‘இளநீரோ தென்னங்கள்ளோ வேண்டி தோப்புக்கு வரும் மாப்பிள்ளை, அருந்தியதன் குளிர்மை அனுபவித்த விசுவாசத்தில் ‘ஒரே புழுக்கம் மழ வந்தா தேவல’ என்று ஒப்புக்கு சொல்கிறானல்லவா அதிலிருக்கிறதே ஒட்டாத தீவிரம் அப்படித்தானிருக்கிறது நம் இலக்கிய அக்குசு’ என்று
கூத்துவாத்தியார் மு. ஹரிகிருஷ்ணன் எழுதும் மணல்வீடு இதழில் வாசித்த நற்கதை இது. மூலம் : மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் ( நற்றினை 352) . படைப்பு : மு. சுயம்புலிங்கம். ஆமாம், ‘அவக்காச்சை’ என்றால் என்ன சார்?
*
கானல் நீர்
ஒரு பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் ஒரு ஒத்தையடிப் பாதை.
அந்த ஒத்தையடிப் பாதையில் மனிதப் பிணங்கள் கெடக்கு.
அந்தப் பிணங்களை கழுகுகள் தின்றுகொண்டிருக்கின்றன.
அந்தப் பாதையில் ஒரு நரி வருகிறது.
அந்த நரி அதன் நிழலைப் பார்த்துக்கொண்டு, அதன் நிழலோடு அது விளையாடிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது.
அந்த நரி பிணங்களைத் தின்றுகொண்டிருக்கிற கழுகுகளைப் பார்க்கிறது.
அந்த நரி கழுகுகளைத் துரத்துகிறது.
அந்த நரி அந்தப் பிணங்களைத் தின்கிறது.
அந்த நரி அந்தப் பிணங்களை அவக்காச்சையோடு தின்றுகொண்டிருக்கிறது. எவ்வளவு பிணம் தின்னாலும் அந்த நரிக்கு செழிக்கவே இல்லை.
அது பிணத்தை விழுங்கிக்கொண்டே இருக்கிறது.
பிணம் தின்ன அந்த நரிக்கு சரியான தண்ணித் தாகம்.
நரி தண்ணித் தாகத்தோடு அந்தப் பாலைவனத்தில் தண்ணீரைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறது.
நரி கண்களுக்கு கானல்நீர்தான் தெரிகிறது.
நரி, கானல் நீரைத் தண்ணீர் என்று நம்பி அது கானல் நீரிடம் போகிறது.
நரி, கானல்நீரின் கிட்டப் போகப்போக, கானல்நீர் விலகிவிலகி வெகு தொலைவுக்கு அப்பால் போய்விடுகிறது.
பிணம் தின்ன நரியின் தண்ணித் தாகத்தைத் தீர்ப்பதற்கு அந்தப் பாலைவனத்தில் எங்குமே தண்ணீர் இல்லை.
நரி இளைப்பாறுவதற்கு ஒரு நிழலைத் தேடி அலைந்துகொண்டேயிருக்கிறது.
*
நன்றி : மணல்வீடு (இதழ் 30&31)
மறுமொழியொன்றை இடுங்கள்