சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25அத்தியாயம் 26 |அத்தியாயம் 27

1996diary - img01

அத்தியாயம் 28

ஆபிதீன்

*

26.09.1996 வியாழன் இரவு.

‘என்னா மூஞ்சிலாம் ‘ச்செஹ்ரா’வா இக்கிது , மாப்புள மாதிரி?’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா? அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா? தௌலத்காக்காவின் பின்புலத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள்!) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம்! அவர் செய்துவந்த வேலை , கம்பெனியில் நடக்கிற அத்தனை விஷயங்களையும் மருமகன் தௌலத்காக்கவிடம் ஒப்படைப்பதுதான். மற்றநேரங்களில் , மனிதர்களின் சாமான் கிளம்புவதற்கும் மனுஷிகளின் ‘மாச’ப் பிரச்னைகளுக்கும் ஹோமியோபதி மருந்து கொடுத்துக்கொண்டிருப்பார் அவர் – ஃபோனில்,. ‘மாலிக் அல் மவுத்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற அலிமம்ஜாராலேயே இத்தனைநாள் அவரை அகற்ற முடியவில்லை. ‘உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை’என்பார் மேனேஜர் மொயீன்சாஹிப்.

மொம்மதுகாக்கா, தௌலத்காக்காவின் தாய்மாமன். ஆனால் மருமகன் தன் கம்பெனியில் அவரை வைத்துக் கொள்ளததற்குக் கூட இதே தகுதி காரணமாக இருக்கலாம். மொம்மதுகாக்கா வேலை போனதற்கு கவலைப்படும் ரகமும் அல்ல. எல்லாமே அவருக்கு இலவசமாக கிடைத்து வந்திருக்கிறது. ஊரில் வாங்கிப்போட்டிருக்கிற வீடுகளிலிருந்து மட்டுமே மாதவருமானம் 20000த்திற்கும் மேலிருக்கும். பிள்ளைகள் அத்தனைபேரும் ஃபிரான்ஸுக்குப் போய்விட்டார்கள்…

அவரிடம் இந்தக் கரளைகள் பற்றிச் சொல்லி மருந்து கேட்கலாமா என்று நினைப்பு வந்தது, முன்பெல்லாம் சில வலிகளைப் போக்கியிருக்கிறார்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக – இந்தமுறை துபாய் வந்ததிலிருந்து – ஒரு வலிக்கும் போய் நிற்கவில்லை. ஆரோக்கியம் எனும் செல்வம் கிடைத்திருக்கிறது. இது ரியாலத்தால் வந்ததா என்றுதான் இப்போது குழப்பம்.. ரியாலத்தே செய்யாத எத்தனையோ மனிதர்களுக்கு வெற்றிகள், செல்வங்கள் வருகின்றனவே.. அதிசய சம்பவங்கள் தன் வாழ்வில் நடக்காத மனிதர்களும்தான் உண்டா? அவர்கள் பார்க்கத் தவறியிருக்கலாம். ஆனால் நடக்கிறது. ரியாலத் செய்யாமல் இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாமோ?

நடப்பதெல்லாம் சர்க்காரால்தான் என்று நான் நம்புவது சரிதானா? துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா? நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா? அப்படியானால் ரியாலத் செய்து வருவதாக ஏமாற்றிக்கொள்ளலாம்.. அந்த கற்பனையின் வலிமையாவது, கேட்டால் உடனே துஆவைக் ‘கபுல்’ஆக்கி வைக்கிற அல்லாவை என்னுள் உண்டாக்கட்டும்.. கேட்டால் மறுக்கிற அல்லாவும், கேட்டுக்கேட்டு கேட்டுக்கேட்டு பின் கொடுக்கிற அல்லாவும் எனக்கு வேண்டாம்.. ஒரு வருடம் முயற்சித்தாகிவிட்டது.. Astral Bodyயில் மட்டும்தான் முகம் கரளைகள் இல்லாமல் இருக்கிறது. கற்பனையில் சரியாக நான் பார்க்கவில்லையோ என்னவோ…

நாளை காலை ‘SS’ பண்ணும்போது நன்றாக கவனிக்க வேண்டும். எனது Astral Bodyயாகத் தெரிவது நான்தானா என்றும் பார்க்கவேண்டும்.. ஆனால் நாளை செய்ய வேண்டுமா? இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா? இல்லையா என்னுள்ளே ஈஸ்வரன்?

‘நாயனே நாயனே நாயனே யென்றும்
மாயனே மாயனே மாயனே யென்றும்
தூயனே தூயனே தூயனே யென்றும்
நேயனே நேயனேயென்று முனைத்தேடி
கத்திக்கத்தித் தொண்டையுங் கட்டிச்செத்தேனே…’ – குணங்குடியப்பா

சர்க்காரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. திட்டுவார்களோ?

கரளையில்தான் அல்லா இருக்கிறான் போலும்! என்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை…? அல்லாவே.. மொம்மதுகாக்காவிடம் கேட்கலாம்தான். ஆனால் ஒருமுறை அவர் தன் நண்பருக்கு வந்த மூலத்தைக் குணப்படுத்திய விதத்தைச் சொன்னது ஞாபகம் வருகிறது.

‘தம்பி.. இந்த வியாதிக்கு இன்ன மருந்துதாண்டு கர்ரெக்டா சொல்ல முடியாது. ‘சிஸ்டம்’ பார்க்கனும். மீராஹூசைண்டு நம்ம கூட்டாளி ஒத்தரு.. இங்கெதான் ‘SM எலக்ரானிக்ஸ்’லெ சேல்ஸ் மானேஜரா இந்தாரு. அவருக்கு ‘பைல்ஸ்’. நம்மகிட்டெ வந்தாரு. ஒரு மருந்தைத் தட்டிவுட்டேன். அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு இந்திக்கிறாரு , நம்மள்ட்டெ சொல்லாம! நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ்! சிரிக்காதீங்க, வியாதி பொய்டுச்சிங்கறேன். பாக்குற நேரம்லாம் ‘காக்கா ஒங்களுக்கு நான் எப்பவும் துஆ கேட்டுக்கிட்ட்டிக்கிறேன்’ம்பாரு.. திடீர்ண்டு மறுபடியும் வந்துடிச்சி அவருக்கு. துடிச்சிட்டாரு. நானும் என்னென்னமோ மருந்து கொடுத்து பாக்குறேன், போவலே. நேரா ஒருநாளு அவர் ஃப்ளாட்டுக்கு போயி ‘காட்டுங்க பட்டறை’யைண்டேன். காட்டுனாரு.. மலதுவாரத்த பாத்ததும்தான் எனக்கு வேற ஒரு ஐடியா வந்திச்சி..’

‘காக்கா…’

‘ச்சூ.. பைல்ஸுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மருந்தைக் கொடுத்தேன்!’

‘அட!’

‘ஆமா. வியாதி பொய்டுச்சி அவருக்கு ஒரேயடியா!’ – மொம்மதுகாக்காவுக்கு என்னைவிட ஆச்சரியம்.

அவரிடமா கேட்பது?! சொல்லமுடியாது, ரியாலத் புண்ணியத்தில் அதிசயம் நடக்கலாம். சொன்னேன். ஒருவருடமாக நான் அனுபவித்து வரும் வேதனையைச் சொன்னேன்.. என்ன இது அசிங்கம், மருந்து உண்டா, அல்லது இங்கேயே ஆபரேஷன் பண்ணிவிடவா?

சாட்டையடி பட்டாற்போல திடுக்கிட்டார். என்னையே ஒருகணம் உற்றுப்பார்த்தார். ‘வெடைக்கிறீங்களா என்னயெ?’ என்று கோபமாகக் கேட்டார். நான் எதிர்பார்க்காத கேள்வி. ‘இல்லெ காக்கா..’ என்று மறுத்தேன்.

‘என்னடா முகத்துலெ ரெண்டு கட்டியோட போனாரு ஊருக்கு. திரும்பி வரும்போது சுத்தமா அது இருந்த அடையாளமே தெரியலே..ஆபரேஷன் பண்ணுன மாதிரியும் தெரியலே..நம்மள்ட்டெ நோவு, நொடிண்டு ஒருநாள்கூட வரமாட்டேங்குறாருண்டு நான் நெனைச்சிக்கிட்டிக்கிறேன். நீம்பரு என்னாண்டா நானும் நாக்கூர்காரன்தாங்குறதை மறந்துட்டு வெடைக்கிறியும்!’

அதையே மொயீன்சாஹிபிடமும் சொன்னார் ஹிந்தியில். அவரோ ‘பாகல் ஹோகயா க்யா?’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங்?’ (மூளை வீணாயிடிச்சா?) என்றான் அவன். யாருக்கு?

மொயீன்சாஹிப் அமைதியாக என் அருகே வந்தார். என் வலதுகையைப் பிடித்து , ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்துப் பிடித்து , நெற்றிப்பொட்டின் இருபுறங்களும் படுமாறு வைத்து ஓரிருமுறை அழுத்தி உருட்டினார்.

வழுவழுவென்றிருந்தது எந்தப் புடைப்பும் இல்லாமல்!

haz1996diary - img - final-part1-with symbol0

(முற்றும்)

‘ஹயாத்’ பாக்கி இருந்தால் ‘சூஃபி 1997’ பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்.

குறிப்புகள் :

ச்செஹ்ரா – பிரகாசம்
கஹர் – கருமை பூசிய, பீடை
மாலிக் அல் மவுத் – மரணம் தரும் முதலாளி
உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை – அவனது பின்புலம் நல்லா இருக்கு. (தர்வாஜா – கதவு)
ரியாலத் – (‘SS’) பயிற்சி
துஆ – பிரார்த்தனை
கபுல் – நிறைவேறுதல்
மர்கஜ் – மையம்
அந மர்கஜ் உல் வஹி.. – நான் வஹியின் மையம் (வஹி – இறைச்செய்தி)
அந மர்கஜ் உல் இல்ஹாம். – நான் அறிவின் மையம் (இல்ஹாம் – உதிப்பு)
வெடைப்பது – கிண்டல் செய்வது.


ஆன்மீகச் சூழலில் என்னை இழுத்துவிட்ட ஹமீதுஜாஃபர் நாநாவுக்கும் நண்பர் நாகூர் ரூமிக்கும், இருபது வருடங்களுக்கு மேலாக டைரியில் பொத்திவைத்த விசயங்களை ‘மௌத்தாப் போய்ட்டீங்கன்னா என்னா செய்றது, சீக்கிரம் வெளியிடுங்க’ என்று ஆவலுடன் (மௌத்துக்குத்தான்!) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-ம் உண்டு!) , நன்றி!


இந்தத் தொடரை என் இரு குருமார்களான  ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களுக்கும் இஜட். ஜபருல்லா நாநாவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இறையருள் நிறைக!

 

9 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  21/01/2018 இல் 17:53

  இப்பத்தான் பொழுது விடிகிறமாதிரி சாயை தெரிஞ்சது. திடுமென இப்போதைக்கு பொழுது விடியாதுண்டீங்களே ஆபிதீன். இந்த ஆக்கத்துக்கு நீங்க கொண்ட சிரத்தையைவிட, வலுவில் கொண்ட மனக் காயங்கள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். என்றாலும், கணிப்பில் சாதிப்பு அலாதியானது.

 2. 22/01/2018 இல் 09:19

  அன்புள்ள தாஜ், சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இந்தத் தொடரை இங்கே பதியும்போது, “இந்தா தண்ணி இத குடிச்சிக்க, இந்தா சோறு இத தின்னுக்க, இந்தா பூவு இத மோந்துக்க’ன்னு ‘தெளிவா’ சொன்னாத்தான் ஜனங்களுக்கு புரியும்போல ” என்று அலுத்துக்கொண்ட ஹஜ்ரத்துதான் ஞாபகத்திற்கு வந்தார்கள்! இறைவன் போதுமானவன்.

 3. Dr.Prof.w mohamed younus said,

  26/01/2018 இல் 20:57

  அன்புள்ள ஆபிதீன் .,இறைவன் போதுமானவன். மனக் காயங்கள் அதிகம் இருக்கும்…என்றாலும் சூஃபி1997 டைரி வெளியானால் ஒருவேளை விடியலாம். இறைவன் போதுமானவன்.

 4. BARAKATHULLAH. A said,

  10/02/2018 இல் 11:13

  அன்புள்ள ஆபிதீன் அண்ணனுக்கு, நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! ஏராளமான ஞானக்குவியல்கள் கண்டேன் – ஹஜ்ரத் அவர்களின் வாய்மொழிகளில்! நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் உணர்வுகளை கசிந்துருகி கடத்துகிறேன் – உங்களுக்கு! எப்போதோ விடிந்து விட்டது – எனக்கு!!

  – பரக்கத்துல்லா, கோவை-15

 5. சஃபி said,

  25/02/2018 இல் 14:48

  அன்புள்ள ஆபிதீன் அண்ணன் கண்டிப்பாக இதை தொடருங்கள்…
  திரும்ப திரும்ப படித்து புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்…
  ஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..
  கேட்க ஆவல்…

 6. Dr.Prof.w mohamed younus said,

  28/02/2018 இல் 21:42

  ஹஜ்ரத் அவர்களின் ஆடியோ உரைகள் இருந்தால் பகிருங்களேன்..
  கேட்க ஆவல்…

 7. vengaimarbhan said,

  19/08/2018 இல் 12:17

  அன்புள்ள சகோதரா் ஆபிதின் அவா்களுக்கு,

  நீங்கள் தொடராக போட்டிருக்கும் 28 கட்டுரைகளையும் படித்தேன். நன்றாக இருக்கிறது. தங்களது செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தனது குருநாதா் கூறிய இரகசியத்தை அனைவருக்கும் தொிய கோவிலில் ஏறி கூறிய இராமானுஜாின் செயலை ஒத்த செயல் இது.

  நீங்கள், ஆடியோ மற்றும் 1997 டைாி ஆகியவற்றை பகிா்கிறீா்களோ இல்லையோ இதுவே மிகவும் பாராட்டதக்க செயலாகும். இது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தங்கள் சந்ததியினருக்கு கண்டிப்பாக பலனளிக்கும். சிந்தப்பவா்களுக்கு நீங்கள் கோடு காட்டியதே போதும். மீதியுள்ளவற்றை அவரவா்களே கண்டு தங்களுக்கான பாதைகளை அமைத்துக்கொள்வார்கள்.

  நான் தங்கள் நண்பா் நாகூா்ரூமி அவா்களின் திராட்சைகளின் இதயம் மூலமாக முதலில் தங்களின் குருநாதா் அவா்களை பற்றி அறி்ந்திருந்தேன். அவரை பற்றி நிறைய செய்திகளை தற்போது தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நன்றி.

  தங்களின் சேவைகள் தொடர இறைவனின் ஆசிகள் என்றென்றும் உங்களுக்கு இருக்கட்டும்.

  • 23/08/2018 இல் 09:24

   நன்றி சகோதரரே. வல்ல இறையோனின் ஆசி தங்களுக்கும் கிடைக்கட்டுமாக, ஆமீன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s