நாடகம் – ஆசிப் மீரான் சிறுகதை

ஒரே களேபரமாக இருந்தது. கூச்சலும், சத்தமுமாக ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க சுப்பையா வாத்தியார் கடுப்பாகிப் போய் “நாசமாப் போறவனுவளை வச்சுக்கிட்டு என்ன செய்யச் சொல்லுதிய?” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடை வருவதை முன்னிட்டு இந்த முறை கீழத் தெரு இளைஞர் சங்கம் சார்பாக “கறுத்த முகம்” நாடகம் நடத்துவதாகத் தீர்மானம் செய்திருந்தார்கள். போன வருசம் மெஞ்ஞானபுரத்தில் வள்ளுவர் கலைமன்றம் சார்பில் நடத்தப்பட்ட “கறுத்த முகம்” நாடகத்தில் ஒரே ஒரு பெண் வேசம்தான் என்பதால் அந்த நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டதே தவிர, உலகத்தைப் புரட்டிப் போடும் சமூகச் செய்தியைச் சொல்லுமென்பதற்காக அல்ல.

நாடகம் போடுவதில் இருக்கும் ஒரே சிக்கல் அதற்குண்டான செலவுதான். புளியடி மாரியம்மன் கோவில் மாதிரி இந்தக் கோவிலுக்கு பெரிய அளவில் வருமானமெல்லாம் இல்லை. தலைக்கட்டு வரிபோட்டு வசூல் செய்யுமளவுக்கு பெரிய தலைகளும் ஒன்றுமில்லை. இருந்தாலும் ‘தேங்காய் உடைக்குற இடத்துல குறைஞ்சது சிரட்டையாவது உடைக்கணுமே’ன்னுதான் நாடகம் போடுறதா தீர்மானம். செல்லப்பாதான் இளைஞர் சங்கச் செயலாளர். உருண்டையாக இருப்பான். எப்போதும் ‘தொளதொள’ வென்று பெரிய சட்டையாகப் போட்டுக் கொண்டு அவன் நடப்பதைப் பார்ப்பதற்கே கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்தில் ஆளில்லாத காரணத்தால் அவனேதான் செயலாளர்.

எல்லாவற்றையும் தானே சமாளிக்கும் திறன் இருப்பதால் எப்படியாவது ஊரை அடித்து உலையில் போட்டு விடும் சாமர்த்தியக்காரன். “மதுரைக்கு வழி வாயிலதாம்லே இருக்கு” என்பதுதான் அவனது ஒரே சித்தாந்தம்.

அரங்கம், ஒப்பனை எல்லாவற்றுக்கும் சேர்த்து வள்ளுவர் கலை மன்றத்துக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஒலிபெருக்கி, விளக்கு எல்லாவற்றுக்குமாக இன்னொரு 200 ரூபாய். நாடகம் முடிந்ததும் நாடகத்தில் நடித்தவர்களுக்கு இட்லியும், காரச் சட்டினியும் கொடுத்தேயாக வேண்டும். அதற்கு எப்படியும் இன்னொரு 300 ரூபாயாவது வேண்டும். இதெல்லாம் போக பெண் வேசம் போடும் நடிகை யார் என்பதைப் பொறுத்து 200லிருந்து 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

செல்லப்பா கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்ததில் எப்படியும் தொள்ளாயிரம் தேறி விடும் என்பது புரிந்தது. பற்றாக்குறை வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று அவனுக்குத் தெரியும். நாடகம் முடிந்து இட்லியை அளவுச் சாப்பாடாக்கி விட்டால் நூறு ரூபாயும், ஒலிபெருக்கியில் ஐம்பதும், நாடகம் போடும் வகையில் ஐம்பதும் குறைந்தால் எப்படியும் நாடகத்தை முடித்து விடலாமென்று நம்பிக்கை வந்ததும், சுறுசுறுப்பாக கணபதி வாத்தியாரைப் பார்த்து நாடகம் நடத்தப் போவதைப் பற்றிச் சொல்லிவிட்டான்.

கணபதி வாத்தியார்தான் கலைமன்றத்தின் பொறுப்பாளர். அவர்களாகப் போடும் நாடகத்துக்கு இயக்கமும் அவரேதான். ஒல்லியாக, காற்றடித்தால் பறந்து போய்விடுபவரைப் போல இருப்பார். நெற்றி நிறைய நீறு பூசி வாயில் வெற்றிலைக் குதப்பலோடு இருப்பார். ஓய்வு பெற்ற ஆசிரியர். கொஞ்சம் முறுக்கிக் கொண்டார்.

“பாருங்க தம்பி, இப்பல்லாம் முன்ன மாதிரியில்லல்லா.. நெறய நாடகம் போடுதானுவோ.. போன வருசம் ‘கறுத்த முகம்’ போட்டம்லா.. அவுகளே 1000 ரூவாயும் தந்து, பாராட்டி அனுப்பிச்சாங்கல்லா..”

செல்லப்பாவுக்கு கணபதி வாத்தியார் என்ன அடிபோடுகிறார் என்பது புரிந்து விட்டது.

“சரி அண்ணாச்சி, அப்போ நான் பொறவு வரேன். இந்த வருசம் நாடகம் வேண்டாம்னு சொல்லிடுதேன்..”

“என்னடேய்.. இப்படிச் சொல்லுதே? நாடகம் போடாம வேறென்ன செய்யப் போறிய?”

“250 ரூவா குடுத்தா கருங்கொளத்துலேருந்து சிவனடிமை கரகத்தோட வரப் போறான். அத பாத்துக்கிடுதோம்”

“என்னடேய்.. அவனுக்கு வயசாயிடுச்சுல்லா? அவன் ஆடுனா யாரு பாப்பா?”

“நாங்க பாப்பம்லா அண்ணாச்சி.. பணம் இருந்தா பவுசு காட்டலாம். இல்லன்னா என்ன செய்யச் சொல்லுதிய?”

செல்லப்பா குரலில் வருத்தம் காட்டினான்.

“அதுக்கென்னடேய் இப்பம்? பணம் இல்லாட்டிப் போனா என்ன? நாடகம் போட்டாத்தானடே கூட்டம் வரும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கடேய்.. வேணும்னா 750 ரூவா குடுங்க.. நம்ம பையனுவளுக்குச் செய்யாம வேற யாருக்குடேய் செய்யப் போறோம்?”

“சரி.. அண்ணாச்சி நாங்க கருங்கொளத்துக்குப் புறப்படுதோம்”

கணபதி வாத்தியாருக்குக் கலக்கம் வருவது மாதிரி செல்லப்பா எழுந்து விட்டான்.

“யேய்!! கொஞ்சம் இரிடேய்.. இப்படி அவசரப்படுதே? என்னதான் குடுப்பேன்னு சொல்லு. முடிஞ்சுதுன்னா உனக்குச் செய்யாமலாடே போயிடப் போறேன்?”

“அதெல்லாம் சரிப்படாது அண்ணாச்சி.. 300 ரூவாய்க்கு நீங்க எங்க வரப்போறிய?!. நான் கெளம்புதேன்!”

கணபதி வாத்தியார் செல்லப்பாவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார்.

“ஆனாலும் ரொம்பத்தாண்டே உனக்கு. 300 ரூவாய்க்கு சொவப்புப் பொவுடர் கூடக் கிடைக்காதுடேய்”

“எனக்குத் தெரியும்லா அண்ணாச்சி. அதான் கெளம்புதேன்னு சொல்லுதேன்” செல்லப்பா சலனமில்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு அவரை ஏறிட்டான்.

“சரிடேய்.. உனக்குமில்ல; எனக்குமில்ல; 400 ரூவாய்க்குப் போட்டுடுவோம்டேய். என்ன சொல்லுதே?”

“400 ரூவாய்க்கு எங்க போவ? 350க்கு பாருங்க அண்ணாச்சி”

“டேய் நீ ரொம்பத்தான் ஆசப்படுதடேய்.. நாடகத்துக்கு ஆளில்லாமவா பேரம் பேசுதேன்னு நெனக்கே? நம்ம பயலுவளாச்சேன்னு பாத்தா ரொம்பத்தான் எட போடுதடேய். நானூறுக்கே நான் மன்றத்துல ஏச்சு வாங்கணும் தெரியும்லா” கண்பதி வாத்தியார் குரலை உயர்த்திச் சொன்னார்.

“சரி.. சரி.. அண்ணாச்சி. 100 ரூவாய் முன்பணம் புடிங்க. மீதி இருநூத்தம்பதுக்கு நாடகம் முடிஞ்சதும்..” செல்லப்பா முடிப்பதற்குள் “மீதி முன்னூறு” என்றார் கண்பதி.

“சரிங்கண்ணாச்சி.. நடிக்குறதுக்கு யாரைக் கூப்பிடுவிய?” செல்லப்பாதான் ஆவலாய்க் கேட்டான்.

“ஆமாடேய்ய்.. கேப்பியல்லா.. நல்லா கேப்பியல்லா.. குடுக்குற நானூறு ரூவாய்க்கு காஞ்சனாவா வருவா? நம்ம ஆளுங்க யாரையாவது பொம்பள வேசம் போடச் சொல்லுடேய்” பத்து ரூபாய் தாளை பத்துத் தடவை எண்ணி சரி பார்த்துக் கொண்டே சொன்னார் அவர்.

செல்லப்பா திரும்பி வந்து நடந்ததைச் சொன்னதும் ‘கறுத்த முகம்’ நாடகம் நடத்துவதென்பது உறுதியாகி விட்டது. கதாநாயகனாக நடிக்க பாபநாசத்திடம் போனபோது அவர் கேட்ட முதல் கேள்வியே யாரு எனக்கு ஜோடி என்பதுதான். வள்ளி நாயகம்தான் என்று செல்லப்பா சொன்னதுமே பாபநாசத்துக்கு உற்சாகம் வடிந்து விட்டது.

“அநேகமா நான் அன்னிக்கு ஊருலயே இருக்க மாட்டேன்னு நெனக்கேன். வேற ஆளப் போடுங்கடே.. புது ஆட்களும் நடிக்கட்டும். நானே எத்தனை நாடகத்துல நடிக்க?’ சிரித்துக் கொண்டே அவர் சொல்ல வெளியே வந்ததும் செல்லப்பா கொதித்தான்.

“பெரிய புடுங்கின்னு நெனப்பு. போன வருசம் கனகாவை நடிக்கக் கூப்பிட்டப்போ எனக்கு ரெண்டு ஜோடி பாட்டு போதாதுன்னு அடம் புடிச்சி மூணு பாட்டு கேட்ட ஆளுல்லா. அன்னிக்கே ”””யை குறுக்குல மிதிச்சிருந்தா இன்னிக்கு ஒழுங்கா பேசியிருப்பாம்லா”

வள்ளி நாயகம் கதாநாயகியாக வேசம் போடுகிறான் என்று தெரிந்ததும் கதாநாயகனாக நடிக்க எவருக்கும் ஆர்வமில்லாமல் போனது. பாபநாசம் தானாகவே முன்வந்து வில்லன் வேசத்துல நடிக்கக் கேட்டதும் செல்லப்பாவுக்கு மனசில்லை. ஆனாலும், ‘தொலைஞ்சு போட்டுடே!’ என்று சம்மதித்து விட்டான்.

“நானே நாயகனாவே நடிச்சா நல்லாருக்காதுல்லா.. ஒரு மாறுதலுக்கு இந்த வேசத்தையும் போட்டுப் பாத்துடுவோம். என்ன சொல்லுதிய?” என்று ஏதோ ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகனைப் போல பேசிக் கொண்டிருந்தார் பாபநாசம். பாபநாசம்தான் ஊரைப் பொறுத்தவரைக்கும் எம்ஜியார், சிவாஜி எல்லாமே. குறைந்த பட்சம் அவருக்காவது அப்படி ஒரு நினைப்பு மனதிற்குள் இருந்து வந்தது. “நான் டவுசர் போடுத காலத்துலேருந்தே நடிக்கலாம்டே. மெட்ராசுக்குப் போவத் துட்டில்லாம இங்க கெடந்துட்டேன். இல்லேன்னா இன்னைக்கு சினிமால இருந்திருப்பம்லா..” என்பது போலத் தான் பேசிக் கொண்டிருப்பார். அது வரது இயல்புதான்.

“இனி நாடகம் முடியுற வரைக்கும் இந்த வேசா மொவன் பேசுறதையெல்லாம் கேட்டுத் தொலைக்கணும்லா” செல்லப்பா அலுத்துக் கொண்டாலும் அதில் இருக்கும் உண்மை எல்லோருக்கும் தெரியும்.

பாபநாசம் ஒதுங்கிக் கொண்டதாலும், வள்ளி நாயகம்தான் பெண் வேசம் போட்டு நடிக்கப் போகிறானென்பதாலும் கதாநாயகனாக நடிக்க ஆள் கிடைக்கவேயில்லை. செல்லப்பா நொந்தே போனான்.

“அறுதலிங்க பண்ணுத சேட்டையைப் பாத்திராவே.. கதாநாயகி வேணுமாம்லா. பொட்டப்புள்ள இருந்தாத்தான் நடிப்போம்னு ஒவ்வொருத்தனும் சண்டைலா போடுதானுவோ. நான் நாடகத்துக்குத் துட்டுச் சேக்குறதுக்கே நாய் படாதபாடு படுதேன். அது எந்த மைராண்டிக்காவது தெரியுதா? பெரிய புடுங்கின்னு அவனவனுக்கு நெனப்புல்லா” செல்லப்பா தனியாகப் பொருமிக் கொண்டிருந்தான்.

ஜான் அண்ணன் தான் செல்லப்பாவைச் சமாதானம் செய்து வைத்தார். செல்லப்பாவை “நீயே கதாநாயகனா நடிடேய்!” என்று அவர் சொல்ல செல்லப்பா அவரை ஒருமாதிரியாகப் பார்த்துச் சிரித்தான்.

“என்ன அண்ணாச்சி, கிண்டல் —- பண்ணாதீரும். நாடகம் போடுததுக்கு உம்மைக் கூப்பிட்டா, நீரு என்னடான்னா நாடகமே நடக்காம இருக்குததுக்குல்லா யோசனை சொல்லுதீரு”

“அப்படியில்ல கோட்டிக்காரா.. எப்படியும் நடிக்கப் போற எவனும் சிவாஜி கணேசன் இல்ல. அந்தக் கொடுமைக்கு நீ நடிச்சாத்தான் என்ன?”

“நான் கதாநாயகன்னு சொன்னா எல்லாரும் சிரிக்கல்லா செய்வானுவ?” செல்லப்பாவுக்கு, தனக்குக் கிடைத்த குருட்டு வாய்ப்பை எண்ணி உள்ளூற சந்தோசம் இருந்தாலும் சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்

‘சிரிக்கட்டும்டேய்.. எம்ஜியாரு நடிக்கப் போவும்போது கூட சிரிக்கத்தான் செஞ்சிருக்கானுவோ கொஞ்சம் பேரு. அவரு சிவாஜியை வுடப் பெரிய ஆளா வரலியாடேய்?”

ஜான் அண்ணன் சொன்ன சமாதானத்தை விடத் தன்னை எம்ஜியாரோடு ஒப்பிட்டு அவர் பேசியது செல்லப்பாவுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஒத்திகையில் கதாநாயகனாக நடிக்கப் போவது செல்லப்பா என்று தெரிந்ததும் எல்லோரும் சிரிக்கவே செய்தார்கள்.

“என்ன மயித்துக்குவே சிரிக்கிய? நான் நடிச்சா என்னங்கேன்?” என்று செல்லப்பா கோபப்பட்டான்.

“டேய், யாரு வேணும்னா நடிக்கலாம்டேய். ஆனா அதுக்காவ மொதல்லயே கதாநாயகனா நடிக்கணும்னு ஆசப்பட்டா அது ரொம்ப தப்புல்லா!”

“செயலாளரா இருக்குறதுக்காக கதாநாயகன் வேசம் போடுதது சரியாடேய்?”

“—ளி மாப்ள, நீ ரோடு போடுத மெசின்மாதிரில்லாடே இருக்க. நீ மேடைக்கு நடந்து வாரதுக்குள்ள நாடகம் முடிஞ்சிடும்லா”

ஆளாளுக்கு செல்லப்பாவைக் கேள்வி கேட்க “போங்கலேய்!”ன்னு அவன் வேசம்போட மறுத்து விட்டான். இப்படி ஆள் யாருமே கிடைக்காமல் போனதால் துரை அண்ணாச்சியை கதாநாயகனாக்க வேண்டியதாயிற்று. துரை அண்ணாச்சிக்குப் பலசரக்குக் கடை கல்லாவைத் தவிர வேறு ஏதாவது தெரியுமா என்று யாருக்கும் தெரியாது என்றாலும், சுளையாக நூறு ரூபாய் அன்பளிப்பாகத் தருபவர்கள் எந்த வேசத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும்.

நாடக ஒத்திகை நடக்க ஆரம்பித்ததும் ஜான் அண்ணன் இயக்கும் பொறுப்பை சுப்பையா வாத்தியாரிடம் ஒப்படைத்து விட்டார்.. ஆரம்பத்தில் அவர் உற்சாகமாகத்தான் இருந்தார்.. ஆனாலும் இரண்டொரு நாள்களிலேயே ‘கொள்ளைல போறவனுவோ வரவும் மாட்டானுவோ. வந்தா ஒழுங்கா வசனம் பேசவும் மாட்டானுவோ. இந்த அறுதலிங்களைக் கட்டி அழறதுக்கு எதுக்குத்தான் சம்மதிச்சேனோ தெரியலையே’ன்னு புலம்பிக் கொண்டிருக்க, ஒரு நாள் அவசரமாக உள்ளே நுழைந்தான் செல்லப்பா.

“சுப்பையாண்ணே, ஒத்திகையைக் கொஞ்சம் நிறுத்துங்க. முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும்.”

“என்னடேய்.. நாடகம் நின்னுடிச்சா” சுப்பையா வாத்தியின் குரலில் தெரிந்தது மகிழ்ச்சியா வருத்தமா என்று தெரியவில்லை.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இன்னைக்கு இட்டமொழி போயிருந்தேம்லா. அங்கின நம்ம நல்லசிவம் அண்ணாச்சியப் பாத்தேன். அண்ணாச்சி கிட்ட பேசிட்டிருக்கும்போது கோயில் கொடையெல்லாம் எப்படியிருக்குன்னு விசாரிச்சாக. நான் துட்டுக்கு வழியில்லாம அலையுதேன்னு சொன்னேன். ‘எதுக்குலே இப்படி இருக்கிய.. என் கிட்ட கேட்டா தரமாட்டனான்னு சொன்னாக. சரி நூறு ரூவா தருவாக போலிருக்குன்னு நெனச்சா மூணு நூறு ரூவா நோட்டையில்லா எடுத்துத் தந்தாக. “இதை முன் பணமா வச்சுக்கடேய். ஊருக்கு ரெண்டு நாள்ல வருவம்லா. அப்ப இன்னும் எரநூறு தாரண்டேய்”னு சொல்லியிருக்காக. அதனால அவுக வரதுக்கு முன்னால எல்லாம் அவங்கவங்க பாடத்தை ஒழுங்காப் படிச்சு நாடகத்துல ஒழுங்கா நடிங்க. அண்ணாச்சி ஊருக்கு வந்தாருன்னா ஒத்திகைக்கு வருவாருல்லா.”

அந்தக் கூட்டத்தில் கொஞ்ச நேரம் அசைவு ஏதுமில்லை.

“யேய் செல்லப்பா, அப்படின்னா நாடகம் முடிஞ்ச உடனே அளவு இட்டிலி போடாம நெறய போடுடேய்!” வள்ளிதான் முதலில் சொன்னான். அவன் கவலை அவனுக்கு.

“அதுக்கென்னலேய்.. போட்டுடுவோம். அத விட முக்கியமான ஒண்ணு இருக்குல்லா. நேத்து நான் திருநவேலி போயிருந்தம்லா. டவுண்ல மாலாவைப் பாத்துப் பேசியிருக்கேன். அவ சரின்னு சொல்லிட்டா. துரை அண்ணாச்சிக்கு யோகம்தான்!” செல்லப்பா சிரிக்க, துரை அண்ணாச்சிக்கு நடப்பது கனவு போல இருந்தது. மாலாதான் சுற்று வட்டாரத்தில் பரவலாக அறியப்படும் நாடக நடிகை. பார்ப்பதற்கும் கொஞ்சம் பளிச்சென்று மப்பும் மந்தாரமுமாக இருப்பாள்.

மாலாவோடு வள்ளுவர் கலா மன்ற ‘செட்டிங்’கில் சிவப்பு, மஞ்சள், ஊதா வண்ண விளக்கு வெளிச்சத்தில் ‘மானா மதுர குண்டு மல்லியே’ மானசீகமாகப் பாடுவதற்கு அவருக்கு அது போதுமானதாக இருந்தது. பிறந்த பயனை அடைந்தது போல வாய் நிறைய புன்னகையோடு வலம் வர ஆரம்பித்தார் அண்ணாச்சி.. ‘நூறு ரூவா குடுத்தது வீணாப் போவல’ என்று மனசுக்குள் கணக்கும் ஓடியது அவருக்கு.

“என்னது, மாலாவை நடிக்கக் கூப்பிடப் போறியா?” பாபநாசம் அண்ணாச்சி கேட்டார்.

“ஆமா அண்ணாச்சி!”

“வள்ளி நடிக்காம்னுல்லா மொதல்ல சொன்னே?”

“ஆமா வள்ளிதான நடிக்குறதா இருந்துது”

“ஆனா, மாலா நடிக்கப் போறான்னு சொல்லுத?”

“ஆமா. அன்னைக்குக் கையில துட்டு இல்லல்லா. அதனால அப்படி. இப்போ அண்ணாச்சி துட்டு தந்திருக்காரு. அதான் இப்படி. மாலா வந்தா கூட்டம் வரும்லா.”

“ஏமாத்துதீங்கடேய்.. வருசம் பூரா கதாநாயகனா நடிச்ச என்னை வில்லனா நடிக்க வைக்குறதுக்குத்தான இந்த நடிப்பு?” பாபநாசம் அண்ணாச்சி கொதித்தெழுந்தார்.

“யார் நடிக்கா? நானா நீரா?” செல்லப்பாவுக்கும் மூக்கு சிவக்க ஆரம்பித்தது.

“மொதல்லே என் கிட்ட சொல்லாம, என்னை ஏமாத்திப் போட்டு நாடகம் நடத்திடலாம்னு பாக்கியளோ?” பாபநாசம் பொங்க ஆரம்பிக்க,

“ஆமாவேய்.. அப்படித்தான்னு வச்சுக்கும்வேய்.. இப்ப அதுக்கு என்னங்கீரு?”

“என்னலேய் மரியாத தெரியாத பயலா இருக்க. நீ கூப்புட்டு நடிக்க வந்தேன் பாரு. என் புத்தியத்தான் செருப்பால அடிக்கணும். என்னவேய் சுப்பையா, நீருமாவே இதுக்குக் கூட்டு?” பாபநாசம் கணையைத் திசை திருப்ப, “அய்யய்யோ எனக்கு ஒண்ணும் தெரியாது'” என்றார் சுப்பையா வாத்தி.

நிலவரம் மோசமாவதைப் பார்த்து மற்றவர்கள் பாநாசத்தைச் சமாதானப்படுத்த, செல்லப்பாவை தள்ளிக் கொண்டு ஜான் அண்ணன் வெளியில் போனார்.

“நானாவே அவரை வில்லன் வேசம் போடச் சொன்னேன். பொம்பள வேசத்துக்கு ஆளில்லன்னவுடனே நான் வில்லனா நடிக்கேன்னு சொன்னது இந்த வேசா மொவந்தானே?.. எவன் தாலியறுத்தா என்னன்னு கிடக்காம நாடகம் போட அலையுதேன் பாரும். எனக்கு இன்னம் வேணும்வேய்” செல்லப்பா ஜான் அண்ணனிடம் புலம்பிக் கொண்டிருக்க, உள்ளே பாபநாசம் தன் கலையுலக வாழ்க்கைப் பெருமையை தானே சொல்லிக் கொண்டு தனக்கு உரிய மரியாதை கிடைக்காத இடத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று முழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் பேசுவதைக் கேட்கத்தான் ஆளில்லை.

கொஞ்ச நேரப் பொருமலுக்குப் பிறகு பாபநாசம் தானாகவே சுப்பையா வாத்தியிடம் போய், “நான் இந்த நாடகத்துல நடிக்கணும்னா நான் கதாநாயகனா நடிச்சிருந்தா எப்படி எனக்கு பாட்டு வைப்பியளோ அதுமாதிரி எனக்கு மாலா கூட ஜோடிப் பாட்டு வைக்கணும். அப்படிச் செய்யுங்க.. இல்லன்னா இப்பவே சொல்லுங்க. என்னை என்னமோ போக்கத்த பயன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியளா? நூறு கதாநாயகி கூட நடிச்சிருக்கேன்வே”

சுப்பையா வாத்தியாருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை

“அண்ணாச்சி, நீங்க வில்லன் வேசம்லா போடுதீங்க, உங்களுக்கு எப்படி ஜோடிப் பாட்டு வரும்?”

அவரது கேள்வியை பாபநாசம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

“வில்லன் வேசம் போட்டா என்ன? கதாநாயகனுக்குக் கனவுப்பாட்டு வைக்கியள்ளா? அது மாதிரி எனக்கும் வைங்க.. கதாநாயகன் மட்டும்தான் கனவு காங்கணும்னு எவம்லே சொன்னான்? வில்லனும் கனவு காண்பான்னு சொல்லும். எவன் கேப்பான்? என்ன செய்வியளோ ஏது செய்வியளோ எனக்குத் தெரியாது. எனக்கு ஜோடி பாட்டு வேணும். அவ்வளவுதான். இல்லன்னா நீங்களே ஆளப் போட்டு நாடகத்த நடத்துங்க.” சொல்லி விட்டு ஒத்திகைக்குக் கூட இருக்காமல் அவர் கிளம்பிப் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு செல்லப்பா சொன்னான்..

“போவட்டு போவட்டு.. இங்க கடவுளே களனித் தண்ணிதான் குடிச்சிட்டிருக்குறாராம். பூசாரிக்கு புண்ணாக்கு வேணுமாமுல்லா?? அவரப் போவச் சொல்லுவே.. கூரைக்கு மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா வரும். இவரு செரைக்கலன்னா மசுரு போவாதுன்னு எவன் சொன்னான்? வேற யாராவது கிடைக்காமலா போயிடுவான்?” செல்லப்பா வீறாப்பாகச் சொல்லி விட்டாலும் உடனே ஆள் கிடைக்கவில்லை.. இரண்டு நாள் தேடிப்பார்த்தும் ஆளில்லாததால் சுப்பையா வாத்தியாருக்குக் கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

“நீ என்ன மயித்துக்குடே அவரு கிட்ட மாலா நடிக்கப் போறதப் பத்திச் சொன்னே?” சுப்பையா வாத்தி செல்லப்பாவிடம் கேட்டார்.

“ஆமாவே, என் கிட்ட கேளும். அந்தப் படுக்காளிப் பய நடிக்க மாட்டேன்னு சொன்னாம்லவே. அப்ப வாய்க்குள்ள கொழக்கட்டயா வச்சிருந்தீரு?” செல்லப்பா கடுப்பானான்.

“அவரு பெரிய நடிகருல்லாடே”

“ஆமா. மயித்தப் புடுங்குன நடிகன். என் வாயப் புடுங்காதீரும்வே. நடிகனாம்ல நடிகன்?! ஊரு உலகம் காணாத நடிகன். பிச்சக்காரப் பய!”

“சரிடே, இப்ப என்ன செய்யணுங்க? ரெண்டு நாளுதான இருக்கு. மாலா என்னைக்கு வாரா?”

“என்ன எளவாவது செய்யுங்க. அவ நாடகம் நடக்குத அன்னைக்குக் காலைலதான் வருவா”

“ஒரு நாள் முந்தி வரச் சொல்லலாம்லா?”

“ஒருநா முந்தி வந்து ரெண்டு வருஷம் முன்னால ஒருத்தி பட்டபாடு எங்களுக்குத் தெரியாதா? ஊராவே இது?! மாட்டுக்குப் பொடவ கட்டிக் கூட்டுட்டு வந்தாலும் மொறச்சு மொறச்சுல்லா பாக்கானுவ. பொம்பளைய வாழ்க்கையிலேயே பாத்ததேயில்லன்னு சாமி மேல சத்தியம் பண்ணுவான போல. இந்த ஊருக்கே இனி வரமாட்டேன்னு சொல்லிட்டுல்லா போனா அவ.. இவளும் அந்த மாதிரி சொல்லணும்னு உமக்கு ஆசையாக்கும்?” செல்லையா கேட்டதும் சுப்பையா வாத்தியார் பேசாமல் இருந்து விட்டார்.

“சரிடே, இப்ப என்னதான் செய்யச் சொல்லுத? நடக்குற கதயப் பேசம்டே’

“ஆமாவே.. எல்லாத்துக்கும் என் காமாட்டுலேயே வந்து முட்டும். நான் ஒருத்தந்தானா வேட்டியக் கட்டிக்கிட்டு நடக்கேன். நீரும்தானே கட்டிக்கிட்டு இருக்கீரு? எவனையாவது புடிச்சிப் போட்டு நாடகம் நடத்தத் துப்பில்ல. வேற என்னத்தச் செய்யச் சொல்லுதீரு? அந்த வேசா மொவனையே நடிக்கச் சொல்லித் தொலையும்.. ஆனா ஒரு விசயம். ஒரு பாட்டுத்தான் குடுப்போம். அதும் கடைசிலதான் வைக்கணும். சம்மதம்னா நடிக்கட்டு. இல்லேன்னா நாடகத்தையே மண்ணள்ளிப் போட்டு மூடும். இனிமே நாடகம் போடுதேன் மயிரப் புடுங்குதேன்னு எவனாவது என் கிட்ட வந்தியன்னா நடக்குற கதய வேற.. சொல்லிப்புட்டேன் பாத்துக்கிடும் ” சொல்லி விட்டு செல்லப்பா எழுந்து போனான். போனவன் போனவன் தான்.

அதன் பிறகு நாடகத்தன்று காலையில் மாலா ஒத்திகைக்கு வந்தபோது கூட செல்லப்பாவைக் காணவில்லை.. மற்ற காட்சிகளையெல்லாம் மறந்து விட்டு காலை முழுவதும் ஜோடிப் பாட்டுக்கு ஒத்திகை நடத்த வேண்டுமென்று பாபநாசம் சொன்னதை மற்றவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போதும்…………..

“செல்லப்பா அண்ணனை எங்க காணோம்?” என்று மாலா அக்கறையோடு விசாரிக்க, “லேய், செல்லப்பா இவளுக்கு அண்ணன்னு சொல்லுதா. அப்ப அவன் இனிமே எனக்கு மச்சாம்லா” என்று ஒத்திகை பார்க்க வந்திருந்த சிலர் சொல்லிக் கொண்டிருந்தபோதும்…………….

மதியம் மாலாவோடு சேர்ந்து பாபநாசம் ஆட்டத்திற்கு ஒத்திகை பார்த்தார். “இடுப்புலல்லாம் கை வைக்காதிய அண்ணாச்சி” என்று மாலா சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். சுப்பையா வாத்தியார் தலையில் அடித்துக்கொண்டார். அப்போதும்………….. செல்லப்பா வரவில்லை. ஆளைக் காணவுமில்லை.

நாடகம் அம்மன் வீதி உலா முடிந்து தர்மகர்த்தாக்களுக்கெல்லாம் மாலை போட்டு, வாழ்த்துரை எல்லாம் வழங்கப்பட்டு தொடங்கும்போது மணி 11 ஆகியிருந்தது. பாபநாசம் பதட்டமாகவும், கோபமாகவும் இருந்தார்.

“எனக்கு ஜோடிப் பாட்டு கடைசியில் வச்சிருக்கிய. இவ்வளவு லேட்டாச்சுன்னா யாரு பாப்பாங்க?” என்று பொருமிக் கொண்டிருந்தார்.

“இல்லன்னா மட்டும் இவரு ஆடுறதப் பாக்கவா ஆளுங்க வர்றாங்க. கோட்டிக்காரத் தா—ளியால்ல இருக்கான். நாங்களே செல்லப்பாண்ணன் எங்க போய்த் தொலைஞ்சாருன்னு தேடிக்கிட்டி திரியிதோம். வந்துட்டாரு தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு” என்று அவரைத் திட்டிக்கொண்டு ‘தம்’மடிப்பதைத் தொடர்ந்தான் திரைச்சீலையை இழுக்கும் கணேசன்.

நாடகம் பாதி முழுங்கப்பட்ட வசனங்களோடும், மிகையான நடிப்போடும், ஒலிவாங்கியின் அசுரக் கூச்சலோடு கூடிய ஒலியோடும், ஆர்ப்பாட்டமான சிரிப்போடும் எதிரில் இருக்கும் ஜனங்களைப் பற்றிய அக்கறை இல்லாமலும் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதும் காணவில்லை செல்லப்பாவை.

துரை அண்ணாச்சி கலாமன்றத்தின் தயவில் முதல் தடவையாக டை கட்டிக் கொண்டு இரவல் வாங்கிய கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மாலாவோடு ஆடும்போது கண் சரியாகத் தெரியாமல் தடுக்கி கீழே விழுந்ததைப் பார்த்து ஜனங்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

திரைக்குப் பின்னால் பாபநாசம் அண்ணாச்சி தீவிரமான முகத்தோடு உலாவிக் கொண்டிருந்தார்.

“என் பாட்டு எப்படே வருது?” என்று அடிக்கடி கணேசனைக் கேட்க அவன் கடுப்பாகி, “யாருக்குவே தெரியும்? நாடகத்துல நடிக்கேங்கீரு. உமக்கே தெரியலை. எனக்கு எப்படிவே தெரியும்? வெளங்காத ஆளால்லாவே இருக்கீரு!” என்று திட்டித் தீர்த்துவிட்டான். அப்போதும் செல்லப்பா வரவில்லை.

ஒருவகையாக 34வது காட்சி நடந்து கொண்டிருந்தபோது சுப்பையா வாத்தி பாபநாசத்திடம் போய், “அடுத்த காட்சி உம்மோடதுதான்வே. எப்படி ஆடுறதுன்னு ஞாபவம் இருக்குல்லா? மாலா இடுப்புல மட்டும் கைய வக்காதிய கேட்டியளா? அவ கோபப்படுதால்லா?!” என்றார்.

“ஆமா. பர தேவதைல்லா அவ. எத்தனை பேரு அவ மேல எங்கெங்க கைய வச்சிருக்கான்னு எனக்குத் தெரியும்வே. அவ அப்படித்தான் சொல்லுவா. நாங்க பாத்துக்கிடுதோம். நீரு உம்ம துருத்திய மட்டும் ஊதும். என்ன?” என்றார் பாபநாசம். அவருக்குத் தெரியாமல் தலையிலடித்துக் கொண்டார் சுப்பையா வாத்தி.

அடுத்த காட்சி தனதென்பதால் தனது ஒப்பனை கலைந்து விட்டதாக பாவித்துக்கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டார். மீண்டும் கணேசனிடம் “மேக்கப்பு கலைஞ்சிருக்கானு பாருடே!” என்று கேட்க, “சட்டியில இருக்கதுதானவே வரும். மேக்கப்பு போட்டா மட்டு நீரு எம்சியாரு ஆயிடுவீரோ. போரும்வே!” என்றான். ராத்திரி இரண்டு மணியாகியும் நாடகம் முடியாத கவலை அவனுக்கு..

ஒரு வகையாகக் கடைசியில் அந்தக் காட்சி வந்தே விட்டது. காட்சியின் பின்னணியில் பார்வையாளர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு மாலா நின்றிருக்க பாபநாசம் உள்ளே நுழைந்து அவளைக் கைப்பிடித்து மெல்லத் திருப்ப வேண்டும்.

பாபநாசம் இந்தக் கதையில் தான் வில்லன் என்பதை மறந்து கதாநாயகத் துள்ளலோடு அருகில் சென்று மாலாவின் கைபிடித்துத் திருப்ப, திரை விலகி ஒளி விழுந்தபோது மாலாவாக நின்று கொண்டிருந்தான் செல்லப்பா.

அரங்கு அதிர்ந்து ஆர்ப்பரிக்க, பேயறைந்த முகத்தோடு பாபநாசம் திகைத்து நிற்க, “வே வெங்கலப் —–கு, ஆடும்வே!” என்றான் திரை இழுக்கும் கணேசன். பாபநாசம் ஆடாமல் அப்படியே நிற்க செல்லப்பா அவருக்கும் சேர்த்து ஆனந்த நடனமாடினான்.

கூட்டம் செல்லப்பாவோடு சேர்ந்து ஆர்ப்பரிக்க, ஆடாமல் நின்றிருக்கும் பாபநாசத்திடம், “வே.. பாபநாசம் ஆடும்வே!” என்று உள்ளிருந்து கணேசன் கூவ, வேறு வழியில்லாமல் அவர் ஆடத் துவங்க, ‘அண்ணாச்சி, செல்லப்பா இடுப்புல கைய வச்சுக்கிட்டு ஆடுங்க’ என்று மாலா சொல்ல… பாபநாசம் அண்ணாச்சியின் முகம் கறுத்து விட்டது.

சொல்லத் தேவையில்லை; ‘கறுத்த முகம்’ தான் பாபநாசத்தின் கடைசி நாடகம்.

*

நன்றி : ஆசிப்மீரான்

2 பின்னூட்டங்கள்

 1. ரமா மலர் said,

  25/11/2018 இல் 20:04

  ஆஸிஃப் என்ன இப்படி பிரமாதப்படுத்தியிருக்கிறீர்கள்
  ஒவ்வொரு வரியும் கண் முன் காட்சியாய் விரிந்தது
  கதாபாத்திரங்களின் . வட்டார மொழியை மிக மிக ரசித்தேன்.
  இதை ஒரு நாடகமாகவே வழங்கினால் இன்னும் மகிழ்வேன்..நகைச்சுவையுடன் சோகமும் எதிர்பாராதிருப்பமும் கலந்து இறுதி காட்சி அருமை.

  வாழ்த்துகள்!!!!!🙂

  • 27/11/2018 இல் 09:14

   வருகைக்கு நன்றி. அப்படியே ‘கலைஞன்’ கதையையும் வாசித்துவிடுங்கள் (சுட்டி :
   https://abedheen.com/2013/10/28/asif-story1/ )

   எல்லோருக்கும் ஏணியாய் இருக்கும் ஆசிப்மீரான் தன் சிறுகதைத் தொகுப்பை மட்டும் இதுவரை வெளியிடமாட்டேன் என்று ஏனோ அடம் பிடிக்கிறார். எடுத்துச் சொல்லுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s