செருப்பு வியாபாரி சொன்ன கதை

யார் மௌனமாக இருக்கிறாரோ அவரே காப்பாற்றப்பட்டவர். – துன்னூன் மிஸ்ரி.

*

நண்பர் நாகூர் ரூமி எழுதிய ‘சூபி வழி – இதயத்தின் மார்க்கம்’ நூலிலிருந்து எனக்குப் பிடித்த இந்தப் பகுதியைப் பகிர்கிறேன்.
*

ஒருமுறை துன்னூன் மிஸ்ரி மக்காவுக்கு புனித யாத்திரை செய்தபோது அது நடந்தது.

அரஃபாத் என்ற பெருவெளியில் மிஸ்ரி தங்கியிருந்தார். அங்கு தங்குவது ஹஜ்ஜின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அங்கு தங்காமல் ஹஜ் நிறைவேறாது. அங்கு தங்கிய மிஸ்ரி இரவு முழுவதும் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு காட்சி காண்பிக்கப்பட்டது. அதில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸைச் சேர்ந்த அஹ்மது என்ற ஒரு செருப்பு வணிகரின் முகம் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடைய ஹஜ்தான் அந்த ஆண்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஹஜ்ஜாகும் என்றும், எனினும் அஹ்மது அந்த ஆண்டு ஹஜ் செய்ய மக்காவுக்கு வரமுடியவில்லை என்றும் சொல்லப்பட்டது.

மிஸ்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவுக்கு வந்து எல்லா சடங்குகளையும் நிறைவேற்றி அரஃபாத் பெருவெளியில் தங்காமல் போனாலே ஹஜ் நிறைவேறாது.  அப்படியிருக்க மக்காவுக்கு வராமல் ஒருவரால் – அதுவும் செருப்பு செய்து விற்றுக்கொண்டிருந்த ஒருவரால் – எப்படி ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும்? அதுவும் அவருடைய ஹஜ்ஜுதான் முதலில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற அசரீரி வேறு!

ரொம்பவும் குழம்பிப்போன மிஸ்ரி, ஹஜ்ஜை முடித்துக்கொண்டு டமாஸ்கஸ் சென்று அந்த செருப்பு வியாபாரியைச் சந்தித்தார். யாரோ ஒரு சூஃபி தன்னைத் தேடி வந்திருந்ததைக் கண்ட அந்த ஏழை மிஸ்ரியை வரவேற்று உபசரித்து உணவளித்தார். பின்பு இரவு நேரத்தில், “இந்த வருடம் நீங்கள் ஹஜ் செய்தீர்களா?” என்று லேசாக கேள்வியைப் போட்டார் மிஸ்ரி.

“செய்யலாம் என்று ரொம்ப ஆசையாகத்தான் இருந்தேன். ஆனால் முடியவில்லை” என்று அஹ்மது பதில் சொன்னார்.

அந்த பதிலைக்கேட்டு புன்னகைத்த மிஸ்ரி, தனக்குத் தோன்றிய காட்சியும் கேட்ட குரலும் ஷைத்தானின் வேலையாக இருக்கும் என்று நினைத்தார். பின், “ஏன் ஹஜ் செய்யவில்லை?” என்று அஹ்மதிடம் கேட்டார்.

“அது ஒரு பெரிய கதை” என்றார் அஹ்மது. “என்ன கதை” என்று மிஸ்ரி கேட்கவும் அஹ்மது சொன்னார்.

‘நான் ஹஜ்ஜுக்குப் போகவேண்டும் என்று என்று ரொம்ப காலமாக ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தேன். கடைசியில் ஹஜ்ஜு செய்வதற்கான பணம் சேர்வதற்கு எனக்கு நாற்பது வருஷங்களாகிவிட்டன. இந்த வருஷம்தான் ஹஜ்ஜு செய்யலாம் என்று நினைத்தேன். இதுதான் நாற்பதாவது வருஷம்.

‘இப்படி நான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது. பக்கத்துவீட்டுக்குப் போன என் மகன் திரும்பி வந்து அழுதான். ஏனென்று கேட்டேன். பக்கத்து வீட்டில் இறைச்சி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களாம். இவன் கொஞ்சம் கேட்டிருக்கிறான். அவர்கள் இவனுக்குத் தெரியாமல் என் மகனை விரட்டி விட்டார்கள். அதனால்தான் அழுதுகொண்டே என்னிடம் வந்து சொன்னான். ச்சே, என்ன மனிதர்கள். ஒரு சின்ன குழந்தைக்குக் கொஞ்சம்கூட கொடுக்காமல் இப்படி விரட்டி விட்டார்களே என்று வருத்தப்பட்டேன்.

‘என் வார்த்தைகளைக் கேட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் வந்தார். நாங்கள் கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் கொலை பட்டினியாக இருந்தோம். தெருவில் ஒரு செத்த ஆடு கிடந்தது. அதை எடுத்துவந்து அறுத்து சமைத்து சாப்பிட்டோம். அதைத்தான் உங்கள் மகன் கேட்டான். அந்தக் கறியை நாங்கள் சாப்பிடாவிட்டால் செத்துப் போயிருப்போம். அது எங்களுக்கு ஆகுமானது. ஏனெனில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் ஆட்டை சமைத்தோம். ஆனால் அது உங்கள் மகனுக்கு ஆகுமானதல்ல. அதனால்தான் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள்.

‘பக்கத்து வீட்டில் இப்படி பட்டினியாக இருக்கும்போது நான் ஹஜ் செய்வதா என்று நாற்பது ஆண்டுகளாக சேர்த்த பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்து பிழைத்துகொள்ளச் சொல்லிவிட்டேன். அதனால்தான் இந்த வருஷமும் என்னால் ஹஜ்ஜு செய்ய முடியவில்லை’ என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் துன்னூன் கதறி அழ ஆரம்பித்தார். செருப்பு வியாபாரி சொன்ன கதை அவரை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. துன்னூர் மிஸ்ரிக்கு ஒரு உண்மையை இறைவன் விளங்க வைத்தான். அது அவருக்கு ஹஜ் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. ஏன் அழுதார் என்று செருப்பு வியாபாரி அஹ்மதுக்கு வேண்டுமானால் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு நிச்சயம் புரியும்.
*
நன்றி : நாகூர் ரூமி

*

தொடர்புடைய ஒரு பதிவு : ஷிப்லி கதை – சூஃபி வழி