ஷைகு பஸீர் அப்பா வலியின் சதகம்

‘அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்..’ என்று எங்கள் ஜபருல்லாநானா எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தும் சதகம்…  ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ தந்த அப்துற் றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன். நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா மீது ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள் பாடிய பிள்ளைத் தமிழ் பிறகுவரும். இப்ப – அதுவும் ஜும்ஆ நேரத்துல – இதப்போட்டா  ‘ஷிர்க்’கும்பாஹா! – ஆபிதீன்

***

இறைநேசச் செல்வரான கல்வத்து நாயகத்தின் ஞானப்பிதாவான மேலப்பாளையம் ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணப் பேரவாவுற்று  ஒரு சதகமே பாடினார்கள்.

அதில்,

பொங்காரநேய வடிவோரைக் காணும்
புதுநாளும் எந்த நாளோ?
புகழ்யார்கள்சூழ வருவோரைக் காணும்
பொறைநாளும் எந்த நாளோ?
கங்காரநேய வொளிமேலைக் காணும்
கதிநாளும் எந்த நாளோ?
கமழ்பாதவாசம் திகழ்மார்பைக் காணும்
கதிநாளும் எந்த நாளோ?
பங்காரைநேர்செய் நயினாரைக் காணும்
பரநாளும் எந்த நாளோ?
பணியோதஓதி வருவோரைக் காணும்
பலனாளும் எந்த நாளோ?
சிங்காரவேத மஹமூதைக் காணும்
திருநாளும் எந்த நாளோ?
தீன்தீன்மும்ம துர்ரசூலைக் காணும்
ஜெயநாளும் எந்த நாளோ?

என்று ஏங்கிப் புலம்பினார்கள்.

அவர்களின் புலம்பலைக் கேட்டு மனமிளகிய கருணையங் கடலாம் முகம்மதெங்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் ஒருநாள் தம் அருமைத் தோழர்கள் புடைசூழ திருத்தோற்றம் வழங்கி, ‘நீர் எம்மீது புகழ்பாடும் ஷாயிர் (புலவர்) ஆவீர்!” என்று வாழ்த்தி மறைந்தனர். இதனையே பஸீர்வலி அவர்கள் தாம் பாடிய மெய்ஞ்ஞானச் சதகத்தில்,

செவியாற சூலென்று நம்பின பேர்க்கன்பு சிந்தைசெயும்
சவியாற சூலென்னை சாஹிரென்றே சொல்லத் தான்வருத்தும்
கவியாற சூலுல்லா சேரும் லிவாவுல்ஹம் துக்கொடியும்
நபியாற சூல்முஸ்த பாவே முகம்மதே நாயகமே

என்று பாடிக் களிகூர்கின்றார்கள்.

***
நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

வணக்கம் நாகூர் ரூமி!

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும் – படே படே எழுத்தாளர்கள் பங்குகொள்ளும் – படைப்பிலக்கியப் பயிலரங்கில் (பார்க்க : இமேஜ் 1  & இமேஜ் 2 ) கலந்துகொண்டு , படைப்பது எப்படி என்று பாடம் கற்றுக்கொள்ளப்போகும் , மன்னிக்கவும் , ’சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்’ என்ற தலைப்பில் படுத்தவிருக்கும் நண்பர் நாகூர்ரூமிக்கு நல்வாழ்த்துகள். அவர் பேச்சு எப்டி இக்கிம்? சென்ற ஆண்டு ’தமிழன் டி.வி’யில் பேசியது போல – இஸ்லாம், இசை, இலக்கியம் என்று கலந்துகட்டி – இப்டி இக்கிம். ஓய், அஹ எல்லாருக்கும் நானும் தாஜும் சலாம் சொன்னதா சொல்லும்! 

கேட்க :

***

பயிலரங்கு பற்றிய விபரங்கள் அனுப்பிய சகோதரர் நூருல்அமீனுக்கு நன்றி.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு? – தாஜ்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு?

தாஜ்

இலக்கிய உலகத்தை
அறிவார்ந்த உலகமெனச் சொல்லலாம்.
அப்படிச் சொல்வதில்
பெரிய தவறேதுமில்லை. 
பல ‘படிமங்கள்’ கொண்ட
இந்த மாய உலகத்தை
எவ்வளவுக்கு
மெச்சினாலும் தகும்!
தவறேயில்லை.

உலகக் கலைஞர்களால்
காலத்திற்கேற்ப தொடர்ந்து
வடிவமைக்கப்பட்டபடியே இருக்கும்
இதன் பக்கங்களில்
வாசகர்கள் நாளும் கொள்ளும்
தரிசனங்கள் கொஞ்சமல்ல!
இன்னொரு புறம்
அசலாய் விளையும்
வேடிக்கை வினோத
அழிச்சாட்டியங்களுக்கும்
இங்கே பஞ்சமே இல்லை!

காலத்தையொட்டி
நவீனங்கள்
நவீனப் பட்டுக்கொண்டே இருப்பினும்,
அதுவே யதார்த்தமெனினும்
அதைப் பற்றிய முழுத் தெளிவற்றவர்கள்
இங்கே ஒருபாடு உண்டு.

பழமை கொண்ட
படைப்பாக்கங்களில் கிறங்கி
அதுதான்…
அதுமட்டுமேதான்…
இலக்கியமென சாதிக்கிற
விந்தைப் பேர்வழிகளின்
விசேச கூத்தினை
நேற்று மட்டுமல்ல
இன்றும் காண முடியும் இங்கே.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்,
தமிழ் இலக்கிய வட்டத்தில்
நவீன இலக்கியத்தை
தலைகீழாகப் புரிந்துகொண்ட
பேர்வழிகள் எல்லாம் ஒன்று கூடி
‘வானம்பாடிகள்’ என்ற பெயரில்
ஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி
அடித்த கூத்தும்
அதில் தெறித்த வேடிக்கைகளும்
சாதாரனமானதமல்ல.

அது மாதிரியான
இங்கத்திய
இன்னொரு வேடிக்கைதான்
இலக்கியத்தை நிறம் பிரித்து,
பாகுபடுத்தி படுத்திப் பார்ப்பதென்பதும்!

பக்தி இலக்கியம்
இடதுசாரி இலக்கியம்
மார்க்ஸிய இலக்கியம்
முற்போக்கு இலக்கியம்
திராவிட இலக்கியம்
தலித் இலக்கியம் என்றெல்லாம்….
இலக்கியம் இன்றைக்கு பல்வேறு
உள்நிறம் கொண்டுவிட்டது.

கடவுளர்களிடம் பணியும்
பக்திக்காகவும்
அரசியல் சித்தாந்த கொள்கைகளுக்காகவும்
இன்னும் சில கோட்பாடுகளுக்காகவும்
யுகயுகமாய் உதாசீனப்படுத்தப்பட்ட
பூமிப்புத்திரர்கள்
சிவந்த சினத்திற்காகவும்
இலக்கியம் நிறம் பிரிக்கப்பட்டதில்
அது கலக்கம் கொண்டிருக்கிறது.
இதனால்,
இலக்கியம் அறியமுனையும் வாசகன் கொள்ளும்
குழப்பங்கள் கொஞ்சமல்ல!

இதன் தொடர்ச்சியாக
இந்த வேடிக்கைக் கூத்தின்
உச்சபட்ச நிகழ்வாக
தமிழ் பேசும் இஸ்லாமியர்களின்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’
தோற்றம்கொள்ள இருக்கிறது.
அதற்கான ஆயத்தங்கள் படுவீச்சில்
துரிதப்பட்டு கொண்டு இருப்பதையும்
செய்திகளின் வழியே
சில வருடங்களாக அறிய முடிகிறது.

இன்றைக்குப் பேசப்படும்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ தவிர்த்து,
பிற இலக்கிய வகையறாக்கள் எல்லாம்
தங்களுக்கான ‘இலக்கிய அடையாளமாக’ மட்டுமே
தங்களின் கோட்பாட்டைச் சுட்டும்
குறியீட்டுச் சொல்லாக மட்டுமே
புழங்கினார்கள்.
புழங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

மற்றபடிக்கு
இந்தக் கோட்பாட்டாளர்கள் அனைவரும்
உலக இலக்கிய சிந்தை கொண்டர்வர்கள் என்பது
அப்பட்டமான உண்மை.
அதன் பேர் இலக்கியங்களோடு
போட்டி போடுபவர்கள்!
சாதிப்பவர்கள்.
அதனையும் மறுப்பதற்கும் இல்லை.

*
இவ்வாண்டு
‘மே’ 20,21,22 தேதிகளில்
மலேசியாவில் நடந்தேறிய 
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்’
ஸ்ரீலங்காவை சேர்ந்த
இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க்
ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள்
‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ என்கிற
கருப்பொருளில்
நீண்ட வியாக்கியானம் செய்திருந்ததை
வலைத்தளப் பக்கங்களில் வாசித்தேன்.
இந்தச் சுட்டியில் முயன்றால்…
நீங்களும் விரும்பினால் வாசிக்கலாம்.
 
உலக இலக்கியத்தின் பகுதியாக
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
இயங்கும் என்பதற்கான
எந்தவொரு ஒப்புதலும்
அந்த மஹாவனுபஸ்தரது
பேச்சில் எதிரொலிக்கவில்லை.

அது மாதிரியே,
நவீன இலக்கியத்தின் போக்கையோ
அல்லது நவீன இலக்கியத்தையோ
அவர் ஒப்புக் கொள்கிறாரா என்றால்…
அதைக் குறித்தும் தீர்மானமான பேச்சில்லை.

பல தலைமுறைகளுக்குப்
பிந்திய காலக்கட்ட
இலக்கியங்களுல் சிலவற்றை
அவர் உயர்த்திப் பிடித்திருக்கிறார்
அதையொட்டி பேசியிருக்கிறார் என்றாலும்
மத ஒழுங்கு சார்ந்த/ மத நெறி சார்ந்த
அளவுகோளை அதில் தவறாது காண்கிறார்!

இஸ்லாமியர்களின் வேதமான
திருக் குரானை முன்வைத்து
இலக்கியத்தில் காய் நகர்த்துவதை
அவர் பிரதானப்படுத்துகிறார்.

நீதி நேர்மைகளை வலியுறுத்தி/
சீரிய கண்ணியமுடனான
இஸ்லாமிய வாழ்வினை மாற்றுக் குறையாமல் எழுதி/
இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை
மாசுபடாமல் எழுத்தில் கையாண்டு/
படைப்பாக்கம் செய்ய வேண்டுமென
அறிஞர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்
தனது பேச்சில் தீர வலியுறுத்துகிறார்.

இன்னுமான
அவரது செவ்விய பேச்சினூடே
உணர்ந்த வகையில்,
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ யென
பெரிய வட்டப் பேச்சாகப் பேசி
தனி இலக்கிய வரம்பாகவே
காண நினைக்கிறார்!

‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை’
தனி இலக்கிய வரம்பாகக் காண்பது கிடக்கட்டும்.
அவர் முன் வைக்கும்
பிற கருத்துக்களை யோசிப்போமேயானால்
அவைகள்
இன்றைய படைப்பின் நடைமுறைக்கு
ஏற்புடையதாக இருக்குமென்று தோன்றவில்லை.
தோன்றவில்லை என்ன…
இயலாது, முடியாது.

எழுத்தில் சுதந்திரமில்லாமல்
உலக விமர்சனப் பார்வையில்லாமல்
அந்தக் கொதி நீரின் ஆவியில்லாமல்
எதுவும் வேகாது.
வேகவே வேகாது.

நீதி நேர்மைகளை
படைப்பின் வழியே எடுத்துரைப்பது என்பதும்,
புத்திமதிகள் சொல்வதென்பதும்
படைப்புலகில் மங்கிப் போன சங்கதிகள்.
நான் அறிந்த வகையில்
பேராசிரியர். மு.வரதராஜனாரின்
‘கரித்துண்டு’ காலத்தோடு
அவ்வகைப் படைப்புகள்
தமிழில் அத்து, இத்து புதைக்கப்பட்டும் விட்டது.
மீறி அப்படி எழுதப்படுமானால்
அந்த வகை இலக்கியங்களை
அச்சிட்டு மட்டும் மகிழலாம்.
பரந்த அளவில் வாசிப்பவன் கிடைக்க மாட்டான்.

ஒரு நேரத்தில்
பெருமளவில் படிக்கப்பட்ட
பக்தி இலக்கியம்
இடதுசாரி இலக்கியம்
மார்க்ஸிய இலக்கியம்
முற்போக்கு இலக்கியம்
திராவிட இலக்கியம்…
இவையெல்லாம் கூட
இன்றைய வாசகர்களின்
தூர விசயமாகப் போய்விட்டது.

அந்த இலக்கியவாதிகள்
படைப்பின் வழியே போதித்த
கொள்கை வழி கோட்பாட்டுகளாலும்,
வெளிப்படையான
புத்திமதி, நேர்மை போதிப்புகளாலும்
அவைகள் இன்றைக்கு வாசகப் பார்வையிலிருந்து
பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

குறிப்பாய்
அந்த இலக்கியங்கள் வலியுறுத்திய
மார்க்ஸியமும்,
அது வழியிலான அரசுகளும்
உலக அரங்கில் தோல்விகளை தழுவி
ஓய்ந்தும் கிடக்கிறது!

இதனையெல்லாம் தாண்டி
உறுத்தும் இன்னொரு சங்கதியை
தட்டாமல் இங்கே சொல்ல வேண்டும்.
உலகில்…
‘மதத்தின் பெயரால்’
இது நாள்வரை
எந்தவொரு மொழியிலும்
இலக்கியம்
தனி அடையாளம் கொண்டதே இல்லை!
‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ பேசும்
ஸ்ரீலங்கா தமிழ் முஸ்லீம்கள்தான்
அப்படியொரு
முன் உதாரணப் புருஷர்களாக ஆகியிருக்கிறார்கள்!
எங்கே போய் சொல்ல இந்தக் கூத்தை?
நான், தமிழகம் சார்ந்த
தமிழ் பேசும் முஸ்லீமாக இருப்பதினால்…
கொள்ளும் உறுத்தலுக்காக
காணும் சுவர்களில் எல்லாம்
முட்டி மோதிக் கொண்டால்
தேவலாம் போல் இருக்கிறது.

அரபு நாடுகளில் கூட
‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர
இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை.
இஸ்லாமிய தாக்கமும்
முசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட
பாகிஸ்தானிலேயே கூட
உருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர
இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. 

ஸ்ரீலங்காவை சேர்ந்த
தமிழ் பேசும் முஸ்லீம்கள்
இப்படி
‘உலக இஸ்லாமிய
தமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில்
மலேசியாவிலும்/ தமிழகத்திலும்
தமிழ் பேசும் இஸ்லாமியர்களை
ஒருங்கிணைப்பதில்
உள்ளார்ந்ததோர்
அரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தமிழீழப் பரப்பில்
‘விடுதலை புலிகளால்’
தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்
பெரும் அளவில் பாதிப்பிற்குள்ளானபோது
இவர்களின் துயரத்தில் பங்கெடுக்கவோ
பின்னர், அவர்களின் துயரைத் துடைக்கவோ
பிற நாடுகளில் வாழும்
தமிழ் பேசும் முஸ்லீம்கள்
அக்கறை காட்டவில்லை.
இன்றும் கூட
அவர்கள், தங்களது சொந்த மண்ணிற்கு
காலெடுத்து வைக்க
முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
இதுவோர் அளவிட முடியாத சோகம்தான்.

இச் சோகம் பொருட்டு,
வெளிநாடுகளில் வாழும்
தமிழ் பேசும் முஸ்லீம்களிடம்
அவர்களுக்கான ஆதரவைத் தேட
இலக்கியத்தை முன்வைத்து
முயன்று கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

அவர்களது சோகத்தை
புரிந்துகொள்ள முடிவது மாதிரி
அவர்கள் கையில் எடுத்திருக்கும்
‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ குறித்த
அளவீடுகளை
முற்றாய் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
 
*

இன்றைய இலக்கியத்தின்
நீள/அகல
விஸ்தீரணங்கள் அதிகம்.
அது வானம் தொடும் சமாச்சாரம்!
தவிர, பூரண சுதந்திரம் கொண்டு
இயங்கக் கூடியதாக அது வளர்ந்தும் இருக்கிறது.
இந்த வளர்ச்சியினை
இஸ்லாமிய கர்த்தாக்கள் அங்கீகரிப்பார்களா?
மாட்டவே மாட்டார்கள்.
சரி, ஒத்தாவது போவார்களா?
ம்ஹும், அதுவும் மாட்டார்கள்.

நான்கு பக்கமும் சட்டமடித்து
அதற்குள் எழுத முடியுமானால்
போகட்டுமென சுதந்திரம் தருவார்கள்!
பொதுவில் சுதந்திரச் சிந்தனை என்பதே
இஸ்லாத்திற்கு உதவாத ஒன்று.
ஆயிரத்து நானூறு வருசத்திற்கு முன்
எழுதப்பட்ட நெறிமுறை வரம்புகளுக்குள்தான்
ஒரு முஸ்லீமானவன்
யோசிக்கணும்/செயல்படணும்/
எழுதவும் எழுதணும்!

அரபு நாடுகளில்
படைப்பாளிக்குரிய சுதந்திரத்தோடு
எழுத முயன்ற படைப்பாளிகள் பலர்
தொடர்ந்து அப்படி
இயங்க முடியாமல் போயிருக்கிறது.
காரணம்…
ஒன்று, அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்.
அல்லது,
வாழ்நாள் முழுக்க அடைப்படும்
தேசத்துரோகிகளுக்கான ‘கேம்(ப்)’களில்
அந்த ரீதியான தண்டனையோடு
மிச்ச வாழ்நாட்களைக் கழிக்க
நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்.

தவிர,
உலகளாவிய
முஸ்லீம் அறிஞர்களின் இன்றைய
தலையாய பணிகளில் ஒன்று
தங்களது இன எழுத்தாளர்கள் எழுதும்
சுதந்திரமான நவீனங்களைப் படித்து
கோபம் கொள்வதும்
’ஃபத்வா’ வழங்குவதாகவுமே இருக்கிறது.
இல்லையெனில்….
சல்மான் ருஷ்டியையும்
தஸ்லீமா நஸ்றீனையும்
இன்னும் பிற
இஸ்லாமிய நவீன கர்த்தாக்களையும்
ஓட ஓட விரட்டி அடித்திருப்பார்களா?

சமீபத்தில் கூட
தமிழகத்தின் தென்மாவட்டம் ஒன்றில் வாழும்
முற்போக்கான முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர்
தான் எழுதியதோர் கட்டுரைக்காக…
(மது அருந்துவது ‘மக்ரூஹு’ மட்டும்தான்,
ஹராமல்ல என்கிற தொனியில்
மத நூல்களை ஆய்ந்து எழுதியிருந்தார்)
சொந்த ஊர் பஞ்சாயத்தில்
ஃபத்வா பெற்றார்!
பின்னர், கோர்ட் படியேறி,
தான் கொண்ட பழியை துடைத்து கொண்டவராக
சமீபத்தில் நியாயம் பெற்றிருக்கிறார்!

இப்படி…
இஸ்லாமிய நவீனக் கர்த்தாக்களின்
விமர்சனம் சார்ந்த கவிதைகளால்,கட்டுரைகளால்,
அல்லது அவர்களின் வளமான
சுதந்திரப் படைப்புகளால்
இஸ்லாத்தின் பவித்திரம் கெட்டுவிடுகிறது என
நினைப்பவர்கள்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ என்கிற
மகுடத்தின் கீழ் இயங்குவதால் மட்டும்
எப்படி…
நல்ல இலக்கியத்தையும்
உலகத் தரமான இலக்கியத்தையும் தரமுடியும்?

*

நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில்
இஸ்லாம் சார்ந்த
மிகச் சிறந்த படைப்பாளியாக
அடையாளம் காணப்பட்டு
பேசப் படுபவர்களாகத் திகழ்வது…
தோப்பில் முகம்மது மீரான்/
அபி/
ஆபிதீன்/ (நாந்தான் அடிச்சேன்! – ஆபிதீன்)
நாகூர் ரூமி/
ஜமாலன்/
மீரான்மைதீன்/
மனுஷ்ய புத்திரன்/
களந்தை பீர் முகம்மது/
எச். பீர் முகம்மது/
ஹெச்.ஜி..ரசூல்/
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி/
கீரனூர் ஜாகிர்ராஜா/
கவிஞர் சல்மா/
ஸ்ரீலங்கா என்றால்.. எம்.ஏ.நுஃமான் , எஸ்.எல்.எம்,ஹனீபா 
அங்கே அப்புறம் மேலும் சொல்லத்தகுந்த
இஸ்லாமியப் படைப்பாளிகள் என்றால்….
கவிஞர்.அனார்
என்பதான இந்த சிலர் மட்டுமே – என் வாசிப்பில்.

கிட்டத்தட்ட
இவர்களுக்கு மட்டும்தான்…
இந்த இஸ்லாமியர்கள் மட்டும்தான்…
தமிழின் நவீன படைப்பிலக்கியம் குறித்து
தீர்க்கமான அபிப்ராயம் கூற
துறை சார்ந்த அனுபவமும்
செறிவான சிந்தையும் கொண்டவர்கள்.
நம்புகிறேன்.

மேற்கூறிய
இவர்களில் எவரொருவரும்
‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ குறித்து
வரவேற்று அபிப்ராயம் கூறவில்லை.
வெட்டியும் ஒட்டியும் கூட
இன்றுவரை பேசவில்லை.
தேடிப் போய் அவர்களிடம்
‘உலக இஸ்லாமிய
தமிழ் இலக்கியம்’ குறித்து கேட்டால்…
அந்தக் கேள்வியையே
புறங்கையால்
ஒதுக்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

சரியாக யோசிக்கக் கூடுமெனில்…
இஸ்லாம்
இவர்களுக்கு இலக்கியம் கற்றுத் தரவில்லை.
இவர்களும்
இஸ்லாத்தை முன்நிறுத்தி
இலக்கியம் செய்பவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.
இன்றுவரை அப்படி ஏதும்
அவர்கள் இருந்ததில்லை என்பதும் உண்மை.
வாழும் யதார்த்தம் இப்படி இருக்க
பிறகு எப்படி
இந்த தமிழ் மண்ணில்
’உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’?

மந்திரத்தால்
இன்னொரு இஸ்லாமியன்
திடுமென
சாதனைக் கொம்புகளோடு
தமிழ் இலக்கியத்திற்குள்
படைப்பாளியாக வந்தால்தான் உண்டு!

***

நன்றி :  தாஜ்  | satajdeen@gmail.com

1:17 AM 26/07/2011

சமரச வாழ்வியல் – மதார் முகைதீன்

‘அயோத்தி தீர்ப்பு: கலகக்காரர்களை அடக்க ரூ. 72.5 கோடிக்கு ‘லத்தி’ வாங்கும் போலீஸ்’ என்ற தட்ஸ்டமில் செய்தியைக் கண்டு பயந்து போய் , இந்த ‘சமரச வாழ்வியலை’ப் பதிவிடுகிறேன். இப்போது தொலைபேசிய தாஜ் , ‘யோவ்.. ஊரெல்லாம் ஒரே போலீஸ்யா’ என்று வேறு பயமுறுத்துகிறார். என் இறைவனே, ‘ இது எதிலே முடியும்? எங்கே கொண்டு விடும்?’

***

தமிழ்ப்புலவர்களின் சமரச வாழ்வியல் – – சௌ. மதார் முகைதீன்
அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பிதழிலிருந்து (1999)

*

முஸ்லிம்களை ஏனைய தமிழ் மக்கள் ‘இசுலாமானவர்கள்’ என்றே சுட்டுகின்றனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்கள் ஆனபின்பும் இஸ்லாம் எங்கள் வழி..இனிய தமிழ் எங்கள் மொழி என்றே வாழ்ந்தனர் – வாழ்கின்றனர்.

இவர்களிலும் தமிழ்ப் புலவர்கள் மத்தியில் மத வேறுபாடு அணுவளவும் தலை தூக்கியதில்லை.

எதிர்ப்பும் பிரச்சார நூல்களும்

யாழ்ப்பாணத்து மேலைப் புலோலியில் தோன்றிய கதிரைவேற்பிள்ளை (கி.பி. 1871 – 1907), மாயாவாத துவம்ச கோளாரி என்ற பட்டம் பெற்றவர். இவர் புத்த மதக் கண்டனம் என்று ஒரு நூல் இயற்றியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக் கோப்பாய் சபாபதி நாவலர் (1844 – 1903) என்பவர் இயேசு மத சங்கற்ப நிராகரணம் என்ற நூலை 1879ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

சி.வை. தாமோதரம் பிள்ளை எழுதிய சைவ மகத்துவம் என்ற நூலுக்கு மறுப்பாகக் கிரிஸ்தவராகிய அருளம்பல முதலியார் எழுதிய சைவ மகத்துவ திக்காரம் என்ற நூலுக்கு மறுப்பாக, யாழ்ப்பாணத்து வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வைத்திய லிங்கம் பிள்ளை என்பவர் (1842 – 1900) சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம் என்ற நூலை எழுதினார்.

கருவூர் கந்தசாமி முதலியார் (1838 – 1890) என்பவர் இயற்றிய பிள்ளை விடு தூது என்ற நூலில், கிறிஸ்தவ மதம் கண்டிக்கப்பட்டதைக் கண்ட கிறிஸ்தவர்கள்..இதை மறுத்து பிள்ளை விடு தூது வெளியிட்டனர். இதனை மறுத்து, சிசுதௌத்திய திரண சண்ட மாருதம், பிள்ளை விடு தூது ஆகிய நூல்களைக் கந்தசாமி முதலியாரின் மாணவர்கள் வேங்கடரமணதாசர், நமச்சிவாயச் செட்டியார் ஆகியோரைக் கொண்டு எழுதுவித்தனர்.

இந்நான்கு தகவல்களையும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்கின்றோம்.

இதே நூலில், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகரும் சிவஞான சுவாமிகளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி முதலிய பழைய (சைவமல்லாத) நூல்களைப் படிக்கக்கூடாது என்று சைவை மக்களைத் தடுத்தனர்.. இந்நூல்களைப் படிப்பவர்களை வீணர்கள் என்று பழித்தனர் என்னும் தகவலையும் பார்க்கிறோம்.

சமயக்காழ்ப்பு

19ஆம் நூற்றாண்டில் தான் தமிழ் நூல்கள் பரவலாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. அப்போது சிலர் கம்பராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களில் இருக்கும் சிவபெருமானைப் போற்றும் பாடல்களை மாற்றியும் சிதைத்தும் அச்சிட்டனர். அருகக் கடவுளுக்கு வாழ்த்துரைத்த செய்யுள்களை விநாயகர் வாழ்த்தாக மாற்றியமைத்தனர்.

மாணவரின் வேற்று மதப் பெயரைக்கூட மாற்றி வைத்த ஆசிரியர்களையும் காண்கின்றோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வெங்கடராமன் என்ற வைணவப் பெயரை சாமிநாதன் என்று மாற்றினார். இந்தச் சாமிநாதன் பிற்காலத்தில் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் ஆகப் புகழ்பெற்றார். கோமளீசுவரன் பேட்டை இராச கோபாலப் பிள்ளை, சண்முகம் பிள்ளையைத் திருமாண் அணியச் செய்து இராமனுசன் என்ற பெயருக்கு மாற்றிய பின்புதான் பாடம் சொன்னார்.

சமரசம் காத்த முஸ்லீம் புலவர்கள்

சைவம் வைணவம் என்று ஒரு பக்கமும் இந்து கிறிஸ்தவம் என்று ஒரு பக்கமும் இந்து பௌத்தம்  என்று ஒரு பக்கமும் எனக் கருத்து முரண்களைத் தமிழ்ப்புலவர்கள் கொண்டிருந்தாலும் சமயச் சண்டை என்ற வட்டத்திற்குள் முஸ்லிம் புலவர்கள் நுழையவில்லை.

நூற்றுக்கணக்கில் காப்பியங்கள், பிரபந்தங்கள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை முஸ்லிம் புலவர்கள் தமிழுக்குக் கொடுத்துள்ளனர். 

இவர்களில் (முஸ்லிம் புலவர்கள்) இயற்றியுள்ள லட்சக்கணக்கான தமிழ்ச் செய்யுள்களில் ஒன்றில்கூட இந்து மதத்தையோ , பிற மதங்களையோ கண்டிக்கும் – கேலி செய்யும் – தொனியில் ஓர் எழுத்துக் கூட இல்லை. இதனால் இந்துப் புலவர்களும் முஸ்லிம்களிடம் வெறுப்பு இல்லாமல் இருந்ததாக அறிகிறோம்.

ஆலிப் புலவர்

இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இப்புலவரின் தந்தை பெயர் செய்கு அபுபக்கர். ஊர் இப்போது செவல் என்றும் மேலச் செவல் என்றும் அழைக்கப்படும் மங்கை நகர். இது சேரன்மாதேவிக்கு (நெல்லை) அருகில் உள்ளது. இவர் இயற்றிய நூல் மிஃராஜ் மாலை.

நபிகள் நாயகத்தை இறைவன் விண்ணகத்திற்கு வரவழைத்து, அங்குள்ள காட்சிகளைக் காட்டினான். இதனையே மிராஃஜ் நிகழ்ச்சி என்று இஸ்லாமிய வரலாறு கூறும். இதனை இலக்கியச் சுவையோடு ஆலிப் புலவர் தமிழ்ப்பாவியமாக்கியுள்ளார். இது 12 படலங்களையும் 743 செய்யுள்களையும் கொண்டுள்ளது.

இந்நூலை நாகர்கோயில் அருகே, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கோட்டாறு என்னும் ஊரில் அரங்கேற்ற வேண்டும் என்று புலவர் ஆசைப்பட்டார். தமிழ் இலக்கிய மரபுக்கு ஏற்ப , கற்பனை கலந்து புலவர் மிராஃஜ் மாலையைப் படைத்துள்ளமையால் , இதனை அரங்கேற்ற முஸ்லிம்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் புலவரின் மாணவர் சிவலிங்கம் செட்டியாரின் முயற்சியால் கைக்கோளார் சமூகத் தலைவர்  பாவாடைச் செட்டியார் என்பவர் முன்னிலையில், இச்சமூக மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்த சபையில் முதல் தமிழ் இஸ்லாமிய இலக்கியமான மிராஃஜ் மாலை அரங்கேற்றப்பட்டது.

உமறுப் புலவர்

நபிகள் நாயகத்தின் வரலாற்றைச் சீறாப்புராணம் என்னும் பெயரில் தமிழ்க் காப்பியமாகப் பாடிய புலவர். சீறாப்புராணம் 5027 விருத்தப்பாக்களால் ஆனது. உமறுப்புலவர் 23-10-1642 ஞாயிற்றுக்கிழமையன்று பிறந்தவர். இவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துப் புலவராக்கியவர் சைவரான கடிகை முத்துப்புலவர். முத்துப்புலவர் உமறுப்புலவரின் தந்தை செய்கு முகம்மது அலியின் நண்பர். இதனால் உமறு, ஆசிரியரை பெரியப்பா என்று விளிப்பது வழக்கம். உமறுவை அரசவைப் புலவராக்கிச் சிறப்பளித்தவர் வைணவரான எட்டப்ப பூபதி.

உமறுப்புலவர் சீறாப்புராணம் இயற்றிக் கொண்டிருந்த காலத்தில்…கிடந்தொளி பரப்பி என்ற பாடலைத் தொடங்கியபின் எவ்வாறு மேற்கொண்டு பாடுவது எனச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். இவ்வேளையில் இவர் மகன் ‘வாசம் கொப்பளித்து’ என்று அடுத்த தொடரை எடுத்துக்கொடுத்தார். இச்செய்தியை முருகதாச சுவாமிகள், புலவர் புராணத்தில், முத்துலுக்கப்புலவர் சருக்கத்தில். ‘ஒரு பாட்டில்

இரு சீர் உதித்துப் பின் மற்றொன்றும் உதியாமையால் வெருள் கூரல் எய்தித் தவித்து உன் அகங்காரம் மெலி வாதலும் அருகே இருக்கும் தன்மகன் வாயில் வருசொல் அதைச் சேர்த்து அதரப் பொருநீர் உகுக்கும் புவிக்கண்பல் புலவோர்கள் புகல்வார்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். உமறுப் புலவரின் சமாதி மீது 1921ஆம் ஆண்டில் கட்டடம் எழுப்பியவர் பெயர் பிச்சையாக் கோனார்.

குணங்குடி மஸ்தான்

இராமநாதபுரம் அருகேயுள்ள குணங்குடியில் பிறந்தவர். இவருடைய அன்னையார் ஊர் தொண்டி. இவரை மஸ்தான் சாகிபு என்றும் தொண்டியார் என்றும் அழைப்பர். மாபெரும் இறைநேசரும், சூஃபி ஞானியும் தவசீலருமான இவர் ஒரு தமிழ்ப் புலவரும் ஆவார். இவருடைய சீடர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள். நந்தீஸ்வரக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி ஆகிய ஞானப் பாடல்கள் மனிதகுலம் முழுமையையும் பொதுவாக நோக்கும் தத்துவப் பார்வையுடயவை. சீயமங்கலம் அருணாசல முதலியார் இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

ஜவ்வாதுப் புலவர்

முகம்மது மீர் ஜவ்வாது என்பது இவர் பெயர். இராமநாதபுரம் பகுதியிலுள்ள எமனேசுவரத்தில் கி.பி. 1745ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருடைய ஆசிரியர் திருவாடுதுறை ஆதீன அதிபர் சோமசுந்தரத் தம்பிரான். அட்டாவதானி ஜவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னரையும் சோலை முதலியார் என்பவரையும் புகழ்ந்து பாடியுள்ளார். முத்தையாபுரம் என்ற ஊரில் குறவர் குலத்தலைவனான பாலசுந்தரம் என்பவரைப் புகழ்ந்து,

‘பாலசுந்தரப் பூமான் பனைமரக்கை வேழத்தைக்
காலமும் ஏற்றும் கருத்து என்னோ – சாலவும் தன்
அக்காளைத் தம்பிக்கு அணையவைக்கத் தூது சென்ற
பக்காக் கிழவன் என்று பார்த்து’

என்று பாடியுள்ளார். (பாலசுந்தரம் துதிக்கையுடைய கணபதியை ஏன் வணங்குகிறார் தெரியுமா குறத்தி – பாலசுந்தரத்தின் அக்காவும் ஆன வள்ளியைத் தன் தம்பிக்குத் திருமணம் செய்யத் தூது சென்றமையால்)

சேகனாப் புலவர்

புலவர் நாயகம் என்று சிறப்பிக்கப்படும் இப்புலவரின் பெயர் செய்கு அப்துல் காதிர் நெய்னார் லெப்பை. குணங்குடியாரும் இவரும் ஒரு சாலை மாணவர். சேகனாவின் நண்பர்கள்…திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயர், சபாபதி முதலியார். புலவர் நாயகம் தன் நண்பர் ஒருவர்க்கு எழுதிய மடல்…

‘சிவஞானி என்னும் சீரியர் தமக்கும்
தவஞானி வெங்கடாசல முதலியார்க்கும்
மற்றுளோர்க் கெல்லாம் வாசித்துக் காட்டி
நற்றுரை சலாத்தின் நனி துஆப் பெறுமின்’

என்று அமைந்துள்ளது. இதன் கண் மதம் கடந்த அன்பு வெளிப்படுகிறது.

காசிம்புலவர்

காயல்பட்டினத்தில்  பிறந்த புலவர். இவருடைய ஆசிரியர் திருவடிக் கவிராயர். அருணகிரியாரின் திருப் புகழைப் போன்ற சந்த அமைப்பில் நபிகள் நாயகம் மீது திருப்புகழ் பாடினார். மாணவர் பாடிய திருப்புகழைத் திருவடிக் கவிராயரும் மகிழ்ந்து பாராட்டினார்.

செய்யது முகம்மது அண்ணாவியார்

இப்புலவர் பெருமகன் சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம் என்னும் செய்யுள்களைப்பாடி, முருகக் கடவுளை காட்சி தரச் செய்தவர். இதனால் கதிர்வேலு உபாத்தியாயர் என்பவரின் கர்வம் மறைந்தது. இப்புலவர் மகாபாரத அம்மானை என்று வேறொரு நூலும் ஆக்கியுள்ளார். முந்நூறு (ஹிஜ்ரி 1100) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அண்ணாவியரின் சமரசத் தமிழ் எண்ணி மகிழத்தக்கது.

குலாம் காதிர் நாவலர்

நாகூரில் (1833) பிறந்தவர். இவருடைய ஆசிரியர் நாராயண சுவாமி. 1896ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து மக்கள் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை அளித்தனர். ஆறுமுக நாவலரின் மருகர் பொன்னம்பல பிள்ளை அவர்களே இவருக்கு இப்பட்டம் வழங்கியவர். தமிழ்த்தாத்தா (உ.வே.சா) எழுதியுள்ள மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றில், நாகூரில் புகழ்பெற்று விளங்கும் குலாம் காதிரு நாவலர் என்ற முகம்மதியப் புலவர் ஒருவரும் நமது பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர் என்னும் குறிப்பு காணப்படுகின்றது. இராமநாதபுரத்து ஆறுமுகத் தேவரின் வேண்டிகோளால் நாவலர் நன்னூல் விளக்கம் இயற்றினார். பாவலநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை அவர்களும் பாஸ்கர சேதுபதி அவர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்க நாவலரின் தொடர்பு உதவியது. நாவலர் தமிழ்ச்சங்கத்தின் முதல் புலவராக ஆக்கப்பட்டார். நாவலர் இயற்றிய புலவராற்றுப்படையில் இரயில் வண்டி வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கமான்மியம் என்னும் நூல்,

‘தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபு ராணம்
தகையபல பிரபந்தம் வசன நூல்கள்
எண்டரவே இயற்றி உலகு உவப்பந் தந்திட்டு
எத்திசையும் புகழ் நிறுவி ஆல வாயில்
பண்டனைய தமிழ்ச் சங்கம் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிறல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவு குலாம் காதிறுநா வலவன் தன்னை’

என்று நாவலரைப் போற்றியுள்ளது. நாவலர் இயற்றிய மதுரைக் கோவையின் பாட்டுடைத் தலைவர் இரங்கூன் செவத்த முத்துப் பிள்ளை. இவர் மறைவுக்காகச் சுதேசமித்திரன் ‘தமிழ் உலகின் தனம் அழிந்தது’ என்று இரங்கல் செய்தி வெளியிட்டது. மறைமலை அடிகள் நாவலரின் மாணவர்களுள் ஒருவர்.

பிச்சை இபுறாஹிம் புலவர்

கருவாட்டு வியாபாரியும் பெருஞ்செல்வருமான இலக்கணக் கோடாரி பிச்சை இபுறாஹிம் புலவர் , உறையூர் முத்து வீர ஆசாரியரிடம் தமிழ் கற்றவர். நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், மகாகவி சுப்பராயப் பிள்ளை, சந்தக்கவி சாமிநாதப் பிள்ளை, வித்துவான் அமிர்த சுந்தரம் பிள்ளை ஆகியோர் இலக்கணக் கோடாரியின் மாணவர்கள். ஆசாரியரும் இராவுத்தரும் நாட்டாரும் பிள்ளைகளும் ஒரே தமிழ்ப் பரம்பரை. தமிழால் இணைந்த புலமைப் பரம்பரை. சாதியும் மதமும் கடந்த தமிழ்க் காதல் மட்டுமே இவர்களை இணைத்தது.

செய்குதம்பிப் பாவலர்

குமரி மாவட்டம் கோட்டாறு இளங்கடையில் பிறந்தவர். தமிழ்ப்புலமை நிறைந்த சதாவதானி சங்கர நாராயண அண்ணாவியரின் மாணவர். இட்டா பார்த்தசாரதி நாயுடுவால் ஆதரிக்கப்பட்டு சீறாப்புராண உரை இயற்றியவர். அருட்பா – மருட்பா இலக்கியப் போரில் அருட்பா அணியில் நின்று தமிழ் அன்பு காட்டியவர். இதனால் இவருக்குக் காஞ்சிபுரம் கோயிலில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய விடுதலைப் போரிலும் கதர் இயக்கத்திலும் பங்கேற்றவர். திரு.வி.க, இவரை ‘மதத்தால் மகமதியர்…தமிழில் மகாமதியர்’ என்று பாராட்டியுள்ளார்.

‘ஒரும் அவதானம் ஒருநூறு செய்து இந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனைச் – சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பிப் பாவலனை
எந்தநாள் காண்போம் இனி’

என்று கவிமணி இவர் காலமான வேளையில் (13-02-1950) கையறு நிலை பாடியுள்ளார்.

பெரிய புராணச் சொற்பொழிவுகள் செய்வதில் வல்லவரான சிந்துக் களஞ்சியப் புலவர் கம்பராமாயணப் பேருரையாளர் மகிபாலன் பட்டி செய்யது இபுறாஹிம் புலவர், கம்பராமாயண சாஹிபு என்று அழைக்கப்பட்ட ப.தாவூத்ஷா, புலவர் நயினார் முகம்மது, தமிழ் இலக்கியப் பட்டி மன்றங்களில் நடுவர் பணியாற்றிய இலக்கியக் கனி நீதிபதி இஸ்மாயில் சாஹிபு, சீறாப்புராணச் சொற்பொழிவு நிகழ்த்தும் சிலம்பொலி செல்லப்பன் என்று… சமரச வாழ்வுக்குச் சான்றாகும் தமிழ்ப்புலவர்களின் பெயர் வரிசை எண்ண எண்ணக் குறையாது.

இன்று நம் முன் உள்ள தலையாய பணி சமரச வாழ்வியலை கட்டிக் காப்பது மட்டுமே.

*

நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், சௌ. மதார் முகைதீன்

*

இந்தக் கட்டுரையின் முடிவில் கவி.கா.மு.ஷெரிப் அவர்கள் – 1985இல் வெளியிட்ட –  ஒரு நூலிலிருந்து ஒரு பத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘இனி எதிலே முடியும்?’ என்பது தலைப்பு !

‘இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கண்ட வெள்ளையன் இந்த ஒற்றுமையைச் சிதைத்தால் ஒழிய இந்த நாட்டினை நாம் ஆளமுடியாது; ஆம், ஆளவே முடியாது என உணர்ந்தான். இந்து முஸ்லிம்களிடையே பகை எண்ணம் வளர்ந்திடும் வகையில் வரலாற்றினைத் திரித்து எழுதிடலானான்! இன்று நம்மிடைடையே உள்ள நமது வரலாறுகளெல்லாம் வெள்ளையன் எழுதியவை. அல்லது அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவைதானே? இன்று, வெள்ளையன் போய்விட்டான். ஆனாலும் அவன் வைத்த தீ, இந்து முஸ்லிம் பகை நெருப்பு, அணையவில்லை. இது எதிலே முடியும்? எங்கே கொண்டு விடும் என்கின்ற தீர்க்க தரிசனக் கண்ணோட்ட வளர்ச்சி நமது இளைஞர்களிடம் இல்லை. வருந்தத்தக்க என் நினைவுடன், வெள்ளையராட்சியை எதிர்த்து நம்மவர்கள் நடத்திய போராட்ட நாட்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உணர்வு எவ்வாறிருந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.’ – கவி.கா.மு.ஷெரிப்

« Older entries