ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் மறைவின்போது ‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை இது (முஸ்லிம் முரசு – நவம்பர் 2002).
சிலர் பிறந்த ஊரினால் சிறப்படைவார்கள். வேறு சிலர் பிறந்த ஊருக்குச் சிறப்பு சேர்ப்பார்கள். வெகுச்சிலர் சீரிய சிந்தனையாலும் செம்மையான செயல்பாட்டினாலும் தானும் புகழ்பெற்று, பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இத்தகு மேன்மக்களில் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கடந்த 9.9.2002 அன்று இறைவனின் நாட்டப்படி மறுமைப் பேறு அடைந்த மார்க்க அறிஞர் , பன்னூலாசிரியர், மௌலானா மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு காதிரி ஆவார். கூடுதல் சிறப்பு நாகூரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வர், கருணைக் கடல் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் அவர்.
1933ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் கே.எஸ். முஹம்மது கௌஸ் சாஹிபு. தாயார் பெயர் செல்ல நாச்சியார்.
வேலூர் பாக்கியத்துல் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் மாணவராக ஞானம் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறை அவரைக் கவர்ந்து ஈர்த்தது. அப்போதே எழுத்துலகப் பிரவேசம். ஆரம்ப காலத்தில் விந்தியன், எஸ்யே.பி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதினார். தமிழகத்தின் வார, மாத இதழ்களில் அவை இடம் பெற்றன. பின்னர் மணிவிளக்கு இதழில் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன. அவருக்கு சமுதாயத்தில் தனி மதிப்பையும் மேன்மை சிறப்பையும் பெற்றுத் தந்த எழுத்தாற்றல், மொழித் திறன், சிந்தனைச் செறிவு வெளிப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கீகாரம் அவருக்கு உரித்தானது!
அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யாவு உலுமித்தீன்’ பேரறிவுப் பெட்டகமான பெருநூலினை இனிய-எளிய- எல்லோருக்கும் படிக்கக் கூடிய, மொழி நடையில் தமிழுருவாகக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தனித்துவம் அதில் ஒளிர்ந்தபோது முத்திரை பதித்து முழுவெற்றியையும் ஈட்டினார். எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெருகினர். வாசகர் வட்டம் உருவானது. அது காலப்போக்கில் விரிந்து பரந்து தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் அவரது பெயர் ஒலிக்க வழி கோலியது.
மார்க்க அறிஞர் என்ற மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான அவர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், வரலாற்று விற்பன்னர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்க பெற்றமைக்குரிய தெளிவான சரியான காரணம் அவர் பெற்றிருந்த பன்முகத் திறனே ஆகும்.
இஹ்யா நூல் வரிசையில் முதல் நூலாக 1957ஆம் ஆண்டு ‘பாவமன்னிப்பு’ அச்சில் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பிலான நூல்வரை அத்தனையும் பொற் குவியல்கள். போற்றுதற்கும் புகழுதற்கும் உரிய அவர் நம் காலத்தில் வாழ்ந்தது நாம் பெற்ற பேறு எனில் அது பொய் அல்ல.
அறிவுக்கோட்டையின் தலைவாயில் ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்களையும், கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய நூலின் தலைப்பு ‘மகனுக்கு’ என்பதாகும்.
பாரசீகம் தந்த ஞான வள்ளல் மௌலானா ரூமி அவர்களில் அறிவுக் கருவூலங்களையும் தமிழுரு கொடுத்துள்ளார். அவை முறையே ‘மௌலானா ரூமியில் தத்துவங்கள்’ மற்றும் ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்’ ஆகும்.
ஆத்மீகத் தந்தை ஹலரத் இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக – தெளிவாக தமிழில் தந்த தனிச்சிறப்பு இவருக்கு உரியது.
மணிவிளக்கு இதழில் தொடர்ந்து கட்டுரையாக வந்த ‘மக்கா யாத்திரை’ பின்னர் அத்தொகுப்பு ‘அரேபியாவில் சில நாள்’ என்னும் நூலாக வெளிவந்தது. மணிவிளக்கில் கட்டுரைத் தொடராக வந்தபோதும், தனி நூலாக வந்தபோதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இஹ்யாவு உலுமித்தின் பெருநூலின் மொழிபெயர்ப்பாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு அல்லது அந்த அளவுக்கோட்டைக் கடந்து இஹ்யாவின் விரிவுரையாளர் என்ற அளவில் உயர்ந்தார். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் கருத்துரைத்து அடையாளம் காட்டினார்கள்.
அவருடைய எழுத்துக்களால் உருப்பெற்ற நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியிடவும் பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் போட்டிபோட்டுக்கொண்டு முன் வந்தன. அப்படி ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் யாரும் இழப்பிற்குள்ளாகவில்லை. ஏமாற்றம் அடையவும் இல்லை. அத்தனை நூல்களும் பல பதிப்புகளைக் கண்டது.
அவருடைய நூல்களுக்குரிய வாசகர் வட்டம் உலகளாவியது என்று சொன்னால் கூட அது தவறு அல்ல. தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவருடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டாக அப்படியொரு நிலை நீடிக்கிறது. நிலைத்த பயன் தருகிறது.
இஹ்யா வரிசையிலான நூல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவற்றுள் ‘இறைவணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’ , ‘தர்க்கத்துக்கு அப்பால்’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் முஸ்லிம் வாச்கர்களையும் கடந்து முஸ்லிம் அல்லாத தமிழர்களும் வாங்கி விரும்பி படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். நாம் பெருமையும், பெருமிதமும் கொள்ள வழி அமைத்துள்ளது.
மாண்பமை ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய ஜாபர் சாதிக் (ரலி) வரலாற்று நூலின் முதற்பதிப்பு (1965) 209ஆம் பக்கத்தில் இமாம் அவர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பை விவரித்த நூலாசிரியர், “…ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்றி வைத்தார்கள், உறவினர்கள். அணைந்த விளக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய விளக்கினால் நிரப்ப முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.
அது இவருக்கும் – எங்கள் ஹஜ்ரத் அவர்களுக்கும் – பொருந்தும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…
*
‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன்
*
நன்றி : முஸ்லிம் முரசு
அனாமதேய said,
12/12/2017 இல் 15:33
ஆம் … மாண்பமை நம் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய நூல்களைத் தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் விரும்பிப் படிக்கிறார்கள்.
w mohamed younus said,
12/12/2017 இல் 15:35
ஆம் … மாண்பமை நம் ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய நூல்களைத் தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் விரும்பிப் படிக்கிறார்கள்.