பாவம் கய்யும்… பஹ்ரைன் பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம் ஓடியிருக்கிறார். ‘ஆக்ஸிடெண்ட்’ ஏற்பட்டுவிட்டது (அவருக்குத்தான்) . இதற்குத்தான் முன்னால் ஓடவேண்டும் என்பது! இப்போது ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருக்கிறார் சார். பத்துநாள் ரெஸ்ட்டாம். அவருக்காக பிரார்த்திக்கிறேன். கா.மு. ஷெரீஃபிற்காக ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார் – இந்த நிலையிலும். ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுதியதாக சொன்ன ஞாபகம். இப்போது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்! மேட்டர் ரொம்ப சீரியஸ்…
*

பாட்டும் நானே! பாவமும் நானே!
– அப்துல் கையூம்
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?
இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.
இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.
இப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.
இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை.
‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.
என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்.
வேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது? நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா?
பெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ?
கவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்?
ஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா?
கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.
இதோ அந்த பாடலின் முழு வடிவம் :
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)
பாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது.
“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள்.
இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.
பாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.
Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.
‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.
‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.
அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.
நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
கா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.
கண்ணதாசனுக்கும், தி.மு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.
வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.
நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ!” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.
வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.
ஊஹூம்.. .. ..
***
நன்றி : அப்துல் கய்யும்
***
மேலதிக விபரங்களுக்கு பார்க்க : http://kavikamu.wordpress.com/