பீர்முஹம்மது பாகவதர்

‘பிரியங்கா சோப்ராவை போடுங்க நானா’ என்ற ஷைத்தான், என் கண்ணில் தெரியும் அதீத ஆர்வத்தைப் பார்த்து சுதாரித்துக்கொண்டு, ‘அட, பிரியங்கா சோப்ராவுக்கு புடிச்ச பாட்ட போடுங்க நானா’ என்றது. சொல்வதை ஒழுங்காகச் சொல்லவேண்டுமா, இல்லையா? நேற்று பேசிய ஹமீது ஜாஃபர்நானா கூட , ‘என்னட இது படுத்துடிச்சி’ என்றார். ‘வயசானா அப்படித்தான்’ என்றேன். ‘அடச்சே, என் லேப்டாப்பை சொல்றேங்க!’  என்கிறார். ஆபாசம், ஆபாசம்! தமாஷ் நிற்கட்டும், ‘அஞ்ஜானா அஞ்ஜானி’யில் ராஹத் ஃபதே அலி கான் படிக்கிற அலம்பல் பாட்டான  ‘ஆஸ் பாஸ் குதா… ‘ வைத்தான் போடனுமாம். ‘ஜீ-டிவி’யின் ‘சரிகமப’வை கலக்கிக்கொண்டிருக்கிற கமல்கானை – உன் குரலுக்கு எடுபடும் என்று – ‘ஆஸ் பாஸ் குதா’வைத்தான் பாடச் சொன்னாள்/ர்  பிரியங்கா அன்று.  அந்த ‘பாட்டியாலா’ பொடியன் கமல்கான் பாடும் அழகை – இது வேறொரு பாட்டு – இங்கே பாருங்களேன்.  எப்படி இருக்கிறது? ஜாது கா ஜப்பி! சங்கீதக் கணக்குகள் தெரிந்த ஃபரீத் ஹஸனை விட இந்த சாமான்யனைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும்.  பரமனோடு ஜீவன் கலக்க உதவும் இசைக்கு ‘ஜீவன்’ தேவை என்பார்கள். அது கமால்கானிடம் நிறையவே இருக்கிறது. சுக்வீந்தரும் ராஹத்தும் இணைந்த சுகமான குரல். கமல்கான் நீடூழி வாழ்க!

பத்து தடவை ‘ராஹத்’தாக கேட்டபிறகு பீர்முஹம்மது நினைவுக்கு வந்துவிட்டது ஷைத்தானுக்கு. அதையும் போடச்சொன்னது. போட்டேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘பொதிகை’யில் நான் ரிகார்ட் செய்த பாட்டு.  பீர்முஹம்மதுதான் அவருடைய அசல் பெயர். ஆனால் ஏனோ ‘முகேஷ்’ என்று அழைக்கப்பட்டார். ‘பீர்முஹம்மது’ என்ற பெயருக்கு என்ன குறைச்சலாம்? அந்தப் பெயரைக் கேட்டாலே தக்கலை அப்பாவின் ஞானப்பாடல்கள் ஞாபகத்திற்கு வந்து நெகிழ்ந்து விடுவேன் நான். ஹூம்ம்.. ஊடகங்களின் ‘திறமை’ போலும்.

எல்லார் குரலிலும் பாடும் முகேஷ் (எ) பீர்முஹம்மதின் சொந்தக்குரலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ரஹ்மானின் சில பாடல்களில் கோரஸுக்கு இருக்கிறார் என்று கேள்வி. கேசட்டுகள் , ‘சிடி’க்கள் வெளியாகியிருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தீன கருணாகருனே நடராஜா…