதிர்காலத்தில் கௌரவிக்கப் படுவார்களென்றே நான் உறுதியுடன் நம்புகிறேன்.என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன் , அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல்நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்க்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறாது. அது ஃபோரோனிக் நாகரிகம். அடுத்ததிற்கு ஆயிரத்து நானூறு வயதாகிறது. அது இஸ்லாமிய நாகரிகம். உயர்ந்த அறிஞர்களான உங்களிடம் இவ்விரண்டயும் நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இப்போது சிலவற்றை நினைவு படுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.·ஃபோரோனிக் நாகரிகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும், உருவான பேரரசுகள் பற்றியும் பேசப் போவதில்லை. நல்ல வேளையாக இன்றைய யுகத்தின் மனசாட்சி, இவற்றை காலாவதியான, பெருமிதமான சங்கடத்துடன் ஒதுக்கி விடுகிறது. முதன்முறையாக கடவுள் என்றதொரு சக்தியை உணர்ந்து மனிதனுக்கு ஆன்மிக உணர்வு அரும்பியதைப் பற்றியும் பேசப் போவதில்லை. இது ஒரு நீண்ட சரித்திரம். உங்களில் ஒருவர் கூட தீர்க்கதரிசியான மன்னன் அகெனேடனைப் பற்றி அறியாதிருக்க மாட்டீர்கள். இந்நாகரிகத்தின் கலை இலக்கிய சாதனைகளைப் பற்றியோ, புகழ்பெற்ற அதன் அதிசயங்கள், பிரமிட்டுகள், ஸ்பின்ங்ஸ், கமக்கைப் பற்றியோ கூட பேசப் போவதில்லை. இந்நினைவுச் சின்னங்களைப் பார்த்திராதவர்கள்கூட இவற்றைப் படித்தும், இவற்றின் வடிவத்தை, பிரமாண்டத்தை அறிந்தும் பிரமித்திருப்பார்கள்.

எனவே ஃபோரோனிக் நாகரிகத்தை ஒரு கதையைப் போல – என் சொந்த வாழ்க்கை என்னை ஒரு கதைசொல்லியாக உருவாக்கியிருப்பதால் – அறிமுகப்படுத்தலாமென்றிருக்கிறேன். இதோ ஒரு பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு: பண்டைய ஓலைச்சுவடி ஒன்றில் அந்தப்புரத்துப் பெண்கள் சிலருடன் தனது அரண்மனை ஊழியர்கள் சிலருக்கு தவறான தொடர்பிருப்பதை அறிந்த மன்னன் ·போரோ அக்கால வழக்கப்படி அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்காமல் , தேர்ந்த சில அறிஞர்களை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறான். அதன்பிறகே தனது
தீர்ப்பை வழங்குவது நியாயமென்றும் அவ்வறிஞர்களிடம் கூறியிருக்கிறான்.

இந்த நடவடிக்கை, என் அபிப்ராயத்தில் மாபெரும் பேரரசு ஒன்றை நிறுவியதைவிடவும், பிரமிட்களை கட்டியதைவிடவும், மகத்தானதாகும். அந்நாகரிகத்தின் மேன்மைக்கு, அக்காலத்தைய செல்வச் செழிப்பைவிட இதுவே சிறந்த அடையாளமாகும். தற்போது அந்த நாகரிகம் மறைந்து போய், பழங்கதையாகிவிட்டது. ஒரு நாள் அம்மாபெரும் பிரமிட்கூட மறைந்து போகலாம்; ஆனால் மனிதகுலத்திற்கு சிந்திக்கும் திறனும், உயிர்ப்போடிருக்கும் மனசாட்சியும் உள்ளவரை சத்தியமும் நியாயமுமே நிலைத்திருக்கும்.

இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை மனிதகுலம் மொத்தத்தையும் அதனைப்படைத்த படைப்பாளியின் கீழ் சுதந்திரத்தின், சமத்துவத்தின், மன்னிப்பின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட ஸ்தாபனமாக நிறுவப்பட்டதைப்பற்றி நான் பேசப் போவதில்லை. தீர்க்கதரிசி முஹமது நபியின் மகத்துவத்தைப் பற்றிக்கூட நான் பேசப்போவதில்லை. அறிஞர்களான உங்களில் பலர், உலக சரித்திரத்தின் மாபெரும் மனிதராக அவரை மதிப்பிடுகிறீர்கள். இது ஸ்தாபிக்கப்பட்டதால் எழுப்பபட்ட ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளைப் பற்றியோ , இவற்றில் பரப்பப்படும் பக்தியையும், புனிதமான அன்புணர்வும், பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவையும், சீனாவையும் தழுவிக்கொண்டு, இங்கே ·ப்ரெஞ்சு எல்லைவரை பரவியிருப்பதைப் பற்றியும் நான் பேசப் போவதில்லை. இதற்கு முன்போ, பிறகோ மனிதகுலம் இதுவரை அறிந்திராத இன ஒற்றுமையும், மதசகோதரத்துவத்தையும் அது சாதித்திருப்பதைப் பற்றிக்கூட கூறப்போவதில்லை.

பதிலாக, இந்நாகரிகத்தின் குறிப்பிடத்தகுந்த குணமாயிருக்கிற ஓர் இயல்பை இந்த ஆச்சரியகரமான சரித்திர நிகழ்ச்சியைக் கூறி அறிமுகப்படுத்துகிறேன். பைஸாண்டியத்திற்கெதிரான ஒரு வெற்றிகரமான போருக்குப் பிறகு அவர்கள் பிடித்து வைத்திருந்த போர்க்கைதிகளை விடுவித்துவிட்டு அதற்கு ஈடாக அந்நாட்டின் தொன்மையான கிரேக்க கலாச்சாரத்தின் தத்துவ, மருத்துவ , கணித நூல்களைப் பெற்றுக்கொண்டதாக வரலாற்றுப் பதிவு இருக்கிறது. மனிதனின் அறிவு வேட்கைக்கு வழங்கப்பட்ட மதிப்பீடாகவே இதனைக் கருதலாம். அயல் மதத்தைச் சேர்ந்த கலாச்சாரமாக இருப்பினும் அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களை தேடி விழைவதென்பது நாகரிகத்தின் உச்சமாகும்.

இவ்விரு நாகரிகங்களின் மடியில் பிறக்க வேண்டியது என் விதியாகி, இவற்றின் அமுதமருந்தி, இவற்றின் கலைகளையும், இலக்கியங்களையும் உண்டு நான் வளர்ந்தேன். அதன்பின் உங்களது செழிப்பான கலாச்சாரத்தின் தேனைப்பருகினேன். இவை எல்லாவற்றிலிருந்தும் கிடைத்த ஊக்கத்தாலும், எனது சுயகவலைகளாலும் நெகிழ்ந்த வார்த்தைகள் என்னிடமிருந்து புறப்படத்துவங்கின. மேன்மை பொருந்திய தங்கள் அகாதெமியால் இவ்வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டுப் பெறும் அதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வந்தனங்கள், என் பெயராலும், இவ்விரு நாகரிகங்களை வளர்த்த மாபெரும் ஆத்மாக்களின் பெயராலும் இருக்கட்டும்.

உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்; மூன்றாம் உலகிலிருந்து வருகிற இம்மனிதனுக்கு கதை எழுதுவதற்கான மன நிம்மதி எப்படி கிடைக்கிறதென்று. நீங்கள் கருதுவது முழுக்க சரியே. கடன் சுமையில் அழுந்திப் போயிருக்கிற, செலவினங்களின் அழுத்ததினால், பசியால் அல்லது ஏறக்குறைய பட்டினியால வாடிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்துதான் நான் வருகிறேன். ஆசியாவில் சிலர் வெள்ளத்தால் அழிவதைப் போல, ஆப்பிரிக்காவில் மற்றவர்கள் வறட்சியால் அழிந்து கொண்டிருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இலட்சக்கணக்கானோர் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு இக்காலத்திலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர். மேற்குக்கரையிலும், காஸாவிலும் தமது சொந்த மண்ணிலேயே – தமது தந்தையினரின், மூதாதையினரின் மண்ணிலேயே- தங்களது இருப்பைத் தொலைத்துவிட்டு இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனர். ஆதிமனிதன் முதலில் கண்டறிந்த ஓர் அடிப்படை உரிமைக்காகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமது சொந்த மண்ணில், கௌரவமாக வாழ மற்றவர்களால அங்கீகரிக்கப்பட வேண்டுமென்கிற அடிப்படை உரிமைக்காக. இப்போராட்டத்திற்காக இத்தீரமிக்க மனிதர்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் பதிலாகப் பெற்றது உடைந்த எலும்புகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும், சிதைக்கப்பட்ட வீடுகளையும் , சிறையிலும் முகாம்களிலும் சித்திரவதைக்கபடுவதையும் ஆகும். இவர்களைச் சுற்றிலும் பதினைந்து கோடி அராபியர்கள் நிகழ்வதைப் பார்த்து வேதனையிலும், கோபத்திலும் வெந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதுமே விரைவில் வெடித்து சிதறக்கூடிய கொந்தளிப்புப் பிரதேசமாயிருக்கிறது. நியாய உணர்வும், அமைதிக்கான விழைவும் கொண்ட அறிவாளர்களால் மட்டுமே நிச்சயமானதொரு பிரளயத்திலிருந்து இப்பகுதியைக் காப்பாற்ற இயலும்.

ஆம், மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிர்ஷ்டவசமாக கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சினைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக்கொள்ள கலை அனுமதிக்கிறது.

நாகரிக வரலாற்றின் இந்த அதிமுக்கிய தருணத்தில் மனிதகுலத்தின் துயரக்குரலால் பதியப்படாமல் சூன்யமாக மரித்துப் போவதென்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வல்லரசுக்கிடையிலிருந்த பனிப்போர் முடிந்து விட்ட இப்பொழுதில்தான் உண்மையில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்திருக்கிறதென்று நம்மால் ஆசுவாசப்படுத்திக் க்கொள்ள முடிகிறது. இத்தருணத்தில் மனிதமனம் தன்னிடம் பொதிந்திருக்கும் பேரழிவுக் கூறுகளையும், யுத்தவெறியையும் முற்றாக களைந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. விஞ்ஞானிகள் , தொழிற்சாலைக் கழிவுகள், சுற்றுச் சூழலில் உண்டாக்கும் மாசுகளை அகற்ற முனைவதைப் போல மனிதமனத்தின் அறநெறிகளில் பீடித்திருக்கும் மாசுகளையும் அகற்ற வேண்டிய கடமை அறிவு ஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த யுகத்தின் நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான தீர்க்க தரிசனமும், தீட்சண்யமான அணுகுமுறையும் நமது நாட்டின் பெருந்தலைவர்களிடமும், பொருளாதார வல்லுநர்களிடமும் தேவையென உரிமையுடன் கேட்கவேண்டியது நமது கடமையாகும்.

பண்டைக்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் தமது தேசத்திற்காக மட்டுமே கவலப்பட்டு வந்தனர். தமக்கு எதிரான கருத்துடையவர்கள் விரோதிகளாகவும், தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களாகவும் கருதிவந்தனர். தமது தற்பெருமைக்கும், தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை வேறெந்த மதிப்பீடுகளுக்கும் தரவில்லை. இதற்காக பல தர்ம நியதிகளும், மதிப்பீடுகளும் பலியிடப்பட்டன; அறமற்ற பாதைகள் நியாயப்படுத்தப் பட்டன; கணக்கற்ற ஆத்மாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பொய், ஏமாற்று, களவு, துரோகம் போன்றவை மகத்துவத்தின் அடையாளங்களாய் கோலோச்சி வந்தன. இன்று இத்தகைய பார்வைகளை அவற்றின் அடிப்படைகளிலிருந்தே திசைதிருப்ப வேண்டிய தேவை வந்துவிட்டது. இன்றைய தேசத்தலைவர் என்பவர், அவரது உலகாளவிய பார்வையாலும், மனிதகுலத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பொறுப்புணர்வாலும் மட்டுமே மதிப்பிடப் படுகிறார். முன்னேறிய நாடுகளும், மூன்றாம் உலகநாடுகளும் ஒரே குடும்பம்தான். அறிவும், ஞானமும், நாகரிகமும் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது. அநீதியை வேடிக்க பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். உமது தகுதிக்கேற்றதொரு பங்கினை நீங்கள் ஆற்றியேயாக வேண்டும். உலக சமுதாயத்தின் மேட்டுக் குடியினரான உங்களுக்கு இவ்வுலகத்தின் எத்திசையிலும் இருக்கிற மனிதரோ, தாவரமோ, மிருகமோ புரிகிற தவறுகளில் ஒரு பங்கிருக்கிறது.

சொற்கள் நம்மிடம் போதுமான அளவு இருக்கின்றன. செயல்படுவதற்கான நேரமிது. கொள்ளையர்களின், லேவாதேவிக்காரர்களின் யுகம் இத்துடம் முடியட்டும். இப்பூமி முழுவதற்குமான தலைவர்கள் உருவாகட்டும். தென் ஆப்பிரிக்காவின் அடிமைகளைக் காப்பாற்றுங்கள்! ஆப்பிரிக்காவின் பட்டினியாளர்களைக் காப்பாற்றுங்கள்! பாலஸ்தீனியர்களை துப்பாக்கி குண்டுகளிலிருந்தும், சித்திரவதையிலிருந்தும் காப்பாற்றுங்கள்! தமது மகத்தான ஆன்மிகப் பாரம்பரியத்தை இஸ்ரேலியர்கள் கெடுக்காதிருக்கும்படி காப்பாற்றுங்கள்! பொருளாதார கடும் சட்டங்களால கடனில் மூழ்கித் தவிப்போரைக் காப்பாற்றுங்கள்! அறிவியல் விதிகளை விட மனிதநெறிகளுக்கு கட்டுப்பட்டிருப்பதே மேன்மையானதென்று நிறுவுங்கள்!

உங்களது மன அமைதியை நான் குலைத்து விட்டிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் அன்பர்களே ! ஆனால் மூன்றாம் உலக நாடு ஒன்றிலிருந்து வரும் ஒருவனிடமிருந்து வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிரப்பிவைத்திருக்கும் திரவத்தின் நிறத்தையல்லவா கண்ணாடிக் கோப்பை பெற்றிருக்கும்? மேலும் மனிதகுலத்தின் அவலங்களை இம்மாமண்டபத்தில் – அறிவியலையும், இலக்கியத்தையும், மேன்மையான மனிதமதிப்பீடுகளையும் அரியணையில் அமர்த்தி அங்கீகரிக்கும் இம் மகத்தான சபையில் – உங்கள் உயர்ந்த நாகரிகச் சோலையில் எதிரொலிக்காமல் வேறெங்கே இக்கோரிக்கையை வெளியிட முடியும்?

தனது திரண்ட செல்வத்தையெல்லாம் இந்த உன்னதப் பணிக்காக அர்ப்பணித்து அம்மாமனிதரின் உதாரணத்தை முன்வைத்து, நமது பண்பாட்டின் அடையாளமாக, உயர்குடியாளர்களான நீங்களும் அவர் வழியே நடந்தேயாக வேண்டுமெனெ மூன்றாம் உலகத்தினரான நாங்கள் விழைகிறோம். நம்மைச் சுற்றி நடப்பவை எப்படியிருப்பினும் இறுதிவரை நான் நம்பிக்கை இழக்கப்போவதில்லை. இறைவன் அதர்மத்திற்கெதிரே ஜெயிக்கப்போகிறானா என சந்தேகப்படப் போவதில்லை.

இறைவன் ஒவ்வொருநாளும் வென்றுகொண்டுதான் இருக்கிறான். நாம் நினைப்பதை விட சாத்தான் சோனியாகவே இருக்கக்கூடும். வெற்றி என்பது கடவுள் பக்கம் எப்போதும் இருக்குமென்பதற்கு அழிக்க முடியாத சான்றாக, இத்தனைப் பேரழிவுகளையும், இயற்கைச் சீற்றங்களையும், கொடும் விலங்குகளையும், நோய்களையும், அச்சங்கள், தலைக்கனங்களின் விளைவுகளையும் மீறி இம்மனிதகுலம் தழைத்து வருவதைக் கண்டு வருகிறோம். இத்தனைக்கும் மத்தியில்தான் மனிதன் தேசங்களை உண்டாக்கியும், புதிது புதிதாய் கோடானுகோடி விஷயங்களைப் படைத்தும், கண்டறிந்தும், விண்வெளியை வென்றும், மனித உரிமைகள் பிரகடனம் செய்தும் வந்திருக்கிறான். உண்மை என்னவென்றால் சாத்தான் போடும் இரைச்சலிலும், ஆடும் பேயாட்டத்திலும் மனிதன் சந்தோசங்களை விட வலிகளையே அதிகம் நினைவுபடுத்திக் கொள்கிறான். நமது பெரும்புலவர் அபுல்ஆலா-அல்-மாரி சொன்னதைப் போல :

‘ஜனனத்தின் போதான களிப்பை விட
நூறுமடங்கு பெரிது மரிக்கும் போதான துக்கம்’

இறுதியாக என் நன்றிகளை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டு, மன்னிக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

**

நன்றி : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’
மின்னஞ்சல் : tamilatchara@yahoo.com

**

தொடர்புடைய சுட்டி :

நாகிப் மாஃபௌஸ் – நேர்முகம் (தீராநதி)  (நன்றி : தமிழ் கூடல்)

Newer entries »