ரமலான் சிந்தனைகள் – நூருல் அமீன்

noorulameen-fb

“எத்தனை விவேகம் கைவந்த பின்னும் நம் கீழ்மை நம்மை விட்டு போகவில்லையே” என மகத்தான அறிஞர்கள் எல்லாம் வருந்தியிருக்கிறார்கள். ஏன் இத்தகைய மனோநிலைக்கு ஓரளவு நாமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றோம். இந்த நிலை ஏன்?

அறிவு என்பது நம்மை பாவ காரியங்களை விட்டும் காப்பாற்றாது. பாவம் செய்யும் போது மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைத் தான் சொல்லிக் கொடுக்கும். ஞானம் என்பது தான் நம்மை நேர்வழியில் செலுத்தும். அது என்ன ஞானம்?.

ஞானம் என்பது மூளையிலிருந்து வரும் ஆளை வளைத்துப் போடும் அறிவுப் பூர்வமான கருத்துகள் அல்ல. அது இதயத்தை சென்றடைந்து இறையச்சத்தை உண்டாக்கும் அறிவு. இறைவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என குர்ஆனில் கூறும் அறிவைத் தான் ஞானம் என குறிப்பிடப்படுகின்றேன். உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவனும் நான் தான் அதனால் அவனுக்கு அதிகமாக அஞ்சுபவனும் நான் தான் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அந்த அறிவு தான் ஞானம். அதை அடைவதுதான் ஆன்மீகத்தின் முந்திய பகுதியாக கருதப்படுகின்றது.

அந்த ஞானத்திற்கு தடையாய் இருப்பதே உலக வாழ்வில் நாம் கற்று தேர்ந்த, மூளையால் மட்டுமே சேகரித்த, இதயத்தை தொடாத பல வகை அறிவுகளும் அதனால் தன்னை பெரிதாக விளங்கும் ஆணவமும் அகம்பாவமும் தான். எது சரி எது தவறு என எச்சரிக்கும் மனசாட்சி என்பதெல்லாம் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற ஆணவத்தினால் வலுவிழந்து போய் விடுவதால் மனம் என்பது வெறும் இச்சைகளின் பால் அழைக்கும் கருவியாக மட்டுமே செயல்படுகின்றது.

மனோஇச்சைகளை பற்றிய படிப்பினையூட்டும் இந்த குதிரை கதையை படியுங்கள். ஒரு குதிரையொன்று இருந்தது. அது எப்போது சாணம் போட்டாலும் அங்கே நின்று அதை முகர்ந்த பின்னர் தான் மீண்டும் வண்டியை இழுக்கும், பிரியமான குதிரை என்பதால் அதை பொறுத்து பொறுத்து பார்த்த குதிரை வண்டிக்காரன் ஒரு நாள் வேறு வழியில்லாமல் சாட்டையை எடுத்தான். எப்போதெல்லாம் சாணத்தை முகர குனிகிறதோ அப்போதெல்லாம் ஒரு அடி கொடுத்தான். சில முறை அடிகள் வாங்கியவுடன் குதிரை சாணத்தை முகறுவதை நிறுத்தியது. சிறிது தூரம் இப்படி ஒழுங்காக சென்ற குதிரையை பார்த்த வண்டிக்காரனுக்கு தன் பிரியமான குதிரை மீது இரக்கம் வந்தது அதனால், “என் செல்லம் உன்னை அடிச்சிட்டேன்ல, இனிமே அடிக்க மாட்டேன்”என குதிரையை கொஞ்சியவனாய் சாட்டையை விட்டெறிந்தான். குதிரைக்கு அவன் கூறியது விளங்கியாதோ இல்லையோ அவன் கையில் இப்போது சாட்டை இல்லை என்பது மட்டும் விளங்கியது. அவ்வளவு தான் குதிரை அந்த வண்டியை அப்படியே திருப்பி பின் சென்றது இது வரை எந்த இடத்திலெல்லாம் சாணத்தை முகராமல் வந்ததோ அத்தனையும் சேர்த்து வைத்து முகர்ந்தது. குதிரைவண்டிக்காரன் கைசேதத்துடன் செய்வதறியாமல் திகைத்து நின்றான். மனதின் மிருக இச்சைகளை கட்டுபாடின்றி விட்டால் ஒரு பாவத்தையும் அது விட்டு வைக்காது என்பதுடன் இது வரை செய்யாமல் கட்டுபடுத்தி வைத்த அனைத்து பாவங்களையும் செய்ய வைத்துவிடும் என்பதை விளக்கும் கதையிது.
ரமலான் முடிந்தவுடன் நமது குதிரை நமக்கு பிரியமான பாவ சாணங்களை முகர துவங்கிவிடும் என்பதற்கு நாமே நமக்கு சாட்சியாய் இருக்கின்றோம். அதே நேரத்தில் பாவம் செய்வதை விட்டு நிரந்தமாக மீள வேண்டும் என்ற ஆசையும் நமக்கு இல்லாமல் இல்லை.

ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாக வாழும் இந்த இரட்டைநிலையிலிருந்து மீள வழி என்ன?

நாமாக நல்லவர்களாய் இருக்க முடியாது. நாமாக மனோ இச்சைகளை ஜெயிக்க முடியாது. எந்த நன்மையையும் சுயமாக செய்யவோ, இல்லை எந்த பாவத்தை விட்டும் சுயமாக தப்பிக்கவோ முடியாது இறைவனின் கருணை இருந்தாலே தவிர. இந்த நம் பலகீன நிலையை உளப்பூர்வமாக உணர்ந்து “யாஅல்லாஹ்! நானாகவே நான் இல்லை ஒவ்வொரு வினாடியும் உன் ரஹ்மத்தான கருணையால் இருக்கின்றேன்” என அல்லாஹ்விடம் தன்னை(நப்ஸை) ஒப்படைத்து அல்லாஹ்வைக் கொண்டு வாழும் நிலையை நோக்கி நமக்கு வழி நடத்துகிறது பெருமானாரின் இந்த பிரார்த்தனை:

“இறைவா உன் கருணையில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அபுதாவுது, அஹ்மது)

சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? (அது) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது தான்” என பெருமானார் கற்றுத் தந்துள்ளார்கள் ( புகாரி).

தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நப்ஸ், ஷெய்தானின் தீங்கை விட்டுஅல்லாஹ் பாதுகாப்பான் என என் சங்கைக்குரிய ஷெய்கு ஃபைஜிஷாஹ் நூரி அவர்கள் எங்களுக்கு கற்று தந்தார்கள்.

இறைவனின் எல்லை இல்லா ரஹ்மத்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் இந்த ரமலானில் “இறைவா உன் ரஹ்மத்தில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என்ற பெருமானாரின் துவாவுடன் தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி நப்ஸ், ஷெய்தானுடைய தீங்கை விட்டு பாதுகாப்பு பெற இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் செய்வானாக!

*
நன்றி : நூருல் அமீன்
http://onameen.blogspot.com/
https://www.facebook.com/noorul.ameen.7355

பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட்! – பாதசாரி

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது” என்பார்கள் ரசூலுல்லாஹ். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்று இணையத்தைத் தேடினால் இந்த ’ஹதீஸ்’ பலமானதா பலவீனமானதா என்று தொப்பிவாப்பாக்கள் சண்டயிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓடிவந்து விட்டேன்.

இந்த ஆமை பற்றி எனக்குப் பிடித்த எழுத்தாளரான பாதசாரி அவர்கள் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது எழுதியவற்றை சேகரித்து வைத்திருந்தேன் – கொஞ்சம் திருந்துவோமே என்று. எப்போதாவது அவற்றை எடுத்துப் படிப்பது வழக்கம் (முடியவில்லை :-)) . ’படம்’ இன்றோடு கடைசி என்று அவர் போட்டிருந்ததால் இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB


பொறாமை என்பது புற்றுநோய் மாதிரி..
முளையிலேயே கிள்ளி எறிந்தால் தப்பிக்கலாம்..

புற்று செல்கள் அதிவிரைவாகப் பல உறுப்புகளுக்கும் பரவுவது (metastases ) போல , ஒருவர்மீது கொள்ளும் பொறாமை , ஊரார் அனைவர் மீதும் பற்றி உனக்குள் துயரமாகும் . புற்று உள்ளிருந்து தொடங்குவது போல பொறாமையும் உனக்குள்ளிருந்தே புறப்படுகிறது.. வெளித்தூண்டுதல் ஏதுமில்லை !

உண்மையில் உன் பொறாமை பற்பலர் மீதூரினும் ,
காரணம் ஒன்றே தான்..

நீ ‘ஒருவர் ‘ மீது தான் பொறாமை கொள்கிறாய் !

அமைதியின்மைக்கு முழுமுதற்காரணம் பொறாமை தான்..

இந்த பொறாமை என்பதும்
ஆசையின் ஒரு மாறுவேடம் தான் !

***

” ஒருவர் மீதுள்ள பொறாமையை நீங்கள் எப்படித் தணித்துக் கொள்கிறீர்கள் ? “

” அவரை வாயாற வாழ்த்தித் தான் “
*
மருள் சூழ் உலகை எதிர்கொள்ள நமக்கு அருள் சூழ் இதயமே வழி.

யார் மீதும் உன் வருத்தத்தை அல்லது வெறுப்பை நீ நீடித்துப் பேணினால் , தீராமல் வருந்துவது நீயாகவே இருக்கக் கூடும்.

***

எல்லாமே நிலையற்றவை (impermanence) என உணரும் போதினிலே எண்ணங்களும் நிலையற்றவை தான் என – அவை தானே குறையும் என்கிறது புத்தம்.

எண்ணம் எழும் போது , ‘ ஓ..! இன்னொரு எண்ணமா ..நடக்கட்டும் நடக்கட்டும் ..! ‘ என நகர்ந்து விட வேண்டியது தான் !

***

ஆசைகளுக்கு பல குணம். இதில் பொறாமையின் ஆசை விசித்திரமானது ! எட்டுத் திக்கும் பாய்ந்து , எதிராளியால் அன்றி , தனக்குத் தானே ஆறாத உட்காயம் பெறுவது !
( சொந்த செலவில் சூனியம் எனும் இக்காலக் கூற்று இதற்கும் பொருந்தும் ! )

வள்ளுவ ஆசானே !
யாதனின் யாதனின் யாதனினும் நீங்கவியலா இது ஒன்றின் நோதலே எங்களுக்கு தலையாய துன்பம் , இறுதியாக கடைசி மனிதன் இருக்கும் வரை போலும் !

***

துள்ளித் திரியும் சிறார் மீதிலும் இருந்து , தள்ளாடும் முதியோர் மீது வரை உன் பொறாமை பாய்கிறது !

***
போட்டி மனப்பான்மையை மூன்று வேளையும் உண்டுகொண்டு , இயலாமைத் தாழ்வுணர்ச்சியை அருந்தியபடி , சுயபிம்ப ஒப்பீட்டுத் தீனியை சதா கொறித்துக் கொண்டு உறக்கமின்றி மனம் படும் பாடு தான் மனிதனுக்குப் பொறாமை .

காரணத்திற்கெல்லாம் அடிபணிந்து விடுமா இந்த மூடுபனி மனம் ?

எக் காரணம் கொண்டும் இனி எதற்கும் காரணத்தைத் தேடி , அமைதியை இழக்கக் கூடாது.

காரணம் எதுவும் வாழ்வுக்கு
அர்த்தம் வழங்கி விடாது .

எல்லாக் காரணமும்
மனிதன் புரிந்து விடச்
சுலபமானவை அல்ல..

பிறன் மனதில் ஒரு துளியும் பொறாமை இருக்காது என்று நம்பித்தான் பழகுகிறோம். இது தான் இன்றைய வாழ்வைப் புரிதலில் இறுதி நம்பிக்கையாக இருக்க முடியும்.

பிறர் மீது வெறுப்பின் கசப்பை உமிழ உமிழ , தன்மீதும் வெறுப்பின் கசப்பு தனக்குள் சேகரமாகி தானே விழுங்க வேண்டியிருக்கும்.

ஆதி முதல் இன்றுவரை ,மனிதனின் மதிக்கத் தக்க சாகசம் என்பது அது பொறாமையிலிருந்து நீங்குவது தான்..

***

கடைசி(?) பதிவு :
பொறாமை பற்றி , திகட்டத் திகட்ட எக்கச்சக்கமாக ‘ போஸ்ட்’கள் போட்டாச்சு.. இனி நீ போடத் தேவையில்லை ‘ – என்றார் நாளும் என் நலம் நாடும் மேதமைமிகுந்த மேன்மையான என் நண்பர்.
‘ ஒரே ஒரு முத்தம்..கடைசி முத்தம்..இந்த ஒரு தடவை மட்டும்..’ – எனக் காதலியிடம் கெஞ்சும் காதலன் போல , மானசீகமாக அவரிடம் கெஞ்சி விட்டு , பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட் :
‘என்னைப் பற்றி முழுசா , அவ்வளவு டீடெயிலா டீப்பா , ஏன் தெரிஞ்சுக்க விரும்பறீங்க , ஏன் பொண்ணு குடுக்கப் போறீங்களா ? ‘ – என்று கிண்டலாகக் கேட்டதற்கு ,
அவர் நேர்மையாகச் சொன்னார் :
” உங்க மேல பொறாமைப் படறதுக் காகத்தானுங்க..”
*
நன்றி : பாதசாரி

கத்தரிக்காய் கதை

முன்உரிப்பு: இது என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது. சேமிப்பிற்காக இங்கேயும்…
**

கத்தரிக்காய் கதை

(மௌலானா , மௌலவி, அல்ஹாஃபில் அஹ்மது அப்துல் காதிரி மஹ்லரி அவர்கள் நாகூர் ஷரீஃபில், 2002ஆம் ஆண்டு, ஆற்றிய உரையிலிருந்து, நன்றியுடன்..)
———–
பிஷ்ருல் ஹாஃபி (ரழியல்லாஹு அன்ஹு) சூஃபியாக வாழ்ந்தவர்கள். பல சூஃபிகளை உருவாக்கியவர்கள். அவர்கள் குறிப்பிடுகிறார்கள்… எனக்கு ரொம்ப நாளாக கத்தரிக்காய் தின்ன வேண்டும் என்ற ஆசை இருந்தது….. பலவருடங்கள் கடந்தும் நான் அதனை சாப்பிடாமலே இருந்தேன்.

கத்தரிக்காய் என்பது கிடைக்காத ஒரு பொருள் அல்ல இருந்தபோதிலும் தன் நஃப்சை (ஆசையை) அடக்கி ஒடுக்கி அதற்கு தராமல் வைத்திருந்தார்கள்.

இந்த தகவலை தொடர்வதுக்கு முன்பாக, கத்தரிக்காய் என்றதும் எனக்கு ஒரு தமாஷான விஷயம் நினைவிற்கு வருகிறது.

ஒருவன் ஊர் ஊராக சென்று கத்தரிக்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

புதிதாக ஓர் ஊருக்கு வந்த அவனின் கடையில் கத்தரிக்காய் விற்பனை ஆகவில்லை. நேரம் ஆக ஆக அவனுக்கு பயம் வந்து விட்டது. இன்று வியாபாரம் அறவே நடக்காமல் போய்விடுமோ? நஷ்டமடைந்து விடுவோமோ? அல்லது இந்த ஊர் மக்கள் கத்தரிக்காயே சாப்பிடமாட்டார்களோ என்றெல்லாம் யோசிக்க துவங்கினான்.

காலையில் துவங்கிய கடையில் ஒரு கத்தரிக்காய் கூட விற்பனை ஆகவில்லை என்றபோது அவன் ஒரு தந்திரம் செய்தான். ஒரு அட்டையை எடுத்து அதில்,
من اكل الباذنجان فقد دخل الجنة – رواه البخاري
– ’யார் கத்தரிக்காய் சாப்பிடுகிறாரோ அவர் திட்டமாக சுவனம் நுழைந்திடுவார் – அறிவிப்பாளர் புகாரி’ என்று எழுதி கடைக்கு முன்பாக வைத்தார். அவ்வளவுதான். மக்கள் பார்த்தார்கள். இப்படி ஒரு ஹதீஃதை நமக்கு யாரும் சொல்லவில்லையே இவர்தானே சொல்கிறார். அது கூடாது இது கூடாது வசீலா கூடாது மத்ஹப் கூடாது ஸியாரத் கூடாது என்று புதிது புதிதாக சொல்லும்போது ஒரு கூட்டம் அவருக்கு பின்னால் போகும் இல்லையா? அதுபோல எனக்கு உனக்கு என்று போட்டி போட்டு மக்கள் கத்தரிக்காயை வாங்க ஆரம்பித்தார்கள். இதனைப் பார்த்து அவன் அதன் விலையையும் கூட்டிவிட்டான். சற்று நேரத்தில் எல்லாம் விற்று தீர்ந்தது. விற்ற கொள்ளைக் காசை சாவாகாசமாக எண்ணிக்கொண்டிருந்தான். அந்த சமயம் அந்த வழியே ஒரு மார்க்க அறிஞர் சென்றார். அவர் அந்த BOARD-ஐ படித்து திகைத்துப் போய்விட்டார்.

இவ்வளவிற்கும் அவர் மாணவர்களுக்கு புனித புகாரி கிரந்தத்தை நடத்தக் கூடிய ஆசிரியராகவும் அவர் திகழ்கிறார்.

நேராக அந்த கடைக்காரனிடம் சென்று என்னப்பா இது? ஆச்சர்யமாக இருக்கு நானும் பல வருடங்களாக ’புகாரி’யை மாணவர்களுக்கு நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு ஹதீஃதை நான் பார்த்ததே இல்லையே! யாரப்பா இந்த புகாரி ? என்று கேட்டபோது, அவன் சர்வ சாதாரணமாக நான் தான். என் பெயர்தான் புகாரி என்று கூறினான்.

இப்படித்தான் இன்று பல புகாரிகளும் கத்திரிக்காய் வியாபாரிகளும் ஹதீதுகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

(2002 உரை)
*
பின்முறிப்பு : இது புத்தகவிழா சம்பந்தமானது அல்ல!
*
நூல் : இறை நெருக்கத்திற்கு தடையாக இருப்பது எது? (பக். 18-19)
நன்றி : அல் இஹ்ஸான் ஆன்மீக அறக்கட்டளை.


கொசுறு (இது போன வருசம் போட்டது)

மூ. எழுத்தாளர்: நான் பாராட்டியதால்தான் உன் புத்தகம் நூறு பிரதிகள் விற்றது.

இ. எழுத்தாளர்: ஆமாம் சார், இல்லையேல் இருநூறு பிரதிகள் போயிருக்கும்.

**
அடிச்சதே பத்து😁
*
(மீள்2021. இதை எல்லா புத்தக விழாக்களுக்கும் போடலாம்!)

பின்செல்லல் – உமா வரதராஜன்

ஃபேஸ்புக்கில் நண்பர் உமா வரதராஜன் எழுதும் தொடரிலிருந்து ஒரு பகுதி. நன்றியுடன் பகிர்கிறேன்.

umavaratharajan-fb1

பின்செல்லல் (40) – உமா வரதராஜன்

‘என்னுடைய கடைப்பக்கம் தயவு செய்து வந்து விடாதீர்கள் ‘ என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கூட ஒருநாள் நண்பர்கள் கூட்டம் நுழைந்து விட்டது. வெண்கலப் பாத்திரக் கடைக்குள் யானைகள் புகுவதைப் பார்க்கும் திகிலுடன் இருந்தேன் .சற்று முன் சந்தைக்குப் போன வெற்றிவேல் அண்ணன் எந்நேரத்திலும் திரும்பி வந்துவிடக் கூடும் .
அப்போது நான் பதிவு செய்து கொண்டிருந்த பாடல் ‘கோயில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ ‘. பாட்டின் நடுவே ‘பரஞ்சோதி..பரஞ்சோதி ‘ என்ற கிளிக்குரல் வந்த போது மலரவனும் அதனுடன் சேர்ந்து ”பரஞ்சோதி…பரஞ்சோதி ..” என்று கிள்ளை மொழியில் சொல்லிக் காட்டினான் .எல்லோரும் பெரிய சத்தத்துடன் சிரித்தார்கள் .எனக்கு சிரிப்பு வரவில்லை. வியர்த்துக் கொட்டியது. வெற்றிவேல் அண்ணன் வருவதற்குள் இவர்கள் எல்லோரும் கிளம்பி விட வேண்டும் என்று மனதுக்குள் அன்னை மரியாளை அமர்த்தி, அவர் முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன் .
மலரவன் என் பக்கமாக வந்து ‘ஏய் கருவாட்டுக் கூடை ..முன்னாடி போ ..என்று வருமே , அது என்ன பாட்டுடா ?”என்று கேட்டான்.
‘’அது என்னத்துக்கு ?’’ என்றேன் எரிச்சலுடன்.
‘’சும்மா சொல்லுடா!’’ .
”என் கண்மணி காதலி …” உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்னேன் .
”ஆ….அதேதான் …அந்தப் பாட்டைக் கொஞ்சம் போட மாட்டாயா ?”
”இப்போ போட முடியாது …ரெக்கோர்டிங் போய்க் கொண்டிருக்கிறது …”
”ஓ …பெரிய ரெக்கோர்டிங் …உங்களுடைய கம்பிக் கூண்டுக்குள் நின்று பாலசுப்ரமணியமும் ஜானகியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். …சரிதான்..,,அவர்களைக் குழப்பக் கூடாது .கோபித்து கொண்டு போய் விடுவார்கள் …” என்றான் நக்கலாக மலரவன் .
”கேசவா …உமா இங்கே வருவதில்லையா ” என்று கேட்டான் .
அப்பாவித் தனத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு ”உமாவா , யார் அது ?” என்று அவனிடம் கேட்டேன் .
”அடேய்…அடேய்….கடை போர்டிலேயே சிவப்பு எழுத்தில் பேர் இருக்கிறது .இரவிலும் நன்றாகத் தெரியட்டுமே என்று லைட் வேறு போட்டு வைத்திருக்கிறார்கள் ..நீயோ ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி யார் அது என்று கேட்கிறாய்….வேறு யார் ? நம்முடைய செம்மீன்தான் !”
அடிமடியில் கைவைப்பது போல் அந்தாளின் கடையில் நின்று கொண்டே அவருடைய மகள் பற்றி விசாரிக்கிறார்களே இந்தப் படுபாவிகள் ‘ என்று உதறலெடுத்தது..
நான் பதில் எதுவும் பேசாமல் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வெற்றிவேல்அண்ணனின் கட்டுமஸ்தான தோற்றங்களைக் கொண்ட புகைப்படங்களை மலரவனுக்குக் காட்டினேன் ..
”நன்றாகப் பார்த்துக் கொள் !அடித்துத் துவைத்து விடுவார்..உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இந்தப் படங்களை இங்கே மாட்டி வைத்திருக்கிறார் …”
அந்தப் படங்களையே பார்த்த படி நின்ற மலரவன்
”உங்களுடைய முதலாளி பயில்வான்தான் .ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் ஸ்ரூடியோக் காரன் எப்படி சிரிப்பை அடக்காமல் இந்தப் படத்தையெல்லாம் எடுத்திருப்பான் ” என்று என்னிடம் கேட்டான் .
தூரத்தில் வெற்றிவேல் அண்ணன் வந்து கொண்டிருந்தார்,அவர் தலை தெரிந்ததும் மெதுவாக எல்லோரும் நழுவத் தொடங்கினார்கள் .மலரவன் மாத்திரம் திரும்பவும் வந்து ,வெற்றிவேல் அண்ணனுக்கும் கேட்கும் விதத்தில் என்னிடம் ”நான் கேட்ட அந்த ஸ்டூடியோக்காரன் விஷயத்தைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லு, சரியா… ?” என்று விட்டுப் போனான்
.நான் அவனைப் பார்த்துப் பற்களைக் கடித்தேன் .
மலரவன் சென்ற பின் வெற்றிவேல் அண்ணன் வெகு அக்கறையுடன் ”என்னடா ,வரதா ! அவன் ஏதோ ஸ்டூடியோக்காரன் சம்பந்தமாக விசாரித்தான் . என்ன விஷயம் ?”என்றார் .
”ஸ்டூடியோக்காரன் ஒருவன் வேலைக்கு ஆள் தேடுகிறானாம் .தனக்கு அது கிடைக்குமா என்று விசாரித்துப் பார்க்கச் சொன்னான் ” என்று ஒரு முழுப் பொய்யைத் தயங்காமல் சொன்னேன் .
”இவனையா ? இந்தக் கழிசடையையா? இவனைச் சேர்த்துக் கொண்டால் ஸ்டூடியோ உருப்பட்ட மாதிரிதான் …. அவனின் மஞ்சள் பெல்பொட்டமும் ,கன்னக்கிருதாவும், ஹிப்பித் தலையும்…இவனுக்கெல்லாம் வீட்டில மூன்று வேளையும் ஆக்கிப் போடுகிறார்களே…அதைச் சொல்ல வேணும்…” என்று வெற்றிவேல் அண்ணன் சலித்துக் கொண்டார் .
புதிதாக வெளிவரும் பாடல்கள் பற்றி வெற்றிவேல் அண்ணனுக்கு அவ்வளவு தெரியாது . புதுப் பாடல்களுக்கு ஓர்டர் கொடுக்கும் வேலையை அவர் என்னிடம் ஒப்படைத்து விட்டார் .’கண்ட கண்ட பாட்டெல்லாம் தேவையில்லை .நன்றாகப் போகும் என்று தோன்றினால் மட்டும் ஓர்டர் செய் ‘ என்று மாத்திரம் எனக்கு அறிவுறுத்தியிருந்தார் . எது நன்றாகப் போகும் என்பதெல்லாம் முன் கணிப்பிட முடியாத ஒரு சங்கதி என்று எனக்குத் தெரியும் . சில பாடல்கள் ஒரு மூர்க்கமான கடலலை கரை தாண்டி ஊரரெங்கும் பரவி விடும் . ‘அடி என்னடி ராக்கமா ‘ ,’என்னடி முனியம்மா கையிலே மையி’, ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ , ‘ரூப் தேரா மஸ்தானா’ , ‘தம் மரோ தம் ‘ இப்படி எவ்வளவோ.
நான் ஓர்டர் கொடுத்த பாடல்களுக்கான மாஸ்டர் கெசெட்டுகள் தபால் பொதி மூலம் மூன்று நாட்களில் வந்து சேர்ந்து விடும். . அந்தப் பொதிக்குள் பல்லாயிரம் வரிக் காதல் கடிதங்கள் இருப்பது போல் தோன்றும் . கெசெட் ப்ளேயரினுள் செலுத்தி ஒவ்வொரு பாடலாகக் கேட்டு முடிக்கும் வரையில் நான் இன்னோர் உலகவாசியாகி விடுவேன்.
வெற்றிவேல் அண்ணனுக்கு பாடல்கள் தொழில் ; கூரை .ஆனால் எனக்கோ அது உலகம் .என் வானம். பாடல்களில் நான் முகர்ந்தவை பல்லாயிரம் பூக்களின் நறுமணங்கள். பூரண நிலவொளி பட்டுத் தெறிக்கும் நீரலைகளின் ஏரியில் இசையின் துடுப்புகளுடன் மிதக்கும் படகொன்று என்னிடம் இருந்தது .பாடல்களால் நான் உருகி, மெழுகின் துளிகளாகச் சொட்டியிருக்கிறேன். என் பாறையில் பாடல்களால் துளிர்த்த புற்கள் உண்டு.. காரிருள் சாலையில் அவை வானத்து நட்சத்திரங்கள்; ஒளிரும் ரீங்கார வண்டுகள்; ஆழ்கிணறிலிருந்து கேட்கும் என் குரலின் எதிரொலி .மனம் சோர்ந்து மயங்கிச் சாய்ந்த போதெல்லாம் என் முகத்தில் விழுந்த பூவாளி நீர்த் துளிகள்.
அந்த மாயாலோகத்துக்கு இன்னொருவரும் அப்போது வந்து சேர்ந்திருந்தார். செல்வச் செழிப்பற்ற முகம். ஒட்ட வெட்டப் பட்ட தலைமுடி .சோளங்கொட்டைப் பற்களுக்கும் அந்தக் கண்களுக்கும் பின்னால், காற்றடித்த பலூனுக்குக் குண்டூசி குத்திப் பார்க்கும் குறும்புத்தனம் ஒளிந்திருப்பது போல் தெரிந்தது. ஆனால் ‘சிரிப்பதா ,வேண்டாமா’ என்ற முகபாவனை.
கெசெட் கவர்களில் இருந்த அந்த மனிதரைக் காட்டி ”அண்ணன் , இந்தாளின் பாட்டுகள் வித்தியாசமாக இருக்கின்றன ” என்றேன் ..
”டேய் ,இந்தாளைப் பார்த்தால் மியூசிக் டைரெக்டர் போலவேயில்லையே …அசல் நாட்டுப் புறத்தான் மாதிரி இருக்கிறான் ..”என்று சிரித்தார் .
”நாட்டுப் புறத்தில் பாட்டு இல்லையா அண்ணன் ?அவருடைய பாட்டுகளைக் கேட்டுப் பாருங்கள் …” என்று கூறி அந்த மனிதர் இசையமைத்த பாடல்கள் பலவற்றை அவருக்குப் போட்டுக் காட்டினேன் .’செந்தூரப்பூவே ..’,’மாதா உன் கோயிலில் …’,’உறவுகள் தொடர்கதை ..’,’நினைவோ ஒரு பறவை ..’,’கண்டேன் எங்கும் பூமகள் ‘,’ஒரு வானவில் போலே ..’,’வசந்தகாலக் கோலங்கள் ‘,’செந்தாழம் பூவில் ..’,’ஏதோ நினைவுகள் ..’,’நானே நானா ..’,’அழகிய கண்ணே ‘,’மயிலே ..மயிலே..’,ஆகாய கங்கை ..’,’எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ‘,’என்னுள்ளில் எங்கோ ..’,’என் இனிய பொன் நிலாவே ..’,’என் வானிலே ..’,’காற்றில் எந்தன் கீதம் ….’…
வெற்றிவேல் அண்ணன் காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தாலும் உட்புறமாக தாளிட்டு வைத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது.
”சரி கேசவா ,ஏன் அந்தாள் டொங்கு டொங்கு என்று பறை மேளத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார் .போதாக்குறைக்கு ஒரு குழல்.அதை பீப்பீ என்று பாட்டுக்கு நடுவில் ஊதா விட்டால் அந்தாளின் மண்டை வெடித்து விடுமா ”என்று வெற்றிவேல் அண்ணன் நக்கலாகக் கேட்டார் .
இன்னொருநாள் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ‘ என்ற அடித்தொண்டைக் குரலில் ஒலித்த பாடலைக் கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் .வேறொரு நாள் ‘தாம் த தீம் த தோம் ‘என்று கோரஸ் தொடங்கி ‘சச்ஜங்க் …சச்ஜங்க் …’என்று குரல்கள் ஒலித்த போது பொறுமையின் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டார்.
”சைக்…இதுவெல்லாம் நல்லாவாடா இருக்கு கேசவா ?” என்று வெற்றிவேல் அண்ணன் என்னை உலுக்கி எடுத்தார் .
நான் புன்னகை செய்து சமாளித்தேன் .”வித்தியாசமாக இல்லையா அண்ணன்? அப்படிச் செய்து பார்க்கிறார்.அது நல்லதுதானே ” என்றேன் .
வெற்றிவேல் அண்ணன் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை .
”அந்த நாள் பாட்டுகள் எப்படி இருக்கும் தெரியுமா ?பாசமலர் ,பாவமன்னிப்பு ….”என்று வெற்றிவேல் அண்ணன் தொடங்கியதை ”பார்த்தால் பசிதீரும் ,பாக்கியலக்ஷ்மி ,பாதகாணிக்கை ” என நான் கிண்டல் தொனியில் முடித்து வைத்தேன் .
”ஆங் …அதெல்லாம் பாட்டு …இதெல்லாம் என்ன ? இளையராசாவாம் ” என்று சலித்துக் கொண்டார் .
அதற்குப் பின்னர் இளையராஜா குறித்து இருவரும் பேசிக் கொண்டதில்லை .
அந்த நாட்களில் ‘ஒரே ஜீவன் ஒன்றே நெஞ்சம் வாராய் கண்ணா ‘ என்றொரு பாடல் வெளியானது. ‘நீயா’ படத்தில் பாம்பு ஒன்று பெண்ணுருவில் வந்து இந்தப் பாடலை அடிக்கடி பாடி படத்தின் ஆண் பாத்திரங்களைப் பழி வாங்கிக் கொண்டிருக்கும் . அது என்னையும் விட்டு வைக்கவில்லை. படாத பாடு படுத்தி விட்டது.
புதிதாக முளைத்த நாகதம்பிரான் கோயிலுக்கு பாற்குடங்களுடன் படையெடுத்ததைப் போல எங்களூர் சனங்கள் இந்தப் படத்தையும் கும்பல் கும்பலாகத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்தார்கள் . இதன் எதிரொலி என் ரெக்கோர்டிங் நிலையத்தில் மறுநாளே தெரிந்தது .
கட்டுப் பெட்டிக்குள்ளிருக்கும் பாம்பை வெளியே எடுத்து ஆட்டிக் காட்டும் குறவன் போல வெற்றிவேல் அண்ணன் மாறி விட்டார். ‘ஒரே ஜீவன் ‘ பாடல் கேட்டு வருபவர்களின் ஓர்டர்களை எல்லாம் பூரிப்புடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
‘ஒரு மணித்தியாலக் கெசெட்டை நிரப்ப இன்னும் 13 பாடல்கள் அளவில் தேவைப் படுமே’ என்று நான் கேட்ட போது அவற்றையும் பாம்புப் பாடல்களாகத் தேர்வு செய்து நிரப்பினால் நன்றாக இருக்குமே என வெற்றிவேல் அண்ணன் ஒரு ‘புதுமையான ‘யோசனையை சொன்னார் .
நான் கடுமையாக முயற்சி செய்து ,ஞாபகப் படுத்தி ‘கணவனே கண் கண்ட தெய்வத்தில் தொடங்கி வெள்ளிக்கிழமை விரதம் வரை ‘பாம்புப் பாடல்கள் ‘ பலவற்றைக் கண்டு பிடித்தேன் . அப்படியும் ஓரிரு பாடல்கள் தேவைப் பட்ட போது ‘ ஹிந்தியில் வந்த ‘நாகின்’ போன்ற பாம்புப் படப் பாடல்களையும் சேர்த்துக் கொள்வோமா என்று வெற்றிவேல் அண்ணனிடம் கேட்டேன். அவர் உடனே சொன்னார் .’’வரதா ,நமக்குப் பாம்புதான் முக்கியம். பாஷை அல்ல! ‘’
இதன் விளைவை இரவுகளில் உறங்கும் போது உணர்ந்தேன். ‘ஹெட் போன் இல்லாமலும் காதினுள் ‘ஓ …ஓ ..ஓ ..’என்ற ஒரே ஜீவன் பாடலின் ஹம்மிங்கும் மகுடி ஓசையும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தன . அந்த நாட்களில் வந்த கனவுகளிலும் விதம்விதமான பாம்புகள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தன .
P .B .ஸ்ரீனிவாஸின் பாடல்களில் பித்துப் பிடித்த ஒரு மனிதரையும் அந்த நாட்களில் நான் அங்கே சந்தித்தேன் . ஐம்பது வயதைத் தாண்டிய அவர் தரும் பட்டியலில் ஸ்ரீனிவாஸ் தவிர யாருக்கும் இடமில்லை .அந்தப் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் போது ஸ்டூலை எடுத்துப் போட்டுக் கொண்டு என் பக்கத்திலேயே உட்கார்ந்து விடுவார் .மதுவின் லேசான நெடி அவரிடமிருந்து வீசிக் கொண்டிருக்கும் . ‘நெஞ்சம் அலை மோதுதே ..கண்ணும் குளமாகவே …ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள் …’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது பித்துப் பிடித்தவர் போல் தலையை அசைத்த படியே இருப்பார் .கைகள் தன் பாட்டில் உயர்ந்து தாழும் .அவருடைய கண்களில் நீர் தளும்பிக் கொண்டிருக்கும் .அவர் தேர்ந்து தந்த எந்தப் பாடல்களிலும் ஸ்ரீநிவாஸ் உற்சாகத்துடன் ,மகிழ்ச்சி பொங்கப் பாடியது கிடையாது .துயரம் ,சோர்வு ,விரக்தி ,ஏமாற்றம்தான் அந்த மென்மையான குரல் வழியே பரவிக் கொண்டிருந்தன .
அவர் கெசெட்டை வாங்கிக் கொண்டு சென்றதும் வெற்றிவேல் அண்ணன் என்னிடம் சிரித்தவாறு சொன்னதுண்டு .
”இவன் தலைவிதி இது .இன்று வரை கல்யாணம் முடிக்கவில்லை .ராதை பிரிந்து போய் ,கல்யாணமாகி பேரப் பிள்ளையும் கண்டு விட்டாள் …இவர் தண்ணி போட்டுக் கொண்டு கண்கள் குளமாகித் திரிகிறார் ….”
எனக்கு ஏனோ சிரிக்கத் தோன்றவில்லை .அவரவர் துயரத்தை அவரவர் சுமந்து கடக்க எவ்வளவோ மார்க்கங்கள் உண்டு.

*

நன்றி : உமா வரதராஜன்

« Older entries