‘அரபுநாட்டுலேர்ந்து ஊருக்கு வந்த ஒடனேயே வீண் செலவு செய்யிறதுக்குன்னு ஒரு ‘டூ..ர்…ர்ர்ரு.’.. ஒடம்புக்கும் காசுக்கும் கேடு வேற. அட, சொன்னா கேக்கவா போறானுவ?’ என்று தன் மகன்களைப் பற்றி சத்தமாகப் புலம்பிக்கொண்டிருந்த என் தாய்மாமா , ‘இன்னக்கி டூர் போறேன் மாமா’ என்று நான் சொன்னதுமே , ‘ஆஹா, கண்டிப்பா. டூர் போயே ஆவனும். அப்பத்தான் ஒடம்பும் மனசுக்கும் ராஹத்தா இக்கிம், இந்த அஹோர வெயிலுக்கு. வரட்டா? ‘ என்று சொல்லிவிட்டு முனகியபடி கிளம்பினார். மூணு நாளைக்கு நிம்மதியாக இந்த ‘மீராஜ்-ஏ-கஜல்’ஐக் கேட்டுக்கொண்டிருங்கள். ‘தரங்கம்பாடி’ வரை போய்விட்டு வந்து விடுகிறோம்! – ஆபிதீன்
முறையீடு சோகமாக இருக்கிறதென்று நண்பர்கள் முறையிடுகிறார்கள். அதனால் இது. ‘ஹே ஷைத்தான்’ கதையில் வரும் ‘ஒரே நம்பிக்கையில் ஓடிவந்தேன் நாதா’ (வாஹித் பாடியது. பிறகு பதிவிடுகிறேன்) பாடல் இந்த மெட்டிலிருந்துதான் உருவாயிற்று. கொண்டாடுங்கள்!
அஸ்மாவையும் பிள்ளைகளையும் பிரிந்து ஓரிரு நாளில் துபாய் போகிறோமே என்று மனசு சரியில்லாமல் ஜபருல்லாநானாவை பார்க்கப் போனால் ’இவ்ளோ சளியும் காய்ச்சலும் வச்சிகிட்டு ஏங்கனி போறா?’ என்று அதட்டி, என் நெஞ்சு முழுதும் விக்ஸ் பூசினார். பூசியதோடு நில்லாமல் ‘இத கேளுங்கனி’ என்று குலாம் அலியின் ’ஏ ஹுஸ்னு பே பர்வா’ கஜலைப் போட்டார். அத்தோடு விட்டிருக்கலாம். அதே டியூனில் – மர்ஹூம் வாஹித் கேட்டதற்கிணங்க – தான் இயற்றிய பாடலையும் பாடிவிட்டார். துக்கம் எல்லை கடக்காமல் என்ன செய்யும்?!
***
ஏன் இந்த சோதனை நியாயமா?
ஏழை என் நெஞ்சம் தாங்குமா?
வல்லோனே உனக்கிது ஆகுமா?
வளம் எந்தன் வாழ்வில் கூடுமா?
(ஏனிந்த)
எல்லோரும் நலம்பெற வேண்டினேன்
எழிலான கவிதைகள் பாடினேன்
வீணே என் திறமைகள் மாய்வதா?
விதியே என்றெண்ணி ஓய்வதா?
(ஏனிந்த)
அழவைக்கும் அடுத்த சரணத்தை அப்புறம் பதிவிடுகிறேன். ஒரிஜினல் கஜலைக் கேளுங்கள். இது சும்மா காதல் சமாச்சாரம். இறைக்காதலோ ? இஸ்மாயில்பாய், அர்த்தம் சொல்லுங்கள் . எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தது தாலிப் ஹுசைன்; குலாம்அலி அல்ல என்று ஒருவர் கருத்து சொல்லியிருக்கிறார். இருக்கலாம். பிறர் இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் குலாம்அலி பாடியிருக்கிறார். ’கொலவெறி’யோடு அலைபவர்கள் கலைவெறியோடு குலாம்அலி பாடும் கஜலைக் கேட்பார்களாக!
ரியாத்-இல் வெந்து கொண்டிருந்த நேரத்தில் உள் மனதில் “நாம் ரொம்ப புத்திசாலியாக்கும்”னு ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னே? ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கோம்ல? எம்புட்டு வாத்தியார்ங்கெல்லாம் ‘அப்பப்ப’ இவன் ரொம்ப புத்திசாலின்னு சொல்லக்கேட்டு அப்புடியே வானத்துல பறந்துருக்கோம்? ஏதோ நம்ம கெட்ட நேரம், இந்த பாலைவனத்துல வந்து மட்டையடிக்கிறோம்னு ரொம்ப நல்லாத்தான் நம்பிக்கிட்ருந்தேன்….நண்பர் தாஜ்கிட்ட வந்து சேர்ற(மாட்ற)வரைக்கும்.
மிமிக்ரி போட்டில அவனவன் ஆடு மாடு மாதிரி கத்திகிட்டுருந்தானுங்க. (ஒருத்தன், சிலோன் ரேடியோ கே. எஸ். ராஜா மாதிரி குரல்ல ஒரு சினிமா விளம்பரம் படிச்சான்) திடீர்னு ஒரு பையன், திருநெல்வேலி காலேஜாம், மேடைல ஏறி, பல பாடகர் குரல்ல பாடுறேன்னு சொல்லிட்டு, ஃப்ளாட்டா ஒரே குரல்ல, ஒவ்வொரு சினிமா பாட்டுல ஒரு ‘பாரா’ பாடிகிட்டு இருந்தான். இதுக்கு நாம பலமடங்கு தேவலையேன்னு, நம்ம கோணபுத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு.
ஸ்டேஜுக்கு பின்னால போய் விசாரணை:
1. இன்னும் எத்தனை போட்டியாளர்கள் பாக்கி? 15 பேர்
2. போட்டி incharge யாரு? Commerce Asst.Prof. திரு. ராமசாமி
இவர் எனக்கு கொஞ்சம் பழக்கம். பஸ் ஸ்டாப்ல ஒருநாள் பக்கத்துல வந்து நின்னார். ஸ்கூட்டர் என்னாச்சு சார்னு கேட்டேன். ஒர்க் ஷாப்ல விட்ருக்கேன்னார். அப்போதுல இருந்து என்னய பாத்தா சிரிப்பார், ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவார். அன்னைக்கு மாட்னார். போய், சார் ஒரு போட்டில கலந்துக்கணும்னேன். அப்டியா? பரவால்லயே, உனக்கு என்னய்யா தெரியும்? எந்த போட்டில கலந்துக்கிறே? இல்ல சார், இந்த மிமிக்ரி போட்டில..தா..ன்…..னு இழுத்தேன். வள்ளுனு விழுந்தார். (ஏற்கனவே அவரை காட்டுராமசாமின்னு பசங்க செல்லமா, செல்லமாத்தான், சொல்லுவாங்க) விளையாட்ரியா? என்ட்ரி எல்லாம் க்லோஸ் ஆயி ஒரு வாரம் ஆயிருச்சு. போய்யா அந்த பக்கம். ஸார், இன்னும் 15 பேர் பாக்கி இருக்காங்க, லிஸ்ட் உங்ககிட்டதான் இருக்கு,சேத்துக்கிங்க சார், நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க சார்னு, கெஞ்சுனேன். அழுதிருவனோன்னு அவர் பயந்துருக்கணும், மூணு ரூபாய் வாங்கிட்டு, ரசீது போட்டுட்டு, அடுத்த நாலாவது ஆளா, மேடையில ஏத்தி விட்டுட்டார்.
அந்த திருநெல்வேலி பையன் செஞ்சதை நான் பண்ணேன். அன்னைக்கு முழுநாளும் தெரிஞ்சவன், தெரியாதவன், தெரிஞ்ச,தெரியாத பேராசிரியர்கள்னு ஒரே பாராட்டு மழை. அதுக்கப்புறம் காலேஜ் ஃபங்ஷன்ல எல்லாம் ஒண்ணு ரெண்டு பாட்டு. மூணாவது வருஷம் முடிஞ்சதும் ஒரு லோக்கல் ஆர்க்கெஸ்ட்ரால சேந்து லூசு மாதிரி சுத்துனேன். சுதி, தாளம், டைமிங், ஓபன் பண்ணாம பாடணும், தொண்டையில இருந்து பாடக்கூடாது, அடி வயித்துல இருந்து பாடணும்னு ஆளாளுக்கு அட்வைஸ். அதுக்கப்புறம் “எல்லாம்” முடிஞ்சு, சவூதில போய் பொத்துன்னு விழுந்து, தாஜ் முன்னால எந்திருச்சா, மனுஷன் கொஞ்சம்கூட அலட்டிக்கிராம பேசிப்பேசி, என்னய ஒரு அரை லூசு லெவலுக்கு கொண்டுவந்துட்டார். பின்ன? என்னோட இன்டல்லிஜென்ஸ் என்ன, ஜென்ரல் நாலட்ஜ் என்ன, எல்லாத்தயும் தூக்கிப்போட்டுட்டு, எலிமென்ட்ரி ஸ்கூல்ல சேத்துவிட்டுட்டாருல்ல? (கணையாழி படிய்யா..)
அதுதான் போகுது, என்னோட ‘இசைஞான’த்தையாவது ஏத்துகிட்டு இருக்கலாம். இல்ல, ஏத்துக்கிறாமயாவது இருந்திருக்கலாம். மறுபடி அதுலயுமா என்னை அரை லூசாக்கணும்? ஒருநாள் சாயிந்தரம் ‘பத்தா’வுக்கு போகும்போது, (வேற எதுக்கு மலையாள சினிமா காஸெட் வாங்கத்தான்), யோவ், மத்தியானம் ஒரு பாட்டு கேட்டேன்யா, இதுக்கு பேரு “கஸல்”, ஒரு பாகிஸ்தானி பாடகர் பாடிருக்கார். கேட்டுப்பாரு, அருமையா இருக்குய்யான்னு தூபத்தை போட்டுட்டு, காஸெட்ட அவர் வண்டிலயே போட்டு கேக்க சொன்னார்.
இதுல என்ன விசேஷம்னா, ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் உருது/ஹிந்தி ல ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது. (இப்போ எப்டியும் 25% தெரியும்ல?)ஏதாவது காஸெட் வாங்கனும்னாகூட நல்லா சொல்லி கேக்க தெரியாது. இப்போ மாதிரி அப்போல்லாம் புடிச்ச கஸல இன்டெர்நெட்ல தேடி, கேக்க முடியாது. ஒரு புபிந்தர்சிங் கஸல். 10 வருஷமா தேடுனேன். ரெண்டு வரிதான் தெரியும். கடைசில, ரெண்டு வருஷத்துக்கு முன்னால வியட்னாம் ஹனோய்ல இருக்கிற ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரென்ட்ல கேட்டேன். அங்கேயே அரைமணி நேரம் இருந்து ஓனர் வந்தவுடனே, ஆல்பம் பேரு கேட்டு, கண்டுபுடிச்சேன். அதையும் இங்க இணைச்சுருக்கேன். கேட்டுப்பாருங்க. (ரமளான் கழிச்சு கேக்குறது உசிதம்!!!!)
Download சிங்கப்பூர் முஸ்தஃபா சென்டருக்கு பக்கத்துல ஒரு ஹோட்டல்ல கஸல் பாடுற ஒரு நேபாளி ஜோடி, என்னோட request ஒண்ணு கூட பாட முடியாம, அந்த ஆளு எந்திரிச்சு எங்கிட்ட வந்து, சாரி சொன்னார், பாவம்.
என்னய இந்த நிலமைக்கு ஆளாக்குனது:குலாம் அலி (ஆல்பம்:ஆவார்கி. கஸல்: ஹங்காமா ஹை க்யூங்)
இணைச்சுருக்கேன். கேளுங்க, பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.