அண்ணல் மஹ்மூதரே அன்பின் வடிவாளரே…

‘வளம் நிறை நபிப் புகழ் பாடவே வருவாய் சோதரனே’ என்ற புலவர் ஆபிதீனின் திருநபி தினப் பாட்டை (பூன்ஜி என்ற படத்தில் வரும் ‘ஜலக் திகாகர்’ மெட்டு) பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். அது பிறகு. இப்போது காதுக்கு இனிமையாக நெல்லை உஸ்மானின் இந்தப் பாடலைக் கேளுங்கள் (இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை). இதுவும் ஒரு சினிமா பாடல் மெட்டுதான். நன்றி.

கேட்டு மகிழ :

 

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்..

’வாழும்வரை நம் மதிப்பு , பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களின் உம்மத்துகள் நாம் என்பதுதான்’ என்ற குறுஞ்செய்தி இப்போது வந்தது – ஜபருல்லா நானாவிடமிருந்து.’ தேன்கூட்டில்’ இருக்கும் திருநபி தினப் பாட்டும் ஞாபகம் வருகிறது. ‘அன்புடனுளங்கள் ஆர்வமாய்க் கூடி / ஆதி தூதரின் நற்புகழ் பாடி / மன்பதை யாருமோர் குடையின் கீழே/  மகிழ்ந்து கூடுவம் வா, வா, வா / மகிழ்ந்து கூடுவம் வா’ என்பார் புலவர் ஆபிதீன். இப்போது? வம்புடனுளங்கள் ஆர்வமாய்க் கூடி வசைமழை பொழிகின்றன! நம்ம ஜாஃபர்நானா அப்படியல்ல. நைஸ்குத்து குத்துவதில் மன்னன். (மஞ்சக்கொல்லைக்காரங்க எல்லாருமே அப்படித்தான்). வஹாபிகள் கொடுத்த ஒரு நோட்டீஸ் நேற்று கிடைத்ததில் கைலியோடு இறங்கி விட்டார், கைவிடுபடையுடன். அப்படீன்னா… அது ஒரு அஸ்திரமாக்கும். எச்சரிக்கையாக இருங்கள். எதற்கும் கூடவே இருக்கட்டுமென்று என்னைக் கவர்ந்த பாடகர் , மறைந்த வாஹித் பாடிய ’இஸ்லாமியப்’ பாடலை முதலில் தருகிறேன் – சலீம்மாமாவின் வரிகளில் சங்கதி இருப்பதால். ச..ச…! ’சில்சிலா’வில் வந்த மெட்டு. Dekha Ek Khawab..

கேட்டீர்களா? 28 வருடங்களுக்கு முன் நண்பர் பிலால் – ‘சீசன் ஸ்டீரியோ’ மூலம் – ரிகார்ட் செய்ததை இன்றும் பத்திரமாக வைத்திருந்து ,mp3யாக்கி , எனக்கு அனுப்பிய ’ETA’ அசனா மரைக்காருக்கு நன்றி. பதிவின் கீழே , பக்கா ரிகார்டிங்-ல் நெல்லை உஸ்மான் தந்த ‘யா ரசூலுல்லா’ இருக்கு. அவசியம் கேளுங்கள். இந்த மேட்டரெல்லாம் பிடிக்காத சகோதர மதத்து நண்பர்கள் ஸ்ரீவல்ஸனின் ஆனந்தமிர்தகர்ஷினியைக் கேட்க ஓடலாம். சுகம்.

***

நபி தினம்ஹமீது ஜாஃபர்

“நாயகர் நாளிதுவே – நபி
நாயகர் நாளிது – நாம்
புகழ்வோம் கலி கூறி…!”

பெருமானார் அவர்களின் பிறந்த நாள், அவர்களின் சிறப்பைப் பற்றி எழுதுவாதானால் எதை எழுதுவது , எப்படி எழுதுவது , புலவர் தா.காசிம் தென்றல் காற்றை தூது விட்டாரே அதை அடிப்படையாக வைத்து எழுதலாமா இல்லை கனவிலாவது காட்சி தரமாட்டார்களா என்று இறை காதல் கொண்ட ஆலிம்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு வந்தால் எப்படி வரவேற்பேன் என்று எங்க ஜஃபருல்லாஹ் நாநா ஆசைப் படுகிறாரே அதை வைத்து எழுதலாமா என சிந்தித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நோட்டீஸ் கிடைத்தது. தலைப்பு: ‘சாபத்தைப் பெற்று தரும் மவ்லீதுகளும் அருளைப் பெற்று தரும் சலவாத்தும்’ படித்துப் பார்த்தேன் ஒரே ஒளராட்டியம். தெ(ள)ஹீது என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் பொருள்கூட புரியாமல் ஒரு கூட்டம், நாங்கள்தான் தெ(ள)ஹீது என்று iso முத்திரைக் குத்திக்கொண்டு டிரேட் மார்க்குடன் பண்ணுகிற அழிச்சாட்டையம் தாங்கமுடியவில்லை. இவர்களுடைய டிரேட் மார்க்கை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாது. எல்லாம் ரிஜிஸ்டர்டு. தமிழ் நாடு தெ(ள)ஹீது, ஆல் இண்டியா தெ(ள)ஹீது, இண்டர்நேஷனல் தெ(ள)ஹீது etc., etc., இந்த அக்மார்க் முத்திரைக்காரர்களுக்குள் போட்டி வேறு!

இவங்களோட தொல்லை தாங்கமுடியலை. ஊர்லெ வேலை கிடைக்காமெ, வியாபாரம் செய்யத் தெரியாமெ இங்கே வாராங்க. இங்கே வந்து இந்த நாட்டைப் பார்த்தவுடனேயே மார்க்கத்தை புரிஞ்சிக்கிட்ட மாதிரியும், கரைச்சு குடிச்சமாதிரியும் நெனச்சுக்கிட்டு என்ன சொல்றோமுன்னெ தெரியாம எதாவது ஒளறிக்கிட்டே இருக்காங்க. அது செஞ்சா பித்அத்து, இது செஞ்சா விரோதம், அப்படி செஞ்சா இணை வைப்பது, ஜியாரத்து செஞ்சா கபுர் வணக்கம் இப்படி எதாவது சொல்லி நோட்டீஸோட அமளி தாங்கமுடியலை. அப்படி வந்த நோட்டீஸுலெ ஒன்னுதான் மவ்லீதைப் பற்றியது.

மவ்லீதுன்னா என்னா? புகழ்மாலை, பாமாலை. இதை ஓதுறப்ப பெரிசா சோறாக்கி எல்லோருக்கும் கொடுக்குறாங்க, பத்து ஏழைப் பாளைகள் பயனடையுது. அவர்களுக்கு நல்ல சோறு வாசமணமா கெடைக்குது. இதுலெ தப்பு என்னங்க இருக்கு? ஆஹா மார்க்கத்துலெ இல்லாததை செய்றாங்க வரம்பு மீறி புகழ்றாங்க, இணை வைக்கிறாங்க என சொல்லி அதுலெ மண்ணள்ளிப் போடப் பார்க்குறாங்க இந்த தெ(ள)ஹீதுகள். ஏற்கனவே ஆறாம் பாத்திஹா பதினோறாம் பாத்திஹான்னு பல வூடுகள்லெ ஓதி ரெண்டு மிஸ்கீனுக்கு சோறு(நெய் சோறு+கறி) கொடுத்துக்கிட்டிருந்தாங்க, அதுக்கு ஆப்பு வச்சு ‘கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா’ இப்பொ ஒன்னு ரெண்டு வீடுகள்லெ மாத்திரமே நடக்குது.

சுபுஹான மவ்லீதில் ‘யா நபி சலாம் அலைக்கும், யா ரசூல் சலாம் அலைக்கும்’ என்கிற பைத்து இருக்குது. அப்படி இருக்கக் கூடாதாம். “யா நபியல்லாஹ், யா ரசூலல்லாஹ்”ன்னுதான் இருக்கணுமாம். யா நபி, யா ரசூல்னு சொல்றது சம அந்தஸ்துள்ளவங்களைக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். அதுலெ வர்ற ‘யா முஹம்மது’ என்ற சொல் மரியாதை இல்லாமல் இருக்கிறதாம். யாப்பிலக்கணம், சொல் இலக்கணம், அணி இலக்கணம் தெரியாத உங்களுக்கு எவ்வளவுதான் (புளி போட்டு) விளக்கினாலும் விளங்காது. தம் வாழ் நாள் முழுவதையும் இறை நேசத்தில் ஊறித்திளைத்த இபுனு அரபி எழுதிய பைத்தில் குறை காண உனக்கு அறிவும் கிடையாது, வயதும் பத்தாது.

“உங்களில் எவரும்  உங்களைவிடவும், உங்கள் செல்வத்தைவிடவும், உங்கள் தாய் தந்தையரைவிடவும், இன்னும் அணைத்தையும் விடவும் மேம்பட்ட பிரியம்  என் மீது இல்லாத வரை உங்களின் ஈமான் பரிபூரணமாவதில்லை” என்று நபி(சல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அப்படி இருக்க அவாம்களாகிய நம்மைவிட இறை நேசர்களுக்கு, புலவர்களுக்கு, புரவலர்களுக்கு எவ்வளவு நேசமும் பாசமும் இருந்திருக்கும்.!

மாறாத அன்புகொண்ட புலவர் பெருமக்கள் தங்களுடைய கற்பனை எல்லாம் திரட்டி சாறாகப் பிழிந்து இறைவன் மீதும் பெருமானார் மீதும் விருத்தம், களிப்பு, புராணம், பிள்ளைத் தமிழ். கீர்த்தனை முதலியவைகளை பாடிப் பாடி பக்தி பரவசத்தை வெளிப்படுத்திருக்கிறார்கள் என்றால் அது நமக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்துக்கும் கிடைத்த வெகுமதிகள் என்றால் அது மிகையாகாது. அவைகளினுள் ஆழ்ந்து கிடக்கும் கருத்துக்கள் திகட்டாத தேனமுதங்களாகும். அள்ளி அள்ளிப் பருகினாலும் அலுப்புத் தட்டாதது.

புலவர்கள் என்றால் தாம் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் வருணனைகள், உவமானங்கள், உவமேயங்கள் இவைகள் வாயிலாக படிப்பவர்கள் இன்புற தேன் சொட்ட அமுதத்தை ஊட்டுபவர்கள். அவர்கள் தங்களுடைய கற்பனை வளங்களால் நம்மை அங்கேயே அழைத்துச் செல்பவர்கள் அப்பாவலர்கள். அத்தகைய வருணனைகள், உவமானங்கள் இல்லையென்றால் அது உயிரோட்டம் இல்லாத செத்த விடக்காக இருக்கும். ஏன் இறைவனே சொர்க்கத்தப் பற்றிய வசனங்களில் உவமானங்களை வைத்துதானே கூறுகிறான். ஹூருலீன்கள், மாளிகைகள், வற்றாத நதிகள், கிடைத்துக்கொண்டே இருக்கும் கனி வர்கங்கள், மாறாத பணிவிடைகள் இவைகள் எல்லாமே உவமானங்கள்தானே. அதுபோன்று புலவர்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

ஒருத்தர் சொல்கிறார், கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு பதிவுலேயோ அல்லது நோட்டீஸோ படித்த ஞாபகம். அவர் சொல்கிறார் “ரசூல்(சல்) அவர்கள் மனைவிகள் நமக்கு தாய் போன்றவர்கள் உம்முல் முஃமினீன். அப்படி இருக்க தாய்க்கு ஒப்பான தாயைவிட மேலான கதீஜா பிராட்டியாரை உமறு புலவர் வருணிப்பது இஸ்லாத்துக்கு விரோதமாக இருக்கிறது, கீழ்த்தரமாக இருக்கிறது; ஒரு தாயை யாராவது வருணிப்பார்களா, மனம்தான் வருமா? என்று அங்கலாய்த்திருந்தார்.

கற்பூரத்தை இதோடு எணச்சுப் பேசுவாங்க , காம்போதி ராகத்தையும் ஏன் இதோடு எணச்சாங்கன்னு தெரியலெ. கற்பூரம் காட்டினா பத்திக்கும் இது…. ஒருவேளை ஆரோகணத்தில் ஆரம்பிச்சு அவரோகணத்தில் முடிக்கிதே அதனாலெயா சொல்றாங்களா? தெரியலெ. அதனாலெ கொஞ்சம் மோப்பம் புடிச்சுப் பார்த்தப்ப அது ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஏழு சுரங்களையும் பூரணமா கொண்டிருப்பதால் மேளகர்த்தா வகையை சேர்ந்ததுன்னு சொல்றாங்க. எப்படியோ ரெண்டுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்குங்கிற மாதிரி இருக்கு.

உமறு புலவர் கதீஜா நாயகியரை மட்டும் வருணிக்கவில்லை; ’வற்றிப்போய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல் முற்றியநீண் மரப்பொதும்பின் முதுபாம்பு புறப்படுமே’ என பாலை நிலத்து மரங்களை பேய்களகாவும், மரப் பொத்துக்களை பேய்களின் வாய்களாகவும், அவ்வாய்களிலிருந்து வரும் நாக்குகளை பாம்புகளாகவும் ஆக்கிக் காட்டி அரபு நாட்டின் பாலைவனத்தின் வெப்பத்தை வருணித்துக் காட்டுகிறார்.

பெருமானார் அவர்கள் ஷாம் தேசத்துக்குச் செல்கிறார்கள், இறைதூதர் வரும் பாதைக்கு தங்க விரிப்பு விரித்து, பாதையின் இரு மருங்கிலும் அகல் விளக்கேற்றி, இரு பக்கமுமுள்ள வயல் வெளிகளில் தாமரை மலர்களைப் பூக்கவைத்து நபியவர்கள் வரும் பாதையில் கைவிளக்கேற்றி நின்று வரவேற்பதுபோல் காட்சி அமைத்து மகிழ்வுறுகிறார் புலவரவர்கள். ‘பண்ணை வாய்ச்செழுங் கமலங்கள் செவ்விதழ் பரப்பி, யுண்ணி றைந்தமா மணியொடு மொளிர்வன வலைகள், வண்ண வார்கழன் முஹம்மது வருநெறிக் கெதிரா, யெண்ணி றந்ததை விளக்கெடுத் தேந்தின ரியையும்.’ இதோடு நின்றுவிடாமல் தமிழகத்திலுள்ள மா, பலா, வாழை இன்னும் பிற வகைகளையும் கொண்டு செல்கிறார். இதுவும் திருப்தி படாமல் புல்லினங்களையும் வண்டினங்களையும், குயில் கூட்டத்தையும் பாடவைத்து நபிகளாரை வரவேற்கிறார் புலவர் கோமான்.

இப்படி சொல்வது புலவருக்கழகு, புலமைக்கழகு, மொழிக்கழகு, இதையெல்லாம் புரியாதவர்களை என்ன சொல்வது? ‘புரியாத அறிவுக்கு மக்கள் எதிரானவர்கள்’ என்று அரபியில் ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் நம்ம தெ(ள)ஹீதுகளும். இவங்களை சொல்லி குத்தமில்லை, இவங்கள்லாம் அம்பு. இந்த அம்புகளை விடுறவர் ஒருத்தர் இருக்கார் அவர் எல்லா மவ்லீதும் ஓதி முடிச்சுட்டு அதுலெ வருமானமில்லை , லைஃபுக்கு லாயக்குப் படாதுன்னு ஒரு ஷார்ட் கட்/ எல்லாத்தையும் ஆண்டவனிம்தான் கேட்கணும், வேறே யாரிடமும் கையேந்த கூடாது (டிராஃப்டை மட்டும் எங்களுக்கு அனுப்புங்க)ன்னு ஒரு மூல மந்திரத்தை சொல்லிக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருக்காங்க. அவரு வண்டிக்குள்ளேயும் இவங்க வெளியே வண்டிக்குப் பின்னாலேயும் ஓடிக்கிட்டிருக்காங்க. ஓடட்டும் , கால் வலிக்கும் வரை..!

அது சரி…! அல்லாவுக்கு கால் இருக்குன்னு சொல்லிட்டீங்களே, மத்த பாகமெல்லாம் எப்ப தெரியும்? அவரு ஆம்பிளையா, பொம்பிளையா இல்லை லேடிபாயா.? கொஞ்சம் சீக்கிரமா கண்டுபுடிச்சு சொல்லுங்க..! எங்களுக்கும் பார்க்க ஆசையா இருக்கு!

**

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

**

நெல்லை உஸ்மான் பாட்டு :

*
Download