தலைப்பு உதவி : ஆவோபிதீன் ; குறிப்புகள் : தாவோஜ் 🙂
**
Download (PDF) : Tao: The Golden Gate – Vol. 1 (of 2) | Tao: The Golden Gate – Vol. 2 (of 2)
**
அன்புடன்
ஆபிதீன்.
ஓஷோவைவிட
நான் நீண்டுவிட்டதால்
கட்டுரை சற்றுப்
பெரிதாகிப் போச்சு.
குற்றம் என் மேல் அல்ல…
என் புத்திமேல்!.
அதுதான்
‘நான்ஸ்டாப்’பாக
ஏதேதோ எழுதித் தீர்த்துவிட்டது.
எல்லாம்
ஆபிதீன் கொடுக்கும் செல்லம்.
*
நாளைக்கு இரவு
சீர்காழிப் பக்கமுள்ள
மேலைச்சாலை
அஜ்மத் பீவி தர்காவில் கந்தூரி.
அந்த அஜ்மத் பீவி பாட்டி
என் இஸ்டம்.
நான், என் மனைவியோடு
போய்வர எண்ணம் உண்டு.
உங்களுக்கு ஏதேனும்
‘துவா’
கேட்கனுமென்றால்….
மெயில் செய்யுங்கள்.
கேட்ட துவா உடனே கபுல் ஆகும் என்பதற்கு
நான் கேரண்டி!
*
நன்றி….
– தாஜ் , 8-6-2011
***
தோழமையுடன்
வாசகர்களுக்கு….
சில வாரங்களாக என் வாசிப்பிலிருக்கும் ‘ஓஷோ’வின் ‘தாவோ ஒரு தங்கக்கதவு’ புத்தகத்தின் முதல் அத்தியாயம் நாற்பத்தியாறு பக்கங்கள் கொண்டது. அதில் இரண்டு பகுதிகளை மட்டும் தேர்வு செய்து இங்கே வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இப்பகுதிகள் இரண்டும் என் ரசனை ஈர்த்த செய்திகளாலானது.
முதல் பகுதி, சீன மதங்களில் ஒன்றான ‘தாவோ’ பற்றிய சிறிய குறிப்புகள் கொண்டது. தாவோவை, தர்மம் அல்லது இயற்கை என்கிற அர்த்தத்தில் பார்க்கச் சொல்லும் ஓஷோவின் விரிவான விவரணை குறிப்பிடத் தகுந்தது. தவிர, கடவுளர்களை முன்வைத்து காலங்காலமாய் நடந்தேறியுள்ள அழிச்சாட்டியங்களை விமர்சனப் பார்வையில் சீண்டியுமிருக்கிறார்.
இரண்டாவது பகுதி, மதங்கள் பேசும் ‘சொர்க்கம் – நரகம்’ பற்றிய வியாக்கியான வர்ணனை கொண்டது. அவரது அந்த வர்ணனைக்கு நாம் காது கொடுக்கும்படிதான் இருக்கிறது. அத்தனைக்கு கிண்டல், அத்தனைக்கு நையாண்டி. நான் ஆர்வப்பட்ட இந்த இரண்டு பகுதிகளைக் குறித்தும் வாசகர்கள், வெட்டியும் ஒட்டியும் அபிப்ராயங்களைக் கூறலாம். ஓஷோவின் சொல்லோ, என்னுடைய ரசனையோ தீர்ந்த தீர்ப்பாகிவிடாது.
*
1975-வாக்கில் நான் ஓஷோவை அறியவந்தேன். செல்வத்தில் செழித்த தனது அமெரிக்க ஆன்மீகத் தளத்தை காலிசெய்துவிட்டு, பூனாவில் அவர் தனது அடுத்த இருப்பை பிரமாண்டமாய் விரிவு செய்த போது அவரை நான் அறியவந்தேன். அந்த அறிதலில், அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வரவேண்டிவந்த பல விசேச காரணங்களையும் அறிந்து முகம் சுளித்தேன். என்றாலும் அவர் மீதான வியப்பு எழ, மலைக்கவும் செய்தேன்.
ஆன்மீகப் பெரியார்கள் எவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அன்றைக்கெனக்கு இருந்தது இல்லை. மக்களால் ‘மஹான்கள்’ என்று வர்ணிக்கப்படுபவர்களில் பலரும் எனக்கு இன்னொரு மனிதர்கள்தான். இன்றைக்கும் அப்படித்தான். அதே சிந்தைதான்.
’மனிதர்கள் எப்படி லோகக் கடவுளாகவும், இறைவனின் அவதாரமாகவும், ஆசி பெற்றவர்களாகவும், சித்துகள் பல செய்பவர்களாகவும் இருக்க முடியும்? மனிதர்கள் மனிதர்களாகத்தான் இருக்க முடியும்’ – இந்த என் உள்மன எதிரொலிப்பு என்றைக்கும் உண்டு. ஓஷோவும் எனக்கு இன்னொரு மனிதர்தான்!
மரியாதைக்குரியவர்கள்/ நட்புக்குரியவர்கள்/ நம்மைவிட திறமைசாலிகள்/ கலைஞர்கள்/ விசால திறன்கள் பல கொண்டவர்கள் – என்கிற நோக்கில் பலர் மீது எனக்கு அப்பவும் இப்பவும் மதிப்புண்டு. கூடுதலாக அவர்கள்பால் பணிவும் உண்டு. ஓஷோ, இந்த வட்டத்திற்குள்தான் என்னில் வாழ்கிறார்!
என்னைவிட சிறியவர்களாக இருந்தாலும் திறமை கொண்டவர்கள் எனில், எங்கேயும் எப்பவும் தலைவணங்கவும் தங்க மாட்டேன். என்னிடம், நான் மதிக்கும் சில நல்ல சங்கதிகளில் இது ஆகச் சிறந்தது.
ஓஷோ குறித்து பிரஸ்தாபித்த அன்றைய ஊடகங்கள் இன்னும் பல செய்திகளை அழுந்தச் சொல்லியது. அதன் பொருட்டு, அவர்மீது அன்றைக்கெனக்கு நல்ல அபிப்ராயம் எழவில்லை. ‘செக்ஸ்’ சாமியாராகவே என் மனதில் அழுந்த உட்கார்ந்துவிட்டார்.
*
ஓஷோ குறித்த ‘செக்ஸ் சாமியார்’ அபிப்ராயமும் ஓர் எல்லைக்கு மேல் என்னில் நீடிக்கவில்லை. சில காலங்களுக்குப் பின் செக்ஸ் குறித்த பார்வையே என்னிடம் இன்னொரு பரிமாணம் கொண்டது. பெரியாரின் எழுத்துக்கள் பலவற்றை உள்வாங்கிப் படிக்க நேரிட்ட நேரத்தில் அப்படியொரு தாக்கம் என்க்கு சாத்தியமானது. ஓஷோ என் கவன ஈர்ப்பில் முழுசாக வந்தார்.
மிகத் தாமதமாய், படிக்கக் கிடைத்த ஓஷோ எனக்கு விசேஷமாகத் தெரியத் தொடங்கினார். அவரது எழுத்துக்களை தேடித் தேடி வாசித்தேன். அவரது புத்தகங்கள் பலவும், ஒரே கருத்தை திரும்பத் திரும்ப கூறுவதாகப் பட்டது. புத்தரையும், தாவோவையும் முன்வைத்துப் பேசும் அவரது எழுத்துக்கள் வேறு எப்படி இருக்க முடியும்? அப்படி திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாததுதான்.
ஆனால், அப்படி திரும்பத் திரும்ப வரும் கருத்துகளைத் தாண்டி, வியாக்கியானமென அவர் விரியத் துவங்கும் போது அந்தப் பேச்சே சுவாரசியமாகிப் போகும். நம் கவன ஈர்ப்பைப் பெற, சின்னச் சின்ன விந்தைக் கதைகள்/ சிரிப்பு கதைகள்/ வியக்கச் வைக்கும் உதாரணங்கள்/ அதிர்ச்சி அளிக்கும் எதிர் நிலைக் கருத்துக்கள்/ நாம் பழமையில் இருந்து மீறவும், மீண்டெழவும் உந்துதல் செய்யும் உத்வேகச் செய்திகள் பல அவரது பேச்சில் அசாதாரணமாக விஸ்தீரணப்பட துவங்கிவிடும்!
நவீன உலகின் ஆதர்சர்களாக போற்றப்படும் ஆக்கபூர்வ கலைஞர்கள், விஞ்ஞானிகள், சமூக மேதைகள், தத்துவார்த்தச் சிற்பிகள் அனைவரும் ஓஷோவின் பேச்சில், நம்முடன் அறிமுகம் கொள்வார்கள். அவர்களின் நட்சத்திரச் சங்கதிகளை ஓஷோ சொல்லுகிற போது, பெரும்பாலும் அது நமக்கு புதுச் செய்திகளாகவே இருக்கும். குறிப்பாய் அவரது பேச்சில் தெறிக்கும் ‘தர்க்கம்’ முன் எப்பவும் நாம் கேட்டு அனுபவித்திராத ஒன்றாகவே இருக்கும்!
அடிப்படையில் ஓஷோ, ஓர் கல்லூரிப் பேராசிரியர். என் அனுபவத்தில் நான் கண்ட, கேட்ட, வாசித்து அறியவந்த வகையில் இத்தனை புத்தியாக, எல்லாவற்றையும் தொட்டுப் பேசும் இன்னொரு பேராசிரியரை அறிந்ததில்லை!
*
பின் குறிப்பாய் இன்னும் சில செய்திகள்.
வாழ்வியல் தத்துவார்த்தம் பேசும் வல்லமை கொண்டவர்களிடம் சீடர்களாக வருபவர்களில், வாழ்க்கையில் இடிபாடுகள் கொண்ட நடுத்தர வயதுக்காரர்களே அதிகம். அவர்களிடம் அந்த வல்லமை கொண்டவர்கள் புதிய பல கருத்துக்களை, நிஜமாகவே ஒப்புக் கொள்ளும் கருத்துக்களை , நீள- அகலமாய்- ஆழமாய் போதிக்கிறார்கள். அந்த சீடர்களும் அதனை ஏற்கும் மனநிலையோடு கேட்டறிகிறார்கள். அதனை நூறு சத சுத்தமாய் ஏற்கவும் செய்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால்…
அந்தச் சீடர்களால், கேட்டறிந்த குருவின் புதிய தத்துவார்த்தங்களை நடைமுறைப்படுத்துவதென்பது அத்தனை எளிதல்ல. இரத்தத்தோடு, இரத்த பந்தங்களோடு சதையும் நகமுமாக ஒன்றிவிட்ட, பழமைகொண்ட பழக்கவழக்கங்களை எந்தவொரு சீடர்களாலும் களைவதென்பது இயலாது.
“எனக்கது சாதாரண விசயம். நான் எல்லா பழமைகொண்ட பழக்க வழக்கங்களையும் களைந்தெறிந்துவிட்டேன்” என்று அந்த சீடர்களில் எவரொருவர் சொன்னாலும், அதுவோர் சுத்தமான பொய்யாகவே இருக்கும். மலையைக் கட்டி இழுத்துவிடலாம், பழைய பழக்கவழக்கங்களைக் களைந்து புதிதாக ஒன்றை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொள்வதென்பது நடக்காது. சாத்தியங்கள் மிகக் குறைவு.
போதிப்பவருக்கு பொருள் ஈட்டித் தருவதைத் தவிர, போதிப்பாளனின் புதிய சித்தாந்தம் எந்த சீடக் கோடிகளுக்கும் முழுப்பயன் அளிக்காது. இதுவோர் நிதர்சனமான உண்மை.
இந்த அடிப்படை சிக்கல் குறித்தோ, அதை நிவர்த்திச் செய்யும் சூத்திரம் குறித்தோ, வல்லமைக் கொண்ட அந்த குருக்களில் எவர் ஒருவரும் பேசுவது இல்லை – ஓஷோவையும் சேர்த்து.
என்றாலும், ஓஷோ எனக்கு விசேசமானவர். அவரது புதிய தத்துவார்த்தங்களை விடுங்கள், அவர் நமக்கு காட்டும் புதிய உலகின் கெலிப்பையும் விடுங்கள், அது சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான். எனக்கு அவரை ஏற்கவும் மனதில் இருத்தவும் அவரது அறிவின் விசாலம் ஒன்றே போதும். அவரிடம் அதனைக் கண்டு மயங்காதவரும்தான் யார்?
– தாஜ்
***
ஓஷோ பேசுகிறார் – 1
தெய்வீக நிலையோடு இரண்டறக் கலந்து விடும்படியானதோர் தெய்வீகம் வேண்டுமென்றால் முதலாவதாக உங்களுக்குள் இருக்கும் ‘நான்’ இறக்க வேண்டும். இதுதான் ’தாவோ’வின் உள்நோக்கு. தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர். அவ்வளவுதான்.
தாவோ என்ற பெயர் அழகாக இருக்கிறது. கடவுள் என்ற பெயரை , அந்த வார்த்தையை, நமது பூசாரிகளும், பாதிரிகளும், மாசுபடுத்திவிட்டார்கள். கடவுளின் பெயரால் காலம் கலமாக மக்களைச் சுரண்டிக்கொண்டிருந்து விட்டார்கள். இவர்களுடைய சுரண்டலால், இவர்களுடைய பித்தலாட்டங்களால் இப்போது கடவுள் என்ற வார்த்தையே அசிங்கமாகப் போய்விட்டது.
அறிவுள்ள எந்த மனிதனும் கடவுள் என்ற வார்த்தையின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறான். கடவுளின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நடந்த அநியாயங்களை, கொலைகளை, கொள்ளைகளை, கற்பழிப்புகளை அந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது. அதனால் கூடிய மட்டில் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பதையே தவிர்த்துவிடுகிறான் அவன்.
உலகிலேயே மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘கடவுள்’ தான். வேறு எந்த வார்த்தையையும் விட, இந்த வார்த்தையின் பெயரால் தான் அதிகபட்ச கொடுமைகள் நடந்திருக்கின்றன.
அதனால் , தாவோ என்ற வார்த்தை மிக அழகாகத் தோன்றுகிறது. உங்களால் தாவோவை வழிபட முடியாது. ஏனென்றால் தாவோ எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தாவோ என்றால் ஒரு மனித உருவத்தின் நினைவு வருவதில்லை. தாவோ ஓர் ஆள் இல்லை, அது ஓர் ஆதார விதி. நீங்கள் கடவுளை வணங்கலாம். ஆதார விதியை வணங்க முடியாது. அது மடத்தனமாக, கேலிக்கூத்தாக இருக்கும்.
நீங்கள் புவியீர்ப்பு விதியை வணங்குவீர்களா? இல்லை, விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா? அது அபத்தமாக இருக்கும்.
தாவோ என்பது ஒட்டுமொத்த பிரஞ்ச இருப்பையும் இணைக்கும் ஆதார விதி. இந்த பிரபஞ்சம் என்பது தற்செயலாக நடந்த ஒரு விபத்தில்லை. அது தான்தோன்றித்தனமான குழப்பமும் இல்லை. அண்டங்களின் படைப்புக் கோட்பாட்டின்படி உருவான ஓர் ஒழுங்குமுறைதான் இந்த பிரபஞ்சம்.
விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அதில் அதீத ஒழுங்கு தெரிகிறதல்லவா? பூமி சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுகிறது. மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. நமது சூரிய மண்டலமே ஒட்டுமொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் ஓர் அதீத ஒழுங்கு உள்ளீடாக மிளிர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒழுங்குதான் தாவோ. முழுமையின் இசைவுதான் தாவோ.
நல்ல வேளை, இதுவரை யாரும் தாவோவிற்காக கோயில்கள் கட்டவில்லை. சிலைகள் வைக்கவில்லை. பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. பூசாரிகள் இல்லை. வேறு எந்த இடைத்தரகர்களும் இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை. அதுதான் தாவோவின் அழகு.
அதனால்தான் தாவோவை ஒரு கொள்கை என்றோ கோட்பாடு என்றோ நான் சொல்லவில்லை. அதை மதம் என்றுகூட நான் சொல்லவில்லை. அதைத் தர்மம் என்று அழைக்கலாம். தர்மம் என்றால் தாங்கி நிற்பது என்று பொருள். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதுதான் தர்மம். இந்தப் பொருளில்தான் நான் தாவோவை தர்மம் என்கிறேன். புத்தர் தாவோவை தர்மம் என்றுதான் சொன்னார். நல்ல தமிழில் இயற்கை என்ற வார்த்தை தாவோவை ஒட்டி வருகிறது.
*
மக்கள் ஏன் கடவுளைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் நினைக்கிறார்கள்? எல்லாம் பயம் காரணமாகத்தான். அவர்களுக்கு கடவுளை, சொர்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அதிகாரம், அந்தஸ்து, செல்வம், சுகம், இவ்வளவுதான். அவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த பயம் காரணமாக, பேராசை காரணமாகத்தான் கடவுளை வழிப்படுகிறார்கள். ஆனால் ஆசையின் அடிப்படையில், அச்சத்தின் அடிப்படையில் செய்யப்படும் இறைவழிபாடு, வழிபாடேயில்லை.
உண்மையின் வழிபாடு , மனதில் பொங்கிப் பீறிட்டு எழும் நன்றி உணர்வால் ஏற்படுகிறது. பயத்தாலும், பேராசையாலும் அது எப்போதும் ஏற்படுவதில்லை. உண்மையின் வழிபாடு உண்மைமேல் உள்ள காதலால் ஏற்படுகிறது. அப்படிக் காதலிக்கப்படும் உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதுதான் உண்மையான வழிபாட்டுக்கு வித்து. அப்படியில்லாவிட்டால் உங்களுடைய இந்த உலக ஆசைகளை நீங்கள் சொர்க்கத்தின் மேல் திணிப்பீர்கள். கடவுளின் மேல் திணிப்பீர்கள்.
பல நாடுகளில் உள்ள பல்வேறு மதங்கள் எப்படி சொர்க்கத்தை வர்ணிக்கின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் தங்கள் ஆசைகளை சொர்க்கத்தில் புறநிலைப் படுத்துகிறார்கள்.
உதாரணமாக திபெத் நாட்டில் உள்ள மதத்தில் சொர்க்கம் ஒரு கதகதப்பான பிரதேசமாக வர்ணிக்கப்படுகிறத. காரணம், திபெத் ஒரு குளிர்பிரதேசம். ஆகையால் அவர்கள் தங்கள் சொர்க்கத்தில் வெயில் கொளுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் தினம் ஒரு முறை குளிக்க முடியும். திபெத்தில் உள்ள மதநூல்களும் சாத்திரங்களும், வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும் என்று சொல்கின்றன.
இந்தியர்கள் வர்ணிக்கும் சொர்க்கம் குளிர்ச்சியானது. அது குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. ஏசி என்று ஒன்று வரும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.
அதனால் அங்கு எப்போதும் குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும் என்று சொன்னார்கள். ஏனென்றால் இந்தியா ஓர் உஷ்ணப் பிரதேசம். வருடம் முழுவதும் வெயில் கடுமையாக இருப்பதால் இந்திய மனம் எப்போதும் நிழலையும், குளிர்ச்சியையும் தேடி அலைகிறது.
அதனால் அவர்கள் சொர்க்கத்தில் எப்போதும் தென்றல் காற்று வீசிக் கொண்டேயிருக்கும், பெரிய பெரிய மரங்கள் இருக்கும். இந்தியர்கள் காணும் சொர்க்கத்தில் உள்ள மரங்கள் மிகப் பெரியவை. அவற்றின் நிழலில் ஓராயிரம் மாட்டு வண்டிகள் வெயில் படாமல் நிற்கலாமாம்.
திபெத்தியர்களின் நரகம் பனிக்கட்டிகளால் ஆனது. இந்தியர்களின் நரகத்தில் எப்போதும் தகிக்கும் அக்னி எரிந்து கொண்டேயிருக்கும்.
எப்படி இவ்வளவு வகையான நரகங்களும், சொர்க்கங்களும் இருக்க முடியும்? இவை எல்லாம் நமது ஆசைகளின் வெளிப்பாடு. நாம் இந்த உலகத்தில் எதற்காக ஏங்குகிறோமோ அதை சொர்க்கத்தில் புறநிலைப்படுத்துகிறோம். அதை அங்கே அனுபவிக்க விழைகிறோம். நாம் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் பயப்படுகிறோமோ அதை வைத்துதான் நாம் நரகங்களைப் படைக்கிறோம்.
நரகம் நமக்கில்லை , மற்றவர்களுக்கு. அதாவது நமது மதத்தை, நமது கடவுள் கொள்கையை ஏற்க மறுக்கும் மற்றவர்களுக்குத்தான் நரகம். நமது கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொர்க்கத்தை – இந்த உலகில் நாம் ருசிக்கத் துடிக்கும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசளிக்கிறோம்.
இதெல்லாம் மதத்தோடு சேர்த்தியில்லை.
இஸ்லாமியர்கள் காணும் சொர்க்கத்தில் மது ஆறு போல ஓடுகிறதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் இந்த உலகத்தில் மது அருந்துவதைக் கண்டிகிறார்கள். அதைப் பாவம் என்று சொல்கிறார்கள். மது அருந்தும் பாவத்தை இங்கே செய்யாமல் இருந்தால், அந்த புனிதர்களுக்கு சொர்க்கத்தில் ஆறுபோல் ஓடும் மது கிடைக்குமாம்! கேலிக்கூத்தாக இல்லை?
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் காணும் சொர்க்கங்களில் ஓர் அடிப்படை ஒற்றுமை தெரிகிறது. சொர்க்கத்தில் அப்சரஸ்கள், மிக அழகிய பெண்கள் மிக அதிகமாக இருப்பார்களாம். எந்த நாடும், எந்த மதமும் தனது சொர்க்கத்தில் அழகான ஆண்களை வைப்பதில்லை. இது ஏன்?
இந்த நம்பிக்கைகளை உருவாக்குபவர்கள் ஆண்கள்தான். அதனால் அவர்கள் தங்களுக்குச் சாதகமாக ‘அழகிய அப்சரஸ்களை’ ‘தேவகன்னிகளை’ ரம்பா, ஊர்வசி, மேனகாவை உருவாக்கிவிட்டார்கள். பெண்கள் விடுதலை இயக்கங்கள் இன்னும் வலுப்பெற்றால் அவர்கள் பெண்களுக்குரிய சொர்க்கத்தை வர்ணிப்பார்கள்.
அப்போது அவர்கள் அழகான பெண்களைப் பற்றிப் பேசமாட்டார்கள். அழகான ஆண்களைப் பற்றிப் பேசுவார்கள். மனைவி சொல்லுக்கு அடங்கி நடக்கும் பயந்தாங்கொள்ளி கணவன்மார்கள், பெண்களின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னால் அடிமைகள் போல், வேலைக்காரர்கள் போல நடந்து செல்லும் ஆண்களைத்தான் அவர்கள் சொர்க்கத்தில் வைப்பார்கள். பெண்களை அப்படிதானே ஆண்கள் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்?
சொர்க்கத்தில் இருக்கும் பெண்கள் என்றும் இளமையாக இருப்பார்களாம். அவர்களுக்கு முதுமையே வராதாம்.
சரி, அதை விடுங்கள். இந்த மதங்கள் எல்லாம் கடவுளை எப்படி சித்தரிக்கன்றன தெரியுமா? வெண்தாடியுடன் கூடிய ஒரு வயதான மனிதனாக. கடவுளை எப்போதாவது நீங்கள் ஒரு துடிப்புள்ள இளைஞனாகக் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் இளைஞர்களை நம்பமுடியாது என்று பலர் நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. பக்குவம் இருக்காது. முதிர்ச்சியிருக்காது. சில சமயங்களில் இளைஞர்கள் அசட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று இந்த சமுதாயம் நினைக்கிறது.
அதனால் தான் உலக மதங்கள், இறைவனை முழுக் கிழவனாகச் சித்தரிக்கின்றன. ஒரு புத்திசாலி மனிதன் கண்டிப்பாக வயதானவனாகத் தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவும் அனுபவமும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று உலகம் நினைக்கிறது. அதனால் கடவுள் தாடிக்காரக் கிழவனாகக் காட்சி தருகிறார்.
ஆனால், கடவுளைச் சுற்றி நிற்கும் தேவலோகப் பெண்கள் எல்லாம் இளங்குமரிகள். பதினெட்டு வயதுக்கு மேலே ஒரு நாள்கூட வயது ஏறாத நிரந்தரக் கன்னிகள். அந்த வயதில் அப்படியே தேங்கிவிட்ட அதிசயப் பிறவிகள். பாவம், எத்தனை கோடி ஆண்டுகளுக்குத்தான் அவர்கள் பதினெட்டு வயதுப் பெண்களாகவே இருப்பார்கள்!
ஆனால் இது உண்மையில்லை. மனிதனின் கற்பனை. நமது புனிதர்கள் பெண்களை வெறுக்கிறார்கள். உடலுறவை வெறுக்கிறார்கள். பிரம்மச்சரியத்தைப் புகழ்கிறார்கள். அப்படிச் செய்தால் அவர்களுக்கு மறுவுலக வாழக்கையில் இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது நம்முடைய உலக ஆசைகள். நமது ஆழ்மனதில் இருந்து வரும் ஆசைகள். அவற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. அந்த ஆசைகளை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றின் போக்கைக் கவனித்து எதிர் கொண்டால் ஒழிய அவற்றை வெல்ல முடியாது. ஆசைகளை உள்ளே அடக்கிவைத்து ஞானியானவர் யாரும் இல்லை.
.
****

நன்றி: கவிதா வெளியீடு
வடிவம்/ தட்டச்சு: தாஜ் | satajdeen@gmail.com