என்றுமே எனையாளும் பரம்பொருளே…

திருச்சி யூசுப் பாடிய இந்தப் பாட்டு மனதை என்னமோ செய்கிறது. இதே மெட்டில் அண்ணன் ஹனிபா பாடிய பாடலும் உண்டு (லாயிலாஹா இல்லல்லாஹ்).  ஜனாப் முஹம்மது ரஃபி  (இன்று அவர் நினைவுநாள்!) பாடியதுதான் மூலம். அந்த பாடல் சட்டென்று ஞாபகம் வரவில்லை எனக்கு . பைத் சபாக்களிலும், மௌலூது சபைகளிலும் இன்றும் பாடப்படும் பிரபலமான அந்த பாடல்/மெட்டு தம்பி இஸ்மாயிலுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.  சரி,  இது ரொம்ப பழைய ரிகார்டிங்.  முப்பது வருடமிருக்கும். ஒருவழியாக ஒப்பேற்றி mp3யாக்கி பதிவிடுகிறேன். ’வேண்டாத வழிகாட்டும் சுகமெதற்கு?’ என்று நீங்களும் பாடாமல் இசை கேளுங்கள். மனக்கவலை நீங்கிவிடும், இன்ஷா அல்லாஹ்.

**

**

என்றுமே எனையாளும் பரம்பொருளே
இன்று நான் வேண்டுகின்றேன் உன் அருளே
நின்று நான் பாடுகின்றேன் உன் புகழை
நித்தம் நான் வாழ்வது உன் கருணை மழை

(என்றுமே)

அல்லாஹூ என் பிழையைத் தீர்த்திடுவாய்
அல்லாது உனையன்றி யார் அருள்வார்
பொல்லாத வழியின் துயர் போக்கிடுவாய்
நல்லோர்கள் பாதை தன்னில் சேர்த்திடுவாய்

(என்றுமே)

நான் என்னும் அகந்தை கொண்ட நெஞ்செதற்கு?
நாயனே உனை நினையா மனமெதற்கு?
வேண்டாத வழிகாட்டும் சுகமெதற்கு?
வேதனையைத் தீர்ப்பதெல்லாம் உன் பொறுப்பு

(என்றுமே)

ஆன்மாவை அடக்கப் பார்க்கும் ஆசை வலை
அன்றாடம் தேடிக்கொண்ட பாவ மலை
உன் தூதர் காட்டிவைத்த அமைதி நிலை
உள்ளம் அதை மறந்ததனால் மனக் கவலை

(என்றுமே)

**

நன்றி : அசனா மரைக்கார்