தடங்காட்டி மரம் – சென்ஷி சிறுகதை

’மோனம் புனைந்த கவிதையின் தன்மையும் வேளையும் யாரால் முன்கூட்டிச் சொல்ல முடியும்?’ என்பார் லா.ச.ரா, ‘அர்ச்சனை’ கட்டுரையில். அப்படித்தான் சென்ஷியிடமிருந்து ஒரு புதிய கதை வருவதும். பிரியத்துடன் பகிர்கிறேன். – AB

*

தடங்காட்டி மரம் – சென்ஷி

சபீருக்கு முப்பத்தொன்பது வயதை அடைய சரியாக இன்னமும் நாற்பது நாட்கள் மிச்சமிருக்கிறது. சபீருக்கான வரலாறென்பதை, பெயர்களாய் அவனுடைய தந்தையிலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது இன்னும் கொஞ்சம் நினைவை கவனமாய் நெய்தால் அவரது தந்தையையும் கொண்டு வர முடியும்.

தாய்வழியில் அவர்களது குடும்ப பெருமைகளை அப்பாவை நொடிக்கும்போதெல்லாம் அம்மா சொல்லிக் காட்டுவதால் பெருமைகள் சபீருக்கு அத்துப்படி. ஆனால் பெருமைகளை மாத்திரம் வரலாறாய் மாற்றிக் கொள்வதில் உடன்பாடு இருந்ததில்லை. வரலாறுக்கான சூத்திரத்தில் உண்மையின் பங்கின் சதவீதம் அதிகமாய் இருக்கவேண்டுமென்பது எண்ணம். ஏன் அப்பா தன் உறவு வழி பெருமைகளை சொல்லிக் காட்டியதில்லை என்று தெரியவில்லை. புனைவாய்க்கூட எந்த கதைகளையும் அவனுக்கு நகர்த்தியதில்லை.

பாடவகுப்பில் ஒரு பாடமாக மகனுக்கு தன்னைக் குறித்த வரலாறை கடத்துதலின் பாகமாய்த்தான் இந்த பாடு. வெறுமனே பெயர்களை எழுதி வைத்து குடும்ப மரத்தை வரைந்து வைத்துவிடலாம்தான். இணையவழி சிக்கல்களை புதிர்களை கண்டு விடை கண்டுபிடித்தலில் ஆர்வங்கொண்டவனுக்கு தன்னுடைய வரலாறை அறிந்துகொள்ளுதலில் உள்ள ஈடுபாட்டை எப்படி சுருக்கி எடுத்துக் கொள்ளுவது. தனக்கான வரலாறு தன்னிடமிருந்து தொடங்கட்டுமென்ற அதிநவீனத்துவ எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் பிள்ளையின் பாடத்தில் ஓரிரு மதிப்பெண்களை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் எண்ணம் தள்ளி வைத்தாயிற்று.

எந்த தகப்பன்தான் குழந்தைக்கு தன்னால் மதிப்பெண் குறைந்து போனதை ஒத்துக் கொள்ளுவான். இந்த வேதனை வந்துவிடக்கூடாதென்பதற்காகத்தான் கவனமாக வீட்டுப் பாடம் செய்யும் வேளைகளில் தப்பித்தவறிக்கூட ஹால்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை அது அவசியம் டீ தேவைப்படும் நேரமாயிருந்தாலும் கூட. தலைவலிக்கு டீ நல்ல மருந்துதான். ஆனால் டீ தேவைப்படும் நினைவு வரும்போதெல்லாம் தலைவலியையும் உடன் அழைத்து வருவதைத்தான் தடுக்க முடிவதில்லை.

அப்பாவின் நினைவில் டீயை எந்த வகையில் சேர்ப்பது. மணிக்கொரு தடவை தேத்தண்ணி குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு தேத்தண்ணி வைக்கும்போதெல்லாம் கொஞ்சத்தை தனக்கும் ஊற்றிக் கொண்டு குடிப்பது அம்மாவின் வழக்கம். மீண்டும் அப்பாவைப் பற்றி நினைக்கையில் அம்மாவின் நினைவு.

யோசனைகளால் மாத்திரம் எதையும் நிரூபித்து சாதித்துவிட முடியாதென்பதால், சோம்பலாக எழுந்து குறிப்புகள் கணக்குகள் போட பயன்படுத்தும் கறுப்பு நிற டைரியை எடுத்து படுக்கையில் போட்டான். கடைசியாய் எழுதிய கணக்கின் பக்கத்தில் பேனா அடையாளத்திற்கு வைத்து மூடி வைத்திருந்ததால், விழுந்த வேகத்திற்கு பேனா இருந்த பக்கம் திறந்து கொண்டது.

கடைசியாக எழுதி இருந்த பக்கத்தில் ’நாவை மீனாக்கி சொல் தாகத்தில் தவிக்கும்’ குறிப்பை எழுதி வைத்திருந்தான். கவிதையாக மாற்ற வேண்டும். மெல்ல தன் நாவால் உதடுகளை ஈரப்படுத்த வெளிக்கொணராமல் உதட்டை மடித்து, மடித்தமேனிக்கே உதட்டை ஈரமாக்கிக்கொண்டான். நாவாய் என்றால் மரக்கல கப்பலை குறிக்கும் சொல் ஒன்றும் நினைவில் வந்துவிட, எழுதிய குறிப்பு மேலும் அர்த்தஞ் செறிவுள்ளதாக அவனுக்குத் தோன்றியது. தோன்றுவதையெல்லாம் எழுதுவதும், எழுதுவதையெல்லாம் வாசிப்பதுமாக காலம் நகர்வதே தனக்கு தன் மீதான ஒரே ஈடுபாடு என்பதை சபீர் நம்பினான். சேர மன்னன் நாவாயில் பயணம் செய்யும்போது வேறு எவரும் செய்யக்கூடாது என்று படித்த நினைவு வந்தது. அது போல தனக்கும் ஒரு சிந்தனை வரும்போது இன்னொன்று எட்டிப் பார்க்கக்கூடாது என்ற சட்டமிருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென்று எண்ணினான்.

சொந்த ஊரை விட்டு வந்து, கோவையில் பெரிய தொழிற்பேட்டையில் வாடகைக்கு லாரிகளை அனுப்பும், மேற்பார்வை செய்யும் பணியில் இருக்கிறான். லாரிகள் மூலம் இந்தியா முழுமையும் அனுப்ப வேண்டிய சரக்குகளை சரிபார்த்து தேவையான காகிதங்களை பெற்றுத் தருதல், லாரிகள் செல்லுமிடம் சரியானதுதானா என்று பரிசோதித்தல், செல்லும் ஓட்டுநரின் விவரங்கள் அடங்கிய குறிப்புகளை தனது மேலதிகாரிகளின் பார்வைக்கும், வண்டியை வாடகைக்கு எடுப்பவரின் பார்வைக்கும் மின் மடலாய் தட்டிவிடுதல் போன்ற வேலைகளைத் தாண்டி இன்னொரு முக்கிய வேலையையும் சபீர் பார்த்துக்கொண்டிருந்தான்.

லாரிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் எனப்படும் புவியின் தடங்காட்டி மூலமாய் லாரிகளின் நகர்வை பரிசோதித்தல். சிவப்பு புள்ளிகள் வரைந்துவைத்த கோடுகளின் மேல் மெல்ல மெல்ல நகர்தலை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் சபீருக்கு பிடித்தமான வேலை. நீல வண்ணக்கோடு பாதையைக் காட்டுவது. கணிணியில் இன்னொரு விசையை அழுத்தினால் பாதை சிவப்பு வண்ணமாக மாறி மீதம் செல்லவேண்டிய தொலைவைக் காட்டும். பாதைகள், மாற்றுப்பாதைகள், தொலைவு, நேரம், வேகம் இப்படி எல்லாவற்றையும் தனக்கு ஒதுக்கப்பட்ட கணிணியின் முன் அமர்ந்து படமாய் பார்த்துக் கொண்டிருத்தலில் வேறு சிந்தனை தோன்றுவதில்லை. ஒருவேளை ஒரே நேரத்தில் இதிலேயே பல விசயங்கள் முன் தோன்றி நிற்பதால் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி குடும்பத்திற்கும் ஒரு அளவீடு இருப்பின் எத்தனை வசதிப்படும். எளிதாய் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்வோம் என்ற அடிப்படையில் எல்லா இயக்கங்களையும் நிரூபித்துவிடலாமே என்று தோன்றியது. தடங்காட்டி மரம். அவனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது.

தடங்காட்டியை உபயோகப்படுத்தலுக்கும் இவனுக்கு சில விதிகள் உள்ளன. அதில் முக்கியமான விதி அதிக நேரம் ஒரே இடத்தில் வாகனம் நிலை கொள்ளல் ஆகாது. உணவு, சாலை நெருக்கடி போன்ற சில விதிபாடுகள் இருப்பினும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்குரிய அச்சமாகவே அவனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே ஓட்டுநருக்கான ஓய்வு நேரம், உணவு இடைவேளை இல்லாத நேரத்தில், வாகனம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிலைகொண்டால், உடனே அந்த ஓட்டுநரை தொடர்பு கொண்டு நிலையை அறிய வேண்டும். விபத்து அல்லது அசம்பாவிதங்கள் ஏதும் நேர்ந்துவிட்டால் அதற்குரிய தற்காப்பு ஓட்டுநரைச் சேர்ந்தது. சரக்காய் ஏற்றுகிற பொருட்கள் திருடு போகாமல் காப்பது இன்னொரு விதி. இவ்விதமாய் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தன் கண்காணிப்பின் கீழ் கொண்டிருத்தலாலேயே தடங்காட்டி வசம் பிரியங் கொண்டிருந்தான். விதிகளை மீறுபவர்களை இவனால் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் இயக்கங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்ற ஒற்றை அச்சத்தை விதைப்பதன் மூலம் விதிகள் சரியாக பயன்படுத்தப்படுமென்று இவனது மேலாளர் நம்பினார்.

விபத்து ஏற்படுதல் மாத்திரமே இவனது தூக்கத்தை விரட்டி அடிப்பது. இதுவரை எந்த ஓட்டுநரும், உயிர் ஆபத்தில் சிக்கவில்லை என்றாலும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருக்கும் பொருட்களை அதிக சேதாரமின்றி, இன்னொரு வாகனத்தை பயன்படுத்தி உடனடியாக அனுப்பி வைப்பதும், விபத்துக்கான காப்பீடு கோரலை முறைப்படுத்தலும், விபத்துக்குள்ளான வாகனத்தை திரும்ப தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தலுமாய் இவனது முதுகில் வலி சேரும். விலை உயர்ந்த பொருட்களை அனுப்பி வைப்பவர்கள் பொருட்களுக்கான இயக்க காப்பீட்டை முன்னரே செய்துவிடுவதால், அதைக் குறித்த அதிக பட்ச அக்கறை கொள்ளுவதில்லை. ஆனால் மறுமுறை தன்னுடைய நிறுவனம் வழியே அவர்களின் சரக்குகள் கொள்முதலுக்கோ விற்பனைக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், இந்த விசயத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. விபத்து வழக்குகளை கண்காணிக்க தனி வழக்கறிஞர் இருந்தாலும், அவருக்குத் தேவையான தகவல்களை பகிர்வது சபீரின் தலைக்கு வரும் பணிகளில் ஒன்று.

வட இந்தியாவிலிருந்து வரும் ஓட்டுநர் ஒருவர், சபீரை ”சாப், சாப்” என்றுதான் விளிப்பார். அது சாரென்ற விளியா அல்லது பாம்பென்ற விளியா என்று இவனுக்கு புரிந்ததில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களும் யாரும் இவனுக்கு அருகில் இல்லை.

சபீர், பேனாவை எடுத்து டைரியில் ஒரு முக்கோணத்தை வரைந்தான். மேல் குடுமியில் இடத்தை காலியாக வைத்துவிட்டு, கீழே உள்ள இரண்டு கோணங்களின் வெளியில் இடப்புறம் அப்பா பேரையும், வலப்புறம் அம்மா பேரையும் எழுதினான். அப்பா பெயரை எது எதற்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்ற யோசனை மேலோங்கவே, அதிகபட்சம் விண்ணப்பங்களில் தந்தை பெயர் என்ற இடத்தில் இட்டிருப்பது மாத்திரமே நினைவில் தேங்கி நின்றது. விடாப்பிடியான யோசனை பலன் அளிக்கவில்லை.

”யாரு புள்ள நீ” என்ற கேள்வி இதுவரை சபீரிடம் யாரும் கேட்டது இல்லை. எப்பொழுதுமே வெளியூரென்றால், உறவினர்களின் வீட்டிற்கு அப்பா அல்லது அம்மாவின் துணையுடன் தான் பயணம். திருமண விழாவென்றாலும் கூட தன்னை தனியே கூட்டத்தில் அனுப்பியது இல்லை. பத்திரமாய் பொத்தி பொத்தி வைத்து வளர்த்த பிள்ளை.

அப்பா அம்மா பெயரின் கீழே ஒரு கோடு வரைந்து இணைத்து அதன் கீழே தனது பெயரை எழுதினான். கொஞ்சம் தள்ளி மனைவியின் பெயர். மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் இடையே வரைந்த கோடு நேராக இல்லாமல், இரவின் சிலுமிஷங்களுக்கான பாதையை நோக்கி கைகள் நகர்வது போல தோன்றியது சபீருக்கு.

வாரிசு மரத்தில் மனைவியின் குடும்பத்திற்கும் இடம் வேண்டுமென்ற முக்கியத்துவம் மனதில் தோன்ற, இன்னொரு முக்கோணம் சற்றே கோணலாக தள்ளி விழுந்தது. மாமனார், மாமியார் பெயரை மனதிற்குள் சொல்லி சரிபார்த்துக்கொண்டு சரியாக எழுதினான். மனைவி பெயருக்கு மேலே ஒரு கோடு அவளது குடும்ப முக்கோணத்திற்கு இழுத்துச் சென்றது. தடங்காட்டியில் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கும் பாதையாக சற்று நெளிந்து வளைந்துதான் சென்றது.

கவனமாக படுக்கையில் கிடக்கும் வசமாய் மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் போதுமான இடைவெளி கிடைத்த நம்பிக்கை வந்தபின் இரண்டு பெயர்களையும் இணைத்து தலைகீழ் முக்கோணம் ஒன்றை வரைந்தான்.

”குடும்ப பாதுகாப்பு முக்கியம். இன்னொரு பிள்ளை இப்போது வேண்டாம்” என்று சொல்லியே ஏழு வருடங்களையும் சொச்ச மாசங்களையும் கடத்திவிட்டபின் முக்கோணம் இடாமல் நாற்கரமா இட முடியும். வாங்கும் சம்பளத்திற்கு விட்டேற்றியாய் செலவு இழுத்துவிடாத மனைவி அமைதல் வரம். செலவே இல்லாவிட்டாலும் சம்பளமாய் வந்த பணம் இருபத்தைந்து தேதிக்குள் தேவைகளை அறிந்து தன்னுடைய இருப்பை சுருக்கிக் கொள்கிறது. சேமிப்பு மூன்று சதவீதமென்று கணக்கு போட்டு சேமித்தால் அத்தியாவசியம் நாலரையாக மாறி வருகிறது. இதில் முக்கோணமே பெரிதுதான். முக்கோண முடிவில் பையன் பெயர்.

டெல்லி மன்னர்கள் அனைவருக்கும் வரலாறு இருக்கிறது. அக்பருக்கு முன்னால் ஹூமாயூன், பாபர். அக்பருக்கு பின்னால் ஜஹாங்கீர் வழியாக பகதூர் ஷா வரை கொஞ்சம் நினைவு இருக்கிறது. சரித்திரத்தில் எழுதப்பட்டவர்கள். நல்லதோ கெட்டதோ பெயரை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார்கள். தன்னுடைய பேரனுக்கு அல்லது பேத்திக்கு வகுப்பில் குடும்ப மரம் கேட்டால், நான்கு தலைமுறைக்கு தரவுகள் கைவசம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டான். ஆனால் மனம் விடாப்பிடியாய் அப்பாவிடமும் அப்பாவின் அப்பாவிடமும் சென்று அமர்ந்து கொண்டது.

அப்பாவின் சின்ன வயதிலேயே தாத்தா இறந்துவிட்டாராம். பெரிதாக சொத்து சுகமில்லாத அந்த வயதில் வேலைக்கு சென்று சம்பாதித்து தன்னை நிலை நிறுத்தி, குடும்பத்தை நிமிர வைத்தவர். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்து இரவும் பகலும் போராட்ட களத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். தந்தை இல்லாத பையன் என்ற எந்த பச்சாதாபத்தையும் தன்னை சூழ்ந்து கொள்ள அனுமதிக்காதவர். இதெல்லாம் தந்தையின் இறப்புக்கு வந்த விட்டுப்போன சொந்தமொன்று, பிலாக்கணமாக சொன்னதை வைத்து தெரிந்து கொண்டது. உரையாடிக்கொண்டே விளையாடும் பொழுதுகளில் கூட, தன்னுடைய தந்தையைப் பற்றி சொல்லாமல் இருந்தது சபீருக்கு இப்போது ஆச்சரியம் தந்தது. சபீருக்கும் தன் தந்தையைப் பற்றி மகனிடம் எதுவும் சொன்னதில்லை என்பதும் உறைத்தது.

இவனது பதினேழாவது வயதில் அப்பா இறக்கும்போது நோயுற்றிருந்தார். தினமும் ஒரு குறிப்பிட்ட மருந்தை அறுபது மில்லி அளவிற்கு ஊசி மூலம் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதிக விலை கொண்ட அந்த மருந்திற்கு தினமும் காசு கொடுத்து கட்டுப்படியாகாது என்று மருந்து கடைகாரரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி மொத்த கொள்முதல் விலையில் ஒரு மாதத்திற்கான பெட்டியை வாங்கி வைத்துவிட்டால், அவருக்கு தினமும் ஊசி போட்டுக்கொள்ள எந்த சிரமமும் இருக்காது. முன்பணமாகவே மருந்துபெட்டிக்கான காசை கடைகாரருக்கு கொடுத்துவிட்டதால், அவருக்கும் சிரமம் இல்லை.

தடங்காட்டி வழியே பயணம் செல்லும் வாகனத்தின் நேர விகிதாச்சாரம் சபீருக்கு அத்துப்படி. இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணம் நகரும்போது, மிகுதி பயண தூர அளவைகள் கணிணி பக்கத்திலேயே காட்டிவிட்டாலும், தனக்கான ஒரு அளவீட்டை பொருத்தி வைத்து வண்டி இயக்கத்தின் ஓய்வு அடிப்படையில் பொருத்திப் பார்ப்பான். பெரும்பாலும் இவனது கணக்கு பொய்த்துப்போனதில்லை. மனித ஆயுளுக்கும் இப்படித்தான் போல. இயக்கத்தின் கணக்கு பொய்த்துப்போனதில்லை. பொழுதுக்கும் இரட்டை ஆயுளுக்கும் வாழ்ந்திருப்பார் போலும். தடங்காட்டியில் இயக்கம் நகரும் புள்ளியின் விதிகள் மீது ஓட்டுநர் கொண்ட நம்பிக்கை இன்னொரு பாகமாய் இது இருக்கக்கூடும்.

அப்பா அந்த அரிவாள் வெட்டை கழுத்தில் வாங்கி இறந்தபோது, மருந்துகடைகாரரிடம் முந்நூறு ரூபாய்க்கான மருந்து மீதம் இருந்தது. மறுநாள் தினப்பத்திரிக்கையில் இறந்த மூவரின் பெயர்களில் இரண்டாவதாக கொலையான சபீரின் அப்பா பெயர் மற்றும் வயதுடன் த/பெ என குறிப்பிடப்பட்டு அவனது தாத்தா பெயரும் வந்திருந்தது.

அன்றுதான் முதன் முறையாக அப்பாவின் அப்பா பெயரை சபீர் தெரிந்து கொண்டான்.

*

நன்றி : சென்ஷி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s