இரும்புக் கடையில் இலக்கியம்!

நாகை சகோதரர் ஆ.மீ. ஜவஹர் பற்றி கரு. முத்து எழுதிய கட்டுரை இது. ‘இப்படி ஒருத்தர் இருக்குறது எனக்கே தெரியலை ஆபிதீன், பாத்துக்குங்க!’ என்று சொல்லி அனுப்பிவைத்த நாகை நண்பர் இஸ்மாயிலுக்கு இலக்கிய நன்றி! எந்தப் பத்திரிக்கையில் வந்தது என்று கேட்கச் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ என்பார்! – AB
*

நாகப்பட்டினம் ரயில்நிலையத்துக்கு எதிரே அந்திக்கடைத் தெருவில் இருக்கிறது மீனாட்சிசுந்தரம் இரும்புச்சாமான் கடை காடாவிளக்கு, சிம்னிவிளக்கு, இரும்பு வாணலி, பணியாரச்சட்டி, நாய்ச்சங்கிலி, நடைவண்டி என நம்மவர்கள் மத்தியில் புழக்கத்திலிருந்து இப்போது வழக்கொழிந்தேவிட்ட அரிய பொருட்கள் அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்க, அதற்கு மத்தியில் வாகாய் ஒரு இடம் பிடித்து உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார் கடையின் முதலாளி ஆ.மீ.ஜவஹர்.

நண்பர்கள் இவரை நாகை ஜவஹர் என்கிறார்கள். இதுவரைக்கும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் ஜவஹர், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சிருஷ்டித்த பிரம்மா. இவரது படைப்புகள் பல்வேறு நாளிதழ்கள், பருவ இதழ்கள், சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. விடுமுறைச் சூரியன்கள், “நீராடித்தீரா சூரியன்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பு வட்டத்துக்குத் தந்திருக்கிறார் இவர். அடுத்து, முப்பத்தைந்து சிறுகதைகள் கொண்ட இவரது இன்னொரு சிறுகதைத் தொகுப்பும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நாகை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக இருக்கும் ஜவஹர், மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களில் நூல்கள் குறித்த விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. நாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருக்கும் இவர், தேசிய நல்லாசிரியரைத் தேர்ந்தெடுக்கும் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் கொண்ட மூவர் குழுவிலும் ஓர் அங்கம்.

படித்தது பன்னிரெண்டாம் வகுப்புதான். ஆனால், அந்தப் படிப்பைவிட அப்பா மீனாட்சிசுந்தரத்தின் பழைய இரும்புக்கடை இவருக்கு போதித்தது ஏராளம். “பள்ளிக்கூடம் போன நேரம் போக மத்த நேரமெல்லாம் இந்தக் கடையிலதான் இருப்பேன். எங்கப்பா பழைய பேப்பர் வியாபாரமும் பார்த்தாங்க. அதனால கடைமுழுக்க பழைய பேப்பருங்களும் புத்தகங்களும் மலையாட்டம் குமிஞ்சு கெடக்கும். அதையெல்லாம் ஒண்ணுவிடாம படிப்பேன். அப்படி படிக்கப் படிக்க எனக்குள்ளயும் எழுத்து ஆர்வம் உதிச்சுது.

நானா வெளையாட்டுப் போக்கா சிலது எழுதிப் பார்த்தேன். நண்பர்கள் அதைப் படிச்சுப் பாத்துட்டு, ‘நல்லாருக்குடான்னு சொன்னாங்க. அந்த உற்சாகத்துல ஒரு சிறுகதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்புனேன். அது பிரசுரமானதும் இன்னும் சந்தோசம், இன்னும் நிறைய எழுத ஆரம்பிச்சேன். நான் எழுத அனுப்புனதுல பெரும்பகுதி, பத்திரிகைகள்ல பிரசுரமாச்சு, ஆனா, சிறுகதை எழுதுறதுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதால் கடையையும் பாத்துக்கிட்டு என்னால கதையும் எழுத முடியல, அதனால கவிதை எழுதிப்பார்க்கலாம்னு எறங்குனேன். நான் எழுதும் முதல் கவிதையே ‘சவுந்தரக்கன்’ என்ற சிற்றிதழ்ல பிரசுரமாச்சு. அதுக்கப்புறம் காலச்சுவடு, தீராநதி, உயிரெழுத்து, கணையாழி, செம்மலர், மணல்வீடுன்னு ஏகப்பட்ட பத்திரிகைகள்ல கவிதைகள் எழுதியாச்சு. இப்ப இணைய இதழ்கள்லயும் எழுதிட்டு இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே போன ஜவஹரை இடைமறித்து, கடையில வியாபாரத்தையும் பாத்துக்கிட்டு இத்தனையும் எப்படி உங்களால் செய்ய முடியுது?’ என்று கேட்டேன்.

”கவிதைக்கான கரு எப்ப கிடைக்கும்னு தெரியாது. கடையில வியாபாரம் பார்த்துட்டு இருக்கும்போதே ஏதாச்சும் ஒரு சிந்தனை உதிக்கும். அப்பயே ஒரு பேப்பர எடுத்து குறிச்சு சட்டைப் பையில வெச்சுக்குவேன். ராத்திரி படுக்கப்போகும்போது அந்தக் கருவை அப்படியே கவிதையா மாத்திருவேன். இப்ப இலக்கியக் கூட்டங்களுக்கும் நிறைய போக வேண்டி இருக்கதால கூடமாட அண்ணனையும் கடைய பாத்துக்கச் சொல்லிட்டுப் போயிருவேன்.

நாகப்பட்டினம் பகுதியில இருக்கிற படைப்பாளிகள் அடிக்கடி நம்ம கடைக்கு வருவாங்க. காரைக்கால் யுகசிற்பி, எழுத்தாளர் சு வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், கவிஞர் யுகபாரதி உள்ளிட்டவங்களோட நான் வெச்சிருக்கிற நட்பு படைப்புலகத்துல என்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக்கஉதவுது” என்றார் ஜவஹர்.

.இவரது கவிதைகள் பெரும்பாலும் மனித நேயம், சமூக ஒற்றுமை, அழகியல் பற்றியே பேசுகின்றன. ‘பெண் கருப்பா.. பரவாயில்லை கலர் டிவியோடு வரட்டும்! என்ற இவரது கவிதை இன்றைய சமூகத்தின் நடப்பை அப்பட்டமாய் படம்பிடிக்கிறது. ‘கடவுளைக் காண வேண்டுமா… தட்டுங்கள் டபிள்யூ, டபிள்யூ டபிள்யூ டாட்’ கடவுள் டாட் காம்’ என்ற குறுங்கவிதை பெருஞ் சேதியை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது, கும்பகோணம் பள்ளி தீ விபத்தை மையப்படுத்தி ஜவஹர் செம்மலரில் எழுதிய ‘அம்முகுட்டி’ கவிதை இன்றைக்கும் பேசப்படும் ஒரு படைப்பு.

காலச்சுவடில் இவர் எழுதிய ‘இறுதி யாத்திரை’ என்ற கவிதை பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளானது. அச்சுக்குத் தரும் கவிதைகள் ஒருபுறமிருக்க அரங்கத்தில் வாசிக்கும் கவிதைகளாலும் பேசப்படும் நபராகி வருகிறார் ஜவஹர். கவியரங்கங்களில் கலந்துகொண்டு இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பாடியிருக்கும் இவர் வானொலி வழியாகவும் அடிக்கடி கவிதைச் சாரல் அடிப்பதுடன் ‘அலையாத்தி’ மாத இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

ஒரு காலத்தில் அப்பாவின் இரும்புச் சாமான் கடையில் நிறைய படித்த ஜவஹர் இப்போது அங்கே இருந்துகொண்டு நிறைய இலக்கியம் படைக்கிறார்!
*

நன்றி : தி இந்து – காமதேனு & கரு. முத்து

2 பின்னூட்டங்கள்

 1. soman said,

  15/05/2019 இல் 10:45

  நாமளுந்தான் இருக்கோம்.

  • 16/05/2019 இல் 09:55

   🙂 தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலிலிருந்து..

   ”அப்பு, இன்னும் ஜபம் முடியலையாக்கும்?” என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமலே விட்டுப் போன ராகத்தை மீண்டும் முணுமுணுக்கத் தொடங்கினார் கோயில் குருக்கள். ஒயாமல் ஒழியாமல் அவர் நெஞ்சில் பாட்டுதான். ராஜரத்தினம் தோடி, கிட்டப்பா சுத்த சாவேரி, கோடையிலே இளைப்பாறி இன்னும் எத்தனையோ , எதையும் போட்டோ பிடித்தாற்போலப் பாடுவார் அவர். ஒரு வம்பு தும்புக்கும் போகமாட்டார். பாட்டு உண்டு; கோவில் உண்டு; அவர் உண்டு; ஊரில் கொடுக்கிற மான்யம் உண்டு. காதும் சற்று மந்தம்; வம்பு தும்பு அவர் காதிலும் விழாது. கேள்வி கேட்பாரே ஒழிய, விடையை அவ்வளவாக எதிர்பார்க்கிற வழக்கமில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s