ஆடு – சிறுகதை

இடம்‘ சிறுகதைத் தொகுப்பிலிருந்து – பிடித்தமான தம்பி சென்ஷியின் பிறந்தநாளை முன்னிட்டு!

*

அஹமது சாலிக்குக்கு இவ்வளவு அக்கறை கம்பெனி மேல் எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் தம்பி காலித் சாலிக் மூக்கை நுழைத்த பிறகு (‘அல்லாஹ்வே.. அவன் முழு உடம்பையும் நுழைத்து விட்டான்’- அஹ்மது) ஒதுங்கித்தான் விட்டார். என்னதான் உழைத்தாலும் அரைக்காசுதானே என்று அலட்சியம். பெயருக்கு பங்குதாரராக உள்ள பல கம்பெனிகளிலிருந்தும் , தான் சொந்தமாக நடத்தும் scrap கம்பெனியிலிருந்தும் (ஓட்டை உடைசல் கம்பெனி என்று சொல்வது நன்றாக இல்லை) ஒன்றும் வராமல் செலவுக்கு அந்த அரைக்காசுதானே உதவுகிறது என்பது வேறு விஷயம். அதே அரைக்காசு அலட்சியம்தான் அவர் தம்பிக்கும் இருந்தாலும் செளதியிலிருந்து வரும் 300 கிலோவிலிருந்து 400 கிலோ வரை எடையுள்ள புல்கட்டுகள் ஆயிரக்கணக்கில் தன்னால்தான் வருகிறது என்ற மிதப்பில் அவன் ‘நியாயமான’ கமிஷன் அடித்துக் கொள்வான். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சரிதான்.

செளதியில் விளையும் புல் கூட தன்னால்தான் விளைகிறது என்பான் காலித். ஆனால் அந்த மண் இன்னும்தான் இவனை துபாய்காரன் என்று அலட்சியப்படுத்துகிறது. அது யாரைத்தான் அலட்சியப் படுத்தவில்லை? ஈரானில் கொமெய்னி ஆட்சிக்கு வந்ததும் ஓடி வந்து துபாயில் அரபியாக மாறிய பலுச்சி குடும்பம் என்று தெரிந்து விட்டதோ அதற்கு ? அவன் ‘அமெரிக்கீ’யாகவா மாற முடியும் இதற்காக?

அமெரிக்கர்கள் , செளதியில் மண்ணின் நீர்மட்டம் மிகக் குறைந்து விட்டதாக ‘கண்டு பிடித்து’ , தன் நாட்டிலிருந்து இனி புல்லை நேரடியாகத் தருவிப்பது நல்லது என்று அங்குள்ள மன்னருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்களாம். உலகத்தின் ஒட்டு மொத்த தண்ணீரும் அங்கே பாய்வதால் அவர்களுக்கு புல் முளைப்பதில் பிரச்சனை இல்லைதான்.

அஹமது, தன் தம்பியைப் பற்றியோ அவன் யாரால் மதிப்புக் குறைவாக நடத்தப் படுகிறான் என்பது பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டு இப்போது உட்கார்ந்த மாதிரி தெரியவில்லை. கம்பெனி வேலைதான் இனி பெரிது. அவரும் முதலாளி போல அக்கறை கொண்டவராக இருந்துதான் ஆக வேண்டும்.

குடவுனில் தண்ணீர் வரவில்லை இரண்டு நாளாக. அலுவலக ஆட்கள் மட்டுமா கம்பெனி? மரங்களும் ஆடுகளும் இருக்கின்றன. கூலியாட்கள் குளிக்கவும் சமைக்கவும் கஷ்டப்படுகிறார்கள். எந்தப்பிரச்சனை வந்தாலும் கம்பெனி ஆட்கள் காலித் சாலிக்கைத்தான் நாடுகிறார்கள் என்ற வருத்தம் இன்று அவருக்குத் தீர்ந்து விடும். காலித், தன் சொந்த ரியல் எஸ்டேட் கம்பெனியில் (இங்கிருந்து எடுத்த/அடித்த அரைக்காசில்தான் உருவானதுதான்) பிஸியாக இருப்பது நல்லதுதான். அவன் இல்லாத இந்த கம்பெனி அஹமதுவிற்கு லாபகரமாகத்தான் இருக்கிறது. சென்ற மாதம் கூட அபுதாபி இராணுவத்திலிருந்து ஏலத்தில் எடுத்த பழைய டிரெயிலர்கள் ஒன்றிலிருந்து எஞ்ஜினை எடுத்து தன் ஸ்க்ரேப் கம்பெனி சார்பாக இந்த அரைக் காசு கம்பெனிக்கு விற்றார். புது எஞ்ஜினை விட நான்கு
பங்கு இலாபத்தில் (இதற்கு புது டிரெயிலரே வாங்கி விடலாம்) விற்கும் அவரை வியாபாரம் தெரியாதவர் என்று யார் சொல்ல முடியும் ?

ஒருவகையில் பர்துபாயில் பர்ஜூமான் செண்டருக்குப் பக்கத்தில் இருந்த ஆடம்பர அலுவலகத்திலிருந்து இந்த பெரும் மைதானமுள்ள ராஸ்-அல்-கோர் வந்தது அவருக்கு நல்லதுதான். தன்னை யாரென்று காட்ட நல்ல வாய்ப்பு. தான் யார் என்று தெரிவதே ஒவ்வொரு மனிதனுக்கும் இலட்சியமாக இருக்க வேண்டும்.

காலித் சாலிக்கிற்கும் அப்படித்தானே இருக்கும்?

அரசாங்கம் நடத்தும் பல ‘மஜ்ரா’க்களுக்கு புல் கட்டுகளை சப்ளை செய்வதில் பழைய படி ‘மால்’ஐ அனுப்பாமல் invoice போட முடியாத நெருக்கடியில் வியாபாரத்தில் புல் முளைக்கப் பார்க்க, வாடகைப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று நகரத்திலிருந்து இங்கு ஓடி வர முடிவெடுத்தவன் அவன்தான். பெரும்பாலும் அந்த அலுவலகத்தை இந்தப் பாழும் இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் உபயோகப்படுத்துகிறார்கள்…முடிவு சரிதான். 110,000 திர்ஹம் மிச்சம். சம்பளம் போடலாம் அதில். ஆனால் தங்களின் இந்த பெரிய மைதானத்தில் இருந்த நான்கு குடவுன்களில் ஒன்றை , வெளிக் கம்பெனிக்கு வாடகை விட்டதுதான் தப்பு.

அஹமது, பலமுறை சொல்லிப் பார்த்தார்தான். காலித் சாலிக் , வியாபார நஷ்டத்தைக் காட்டுகிறான். லேசர் பிரிண்டரில் எடுத்த ரிபோர்ட்டாக்கும்!

இன்று என்னாயிற்று ? தன் குடவுனின் தண்ணீர் தேவைக்கு, வடக்குப் பக்க சுவரோரமாக உள்ள கம்பெனிக்கான பைப் லைனிலிருந்து எடுக்காமல் சாலையோரமாக இருந்த அரசாங்க லைனை வெட்டி விட்டார்கள். முட்டாள்கள்…முன்பு கண்டு கொள்ளாமல் இருந்த அரசாங்கம் இன்று வம்புக்கு நிற்கிறது. பிரச்சனை, மாட்சிமை தாங்கிய மன்னர் மக்தூம் பின் ரஷீது அளவுக்குப் போகிறது..

இப்போது அஹமது பிரச்சனையை சரி செய்யப் போகிறார். இரண்டு நாளாக மேனேஜர் இர்ஸாத் அஹமது மஸூது இருபது தடவை சொன்னது இன்று விளங்கி விட்டது. இந்த பாகிஸ்தானி சொல்வது சரிதான். தண்ணீர் வராமல் கூலிகளுக்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் சிரமம்தான்.

தேராவிலிருந்த தங்குமிடதிலிருந்து புறப்பட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே அஹமது சாலிக், பார்வையை அலைய விட்டபடி நிற்பதைப் பார்க்க முடிந்தது. அவர் உயரத்திற்கு அப்படி விழிகளை சுழல விட்டால்தான் கம்பீரம்.

கூலிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வடக்குப் பக்க சுவரிலிருந்து தெற்கு மூலையில் உள்ள தண்ணீர் தொட்டி வரை மண்ணைத் தோண்டி பைப் போடும் வேலை. நாலைந்து மாதமாக உறங்கிக் கிடந்து வெட்டித் தனமாக இருந்த வேலையாட்களுக்கு அவரால்தான் இப்போது வேலை கொடுக்க முடிகிறது. அவர்கள் சோம்பிக் கிடக்கக் கூடாதென்றுதான் மாதத்தில் 30 நாட்களுக்கு மட்டும் தன் scrap கம்பெனிக்கும் புதிய வீடு கட்டுவதற்கும் உபயோகித்துக் கொள்கிறார். உபயோகப்படுத்தும் மெஷின்களுக்குரிய செலவுகளுக்கு இந்த பங்கு கம்பெனி.

எல்லா மெஷின்களும் கெட்டுப் போவதற்கு அவர் என்ன செய்ய முடியும்? தம்பி காலித் மட்டும் இந்தக் கம்பெனி கூலிகளை தன் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு சம்பளத்தை இங்கிருந்தே எடுத்துக் கொள்ளவில்லையா என்ன? அவருக்கு எல்லாம் தெரிந்துதான் இருக்கிறது.

எல்லாம் தெரிந்த அவருக்கு அலுவலக ஊழியர்களையும் மண் தோண்ட வைப்பது ஒன்றும் சிரமமில்லை. சொன்னால் எகிறிக்கொண்டு இந்த பாகிஸ்தானிகளும் ஹிந்திகளும் ஊர் போய் விடுபவர்கள் இல்லை என்பது தெரியும் அவருக்கு. இருந்தாலும் இரக்கம் அதிகம் அஹமதுக்கு.

ரமலானில் இரண்டு மூன்று வருடமாக கம்பெனி ஊழியர்களுக்கு ஜக்காத் அல்லது போனஸ் என்று கொடுப்பதை நிறுத்தி விட்டதற்கு வியாபார நஷ்டம்தான் காரணம்.

இரக்கம்தான் அவரை இன்று ராஸ்-அல்-கோருக்கு இழுத்து வந்திருக்கிறது என்று , கூட வேலை பார்க்கும் காசிம் காக்காதான் போட்டு உடைத்தார். காலையில் எழுந்தால் இன்று எப்படியும் நாலைந்தை போட்டு உடைக்க வேண்டும் என்ற நிய்யத்துடன் எழும் அவருக்கு அஹமது சாலிக்கின் முகத்தைப் பார்த்ததுமே விளங்கி விடுகிறது. common sense..

‘அஸ்ஸலாமு அலைக்கும் அரபாப்’ என்று அஹமது சாலிக்கிடம் கூறிக் கொண்டே ,அஹமதின் பரபரப்பை எண்ணி வெளிவந்த நமுட்டுச் சிரிப்புடன் அலுவலகத்தில் நுழையப் போகும் மேனேஜர் இர்ஸாத் சாஹிபை தடுத்தி நிறுத்தி , செய்தி தெரியுமா என்பது போல காசிம் காக்கா சொன்னார் தன் யூகத்தை.

‘ஜமானா கராப் ஹோகயா !’ என்றார் இர்ஸாத் சாஹிப்.

இர்ஸாத் சாஹிபிற்கு இப்படித்தான் காலம் அடிக்கடி கெடுகிறது. ஷார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டியில் எப்போதாவது அசந்து மறந்து போய் இந்தியா வெற்றி பெற்றால் அவருக்கு கண்டிப்பாக கெடும்.

முந்தா நாள் , பெண்களால் கெட்டுப் போனது. அவருடைய மூத்த பையன் அலி, ரஷீது மருத்துவமனை அருகே படிக்கும் ஒரு அமெரிக்கன் கல்லூரியால் அது கெட்டுப் போனது. இந்தப் பர்தா அணியாத பெண்கள்…!.

அன்று ஏதோ விழாவாம். அவனைக் கூட்டி வர இவரின் மனைவி போயிருக்கிறது விழா முடிந்த சமயத்தில். அலி, கையில் இரண்டு பூக்கள். இந்தக் காலத்து பையன்களின் கிறுக்குத்தனங்களைத்தான் என்ன சொல்வது ? இதுவும் ஒரு ·பேஷனோ ? பையன் ஏதோ ஒரு கனவுலகத்திலிருந்து வந்தது போலல்லவா தனக்குள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்!

‘என்ன இது பூக்கள் அலி ?’

அலி மழுப்பியிருக்கிறான். வற்புறுத்தவே உண்மையைச் சொன்னானாம். அது கல்லூரி நண்பிகள் கொடுத்தது.

அதென்ன சிகப்பு ஒன்றும் மஞ்சள் ஒன்றும் ?

‘Red for Love. Yellow for Friendship’

காலம் கெட்டுத்தான் விட்டது. ‘நானும் அந்தக் காலத்தில் கராச்சியில் co-ed கல்லூரியில்தான் படித்தேன். அப்போதும் நிறைய பூக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. ஆனால் பெண்கள் பயப்பட்ட காலம் அது. ஹூம்..’ என்றார் இர்ஸாத் சாஹிப்.

பவமாகத்தான் இருந்தது அவர் பெருமூச்சைப் பார்த்தால்.

‘இதில் வேறு பிரச்சனையும் இருக்கிறது ஆபிதீன்..’ என்றார் அத்தோடு விடாமல்.

common senseக்கே விளங்காத போது எனக்கு எங்கே ? அவரை நோக்கினோம் பதிலுக்கு

‘இன்றைய மஞ்சள் நாளைக்கு சிகப்பாக மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?’ என்றார்.

காலம் கெட்டுத்தான் விட்டது.

நேற்றும் அவருக்குக் காலம் கெட்டுப் போனது. தீபாவளி சமயத்தில் துபாயின் கட்டிடங்களில் பூக்கும் வண்ண விளக்குகள் தந்த எரிச்சல்.. இது இஸ்லாமிய நாடுதானா? காலத்தைத்தான் கேட்க வேண்டும்.

ஷிந்தகாவில் நின்று கொண்டு ஆப்ராவின் அக்கறையில் தெரியும் , தேராவிலுள்ள விதவிதமான கட்டிடங்களைப் பார்த்தால் எவ்வளவு அழகாயிருக்கிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தின் மேலேயுள்ள முக்கோணம், எதிஸாலத் தலையிலுள்ள பெரிய உருண்டை, துபாய் டவர்..- ஈரானி பஜாரில் முடியும் கார் பார்க்கிங் வரை எவ்வளவு வடிவங்கள்! அப்படியில்லாமல் ஒரே ஒரு நீளமான சுவரை மட்டும் எழுப்பச் சொல்கிறாரா இர்ஸாத் சாஹிப்?

அவரைக் குறை சொல்ல முடியாது. அந்த வடிவங்களின் அழகைப் பார்க்க தினமும் எதிர்புறம் வர வேண்டும். வந்தாலும் வானம் பார்க்காமல் நேரே பார்க்க வேண்டும். தினமும் அந்தப் பக்கம் அ·ல்பஹிதி கோட்டை வரை இரவில், உடம்பைக் குறைக்க நடப்பவர் எப்படி பார்வையை ஒட்டுவார்? மிதந்து போகும் படகுகளைக் கூட பார்க்க மாட்டார் போலும்..

இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஒய்வில்லாமல் போய்வரும் ஆப்ரா படகுகளுக்கு இந்த வித்யாஸங்கள் தெரியாது. மஸ்ஜிதை இடிப்பவரும் உட்காரலாம். இடிப்பவரை இடிப்பவரும் உட்காரலாம் அருகருகே. ஆப்ரா தன்ணீரின் ஓட்டமும் படகுகளின் அசைவும் மன்னருக்குக் கட்டுப் பட்டது. மன்னர், காற்றுக்குக் கட்டுப் பட்டவர். வியாபாரக் காற்று.. எதற்கும் அது கட்டுப் படாதது. எண்ணெய் வளம் அதிகமில்லாத இந்த மண்ணுக்கு அது காட்டும் கருணை மகத்தானது.

நீங்கள் காற்றை ஏசாதீர்கள். காற்றின் மூலம் வெறுத்தக்க ஒன்றைக் கண்டால் பின் வரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள் என நபி(சல்_ம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபை இப்னு கஃபு (ரலி). நூல் : திர்மிதி.

அல்லாஹூம்ம இன்னா நஸ் அலுக்க மின் கைரி

ஹாதி ஹிர்ரீஹி வ கைரி மாஃபீஹா வகைரிமா அமர்த்த பீஹி

வ நஊதுபிக்க மின் ஷர்ரி ஹாதி ஹிர்ரீஹி

வ ஷர்ரில் மாஃபீஹா வஷர்ரிமா அமர்த்த பீஹி..

காலம் கெட்டு விட்டது..’தீபாவளிக்கு லீவு விடாதுதான் பாக்கி!’ என்றார் காலத்தைப் பார்த்து. காசிம் காக்கா, ‘விரைவில் அதையும் அறிவிப்பார் இளவரசர் – அதுவும் பெருநாளை வேலை செய்யும் தினமாக அறிவித்து’ என்று ஊதி விட்டார் அவருடைய ஹிந்தியில். அது நாகூர் வரை சுடும்தான். வெட்டாறையும் எரித்துத் தாண்டலாம்.

காசிம் காக்கா சரியாகத்தான் கணிப்பார். இன்று அஹமது வந்தது ஆடுகளுக்காக !

இரங்க வேண்டிய பிராணிகள்தான்.

சோழியன் ‘எகால்’ சும்மாவா ஆடும் ?

‘சப் பக்ரி மர்ஜாயேகா அரபாப்..’ என்று அலறினானாம் நேற்று ஆஃபீஸ் பாய்-Cum-ஆடு மேய்ப்பவன்.

‘லாஜிம் கல் சுபாஹ் தர்த்தீப் கரேகா ‘ என்று உறுதி கூறிவிட்டுப் போன அஹமது, அதன் படியே வந்து விட்டது உறுதியைக் காப்பாற்ற மட்டுமல்ல; ஆடுகளையும் காப்பாற்றத்தான். அவைகளை சாக விட்டுப் பார்க்கவா அல்லாஹ் அவரை படைத்திருக்கிறான் ?

அஹ்மது சாலிக்கிற்கு அவைகள் செல்லப் பிள்ளைகள்.

அஹமதுக்கு, வீட்டில் பிறந்த பிள்ளைகள் பதினைந்து. இரண்டு மெளத்தாகி விட்டதாம். அவர் வியாபாரத்திற்காக மட்டும் வியர்வை சிந்துபவர் என்று யார் சொன்னது ? உழைப்பிற்கு முடிவே இல்லை.

ஒரு சூடானி வாடிக்கையாளன்தான் கேட்டன் ஒருமுறை:

‘குல்லு கம்ஸ்த்தாஸ் மின் வஹத் மகீனா?’ – ஒரே மெஷினிலிருந்தா என்று கேள்வி!

அஹமது தலையாட்டிக் கொண்டே ஆமோதித்தார்.

‘வல்லாஹி மஜ்பூத் ! பாத் ஃபீ ?’. மெஷின் பிரமாதம். அப்புறம் ஏதாவது ?

‘லா, பன்னத் !’ – அஹமது. எங்கே மூடிவிட்டார்? ஆடுகளை சேர்க்க ஆரம்பித்து விட்டார். ஒவ்வொன்றுக்கும் ஒரு bmwவும் , மொபைலும், பத்தாயிரம் திர்ஹம் கைச்செலவும் கொடுத்தால் பெற்ற பிள்ளகளும் இவைகளும் ஒன்றுதான்..

அன்பைக் கொடுப்பதில் எந்த உயிரினங்களுக்கிடையேயும் பேதம் பார்ப்பதில்லை இந்த அஹமது.

ஆடுகளின் புத்திக் கூர்மையைத்தான் என்னென்பது ! குடவுனுக்கு வரும் பல்வேறு வகை வாகனங்களின் மேல் ஏறி நின்று கூத்தடித்து கீறல்களை ஏற்படுத்தும் வண்ணப் பூச்சுகளின் மேல். ஆனால் அஹமது சாலிக்கின் எந்த கார் வந்தாலும் சரி அதைச் சுற்றித்தான் நிற்கும் காவல் காப்பது போல. அப்போது அதன் அசைவுகள் ‘நெளபான்’ நடனம் மாதிரிதான் இருக்கும் அஹமதுவுக்கு.

அவற்றின் ‘ஹூம்பேஏஏ…’க்கள் உம்முகுல்ஸத்தின் பிர்க்காக்கள்.

அவற்றின் ‘மே’ ஐ வைத்து அது எந்த வருடத்துடையது என்று அவரால் சொல்லி விட முடியும்.

ஆடுகள் வருவதற்கு முன்பு மான்கள் இருந்தன. ஒரு மான்தான் அஹமது கொண்டு வந்து விட்டார். ஈரானிலிருந்து அவரைப் பார்த்து விசா மற்றும் ஜக்காத் பெற செருப்பில்லாமல் வரும் ஏழை சொந்தக்காரர்கள் அன்பளிப்பாகக் கொடுத்தது அது. பார்ப்பதற்கு கழுதை போன்றே இருக்கும். ஆனால் அது மான்தான். பெண் மான். இணைக்காக கத்தும் அதன் தீனக் கூரல் கேட்டு (மேனேஜர் ஒரு சமயம் அழுதே விட்டார்..) ஒரு சர்தார்ஜியிடம் அதற்கு ஒரு ஜோடி வாங்கி விடச் சொன்னார். அவன் கொண்டு வந்து விட்டான் அடுத்த நாளே ஹம்ரியாவிலிருந்து. ஆனால் கத்தல் அதிகமாகி விட்டது. கொண்டு வந்ததும் பெண்மான் !

தலையில் அடித்துக் கொண்டு அஹமது சாலிக் அவன் சம்பளத்தைப் பிடித்தார். இது சும்மா எச்சரிக்கைக்கு. அவன் எந்த காலத்திலாவது ஊர் போகும்போது JV மூலமாக திருப்பப் பட்டு விடும்தான். தவறை உணர்த்தத் தயங்காதவர் அவர். தன் தவறையும் உணர்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மாலையே அவரே போய் ஒரு ஆண் மானைக் கொண்டு வந்துவிட்டார். அழகான ஆண் மான். அதன் கொம்புகளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது கொம்பால் மட்டும்தான் குத்தும் போலும். பெண் மான்கள் அதைச் சுற்றிச் சுற்றி வந்தன.

இந்தக் கிழவிகளைச் சீண்ட அந்த குட்டி ஆணுக்கு பைத்தியமா என்ன ?

என்ன நினைத்தாரோ அஹ்மது.. பிறகுதான் ஆடுகளைக் கொண்டு வந்து விட்டார்.

பத்து ஆடுதான் வந்தது. இப்போது எழுபதுக்கு மேல் இருக்கும். கடா ஆடுகளோடு அந்தப் பெண்மான்களை பழக விட்டும் பார்த்தார். நைஃப் பஜாரில் பெரும் குண்டிகளோடு மேயும் உகாண்டாகாரிகளுக்கு மத்தியில் ருஷ்ஷி(ரஷ்யப் பெண்கள்) எப்படியோ அப்படித்தான் இது என்று விளக்கமும் கொடுத்தார்.

ஆடுகள், அப்போதும் புத்திசாலிகளாத்தான் இருந்தன. ஆண் மானை மட்டும் ஏற்றுக் கொண்டன. அது கூட சகோதர பாசத்தின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஆண் மானுக்கு உடம்பின் உந்தல் இருக்குமே? அது என்ன செய்யும் என்று தெரியவில்லை. துணை இல்லாமல் அலைகிற லட்சக்கணக்கான வெளிநாட்டு மனிதர்களைப் பார்த்துப் புரிந்த மானாக இருந்தால் சகித்துக் கொள்ளலாம்.

ஒன்று ஒத்துக் கொள்ள வேண்டும். அஹ்மது அரபாப் கொண்டு வந்து விட்ட ஆடுகளை விட அதற்குப் பிறந்த குட்டிகள் அழகும் வலிமையும் கொண்டவை. குட்டிகள் பிறந்ததையும் கணக்கெடுத்துப் பார்த்தால் இறந்தவைகள் போக எப்படியும் 150 ஆடுகள் இருக்க வேண்டும். ஆனால் இல்லை.

காலித் சாலிக்தான் குறைத்தது எண்ணிக்கையை. அஹமது, தன் வீட்டுக் கறிக்கு அதைத் தொடவே மாட்டார். பிள்ளைகளை யாராவது அறுத்துச் சாப்பிடுவார்களா?

இன்னொரு முதலாளியே திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு போகும்போது ஆடு மேய்ப்பவன் என்ன பதிலைக் கூற முடியும்? கூறாமலும் இருக முடியாது. இது அவன் வேலை சம்பந்தப்பட்டது. காலித் சாலிக் தனியாக ஒரு ‘அஜ்பா'(பண்ணை) தனக்கென்று இந்த ஆடுகளை வைத்து வேறொரு இடத்தில் அமைத்து விட்டான் என்றும் சொல்ல முடியுமா உண்மையை ?

பீர்பக்ஸ் என்ன சொல்லி சமாளிக்கிறானோ , அஹமதுக்கு அவன் மேல் பிரியம் அதிகமாகி விட்டது. ஆஃபீஸ் பாய் வேலையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஆடுகளோடேயே பழியாக அல்லவா கிடக்கிறான்! அவன் ஆடுகளுக்கு பிரசவம் பார்க்கிற அழகு என்ன, அதன் குட்டிகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கும் அம்சம் என்ன!

அலுவலகத்திற்கு வரும் முன்பே காரில் மைதானத்தை வலம் வந்து பல இடங்களில் நிறுத்தி , அந்தந்த கோணத்திலிருந்து ஆடுகளை தூரமாகவும் அருகேயும் போய்ப் பார்த்து விட்டு, பீர்பக்ஸிடம் விசாரித்துவிட்டு , பிறகுதான் தேவைப்பட்டால் மேனேஜரிடம் வருகிறார் அஹ்மது.

கம்பெனி விஷயமாக அஹ்மது பேச ஒன்றும் இல்லை. இர்ஸாத் சாஹிப் ஆடுகளைப் பற்றித்தான் அவரிடம் பேசுகிறார். பீர்பக்ஸ், ஆடுகளுக்கு கொடுக்கும் ‘மக்லூத்’கள் ஸ்டாக் இருக்கிறாதா இல்லையா என்பது பற்றி..பேரிச்சை, கோதுமை தவுடு கலந்து தயாரிக்கப்படும் சத்துள்ள சாமான் அது. இது தவிர பார்லி, புல்…

ஸ்டோர் கீப்பர் காசிம் காக்காவிடம் அர்பாப் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார் தரமான உயர்தர புற்களாக இருக்க வேண்டும் என்று.

இந்த பட்டான் பீர்பக்ஸூக்கு பெரிய முதலாளி ரொம்பவும்தான் ஆடுகிறார். அது ஸியாக் புல்லாக இருந்தால் என்ன அல்லது அல்-ஸப்பார் புல்லாக இருந்தால் என்னவாம்?

தரம் தெரிந்தவன் பீர்பக்ஸ். அவனுக்கு சம்பளம் உயர்ந்து விட்டது 200 திர்ஹம். அவன் தம்பிக்கு ஒரு விசாவும் ஏற்பாடு பண்ணி விட்டான்.

எல்லோருக்கும் வந்த பொறாமை எனக்கும் வந்தது. நான் இதை முன்னேறுவதற்குள்ள Positive Tension என்று பெயர் கொடுத்துக் கொண்டேன். எனக்கு மனோதத்துவமும் ஸூஃபிஸமும் தெரியும்.

ஆடுகளைப் பற்றியல்லவா தெரிந்திருக்க வேண்டும்?

பணிரெண்டு வருட சாமத்தியத்தில் அடைந்த அறிவில் கொஞ்சம் ஆடுகளுக்கும் இடம் கொடுத்திருக்கலாம். இந்தக் கம்பெனியில் சேர்ந்து சேர்ந்து ஐந்து வருடம் முடியப் போகிறது. சம்பளம் ஏறியபாடில்லை. நிகரலாபம் மட்டுமே ஏழெட்டு மில்லியன்கள் கண்டபோதே அதுபற்றிப் பேசியபோது ‘சோச் கரேகா!’ என்று சொன்னார் அர்பாப். ஆனால் என் சம்பளம் சம்பந்தமாகப் பேசப் போகும் மேனேஜர், அவர் சம்பளத்தில் ஏற்றத்தோடு திரும்பி வந்தது எதேச்சையாக நிகழ்ந்ததென்றுதான் சொல்ல வேண்டும். கம்பெனி, சரிவை நோக்கிப் போகிற இந்த இரண்டு வருட காலமாக அவருக்கும் ‘சோச்சேகா’ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தக் காலத்தில் சம்பளம் ஒழுங்காகக் கொடுக்கிற கம்பெனியில் இருப்பது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம் துபாய் வந்து பிறகுதான் கிடைத்தது. முதலில் செளதி அல்கோபாரில் இருந்த நான்கு வருடங்களில் அப்படி ஒரு விஷயம் இருப்பது எப்போதாவதுதான் தெரிய வரும். அதற்கும் மேலாக எப்போதும் முதுகுக்குப் பின், புருவம் நெறித்த இரண்டு பெரும் சிகப்புகக் கண்கள் எங்கு போனாலும் தொடர்ந்து கொண்டே வரும் அங்கு. செளதியில் சம்பாதித்தது மூலம் மட்டும்தான். தப்பித்து இங்கு வந்த பிறகுதான் மூச்சு விட முடிந்தது. யார் மேல் வேண்டுமானாலும் விடலாம்.

இந்த அரபிகளே வேண்டாம் என்று முதலில் ஒரு ஊர்க்கார கம்பெனியில்தான் வேலை பர்த்தேன். அதை கம்பெனி என்று சொல்லக் கூடாது. மிளகாய் கொத்தமல்லிக்கடை என்றுதான் ஊர்க்காரர்கள் சொல்வார்கள். வேலை, 8 மணி நேரம்தான் – அதாவது pant போட்டுக் கொண்டு. அதற்குப் பிறகு கைலி கட்டிக் கொண்டு (‘ரிலாக்ஸா , நம்ம வூடு மாதிரி வேலை பாருங்க தம்பி..’) 8 மணி நேரம்
வேலை பார்க்க வேண்டும் – இதற்கும் அடுத்த கட்டம் உண்டே என்ற பயத்தில்…

ஒருவேளை அந்த அடுத்த கட்டத்தில் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ ஒரு கோபக்கார ஹெவி லைசன்ஸ் டிரைவர் , ‘பொழைக்க வந்தவன்ட்டெ பொழைக்க வந்தா பொழைக்க முடியாது’ என்று பொன்மொழி உதிர்த்து வெளியே சென்றார். அப்போதுதான் நாமும் பிழைக்க வந்திருக்கிறோம் என்று பலருக்கும் உறைத்தது.

இந்தப் பொன்மொழி, ரொம்ப நாள் மதராஸி பஜார் என்று அழைக்கப் படும் சிக்கத்-அல்-ஹை ரோடில், வெள்ளிக் கிழமை கூடும் கூட்டத்தில் (இப்போது இந்த ரோட்டுக்குப் பல பெயர்கள் : d-zone , manaaradi..) உலா வந்தது.

‘லுங்கி நியூஸ்’ உருவாகிற இடத்தில் , ‘காச்சு’,’விச்சா’ போன்ற திக்ருகள் தவிர அந்தப் பொன்மொழியும் இடம் பெற்றது அதிசயம்தான். ஆனால் பொன்மொழிகள் சொல்லப் படுவதற்கா? நான் செயல் வீரனாக்கும்…அஹ்மது சாலிக்கின் கம்பெனியில் சேர்ந்தேன்.

இந்த அர்பாப்களும் பிழைக்க வந்த கூட்டம்தான். ஈரானிலிருந்து ஓடிவந்த பலுச்சி குடும்பம். இரண்டாம் நம்பர் அரபி அந்தஸ்ததுதான் இப்போது. ‘ஏன் காக்கா, இவங்க உம்மா இந்த ஊர்க்காரிதானே? ஏன் இவங்களுக்கு ரெண்டாம் நம்பர் குத்துறான்?’ என்றதற்கு முத்துவாப்பா, ‘நுத்ஃபா!’ என்றார். விந்து…அது ஈரானிலிருந்து வந்து பாய்ந்தது. ‘வாப்பா போலவே உம்மாவும் ஈரான்காரிதான். ஆனா முதல்லேயே வந்து அரபுக்காரியாயிட்டா !’ என்றார் விளக்கமாக. நீண்டநாளாக இங்கு இருப்பதற்காக கொடுத்த பரிசு விட்டுவைக்கப்படுமா அல்லது அபுமூஸா தீவுப் பிரச்சனைகள் வெடித்தால் பறிக்கப்படுமா என்று தெரியவில்லை.

யாராக முதலில் இருந்தோம் என்பதா முக்கியம்? ஈரானிலிருந்து வந்தால் என்ன, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அடிமைகளாகவிருந்தால் என்ன? இப்போது அரபிகள். துபாய் அரபிகள் தனிதான். யாரையும் உறிஞ்சி எடுப்பதில்லை. அவர்களின் பிள்ளைகளும் கூட. எந்த இந்தியனின் மேலேயும் மண் வாரி வீசுவதில்லை. பெப்ஸி டின்ஐ திறந்து அடிப்பதில்லை. சொல்லப்போனால் இந்தியர்கள் அப்படிச் செய்தால்தான் உண்டு.

எந்த அரபு நாட்டில் இவ்வளவு மரியாதை இந்தியர்களுக்கு கிடைக்கும் ?

‘ஹதா பலத் அல் ஹிந்த்’ என்று ஒரு செளதி , குடித்துவிட்டு உண்மையை வாந்தி எடுத்தான். இந்த ‘ராம்’களும் ‘ ‘லால்’களும் பெருகினால் அப்படியும் ஆகிவிடுமோ என்று பலருக்கும் பயம்தான்.

எனக்குப் பயமில்லை. நான் பிழைக்க வந்தவன். யாருக்கும் என் உழைப்பைக் கொடுக்க ரெடி. அந்த உழைப்புக்கேற்ற கண்ணியமான சம்பளம் கொடுத்தால். கண்ணியம் என்றால் என்னதான் என்று எனக்கு முழுமையாகப் புரியுமா என்பது தேவையில்லை. எனக்கு கண்ணியம் வேண்டும். அதில் திறமையைப் பார்த்து சம்பளம் கூட்டுவ்தும் ஒன்று.

அங்குதான் இடித்தது. இப்போது வந்த ஆடு மேய்ப்பவனுக்கு கூடி விட்டது.

இருபது வருடமாக வேலை பார்த்த யூனுஸ் காக்கா, தன் தகுதியாக வருடங்களைத்தான் சொன்னார் முன்பு.

‘நேருவோட பாட்டன் காலத்துலேர்ந்து இந்திரா காந்தி வூட்டுலே படிக்காத ஒருத்தன் வேலைக்காரனா இக்கிறாண்டு வச்சிக்குவோம். ரொம்ப விசுவாசமா இருந்தாண்டு அவனுக்கு பிரெஸிடெண்ட் பதவியா கொடுக்க முடியும்? ‘ என்று வெடைத்தார் காசிம் காக்கா. இந்தியா முன்னேறுவதில் விருப்பமில்லாதவர் அவர்.

திறமையைத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் சம்பள விஷயமாகப் பேசும்போது. முத்துவாப்பா அப்படித்தான் சொன்னார் காலித் சாலிக்கிடம். அவன் நக்கலாகச் சிரித்தான். ‘புர்ர்ர்..’ என்ற பெருஞ்சப்தம் அவன் பின்பக்கத்திலிருந்து வந்தது. அதுதான் முக்கியமாம் !

காலித் சாலிக்கின் நண்பர்களில் ஒருவனான ஒரு ஷேக் கண் சிமிட்ட வேண்டியதுதான் பாக்கி. அந்த மிஸிரி தன் ‘தோப்’ஐ பின் பக்கம் வழித்து , ராணுவக் கட்டளைக்குப் பணிந்து தன் பீரங்கியை வெடிப்பானாம் குறி பார்த்து. குசுவிற்குத் தகுந்த கூலி..

இப்படி எத்தனை முறை ஒரு நாளைக்குக் கண் சிமிட்டுவான் தன் நண்பன் என்று கனக்குபோட ,அக்கவுண்ட் குமாஸ்தாவான அவருக்குச் சொல்லவில்லை காலித். புரிந்தது.

முதலாளிகளைச் சந்தோஷப்படுத்து. திறமையாவது மண்ணாவது ..

முத்துவாப்பாவாலோ என்னாலோ அவனுடைய ஜுமைரா ·ப்ளாட்டுக்கு குட்டிகள் சப்ளை செய்ய முடியாது. இதற்காக ஊக்கத் தொகையும் (sales promotion!) பெற முடியாது.

பேண்ட் போட்டுக் கொண்டு வழிப்பது சிரமமமும் கூட.

நான் என்ன செய்யலாம்? கம்ப்யூட்டரில் புளூ ·பிலிம் CDக்கள் போட்டுக் காண்பித்தால் சந்தோஷப்படுவான் போலும். Programmer ஆ? யாருக்கு வேண்டும்? கம்பெனியில் ஓடும் ஏகப்பட்ட தவறுகள் நிரம்பிய ஒரு அக்கவுண்டிங் ஸாஃட்வேரை முழுக்க சரி செய்திருக்கிறேன். இதைத் தவிர செளதியிலிருந்து வரும் புல் கட்டுகள், டிரைவர்களின் freight மற்றும் farmsகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு தனி ப்ரோக்ராம் செய்து கொடுத்திருக்கிறேன் VBயில்.அதை வைத்துத்தான் JV தயாரிக்கப்பட்டு பின்பு கணக்கில் ஏற்றப்படுகிறது. அரசாங்கத்திற்கு அனுப்பும் பிராணிகளுக்கான உணவுகளுக்கு தனியாக ஒன்று. இதைத் தவிர ஆடிட்டர்கள் கேட்கும் குருட்டுத்தனமான கேள்விகளுக்கு நொடியில் வாயடைக்க சிறிய சிறிய ப்ரோக்ராம்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு ஸாஃப்ட்வேர் கன்ஸல்டன்ஸியை நாடினால் கிழிந்து விடும்.

பலனடைவார் இர்ஸாத் சாஹிப்தான். அவருக்கு கம்ப்யூட்டர்கள் பற்றித் தெரியும்.

அரபாப்களுக்கு? அது அலுவலகத்தை அலங்கரிக்கும் பொருட்களில் ஒன்று. அப்படியும் ஒரேடியாகச் சொல்ல முடியாது. ஒருமுறை அஹமது சாலிக் என் அருகே வந்து பக்கத்திலிருந்த chart of acconts ஐப் பார்த்து விட்டு அந்த ரிப்போர்ட் ஏன் பேப்பரின் பச்சைக் கோட்டில் விழவில்லை என்று குறை கண்டார்.

காலித் சாலிக் இதில் படித்தவன். ஈரமான புற்கள் வந்திருப்பதை செளதி பண்ணைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இர்ஸாத் சாஹிபை கடிதம் எழுதச் சொல்லும்போது அவர் wet grass என்று எழுதினால் ‘No..Inside Water’ என்று போடு என்று அதற்கு அடிக்கோடும் இடச் சொன்னான். புல்லின் நெருப்பைப் புரிந்தவன் அவன். Wet Computer…

இந்த கம்பெனிதான் முடிவா என்ன? எல்லோரும் கேள்வி கேட்பதுபோல நானும் கேட்டு விட்டு அவர்களைப் போலவே வேப்பமரத்தில் மறுபடியும் ஏறி உட்கார வேண்டியிருக்கிறது, விசா பிரச்சனைகளையும் ஊரையும் நினைத்து.

‘ஆபிதீனா..?அவரு தன் முதுவுலே உள்ள எறும்பையே தட்டமாட்டாரே..!’ என்கிறார்கள் வெளியில் – தன் முதுகிலுள்ள பூரான்களைப் பார்க்காமல்.

தட்ட முடியாதா என்னால்? தட்டித் தட்டித்தான் முன்னேறி இந்த தூரத்திற்கு வந்திருக்கிறேன். கடைக் கண்ணாடி துடைத்து நின்றதிலிருந்து, கக்கூஸ் கழுவியதிலிருந்து கம்ப்யூட்டர் ப்ரோக்ராமராகியிருக்கிறேன். செளதியிலிருந்ததை விட மூன்று மடங்கு சம்பளம் இப்போது. அதில் ஒரு பங்கு சாப்பாட்டுக்கும் தங்குமிடத்தின் பிரச்சனைகளை சரி பண்ணவும் போய் விடுகிறதென்றாலும் முன்னேற்றம்தான். இடையில் கல்யாணம் செய்து குழந்தைகளைப் பெற்றதை முன்னேற்றத்தில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை. மீதமுள்ள இரண்டு பங்கில் ஒரு பாதி சரி சமமாக உம்மாவுக்கும் மனைவிக்கும் ‘தொப்பி’ போடாத காக்காவிடம் உண்டியலில் அனுப்பி விட்டு , கடைசிப் பங்கை அவர்கள் போடும் சண்டைகளைத் (சொறி பிடித்த நாயும் வெறி பிடித்த பண்டியும் போடும் சண்டை தேவலை!) தீர்க்க செலவிட்டு..

எனக்கென்று என்ன சேமித்திருக்கிறேன்?

‘மாசம் ஒரு ஆயிரம் ரூவாயாவது சேர்க்கப் பாரு..இல்லேண்டா ஊர் வந்து முழங்கையை சூப்புற மாதிரு ஆயிடும்..’ என்பது அஜீஸ் மாமாவின் அறிவுரை. அவர் செளதியிலிருந்தபோது யாரையோ சூப்பி ஊர் கோடீஸ்வரர்களில் ஒருவராகி விட்டார். பொழுதுபோக்குக்கு இப்போது அறிவுரைகளைச் சூப்பிக் கொண்டிருக்கிறார். குடும்பமே அவரை சூப்ப ‘க்யூ’வில் நிற்பதில் வரும் வார்த்தைகள்..

அறிவுரைகளை யார் சொன்னால்தான் என்ன? உண்மைகள் சூப்பும்போது எச்சிலாக வடிகின்றன..

அறிவுரைகளை ஹஜ்ரத்தான் சொல்ல வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் சிஷ்யப் பிள்ளைகள் அனைவரும் star ஆகி மேலே வர வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் திட்டுவார்கள் : ‘ஆசைப் படாம ஒரு மசுரு கூட கிடைக்காது…’

‘வெளங்களையே..’- ஒரு சீடர் தலையைச் சொறிந்தார். எல்லா இஸங்கலையும் கற்றுத் தேர்ந்து அது ஒன்றுக்கும் உதவாமல் போனதில் அடிபட்டுத் திமிர் அடங்கி ஹஜ்ரத்திற்கு முன் அமர்ந்திருந்தார். பதஞ்சலி முனிவரையும் ரஜ்னீஷையும் கிழிக்கும் நாகூர் சாபுவுக்கு முன் அவர் நாறாகிக் கிடந்தார். மகா கனம் பொருந்திய, மேன்மை மிகு ஆபிதீன் பண்டிதான் அது.

‘நீங்க வளரலே..லட்சியம் இல்லாததாலே. ஏன்? அதுக்கு emotion இல்லே. ஏன்? அதுக்கு கற்பனை இல்லே. இது எல்லாமே இல்லாம போனதுக்குக் காரணம் ஆசை இல்லே. ஆசையினால்தான் எல்லாம் வரும். இதுக்குப் போயி விளக்கம் கேட்பீங்களோ? என் சிஷ்யப் பிள்ளையா இந்தாக்கா ஓங்கி ஒரு அறை விடுவேன் – அதுவும் பீச்சங் கையாலே..’

‘ஆமா ஹஜ்ரத்..தெளிவா இருக்கு. ஏன் இதுக்குப் போயி விளக்கம் கேட்கிறேன்?’

‘ஆமா..அதையும் என்னெட்டேயே கேளுங்க!’ – சலித்துக் கொண்டார்கள்.

இப்போது தெளிவாக விளங்கிற்று. ஆடு மேய்ப்பவனின் ஆசை என்னுடையதை விட வலிமையானதாக இருக்கிறது. ஆசை ஸ்ட்ராங்காக இருந்தா தனக்குத்தானாகவே காரியம் நடக்கும்; இதை உருப் போடுங்க’ என்று ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள்தான். பீர்பக்ஸ் இன்றைய புத்தன். ஆனால் ஆசையை அவன் ஏற்படுத்திக் கொண்டானா அவன் குடும்பமா ?

ஏன் ஆடுகள் கூட அவன் முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டிருக்கலாம். அல்லது அவைகளின் புழுக்கைகள்..

ஆசை என்பதுதான் துஆ..

ஹஜ்ரத்தின் அறிமுகம் ஏற்பட்டு அவர்களின் தெளிவில் மயங்கிய காலத்தில் ஒரு கனவு வந்து குழப்பிற்று. பார்க்கவே விகாரமான கொம்புள்ள ஒற்றைக்கண் பூதம்….எவையெல்லாம் சாத்தியமில்லை என்று நினைக்கிறாமோ அவைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு நொடியில் செய்து முடிக்கும் பூதம். அதன் வலிமையாலோ என்னவோ கவரப்பட்டு அதன் அருகே போய் நிற்கிறேன். ஒரு பச்சிளம் சிசுவை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்துத் தின்று கொண்டிருக்கிறது. உடல் நடுங்கினாலும் அதனிடம் ‘நான் ஏன் முன்னேறவில்லை?’ என்று கேட்கிறேன். ‘ஆசை இல்லை..’என்று பதில் சொன்னது. ஹஜ்ரத்திடம் இந்தக் கனவைச் சொன்னேன்.

‘அந்த பூதம் நாந்தாப்பா!’ என்றார்கள். ‘அந்த ஒரு வார்த்தை போதாதா அது நான்தான் என்று தெரிய?’ என்றார்கள். ‘ அப்படியென்றால் குழந்தையைத் தின்பது ?’. ‘எனக்கு ஹராம், ஹலால் கிடையாது. இது மருந்து கொடுக்கிற இடம். விருந்து சாப்பிடுகிற இடம் கிடையாது’ என்றார்கள்.

கனவை, அங்கு கூடியிருந்த சீடர்களிடமும் சொல்லச் சொன்னார்கள். ‘ஒரு பூதம் வந்திச்சி..’ என்று நான் ஆரம்பிக்கும்போதே ‘எப்ப அந்த பூதம் நான்தாண்டு சொல்லிட்டேனோ மரியாதையாத்தான் சொல்லனும்..’ஒரு பூதம் வந்தாஹா..இன்னது சொன்னாஹா..’ண்டு என்று கிண்டல் வேறு!

என் முன்னேற்றத்திற்கு யார் உண்மையில் ஆசைப்பட்டிருகிறார்கள் – ஹஜ்ரத்தைத் தவிர?

‘எப்படி உங்களாலே புள்ளையிலுவலெ வுட்டுப்புட்டு அங்கே இருக்க முடியுது!’

‘….. …..’

‘நீங்க கோடி சம்பாதிச்சாலும் சரி. உங்க புள்ளைங்க வுடுற ஒரு முச்சத்துக்கு இணையாவுமா அது ?’

‘வேற வழியில்லையே ஹஜ்ரத்..’

‘ஏன் இல்லை? இங்கேயே எவ்வளவோ அழகான பிஸினஸ் இக்கிது. காசு சேர்க்கனுமா? ஒரு அஞ்சு வருஷம் கணக்கு வச்சிக்குங்க. திரும்பி வந்துடுங்க ஸ்ட்ராங்ஆ..’

ஐந்து வருடம் கழித்த பிறகு அன்றுதான் ஹஜ்ரத் புதிதாக அந்த அறிவுரையைச் சொன்னதாக எடுத்துக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பக்கத்து வீடு போக டாக்ஸி பிடிக்கும் குடும்பப் பெண்களின் ஆசையை நிறைவேற்றலாம். தவிர குலப் பெருமை என்ற ஒன்று இருக்கிறது. வீட்டு ஆண்கள் 150 வருஷத்துக்கு மேலாக சபராளிகளாக இருக்கிறார்கள். மகன் அனீஸ் எந்த ஊரில் இருப்பான்? அவனைப் படிக்க வைக்கலாமா அல்லது ஆடு மேய்க்க கற்றுக் கொள்ளச் சொல்லலாமா? ‘மேய்ப்பனி’ன் ஆசை என்ன?

வாப்பாவின் கடைசிக் கடிதம் நினைவிற்கு வந்தது. 78 வயதில் , அவர்கள் கோலாலம்பூரில் இருந்தபோது எழுதியது. ஐம்பது வெள்ளி சம்பளம் ஏற்றச் சொல்லி அவர்கள் தன் முதலாளிக்கு எழுதிய கடிதத்தையும் அந்த முதலாளியின் regret கடிதத்தையும் இணைத்திருந்தார்கள். ஊர் போகிறார்களாம். ‘பேரன், ‘ஹசனப்பா..’ என்று சொல்லி ஓடி வரும்போது அவனுக்கு வெறும் கையை விரிக்க முடியாது; முடிந்தால் டிராஃப்ட் எடுத்து அனுப்பவும்..’

நான் அதுகூட உதவ இயலவில்லை. பிள்ளைகளும் தனக்கு உதவ இயலாத பலவீனத்தில் இருக்கிறார்களே என்ற வருத்தத்திலும் ‘பெற்றோர்களின் துரதிர்ஷ்டம் பிள்ளைகளைப் பாதிக்கிறது’ என்று பழியை தன் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு மெளத்தான வாப்பா..

துரதிர்ஷ்டமா அல்லது ஆசையின்மையா? யாருடையது?

நினைவின் ஒட்டத்தை திடீரென்று எழுந்த பீர்பக்ஸின் சந்தோஷக் கூச்சல் அறுத்தது.

‘அரபாப்..பானி ஆகயா!’

அஹமது சாலிக் அடுத்தடுத்து போட்ட மின்னல் வேக உத்தரவுகளில் தண்ணீர், மோட்டார் மூலம் தொட்டிக்கு ஏற்றப்பட்டு உடனடியாக அதிலிருந்து ஆடுகள் குடிக்கும் வாளிகளுக்குப் பாய்ந்தது. அங்கங்கே சுருண்டு கிடந்த ஆடுகள் அதை நோக்கி ஓடி வருவதை திருப்தியுடன் பார்த்தார் அஹ்மது..மகிழ்ச்சி தாங்காமல் ஓடி ஓடி குட்டிகளைப் பிடித்து அவைகளின் கழுத்தை மென்மையாக அமுக்கி, வாளியில் நுழைத்தார். ஒரு குட்டி திணறித் திணறிக் குடித்து முகத்தை மேல் நோக்கித் திருப்பி கழுத்தை ஆட்டியதில் அவருடைய தோப் நன்றாக நனைந்து விட்டது. அஹ்மதுக்கு இன்னும் சந்தோஷம். அவருடைய சந்தோஷம், மஞ்சளாகிப் போய் வைக்கோல் மதிரி இருக்கிற புற்களை, பேலர் மெஷினில் போட்டு உருட்டி புதிய இலேசான பச்சையாகக் காட்டும் சிறு புற்கட்டுகளாக உருவாக்குகிற , சிந்தி பலுச்சிகளையும் தொற்றிக் கொண்டது..எங்கும் சிரிப்பு..

இதைவிட ஒரு சமயம் கிடைக்காது. அஹ்மது சாலிக்கின் இன்றைய மலரும் முகம் மாதிரி நான் பார்த்ததே கிடையாது. வியாபாரம் சூடு பிடிக்கும் சமயமும் இதுதான். துப்பாஸ் டிரேடிங்கிற்காக பெரும் புல் கட்டுகளைச் சுமந்துகொண்டு சில்லா எல்லை தாண்டி நிறைய டிரெயிலர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதம் கழித்துத்தான் குளிர் ஆரம்பமாகிறது என்றாலும் இப்போதே ஒட்டகம் குதிரைகள் ஆடு மாடுகள் அனைத்திற்கும் ‘ஆவ்..ஆவ்’ என்று பசி கிளம்ப ஆரம்பித்து விட்டது. மழையே வராமல் இப்படியே இருந்து விட்டால் இந்த வியாபரத்திற்கு நல்லதுதான். தவிர சிறு மழையானாலும் நாறி விடும் துபாய். ஆனால் உலகம் ஆடுமாடுகளுக்கு மட்டும் இல்லையே..

இந்த வசந்த காலம்தான்தான் சரி. பீர்பக்ஸூக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான். இந்த சமயத்தில் கேட்காமல் போனால் வியாபார சமயத்தில் முதலாளிகள் அதிலேயே மூழ்கி விடுவார்கள். வெயில்
ஆரம்பித்து விட்டாலோ அந்தச் சூடு அவர்களின் வியாபாரத்தைப் பாதிப்பது போல அவர்களையும் வருத்துகிறது.

துப்பாஸ் முதலாளிகளுக்கு வெயிலில் கனியும் பேரீச்சைகள் ஏன் வேண்டும்? ஹாதா கர்பான்..!

மகிழ்ச்சி வரப் போகிறது என்று தெரியும் நேரம்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கும் நேரம்- வெள்ளிக்கிழமை விடுமுறை, வியாழன் இரவு மட்டும் இனிப்பது போல.

இன்று வியாழன்தான். தாகம் தீர்ந்து விடும் எனக்கு. கேட்பது ; மறுத்தால் ‘மா ஸலாமா’ சொல்லி விடுவது. ‘அழுது கொண்டிருப்போமோ ? ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ?’..

அஹ்மது சாலிக்கை நெருங்கி சலாம் சொன்னேன்.

‘அலைக்கும் சலாம் யா சயீத் ஆபிதீன்….!’

அஹ்மது சந்தோஷமாகத்தான் இருக்கிறார். அவர் எனக்கு பதில் சலாமும் சொல்லி விட்டார்.

‘மேரா தன்கா தோடா ஜாஸ்தி கர்னா அச்சாஹை அர்பாப்’ – உடைந்த ஹிந்தியில் சம்பளம் ஏற்றச் சொன்னேன். குடும்ப கஷ்டங்களைச் சொன்னேன். அவருக்குப் புரிந்த கஷ்டங்களைத்தான் சொல்ல வேண்டும். Y2K சிக்கலைத் தீர்த்ததைச் சொல்ல இயலாது.

அஹ்மது சாலிக்கின் முகம் வாடி விட்டதுதான்.

‘இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஏற்றித் தருகிறேன் – நீ இருந்தால்’ என்றார் அரபியில் – ஆடுகளைப் பார்த்தபடியே. அதைப் பார்த்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும் போலும்.

ஆடுகளும் இருக்க வேண்டுமே என்று தோன்றியது. இருந்தாலும் அஹ்மது, சொல்வதை செய்யக் கூடியவர்தான் என்பதில் சந்தேகம் எட்டிப் பார்த்தது.

யோசிக்கிறேன் என்றால் அவர் யோசித்துக் கொண்டேயிருப்பார் அவர். இன்று, செய்வதைப் பற்றிப் பேசுகிறார். நிச்சயம் செய்வார் – அவர் இருந்தால்.

ஆசையும் அப்போது இருக்க வேண்டும் அவருக்கு.

திடீரென்று தொண்டை மிக வறண்டு போயிற்று எனக்கு. ஏனோ ஆடுகளின் மேல் பார்வை போயிற்று. குடித்துக் குடித்து விட்டு மீண்டும் மீண்டும் வரும் அவைகளின் தாகம் இப்போது தீர்கிற மாதிரி தெரியவில்லை…

(முடிவு)

அருஞ்சொற் பொருள்

அரபாப் – முதலாளி
மஜ்ரா – பண்ணை
ஆப்ரா – படகு / கால்வாய்
எகால் – தலையில் கட்டும் கறுப்புக் கயிறு
ஜகாத் – இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று (தன் வருமானத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பது)
திக்ர் – இறை நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரித்தல்
மிஸிரி – எகிப்தியன்
பலத் – நாடு

13 பின்னூட்டங்கள்

 1. senshe said,

  01/05/2018 இல் 16:55

  Wow…. Thanks and Hugs for share.. :))))))

  • அனாமதேய said,

   02/05/2018 இல் 09:46

   நன்றி சென்ஷி. பிறந்தநாள் வாழ்த்துகள்!

 2. சோமன் said,

  02/05/2018 இல் 12:26

  அகாடமியில் செங்கல்பட்டார் வகுப்பு என்பது
  புலிவாய்க்குள் போய் திரும்புவது போலத்தான்.
  கொலை நடுக்கமாகவே எப்போதும் இருக்கும்.
  திருமண்ணும் பஞ்சக்கச்சமுமாக கொஞ்சம்
  கொழ கொழ என்று வருவார். அப்படியே கறுத்த
  பெருமாள் மாதிரி ஆவாஹிக்கத் தோதான ஒரு பிம்பம்.
  பழு பழுத்த சிங்கம். தாளத்தில் கெட்டி.
  லேசில் ஒத்துக்கொள்ள மாட்டார். மூச்செல்லாம் லயம். அருமை புரியாமலே கொஞ்சம் அந்த நிழலில் நிற்க
  வாய்த்தது எங்களுக்கு ஒரு வரம்.

  லயத்தில் ஈடுபாடு அது ஒரு தனித்துவம். தவம்.
  அது வந்தாலோ, இருந்தாலோ, மனசுக்கு ஒரு ஒதுக்கல் தள்ளல் இல்லாத எந்தப்பாட்டும் ருசிக்காது.
  “அவளுக்கு நல்ல காது” என்பார் எங்க சார். சங்கதிகளை
  உருட்டி, பிருகா கலந்து, காதில் கேட்டதை அப்படியே பாடுவதில் எவ்வளவு திறமை இருந்தாலும் பக்தி கலந்த உள்ளுணர்வில் வரும் கற்பனை வராது.
  காரணம், ருசியில் அது வேறு இது வேறு. இரண்டும்
  தனித்தனியே மிகக்கடும் உழைப்பைக் கோருபவை.

  சமயங்களில் மனோதர்ம வகுப்பு ஆனந்தமாக அமைந்து விடும். அவை எல்லாம் ஒரு பொற்காலம். சங்கதிகள் என்பவை துளிக்கூட கற்பனை மாசுபடாமல் அதனதன் வரிசையில் முறையான பயிற்சி முக்கியம். வண்டிக்காரனின் குதிரை இலக்கு மாறக்கூடாது. மனோதர்மம் என்பது
  பந்தயக்குதிரை போல கற்பனையோடு கொஞ்சம் வெறியும் கூட வேண்டும்.

  அன்று அத்தனை பேரும் ஒரு பல்லவிக்கு அச்சாரமாக தானம் பாடிக்கொண்டு வருகிறோம் வரிசையாக. அன்றைக்கு எதுவும் அவர் மனசுக்குச் சேரவில்லை என்பது எங்களுக்கு விளங்கிற்று. காறித்துப்பினாலும் துப்புவார். அட்சதையும்
  விழும்.

  ஒரு தடவை, கொஞ்ச நேரம் முந்தி சங்கராபரணம் ஒன்று நாலு களையில் நடத்தி விட்டு ஆளுக்குக்கொஞ்சம் தானம் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டு வருகிறார். கண் இறுக்க மூடி இருக்கிறது. எல்லாம் குப்பைகள். ஞானத்தோடு ஒண்ணாச்சும் பாடாதா என்று உள்ளே ஒரு ஓட்டம் இருந்திருக்கும்.

  அன்றைக்கென்று பார்த்து எவருக்கும் கற்பனை ஓடவேயில்லை. “‘போச்சு இன்னிக்கு” என்று வயற்றில் தீ. “கடவுளே இன்று வகுப்பு முடிந்து வெளிய ஓடினா போறும்’ என்று வருகிறது. சார் அவ்வப்போது கண்விழித்து பார்க்கிறார்., ‘நீ ஆச்சா’, ”இரு அவன் பாடட்டும்.”, ”
  என்று உதிரி உதிரியாக எப்போவாவது ஒரு சில வார்த்தைகள்.

  எல்லாரும் முடித்து விட்டோம். மயான அமைதி.

  ஹ்ம்ம்…

  “தானம்னா,…..”” காட்டன் துணியில் மங்கலான
  அந்த அழுக்கு ஜிப்பாவில் இருந்து ஒரு முரட்டு விரல் முதலாமவனில் ஆரம்பித்து ஒரு அரைவட்டம் வந்து என் நெஞ்சுக்கு நேராகத் தேங்கி நின்று போனது.

  “இப்பிடிப்பாடணும்….”

  எழுந்து கொண்டோம். சார் வெளியில் போய் விட்டார்.
  திரும்ப எல்லாருக்கும் உயிர் வந்தது.
  ————————————————————————————————-

 3. சோமன் said,

  02/05/2018 இல் 14:15

  இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு உமக்கு எழுதப்போய் ஒரு கதை ஆய்ப் போச்சு.
  சொல்லும். கொஞ்சம் எங்கே என்ன கலந்தால் இன்னும் கொஞ்சம் க(வி)தை தேறும் என்று கூட.

  • 03/05/2018 இல் 11:11

   ஒன்னும்செய்ய வேணாம். இப்பவே உங்க (க)விதை நல்லாத்தான் இருக்கு.

 4. அனாமதேய said,

  03/05/2018 இல் 13:13

  https://www.facebook.com/Chingleput-Ranganathan-165772280158208/

  இந்த வரிக்கு மூணு நாளாச்சு!.. இதையும் ஒரு பார்வை பாதிக்கும் அடுத்த ஈடு வெந்தாச்சு.
  சோமன்

 5. அனாமதேய said,

  03/05/2018 இல் 14:23

  இதுவும்
  அதே பாடல் “காபாலி,,,,, கருணை நிலவு பொழி வதன மதியன் ஒரு ” “காபாலி.”….

 6. அனாமதேய said,

  03/05/2018 இல் 14:29

  கொஞ்சம் மோஹனம் பழகும்.. இதுவும்
  “ஏன் , பள்ளி கொண்டீரய்யா? “”
  கையில் லிரிக்ஸ் வைத்துக்கொண்டு பொறுமையாக கேளும்…..
  திட்டாதீரும். சரியா…..சாரி.

 7. அனாமதேய said,

  03/05/2018 இல் 14:30

 8. சோமன் said,

  03/05/2018 இல் 15:15

  இதையெல்லாம் ஏன்யா எனக்கு அனுப்பி வைக்கிறீர் என்று தோணி இருக்கக்கூடும். நான் மட்டும் உமது மார்க்கம் அருஞ்சொற்பொருள் தேடித் தேடிப் போய் படிக்கலை ?… வெறுமே குரல் மட்டும் நல்லா இருக்குன்னு அல்லாவைக் கூப்பிட்டுட்டா ஆச்சா?

  இங்கே இந்த ராகம் பிடிபட கூடை கூடையாக வேற வேற மோஹனம்.. அப்புறம் கூடை கூடையாக ஹிந்துஸ்தானியில் பௌளி, பூப், இத்தனையும் கேக்கணும். அப்போ கூட, நல்ல சங்கீதம் எது என்று காது பிரிச்சு அறியாது. போக சுகம்னு நம்ம கீரா பெரிசு சொல்லும். ஒரு ஒரு ராகமும் ஒரு தேவதை…..இப்போதைக்கு மோஹனம் மட்டும்
  கேளும். கவனமாய். அதி காதலுடன். இந்த காபாலியை.

  கேவியென் காபாலி, D.K. ஜெயராமன் காபாலி, சஞ்சய் காபாலி, TM கிருஷ்ணா காபாலி, கூந்தலுள்ளது, இல்லாதது, நிரவல், ஸ்வரம், தனி உள்ளது இல்லாதது. இப்படி ஏகமா இருக்கிறது……

  உமது கடை நாவலில் ஒரு இடம்… அந்த G.N.B பத்தி ஒரு சொல் வரும்…தெரிந்து சொன்னீரான்னு தெரியலை…..
  எங்கே நம்மை வைப்பது என்று வாசகன் அனுமானிக்க
  அது போதும்..

  சோமன்….
  (சோம்பலுடன்)

 9. சோமன்…. said,

  05/05/2018 இல் 04:45


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s