முன் குறிப்பு : முதலில் வரும் பெண் என் அஸ்மா அல்ல! ஆனாலும், இரண்டாவதாக வரும் ராபியா பஸ்ரியா குறிப்பிடும் ஓர் அரிய குணம் அஸ்மாவுக்கு இருக்கத்தான் செய்கிறது. நான் நாகூர் வந்தாலும் சந்தோஷம். துபாய் போனாலும் சந்தோஷம். இரண்டுமே அவளுக்கு இறை தீர்ப்புகளே! நல்லது, இந்தப் பதிவு இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீ’னிலிருந்து உருவான ‘இறை திருப்தி’ என்ற நூலிலிருந்து வ்ருகிறது. தமிழாக்கம் : எங்கள் ஹஜ்ரத் மௌலவி எஸ், அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்கள்.
***
1
பக்தர் ஒருவர் வெகுநாட்கள் இறைவனை வணங்கினாராம். அவரது தவப் பயணால் ஒரு நாள் தெளிவான கனவு ஒன்று கண்டார். அதில் ஒரு பெண்மணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டாள். “இவள்தான் சுவனத்தில் உமக்குத் துணைவி!” என்று அறிவிக்கப்பட்டது.
தூக்கத்திலிருந்து கண் விழித்த பக்தர் அந்தப் பெண்மணியைத் தேடியலைந்தார். கடைசியில் அவளைக் கண்டு பிடித்தார். அவளைத் தன்னோடு மூன்று நாட்கள் தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனின் பேரன்பைச் சம்பாதிக்கும் அளவுக்கு அப்படி இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்க்க ஆசை அவருக்கு.
அவள் சம்மதித்து விட்டாள், ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அவள் ஒன்றும் நல் வணக்கம் புரியவில்லை. அவர் இரவு முழுவதும் நின்று வணங்கினார். அவளோ இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்கினாள். அவர் பகல் முழுவதும் நோன்பு பிடித்தார். அவளோ முழுவதும் வாய் ஓயாமல் தின்று தீர்த்தாள்.!
இப்படி மூன்று நாட்கள் கழிந்தன. பக்தருக்கு ஒரு புறம் ஆச்சரியம். மறுபுறம் கோபம். “என்ன இது? தின்பதும் தூங்குவதும் தானா? உனக்கு வேறு எந்த வேலையும் தெரியாதா?” என்று இரைந்து கத்தினார்.
அந்தப் பெண்மணி இறைவனை வம்புக்கு இழுத்தாள். “இறைவன் மீது ஆணை” என்று, “எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எந்த வணக்கமும் செய்வதில்லை. உங்களைப் போல் நான் இரவையும் பகலையும் தொழுகையிலும் நோன்பிலும் கழிப்பதில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் செய்து வருவதெல்லாம் இது தான்…”
பக்தர் ஆச்சரிய மிகுதியால் அசந்தே போய் விட்டார். அப்படியானால் இவளுக்கு இத்தனை பெரிய சிறப்பு எப்படிக் கிடைத்தது? சிறந்த இறை பக்தனான தமக்குத் துணைவியாகும் பேறு எப்படிக் கிட்டியது?
“நீ வேறு ஏதேனும் நல்ல காரியம் செய்து வருகிறாயா?” என்று விநயமாகக் கேட்டுப் பார்த்தார்.
“அறவே கிடையாது!” என்று சொல்லி விட்டார் அவள். அவர் விடவில்லை. நச்சரித்துக்கொண்டேயிருந்தார். கடைசியில் ஒருவாறு உண்மை வெளிப்பட்டது.
“என்னிடம் ஒரு குணமுண்டு. அதன் அடிப்படையில்தான் நான் இயங்கி வருகிறேன். துன்பம் குறுக்கிடும்போது நான் இன்பத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. இன்பம் கிட்டவில்லையே என்று வருந்துவதில்லை. வியாதி வந்தால் ஆரோக்கியத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்ப்பட மாட்டேன். ஆரோக்கியம் ஏற்பட்டு விடாதா என்று நான் ஏங்குவதில்லை. இதுதான் என் குணம். இதன்படியே நான் நடந்து வருகிறேன். மற்றபடி நீங்கள் இந்த மூன்று நாட்களாகப் பார்த்ததுதான் என் செயல்முறை. வெய்யிலின் கடுமையில் நான் நிழலின் குளுமையை எண்ணிப் பார்த்ததில்லை. எனவே திருப்தியோடு உண்டு களித்து திருப்தியோடு உறங்கி மகிழ்கிறேன்.”
இதைக் கேட்ட பக்தர் தலையில் கையை வைத்துக்கொண்டு இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். “இந்தக் குணத்தின் சிறப்புத் தானா இத்தனையும்! உண்மையிலேயே சிறந்த குணம்தான் இது. பக்தர்களால் கூட இதைச் செயல்படுத்த முடியாது!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
***
2
சுப்யான் சௌரி ஒருநாள் ராபியா பஸரிய்யாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். “இறைவனே! என்னைத் திருப்தியோடு ஏற்றுக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
ராபியாவுக்குக் கோபம் வந்து விட்டது. “உங்களுக்கு வெட்கமில்லை? உங்களைத் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளுமாறு இறைவனிடம் கேட்கிறீர்களே, அவனை திருப்தியோடு நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்களா அவன் தீர்ப்புகளைத் திருப்தியோடு ஏற்கப் பழகிக் கொண்டு விட்டீர்களா?”
சௌரீ தம் குற்றத்தை உணர்ந்தார். உடனே இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அனைத்தையும் கேட்பவனல்லவா அவன்!
அப்போது ஜாபர் பின் சுலைமான் என்ற பெரியார் அங்கு இருந்தார். “ஒரு மனிதன் எப்போது இறை திருப்தி கொண்டவானாகிறான்? அதற்கு அறிகுறி ஏதும் உண்டா?” என்று ஒரு கேள்வியைப் போட்டார்.
சுப்யான் சௌரீ வாய் திறக்கவில்லை. மாதர்குலத்தின் அறிவுச் சுடர் பதில் கொடுத்தது. “நல்லது நடந்தால் மகிழ்வதும் கெட்டது நடந்தால் வருந்துவதும் மானிட குணங்கள். இதைத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் இன்பம் வரும்போதுஎப்படி மகிழ்கிறானோ அப்படியே துன்பம் வரும்போதும் மகிழ்ந்தால் அவன் இறை திருப்தி கொண்டவன். இன்பம் துன்பம் என்ற இரண்டிற்குமிடையில் அவனுக்கு வேற்றுமை தெரியாது. ஏனெனில் இரண்டு இறை தீர்ப்புகளே!”
***
நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்.
***
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/Great_Mosque_of_Samarra