காந்திஜியின் கடிதங்கள் – சித்ரா பாலசுப்ரமணியன் உரை

சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் அற்புதமான உரை. பட்டிமன்றக் கரடிகளின் உறுமல்களைக் கண்டு பயப்படும் எனக்கு பெரும் ஆறுதல் அளித்த உரை. இரு தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர் P.K.சிவகுமார் இதைப் பகிர்ந்துகொண்டு இப்படி எழுதினார் :

அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அறிவுப் பகிர்தல். குறிப்புகள் எதுவும் கைவசம் வைத்துக் கொள்ளாமல் அருவி மாதிரி கொட்டுகிறார். காந்தியை உள்வாங்கிக் கொண்ட ஆழமும் காந்தியின் எளிமையான எழுத்துப் பாணி பேச்சில் வரும் நுட்பமும். இணையத்தில் காந்தி கடை விரித்துத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிற, அடுத்தவர் கருத்துகளைத் தொடர்ந்து மட்டம் தட்டுகிற, காந்தியைச் சிலாகித்தாலும் அவரின் பெருந்தன்மை முன்னே நிற்கத் தகுதியில்லாத சிலரின் முன்னே, இவர் ஓர் அரிதான, அமைதியான தகவல் சுரங்கம்.

நன்றி சிவகுமார். அன்று கொஞ்சம் கேட்டேன். நேற்று காலை முழுவதும் கேட்டேன். தன சீடரான ராஜ்குமாரி அம்ரிது கௌர்-ன் மனச்சோர்வுக்குக் காந்திஜி சொன்னது (13:50) எனக்கும் நன்றாகப் பொருந்தும். காந்தி சொல்கிறார் : மனச்சோர்வு என்பதே ஓர் அறியாமைதானே… நீ அப்பப்ப உனக்கு மனச்சோர்வுன்னு எழுதுறியே.. இந்த இயற்கையின் முன்னால் நாமெல்லாரும் சமமா படைக்கப்பட்டிருக்கோம், நமக்கு எவ்வளவு கடமைகள் இருக்குன்னு தெரிஞ்சும் நீ அடிக்கடி மனச்சோர்வு அடைவது என்பது எவ்வளவு அறியாமையான ஒன்னு. உற்சாகமடைய மறுப்பவர்களை உற்சாகப்படுத்தவே முடியாது. அதனால உன்னை நீயேதான் உற்சாகப்படுத்திக்கனும்.. அதனால, இதெல்லாம் திரும்பத் திரும்ப நானே உனக்கு செய்யனும் எதிர்பார்க்காதே. நீயே உன்னை உற்சாகப்படுத்திக்கொண்டு வேலைய பண்ணு…

*

*

Thanks : Chitra Balasubramaniyan, Gandhi Study Centre, Vijayan G , PKS

*

பேச்சாளர் பற்றி:

திருமதி ம.ப.சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்கள் M.O.P. வைஷ்ணவா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாகவும், மாணவர் பண்பலை வானொலியின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றியவர். வானொலி மற்றும் தூர்தர்ஷன் போன்ற ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது அவ்வூடகங்களில் பகுதிநேர பணியாளராக பணியாற்றி வருகிறார். அதிலும், குறிப்பாக காந்தியடிகளின் 150-வது ஆண்டை ஒட்டி பொதிகைத் தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் “காந்தி 150” என்ற காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் ஆக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். காந்தியம், வரலாறு, தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த ஆர்வமும், வாசிப்பும் உடையவர்.

நூல் பற்றி :

மகாத்மா காந்தியின் உரைகள், எழுத்துகள் அனைத்தும் ஆங்கிலத்தில் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று, அந்நூல்களில் இருந்து அவரது ஆக்கங்கள் பல குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் 20 பாகங்களாக தொகுக்கப்பட்டு தமிழிலும் வெளிவந்துள்ளன என்பதுவும் நாம் அறிந்ததே. அவற்றில், தொகுதி 14 மற்றும் 16 ஆகியவை முறையே பல தலைவர்களுக்கும் மற்றும் உலகெங்கும் இருந்த பலருக்கும் காந்தியடிகள் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவர், தன்னுடைய அன்றாட வாழ்வின் மிக முக்கிய பணிகளுக்கு மத்தியில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 80 கடிதங்கள் வரை எழுதியவர். காலங்களைத் தாண்டி உயிர்ப்புடன் விளங்கும் அக்கடிதங்களின் வாயிலாக காந்தி என்னும் மாபெரும் ஆளுமையை, அவரது உள்ளத்தை, அவர் உலகின் பல தலைவர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தையும் மிக எளிதாக நாம் கண்டடைய முடியும்.

இடம்: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017.