இமாம் சாஅதியின் குலிஸ்தானிலிருந்து…

ஆர்.பி.எம். கனி அவர்கள் எழுதிய ‘பாரஸீகப் பெருங் கவிஞர்கள்’ எனும் நூலிலிருந்து பகிர்கிறேன். இமாம் சாஅதி (Saadi Shirazi) பெரிய கிண்டல்காரர். ஒரு உதாரணம் : ஒரு பணக்காரனுடைய மகனுக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பாடஞ் சொல்லிக் கொடுத்தும் பயனற்றுப் போனது கண்ட ஆசிரியர், அந்த பணக்காரனிடம் வந்து சொன்னாராம் :”உங்கள் மகன் கொஞ்சமும் அறிவு பெறக் காணோம்; ஆனால் அவன் என்னைத்தான் முட்டாளாக்கி வருகிறான்” என்று. ‘ஆண்டு தோறும் உன் மனைவியைப் புதுப்பித்துக்கொள். சென்ற ஆண்டின் பஞ்சாங்கம் இந்த ஆண்டு உதவாது’ என்று சொன்னது கூட கிண்டல் பிரிவில்தான் வரும்! மற்ற தமாஷ்களை அப்புறம் பார்க்கலாம், நாம் அறிவுபெற இமாம் சொன்ன வேறொரு கதையை இங்கே தருகிறேன். அப்பப்ப ஆப்பமும் , மன்னிக்கவும், ஆன்மீகமும் இங்கே காட்ட வேண்டுமல்லவா? – AB-
*
குலிஸ்தான் :

749px-Sadi_and_the_youth_of_kashgar_Bukhara_1547தூக்கிலிடும்படி அரசனால் உத்தரவிடப்பட்ட அன்னிய நாட்டான் ஒருவன் தண்டனை விதித்த அரசனைத் தன் பாஷையில் திட்டினான்.

வேறு வழியற்ற மனிதன் தன் நாவை அசைப்பதும் நாயின் முன்னால் அகப்பட்டுக் கொண்டு தப்பமுடியாத பூனை நாயை எதிர்த்துப் பாய்வதும் இயற்கைதானே! தலையை வெட்டக் கத்தி வருகையிலே ஓடித் தப்பிக்கமுடியாதென்றால் கையானது கத்தியின் கூரிய முனையையும் பிடிக்க முயலும்.

அவன் என்ன கத்துகிறானென்று அரசன் கேட்டான். ஒரு மந்திரி சொன்னான்: “எஜமானே, கோபத்தையடக்கிப் பிறரை மன்னிப்போர்க்கே சுவர்க்கம் என்றும் கருணையாளரிடம் கடவுளும் அன்பு காட்டுவார் என்றும் அவன் சொல்கிறான்.”

அரசன் அந்த அன்னியன் மீது கருணைகாட்டி அவனை விடுதலை செய்ய உத்தரவிட்டான்.

அங்கிருந்த இன்னொரு மந்திரி சொன்னான்: “அரசரின் முன்னிருப்பவர்கள் பொய் சொல்வது சரியன்று; மதிப்புக்குரிய அரசரை இந்த அன்னியன் இழிவாகப் பேசினான்.”

இதைச் சொன்ன மந்திரியை அரசன் கோபத்தோடு நோக்கினான். அவன் சொன்னான் : “நீ சொன்ன உண்மையை விட அந்த மந்திரி சொன்ன பொய் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அது நல்லெணத்தோடு கூறப்பட்டது. இது கெட்ட உணர்ச்சியால் உண்டானது. சமாதானத்தை உண்டாக்கும் பொய், பூசலை உண்டாக்கும் மெய்யை விடச் சிறந்தது.”

தான் சொல்வதை அப்படியே கேட்கும் அரசனுக்கு மந்திரி எப்போதும் நல்லவற்றையே சொல்ல வேண்டும்.

*

குறிப்பு : ‘மகான் ஷைகு சாஅதி’ என்ற தலைப்பில், ஆர்.பி.எம். கனி அவர்களின் நூலை ‘நேஷனல் பப்ளிஷர்ஸ்’ (சென்னை) வெளியிட்டிருக்கிறார்கள் என்று அறிகிறேன். தொடர்பு கொள்க : 044-2834 3385 .
Image (Saadi Shirazi is welcomed by a youth from Kashgar during a forum inBukhara.) Source :  Eleanor Sims, from the Bibliotheca Bodmeriana, Geneva & wiki