கலாப்ரியாவின் அற்புதமான பதிவு

ஃபேஸ்புக்கில் கலாப்ரியா எழுதிய இந்தப் பதிவு ஓர் அற்புதம். “ஓடும் நதி” என்ற பெயரில் அந்தி மழை பதிப்பகம் வெளியிட்டநூலில் இந்தக் கட்டுரை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நன்றியுடன் மீள்பதிவிடுகிறேன். – AB

———

fb-img1பாண்டவர்களின் வனவாச காலம். கிருஷ்ணன் விருந்தாளியாக வந்திருக்கிறார். கல்லிலும் முள்ளிலும் எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய, வித்தியாசமான மரத்தை நெருங்குகிறார்கள். பாஞ்சாலியால் நடக்க முடியவில்லை. மரமும் நிழலும், ”கொஞ்சம் உட்கார்ந்து போங்களேன்” என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. கிருஷ்ணர் நைச்சியமாகச் சிரித்தபடி சற்று ஓய்வெடுத்துப் போகலாமா என்று கேட்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள்.

சற்று ஆசுவாசம் அடைந்ததும் மரத்தை நன்கு கவனிக்கிறார்கள்.அதில் சில அற்புதமான பழங்கள் தொங்குகிறது. பழம் ஏதோ மாயா உலகத்துப் பழம் போலிருக்கிறது.பாஞ்சாலி அந்தப் பழத்தைக் கேட்கிறாள்.அர்ஜுனன் அம்பெடுத்து அதைக் கொய்ய முயற்சிக்கிறான்.குறி தவறிக் கொண்டே இருக்கிறது. எல்லோரும் ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்.கண்ணன் சிரிக்கிறான். ”இது ஒரு அபூர்வப் பழம், இதைக் கொய்ய முடியாது, பழத்திற்கு நேர் கீழாக நின்று கொண்டு கைகளை ஏந்தியபடி உங்கள் மனதில் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் உண்மைகளை எல்லாம் வாய் திறந்து சொன்னால், கனி உங்கள் கைகளில் தானே வந்து விழும்” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் கண்ணன்.

ஒவ்வொருவராக கையை ஏந்திய படி ரகசியங்களைச் சொல்கிறார்கள். பழம் கொஞ்சம் கொஞ்சமாக கிளையை விட்டு நீங்கி கையை நோக்கி வருகிறது. எல்லா உண்மைகளையும் சொல்லி முடித்ததும் தொப்பென்று கைகளில் விழுகிறது. பாஞ்சாலியின் முறை. பழம் இறங்கிக் கொண்டே வந்து, கைகளுக்கு சில விரற்கடைத் தூரத்தில் நின்று விடுகிறது.பாஞ்சாலி கிருஷ்ணனைப் பார்த்து, ”நான் எல்லா உணமைகளையும் சொல்லிவிட்டேனே, என்னிடம் வேறு ரகசியம் ஒன்றுமில்லையே” என்கிறாள்.அப்பாடியானால் பழம் கைகளில் வந்திருக்க வேண்டுமே என்கிறான் கிருஷ்ணன்.

பாஞ்சாலி யோசிக்கிறாள்.முகத்தில் நாணமும், லேசான அச்சமும் படர்கிறது. ”ஆம், நான் கன்னியாக இருந்த போது கர்ணனின் பிரதாபங்களைக் கேட்டு, அவன் மீது எனக்கு ஒரு காதல் உண்டு” என்கிறாள்.பழம் கைகளில் தொப்பென்று விழுகிறது.

மகா பாரதத்தில் கர்ணனுக்கென்று ஒரு தனி ‘பர்வமே’ (கர்ண பர்வம்) உண்டு. ஆனால் இந்தக் கதையை பாரதத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. இது செவி வழியாக வந்த ‘கர்ண பரம்பரைக்கதை’.

எந்தப் பிரபல நாவலிலும்,பிரதானமான கதாபாத்திரங்களை விட சில உப பாத்திரங்கள் பிரமாதமாக அமைந்து விடுவது உண்டு. தேவதாஸில் ஒரு சந்திரமுகி, தி.ஜானகிராமனின் மோக முள்ளில், யமுனாவை விட தங்கம்மாள் என்று ஒரு பட்டியலே போடலாம்.

கர்ணனும் அப்படி, எழுத எழுத வியாசரையே ஆக்கிரமித்திருக்க வேண்டும். அதைப் படித்த பலதலை முறைகளும் தங்கள் பங்குக்கு நிறையச் சேர்த்திருக்கிறார்கள்.

கர்ணனுக்கு அவன் மனைவி,அவள் ராஜ வம்சம் என்பதால், அவளது அந்தப் புரத்தில் வைத்து சாப்பாடு பரிமாற மாட்டாள் என்று ஒரு கதை உலவுகிறது. அவள் பரிமாற கர்ணனுடன் உணவுண்ண வேண்டுமென்று யாரோ ஒருவன் கேட்கும் தானத்தை மட்டுமே கர்ணனால் தர முடியவில்லை என்றும் ஒரு கதை.

இன்னொரு கதை கர்ணன் கொலு மண்டபத்திலோ, வேறு எங்கோ அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, தானம் கேட்க ஒருவன் வருகிறான்.கர்ணன் எச்சில் கையாலேயே உடலில் கிடக்கும் நகை, உணவருந்தும் தங்கப் பாத்திரங்களை அவனுக்குத் தருகிறான். இது தவறில்லையா என்று கேட்கிற போது சொல்லுகிறான், ” யார் கேட்டாலும் உடனேயே தந்து விட வேண்டும், நான் உணவருந்தி முடித்து விட்டு தர நினைத்தால் அதற்குள் மனம் மாறி விடும், நாம் குறைவாகவே கொடுப்போம்” என்கிறதாக ஒரு கதை.ஆனாலும் ஒரு பெரிய உண்மை இருக்கிறது, இதில்.

நான் வங்கியில் பணி புரிந்த போது, ஒரு சமயம் பணம் வாங்கும் காசாளராக அலுவல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் சேரும் பணத்தை, அவ்வப்போது பணம் கொடுக்கும் காசாளர் வாங்கி பட்டுவாடா செய்வார். எப்படியோ தவறுதலாக என்னிடமிருந்து வாங்கிய பணத்தில், நாற்பதாயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கப் பட்டு விட்டது.நான் பொறுப்பேற்க வேண்டிய சூழல். எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரே ஒரு வாடிக்கையாளரை விட்டு விட்டோம்.

மூன்று நான்கு நாட்கள் கழித்துத் தான் அவர் வாங்கிச் சென்ற பணத்தை சரி பார்த்திருக்கிறார். நாற்பதாயிரம் ரூபாய் அதிகமாய் இருந்திருக்கிறது. பதற்றத்துடன் வந்தார்.விபரம் சொல்லி மன்னிப்புக் கேட்டபடி பணத்தைத் தந்தார்.”மன்னிப்பா, நீங்க செய்திருக்கிற நல்ல காரியத்திற்கு வங்கியே உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது” என்று எல்லோரும் நெகிழ்ந்து போனோம்.

அவரை என் மகள் திருமணத்திற்கு வந்த திலகவதி ஐ.பி.எஸ். முன்னிலையில் பாராட்ட அழைக்க வேண்டுமென்று பிரமாதமாய் நினைத்தேன். கடைசியில் குடும்பத்தோடு போய் அழைப்போம் என்று ஒத்தி வைத்திருந்தேன். திருமண பரபரப்பில் மறந்தே போய் விட்டது. கடையநல்லூரில் ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பத்திற்கும் பெயர்கள் உண்டு. ’கலிபா’, ‘நூப்பன்’ என்று. சிலவை வேடிக்கையாகக் கூட இருக்கும். ‘முடவன்’, ‘மூக்கறையன்’, ‘புளுகுணி’என்று. இவரது குடும்பப் பெயர் ‘புலவன்’. ஆனால், அவரது பெயர், நீண்ட நாள் நினைவு வைத்திருக்க வேண்டிய பெயர், இதை எழுத ஆரம்பிக்கிற போது மறந்து விட்டது.

இப்போது நினைவுக்கு வருகிறது ‘புலவன் உதுமான் மைதீன்’.

***

 

kalapriya-ps-ab

நன்றி : கலாப்ரியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s