TENET – சென்ஷியின் சிறு விமர்சனம்

’படம் எப்படி?’ என்று தம்பி சிவா ஃபேஸ்புக்கில் கேட்டதற்கு ‘புரியலே, ஆனா நல்லா இருந்தது!’ என்று நேர்மையாக பதில் சொல்லியிருந்தேன். அமர்க்களம்.. அமர்க்களம்.. என்று சொல்லியபடி கைதட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்த சென்ஷியின் குறிப்பு பிடித்திருக்கிறது. பகிர்கிறேன். – AB

*

TENET – சென்ஷி

மிக எளிமையான நாயக மனப்பான்மை கதைதான். அதை நோலன் கொடுத்திருக்கும் விதம்தான் இன்செப்சனை விட அதிக சிக்கலானதாக மாற்றுகிறது. காரணம் கால பயணம் குறித்த பல திரைப்படங்களை ரசிகர்கள் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிட்டிருப்பதால், நோலனின் காலபயணம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம்தான் என்னை அவசியம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தள்ளியிருந்தது. (Interstellar-ல் புதிய கிரகத்தினை தேடி பயணப்படும் கதை என்பதில் கிடைத்த அதே ஆவல்) நோலன் காட்டியிருக்கும் திரைப்படம் ஒரு காட்சிப்பதிவில் அட்டகாச முன்முயற்சி. காலபயணத்தில் நம் கண்முன் இரண்டு(!) விதமான சாத்தியத்தையும் எடுத்திருப்பதும், முன்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குழப்பங்களுக்கெல்லாம் கடைசி முப்பது நிமிடங்களில் பிரம்மாண்டமான சண்டைப்பதிவுடன் முடிவு சொல்லுவது அற்புதம்.

முக்காலே மூணுவீசம் இயற்பியல் கோட்பாடுகளும் அரைவீசம் கணிதச்சமன்பாடுகளும் மற்றும் காலபயண திரைப்படங்களின் ரசிகர்களிடையே படாதபாடுபடும் பாரடாக்ஸ் (முரண்பாட்டின்) சாத்தியத்தையும் வசனங்களாய்க்கொண்ட திரைப்படத்தில் இவற்றைக் காட்சிப்படுத்தலில் நோலன் எடுத்திருக்கும் முயற்சிதான் பிரமிப்பு. அவர்கள் பேசும் வசனங்களை புரிந்துகொள்ளும் முன்பே காட்சியின் பிரம்மாண்டத்தில் ரசிகர்களை சிக்க வைத்துவிடுவதால், முதன்முறை பார்த்துவிட்டு படம் புரிந்தது என்பவர்கள் பிஸ்தாக்கள்தான். எனக்கு சில இடங்களில் விடுபடல்களும் குழப்பங்களும் இருந்தன. முக்கியமாய் முதல் காட்சியில் வரும் தொடர்பு பின்னால் எங்கேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஆனால் இறுதிக்காட்சிவரை சினிமாப்பிரியர்களை நோலன் ஏமாற்றவில்லை.

நிச்சயம் நான் இங்கு திரைப்படத்தின் கதையை எழுதவில்லை. அப்படியே எழுதினாலும், உலகை அழிக்கத் துடிக்கும் கெட்டவனிடமிருந்து உலகைக் காப்பாற்ற புறப்பட்டு(!) வரும் நாயகன் என்பதாக ஓரிரு வரியில் முடிந்துவிடும். ஆகவே எதையும் எதிர்பார்க்காது, நோலனின் கால யந்திர உலகத்தை காட்சிப்பதிவாக அனுபவித்து ரசிக்க எண்ணினால் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

அநேகமாக நமது இயக்குந கஜினிகள் யாரேனும் சில வருடங்கள் கழித்து இது தோல்வியடைந்த குழப்பமான கதை. நான் இதை மக்களுக்கு புரியும்படி எடுத்தேன் என்று உடான்ஸ் விடவும் சாத்தியம் அதிகம் உண்டு.

(திரைப்படத்தின் கதை அவசியம் தெரியவேண்டும் என்பவர்களுக்காக ஸ்பாய்லர் அலர்ட்களுடன் தனிப்பதிவு நட்பு வட்டத்தினருக்காக மாத்திரம் இடப்படும். இதில் எனது சந்தேகங்களும் இடம் பெறும் படம் பார்த்து தெளிவு பெற்றோர் விளக்கமளித்தால் தன்யனாவேன்!)
*


Thanks to : SenShe
https://www.facebook.com/me.senshe/posts/10220942135195691

Related Link :
TENET – Trailer
Thanks to : Warner Bros. Pictures
https://www.youtube.com/watch?v=AZGcmvrTX9M

3 பின்னூட்டங்கள்

 1. 02/09/2020 இல் 10:45

  ஃபேஸ்புக்கில் சென்ஷி :

  படம் பார்க்க நினைப்பவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம். முழுக்க முழுக்க ஸ்பாய்லர்ஸ்..
  ***
  உக்ரைனில் அமைந்துள்ள ஓபெரா அரங்கத்தினை இசை நிகழ்ச்சியினூடே தீவிரவாதிகள் கைப்பற்றுகிறார்கள். வெளியே காத்து இருக்கும் பாதுகாப்பு படையினர் அனைவரையும் மயக்கமுறச் செய்யும் முயற்சியை தீவிரவாதிகள் தெரிந்துகொண்டு, புகையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முகமூடியை அணிந்து பாதுகாப்பு படையினரை எதிர்க்கத் தயாராகின்றனர்.
  பாதுகாப்பு படையினூடே அமெரிக்க சிஐஏ உளவு நிறுவன படைவீரர்களும் கலந்து உள்ளே நுழைகின்றனர். அரங்கத்தின் மாடி முகப்பில் அமர்ந்திருக்கும் நபரைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
  ”நாம் இருள் சூழ்ந்த உலகில் வாழ்கிறோம்” என்ற கேள்விக்கான கடவுச்சொல்லாக-
  “இவ்விருளில் நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை” என்று சரியான பதிலை அந்த நபரிடமிருந்து பெறுவதால், நாயகன், இந்த தீவிரவாத தாக்குதல் உன்னுடைய பணியை தடுத்து நிறுத்துவதற்கு என்கிறான். அந்த பொருள் எங்கிருக்கிறது என்று கேட்க, மேலங்கிகள் வைக்கும் அலமாரியில் இருப்பதாகச் சொல்ல, அங்கிருந்து அந்த நபரைக் காப்பாற்றி, தீவிரவாதிகள் வைக்கும் வெடிகுண்டுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அவற்றை தூக்கியெறிந்து அங்கிருந்து தப்பித்து வெளியேறும் பொழுது நாயகன் சிக்கிக் கொள்கின்றான். கடத்திய பொருளைப் பற்றி கேட்டு ஒருவன் துன்புறுத்துகிறான். எதிரியின் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க, தற்கொலை செய்துகொள்ளும் மாத்திரையை கடிக்கிறான் நாயகன்.
  மீண்டும் கண்விழிக்கையில் சிஐஏ தலைவர் நாயகன் கோமாவில் வீழ்ந்ததாகவும், கோமாவில் இருந்து மீட்டெடுத்து நாயகனை வேறு ஒரு வேலைக்காக தேர்வு செய்ததாக சொல்லுகிறார். சிஐஏ பதிவின் படி அவன் இறந்தவனாக கருதப்படுகிறான். தற்கொலைக்கான மாத்திரை என்பது வெறும் ஏமாற்றுவேலை என்று அறிகிறான். முதலில் மறுக்கும் நாயகன் பின் ’டெனெட்’ எனப்படும் அமைப்பில் இணைய முடிவு செய்கிறான்.
  டெனெட் என்று அழைக்கப்படும் அமைப்பின் அடையாளம் இரண்டு கைவிரல்களும் கோர்த்தலாக இருக்கிறது. எதிர்காலத்தில் இருப்போரும் இறந்த காலத்தில் இருப்போரும் தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக டெனெட் உள்ளது. இறந்த காலத்தில் ஏற்படப்போகும் அபாயங்களை எதிர்காலத்தினர் குறிப்பிட்டு, அதை சீரமைக்க செயல்படும் குழுவாகவும் செயல்படுகிறது. இதில் நாயகன் இணைந்தபின், அவனுக்கான முதல் பணியைக் குறித்து அறிந்து கொள்ள உலோகங்களின் பண்புகளை ஆராயும் நிபுணரைக் காண்கிறான். தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியைக் கொடுத்து துப்பாக்கித் தோட்டாக்களால் சிதைந்த ஒரு சுவரைக் காண்பித்து சுடச் சொல்கிறார். காலி துப்பாக்கியை எப்படி சுட என்று நாயகன் தயங்கி, சுட – சுவரிலிருந்து குண்டு எதிர்மறையாய் துப்பாக்கியில் வந்து இணைகிறது. இது காலத்தை எதிர்த்துச் செல்லும் தோட்டாக்களில் ஒன்று என்று நிபுணர் கூறுகிறார். இதை யார் தயாரித்தது என்று நாயகன் கேட்க, இதை எதிர்காலத்தினர் யாரோ தயாரித்துள்ளனர் என்று பதிலளிக்கிறார். எதிர்காலத்திலிருந்து வந்த பொருட்களை அறிந்துகொள்ள அதை தவறவிடுதல் போன்ற செயல்களின் மூலம் கைவரச் செய்யலாமென்று கூறுகிறார். அதாவது பொருட்களின் இறந்தகாலத்தைக் கணித்துச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமின்மையையும் அவர் குறிப்பிடுகிறார். (நெசமாத்தாங்க!) இதைப் போன்ற பொருட்கள் ஒரு அறை முழுக்க சேகரித்து வைக்கப்படிருக்கிறதையும் நாயகன் காண்கிறான்.
  தோட்டாக்களின் பூர்விகத்தைப் பற்றி அறிந்து கொள்ள, இரகசியமாக ஆயுதபேரங்கள்/கடத்தல்கள் செய்யும் இந்தியாவில் பாதுகாப்பு படையின் மத்தியில் வாழும் சஞ்சய் சிங்கை சந்திக்க நீல் (ராபர்ட் பேட்டின்சன்) என்பவனின் துணையோடு அவனது வீட்டில் நுழைகின்றனர். உக்ரைன் சம்பவத்தில் தனக்கு அருகில் சுடப்பட்ட அந்த தோட்டாவினைக் குறித்தும் சஞ்சய்சிங் தான் சந்திப்புகளை முன்னெடுத்துச் செல்லும் தரகர் மாத்திரமே என்று கூறுகிறார். உண்மையான ஆயுத பேரத்தில் ஈடுபடுபவர் சஞ்சயின் மனைவியான பிரியா (டிம்பிள் கபாடியா) என்பதை அறிகின்றனர். அங்கு ஆந்த்ரே சாத்தோர் என்னும் பணக்கார லண்டன் வாழ் ரஷ்யனைப் பற்றி அறிகின்றனர். அவனுக்காக அனுப்பட்ட ஆயுதங்கள் அவை என்று அறியும் நாயகன் அவை விற்கப்பட்ட பொழுது சாதாரண தோட்டாவாக இருந்ததை அறிகிறான்.
  சாத்தோரிடம் நட்பு கொண்டு மாத்திரமே ஆயுதங்கள் எதிர்காலத்திலிருந்து எப்படி இறந்த காலத்திற்கு உருமாறியது என்று அறிந்து கொள்ள பிரிட்டிஷ் உளவாளி ஒருவரை (மைக்கேல் கெய்ன்) நாயகன் சந்திக்கிறான். சாத்தோரின் ரஷ்யபின்னணியைக் குறித்து நாயகனிடம் பகிரும் அவர், அவர் சாத்தோரைக் குறித்து அதிகம் அறிந்து கொள்ள அவனது மனைவி காட் எனப்படும் காத்தரின் மூலம் மாத்திரமே இயலும் என்று கூறுகிறார். ஒரு போலியான ஓவியத்தை உண்மையான ஓவியமென்று ஏலத்தில் விற்றதை அவர் மூலம் நாயகன் அறிந்துகொள்கிறான். இந்த ஓவிய விசயம் கொண்டு காதரினிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறான். ஆனால் காதரினை சாத்தோர் உண்மையான ஓவியம் கொண்டு மிரட்டி வருவதை அறிகிறான். ஓவிய மோசடி காரணமாக கைது செய்யப்பட்டால், காதரினின் மகனை சாத்தோர் வசம் கொண்டு சென்றுவிடும் வாய்ப்பு இருப்பதால் எதையும் சொல்ல மறுக்கிறாள். சாத்தோர் உலகை அழிக்கும் திட்டத்தில் இருப்பதை அறிவதால், இறுதியாய் சாத்தோரை வியட்நாமில் அவர்களது கப்பலில் சந்தித்ததையும் ஒரு பெண் கடலில் குதித்து சென்றதையும் காதரின் கூறுகிறாள்.
  விமானநிலையத்தில் உள்ள தீர்வையில்லா பணிமனையில் பத்திரமாக இருக்கும் உண்மையான ஓவியத்தை மீட்டு வருவதாக நாயகன் கூறிவிட்டு, நண்பன் நீல் மற்றும் குழுவினருடன் விமான நிலையத்தில் தங்கம் ஏற்றிச் செல்லும் விமானத்தை பணிமனையில் மோதச் செய்து பெரிய விபத்தை ஏற்படுத்துகிறான். சாத்தோருக்கான பணிமனைக்கான இடத்தில் ஓவியம் கிடைக்காது, அங்கு ஒரு உருளை வடிவ அறை இருப்பதை காண்கிறான். அப்போது அந்த உருளையிலிருந்து வெளிவரும் எதிர்காலத்தைச் சேர்ந்த முகம் தெரியாத ஒருவனுடன் நாயகன் போராடி கத்தியால் கையில் குத்துகிறான். உறுதியளித்தபடி வெளிநாட்டு தூதரகத்தை சேர்ந்தவனென சார்த்தோரிடம் நாயகனை காதரின் அறிமுகம் செய்து வைக்கிறாள். நாயகன் மற்றும் எதிர்நாயகனின் முதல் சந்திப்பு இனிமையாக இல்லாதபடியால், புளுட்டோனியத்திற்காக சாத்தோரை சந்திக்க வந்ததாக நாயகன் கூறுகிறான். கடல் பயணத்தில் சாத்தோரை காதரின் கொல்ல முயல, நாயகன் காப்பாற்றுகிறான். புளுட்டோனியத்தை கடத்தி தருவதாகவும் ஆனால் இடைத்தரகராக காதரின் இருக்கவேண்டுமெனவும் நாயகன் கேட்கிறான். புளுட்டோனிய கடத்தலில் ஆயுதம் கைக்கு கிடைக்காத கோபத்தில், காதரின் உயிருக்கு சாத்தோரால் ஆபத்து ஏற்பட, இவர்களைக் காப்பாற்ற எதிர்காலத்தில் இருந்து வரும் குழுவினரிடமிருந்து சாத்தோர் காலபயணம் செய்யும் உருளை மூலம் தப்பிக்கிறான். காதரினை உயிருடன் காப்பாற்றவும், சாத்தோரிடமிருந்து உலகைக் காப்பாற்றவும் நாயகன் காலபயணம் சென்று நிகழ்வுகளை மாற்ற முடிவு செய்ய –
  பிறகு நடக்கும் குழப்பங்கள் குறித்து.. அடுத்த பதிவில்…

 2. 02/09/2020 இல் 12:11

  மீண்டும் சென்ஷி…:

  இரண்டாம் பாகம் செல்லும் முன்பு…
  ஹீரோ, வில்லனின் மனைவி உதவியுடன் எதிர்காலத்தில் கிடைக்கும் அழிவாயுதத்தைக் கொண்டு, வில்லன் நிகழ்காலத்தில் உலகை அழிக்க நினைப்பதை தனது குழு உதவியுடன் தடுக்கும் கதைதான் இது.
  எல்லோரும் நம்புவது போல நோலன்-தனம் என்பது கதை சொல்வதில் மாத்திரம் அடங்கிவிடுவதில்லை. அந்த கதையை விசுவல் ட்ரீட் (காட்சியின்பம்) ஆக மாற்றும் வித்தை தெரிந்த இயக்குநர். அதனாலயே டெனெட் இதுவரைவந்த டைம் டிராவல் திரைப்படங்களை சற்று அடங்கி இரும் பிள்ளாய்! என்று சொல்லி இருக்கிறது. காலபயணம் என்பதில் இதுவரை பார்த்து வந்த கிளிஷேக்களை (நைந்து நூலாகிப்போன) காட்சியமைப்பில் புதிய வடிவில் திரை ரசிகர்களுக்கு காட்டிய விதத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரையரங்கில் மாத்திரமே நோலனின் பிரம்மாண்டத்தினை, பின்னணி இசையினை அனுபவித்து பிரமிக்க முடியுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ப்ளூரே வந்தபின்னால் நல்ல பெரிய திரை, அட்டகாசமான ஒலியமைப்பு வசதி கொண்டிருந்தால் அடிக்கடி ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

 3. 03/09/2020 இல் 10:39

  இத்தோடு கடைசி! – சென்ஷி

  2.0 – Tenet விமர்சனம் (முடிவு பகுதி)

  இரண்டாம் பதிவில் நோலன் தெரியப்படுத்தும் மூன்று விசயங்களினை முன்னர் தெரிந்து கொள்வோம்.
  1. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி (Thermodynamics Second Law) – இதன் முதல் விதி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை பிறிதொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இரண்டாம் விதிதான் என்ட்ரோபி என்னும் அளவீட்டை முன்னிறுத்துகிறது (Entropy). . எந்த பொருளின் மீதும் செலுத்தப்படும் ஆற்றல் அதன் என்ட்ரோபியை அந்த பொருளில் குறைக்கும். அதன் சூழலில் அதன் தாக்கம் அதிகரிக்கும். உதாரணத்திற்கு நீரை குளிர்சாதன பெட்டியின் உறைவிப்பானில் (Freezer) வைக்கும்போது, பனிக்கட்டியாகையில் நீரின் எண்ட்ரோபி குறையும். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியேறும் வெப்பத்தில் என்ட்ரோபி சிதறலாகிறது. நோலன் என்ட்ரோபியை நேரத்தை அல்லது காலத்தை கடக்க உதவுவதாக வடிவமைத்துக் கொள்கிறார்.
  இரண்டாவது நேர்மாறல் அல்லது தலைகீழ் விதி (Inversion). இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், தவற விட்ட பொருட்களைத்தான் எடுக்க இயலும் என்று கூறலாம். அதாவது, பந்தை சுவரில் அடிக்கும்பொழுது நமது கைக்கு வருவது போன்று, கீழே விழுந்து கிடக்கும் எந்த பொருளையும், நாம் தவறவிடுவது போன்ற முயற்சியில் கையில் எடுக்க இயலும். ஆனால் அது எதிர்காலத்திலிருந்து இறந்த காலத்திற்கு நகர்ந்ததாக இருக்க வேண்டும். சுவரில் இருக்கின்ற குண்டினை சுட்டு துப்பாக்கியில் பிடிக்கும் டிரெய்லர் காட்சி நினைவில் கொள்ளுங்கள்.
  மூன்றாவது காலபயண திரைப்பட ரசிகர்களிடையே படாத பாடு படும் காலபயணத்தின் முரண்பாட்டு விதி (Grand father Paradox). நிகழ்காலத்தில் உள்ள பேரன் இறந்தகாலத்திற்கு கால பயணம் செய்து தனது தாத்தாவை சிறுவயதிலேயே கொன்றுவிட்டால், நிகழ்காலத்தில் பேரன் உயிருடன் இருப்பானா இல்லையா என்பதுதான் காலபயண முரண்பாட்டு விதி எனப்படும். இதில் Parallel universe, Alternate Timeline போன்ற ஜல்லிகள் இருப்பினும் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
  ***
  நோலன் காலபயணத்திற்கு என்ட்ரோபியை தேர்ந்தெடுக்கிறார். கவிதைக்கு பொய் அழகாய் இருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு கற்பனைதான் அழகு. Inception திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் கனவு வடிவமைப்பாளராய் தேர்ந்தெடுக்க டிகாப்ரியோ ஒரு நிமிடத்தில் வெளியேற இயலாத வடிவத்தை வரையச் சொல்லுவது நினைவிருக்கும். அதைப் போலவேதான் இதிலும். காலத்தில் பின்னோக்கிபயணம் செய்யும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியதாய் கூறப்படுவது.
  உங்களுடைய இறந்த காலம் தற்பொழுதைய நிகழ்காலத்தில் எதிர்காலமாய் இருக்கும்.
  வில்லன் எதிர்காலத்தில் தனக்கு கிடைக்கும் ஆயுதங்களை தன்னுடைய இறந்த காலத்திற்கு சென்று பத்திரப்படுத்தி, நிகழ்காலத்தில் உபயோகப்படுத்த முடிவு செய்கிறான்.
  நாயகன் காயம்பட்ட காத்ரீனை காப்பாற்ற எதிர்காலத்திற்கு அவளை கொண்டு சென்று, பின் ஆயுதத்தை வில்லனிடமிருந்து மீட்க தன்னுடைய இறந்த காலத்திற்கு செல்லவேண்டும். (அதிபுத்திசாலித்தனமான மற்றும் அதீத குழப்பம் தரும் இடம் இது!). ஆனால் மற்ற திரைப்படங்களில் நிகழ்வது போல காலபயணம் இதில் மிக எளிமையானதாக அமையாது. காரணம்,
  நீங்கள் வெளியேற்றும் காற்றை சுவாசிக்க நேரும் ஆகவே தனியாக சுவாசப்பை கொண்டிருத்தல் அவசியம். எதிர்காலத்தினர் இறந்தகாலத்தில் வரும் தன்னையே தொடுதல் கூடாது. உடல் மூலக்கூறு அமைப்பிற்கு கேடானது. (யாருக்கேனும் Timecop படத்தின் முடிவுக்காட்சி நினைவுக்கு வருகிறதா!) ஓட முயலும்போது காற்று உங்கள் பின்னால் சுமையாய் அழுத்தும். தீயை பற்ற வைத்தால் பனிக்கட்டியாய் மாறும் (ரிவெர்ஸ் எனர்ஜி). முக்கியமாய் நீங்கள் முன்னால் கார் ஓட்ட முற்படுகையில் பின்னால்தான் செல்வீர்கள். உங்களுக்கு அது முன்னால் இருக்கும். ஆனால் இறந்தகாலத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பின்னோக்கிய பயணமாக காட்சி தரும். முக்கியமான மற்றொன்று அங்கு நிகழும் எந்த வொன்றையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம். பாரடாக்ஸ் உடைபடக்கூடாது.
  நாயகன் தன்னுடைய கடமையை நிறைவேற்ற காலத்தின் முன்னும் பின்னும் பயணிக்கத் தொடங்குகிறான்.
  இதிலிருந்து முடிவு வரை அட்டகாசத்தின் உச்சம். நாயகன் தற்போது இருப்பது எந்த காலமென்ற குழப்பத்தில் நம்மை ஆழ்த்துவதில் தொடங்கி, அவனுக்கு ஒவ்வொரு முறையும் உதவ முன்வருபவர்களைக் குறித்த தகவல்களையும், நாயகனுக்கு தான் யாரென்ற உண்மையையும் டெனெட் அறியத்தருகிறது.
  ***
  இதோடு கதைச்சுருக்கம் முடிவடைந்தது. நான் இதில் குறிப்பிட்டு இருப்பது பிரம்மாண்ட காட்சி அமைப்பினைக் கொண்ட கதையில் கடுகளவுதான். நோலன் இத்தனை சாத்தியங்களையும் ஒருங்கிணைத்து தந்திருப்பது அட்டகாச விருந்து.
  சில முக்கிய தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொண்ட denofgeek- இணையதளத்திற்கு நன்றியும் அன்பும்.
  பொறுமையாக சகித்துக்கொண்டு படித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s