நேர்காணல்களின் காலம் – மனுஷ்ய புத்திரன்

மறக்க முடியாத ஆறு நேர்காணல்கள்

மனுஷ்ய புத்திரன்
……………..
1. அவர்கள் எங்கள் குழந்தைகளை அடித்தார்கள்
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை
தெருவுக்கு இழுத்துச் சென்று அடித்தார்கள்

2. என்னைச் சுடுவதற்கு வைத்த குறிதான்
என் தோழியின் மேல் பாய்ந்தது
அவள் என்னை இழுத்துக்கொண்டு ஓடினாள்
அப்போதுதான் அவளது வாயில் குண்டு பாய்ந்தது

3. நாங்கள் வருவதற்கு முன்பே
ஆட்சியர் அலுவலகம் எரிந்துகொண்டிருந்தது
நாங்கள் அதை தொலைவில் இருந்து கண்டோம்
அவர்களே எரித்தபடி
துப்பாகிகளுடன் எங்களுக்காக
காத்திருந்தார்கள்

4. மருத்துவமனையில்
குண்டடிபட்டுக் கிடந்த
எங்களுக்கு இரண்டு நாட்களாக
சாப்பாடு இல்லை
தண்ணீர் இல்லை
இன்றுதான் யாரோ
பத்து ரூபாய் சாப்பாடு தந்தார்கள்

5. ரத்தப்பெருக்குடன் ஏராளமானோர்
மருத்துவமனையில் இருக்கிறார்கள்
வெளியியே இருந்து
ரத்தம் தரவருபவர்களை
ஊருக்குள் அனுமதியுங்கள்

6. நகரம் முற்றுகையிடப்பட்ட நாளில் நடந்த
எங்கள் திருமணத்திற்கு
யாருமே வரவில்லை
காலி நாற்காலிகள் முன் நாங்கள்
மாலை மாற்றிக்கொண்டோம்
எங்கள் உறவினர்களுக்காக
நாங்கள் சமைத்த உணவுடன் காத்திருக்கிறோம்

நண்பர்களே
சொல்வதற்கும் கேட்பதற்கும்
ஏராளம் இருக்கிறது
என்னிடம் கவித்துவமான சொற்கள் இல்லை
இது வாக்குமூலங்களின் காலம்
இது மறக்க முடியாத நேர்காணல்களின் காலம்

25.5.2018
மாலை 5.14
மனுஷ்ய புத்திரன்

*

Operation tamil dogs

மனுஷ்ய புத்திரன்
……………..
இப்படித்தான் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்கிறார்கள்

இப்படித்தான்
இந்தி எதிர்ப்பு போரில் நடந்தது என்கிறார்கள்

இதுதான் குஜராத் மாடல் என்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில்
மக்கள் இவ்வாறுதான் கிடந்தார்கள் என்கிறார்கள்

‘திரும்பிப் போ’ என்று சொன்னதற்கு
இதுதான் பதில் என்கிறார்கள்

பயன்படுத்தப்பட்டது என்ன ரக துப்ப்பாக்கி
என்பதைப்பற்றி விவாதங்கள் நடக்கின்றன
மாணவி ஸ்னோலின் போலீசுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்
வாயில் சுடப்பட்டாள் என்கிறார்கள்
இந்த அதிகாலையில்
நான் வாய்விட்டு அழுகிறேன்
அனிதா இறந்த இரவிலும்
இப்படித்தான் அழுதேன்

மக்கள் எவ்வவு அப்பாவியாக
ஒரு பதாகையை கையில் ஏந்திக்கொண்டு
தெருவுக்கு வருகிறார்கள்
நமது அரசாங்கம் நம் குரலை கேட்கும் என்று நம்புகிறார்கள்
ஜனநாயகத்தில்
தாம்தான் எஜமானர்கள் என்று நம்புகிறார்கள்
உலகமே பார்த்துக்கொண்டிருப்பதால்
நம்மை அடிக்கமாட்டார்கள் என்று நம்புகிறார்கள்
அதிகாரம் ஒரு வஞ்சகமுள்ள மிருகம்
அது பொறுமையுடன் சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறது
அதை நீங்கள் வெல்ல முடியும் என
அது உங்களை நம்பவைக்கிறது
படுகளங்களை நோக்கி
மக்கள் எந்த ஆயத்தமும் இல்லாமல் வருகிறார்கள்
அரசாங்கம் ஒரு வேன் மேல் ஏறிக்கொண்டு
மஞ்சள் டீ ஷர்ட்டுடன் நிதானமாகச் சுடுகிறது
இதற்கு முன் மக்கள் அதை
சினிமாவில்தான் கண்டிருக்கிறார்கள்

துப்பாக்கிகுண்டினால் செத்தால்
பத்து இலட்சம் தருகிறார்கள்
இது நல்ல ஆஃபர் என்றே படுகிறது
நிதிச்சுமையிலும் அரசாங்கம் இதுபோன்ற
நல்ல திட்டங்களை மக்களுக்காக
செயல்படுத்துகிறது
நான் என்னைச்சுடுவதற்கு
பதினோரு இலட்சம் கேட்டு
இன்று பேரம் பேசுவேன்
நாம் மனித உயிர்களின் மதிப்பை
கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
அதிகரிக்க வேண்டும்

இந்த அதிகாலை வெளிச்சத்தில்
ரத்தத்தின் பிசுபிசுப்பு இருக்கிறது
நீண்ட இரவு முழுக்க
நான் கொலைக்காட்சிகளை
சிந்தித்து முடித்துவிட்டேன்
என்ன செய்யவேண்டும்?
வெற்று வார்த்தைக்கூட்டங்களை
உருவாக்க வேண்டும்
தொலைக்காட்சி கேமிராகள் முன் வெடிக்கும்
என் கையாலாகாத கோபங்கள்

வாருங்கள்
சதுக்கங்களில் கூடுவோம்
சுடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
மரித்தவர்களுக்கு
மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்
துண்டுப்பிரசுரங்களை கொடுப்போம்
மே 22..நமக்கு நினைவேந்தல்களுக்கு
இன்னுமொரு புதிய தேதி கிடைத்துவிட்டது
இன்னும் நிறைய தேதிகள்
நமக்கு கிடைக்கவிருக்கின்றன
நாம் தெருநாய்களைப்போல
தொடர்ந்து வேட்டையாடப்படவேண்டும் என்பதுதான் திட்டம்
‘ operation tamil dogs’ என அதற்கு
ரகசியமாக பெயரிடப்பட்டிருக்கிறது

எனக்கு மூச்சுத்திணறுகிறது
ஸ்னோலினின் தொண்டையில்
சுடப்பட்பட்ட தோட்டா
நம் குரல்வளைகளில் அடைத்துக்கொண்டிருக்கிறது
பலமாக இருமுகிறேன்
நம்மால் அதை அவ்வளவு எளிதாக
துப்ப முடியுமா?

என்ன மயிருக்காக
நாம் இவ்வளவையும் சகித்துக்கொண்டிருக்கிறோம்?
என்ன மயிருக்காக
இவ்வளவு பொறுமையாக
இருக்கிறோம்?

23.5.2018
காலை 6.02
மனுஷ்ய புத்திரன்

நன்றி :

manushyaputhiran-fb2

1 பின்னூட்டம்

  1. தாஜ் said,

    27/05/2018 இல் 18:09

    கவிஞரின் மொழியில் தெறிக்கும் நிஜம் மீண்டும் பதற்றத்தை தருகிறது. காலம் வேதனைத் தருகிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s