சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

சீர்காழி கோவிந்தராஜன் செய்த ஒரே தப்பு  சீர்காழியில் பிறந்ததுதான்! பின்னே என்னங்க, நம்ம சீர்காழிக் கவிஞர் தாஜ் , அவர் ஊர் பாடகரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்கிறாரா? நம்ம ‘நாகூரி’ கய்யூம் எவ்வளவு பதிவுகள் நாகூர் ஹனிபாவைப் பற்றி எழுதுகிறார்..  அதற்காக ஐயா கலைஞருக்கு அல்வா கொடுப்பதற்குக்கூட  அச்சப்படுவதில்லை அவர்! ஆட்சியில் இல்லாததால் போலும். சரி, நாமாவது தாஜூக்கு பதிலாக எழுதுவோம் என்று இந்தப் பதிவு. சிலவாரங்களுக்கு முன்பு வந்த ‘சன்’ செய்திகளை வைத்து செய்யலாம் என்று திட்டம். முன்பே சொல்லிவிடுகிறேன், நண்பர் சுகா அளவுக்கு இசையறிவு எனக்குக் கிடையாது. ‘சொல்வனம்’ கட்டுரையில் அவர் சொன்னார் இப்படி : ‘சக்கரவாகத்தில் அமைந்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற அந்தப்பாடல், இன்றுள்ள ஆங்கிலத்தமிழ் பாடல் கேட்கும் இளையதலைமுறையினரையும் கவர்ந்திருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா,
வஞ்சகன் கண்ணனடா’

என கண்ணனே கர்ணனைப் பார்த்து பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் கணேசண்ணன் சொல்லுவான். ’கேட்டவங்க எல்லாருக்கும் கர்ணன் கைல உள்ளதையெல்லாம் வளங்குன வள்ளலும்பாங்க. ஆனா கர்ணனுக்கு கண்ணதாசனும், விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அள்ளி வளங்கியிருக்காங்க, பாத்தியா?’

சக்கரவாகமா, அப்படீன்னா?  காம்போதி ராகம் கம்போடியாவிலிருந்து வந்தது என்று கலைஞர் டி.வியில் ’வயலின் லலிதா’ சொல்லும்போது மால்கோஸ் ராகத்தை மாலத்தீவு கவுஸ்மரைக்கார் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்று நினைக்குமளவுதான் என் இசையறிவு. என்ன செய்ய?

சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா‘ பாடலையும் சேர்த்து சீர்காழி கோவிந்தராஜனின் சுருதியை சுத்தமாகக் குறை சொன்ன விமர்சகர் ஷாஜிக்கு சத்தமாகப் பதில் கொடுத்த சேதுபதி அருணாச்சலம் போலவும் விரிவாக எழுத இயலாது என்னால். நான் ஒரு ரசிகன். ‘சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது. முரட்டு குரல்’ என்று கடுமையாக ஆரம்பித்தாலும் அவரை முழுமையாக ஒதுக்கவே முடியாது’  என்று முடிவில் ஒத்துக்கொள்ளும் நண்பர் ராஜநாயஹத்தின் அபிப்ராயத்தை ஒதுக்காத ரசிகன். அவ்வளவுதான்.

‘சீர்காழி’ என்று கூகிளிட்டால் விபரங்கள் கொட்டுகின்றன. ‘திரைப்பாடல்.காம்‘ போன்ற தளங்களில் அருமையான பாடல்களையும் கேட்க முடிகிறது. புதிதாக நான் சொல்ல என்ன இருக்கிறது? ‘செய்திகளை’ இணைக்கிறேன், ‘சன்’ சுட்டிய சில பாடல்களோடு மட்டும். அவ்வளவே. ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை தவறாமல் தினமும் கேட்பவன் நான்.  ‘இசை ஹராம்’ என்று எங்கள் ஆட்கள் உளறுவதால்  இந்து கிருஸ்துவ பக்திப் பாடல்களைக் கேட்க மறப்பதே இல்லை!. எனக்கு மிகவும் பிடித்த சீர்காழியின் சினிமா பாடல் ஒன்றையும் பதிவின் கடைசியில் இணைத்திருக்கிறேன்.அவசியம் கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்

***


சீர்காழி கோவிந்தராஜன்

‘சன்’ செய்திகளுக்காக ராமனாதன், ஏ.ஆர். சலீம் மற்றும் ஜெ. ர·பியா…

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கியவர்கள் பலர். அவர்களில் இலக்கியச் செறிவுள்ள பாடல்களைப் பாடி தன்னுடைய ‘கணீர்’ காந்தக்குரலால் ரசிகர்களைக் கவர்ந்த சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் நினைவலைகளைக் காண்போம். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் 1953-ல் வெளிவந்த பொன்வயல் படத்தில். இதில் சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களின் காதுகளில் தென்றலாய் நுழைந்தார் அவர். இதே படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஜல்திஜல்தி மாடுகளா’ (சரியாக இது விளங்கவில்லை) பாடலும் ரசிகர்களின் இதயக் கதவுகளை திறந்த முழுமையைப் பெற்றதுபக்தி, தத்துவம், வீரம், நகைச்சுவை, காதல் என பலவகையான பாடல்களை உணர்ச்சி ததும்பப் பாடி பிரபலமாக்கினார் எஸ். கோவிந்தராஜன்.

நகைச்சுவைக்கு ‘காதலிக்க நேரமில்லை’, சோகத்திற்கு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையாடா’, சவாலுக்கு ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா’ மற்றும் ‘சங்கே முழங்கு’, பக்திக்கு ‘அறுபடை வீடுகொண்ட திருமுருகா’, தத்துவத்திற்கு ‘காசிக்குப் போகும் சன்யாசி’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ போன்ற பாடல்கள் அவரது குரலில் சரித்திரப்புகழ் பெற்றவை.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவருக்கும் பல திரைப்படப் பாடல்களைப் பாடி ‘சூப்பர்ஹிட்’ ஆக்கியவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக நாடாடி மன்னன் படத்தில் அவர் பாடிய ‘உழைப்பதிலா இன்பம் உழைப்பைப் பெறுவதிலா’ , சக்கரவர்த்தி திருமகள் ‘எல்லையில்லாத இன்பத்தில்’ , நல்லவன் வாழ்வான் படத்திற்காக ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ ஆகியவை ரசிகர்களின் காதுகளில் என்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.

***

பாகப்பிரிவினை படத்தில் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே’, படிக்காத மேதையில் ‘எங்கிருந்தோ வந்தான்’ என அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும்.

சீர்காழி கோவிந்தராஜனின் ‘கணீர்’ வெண்கலக் குரலில் அவர் பாடிய பக்திப் பாடல்கள் ரசிகர்களின் இதயங்களில் கோயில் தெய்வமாக அவரை குடியிருக்க வைத்துள்ளன. அவர் பாடிய பக்திப்பாடல்கள் இன்றளவும் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். அகத்தியர் திரைப்படத்தில் அகத்தியராகவும் , கந்தன் கருணை தசாவதாரத்தில் நாரதராகவும் , ‘வா ராஜா வா’வில் போலீஸ்காரராகவும் , திருமலை தென்குமரியில் பாகவதாராகவும் நடித்தும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். பாடல்களில் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் சீர்காழி எஸ், கோவிந்தராஜன் என்றால் அது மிகையில்லை.

நன்றி : சன் டி.வி
***

அயோக்கியர்களால் உலகம் முழுதும் இப்போது கலவரம். ஆனாலும் இசை கேட்கிறோமே, நியாயமா? என்ற கேள்வியுடன் ஆபிதீனுக்குப் பிடித்த இந்தப் பாடலைக் கேளுங்கள்.  படம் : சபாஷ் மாப்பிள்ளை. பாடல் : மருதகாசி . இசை: கே.வி.மகாதேவன்.

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே –

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா ….

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா –

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

**

நன்றி : யுடியூபில் வீடியோ இணைத்த அனைவருக்கும் பூங்குழலிக்கும்