தஞ்சம் அடையும் தத்துவம்

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அக்காதெமி வெளியிட்ட , அடபா ராமகிருஷ்ண ராவ் (Adapa Ramakrishna Rao) எழுதிய , அன்னமாச்சார்யா எனும் நூலிலிருந்து ( தமிழாக்கம்: இராம. சுந்தரம்) , நன்றியுடன்…

***
கடவுளை அடையப் பலவழிகள் உள்ளன. விசிஷ்டாத்வைத சமயப் பிரிவைப் பின்பற்றிய அன்னமாச்சார்யா, கடவுள் என்ற குறிக்கோளையடைய, எளிய வழியான தஞ்சம் புகுதலைச் சிறப்பித்துக் கூறுகிறார். தஞ்சம் புகுதல் எளிமையாகக் கடைப்பிடிக்கக் கூடியது. அது தவறாது பயனளிக்கும் என்று அவர் பல பாடல்களில் வலியுறுத்துகிறார். கடவுளை அடையும் மற்ற முறைகள், நம் குறிக்கோளை நிறைவேற்றலாம். ஆனால் அன்னமாச்சார்யா காட்டும் முறையிலுள்ள எளிமையும், அம்முறையின் மூலம் கிடைக்கப்பெறும் அருளும் மற்ற முறைகளில்லை.

அடிமரம் இருக்கும் பொழுது,
ஏன் ஒருவன்
மேலேயுள்ள இலைகளுக்குத்
தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டும்?
நீ என் இதயத்தில்
குடி கொண்டிருக்கும்பொழுது,
மற்ற பொருள்கள் பற்றி
நான் ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?

சிலர்
வேதங்கள் காட்டிய வழியைப்
பின்பற்றுகிறோம்
எனக் கூறுகின்றனர்;
ஆனால், வேதங்கள்,
உன்னுடைய பெருமையின்
பல்வேறு முகங்கள்.

சிலர்,
இவ்வுலக வழக்கங்களைக்
கடைப்பிடிப்பதாகக்
கூறுகின்றனர்;
ஆனால், எல்லா உலகங்களும்,
உன் மாயையின் வல்லமையால் ஏற்பட்ட
பொருள்களே.

சிலர்,
தங்கள் இதய ஆசைகளை
ஒடுக்க முயற்சிக்கின்றனர்;
உன்னுடைய விருப்பத்தினால்தான்
ஆசைகளும் எழுகின்றன என்பதை
அவர்கள் உணரவில்லை.

மற்ற சிலர்
உடலையும், புலன்களையும்
அடக்கப் போராடுகின்றனர்;
உடலும், புலன்களும்,
அன்புத் தலைவனே!
உன்னுடைய படைப்புகள்தானே;
இந்த எளிய குறிக்கோளையடைய
ஏன் ஒருவன்
இங்குமங்கும் ஓடவேண்டும்
தண்ணீரால் நிரம்பியிருக்கும்
ஒரு சிறுகுளம் அருகிலிருக்கும்பொழுது
காய்ந்த ஆற்றுப் படுகையில்
ஏன் ஒருவன் தோண்ட வேண்டும்.

கருணையுள்ள தலைவனே!
ஸ்ரீ வெங்கடேசா!
நான் உன்னிடம் தஞ்சம் புகுந்துவிட்டேன்;
பக்திச் சந்தையிலுள்ள
பலவித முறைகள் பற்றி
நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?

கருணையுள்ள தலைவன் திருமாலின் பாதங்களில் தஞ்சம் புகுந்த விவேகமுள்ள மனிதனின் மகிழ்ச்சியான நிலை அன்னமாச்சார்யாவுக்குப் பிடித்த பொருள். நம்பிக்கையூட்டும், உதவிக்கரம் கொடுக்கும், கடவுளிடம் தஞ்சம் புகும் தத்துவத்தின் செய்தியை, துன்பமுறும் மக்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற ஆர்வத்தில் பல பாடல்கள் இயற்றினார்.

***
நன்றி : சாகித்திய அக்காதெமி