மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் தனிமை – சமுதாயம் பற்றிய விரிவுரைத் தொடரில், ‘சமுதாய நன்மைகள்’ என்ற நூலில் (1991இல்) வெளிவந்தது இந்தப் பகுதி, அவர்களின் ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற நூலில் (மூலம் : பக்தர்களின் பாதை – இமாம் கஸ்ஸாலி) , சற்று விரிவுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பிரசுரிக்கப்பட்டது – – வாசகர்களின் நன்மைக்காக. அதை இங்கே பகிர்கிறேன்.
முதலில் , அலி ரலியல்லாஹூ அன்ஹூவை (عَلِي ابْن أَبِي طَالِب ) மட்டும் இங்கே பகிரலாம் என்று நினைத்தேன். தண்டனை / மன்னிப்பு குறித்து அவர்கள் சொன்ன செய்தி அப்படி. இந்த வேர்ட்பிரஸ் பக்கங்களின் முக்கியமான 1000வது பதிவென்பதால் மற்ற ஆளுமைகளையும் சேர்த்திருக்கிறேன். இன்னொன்று : இணையத்தை நோக்கினால் பிறப்பு இறப்பு தேதிகளில் சில வித்தியாசம் தென்படுகிறது. ஹஜ்ரத் எழுதியதையே இறுதியாக இங்கே எடுத்துக்கொள்கிறேன்.
நகல் பிரியர்கள் இந்தப் பக்கத்தின் முகவரியையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படியே அஃப்சரா பதிப்பகத்திற்கு நன்றியும் சொல்லவும். நன்றி! – AB
அபூ ஹுரைரா
நபித் தோழரான இவரது முழுப் பெயர் அபூ ஹுரைரா தாவஸி யமனி. தமக்கு வேண்டியவர்களின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பூனைக் குட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். இதனால்தான் அவரை அபூ ஹுரைரா என்று மக்கள் அழைத்தார்கள். இதற்குப் பொருள் : பூனைக்குட்டியின் தந்தை.
இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னால் அப்து ஷம்ஸ் என்று அழைக்கப்பட்ட அவர் மக்களுக்குப் பணிபுரிந்து வாழ்ந்து வந்தார்.
ஹிஜ்ரி 7 கி.பி. 628 ஆம் ஆண்டு அவர் 30 வயதில் மதீனாவுக்கு வந்தார். இஸ்லாத்திற்கு வந்ததும் அவரது பெயர் அப்துல்லாஹ் என்று மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட புதிய பெயர் அப்துர் ரஹ்மான் என்பது சிலரது கருத்து.
‘திண்ணைத் தோழர்களில் மிக முக்கிய உறுப்பினரான அபூ ஹுரைரா வியக்கத்தகுந்த நினைவாற்றலைப் பெற்றிருந்தார். இதனால் பெருமானார் கூறிய ஹதீஸ்களில் எதையும் மறக்காமல் அவரால் பாதுகாக்க முடிந்தது. அவர் உலகத்திற்குக் கொடுத்த ஹதீஸ்கள் 3500.
இந்த எண்ணிக்கை ஸஹீஹ் புகாரியில் அடங்கியிருக்கிற மொத்த ஹதீஸ்களில் ஏறக்குறைய சரிபாதியாகும்.
இவ்வளவு அதிகமான ஹதீஸ்கள் வேறு எந்த நபித் தோழரிடமிருந்தும் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை.
பெரும்பாலான நேரங்களில் பெருமானாருக்கு எதிரில் உட்கார்ந்து, அவர்கள் சொன்ன செய்திகளை எல்லாம் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அவர், திமஷ்கைத் தலைநகராகக் கொண்டு முஆவியா ஆட்சி செய்தபோது, ஹிஜ்ரி 58/ கி.பி. 678 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். அப்போது அவரது வயது 78.
*
அபூதாலிப் மக்கி
இராக் நாட்டில் பிறந்த இவரது முழுப்பெயர் அபூதாலிப் முஹம்மது அலி இப்னு அதிய்யி என்பது இவரது தகப்பனாரின் பெயர். இதனால் இவர் அபூதாலிப் முஹம்மது இப்னு அலி இப்னு அதிய்யி என்றுஅழைக்கப்படுவதும் உண்டு.
ஞான மார்க்கத்திற்கு வெளிச்சம் காட்டுகிற நூல்கள் எழுதிய அறிஞர்களில் ஒருவரான இவர் தம் அறிவுப் பணியை மக்காவில் செய்த காரணத்தினால் அபூதாலிப் மக்கி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் எழுதிய ‘கூதுல் குலூப்’ – உள்ளங்களுக்கு உணவு என்ற நூல் அறிஞர்களுக்கே வழிகாட்டும் தகுதி படைத்தது.
இதனை ‘அல் – கூத்’ என்றும் இதன் ஆசிரியரை ‘ஸாஹிபுல் கூத்’ கூதுல் குலூபுக்கு உரியவர் என்றும் சுருக்கமாகக் குறிப்பிடுவதும் உண்டு.
இப்படிக் குறிப்பிடுகிறவர்களில் முஹம்மது ஹுஸைனி ஸுபைதி ஒருவராவார். இவர் இத்திஹாஃபுஸ் ஸாத்தில் முத்தகீன் பிஷரஹ் இஹ்யா உலூமித்தீன்’ என்ற பெயரில் ‘இஹ்யாவுக்கு 10 பாகங்கள் கொண்ட விரிவுரை ஒன்று எழுதியிருக்கிறார்.
கூதுல் குலூப் என்ற இந்நூல் இஹ்யாவைப் போலவே நான்கு பாகங்கள் கொண்டது; இஹ்யாவில் இருப்பது போன்ற அத்தியாய அமைப்புக் கொண்டது. இதனால் –
இமாம் கஸ்ஸாலிக்குப் பின்னால் தோன்றிய அறிஞர்களில் சிலர் கூதுல் குலூபை இஹ்யாவுக்கு முன்னோடி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இஹ்யாவுக்குப் பின்னர் இமாம் கஸ்ஸாலி எழுதிய ‘கீமியாயெ ஸஆதத்’ எனும் பாரசீக நூல் இஹ்யாவைப் போன்ற அமைப்புக் கொண்டிருந்தாலும் – முன்னதில் இடம் பெற்றிருக்கிற ஆழ்ந்த
கருத்துக்கள் பல பின்னதில் இடம் பெறவில்லை. இதேபோன்று –
கூதுல் குலூப் எனும் நூல் இஹ்யாவைப் போல் அமைந்திருந்தாலும் – அது இஹ்யாவை விடச் சிறியது.
இஹ்யாவைப் போல் உலகப் புகழ் பெறாவிட்டாலும் கூதுல் குலூபிலிருந்தும் அதன் ஆசிரியரான அபூதாலிப் மக்கியின் பேச்சிலிருந்தும் பல கருத்துக்களை இஹ்யாவில் இமாம் கஸ்ஸாலி எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
இமாம் கஸ்ஸாலியினால் பெரிதும் மதிக்கப்பட்ட அறிஞர்களில் அபூதாலிப் மக்கியும் ஒருவர்..
மக்களுக்கு ஞானப் போதனை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அவர் தம் வாணாளில் பெரும் பகுதியை மக்காவில் கழித்துவிட்டு இறுதியில் பக்தாதுக்குச் சென்றார். அங்கேயும் அவரது பணி தொடர்ந்தது. பள்ளிவாசலுக்கு வருகிறவர்களைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் அவர் ஓய்வின்றி அறிவுரை கூறினார் ; எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவங்களை எல்லாம் விளக்கிச் சொன்னார். இந்தக் கட்டத்தில் –
அவரது வாழ்வில் விரும்பத் தகாத திருப்பம் ஒன்று தோன்றிற்று. அவர் கூறிய கருத்துக்களில் சிலவற்றை மக்களில் சிலர் தப்பாகப் புரிந்து கொண்டார்கள். தாம் புரிந்து கொண்டது தான் அவரது கருத்து என்று பேசிக்கொண்டார்கள். இந்தப் பேச்சு, சட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தது.
இதன் இறுதி விளைவு என்ன?
உண்மையை உணர்த்திக் காட்டுகிற ஆசை கொண்ட எல்லா அறிஞர்களும் அனுபவித்த அதே விளைவை அவரும் அனுபவித்தார்: ‘அபூதாலிப் மக்கி முஸ்லிமல்ல!’ என்று தீர்ப்பு வழங்கிவிட்டது நீதிமன்றம்! இதனால் –
அவரது அறிவுரையைக் கேட்க வருகிறவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. நன்கு பழகியவர்கள்
கூட நாலாபுறமும் திரும்பிப் பார்த்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தான் இரண்டொரு வார்த்தை பேசினார்கள்.
மக்களுக்கு அறிவு புகட்டும் வாய்ப்பை அடியோடு இழந்துவிட்ட அவர் 6 ஜமாதுல் ஆகிர் 386 /2 ஜூலை 996 வியாழன் அன்று பக்தாதில் மரணமடைந்தார்.
*
அலி இப்னு அபீதாலிப்
நபித்தோழர்; பெருமானாரின் பெரிய தகப்பனாரான அபூதாலிபுக்கு மகனார், இதனால் பெருமானாருக்கு ஒன்று விட்ட சகோதரர். இவர்களுக்கு ‘அபூதுராப்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இது பெருமானார் அன்புடன் சூட்டிய பெயர்.
‘அறிவு எனும் நகரத்துக்கு நுழைவாசல்’ என்று பெருமானார் பிற்காலத்தில் பாராட்டிய அலி இப்னு அபீதாலிப் கி.பி. 598இல் கஅபாவில் பிறந்தார்கள். அப்போது பெருமானாருக்கு வயது 28.
சொந்தச் சிந்தனையும் எதற்கும் அஞ்சாத நெஞ்சமும் படைத்த அலியார் மிக முக்கியமான நபித் தோழர்களில் ஒருவர், பெருமானாரிடம் விளையாட்டாகப் பேசுகிற பேறு பெற்றவர், ‘இறைத்தூதரே! இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?” என்று அனுமதி கேட்டு மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்கிற தகுதி பெற்றவர்.
‘அஷரதுல் முபஷ்ஷரா’ என்று பெருமதிப்புடன் அழைக்கப்பட்ட பத்துப்பேரில் ஒருவரான அவர்கள் பாதிமா நாயகியைத் திருமணம் செய்து கொண்டதும் பெருமானாருக்கு மருமகன் ஆனார்கள். இதற்குப் பின்னர் அவர்களுக்கும் பெருமானாருக்குமுள்ள நெருக்கம் இன்னும் வலுவடைந்தது.
இஸ்லாமிய அரசின் மூன்றாம் கலீஃபாவான உஸ்மான் இப்னு அஃப்பான் கொலை செய்யப்பட்டதும் பல நபித் தோழர்கள் அந்த இடத்தில் அலியாரை அமர்த்தி விடுவதற்குப் பெருத்த முயற்சி எடுத்தார்கள். ஆனால் அலியார் மறுத்துவிட்டார்கள். என்றாலும் –
தலைமை இல்லாத ஒரு சூழலைத் தவிர்க்கும் எண்ணம் கொண்ட அலியார் ஐந்து நாட்களுக்குப் பின்னர் தம் ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.
25 துல்ஹஜ் 35 / 27 ஜூன் 656 திங்கட்கிழமை அன்று மஸ்ஜித் நபவியில் பலர் முன்னிலையில் இந்தப் பொறுப்பு அலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் நான்காம் கலீஃபாவாகப் பணியாற்றி வந்தார்கள்.
இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களில் நபித் தோழர் முஆவியாவுக்கு முதலிடம் உண்டு. மதீனாவில் அலியாரின் ஆட்சியை எதிர்த்து திமஷ்கிலிருந்து முஆவியா போர்க்கொடி தூக்கினார். இதனால் இருவருக்கும் நடந்த யுத்தம் ஃபுராத் நதிக்குப் பக்கத்தில் ஸிஃப்பீன் என்ற இடத்தில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை நீடித்தது.
ஹிஜ்ரி 37 கி.பி. 657இல் நடந்த இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி அலியாருக்குத்தான் கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட முஆவியா போர்க்கொடியைக் கீழே போட்டுவிட்டுச் சமாதானக் கொடியைத் தூக்கினார்.
முஆவியாவின் பிரதிநிதியாக அம்ர் பின் ஆஸம் அலியாரின் பிரதிநிதியாக அபூமூஸா அஷ்அரியும் இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்கள். அம்ர் பின் ஆஸ் ராஜதந்திரத்தில் அபூமூஸாவை விடச் சிறந்தவர். சில ஷரத்துகள் அடங்கிய இந்தச் சமாதான ஏற்பாட்டுக்கு –
அலி இப்னு அபீதாலிப் ஒப்புதல் கொடுத்தது தமக்குப் பிடிக்காததால் அவர்களது படையிலிருந்து 4000 பேர் வெளியேறிச் சென்று புதியதோர் இயக்கமாகச் செயல்பட்டார்கள். இவர்கள் தம்மை ‘காரிஜியா’ என்று சொல்லிக் கொண்டார்கள். வெளியேறியவர்களின் இயக்கம் என்பது இதன் பொருள்.
முஆவியா , அம்ர் பின் ஆஸ், அலியார் ஆகிய மூவரும் இஸ்லாமிய அரசியலுக்குக் களங்கம் கற்பிப்பதாகத்
தீர்மானித்துக் கொண்ட அவர்கள் இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் கொன்றுவிடுகிற திட்டத்தை மனத்தில் வைத்துக் கொண்டு பொருத்தமான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதற்கிடையில் –
இங்கே விரித்துக் கூறமுடியாத பல காரணங்களினால் அலி இப்னு அபீதாலிப் மதீனாவைவிட்டு இராக் நாட்டிற்குச் சென்று கூஃபா எனும் நகரத்திலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.
கூஃபாவைத் தலைநகராகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆட்சி அதிகநாள் நீடிக்கவில்லை.
திமஷ்கில் ஆளுனராக இருந்த முஆவியா, கூஃபாவில் கலீஃபாவாக இருந்த அலியார், அம்ர் பின் ஆஸ் ஆகிய மூவரையும் கொல்கிற திட்டத்துடன் மூன்று காரிஜிகள் அங்கங்கே சென்றார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜம் ஸாரிமி அவர்களில் ஒருவன். குறுகலான பாதை ஒன்றில் காத்திருந்த அவன் –
17 ரமலான் 40 வெள்ளிக்கிழமை அன்று ஃபஜ்ர் தொழுகையை நடத்தி வைப்பதற்காக கூஃபாவின் பள்ளிவாசலில் நுழைந்த அலியாரை நச்சேற்றிய வாளினால் நெற்றியில் பலமாகத் தாக்கினான் !
“ஆட்சி இறைவனுடையது. உமக்கோ உமது நண்பர்களுக்கோ அது உரியது அல்ல” என்று ஆவேசமாகக் கத்தினான். அவனைத் தப்பவிடாமல் பள்ளிவாசலில் இருந்தவர்கள் பிடித்து வைத்தார்கள்.
காரிஜிகள் கொல்லத் தீர்மானித்த மற்ற இருவரில் ஒருவர் சிறிய காயத்துடன் தப்பியோடிவிட்டார். அடுத்தவர் அன்று பள்ளிவாசலுக்கு வரவே இல்லை. இதனால் –
மூன்று பேரையும் பள்ளிவாசலில் கொல்லத் தீர்மானித்துப் புறப்பட்ட காரிஜ்கள் தம் திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோல்வியடைந்தார்கள். வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கு வெற்றியடைந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஆழமான நெற்றிக் காயத்துடன் தளர்ந்து போய்ப் படுத்திருந்த அலியார் தமது வாரிசுகளுக்குக் கொடுத்த அறிவுரை – அல்லது எச்சரிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
”… கொலை நோக்கத்துடன் நான் வன்மையாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து நான் பிழைத்துக் கொள்வேனா – இல்லை, இறந்துவிடுவேனா? நான் பிழைத்துக் கொண்டாலும் இறந்துவிட்டாலும் இப்னு முல்ஜம் குற்றவாளிதான். இதனால் அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு வருகிறது.
”இன்றைய நாளையேனும் என்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று தெரியாத நிலைமையிலிருக்கிற நான் அவனைத் தண்டிக்க முடியாது. எனவே என் உரிமையை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.
”நன்கு சிந்தனை செய்து பார்த்து முடிவெடுங்கள். அவனை தண்டித்துத்தான் ஆக வேண்டுமா என்று அமைதியோடு நினைத்துப் பாருங்கள். அவனை மன்னித்து விடுகிற மனப்பக்குவம் உங்களுக்குக் கிடையாது என்றால் அவனுக்குத் தண்டனை கொடுங்கள். ஆனால் –
”அவன் என்னை எப்படிக் காயப்படுத்தினானோ அப்படித்தான் நீங்கள் அவனைக் காயப்படுத்த வேண்டும். சிறிதளவும் வரம்பை தாண்டிவிடக் கூடாது. சினத்தின் தூண்டுதலால் அவனைக் கட்டி வைத்து சித்திரவதை செய்து விடாதீர்கள். ‘பிறரைக் கடித்துக் குதறுகிற வெறிப்பிடித்த நாயைக்கூடச் சித்திரவதை செய்யக் கூடாது’ என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள்.
”ஒரு செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் : இப்னு முல்ஜமுக்குத் தண்டனை கொடுப்பது – நடந்த ஒன்றை நடக்காத ஒன்றாக மாற்றிவிடாது!
”மிகுந்த சிரமத்துடன் நீண்டநேரம் நான் பேசிவிட்டேன். இப்போது நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் –
”அது உரிமைதானே தவிர, கடமை அல்ல! எனவே அவனை மன்னித்து விடுதலை அளிக்கிறேன். நான் இறந்து விட்டால், எங்கள் தலைவர் கொலை செய்யப்பட்டு விட்டார்!’ என்று குரல் எழுப்புவதன் மூலம் புதியதொரு ரத்தக் களரியை உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை மன்னித்து விடுங்கள். பிறருக்குத் தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை இறைவன் மன்னித்தருள்வான்!”
ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த அந்தக் கலங்கரைத் தீபம் படுகாயமுற்ற மூன்று நாட்களுக்குப் பின்னர் 21 ரமலான் 401 பிப்ரவரி 661 அன்று அணைந்தது !
அப்போது அவர்களின் வயது சூரிய வருடக் கணக்குப்படி 63.
அலியார் கலீஃபாவாகச் செயல்பட்ட காலம் ஹிஜ்ரி வருடக் கணக்குப்படி 4 ஆண்டு 8 மாதம் 24 நாட்கள்.
ஹஸன், ஹுஸைன், ஸைனப் ஆகியோர் அலியாருக்கும் பாதிமா நாயகிக்கும் பிறந்தவர்கள். இவர்களுக்குப் பிறந்த முஹ்ஸின் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டது. பாதிமா நாயகி இறந்தபிறகு அலியாருக்கும் கவ்லாவுக்கும் பிறந்தவர் முஹம்மது இப்னு ஹனஃபியா.
தளபதி அஷ்தர் நக்யீ, ஹஸனார், முஆவியா போன்றவர் களுக்கு அலியார் எழுதிய கடிதங்கள் எண்ணற்றவை.
இறைஞானம், இல்லறம், அரசியல் நிர்வாகம், வாழ்க்கைத் தத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு அவை விளக்கம் கொடுக்கின்றன.
அவர்கள் எழுதிய ‘நஹ்ஜுல் பலாகா’ எனும் நூல் அரியதோர் இலக்கியம் என்று அறிஞர்களால் பாராட்டப் படுகிறது.
அலி இப்னு அபீதாலிப், பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் பற்றித் தெரிவித்த செய்திகள் – ஹதீஸ்கள் 586. இவற்றில் 29 ஹதீஸ்கள் ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றிருக்கின்றன. ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கிற ஹதீஸ்கள் 35. புகாரியும் முஸ்லிமும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்ட ஹதீஸ்கள் 20.
அலியார் அறிவித்த ஹதீஸ்கள் — ஹஸன், ஹுஸைன், முஹம்மது இப்னு ஹனஃபியா, இப்னு மஸ்ஊது , இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அபூமூஸா அஷ்அரி, இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர் முதலானவர்களின் வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
*
இப்னு அப்பாஸ்
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பது முழுப்பெயர். என்றாலும் பெரும்பான்மையாக இவர் இப்னு அப்பாஸ் என்று தான் அழைக்கப்படுகிறார்.
கி.பி. 619 இல் மக்காவில் பிறந்த இவர், பெருமானாரின் பெரிய தகப்பனாரான அப்பாஸின் மகனார். பெருமானாருக்கும் அலியாருக்கும் உள்ள அதே உறவுமுறை இப்னு அப்பாஸ்க்கும் உண்டு.
மக்காவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உச்சக் கட்டத்தைத் தொட்டிருந்த நேரத்தில், பெருமானாரின் ‘ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த இப்னு அப்பாஸ் –
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் என்றும் அபுல் ஃபஸ்ல் என்றும் அழைக்கப்பட்ட தம் தந்தையாருக்கு முன்பே இஸ்லாத்திற்கு வந்துவிட்டார்.
ஹிஜ்ரி 37 | கி.பி. 657 இல் முஆவியாவுக்கும் அலியாருக்கும் நடந்த ஸிஃப்பீன் யுத்தத்தில் முன்னவரின் பிரதிநிதியாக அம்ர் பின் ஆஸ்ம் பின்னவரின் பிரதிநிதியாக அபூ மூஸா அஷ் அரியும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தப் பொறுப்புக்கு இப்னு அப்பாஸைத்தான் அலியார் ‘தேர்ந்தெடுத்தார்கள்’ என்றாலும் முக்கியமான சிலரது வற்புறுத்தல் அலியாரைத் தம் விருப்பத்திற்கு மாறாக நடக்கவைத்து விட்டது
அவர்களின் விருப்பப்படி இப்னு அப்பாஸிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால் –
”.. காரிஜியா என்ற ஒரு பிரிவு தோன்றியிருக்காது; அலி இப்னு அபீதாலிபுக்கு இப்படிப்பட்ட மரணம் ஏற்பட்டிருக்காது. அத்துடன் இஸ்லாமிய அரசியல் வரலாறு வேறுவிதமாக அமைந்திருக்கும்!” என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அழுத்தத்துடன் கூறுகிறார்கள்.
உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இளம் வயதிலேயே பெற்றிருந்த இப்னு அப்பாஸ் தம் நண்பர்களிடம் கேட்டுக் கேட்டுப் பெருமானாரைப் பற்றிய செய்திகளையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.
திருக்குர்ஆனின் வசனங்களுக்கு அவர் கொடுத்த விளக்கங்கள் தேர்ச்சிமிக்க அறிஞர்களையே திகைக்க வைத்தன.
இளைஞராக இருந்த காலத்திலேயே அவர் ஓர் அறிஞராகக் கருதப்பட்டார். தெரிந்துகொள்கிற ஆசை
யுள்ளவர்கள் எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் தெளிவாக விடையளித்தார். சட்டப் பிரச்சினையில் சிக்கித் தடுமாறியவர் களுக்கு விளக்கம் கொடுத்து வழிகாட்டினார்.
தாம் கேட்டும் சிந்தித்தும் அறிந்த செய்திகளை எல்லாம் மனத்தில் பதித்து வைத்திருந்த அவர் ஏராளமான செய்திகளை எழுதியும் வைத்திருந்தார். சுல்தானுல் முஃபஸ்ஸிரின் – திருக் குர்ஆனின் விரிவுரையாளர்களுக்கு அரசர் என்று பாராட்டப்பட்ட இப்னு அப்பாஸ் –
மக்காவில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு முறையான அமைப்புக் கொடுத்த முதல் மனிதர்.
மார்க்கச் சட்டங்கள் குறித்து அவர் நிகழ்த்திய விவாதங்களும் கொடுத்த விளக்கங்களும் எண்ணற்றவை. சட்டப் பிரச்சினைகளில் அவர் கண்ட அற்புதமான முடிவுகள் அபூபக்ர் முஹம்மது மூஸா என்பவரால் 20 பாகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
‘பஹ்ருல் இல்ம் ‘ – அறிவுக் கடல் எனச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ஹிஜ்ரி 68 கி.பி. 688 இல் தாயிஃபில் மரணமடைந்தார். அப்போது அவரது வயது ஹிஜ்ரி வருடக் கணக்குப்படி 71 – கி.பி. வருடக் கணக்குப்படி 69.
*
இப்னு மஸ்ஊத்
இயற்பெயர் அப்துல்லாஹ் – ‘மஸ்ஊத் என்பது தந்தையின் பெயர். இவர் பெரும்பான்மையாக இப்னு மஸ்ஊத் என்றுதான் அழைக்கப்படுகிறார். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதுக்கு அபூ அப்திர் ரஹ்மான் என்றும் ஒரு பெயர் உண்டு.
இளைஞராக இருந்தபோது உக்பா இப்னு அபீமுஐத் என்பவரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இப்னு மஸ்ஊத், ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சிலரில் ஒருவர்.
‘அன ஸாதிஸஸ் ஸித்தா’ என்று அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வது அவரது வழக்கம். ஆறுபேரில் – ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்த ஆறு பேரில் நான் ஆறாவது என்பது இதன் பொருள்.
மறுமையில் சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று பெருமானாரினால் முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டவர்களில் இவர் ஒருவர். ஆனால் அஷரதுல் முபஷ்ஷரா என்று அழைக்கப்பட்ட பத்துப் பேர்களில் இவர் ஒருவர் அல்ல.
அபூபக்ர் ஸித்தீக், உமர் பின் கத்தாப், உஸ்மான் பின் அஃப்பான், அலி இப்னு அபீதாலிப், தல்ஹா பின் உபைதில்லாஹ், ஸ்பைர் பின் அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அஃவ்ப், ஸஅது பின் அபீவக்காஸ், சயீது பின் ஸைது, அபூ உபைதா பின் ஜர்ராஹ் ஆகிய 10 நபித் தோழர்கள் தான் ‘அஷர்துல் முபஷ்ஷரா’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இஸ்லாத்தைத் தழுவியதால் மக்காவாசிகளால் மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்ட இப்னு மஸ்ஊத் பெருமானாரின் நம்பிக்கைக்கும் அவர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்த கலீஃபாக்களின் நம்பிக்கைக்கும் உரித்தானவர்.
இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னு கத்தாப் – ‘பைதுல் மால்’ எனப்படுகிற பொதுக் கஜானாவை நிர்வாகம் செய்கிற பொறுப்பையும் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிற பொறுப்பையும் ஒப்படைத்து இப்னு மஸ்ஊதைக் கூஃபா நகரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
பெருமானாரைப் பற்றிய செய்திகளையும் அவர்களின் வாக்குகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர் நடந்து கொண்டார்.
திருக்குர்ஆன் பற்றிய ஆழமான அறிவும் இறைவன் பற்றிய அழுத்தமான உணர்வும் கொண்ட அவர் திருக்குர்ஆனின் வசனங்களை மக்காவில் பகிரங்கமாக ஒதிக் காட்டிய முதல் மனிதர்!
மக்காவாசிகளின் கொடுமைகளினால் அபிஸீனியாவுக்குச் சென்ற சிறிய குழுவில் ஒருவரான இப்னு மஸ்ஊத் தம் கொள்கையில் இறுக்கமான பிடிப்புக் கொண்டவர்; மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிமை பெற்றவர்.
இவர் உலகத்திற்கு அறிவித்த ஹதீஸ்கள் 848. இவை, இப்னு ஹன்பல் என்று அழைக்கப்படுகிற இமாம் அஹ்மது இப்னு முஹம்மது தொகுத்த ‘முஸ்னது’ என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
பத்ர் யுத்தம் உட்பட பல யுத்தங்களில் பங்கெடுத்துப் போரிட்ட இப்னு மஸ்ஊத் ஹிஜ்ரி 32 கி.பி. 653இல் மதீனாவில் 70 வயதில் மரணமடைந்தார்.
பிரேதப் பிரார்த்தனையை இஸ்லாமியக் குடியரசின் மூன்றாம் கலீஃபாவான உஸ்மான் இப்னு அஃப்பான் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்.
*
இமாம் ஷாஃபி
அபூ அப்தில்லாஹ் என்பது இயற்பெயர். தகப்பனாரின் பெயர் இத்ரீஸ். ஷாஃபியி என்பது குடும்பப் பெயர். இதனால் இமாம் அவர்களும் அவர்களின் தந்தையாரும் முறையே அபூ அப்தில்லாஹ் ஷாஃபி என்றும் இத்ரீஸ் ஷாஃபி என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஷாஃபியி எனும் வார்த்தை நடைமுறையில் ஷாஃபி என்று சொல்லப்படுகிறது.
பாலஸ்தீனத்தில் காஸா என்ற ஊரில் ஹிஜ்ரி 150 கி.பி. 767 இல் பிறந்த இமாம் ஷாஃபி மக்காவில் வளர்க்கப் பட்டார்கள். மிக இளம் வயதிலேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்துவிட்ட இமாம் ஷாஃபி –
முஸ்லிம் ஸந்தி, சுஃப்யான் இப்னு உயைனா போன்றவர்களிடம் ஹதீஸ் – சட்டம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார்கள்.
அறிவுத்தாகம் கொண்ட அவர்கள் இந்த ஆசான்களைத் தவிர்த்து இன்னும் பலரிடம் பாடம் படித்திருக்கிறார்கள். அவர்கள் கல்வி பயின்ற ஆசான்களின் நீண்ட பட்டியல் ஒன்றை ‘தாரீக் பக்தாத்’ என்ற நூலில் கதீப் பக்தாதி குறிப்பிட்டிருக்கிறார்.
இளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இமாமவர்கள் 20 வயதில் மதீனாவுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து இமாம் மாலிக் இப்னு அனஸிடம் கல்வி கற்றார்கள்.
பின்னவரின் நூலான ‘முவத்தா’ என்ற ஹதீஸ் தொகுப்பு முழுவதையும் மனப்பாடமாக வைத்திருந்த இமாம் ஷாஃபி ஹிஜ்ரி 179 கி.பி. 795 இல் இமாம் மாலிக் இறந்த பின்னர் யமன் நாட்டிற்குச் சென்று பொறுப்பானதொரு பதவியில் அமர்ந்தார்கள். அது –
அபூ அப்பாஸ் சஃப்பாஹை முதல் கலீஃபாவாகக் கொண்டு ஹிஜ்ரி 132 (கி.பி. 750இல் தொடங்கிய அப்பாஸிய அரசில் ஐந்தாம் கலீஃபாவாக வந்த ஹாரூன் ரஷீத் பக்தாதி லிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் –
இமாம் ஷாஃபியும் வேறு சிலரும் ஒரு குற்றச் சாட்டின் மீது கைது செய்யப்பட்டு ஹாரூன் ரஷீதிடம் கொண்டு வரப்பட்டார்கள். இந்தக் கட்டத்தில்தான் –
சட்டமேதை ஹனஃபி முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானியின் தொடர்பும் நெருக்கமும் இமாமவர்களுக்குக் கிடைத்தன. இவர் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்; புகழ்பெற்ற அறிஞர்; இமாம் அபூஹனீபாவுக்கு மாணவர்; இமாம் ஷாஃபியின் ஆசான்களில் ஒருவர்.
சிறையில் வைக்கப்பட்டிருந்த இமாமவர்களை முறையான விசாரணைக்குப் பின்னர் ஹாரூன் ரஷீத் மன்னித்து அனுப்பி வைத்தார்! சில மாதங்கள் பக்தாதில் தங்கியிருந்த இமாமவர்கள் –
ஹிஜ்ரி 188 கி.பி. 804இல் எகிப்துக்குச் சென்றார்கள்; இமாம் மாலிக் இப்னு அன்ஸின் மாணவர் என்ற முறையில் மிகுந்த மரியாதையைப் பெற்றார்கள். அங்கே ஆறு ஆண்டுகள் தங்கிவிட்டு ஹிஜ்ரி 194 / கி.பி. 810இல் பக்தாதுக்குத் திரும்பி வந்து ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜ்ரி 1987 கி.பி. 814 இல் மீண்டும் எகிப்துக்குச் சென்ற இமாம் ஷாஃபி அங்கே அதிகக் காலம் தங்காமல் மக்காவுக்குத் திரும்பி வந்தார்கள்; கலீஃபா ஹாரூன் ரஷீதினால் மக்காவின் ‘முஃப்தி’யாக நியமிக்கப்பட்டார்கள்.
மக்காவில் தமக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை ஸஃபர் மாதம் 203 ஆகஸ்ட் மாதம் 818இல் ‘வக்ஃபாக எழுதி வைத்தார்கள்; ஃபுஸ்தாதில் இருந்த ஒரு வீட்டை ஷஅபான் 203 / பிப்ரவரி 819இல் எழுதி வைத்தார்கள்.
திருக்குர்ஆன், ஹதீஸ், நபித்தோழர்களின் ஒருமித்த கருத்து, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் வகுத்த சட்ட திட்டங்களின் தொகுப்பு, ‘ஷாஃபி மத்ஹப்’ என்று அழைக்கப்படுகிறது.
‘கிதாபுல் உம்மு’, ‘அல் உஸ்ல் ‘, ‘ரிஸாலா’, ‘சுனன்’, ‘முஸ்னத்’ ஆகியவை இமாம் ஷாஃபியின் நூல்களில் குறிப்பிடத் தகுந்தவை.
இவற்றில் முந்தியது நூல் வடிவில் எழுதப்பட்ட ஒன்றல்ல. இமாமவர்களின் சொற்பொழிவுகள், அறிவுரைகள், விவாதங்கள் முதலானவற்றின் தொகுப்புக்கு கிதாபுல் உம்மு என்று பெயர் கொடுக்கப்பட்டது.
அல் உஸுல் என்ற நூல், சட்டம் எப்படி இயற்றுவது என்பதை விளக்குகிற சட்ட நுணுக்கம் பற்றியது.
மற்ற நூல்கள் – ஹதீஸ்களும் சட்டங்களும் அடங்கிய தொகுப்புகள்.
இறுதியாக ஹஜ்ரி 200 கி.பி. 815 இல் எகிப்துக்குச் சென்ற இமாம் ஷாஃபி 30 ரஜப் 204 24 ஜனவரி 820 இல் ஃபுஸ்தாத் என்ற ஊரில் மரணமடைந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு வயது 54.
*
இமாம் புகாரி
இயற்பெயர் முஹம்மது. தந்தையின் பெயர் இஸ்மாயில் அபூ அப்தில்லாஹ் ஜுஅஃபி.
புகாரா என்ற ஊரில் 13 ஷவ்வால் 194/23 ஜூலை 810இல் பிறந்த அவர் பொதுவாக இமாம் புகாரி என்று அழைக்கப்படுகிறார்.
ஹதீஸ் பற்றிய ஆராய்ச்சியை 11 வயதிலேயே துவக்கிவிட்ட அவர் 16 வயதில் ஹஜ்ஜுக்குச் சென்றார்.
பெருமானார் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரிக்கும் குறிக்கோள் கொண்ட அவர் – மக்காவிலும் மதீனாவிலும் மிகப் பிரசித்தமான அறிஞர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளை எல்லாம் கவனித்துக் கேட்டு மனத்தில் பதித்துக் கொண்டார். அப்புறம் –
எகிப்துக்குச் சென்ற அவர் அடுத்த 16 ஆண்டுகள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெருமானாரின் வாக்குகளைத் திரட்டினார்; ‘அறிவின் பிறப்பிடம்’ என்று பெயர் பெற்ற பஸ்ராவில் மட்டும் 5 ஆண்டுகள் தங்கினார்.
‘ஜாமிவு ஸஹீஹ்’ என்ற பெயரில் அவர் தொகுத்த நூல் பிற்காலத்து அறிஞர்களால் ‘திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக மிகவும் ஆதாரப்பூர்வமானது’ என்று பாராட்டப்பட்டது. நடைமுறையில் ‘ஸஹீஹ் புகாரி’ – புகாரியின் ஸஹீஹ் என்று குறிக்கப்படுகிற இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற ஹதீஸ்கள் 7068.
தாரீகுல் கபீர்’, ‘குர்ரதுல் அய்னைன்’ முதலானவை இமாம் புகாரி எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
ஹதீஸ்களுக்கு மிகச் சிறந்த தொகுப்பு ஒன்றை உலகத்திற்குக் கொடுத்த இமாம் புகாரி 30 ரமலான் 256 5 செப்டம்பர் 870 அன்று புகாராவில் மரணமடைந்தார்.
*
ஹஸன் பஸ்ரி
அபூ சயீத் என்றும் ஹஸன் என்றும் பஸ்ராவாசிகளால் அழைக்கப்பட்ட இவர் சில நேரங்களில் ஹஸன் என்று தம்மைத் தாமே குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. இவரது தந்தையின் பெயர் யஸார்.
ஹிஜ்ரி முதல் நூற்றாண்டில் பெரிதும் பிரபலமடைந்தவர் களில் ஒருவரான இவர் ஹிஜ்ரி 21 கி.பி. 642இல் மதீனாவில் பெருமானாரின் மனைவிகளில் ஒருவரான உம்மு சலாமாவின் வீட்டில் பிறந்தார்; அவரது தாயார் அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தார்! இதனால் –
பக்தியும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சூழலில் ஹஸன் பஸ்ரி வளர்க்கப்பட்டார். பின்னால் அவருக்கு ஏற்பட்ட ஆத்மிக வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவி செய்தது.
21 வயதில் திருமணம் செய்து கொண்டு பஸ்ராவில் தங்கிவிட்ட அவர் மக்களின் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிமை பெற்றார்; ஹதீஸ்களை எடுத்துக் கூறுகிறவர்களில் பெரிதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்ற பாராட்டை அடைந்தார். நபித் தோழர்களில் பலரை அவர் சந்தித்திருக்கிறார் என்பதுதான் இதற்குக் காரணம்..
பெருமானாரை ஹஸன் பஸ்ரி சந்தித்ததில்லை என்றாலும் – உஸ்மான் இப்னு அஃப்பான், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் போன்ற நபித் தோழர்கள் பலரை நேரில் கண்டு உரையாடியிருக்கிறார்; அறிவுரை பெற்றிருக்கிறார்.
மதீனாவில் பிறந்திருந்தாலும் அவரது ஞானப் போதனைகள் அனைத்தும் பஸ்ராவிலேயே நடந்து கொண்டிருந்தன. இதனால் தான் அவரை மக்கள் ‘ஹஸன் பஸ்ரி’ என்று அழைத்தார்கள். பஸ்ரி என்ற சொல்லுக்கு பஸ்ராவைச் சேர்ந்தவர் என்பது பொருள்.
சூஃபித் தத்துவத்தில் மிகுந்த பற்றுதல் கொண்ட ஹஸன் பஸ்ரியின் சொல்வாக்கு விரைவில் எங்கும் பரவிற்று. அவர் உதிர்த்த வாழ்க்கைத் தத்துவங்கள் எண்ணற்றவை. பஸ்ராவில் மட்டுமல்லாமல் பஸ்ராவுக்கு வெளியிலும் அவரது புகழ் பரவிற்று.
பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்ட நபித் தோழர்களில் 70 பேரைச் சந்தித்து உரையாடிப் பெருமானாரைப் பற்றித் தெரிந்து கொண்ட ஹஸன் பஸ்ரி 1 ரஜப் 110 / 13 அக்டோபர் 728இல் மரணமடைந்தபோது பஸ்ராவாசிகள் எல்லாரும் திரண்டு வந்துவிட்டார்கள்.
அப்போது அவரது வயது 89.
*
ஹாதமுல் அஸம்
ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் – கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலை சிறந்த ஞானிகளில் ஒருவரான இவரது இயற்பெயர் அபூ அப்திர் ரஹ்மான் ஹாதம். அலவான் அஸம் என்பது தந்தையின் பெயர். ” பக்தாதில் அப்பாஸிய ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் ‘பல்க்’ என்ற ஊரில் பிறந்த இவர் ஞானத்துறையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்.
அவர் பக்தாதுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து அஹ்மது இப்னு ஹஸ்ரவைஹியின் ஆசானாகிய ஷகீக் பல்கியைச் சந்தித்துக் கல்வி பயின்றார்.
ஆத்மிகத் துறைக்கு மிகப்பெரும் சேவை செய்த ஹாதம் சிறிதும் அயர்வின்றி மக்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
இவரது கருத்துக்களை இஹ்யாவில் பல இடங்களில் இமாம் கஸ்ஸாலி எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
தெளிவான கண்ணோட்டமும் மக்களுக்கு அறிவு புகட்டுகிற நோக்கமும் கொண்டு வாழ்ந்த ஹாதமுல் அஸம் ஹிஜ்ரி 237 கி. பி. 852இல் இறந்து வாஷ்ஜர்த் என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
*
ஹுதைஃபா
தந்தையின் பெயர் ஹுஸைல் யமான். இதனால் இவரது முழுப் பெயர் ஹுதைஃபா இப்னு ஹுஸைல் யமான் என்று மாறிற்று. இருந்தாலும் ஹதைஃபா என்றுதான் இவர் பொதுவாக அழைக்கப்படுகிறார்.
பெருமானாரின் நம்பிக்கைக்குரிய நபித்தோழர்களில் இவர் ஒருவர். மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாத பல செய்திகளை – ரகசியங்களைப் பெருமானார் ஹுதைஃபா வுக்குத் தெரிவித்தார்கள். இதனால் அவருக்கு ‘ஸாஹிபுல் அஸ்ரார்’ – ரகசியங்களுக்கு உரியவர் என்று மற்ற நபித் தோழர்கள் பெயர் கொடுத்தார்கள்.
பெருமானாருக்கு எதிரில் மரியாதையோடு உட்கார்ந்திருந் தவர்களில் எத்தனைபேர் – யார் யார் நயவஞ்சகர்கள் என்ற செய்தியைக்கூட அவர் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நபித் தோழர்களிடையே அவருக்குப் பெருத்த மரியாதை இருந்தது.
உமர் இப்னு கத்தாப், அலி இப்னு அபீதாலிப், அபூதர்தா போன்ற நபித் தோழர்கள் ஹுதைஃபா அறிவித்த ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்குத் தெரிவித்தார்கள்.
பெருமானாரின் பேரன்புக்குப் பாத்திரமான ஹுதைஃபா ஹிஜ்ரி 36 கி.பி. 656இல் மதீனாவில் மரணமடைந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
*
சஅது இப்னு அபீ வக்காஸ்
பெருமானாருக்குப் பெரிதும் நெருக்கமான நபித் தோழர்களில் ஒருவர்; அபூபக்ர் ஸித்தீக் இஸ்லாத்திற்கு வந்த அதே நாளில் பெருமானாரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தைத் தழுவியவர்; ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிகச் சிலரில் ஒருவர்; மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார் முன்னறிவிப்புக் கொடுத்த பத்துப் பேரில் ஒருவர்.
உமர் இப்னு கத்தாப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 | கி.பி. 637இல் பாரசீகத்துக்கு எதிராக நடந்த காதிஸியா யுத்தத்தில் தளபதியாகப் பணியாற்றிய சஅது இப்னு அபீ வக்காஸ் ஹிஜ்ரி 17 | கி.பி. 638இல் கூஃபா நகரத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
கூஃபாவின் முதல் ஆளுனராக நியமிக்கப்பட்ட சஅது ஹிஜ்ரி 21 கி.பி. 642 வரை சிறப்பாகச் செயலாற்றினார்.
இஸ்லாமியக் குடியரசின் இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னு கத்தாப் ஹிஜ்ரி 23 / கி.பி. 644இல் இறந்ததும் அந்தப் பதவிக்கு உஸ்மான் இப்னு அஃப்பான் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இப்படித் தேர்ந்தெடுத்த நபித் தோழர்களில் சஅதும் ஒருவராவார்.
13 வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு –
பெருமானார் நடத்திய பெரும்பாலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு –
முக்கியமான நபித் தோழர்களின் கண்ணியத்தைத் தமதாக்கிக் கொண்டு வாழ்ந்த சஅது இப்னு அபீ வக்காஸ் முஹர்ரம் 55 /டிஸம்பர் 674இல் மரணமடைந்தார்.
*
சஹ்ல் துஸ்தரி
இயற்பெயர் அபூ முஹம்மது சஹ்ல். தந்தையின் பெயர் அப்துல்லாஹ். ஈரான் நாட்டில் இப்போது ‘அஹ்வாஸ்’ என்று அழைக்கப்படுகிற துஸ்தர் என்ற ஊரில் ஹிஜ்ரி 203/கி.பி.818இல் சஹ்ல் துஸ்தரி பிறந்தார்.
சுன்னத் ஜமாஅத்தில் அழுத்தமான கொள்கைப் பிடிப்புள்ள சஹ்ல் ஞானமார்க்கத்தில் பெருத்த ஆர்வம் கொண்டவர். கடினமான கட்டுப்பாடுகளுக்குத் தம்மை உட்படுத்திக் கொண்டு ஒழுக்கம் சிதையாமல் வாழ்ந்த அவர் இப்னு சவ்வார் என்ற அறிஞரை ஆசானாகக் கொண்டவர்.
ஞானி மன்சூர் ஹல்லாஜுக்கு ஆசானாக இருந்த சஹ்ல் புரட்சிகரமான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டார். மூலத் தத்துவ அறிஞர்களின் பேச்சைப் போல் அவரது பேச்சு அமைந்திருந்தது.
அறிஞர் முஹாசிபியை ஆதாரமாக வைத்து, மனிதனின் செயல் அடைகிற படித்தரங்கள் பற்றி அவர் கொடுத்த விளக்கம் இமாம் கஸ்ஸாலியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
சஹ்ல் துஸ்தரி எந்த நூலும் எழுதவில்லை. என்றாலும் சஹ்லின் கருத்துக்களை அவரது மாணவரான முஹம்மது இப்னு சாலிம் ‘ஆயிரம் கூற்றுக்கள்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்தத் தொகுப்பு ‘சாலிமியா’ என்ற புதுவகையான மார்க்கப் போதனைக் கூட மொன்று உருவாவதற்கு வித்திட்டது.
இந்தப் போதனைக் கூடம் – அல்லது பள்ளிக்கூடம், இறைவணக்கத்தின் மூலம் மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தது.
அவரது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத துஸ்தர் நகரத்து மார்க்க அறிஞர்கள் 261 / கி.பி. 874இல் சஹ்லை நாடு கடத்தினார்கள்.
நாடு கடத்தப்பட்ட அவர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜ்ரி 283 கி.பி. 896 இல் பஸ்ராவில் மரணமடைந்தார்.
*
தாவூத் தாயி
இயற்பெயர் அபூ சுலைமான் தாவூத். நஸீர் என்பது தந்தையின் பெயர். அபூ சுலைமான் தாவூத் இப்னு நஸீர் என்று அழைப்பதுண்டு. இதற்கு, நஸீரின் மகனான அபூ சுலைமான் தாவூத் என்று அர்த்தம்.
இப்படித் தனயனின் பெயரோடு தந்தையின் பெயரைச் சேர்த்து – தொழிலின் பெயர், குடும்பப் பெயர், பிறந்த ஊரின் பெயர் முதலானவற்றில் ஒன்றை இறுதியில் இணைத்துக் குறிப்பிடுவது அரபிய மரபு.
இது தாவூத் தாயிக்கு மட்டும் உரியதல்ல. இரண்டு பெயர்களுக்கு நடுவில் ‘இப்னு’ என்ற வார்த்தை வருகிற எல்லாப் பெயர்களுக்கும் இது பொருந்தும்.
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாவூத் தாயி கூஃபாவில் பிறந்தவர்; இமாம் அபூ ஹனீபாவிடம் 20 ஆண்டுகள் கல்வி பயின்றவர். – மார்க்கக் கல்விகளில் தேர்ச்சியடைந்த அவர் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்; சொந்தச் சிந்தனைக்கு வேலை கொடுத்தார். இதன் விளைவாக –
உடல் உறுப்புகளின் அசைவுகளுக்கான சட்டங்களைவிட உள்ளத்தின் எண்ணங்களுக்கு எல்லை போடும் சட்டங்கள் பெரிதும் உயர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்; மனத்தில் தெளிவு இல்லையென்றால் உடலால் செய்யப்படுகிற எந்தக் காரியமும் நன்மைக் கொடுக்காது என்று தீர்மானித்தார்; மற்ற எதையும்விட ஞான மார்க்கம்தான் மனிதனுக்குக் கைகொடுக்க முடியும் என்று நம்பினார்.
கூஃபாவில் வாழ்ந்த பெரிய மனிதர் ஒருவரின் வழிகாட்டலினால் ஞானமார்க்கத்துப் பயிற்சிகளை மேற்கொண்ட தாவூத் தாயி மக்களோடு பழகுவதை நிறுத்திக் கொண்டார்.
பக்தாதில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஹாரூன் ரஷீதும், இமாம் அபூஹனீபாவின் மாணவரான அபூயூசுஃபும் சந்திக்க வந்தபோது அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்!
மக்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டுத் தனிமையில் வாழ்ந்த அவரிடம் சிலர் காரணம் கேட்டார்கள்.
“மக்களிடம் பழகிப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் தனிமைக்கு வந்திருக்கிறேன். அவர்கள் வேலை செய்வதற்குப் பதிலாகப் பேசுகிறார்கள். தம் பேச்சின் மூலம் தம் மனவளர்ச்சியைக் கெடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் வளரவிடாமல் தடுக்கிறார்கள்!” என்று தாவூத் தாயி பதிலளித்தார்.
அவர் நூல் எதுவும் எழுதவில்லை . என்றாலும் அவ்வப்போது அவர் கூறிய வார்த்தைகள் ஞானத்துறையில் மிகவும் ஆழ்ந்தத் தத்துவங்கள் என்று கருதப்படுகின்றன.
64 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர் தம் செயலுக்கு இப்படிக் காரணம் காட்டினார் :
“ஒரு பெண்ணின் மனத்தில் பல எதிர்பார்ப்புகள் இருக்க முடியும். ஒரு பெண்ணை நான் ஏமாற்ற விரும்பவில்லை !”
அவர் கூஃபாவில் இறந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். வாரிசு முறையில் கிடைத்த சில தங்கக் காசுகளை வைத்துக்கொண்டு அவர் மிகச் சிக்கனமாக வாழ்ந்தார் என்றும் – அந்தக் காசுகள் தீர்ந்ததும் அவர் இறந்துவிட்டார் என்றும் சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
”யாரும் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தம் கல்லறை மீது உயரமான ஒரு சுவர் எழுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்!” என்று கூறப்படும் செய்திக்கு ‘தபக்காத்துல் குப்ரா’வில் ஆதாரமில்லை . இது அப்துல் வஹ்ஹாப் ஷ அரானீ எழுதிய பிரபலமான நூல்!
*
பிஷ்ர் இப்னு ஹர்ஸ்
இவரது முழுப் பெயர் அபூ நஸ்ர் பிஷர். தந்தையின் பெயர் ஹர்ஸ். அரபிய மரபையொட்டி இவர் அபூ நஸ்ர் இப்னு ஹர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.
புகழ்பெற்ற ஞானிகளில் ஒருவரான இவர் அபூ நஸ்ர் என்றும் பிஷ்ருல் ஹாஃபி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
ஹிஜ்ரி 150 கி.பி. 767 இல் மபர்ஸாம் என்ற சிற்றூரில் பிறந்த இவர் பக்தாதில் ஞானமார்க்கத்திற்கு ஒரு வழிகாட்டியாகச் சிறப்புடன் வாழ்ந்தார். ஞானத்தாகம் கொண்ட பலர் அவரை எப்போதும் சூழ்ந்து உட்கார்ந்து தம் அறிவைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.
மனவளர்ச்சியைக் குறிவைத்து அவர் படித்தறிந்த நூல்கள் எண்ணற்றவை; மேற்கொண்ட பயிற்சிகள் கடினமானவை; சிந்திய கருத்துக்கள் தீர்க்கமானவை. அவரிடம் மார்க்க நூல்கள் நிரம்பிய 17 ராக்கைகள் இருந்தன.
பெருமை, கர்வம் முதலான தீய பண்புகளிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணத்தில் அவை அனைத்தையும் மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டார்!’ என்று இமாம் கஸ்ஸாலி இஹ்யாவில் குறிப்பிடுகிறார்கள்.
ஹிஜ்ரி 227 கி.பி. 841இல் அவர் பக்தாதில் இறந்தபோது, ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாத்த பலர் மிகப்பெரும் இழப்பை உணர்ந்தார்கள்.
*
மாலிக் இப்னு அனஸ்
முழுப் பெயர் அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அஸ்பஹி – அதாவது, அவரது பெயர் அபூ அப்துல்லாஹ் மாலிக் ; தந்தையின் பெயர் அனஸ்; அஸ்பஹி என்பது குடும்பப் பெயர்.
பெரும்பான்மையாக இமாம் மாலிக் என்று அழைக்கப்படுகிற அபூ அப்தில்லாஹ் மாலிக் ஹிஜ்ரி 94/ கி.பி. 712இல் மதீனாவில் பிறந்தார். பல ஆசான்களிடம் மார்க்கக் கல்வி பயின்றார்.
ஆரம்பக் காலத்தில் சட்டம் இயற்றியவர்களில் ஒருவரான இமாம் மாலிக் 95 ஆசான்களிடம் கல்விப் பயின்றிருப்பதாக ஒரு பட்டியல் போட்டுக் கொடுக்கிறது, ‘தஸ்யினுல் மமாலிக்’ என்ற நூல்! இதன் ஆசிரியர் ஜலாலுத்தீன் சுயூதி.
இமாம் மாலிக் மதீனாவில் இமாம் அபூ ஹனீபாவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அப்போது இமாம் அபூ ஹனீபாவும் மதீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.
இமாம் ஜாபர் சாதிக்கோடு சேர்ந்து கல்வி பயின்ற இமாம் மாலிக் நபித் தோழர்களில் ஒருவரைச் சந்தித்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டார். சஹ்ல் இப்னு சஅது என்று அழைக்கப்பட்ட இவர் அப்போது மதீனாவில் வாழ்ந்த ஒரே நபித் தோழர்.
இமாம் மாலிகின் நூலான ‘முவத்தா’, மாலிகி மத்ஹபுக்கு அடிப்படையாக அமைந்தது. ஹதீஸ்கள் – சட்டங்கள் அடங்கிய இந்த நூல் எல்லாவற்றுக்கும் முந்திய ஹதீஸ் தொகுப்பாகும்.
இந்த நூலுக்கு சுயூதி, இப்னு அஸாகிர் போன்ற அறிஞர்கள் விரிவுரை எழுதியிருக்கிறார்கள்.
இமாம் மாலிக் தமது நூலில் திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துச் சட்டம் இயற்றினார். நபித்தோழர்களின் ஏகோபித்த கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் அவர் கொடுத்தது இரண்டாம் தர முக்கியத்துவம்.
ஸுஹ்ரி, நாஃபிவு, அபூ ஸினாத், ஹாஷிம் இப்னு உர்வா, யஹ்யா இப்னு சயீத், அப்துல்லாஹ் இப்னு தீனார், அபூ ஸுபைர், முஹம்மது இப்னு முன்கதிர் முதலானவர்கள் அறிவித்த ஹதீஸ்களை இமாம் மாலிக் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
மிகுந்த மரியாதைக்குரியவராக வாழ்ந்த இமாம் மாலிக் 14 ரபீயுல் அவ்வல் 179 | 11 ஜூன் 795 அன்று மதீனாவில் 85 வயதில் மரணமடைந்தார். ஆளுனர் அப்துல்லாஹ் இப்னு ஸைனப் பிரேதப் பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.
*
நன்றி : அஃப்சரா பதிப்பகம்
*