ஸாஃப்டான ஆட்கள் ‘தேரா திக்ர்’ கேட்டுவிட்டுப் போய்விடுங்கள். சரியா?
‘கல்ஃப் கலீஜா ‘ பிஸ்கட்களை காலையில் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்படுவது வழக்கம். மெட்ரோவில் என்னை விடுவதற்கு – சாதாரண அர்த்தம்தான் – வரும் சூபர்வைசர் ஷாஜு போனவாரம் சொன்ன ஜோக்கால் எந்த பிஸ்கட்டும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அந்த கண்றாவி ஜோக் இதுதான்:
பெரிய கீற்றுத் தடுப்பிலுள்ள ஒரு துளையை உபயோகித்து அந்த கிராமத்துக் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது வழக்கம் – முகத்தைப் பார்க்காமலேயே. ச்ச்…ம்ம்ம் ச்ச்ச்…! இந்தப் பக்கத்திலுள்ள காதலன் தன் உதட்டை (கீற்று) துவாரத்தில் வைத்துக்கொண்டிருந்ததை ஒருநாள் பார்த்த பெண்ணின் தகப்பன் கடுப்பாகி, கக்கூஸ் போய்விட்டு அப்படியே கழுவாமல் , அந்தப் பக்கத்தில் தன் பின்பக்கத்தை வைத்திருக்கிறார், குனிந்தபடி. காதலன் சொன்னானாம் : ‘அன்பே, பிஸ்கட் சாப்பிட்டுட்டு வாய கழுவாம அப்டியே வந்துட்டியே!’
பழைய ஜோக்கோ? எனக்கென்ன தெரியும், நானா முகர்ந்தவன்?! லிபியா பற்றி இங்கிருந்து எழுத இயலாததால் லிப்ஸ்-டு-லிப்ஸ் சொன்னேன். சரி, இப்போ ’ஹாரிபிள் ஹஜ்ரத் ஜோக்’ சொல்லி அனைவரையும் அதிரவைத்த (கடுமையாக திட்டி மெயில் அனுப்பிய ஒரு ஆலிம்ஷா கடைசிவரியாக ‘இதுபோல் அடிக்கடி பதியவும்’ என்று சிரிப்புடன் குறிப்பிட்டதை சொல்ல விரும்புகிறேன்) மஜீதுக்கு வருவோம். இவரது கலாட்டா தாங்க இயலவில்லை. 2 TB எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் இருநூறு திர்ஹம் (சிலர் டிராம் வண்டியோட்டுவது போல ’திராம்’ அல்ல) குறைவாக பர்துபாய் பஜாரில் இருப்பதாக முந்தாநாள் – அங்கிருந்தே – ஃபோன் செய்தார். சைஸ் என்ன என்று கேட்டால் ‘துஆ’ சைஸ்லெ பாதி இருக்கும் நானா’ என்கிறார்! அப்புறம்.. உலகத்திலேயே தன் வீட்டு நாய்க்கு செல்லப்பெயராக ‘நாயி’ என்று வைத்தவர் இவராகத்தான் இருக்கும். பூனைக்கு? பூனய்.. ! இந்த ’ஷார்ஜா ஷேக்’ எது சொன்னாலும் ’ஷாக்’!
நேற்று இவர் அனுப்பியதைப் படித்தபிறகு விக்ஸ் தடவி சிகரெட் குடிக்கவே அருவருப்பாக இருக்கிறது, பார்த்துக்கொள்ளுங்கள். நாளையிலிருந்து சுருட்டுதான்!
ஒரு விஷயம்… நான் கேட்காமலேயே சில ’நண்பர்கள்’ – தன் வலைப் பக்கத்தில்கூட பதிவிடாமல் – ஏடாகூடமாக எதையாவது எழுதி – எனக்கு அனுப்பி விடுகிறார்கள். ’ஆபிதீன் பக்கங்கள்’ பிரபலமாக இருக்கிறாம். அப்படியா, அகிலத்திலுள்ள ஆறுபேர்கள் அன்றாடம் ’தூக்கி’ப் பார்ப்பதாலா? ஆனால் அநியாயத்திற்கு அடிவாங்குபவன் நானாக அல்லவா இருக்கிறேன்? யா அல்லாஹ், என்னை மட்டும் காப்பாற்று!
***
நவீன கழுவேற்றம் – மஜீத்
புகைபிடிக்கும் வழக்கமுள்ள ஒரு நண்பரைச் சந்திக்க சமீபத்தில் சென்றேன். ‘உர்-உர்’ என்று இழுத்துக் கொண்டிருந்தார், புகையை அல்ல அவரது மூக்கை, இருமிக்கொண்டே. அக்கறையோடு கேட்டேன்: இப்ப உங்களுக்கு சிகரெட் ஞாபகம் அவ்வளவா வராதே? (இப்படி ஒரு சூழ்நிலையில்தான் நான் சிகரெட்டை விட்டேன்.) ஆனால் அவர் ரொம்பத் தெளிவு – என்னை மாதிரி இல்லை. ஒரு strepsils மாத்திரையை சப்பிக்கிட்டே, ஒரு கப் தேநீரும் குடித்தால் சிகரெட் பிடிக்கும் ‘மூட்’ தானாக வருமென்று சொல்லிக்கொண்டே, இன்னொரு ‘ஐடியா’வும் செய்தார். “விக்ஸ்” மருந்தை விரலில் எடுத்து அதை ஒரு சிகரெட்டில் சுற்றிலும் தடவி, அப்படியே மூக்கருகே வைத்து முன்னும் பின்னும் நகர்த்தி ஆழ்ந்து நுகர்ந்தார். ஆஹா, இதெல்லாம் நமக்குத் தோனலயே, அநியாயமா விட்டுத் தொலச்சுட்டமேன்னு நொந்தபோது, பழைய கதை ஒண்ணும் ஞாபகம் வந்தது.
சொல்லாட்டி நமக்கு தூக்கமும் வராது.
நண்பரின் வீட்டுக்கு மாதம் ஓரிரு முறை சென்று, அவருடன் பல சங்கதிகளையும் அளவலாவி மகிழும் ஒரு அப்பாவியின் பரிதாப கதை இது. என்னதான் அவர் மகிழ்ந்தாலும் அந்த சந்திப்புகளில் அவருக்கு ஒரு சங்கடமும் இருந்தது. நண்பர் அடிக்கடி சுருட்டு பிடிப்பவர். இவருக்கோ அந்த வாடையே பிடிக்காது. இருந்தாலும் சகித்துக்கொண்டே சென்று வருவார்.
அன்று நண்பரின் வீட்டை அடைந்தவுடன் வரவேற்ற நண்பர் இவரை உட்காரவைத்துவிட்டு இதோ சிலநிமிடங்களில் வந்துவிடுகிறேன் என்று வெளியே சென்றார். இவர் அமர்ந்திருக்கும்போது முன்னால் இருந்த மேசையில் 4 சுருட்டுகள் இருந்ததைப் பார்த்ததும் பொங்கிவிட்டார். இன்று நண்பரைப் பழிவாங்க முடிவெடுத்ததும் ஒரு விபரீத யோசனை தோன்றியது.
சரேலென்று எழுந்து அறைக்கதவை சாத்தியவர், நான்கு சுருட்டுகளையும் எடுத்து, அவற்றின்மீது, ஒன்றன்பின் ஒன்றாகக் ’கழுவேறினார்’
குரூர திருப்தியுடன் அவற்றை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, கதவையும் திறந்து வைத்துவிட்டு ஒன்றுமறியாதவர்போல் வந்து அமர்ந்துகொண்டார்.
நண்பரும் வந்தார். சிறிது நேரத்தில் முதல் சுருட்டைப் பற்றவைத்தார். ஏதோ துர்நாற்றம் வரவே, சீக்கிரமே எறிந்துவிட்டார். நம்மவருக்கு சிறிது சந்தோஷம். கொஞ்சநேரத்தில் இரண்டாவதைப் பற்றவைக்க, அதே நாற்றம் வர, அதையும் உடனே எறிந்துவிட்டார். நம்மாளுக்கோ கொஞ்சம் அதிக சந்தோஷம். சிறிது நேரம்கழித்து இன்னொரு சுருட்டை எடுத்த நண்பர், பழைய பழக்கதோஷத்தில் அந்த சுருட்டை மூக்கருகே வைத்து ஆனந்தமாக உறிஞ்ச முயற்சித்தார். (பிடித்தமான பிராண்ட் விஸ்கி பாட்டிலை உடைத்ததும், கிளாசில் ஊற்றும் முன்பு முழுமூச்சாய் ஒரு மோப்பம் எடுப்பதைப் போல).
முகம் அஷ்டகோணலாக மாறி, அந்த சுருட்டையும் மீதமிருந்த இன்னொன்றையும் சேர்த்து வெளியே வீசியெறிந்தார். மறுபடி சுருட்டை அவர் நாடவே இல்லை. நம்மாளுக்கோ ஏகசந்தோஷம்!! அரட்டையும் தொடர்ந்தது. மேலும் சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.
அடுத்தமுறை இவர் நண்பரைத் தேடிப்போகும்போது, நண்பர் வெகு உற்சாகமாக இருந்தார். ஆனால் இவரோ நேரெதிராக ஏதோ சோகமாகவே தெரிந்தார். உள்ளே சென்றமர்ந்ததும் நண்பர் சந்தோசமாகச் சொன்னார்: “போனதடவை நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து, நான் சுருட்டு குடிக்கிறதை விட்டுட்டேன்”
நம்மவர் சோகமாக பதிலளித்தார்: “நான் ஆரம்பிச்சுட்டேன்”
***
நன்றி : மஜீத் | amjeed6167@yahoo.com