‘சுடுகாடு’ பற்றி இளவஞ்சி சொன்னது

சேர்ந்து சிரிக்கும் பொணங்களுக்கு இடம் கொடுத்த எங்கள் கூகுள் ப்ளஸ் (G+) இன்றோடு முடிகிறது. ‘சுடுகாடுன்னு சொன்னாலும் சொன்னாய்ங்க.. போமாட்டேன்னு இழுத்துக்கிட்டு கெடக்குதேய்யா…:)))) ‘ என்று இன்னும் அங்கே கிண்டல் அடிக்கிறார் வாசுசார். கடைசிச் சொட்டு இரத்தத்தை உறிஞ்சும் வரை இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார். சகோதரர் இளவஞ்சி இன்று  (மீண்டும்) பகிர்ந்தது இது. நன்றியுடன் இங்கேயும்… – AB

*

I will miss you G+ …
Good bye to all..
And see you soon 🙂

One of my old writing abt plus…

நான் பெரிய சமூகவலை ஆராய்ச்சியாளன் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு வருடமாக ப்ளசில் இருந்துவந்ததில் சில புரிதல்களை கொண்டிருக்கிறேன். ப்ளஸ் என்பது முகநூல் போலவோ ப்ளாக் போலவோ இல்லை. அதது அததுபாட்டுக்கு இருக்கும்பாங்களே. அந்தமாதிரி ஒரு இடம். இங்க யாருக்கும் கிரீடத்துக்கு பாலிஷ் போடவேண்டியதில்லை. நம்மளை மினுக்கலா காட்டிக்கனுங்கறதில்லை. யாரையும் தூக்கிப்பிடிக்க வேண்டியதில்லை. மண்டைக்குமேல ஒளிவட்டம் வைச்சுக்கிட்டு கூட்டத்துக்கு நடுவால ஒய்யார நடை போடவேண்டியதில்லை. சுருங்கச்சொன்னால் அல்டாப்பில்லாம அலட்டிக்காம வந்துபோற இடமாத்தான் இது இருக்கு. எல்லோரும் வளர்ந்த பயபுள்ளைங்க. வாழ்க்கையில் எல்லா நல்லது கெட்டதுகளையும் பார்த்து வாழறவங்க. புரிஞ்சவங்க.

இந்த மாதிரி கும்பல்ல என்ன பெரிய கொடுப்பினைன்னா அடுத்தவங்க காதுகொடுக்கறாங்க அப்படிங்கற நம்பிக்கைல நாம நாமாக புடிச்சதை சொல்ல எந்த சங்கோஜமும் பட்டுக்க வேண்டியதில்லைங்கறதே. கமர்கட்டு புடிச்சா சொல்லலாம். கறிக்கொழம்பு வைச்சா படம்போட்டு நாலுபேர்த்துகிட்ட காட்டலாம். புதுபோனு வாங்குனா ஒரு பயங்கற செல்பி போட்டு சிரிக்கலாம். ஊட்டுல ஏதாச்சும் சண்டைன்னா லேசுபாசா மூடவுட்டுன்னு சொல்லி துப்பு வாங்கலாம். கொழந்தைக பெருமையை வாஞ்சையை எழுதித்தீர்க்கலாம். புதுகாரை பெருமையா காட்டிக்கலாம். அனுஷ்கா ஜொள்ளை ஆறா விடலாம். விஜய்சேதுவ சைட்டடிச்சுத்தள்ளலாம்.

ஏன் இதையெல்லாம் செய்யனும்? இதெல்லாம் குழந்தைதனமா இல்லை? சமூகத்துக்கு என்னா புரியோஜனம் இந்த மொக்கைகளால்? கொஞ்சமாச்சும் வளருங்க பெருசுகளான்னு வெளிய இருந்து பார்க்கறவங்களுக்கு ஒரு நொடில நொட்டை சொல்லிட்டு புறந்தள்ளிப்போகக்கூடிய ஒரு நெகிழிபூமி இது. ஆனால் இங்குதான் யாரும் யாருக்கும் யாரையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லாத இடம். மற்றவரை எடைபோட்டுப்பார்க்க முனையாத முயலாத பேச்சுகள். வெட்டியும் ஒட்டியும் அடிச்சுக்கறோம். புடிக்கலைன்னா வெட்டியும் விட்டுக்கறோம். ஆனால் எந்தவொரு தார்மீக அடிப்படையிலோ அவரவர் அறம் எனும் கற்பிதங்கள் அடிப்படையிலோ அடுத்தவரை அடையாளப்படுத்தல் மற்றும் மற்றவர் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் முகத்தை சிதைத்தல் என்பது வெகு அரிதாகவே இங்கே நடக்கக்காண்கிறேன். மேம்பூச்சாக சொன்னால் அம்புட்டு அந்நியோனியமாக இருக்கிறோம். உரித்துப்பார்த்தால் நாம் சொல்வதற்கு ஊங்கொட்ட சில காதுகள் புன்னகைக்க சில உதடுகள் ஆமோதிக்க சில தலையசைப்புகள் கிடைக்கிறது என்கிற சுயநலம் தவிர வேறென்ன இங்கே நிலவுது ஆரோக்கிய சமநிலைச்சமூகம்?

நினைச்சுப்பாருங்க… அறங்களின் அடிப்படையில் இங்கே யாரை வேண்டுமானாலும் ஒரு நொடியில் போட்டுப்பார்த்து விடமுடியும். ஒருசின்ன லஜ்ஜையற்ற வார்த்தைகொண்டு அபீதீனை தரமில்லைன்னு விலக்கிடலாம். குடியையும் குண்டியை குளிர்கடிக்க போட்டதையும் நேர்மையாக எழுதும் ராசுசாரை ச்சேவென திட்டி ஒதுக்கலாம். பச்சையாக ஜோக்கடிக்கும் அண்ணாச்சிய காறித்துப்பி திட்டித்தீர்க்கலாம். ஆனால் அதுவா அதுமட்டுமா அவர்கள்? ஏன் அவர்கள் அளவுக்கு பேசனும்? நம்முள் அல்ப்பையாக ஆண்ட்டிக ஜோக்கு எழுதிச்சிரிக்கும் எந்த ப்ளசரையும் பெண்ப்ளசர்ருங்க ப்ளாக் செய்யலாம். டவுண்ட்லோடு செய்து பார்த்தபடத்தின் கதையில் உணர்ந்த உன்னதங்களை புட்டுப்புட்டு வைத்து உணர்ச்சிவசப்படுபவர்களை சட்டையப்புடிச்சு யோக்கியமான்னு கேக்கலாம். இப்படி ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே சென்று வெறுமையில் முடிதலில் யாருக்கு இழப்பு? அபிதீனும் ராசுவும் நமக்கு சமமாக பேசுவதில் அவர்களுக்கு எந்தவித பெறுதலும் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அவர்கள் லெவலுக்கு கற்றோரை கற்றோரே காமுருவர்னு போயிருந்தால் நமக்கு எத்தனை இழப்பு? அவர்கள் அவர்களாகவே நம்முடன் இருப்பதால்தான் நாம் நாமாக நம் குறைகளுடன் அவர்களூடாக வளையவருகையில் மனதில் எந்தவித குறுகலும் நடுக்கமும் இல்லாமலிருக்க முடிகிறது. உண்மையில் எவ்வளவு பெரிய கொடுப்பினை இந்த ப்ளஸ்சு?

ப்ளசு மட்டுமே நமக்கு சோறுபோடுகிறதா என்ன? அவரவருக்கு ஒரு தொழில் உண்டு. அந்த தொழிலில் வேலையில் ஆயிரத்தெட்டு ஏமாத்துகள் கூதல்கள் உள்குத்துகள் மாய்மாலங்கள் உண்டு. அறத்தின் அடிப்படையில் கைநீட்டி சம்பளம் வாங்கும் இடத்தில் ஒவ்வொரு அநியாயத்தையும் தட்டிக்கேட்டு போராடிக்கொண்டே இருக்கிறோமா? நமக்கு நம் உண்டிக்கு பாதுகாப்பாய் காபந்து செய்ததுபோக மேற்படி மேற்படிக்குத்தானே நாம் அறமெனும் அடிஸ்கேலை உண்டுசெரித்ததுக்கு மேல ஏப்பமிட்டபடிக்கு தூக்கிட்டு வர்றோம்? குடும்பம் குட்டி சம்பளம் சேமிப்பு வருங்கால பாதுகாப்பு என எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டா தெருவில் இறங்கி ஊழலுகுக்கும் ஆபாசத்துக்கும் மனித உரிமைகளுக்கும் சாதிமத அழுத்தங்களுக்கும் எதிராக போராடுகிறோம்? இல்லை அப்படி போராட தெம்பில்லை துணிவில்லை என்பதற்காக பொங்காமல் இருந்துவிடுகிறோமா? என் கேள்வி பேசுபவர்களை ஏன்னு கேக்கறதில்லை. பேசாதவர்களை ஏன்னும் சீண்டறதில்லை. ஒருவரை அவர் சம்பாதியம் தொழில் ரீதியாக முக்கில் நிறுத்தி மூக்கில் குத்துவதை அறலேபில் ஒட்டிக்கொண்டு செய்யாதீர்கள் என்பதே.

உயர்வோ தாழ்ச்சியோ பிணங்களுக்குள் இல்லை. ஆனால் பிணம் எனும் ஒருகுரூப்புடே எனும் பாசப்பிணைப்பு மட்டும் இங்கு உண்டு. சுடுகாட்டிலும் காணக்கிடைக்காத ஒன்று நம்முள் உண்டு. அதான் சேர்ந்து சிரிக்கறது. இதையும் தாண்டி நீ நாறப்பொணம்டே நானு வாசப்பொணம்டேனு சொல்லிக்கறது நமக்குள்ள எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. வார்த்தை விளையாட்டுகள் கொடுக்கும் கணநேர சிலிர்ப்புகள் தவிர வேறு எந்த புரிதலையும் கொடுக்காது. வெளியுலக காலைவணக்க பண்பாளர்களுக்கும் அறப்போராட்டவாதிகளுக்கும் கலைத்தாக காவலருக்கும் அவர்கள் பார்வையில் நாம் பொணம் பொணம் பொணம் மட்டுமே.

ஆகவே…

Good bye G+ Thanks for everything 🙂

*

1 பின்னூட்டம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s