என்ன உத்தரவாதம்? – கலீபா உமர் (ரலி)

எம். ஏ. ரஹ்மான் அவர்களின் இளம்பிறை (1972) இதழிலிருந்து ஒரு வரலாற்று நிகழ்வை  பதிவிடுகிறேன். கவனம் : இது பழைய சம்பவம். நீங்க பாட்டுக்கு வீரம் வந்து வீட்டம்மாவிடம் அப்படி சொல்லிவிடாதீர்கள். சோற்றில் உப்பு இருக்காது அப்புறம்!

***

Sword_of_Umar_ibn_al-Khittab-mohammad_adil_raisகலிபா உமரிடம் அவருடைய அன்பு மனைவி பாத்திமா வந்தார். “ஈத் பெருநாள் அண்மிக்கின்றது. பெருநாளுக்காகப் பிள்ளைகளுக்கு இரண்டு புதிய ஆடைகள் தைக்க வேண்டும்,” என்று கூறினார்.

“எனக்குத் தெரியும். அதற்காக நான் என்ன செய்வது?” என்று கலீபா கூறினார்.

“அமீர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் பெருநாளுக்காக மிகச் சிறப்பான ஆடைகளை அணிவார்கள். அப்பொழுது கலீபாவினுடைய பிள்ளைகள் தங்களுடைய அந்தஸ்துக்குப் பொருந்தக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாமா?”

“உன்னுடைய விருப்பத்தினை என்னாற் பூர்த்தி செய்ய இயலாமல் இருக்கின்றது. கலீபா என்ற என்னுடைய சேவைக்காக நான் நாளாந்தம் பெற்றுவரும் வேதனத்திலிருந்து புதிய ஆடைகள் வாங்க முடியாமல் இருக்கின்றதே.”

“அப்படியாயின் ஒரு வார வேதனத்தினை எனக்கு முற்பணமாகத் தாருங்கள். நான் அப்பணத்திலே புது ஆடைகள் வாங்கிய பின்னர், மிச்சம் பிடிப்பதின் மூலம் அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகின்றேன்”

“நான் இன்னும் ஒரு வாரம் உயிர் வாழுவேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரு வாரம் முடிவதற்கிடையில் மக்கள் என்னைப் பதவிவியிலிருந்து விரட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்களாலே திருப்பிச் செலுத்த இயலாத கடன்களைப் பெறுவதிலும் பார்க்க, ஆடம்பரத்தினை இழப்பது எவ்வளவோ மேலானது,”  – கலீபா உமர் மிக அமைதியாகவும் நிதானமாகவும் பதிலளித்தார்.