நட்சத்திர சிறுகதை – திலீப் குமாரின் ‘தீர்வு’

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நண்பர் திலீப் குமாரின் ‘கேணி’ கூட்டத்தில் கலந்து கொண்ட தம்பி கிருஷ்ணபிரபு அருமையான ஒரு பதிவு எழுதியிருந்தார். தன்னுடைய ’தீர்வு’ சிறுகதை உருவான விதத்தை திலீப் அதில் சொல்லியிருந்தார் இப்படி : ‘ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் “தீர்வு” என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது. ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது “தீர்வு” கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது.’

எனக்கு மிகவும் பிடித்த ’தீர்வு’ சிறுகதை இருக்கும் ‘இலக்கியச் சிந்தனை’ புத்தகம் வீட்டில் இருக்கிறது. அஸ்மாவிடமோ பிள்ளைகளிடமோ கேட்க இயலாது. இலக்கியம்தான் காரணம். தன்னிடம் இருந்த வேறொரு தொகுப்பிலிருந்து தட்டச்சு செய்து அனுப்புவதாக தாஜ் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார் – ஃபேஸ்புக்கில் தத்துவங்கள் உதிர்ப்பது, வஹாபிகளுடன் மல்லுகட்டுவது போன்ற முக்கியமான வேலைகளுக்கு இடையிலும். இதற்கும் இலக்கியம்தான் காரணம். நல்லது, இணையவெளியில் இதுவரை தென்படாத ‘தீர்வு’ உங்களுக்காக வருகிறது. நன்றி கூற மறவாதீர்! –  ஆபிதீன்

***

“திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையானப் பரீட்சார்த்தப் படைப்பு. சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில்  மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.”

அசோகமித்திரன் (‘தீர்வு’ உள்ளடக்கிய திலீப் குமாரின், ‘மூங்கில் குருத்து’ சிறுகதை தொகுப்பிற்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து..)

*
தன் எழுத்தில் அபாரமான தன்னம்பிக்கை கொண்ட ஒருவரால் தான் இப்படியான படைப்பைப் படைக்க முடியும். ‘காலத்தைக் கடந்தேனும் இந்த எழுத்து நிச்சயம் பேசப்படும்’ என்ற தீர்மானம் மனதில் பாய்ந்திருக்க வேண்டும் அவருக்கு.  1985-க்கு முன் எழுதப்பட்ட இந்தக் கதை, இன்றைக்கு, சுமார் 28- வருடம் கழித்து பேசப்படுகிறது என்றால், அது அவர் அன்றைக்கு கொண்ட தன்னம்பிக்கை தான். திலீப் குமாரை கொஞ்சம் அறிவேன். பேசி பழகியிருக்கிறேன். தமிழ் நவீனத்தில் மையல் கொண்ட வித்தியாசமும், எளிமை சாயலும்கொண்ட குஜராத்தி! இந்தக் கதையும் அவரை மாதிரியே எளிமையிலும் எளிமையாக இருக்கிறது. அடக்க முடியாத நகைச்சுவையைக் கூட, அவர்பாட்டுக்கு அவரது எளிமை மொழியில் சொல்லிக்கொண்டே போகிறார்.

தாஜ்

*

dileep-kumar

தீர்வு

திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளில் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின்
மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

***
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை.
***
நன்றி: திலீப் குமார் (மூங்கில் குருத்து/ க்ரியா), தாஜ்

Being There – பிரமாதமான சினிமா

நண்பர் வ.ந. கிரிதரனின் ‘வாசிப்பும், யோசிப்பும் -6: Jerzey kosinskiயின் Being There!’ வாசித்துவிட்டு , ‘Chance’s simplistic utterances about gardens are interpreted as allegorical statements about business and the state of the economy’ என்று விக்கி சொல்வதையும் கேட்டுக்கொண்டு நேற்றிரவு பார்த்த சினிமா இது .  ஆரம்பத்தில் அநியாயமாக சிரிக்க வைத்தாலும்  படத்தின் முடிவில் அந்த ‘முட்டாள்’ தோட்டக்காரன் தண்ணீரில்  சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சி யோசிக்க வைத்துவிட்டது. ‘Life is a state of mind’? – ஆபிதீன்

***

 

Thanks to :Serge Chaly

மகான்கள் – கோபிகிருஷ்ணன்

தலைப்பை சரியாகப் படித்தீர்களா? மாக்கான்கள் அல்ல, மகான்கள் – நம்மைப்போல! அவல நகைச்சுவைக்கு அசல் சொந்தக்காரரான கோபிகிருஷ்ணனின் சிறுகதை இது. ‘இடாகினிப் பேய்களும், நடைப் பிணங்களும் சில உதிரித்தரகர்களும்’ நூலில் இணைப்பு-3யாக இருக்கிறது. தமிழினி வெளியீடான இந்நூலை  ’அமீரக அண்ணாச்சி’ கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன. திருப்பிக் கொடுப்பது மஹா தவறு என்று – பின்னே சரியோ? – பத்திரமாக வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு கதையை எடுத்து வெளியிடவேண்டுமென்று நினைத்தபோது பாழாய்ப்போன இந்த சோம்பல் வேறு தொல்லை கொடுத்தது. கோபிகிருஷ்ணனின் வேறு சில சிறுகதைகள் ‘அழியாச்சுடர்களில்’  (எஸ்.ராவின் கட்டுரைகளுடன்) வெளியாகியிருப்பதால் அங்கே தோன்றாத மகான்களை (இந்த மகான்கள் இருக்காங்களே… லேசுல எங்கேயும் வரமாட்டாங்க..)  இங்கே வரவழைக்கலாம் என்று நினைத்து டைப் செய்துகொண்டிருக்கும்போது… நம்ம கூகிள்ஹஜ்ரத்திடம் மன்றாடினால் என்ன என்றொரு உதிப்பு தோன்ற, கிடைத்தார் ‘காவிரிக்கரையில் பிறந்து ரியோ க்ரேண்ட் கரை ஒதுங்கிய’ சகோதரர் வாசன். அவர் மூலம் ’மகான்களும்’ கிடைத்தார்கள். தரிசியுங்கள். கோபிகிருஷ்ணன் பற்றி நண்பர்கள் எழுதிய முக்கியமான பதிவுகளின் சுட்டி கதையின் அடியில் இருக்கிறது. அதையும் வாசியுங்கள்.

நேரம் கிடைக்கும்போது ‘அம்மன் விளையாட்டு’ விளையாடலாம், இன்ஷா அல்லாஹ்! – ஆபிதீன்

***

Gopi

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

    நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

    இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் பாட்டி வீட்டில்     புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன     என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.

    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.

    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.

    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

***

நன்றி : தமிழினி, ஆசிப்மீரான்வாசன்

***

தொடர்புடைய பதிவுகள் :

கோபி கிருஷ்ணனின் கதையுலகம் அல்லது நரம்புநோய் பற்றிய கதையாடல்கள். – ஜமாலன்

கோபி கிருஷ்ணன் – இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு – அய்யனார்

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை – அவர் வார்த்தைகளில்  (மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல். ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவில்) : பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 (நிறைவு)

தாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை

பேத்தி பிறந்ததில் பூரித்துப் போயிருக்கிற தாஜ்தாத்தாவுக்கு ‘புன்னகை மன்னன்’ தி,ஜானகிராமனின் தாத்தா கதை அர்ப்பணம் – வருங்கால தாத்தாவான ஆபிதீனின் வாழ்த்துக்களுடன். நம்ம தாஜ், ஏற்கனவே பார்ப்பதற்கு தாத்தா மாதிரிதான் இருப்பார். ‘விமர்சனம் செய்தால் பல்லை கழற்றி விடுவேன்’  என்று பிரபல எழுத்தாள நண்பர் ஒருவர் அவரை எச்சரித்தபோது ’எதுக்கு கஷ்டம், நீயே வச்சுக்க!’ என்று பவ்யமாக தன் பல்செட்டை கழட்டிக் கொடுத்துவிட்டதை வைத்து இந்த தகவலைத் தருகிறேன். ஏன் இப்போது உண்மையை கழற்றுகிறேன் என்றால்..அட, தருணம் வரவேண்டாமா எல்லாவற்றுக்கும்?

’மகனோ மகளோ பிறந்தால் வெறும் இன்பம்; பேரனோ பேத்தியோ பிறந்தால் பேரின்பம்’ என்று சொல்லும் சீனியர் தாத்தாவான ஜாஃபர்நானாவுடன் (ஒரு பேரன், இரு பேத்திகள்!) சேர்ந்துகொண்டு எல்லா கிழங்களும் வாழ்த்துவோம்.

ஒரு வேடிக்கை. தாஜ்தாத்தாவுக்காக ஜானகிராமனின் ’துணை’ கதையை நான் செலக்ட் செய்திருக்க தாத்தாவோ வேறு ஒரு சூப்பர் ஜானகிராமன் கதையை இன்று அனுப்பியிருக்கிறார். தாஜுக்கு ஜானகிராமன் துணையா ஜானகிராமனுக்கு தாஜ் துணையா? ’போடு சாம்பிராணி!’.  இரண்டும்தான். இணையத்தில் அது (பெயரைச் சொல்ல மாட்டேன்)  வந்திருக்கிறதா என்று ’செக்’ செய்துவிட்டு பிறகு அதை வெளியிடுவேன், இன்ஷா அல்லாஹ்.

”ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை..” என்று அட்டகாசமாக விவரிக்கப்படும் ‘துணை’யின் முதல் பகுதியை இமேஜ் ஃபைலாக முதலில் பார்த்துவிடுங்கள். பக்கம் 1 | பக்கம் 2 | பக்கம் 3 | பக்கம் 4 | பக்கம் 5 | பக்கம் 6 .

பின்பகுதியை மட்டும் மெல்லத் தட்டி இங்கே இடுகிறேன். அது ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த செயல் என்பது அவனது முன்பக்கத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். அது இருக்கட்டும்;  ‘கோலி சோடாவை உடைத்தது போல குபுக்கென்று சிரிக்க வைக்கும் கோத்திரம் அல்ல ஜானகிராமனின் நகைச்சுவைகள். அவை, வேள்விகளிலிருந்து வெளிவரும் மெல்லிய தங்கப் புகைச்சுருள்கள்’ என்று எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் சொல்வதை மறுக்க எவருக்கேனும் துணிவிருக்கிறதா?

ஒரு தாத்தாவுக்கு ஜானகிராமன் வைக்கும் பெயரைப் பாருங்களேன். சின்னக்குழந்தை! ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு! .

ஆனந்தவிகடனுக்கு நன்றிகள். –  ஆபிதீன்
***

துணை – தி. ஜானகிராமன்

நான் போகும்போது சின்னக்குழந்தை சாப்பிட்டுவிட்டு வாய்நிறைய வெற்றிலையை மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்து ‘தினமணி’ படித்துக் கொண்டிருந்தார்.

“என்ன தாத்தா?”

“வாப்பா, வா. அடே! பத்தேகாலுக்கு வந்துட்டியே, சொன்னாப்போலே. ஒரு நல்ல வண்டியா கூப்பிடேன்.”

வண்டிப்பேட்டை பக்கத்தில்தான் இருந்தது. ஒரு குரலுக்கு நல்ல வண்டி வந்து சேர்ந்தது.

“உள்ளே வாப்பா!”

கூடத்தில் ஒரு பெஞ்சின்மீது லேடிக்கிழவர். சின்னக்குழந்தையின் தகப்பனார் உட்கார்ந்திருந்தார். லேடியென்று இப்போது சொல்ல முடியாதுதான். தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் விபூதியிட்டாற்போல மூன்று கோடு சந்தனம். கையில் உத்திராட்சமாலை. வாயில் பாக்குரலில் இடித்த வெற்றிலைப்பாக்கு. அவர் வெகு நாழியாகக் கிளம்பச் சித்தமாகி விட்டார் என்று அல்பாகா கோட்டும்  கழுத்தில் வளைந்த பழுப்படைந்த வெண்பட்டும் சொல்லின. நூற்றிரண்டு வயசாகி விட்டதற்காக ஒரு அங்கமும் குறைந்து விடவில்லை அவருக்கு. சாதாரணக் கிழவர்களைப் போலத்தான் இருந்தார். அவர் மனம் வெற்றிலை மணத்தில் லயித்திருந்தது.

அருகில் போய் “தாத்தா, சௌக்கியமா?’ என்று கேட்டேன்.

“யாரது, எனக்குக் கண்தான் சரியாகத் தெரியாது. காது கேட்கும்” என்று பதில் வந்தது. இந்தக் கிழங்களுக்கு முன் இயல்பாகவே குரல் உச்சஸ்தாயில். நான் பேசுகிறது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.

“ஸப் ரிஜிஸ்ட்ரார் பையனப்பா. துணைக்கு வந்திருக்கிறான்.”

“ஓஹோ, அப்படியா, உன் பேர் கிருஷ்ணசாமிதானே?”

“ஆமாம்”

“நீதானே புனா மிலிடரி அக்கௌண்ட்ஸிலே இருக்கே?”

“ஆமாம்.”

“லீவு எடுத்துண்டு வந்திருக்கியோ?”

“ஆமாம்”

“ஒரு மாசமா?”

“ஆமாம்.”

“சரிதான்.”

“கல்யாணத்தைப் பண்ணிண்டு குடித்தனம் வைக்கப்படாதோ?”

“…………………”

“என்ன வயசாறது உனக்கு?”

“இருபத்தேழு.”

“என்னடாப்பா இது? இன்னும் சும்மா இருந்தா?”

“மணி பத்தரையாகப் போறது.”

“பத்தரையாகிறதா! அப்படின்னா கிளம்பலாமே. என்னடா சின்னக்குழந்தை. கிளம்பலாமோல்லியோ?”

மணி சொன்னது பெரியவரைப் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.

“சின்னக் குழந்தை!”

“இதோ ஆச்சுப்பா, சட்டையைப் போட்டுண்டு வந்துடுறேன்.”

“………………….”

“என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப் போறியோ, தெரியலை, சரி சரி, வா, சட்டுனு.”

சின்னக்குழந்தை புன்முறுவல் பூத்துக்கொண்டே உள்ளேபோய் ஒரு ஒட்டுப்போட்ட கறுப்புக் கோட்டும், அதைச் சுற்று ஒரு நாட்டுத் துணுக்கும் போட்டுக்கொண்டு வந்தார். கோட் ஸ்டாண்டிலிருந்த ஒரு வெண்பட்டை எடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு முண்டாசு அல்லது தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, “போகலாமா?” என்றார்.

“ம்..”

“யாரங்கே, போயிட்டு வந்துடுறோம் நாங்க. அம்மா வரட்டுமா?”

இப்பொழுதுதான் அவர் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்திலேயே ஒரு மூலையில் நீட்டின காலோடு உட்கார்ந்திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் பெரிய சம்புட அகலத்திற்கு ஒரு சிகப்புத் தோடு தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.

பூஜை அலமாரியைத் திறந்தார் பெரியவர். பிரார்த்தித்துக் கொண்டார். சின்னக் குழந்தையும் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினார்.

“குழந்தே, ஜாக்கிரதையாப் பார்த்துகோடாப்பா” என்று சின்னக் குழந்தை சம்சாரம் வந்து சிபார்சு செய்தாள். அவளுக்கும் மாமியார்க் கிழவிக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பெரிய கிழவி நடக்க முடியாமல் மூலையில் கிடந்ததுதான் குறை.

சின்னக் குழந்தை தகப்பானரின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தார்.

“காலைத் தூக்கிவச்சு வாங்கோப்பா.”

“தூக்கித்தாண்டா வக்கறேன். தெரியலியா?”

“நிலை குனிஞ்சு வாங்கோ.”

“தெரியறது.”

“திண்ணையைப் புடிச்சிண்டு இறங்குங்கோ!”

“ஏன், இல்லாட்டா விழுந்துடுவேனோ? ஏண்டாப்பா!”

“இல்லே, சொன்னேன்.”

“என்னத்தைச் சொன்னேன்?”

வண்டியில் அவரை முன்னால் ஏற்றிவிட்டு, சின்னக் குழந்தை ஏற, நானும் உட்கார்ந்துகொண்டேன்.

கஜானாவுக்கு அருகில் கூட்டத்திற்கா பஞ்சம்? அதுவும் பக்கத்தில் கலெக்டர் ஆபீஸ், கோர்ட்டுகள், நெல் கொள்முதல் ஆபீஸ் இவ்வளவு ஆபீஸுகளும் இருக்கும்போது பெரிய காம்பவுண்டு தூங்குமூஞ்சி மரங்கள் பரந்து நெருங்கி வளர்ந்து நிழல் எறிந்து இருந்தன. நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலைக் கட்டி அமர்ந்திருந்தன. போனவருடம் பதவி விட்ட கிழம் முதல் சின்ன குழந்தை வரையில் பல கிழங்கள்.

வண்டி காம்பவுண்டுக்குள் நின்றது. மெதுவாக லேடிக் கிழவரை கீழே இறக்கி ஒரு தூங்குமூஞ்சி நிழலில் உட்கார வைத்தோம்.

“என்னப்பா லேடி! சௌக்யமா? மஸ்டர் நாளைத் தவிர மத்த நாளில் உன்னைப் பார்க்க முடியாதுன்னு ஆயிட்டது இப்ப.”

“யாருடா அது கேதாரி ராமனா?”

“ஆமாம்பா, ஆமாம்.”

“என்ன போ, இந்த வருஷம் ஆஸ்த்மா என்னைப் போட்டுக் கொன்னுடுத்து. ஏதோ போ, இழுத்துண்டு கிடக்கேன்.”

”யாரு நீயா? காந்தி போயிட்டார் நூத்திருவத்தஞ்சு நூத்திருவத்தஞ்சுன்னு சொல்லிப்புட்டு! நீ கட்டாயமா இருந்துதான் காமிக்கப் போறே.:”

“எதுக்காக? என்னடாப்பா முடை? தேசோத்தாரணம் பாழாப்போறதே, அதுக்காகவா?”

“தேசோத்தாரணம் பண்ணினாத்தான் இருக்கணுமா? இல்லாட்டா இருக்கப்படாதா என்ன? ஏன் பிள்ளையை மாத்திரம் அழைச்சிண்டு வந்திருக்கே? பேரன் எங்கே?”

“காசிக்குப் போயிருக்கான்.”

“காசிக்கா! போடு சாம்பிராணி. ஏன்? நீயும் போயிட்டு வரப்படாதோ?”

“நானுமா? பேஷ் ஹுசூர் கஜானாவே காசியா இருக்கு நமக்கு. நன்னாச்சொன்னே போ, உன் பேத்தி பிரசவிச்சுட்டாளா?”

“ என் பேத்தியா? குழந்தை பிறந்து எத்தனை மாசமாச்சு. அடுத்த மாசம் ஆண்டு நிறைவு.”

“பிள்ளையா , பெண்ணா?”

“பிள்ளை.”

“பேஷ்!”

“உன் பிள்ளை லீவிலே வந்திருந்தானே, டூட்டியிலே ஜாயினாட்டானா?”

“போன ஏப்ரல்லே வந்தானே, அதைச் சொல்றயா?”

“அதுதானே எனக்குத் தெரியும்.”

“ஜாயினாகி, இப்ப வேறே இரண்டு மாசம் மெடிகல் லீவிலே வந்துட்டு, மறுபடியும் போனமாசம் ஜாயினாட்டான். இன்னும் என்ன கேட்கப்போறே?”

“என்னத்தைக் கேக்கறது! வருஷத்துக்கு ஒருநாள் சந்திக்கறபோது கேட்டுத்தானே ஆகணும்.”

அப்போதுதான் நானும் கவனித்தேன். லேடிக்கிழவரை எத்தனையோ பேர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி ஒரு கூட்டம். அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இது யார் பையன்? கொள்ளுப் பேரனா?” என்று கேதாரிராமன் கேட்டார்.

“நாலு வீடுபோட்டு அந்தண்டை இருக்கான். சப் ரிஜிஸ்ட்ரார் பிள்ளை. துணைக்கு வந்திருக்கான்.”

“போடு சாம்பிராணி! துணை வேறயா? நீ அவனுக்குத் துணையா? அவன் உனக்குத் துணையா?”

“என்னடாப்பா இது? எனக்கு உயிர் இருக்குன்னா பலம் கூட இருக்கணும்னு அவசியமா என்ன? ஏண்டாப்பா?”

“அது சரி, இதோட எத்தனை மஸ்டர் ஆச்சு?”

“ஞாபகம் இல்லையே.”

“அறுபது இருக்குமா?”

“அறுபதா? 55-ம் 60-ம் நூத்திப் பதினைந்துன்ணா? என்னடா இது? நூத்திப் பதினைஞ்சு வயசா ஆயிடுத்து எனக்கு?”

“பின்னே சொல்லேன்.”

“என்னமோ போ. இதெல்லாம் என்ன கேள்வி?”

“ஏன் கேக்கப்படாதோ?”

”கேட்டுண்டே இரு. போ.”

சின்னக் குழந்தை எழுப்பியபோதுதான் மணி மூன்று என்று தெரிந்தது. சுயராஜ்யத்தைத் திட்டிக்கொண்டே வண்டியை கட்டச் சொன்னார் அவர்.

வண்டிக்காரன் மாட்டைப் பூட்டும்போது நான் கண்ட கனவு ஞாபகம் வந்தது. நான் ரொம்ப கிழவனாகப் போய் விட்டதாகவும், ஆனால் ரிடயர் ஆகாமலே பென்ஷன் கொடுக்கும் குமாஸ்தாவாக இருப்பது போலவும் சொப்பனம்.

எனக்கே சிரிப்பு வந்தது.

“என்னடா குழந்தை சிரிக்கறே?” என்று கேட்டார் சின்னக் குழந்தை.

“ஒன்ணுமில்லே.”

“என்ன, சொல்லேன்?”

“எல்லாரும் ஏன் ரிடயர் ஆறா?”

“அப்படின்னா?”

“ரிடயர் ஆகாமலே வேலை பார்க்கறது?”

“வயசாயிடுத்துன்னா என்ன பண்ணறது?”

“அப்படின்னா இப்ப வேலை செய்ய முடியாதா உங்களுக்கு?”

திடீரென்று லேடிக் கிழவர் குறுக்கிட்டார். “ஏன் முடியாது? பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல்!”

“சரி வண்டியிலே ஏறுங்கோ.”

எல்லோரும் ஏறிக்கொண்டோம். வண்டி கிளம்பிற்று. காம்பவுண்டு தாண்டியதும் பறந்தது. மெயின்ரோட்டைக் கண்டால்தான் இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக்காரன் சொன்னான்.

நல்ல மேற்கத்திக் காளை மாடு. வண்டிக் குடமும் நல்ல அழுத்தமான குடம். குடுகுடுவென்று , அமர்ந்து கேட்கும் இடிபோல முழங்கி காதில் இனிமை ஊற்றிற்று.

“என்னடாப்பா விலை மாடு?” என்று லேடிக் கிழவர் கேட்டார்.

“முந்நூறு ரூபாய்ங்க.”

“வண்டி?”

“இருநூற்றைம்பது.”

”பேஷ். இரண்டும் நல்ல அமைச்சல்.”

“பாவ்  பாவ்  டேய். க்…க். ஆவ்.”

***

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கீழே கிடந்தேன். எனக்கு மேல் சின்னக் குழந்தையும் லேடிக் கிழவருந்தான் கிடந்திருக்க வேண்டும். வேறு யார் கிடப்பார்கள்? வண்டி பின்பக்கமாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டிற்று. மாட்டுக் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.

“எலே, வண்டியைத் தூக்குடா, கூறு கெட்ட பயலே.”

லேடிக் கிழவரின் குரல்.

எனக்குக் கை வலித்தது.

வண்டியை இழுத்தார்கள்.

லேடிக் கிழவரைத் தூக்கினார்கள். சின்னக் குழந்தை எழுந்து கொண்டார்.

எனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைத்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.

கண்ணாடி போட்ட ஆசாமி? “ஓ’ டாக்டர், பிறகு நர்ஸு.

சர்க்கார் ஆஸ்பத்திரி என்று தெரிந்தது. சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தார்.

”எக்ஸ்ரே எடுக்க வேண்டும்” என்றார் டாக்டர்.

எக்ஸ்ரே அறைக்கு என்னைக் கொண்டு செல்லும்போது, நடையில் ஒரு பெஞ்சில் லேடிக்கிழவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.

எக்ஸ்ரே எடுத்தார்கள். இரட்டை முறிவாம். பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு கையைக் கழுத்தோடு மாட்டி விட்டார்கள். வேறு ஏதோ வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு லேடிக் கிழவரும் சின்னக் குழந்தையும் ஏறிக் கொண்டனர்.

வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. எல்லோடும் இறங்கிய பிறகு இறங்கினேன்.

வண்டி நிற்கும் சத்தத்தைக்ல் கேட்டு அம்மா வாசலுக்கு ஓடி வந்தவள், என் கோலத்தைக் கண்டதும் “என்னடா குழந்தஏ என்னடா இது” என்று பதறி அருகில் வந்தாள்.

“ஒண்ணுமில்லேம்மா, சும்மா கத்தாதே வாசலிலே நின்னுண்டு.. வண்டி குடை சாஞ்சுது. கை லேசா முறிஞ்சிருக்கு. தாத்தா அழைச்சுண்டு போய் க்ளீனா காட்டி அழைச்சிண்டு வந்துட்டார்.”

சின்னக் குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்குப் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அவர் வெறும் சிராய்ப்போடு பிழைத்து விட்டார். லேடிக் கிழவருக்கு குதிரை முகத்தில் அடியாம். வேறு காயம் இல்லை.

“அம்மா, எங்களோடு வந்ததுக்கு தண்டனை உங்க குழந்தைக்கு. படுகிழங்கள் இருக்கோமோ, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ? ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை..”

“நாம அழச்சிண்டு வந்துவிட்டோம்” என்று முடித்தார் லேடிக் கிழவர்.

அம்மா மெத்தையைப் போட்டாள். படுத்துக் கொண்டேன்.

“மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடப்பா, ஆமாம்” என்றார் லேடிக் கிழவர்.

“சரி தாத்தா.”

**

நன்றி : ஆனந்தவிகடன்

« Older entries