கடவுளைத் தேடிய காரைக்கால் தாவுது

Tamil Muslim Songs என்று கூகிளிட்டால் – ஜிகினா மினுமினுக்க – முதலில் வருவது ‘காரைக்கால் ரஸீனா’வின் இந்த தளம். சிங்கையில் உள்ள பெண்மணி இவர் என்று நினைக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு Tripod தளத்தில் ‘நாகூர் பிஸாது கிளப்’ ஜமாய்த்தபோது ரஸீனாவும் தொடங்கினார். ஒரு பெரிய இஸ்லாமியப் பாடகர்கள் கூட்டமே இப்போதும் இவருடைய தளத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஈ.எம். ஹனிபா – ஷேக் முஹம்மதுவிலிருந்து ஹஸன் குத்தூஸ், வடகரை தாலிஃப், ஷாஹூல் ஹமீது, திருச்சி கலிஃபுல்லா, ஜெய்னுலாப்தீன் ,சீனி முஹம்மது, பொதக்குடி அஹ்மது, நெல்லை உஸ்மான், நாகூர் குல்முஹம்மது, நாகூர் ஹெச்.எம். ஹனிபா , நாகூரின் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ காதர் மாமா , இசைமணி யூசுப் போன்றவர்களின் பாடல்கள் கிடைக்கின்றன.  திட்டச்சேரி ஹாஜா  மட்டும் இல்லை; ஆனால் ‘திரையிசையில் தீனிசை’ இருக்கிறது. மணக்காத மனோவின் வீடியோவும் இருக்கிறது. பெங்களூர் பாஷாவின் உருதுக் கவாலியும், ‘கத்வு தெர்க்காத’ அதாஅலி ஆஜாத்தின் க(ய)வாளியும் இருக்கிறது. இதைத் தவிர மிக முக்கியமாக – ஒலிக்கோப்புகளாக – எங்கும் கிடைக்காத – ஃபாத்திமா நாயகி சரித்திரம், யூனுஸ் நபி சரித்திரம், முஹய்யத்தீன் ஆண்டவர் மாலை, இப்றாஹிம் நபி சரித்திரம், நூறு மசலா, அலிபாதுஷா கதை…

ஓ…, மிகப் பெரிய வேலை. ஆனால் , ஆடியோ கோப்புகளின் தரம்தான் நன்றாக இல்லை. Sizeஐ குறைக்க அப்படி செய்திருக்கிறார் போலும். இந்த புண்ணாக்கு rm கோப்புகளும் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. கேட்க மட்டும்தான், தரவிறக்கம் செய்யாதீர்கள் என்று சகோதர சகோதரி ரஸீனா வேறு ‘திறமை’ காட்டியிருக்கிறார். என்ன செய்யலாம் ? Streaming  , Audioவை Out எடுத்து Inல் சொருகி ரிகார்ட் செய்வது பற்றியெல்லாம் லெக்சர் சொருகிவிட்டு ‘save target as ‘உபயோகித்தால் வரும் rm கோப்பை நோட்பேட் மூலம் திறந்து அதிலுள்ள உரலை (URL)ஐ பயன்படுத்திக் கொள்ளும்’ என்று எளிமையாகச் சொன்னார் ஒரு கம்ப்யூட்டர் கரும்புளி.  அட, சூப்பர் ஐடியாவாக இருக்கே..! நான் அப்படியே செய்து டவுன்லோடு செய்தது , முதலில் காரைக்கால் தாவுது நானா.  என் பள்ளிப் பருவத் தோழன் ‘ஷாஹா’வின் வாப்பாவான இந்த தாவுதுநானாவின் குரலும் பாவமும் எனக்கு பிடிக்கும்;  ஷாஹாவுக்குத்தான் பிடிக்காது!

காலை நேர திருச்சி வானொலியின் பக்திப் பாடல்கள் கேட்ட பெரிசுகளுக்கு (அதாவது, என் வயதுள்ளவர்களுக்கு) தாவுதுநானாவின் ‘பெருமான் ஓதி தரும் மறை புர்கான் வாசகமே’ பாட்டு ஞாபகமிருக்கலாம். ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ மெட்டு. மறந்திருந்தால் பரவாயில்லை. பெரிய இசை விமர்சகர்கள் சொல்வார்களே..- ஆமாம் , அந்த உயிர் – இவருடைய குரலில் இருக்கும். எல்லா நிஜக் கலைஞர்களுக்கும் வாய்க்கும் அதே கஷ்டம், அங்கீகாரமின்மையில் உயிரை விட்டார் தாவுது நானா.

கழுதைகளெல்லாம் கானக்குரலோன்களாக பல்லிளித்துக்கொண்டு கள்ளக்குரலுடன் பவனி வரும்போது காதையும் கருத்தையும் நிரப்பிய கலைஞர் ஏன் காணாமல் போனார்?

அது அப்படித்தான். சீர்காழியில் கூட ஒரு பைத்தியம் அலைகிறது இப்போதும் (தாஜ்-ஐ சொல்லவில்லை!); யாகூப் என்கிற ஒரு இசைக் கலைஞன். அவரைப்பற்றி நண்பர் தாஜ் விரையில் எழுதுவார் என்று நினைக்கிறேன். இப்போது காரைக்காலைப் பார்ப்போம்.

‘நான்கு மறையிலும் நானிலமெங்கிலும் இறைவனைத் தேடியும் காணாமல் ஓங்கும் உலகுக்கெல்லாம் உணவு தரும் உழவன் உதிர்த்திடும் வியர்வையில் கண்ட’ எங்கள் தாவுது நானா பாடிய மாஸ்டர் கேஸ்ஸட் காலஞ்சென்ற என் நிஜாம்மாமாவின் வீட்டில் இருக்கிறது. இப்போது வெளியில் எடுப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. நல்ல ஒலித்தரத்தில் இங்கே விரைவில் பதிய முயற்சிக்கிறேன், இன்ஷா அல்லாஹ். அப்புறம்.. rm கோப்பை mp3யாக கன்வெர்ட் செய்ய நான் Switch  உபயோகித்தேன். ‘Format Factory’ காலை வாரிவிட்டது. அறியவும்.

‘கான்’களின் சங்கீதம்தான் என்றில்லை; பித்துக்குளி முதல்  பிங்க் ஃப்ளாய்ட் வரை எனக்கு பிடிக்கும். கிண்டல் செய்வேனே தவிர எங்கள் ஊர் ஹனிஃபாவின் ‘இரு கண்கள் நம் ஹஸன் ஹூசைன்’  பாட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  ஈராக்-ஐ விட்டு அமெரிக்கப் படைகள் மெல்லப் போகும்  (எங்கே, ஈரானுக்கா?) இந்த சமயத்தில் – கர்பலாவை முன்வைத்து- அதைப் பதிவது காலத்தின் அவசியம். செய்வேன். ம்ம்…  மற்ற ‘இஸ்லாமிய’ப் பாடல்கள் இந்த ரமளான் சமயத்தில் பொறுமையின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துபவை. இன்னல்லாஹ மா சாபிரீன் (11 முறை சொல்லிக் கொள்ளவும்!).

சரி, என்னைக் கவர்ந்த தாவுதுநானாவின் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். ‘எழுதுகோலிலா?’ என்ற இழுப்பில் , சோமன் சார் , என் எலும்பெல்லாம் உருகுகிறது. பாடலை எழுதியது யார் என்று சொல்பவர்களுக்கு என் சலாம் உரித்து. பாடலின் வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.  ஒரு வரி , ‘நான் உன்னைத் தேடான்’ என்று ஒலிக்கிறது. ‘தேடேன்’  ‘தேடவா?’ என்று பதிந்திருக்கிறேன். சரிதானா? ‘அவனை எதுக்குக் கூப்பிடனும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை’?

தவறைத் திருத்துங்கள். நன்றி.

கேட்க :

Click here to Download

*

இறைவனே.. எங்குன்னைத் தேடுவேன்?
இரக்கமே இல்லாத அரக்கர்கள் மனதிலே
நான் உன்னைத் தேடவா?

ஆண்டவனே.. நான் எங்குன்னைத் தேடுவேன்?
இரக்கமே இல்லாத அரக்கர்கள் மனதிலே
நான் உன்னைத் தேடவா?

ஏழை நெஞ்சிலா அல்லது மதலைச் சிரிப்பிலா? – அல்லது
எழுதுகோலிலா தேடுவேன்?

தாயைப் பிரிந்த சேய் என உலகில்
தனித்து நான் வாழ்வது சாத்தியமா?

*

நான்கு மறையிலும் நானிலமெங்கிலும்
நானுன்னைத் தேடியும் காணேனே..
ஓங்கும் உலகுக்கெல்லாம் உணவு தரும் உழவன்
உதிர்த்திடும் வியர்வையில் கண்டேனே..

(தாயைப் பிரிந்த)

வட்டிப் பணத்திலே வயிறு வளர்ப்போனின் – அந்த
வாசலில் உனை வரக் காணேனே
வாடிடும் பசியால் மெலிந்திடும் ஏழை
வடித்திடும் கண்ணீரில் கண்டேனே

(தாயைப் பிரிந்த)

காசாசை கொண்டு காலமெல்லாம்
உஹது மலை தேடியும் உன்னைக் காணேனே
கற்புடைய மாதரின் பொற்பினில் சிறந்து
களிநடனம் புரியக் கண்டேனே

(தாயைப் பிரிந்த)
*

நன்றி : முத்துமா – ஜக்கரியா மரைக்கார் (சிங்கை)