கடன் (சிறுகதை) – செல்வராஜ் ஜெகதீசன்

ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை, நன்றியுடன்..

*

செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.

இதுவரை, “அந்தரங்கம்” (2008), “இன்னபிறவும்” (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010),“நான்காவது சிங்கம்” (2012), “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014) ஆகிய கவிதைத் தொகுப்புகள் &“கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013) வெளியாகியுள்ளன.

கணையாழி, கல்கி, குங்குமம், தினமணி கதிர் & அந்திமழை போன்ற இதழ்களிலும்,சொல்வனம், மலைகள், நவீன விருட்சம், உயிரோசை & வல்லினம் போன்ற வலைத்தளங்களிலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவை தவிர, கணையாழியில் இரண்டு குறுநாவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்து, தன் முதல் சிறுகதைத் தொகுப்பை கொண்டுவரும் முயற்சியில் உள்ளார்.

*

கடன் – செல்வராஜ் ஜெகதீசன்

தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில் வைத்து பார்ப்பேன் என்று நிச்சயமாய் நினைக்கவில்லை.

ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம். உடன் வந்த நண்பன் அன்றைய கூட்டத்திற்கு வந்த  அழகான ஒரு பெண் படைப்பாளியைப் பற்றி பேச ஆரம்பித்தான். நான் காபி ஆர்டர் செய்ய யாராவது சர்வர் எங்கள் டேபிள் பக்கம் வருகிறாரா என்று பார்வையை ஓட விட்ட பொழுதில்தான் தியாகுவைப் பார்த்தேன்.

முதலில் அது தியாகுதானா என்று சந்தேகமாய் இருந்தது. தியாகுவுக்கு வலது கண் அடிக்கடி துடிக்கும். அதை வைத்து வகுப்பில் மற்ற பசங்களெல்லாம் அவனுக்கு “கண்ணடிச்சான்” என்று பட்டப்பெயர் வைத்து அவனை அவ்வப்போது சீண்டுவோம். ஆரம்பத்தில் அதை எதிர்த்து ஏதாவது செய்ய ஆரம்பித்த தியாகுவுக்கு போகப்போக அது பழகிப்போய் பின் ‘கண்ணடிச்சான்’ என்று யார் கூப்பிட்டாலும் அவனே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பழகிப் போனது.

தியாகுவுக்கு அவ்வளவாய் படிப்பு வரவில்லை. எப்போதும் எதையோ இழந்தவன் போல் ஒரு சோபையான முகத்தோடே காட்சியளிப்பான். எட்டாவதில் பெயிலாகிப் போனான். அழுத கண்ணோடு அப்போது அவனைப் பார்த்ததுதான். ஒன்பதாவது படிக்க, நான் வேறு பள்ளிக்குப் போய், டிப்ளோமாவும் முடித்து, ஒரு வேலையும் கிடைத்து சேர்ந்து இதோ ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

தியாகுதானா என்று என் சந்தேகத்துக்கு உட்பட்டவன் நாங்கள் உட்கார்ந்திருந்த டேபிளிலிருந்து சற்று தள்ளி ஒரு மூலையில், காப்பி கலர் சர்வர் உடுப்போடும் கையில் ஒரு செவ்வக வடிவத் தட்டு சகிதம் நின்று கொண்டிருந்தான். அவன் தியாகுதானா என்று கண்டுபிடிக்கும் பொருட்டு, அவன் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்கும் வகையில், கை கழுவப் போவது போல், அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த கை கழுவும் இடத்திற்கு, அவனைக் கடந்து போனேன்.

தியாகு ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து சொந்தம். இது கூட தியாகுவின் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து போன ஒரு நாளில் தான் எங்களுக்கு தெரிய வந்தது. எங்களுக்கு என்பது ரகு அண்ணாவும் நானும். அன்று உள் அறையில், நான் எதையோ படித்தபடி இருந்தேன். அண்ணா இன்னும் ஸ்கூலில் இருந்து வரவில்லை.  வீடே மொத்தம் அந்த இரண்டு அறைகள்தான்.  நுழைந்தவுடன் ஹால் போன்ற முதல் அறையின் வலது மூலையில் சமையல் செய்ய ஒரு சிறிய மேடை. அங்குதான் அம்மா பெரும்பாலும் புகை சூழ எதையாவது சமைத்துக் கொண்டு இருப்பாள். அவள் உள் அறைக்கு வருவதே ராத்திரிகளில் உறங்கும் சமயங்களில் மட்டும்தான்.

“வாங்கம்மா” என்ற அம்மாவின் குரல் சத்தத்தில், உள்ளறையில் இருந்து வாசலை எட்டிப் பார்த்தேன். தியாகுவின் அம்மா படியேறி வந்து சமையல் அறையை ஒட்டிய கடைசி படிக்கட்டில் உட்கார்ந்தபடி  அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதில் இருந்து எனக்கு புரிந்தது இதுதான்.

பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் வேண்டும். தியாகுவின் அப்பாவுக்கு இன்னமும் உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாய்தான் இருக்கிறார். அவர் உடல் சரியாகி வேலைக்கு போனால்தான் ஏதாவது வருமானம். கடன் கொடுப்பதாய் சொன்ன ஒன்றிரண்டு இடங்களிலும் கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்கள். எங்க அம்மாவால் ஏதாவது கொடுத்து உதவ முடியுமா?

அம்மா அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.

கரி அடுப்பில் கொதி வந்திருந்த காபியை இறக்கி ஒரு தம்பளரில் ஊற்றி தியாகுவின் அம்மாவிடம் கொடுத்தாள்.

வாசலில் நிழலாடியது. ரகு அண்ணா. அண்ணா பத்தாவது படிக்கிறான்.  ஸ்கூல் தான் கொஞ்சம் தூரம். ஒரு கிலோ மீட்டர் நடந்து போய், அங்கிருந்து பஸ்ஸில் ஒரு அரைமணி நேரம் போக வேண்டும். எத்தனை கஷ்டத்திலும் எங்கிருந்தாவது கடனை உடனை வாங்கி எங்களைப் படிக்க வைக்கிறார்கள். நிறைய நேரங்களில் ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாள் வரை எங்குமே பணத்தை புரட்ட முடியாமல் இருக்கும். பின் எங்கிருந்தாவது அம்மா பணத்தோடு வருவார். என்னைப் போல் இல்லை, அண்ணா நல்லாவே படிப்பான். பெரும்பாலும் முதல் ராங்குதான்.

அண்ணா வாசலில் உட்கார்ந்திருந்த தியாகுவின் அம்மாவைக் கடந்து உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். அந்தப் பழைய கட்டில் “கிரீச்” என்ற சத்தத்தோடு அவனை ஏற்றுக் கொண்டது.

நான் அண்ணாவின் முகத்தைப் பார்த்தேன். முகம் வாடிப் போய் இருந்தது.

“ஏம்மா, பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பரப்போ சாப்பிட ஏதாவது கொடுத்தனுப்ப மாட்டீங்களா?”

அப்போதுதான், வாசலில் நின்றிருந்த தங்கவேல் நாடாரை எல்லோருமே பார்த்தோம்.

அம்மா சற்றே பதற்றத்தோடு “ஏன் என்னாச்சுங்க நாடார்?” என்று கேட்டாள், உள்ளே எட்டி அண்ணாவின் வாடிய முகத்தைப் பார்த்தபடியே.

“இன்னிக்கி கடையை சீக்கிரமே அடைச்சுட்டு வீட்டுக்கு வந்திட்டிருந்தேன். கொஞ்சம் முன்னாடி நம்ம தம்பி போயிட்டு இருந்தாப்ல. என்ன தம்பி ஸ்கூல்ல இருந்தானு குரல் குடுத்தேன், திரும்பிப் பார்த்தாப்ல, உடனே மயக்கம் போட்டு விழுந்திட்டான். பக்கத்து கடைல இருந்து கலர் வாங்கிக் குடுத்து கூட்டியாரேன். பையனுக்கு ஏதாவது சாப்ட குடுங்கமா, நான் வரேன்” என்று நடையைக் கட்டினார் நாடார்.

“பார்த்தீங்கள்ல, இங்கியும் நெலமை அப்படி ஒண்ணும் சொல்றாப்ல இல்லம்மா,

காலைல பலகாரம் ஒண்ணும் பண்ணல, எதாச்சும் இருந்தாத்தானே பண்ண, வெறும் பாலைக் குடிச்சுட்டு போன பிள்ளை. இப்படி வந்து நிக்கிறான். இவங்க அப்பாவும் மில்லு வேலைல அப்பப்போ ‘லே ஆஃப்’ னு சொல்லி வீட்ல தான் குத்த வைச்சிகினு இருக்காரு. பசங்க படிப்புக்கு அது இதுன்னு வாங்கன கடனுக்கு வட்டி கேட்டு நேத்துக் கூட சொக்கலிங்கம் செட்டியார் வந்து வாசல்ல நின்னு கத்திட்டு போனாரு. இந்தத் தங்கவேல் நாடாருக்கு கூட குடுக்கவேண்டிய இந்த மாச வட்டிப் பணத்தை இன்னும் தரல. அவரே நிலமையை பார்த்து கேட்காம போறாரு.”

“சரிங்கமா நான் கெளம்பறேன், வேற எங்கியாச்சும் கேட்டுப் பார்க்கிறேன். எப்பதான் நம்ம நெலைமெல்லாம் சரியாவுமோ” என்று சொல்லியவாறு தியாகுவின் அம்மா படியிறங்கிப் போனாள்.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கி இருந்தன.

“ஏம்மா அழற?”  என்றேன்.

 

“இப்ப வந்துட்டு போனாங்கல்ல, தியாகுவோட அம்மா, ஒரு வகைல நம்ம தூரத்து சொந்தம்தான், ஒரு ஆபத்து அவசரத்துக்கு கூட உதவி பண்ண முடியாத அளவுலதான் நம்ம நிலைமையும் கிடக்கு.  சரி சரி, நீ படிக்கிற வேலையை பாரு” என்று சொல்லியவாறே அண்ணாவைக்  கவனிக்கப் போனாள் அம்மா.

கை முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தேன். நண்பன் ஏற்கெனவே ஆர்டர் செய்து வந்திருந்த காபியை குடிக்க ஆரம்பித்தேன். அவன் கண்களில் அந்த துடிப்பு இருந்த மாதிரி தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அது சரியாகக் கூட போயிருக்கலாம்.  ஆனால் அவனிடத்தில் எந்த வித சலனமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையிலேயே அவன் தியாகுதான் என்று தெரிந்தாலும் நான் செய்யக்கூடியது அல்லது செய்ய வேண்டியதுதான் என்ன? தியாகு மாதிரி ஒருத்தனைப் பார்த்தேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன சொல்லுவாள்? ‘விசாரிச்சு காசு ஏதாவது கொடுத்துட்டு வந்திருக்கலாமில்ல’ என்பாளோ? பாக்கெட்டில் இருப்பதோ அம்பது ரூபாய்தான். காபி பில் நண்பன் கொடுக்கும் பட்சத்தில், வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு தேவைப்படும் பணம், மீதி எவ்வளவு கொடுக்க முடியும் என்றெல்லாம் மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தேன்.

சட்டென்று தியாகுவின் அம்மா வந்த அன்று அம்மா இருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது.

“போலாமா” என்று கேட்டபடி எழுந்து, பில் பணம் செலுத்த கல்லாவை நோக்கி போன நண்பனை பின்தொடர்ந்து, ஹோட்டலை விட்டு வெளியில் வந்து, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

*

Contact : Naan Rajamagal
*

நன்றி : செல்வராஜ் ஜெகதீசன் , கானல் அமீரகம் & ஆசிப் மீரான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s