சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (18)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17 |

ஆபிதீன்

*

17-24.11.95 கேஸட் தொடர்ச்சி..

‘Financial Securityண்டு சொன்னா எவ்வளவு பணம்?’ என்று சர்க்கார் கேட்டதற்கு ஒரு சீடர் 50 லட்சரூபாய் என்றார்.

‘உப்புரொட்டி ஃபேக்டரிதான் வைக்கலாம் அதுலெ!’ – சர்க்காரின் பதில்.

*

‘Specificஆ நீங்க கேக்கலைண்டா உங்களுக்கு ஆசை வராது. இன்னதுதான் வேணும்டு கரெக்டா புரியாம இருக்கிற வரைக்கிம் ஆசை டெவலப் ஆகாது. ஆசை டெவலப் ஆகாத வரைக்கிம் அது Burning desireஆ வராது. Emotion வராது. ‘ஆசை என்பது பிரார்த்தனைக்கு இன்னொரு பெயர்’ண்டு சொல்லியிக்கிறேன். என்ன வேணும், அதாவது, என்னத்த நீங்க அடையப்போறீங்க, எத உங்களால அடைய முடியும்? முதல்லெ ஆசையை வச்சிக்குவோம். அதுக்குப் பிறகு , ‘அடைய முடியுமா?’ண்டு பார்ப்போம். முடியாதுண்டு தோணுனா திரும்பத்திரும்ப நெனைக்கனும். நினைக்க நினைக்க அதனுடைய பெரிய தன்மை குறைஞ்சி வந்து சின்ன பொருளா மாறிடும்’

*

‘ஒரு பெரிய லட்சியம்டு சொன்னா அதை அடையக்கூடிய தூரத்துலே ஒவ்வொரு ஸ்டெப்புமே இம்ப்ரூவ்மெண்ட்தான்’

*

‘பொம்பளைய பாக்கும்போது உங்க கண்ணு, அவ கண்ணுலேர்ந்து நெஞ்சுக்கு இறங்குதா? கண்ட்ரோல் பண்ணிப்பண்ணி கண்ட்ரோல் ஆயிடுச்சா? செக்ஸ்தான் பெரிய சக்தி. இதேமாதிரி, தெருவுலெ போகும்போது எத நாடிப்போறீங்களோ அத மட்டும் உங்களாலெ பார்க்க முடியுமா?’ – ‘S’

‘முடியும்’ – ரவூஃப்

‘ஆனா செய்யலே! அப்படித்தானே?’

*

12.07.1996 வெள்ளி செஷன் முடிந்து..

காலை ஜெப்பார்நானாவைப் பார்த்து கேஸட்கள் வாங்கினேன். EB, IB பிரிந்து உருவாகும் ஸ்டெப்ஸ் பற்றி கேட்டேன். Step by stepஆக தான் குறித்து வைத்திருக்கும் தனது நோட்புக்ஐ கொடுத்தார் – அவர் விளக்கிச் சொன்னதில் நான் குழப்பமுறவே. அவர் குறிப்புகள் என் டைரி போல அல்ல. இது அஞ்சுகறி சோறு. ஆனால் அவருடையதோ வெறும் சோறும் ஊறுகாயும். ஆனால் பசி நேரத்தில் கொடுக்கப்படுவது, எனவே உசத்தி அவருடையதுதான். தவிர இலக்கியம் அவருக்கு வராது என்று யார் சொன்னது? முதல் பக்கம் ‘SS’ பற்றி சர்க்கார் சொல்லும் முன்னுரையை எழுதிவிட்டு, ‘இதுவரை எழுதியுள்ளது உனக்குப் புரியாது, என்றாலும் தொடர்ந்து படி, இத்துடன் நிறுத்திவிடாதே’ என்கிறார். அப்புறம் முக்கோணத்தை விளக்கிவிட்டு, ‘இப்போது ஓரளவு புரியும் என்று நினைக்கிறேன். இனியும் புரியவில்லை என்றால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நோட்டை மூடிவைத்து விடவும். இது உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது’ என்கிறார். யாருக்குச் சொல்கிறார்? எனக்கா அல்லது அவர் சந்ததிக்கா? நானும்கூட இந்த டைரியை யாருக்கு எழுதுகிறேன்? என் பிள்ளைகளுக்கு என்னால் கொடுக்க முடிந்த மிக உயர்ந்த சொத்து இதுதான் என்றா?

எப்போதும் சர்க்காரின் கேஸட்களையே கேட்டுக்கொண்டிருக்கும் என்னிடம் ‘என்னா ஒரு தினுசா மாறிட்டாரு?’ என்ற பாவனையில் ஃபரீதுதான் கேட்டார். ‘என்னாங்கனி, உம்ம சர்க்கார் கேஸட்டா?’

‘ம்’

‘என்னா பண்ணப்போறியும் கேட்டு?’

‘இன்னொருத்தனை வெடைக்காம, இடைஞ்சல் பண்ணாம இருந்து வளர்றதுக்கு கேக்குறேன்’

‘இதுதானே வாணாங்குறது’

‘எழுதிக்கிட்டு வர்றேங்கனி இதை. அதனாலெ , ஒண்ணுக்கு ரெண்டுதடவை கேக்குறேன்’ – சுருக்கமாகச் சொன்னேன். பிறகு தேவையில்லாமல் அதை நீட்டினேன். ‘இதுதான் என் புள்ளையிலுவளுக்கு சொத்து!’ என்று.

‘ஏன், (தர்ஹாவின்) அஞ்சு மனாராவையும் சேர்க்கலையோ?!’

‘போனாப்போவுது, அத உமக்கு எழுதி வச்சிடுறேன்’

‘அதுக்கில்லேங்கனி, எங்க மாமா பூபதிதாசர் பெரிய ஞானியா சிலோன்லேர்ந்து வந்தாஹா , ஏழெட்டு வருஷம் கழிச்சி. அஹலைப்பார்க்க ஏகப்பட்ட ‘பாவா’ கூட்டம், காசு வாங்க. இஹ, ஒரு சின்னப்பையை கையிலெ வச்சிக்கிட்டு அத திறக்குறதும் மூடுறதுமா இந்தாஹா. மாமிதான் அப்ப கேட்டாஹா,’ ஏன் அந்த காசைத்தான் கொடுங்களேன் அந்த பாவப்பட்டதுகளுக்கு’ண்டு.

‘காசா, யாருட்ட இக்கிது?!’

‘ஆவு கெச்சேனுங்..! அப்ப எந்த கழிச்சலைத்தான் இத்தனை நாள் கழிச்சி கொண்டு வந்தீங்க?’ – மாமி கத்தினார்களாம்.

‘ஞானம்டி..ஞானம்!’

‘ஒரு கழிச்சல்ல போவ. போயி, மூளைக்குடிச்சான் சந்துலெ போய் கொட்டுங்க அதெ. ஞானமாம் ஞானம்!’.

சொல்லிவிட்டு , ஃபரீது சிரித்தார். எனக்கு ஞானம் பிறந்தது. இவரிடம் அனாவசியமாக நான் ஏன் சொன்னேன்? பதிலுக்கு வெடைக்கலாம். பயனென்ன? பயனில்லாத காரியம் என்ற ஒன்று உண்டா? இந்த டைரி என்னுடைய ரிலாக்சேஷனுக்கு மட்டுமேயாவா? இருக்க முடியாது. அனீஸூம் அஸ்ராவும் அந்த பிள்ளைகளின் நண்பர்களும் சர்க்காரை இதனால் அறிந்தால் , அறிந்து வளர்ந்தால் அது சந்தோஷமான விஷமல்லவோ? God Wants Man to be Happy… இன்னமும் புரியவில்லையென்றால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். அது உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது!

*

15.07.1996

நேரடியாக சர்க்காரின் வார்த்தைகளில் கேட்டு Step – 31ஐச்சொல்லும் புதிய கேஸட்கள் இருக்கிறதா என்று ஜெப்பார் நானாவிடம் கேட்டேன்.

இதுவரை வரவில்லை என்றார்.

‘அப்போ Step – 31 யார்ட்டேந்து வந்திச்சி?’

‘கவுஸ் மெய்தீன்தான் அப்பப்ப எனக்கு எழுதி அனுப்புவாரு..’

சர்க்கார் சொல்லி, அதை கவுஸ் மெய்தீன் விளக்கிக் கேட்டு எழுதி, காப்பி எடுத்து , அதை ஜெப்பார்நானாவுக்கு அனுப்பி, அதை ஜெப்பார்நானா காப்பி எடுத்து , அதை நான்…! ஃபோட்டோவை ஃபோட்டோ எடுத்து அதை ஃபோட்டோ எடுத்தால் வரும் உருவம் யாராக இருக்கும்? இவ்வளவையும் விளக்கமாக சர்க்காரிடம் ஃபோனில் கேட்கவும் இயலாது. ரவூஃபோ ஏதும் அனுப்ப மாட்டேன் என்கிறான். அப்போ இதைத்தான் ஃபாலோ பண்ண வேண்டும். சர்க்காரின் அனுமதியில்லாமலா ஜெப்பார்நானா செய்வார்கள்?

‘பெரிய ப்ராசஸா இக்கிதே..நான் காலையிலேதான் ‘SS’ பண்ணுறேன். டயத்தை மாத்திக்கிடவா நானா?’

‘மாத்திக்கிடலாம். ஆனா ஏதாச்சும் ஒரு டயத்தை ஃபிக்ஸ்டா வச்சிக்குங்க. அப்புறம் இன்னொன்னு, இதுதான் பெருசா இக்கிது. அப்புறம் சின்னதா பொய்டுது!’

‘அப்படியா?’

‘ஆமா. ஆனா அத இப்ப நீங்க செய்ய வாணாம். step by stepஆ வாங்க. முதல்லெ இதைச் செய்ங்க’

இரண்டுநாள் செய்தேன் இதன்படி. ஏதாவது ஒரு Body ஜெப்பார்நானாவாக இருந்தது! எனக்கு குழப்பம் வந்தது. என்ன இது? இந்தக் குழப்பம் எப்போது தீரும்?

நேற்று இரவு கனவு கண்டேன். இரண்டு கனவுகள். ஒன்றில் சர்க்கார் , குஞ்சாலி மாலிமார் தெரு வீட்டு ‘யான்ஸ்’ அறையில் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாய் வந்தவைகளை நினைவில் இருத்த முடியவில்லை. அதிகாலையில் கண்ட கனவு தெளிவாக ஞாபகம் இருக்கிறது. ஒர் அழகிய வீட்டைப் பார்க்கிறேன். வசிக்க அற்புதமான , வலிமையான மாடி வீடு. பங்களா. ஆனால் டிசைன் பழசாக இருக்கிறது. அதைக் கடந்து இது புதிய டிசைனில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துப் போகிறேன். அட, இப்போது அந்த பழைய டிசைன் பங்களாவுக்கு பக்கத்தில் புதிய அழகான டிசைனில் நவீன மாடிவீடு! ஒரே காம்பவுண்டில்தான் இந்த இரு பங்களாக்களும் இருக்கின்றன. இந்தப் புதியவீடு சர்க்காரின் கஃபூர்ஷா தெரு வீடுபோல ஒரு கணம் தெரிகிறது.

*

16.07.1996

புதிய வீடு என்னவென்று தெரிந்துவிட்டது. காலையில் ரவூஃபின் 03.07.1996 கடிதம் கிடைத்தது.

அன்புள்ள ஆபிதீன்,

ஏறத்தாழ இரண்டு வாரங்களாக உனக்கு எழுதிவந்த (‘S’ன் ரியாலத் – புதிய ஸ்டெப்ஸ்களின் விளக்கமடங்கிய) 15 பக்க கடிதத்தை இப்போதுதான் கிழித்துப் போட்டேன். காரணம் , போனவாரம் ரியாலத்தை ரொம்ப சுருக்கி மாற்றியமைத்துவிட்டார்கள் ‘S’ . ஒரு முக்கால்மணி நேரமாக இருந்த ரியாலத் தற்போது 20 நிமிடங்கள்தான். இந்த லேட்டஸ்ட் ரியாலத் உனக்குத் தர ‘S’ எனக்கு அனுமதி கொடுத்தார்கள். எனவே அதையே இப்போது எழுதுகிறேன். இதுவரை நீ செய்துவந்த ‘SS’ஐ *அடியோடு துடைத்துவிட்டு (அடிக்கோடு) இதைத் தொடங்கவும்.

1. பசுமையான, நீரோடையுள்ள , மலைகள் சூழ்ந்த ஒரு பின்புலத்தில் அதிகாலை வேளையில் நீ படுத்திருக்கிறாய். (நீ என்பது இங்கே Physical Body (PB), Emotional Body (EB), Intellectual Body (IB) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய Astral Body (AB)ஐக் குறிக்கும். Sacret Red Color ஜட்டி தவிர உடம்பில் வேறு ஒன்றுமில்லை)

2. மூச்சை மெல்ல * நான்கு வினாடிகளுக்கு உள்ளிழுக்கவும். * இரண்டு வினாடிகளுக்கு மூச்சை உள்ளே நிறுத்தவும். வாயால், அதாவது தொண்டையால் நிறுத்தக்கூடாது. * அடிவயிற்றைக் கொண்டு , strain இல்லாமல் நிறுத்தவும். பின்பு * நான்கு வினாடிகளுக்கு மூச்சை வெளியே விடவும். இதுபோல * ஐந்து முறை செய்யவும்.

3. காலிலிருந்து தலைவரை உணர்ந்துகொண்டே வரவும். தோள்வரை உணர்ந்தபிறகு இரண்டு கைகளையும் உணர்ந்துவிட்டு பின்பு கழுத்து முதல் தலைவரை உணரவும்.

4. பின்பு உட்கார்ந்து (கற்பனையில்) கீழ்க்கண்ட இஸ்முவை 25 தடவை ஓதவும்.

BI IZZATHIKALLAAHUMMA
YAA HAQ YAA MUBEEN
YAA RAHMAN YAA RAHEM
IRHAMNI WA’FALNI
YAA MUJEEBAD DA’WATH
YAA GHANEE YAA MUGHNEE

5. இஸ்மை ஓதி இரண்டு கைகளிலும் ஓதி முகத்தில் தடவிக்கொள்ளவும் (கற்பனையில்). பின்பு I am greater and powerful than anything else’ என்று மூன்றுமுறை சொல்லவும் (உணர்ந்து).

6. பின்பு ஒரு கணம் பழைய படுக்கைநிலைக்கு வந்து , மறுகணமே பூமியிலிருந்து பத்துஅடி உயரத்தில் நிற்கிறாய். கீழே பார்க்கும்போது EB, அதனையடுத்து PB, அதனையடுத்து IB என வரிசையாக மூன்று Bodyகளும் உள்ளன. ஒவ்வொன்றுக்குமிடையில் ஆறு அடி இடைவெளி உள்ளது. மூன்று Bodyகளுக்கும் வலதுபக்கம் EBயிலிருந்து பத்து அடி தள்ளி (தரையில்) அங்கிருந்து பத்து அடி மேலே நிற்கிறது AB.

haz1996diary - img11 - sep30diary-b - chap18

முக்கியம்: Bodyகள் ஒன்றின்மேல் ஒன்றாக Verticalஆக இல்லை. ஒன்றின்பக்கத்தில் ஒன்றாக Horizantalஆக ஒரே planeல் உள்ளன.

7. முதலில் EB, PBயோடு இணைகிறது. பின்பு IB, PBயோடு இணைகிறது. இரண்டும் இணைந்தபிறகு உள்ளது PB மட்டும்தான். இப்போது மேலேயுள்ள ABயின் தொப்புள்வழி ‘சில்வர் கார்ட்’ கிளம்பி PBயின் தொப்புளுக்குச் சென்று தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

8. பின்பு வானத்தில் – ABயின் எதிரில் – சில்வர் கலர் திரையில் ‘Secret Symbol’ முழுதும் ஃபார்ம் ஆகி உள்ளது, அதை மேலிருந்து கீழே கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக்கொண்டு வரவேண்டும். அதாவது symbolஐ நீ வரைய வேண்டியதில்லை. ஏற்கனவே உள்ளதை (ஒரு தாளை அல்லது துணியை வைத்து மறைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பார்க்கிறாய்) Symbolஐ பார்த்து முடியும்வரை முன்பு 25 தடவை ஓதிய அதே இஸ்முவை ஓரிரு தடவைகள் ஓதவும்.

haz1996diary - img10 - sep13-oct1-diary-bb

Background : Silver, முக்கோணம் – cream, உள்வட்டம் மேல்பாதி – Red, கீழ்பாதி – Orange, ரஹ்மானியத் கோடு – Gold, வெளிவட்டம் – Green.

மாற்றம் (கலர்களைத் தவிர) : உள்வட்ட மேல்பாதி சிவப்பு முடியும் borderஐத் தொடாமல் ….  இப்படித் தொடங்கி கீழே இறங்குகிறது. அதாவது ….

haz1996diary - img10 - sep13-oct1-diary-cc - chap 18

இந்த வளைவுகளுக்குள் உள்வட்டத்தில் அளவில் கால்பகுதிக்கு வட்டம் வரைய முடியும். இப்படி. அடுத்து வெளிவட்டத்திற்கு கீழே இறங்கும் ரஹ்மானியத் கோடு வெளிவட்ட ஆரத்தின் அளவில் சரிபாதி இருக்கவேண்டும்.

9. Symbolஐ பார்த்து முடித்தபிறகு அடுத்தகணம் PBயோடு இணைந்துள்ளாய். அதாவது step1 தொடங்கியபோது இருந்த நிலை.

10. Repeat Step 4

11. இஸ்மு ஓதி, இப்போது நெஞ்சில் – towards left – ஊதவும். ‘ I am greater..’ என்பதையும் மூன்று முறை சொல்லவும்.

12. Repeat Step 2. பின்பு எழுந்து விடவும் (கற்பனையில் அல்ல). எழுமுன் , விடியலில் அதாவது கருக்கலில் பாதி இருளில் தொடங்கிய ரியாலத் அதே நேரத்தில் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டும்.

*

இந்த ரியாலத் 20 நிமிடங்களுக்கு குறைவாக வந்தால் அட்ஜஸ்ட் செய்து 20 நிமிடங்களுக்குள் கொண்டுவரவும்.

இதில் புரியாத விஷயங்களைப்பற்றி உனது பாணியில் பதில் எழுது. ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள உதவும். நான் என் பி.ஹெ.டியை submit பண்ணிவிட்டேன். இனிமேல் அது அவர்கள் பிரச்சனை! ஹாஜித்தம்பியிடமிருந்து கடிதம் வந்தது , நீண்ட நாளைக்குப் பிறகு. ‘ஓம்பூரில் வாஹிது சாபுக்கு கிளை ஒன்று திறந்திருப்பதாகக் கேள்வி’ என்று கிண்டல். துபாய் கிளை பற்றி தெரியாது போலும்.

மற்றவை உனது பதில் கண்டு.

அன்புடன்

ரவூஃப்.

*

19.07.1996 வெள்ளி செஷன் முடிந்து..

19.01.1996 கேஸட்டைக் கேட்டேன். இதைப் பின்னர்தான் கேட்டு எழுத வேண்டும். இருந்தாலும் சில குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.

‘எதையும் சமாளிக்க முடியும்டு தோணுது – ஜம் சமயத்துலெ’ – சீடர்

‘அதையே புலம்பிக்கிட்டிருந்தா எப்படி சமாளிக்கிறது?!’

*

‘நான் எந்தDepthக்கு போய்க்கிட்டிக்கிறேனோ அந்த Depthக்கு நீங்க இறங்கி வரனும்டு ஆசைப்படுங்க’

*

‘ஒரு பணக்காரனுக்கு , அவன் பணக்காரன் என்ற (ஒரே) காரணத்தினால் மரியாதை செலுத்தினால் நம் ஈமானில் மூன்றில் இரண்டு பங்கு காணாமல் போய்விடும்’ – இது ஹதீஸ். அடடா, என்னா தெளிவான, என்னா சுத்தமான, என்னா ஆழமான வார்த்தை! இதை எந்த இடத்தில் பொருத்திவச்சி பாக்கனும்டு புரிஞ்சிக்கிட்டீங்கண்டா நான் சொல்ற எல்லா principlesக்கும் பின்னால (இந்த) ஹதீஸ்தான் வரும்’

*

‘ஆச்சரியம் ஹராம். ஆனா ஆச்சரியத்தை ‘கட்’ பண்ணுனா மரக்கட்டை மாதிரிலெ இருப்போம்? அதனாலெதான் நடிக்கப் பழகிக்குங்க (சொஸைட்டிலெ) என்று சொன்னேன்’

*

‘ரியாலத் பண்ணுறது எப்படியோ அப்படித்தான் என் டைரியை (குறிப்புகளை) படிச்சுப் பாக்குறதும். ‘ரியாலத்’துண்டா என்னா அர்த்தம் தெரியுமா? Training! படிக்கும்போது கோணிக்கிட்டு ,சொறிஞ்சிக்கிட்டு , படிக்கக்கூடாது. ‘இபாதத்’ பன்ற மாதிரி அமைதியா உட்கார்ந்து படிக்கனும். பஸ்லெ போய்க்கிட்டிக்கும்போது படிக்க வாணாம். கார்லெ படிக்கலாம் – நீங்க டிரைவ் பண்ணாம இருந்தா!’

*

‘ஒரு சமுதாயத் தலைவன் ஒருத்தவன் பெர்ஃபெக்டா இருந்தா அந்த பெர்ஃபெக்ஸன் அந்த பிரஜைகள் அத்தனை பேருக்கும் வரும்’
*

‘மகிழ்ச்சி என்பது (ஒரு மாதிரியான ) நெகடிவ் டென்சன்’

*

‘Auraவும் Vibrationம் ஒண்ணா?’

‘Vibrationஆல் வரக்கூடிய விளைவுதான் Aura. ஆனா Aura இல்லாம, Auraவுடைய length குறைச்சலா இருந்தாக்கூட vibration வரலாம்’ – ‘S’

aura n. (pl. -s) subtle emanation. [from Oxford Dictionary]

*

நேற்றிரவு சர்க்காருக்கு ஃபோன் செய்தேன். Symbolஐ கலரோடு கற்பனை பண்ணுவதற்கான அனுமதியை ‘S’இடம் பெற்றுக்கொள்ளவும் என்று ரவூஃப் எழுதியிருந்தான். ‘கலரோடு சேர்த்தே பண்ணுங்க’ என்று அனுமதி கொடுத்தார்கள். முதலில் ஆபிதீனுக்கு கலர்கள் வேண்டாம் என்று சொன்னார்களாம். இப்போது வாழ்க்கையில் வண்ணமிருக்கிறது! ஆனால் ரவூஃபின் கடிதச் சித்திரப்படி கோடுகளுக்கு மட்டுமே வண்ணங்கள் மாதிரி இருந்தது. இன்று காலை கவுஸ் மெய்தீனுக்கு ஃபோன் செய்து குழப்பம் தீர்த்துக்கொண்டேன். Solidஆக , பூசியமாதிரிதான் இருக்க வேண்டும்.

ஜெப்பார்நானாவிடம் வண்ணங்கள் பற்றி கேட்டுக்கொண்டேன். கலர் மார்க்கரால் போட்டுக்காண்பித்தார். முக்கோணத்தின் வண்ணம் Milky white என்று அவருக்கு கவுஸ் மெய்தீன் எழுதிருந்தார். எனக்கோ ரவூஃப் , cream என்று எழுதிருந்தான். இரண்டும் ஒன்றல்லதான். ஆனால் எது சரி? நான் creamஐ கற்பனை பண்ணிக்கொள்ளலாம். பால்கோவா கலரா , உப்புரொட்டி கலரா? அன்றைய பசிக்குத் தகுந்த வண்ணம் எதுவோ அது! இது சிறிது. பெரிய குழப்பம் , மூன்று Bodyகளும் (EB, PB, IB) ஒன்றன்மேல் ஒன்றாகவா அல்லது ஒன்றின் பக்கத்தில் ஒன்றாகவா என்பதில்தான் வந்தது. எனக்கு ரவூஃப் முக்கியக் குறிப்பாக Bodyகள் ஒன்றின் மேல் ஒன்றாக – verticalஆக இல்லை; ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக horizantalஆக – ஒரே planeல் உள்ளன’ என்று எழுதிருக்கிறான். (Ref Step 6 also). ஜெப்பார்நானாவுக்கோ வேறுமாதிரி எழுதப்பட்டிருந்தது கவுஸ் மெய்தீனால். எது சரி? ‘பட்டை’க்கு வருகிற ‘இஸ்மு’ போல ஒரு ஆள் எழுதி, அதை ‘S’ பார்த்து சரி சொன்னபிறகு, அனைவருக்கும் ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்தால் எல்லோரும் ஒரேமாதிரி செய்ய இயலும். ஆனால் யார் இதை ‘S’இடம் சொல்வது? அதுவரை? எனக்கு ரவூஃப்தான்! சீடர்களில் அவனுக்கு கொஞ்சம் மூளை அதிகம் என்றோ என்னவோ தன் கடிதத்தின் கடைசிக்குறிப்பாக சாலிமரைக்கான், சாவன்னாசாபு போன்ற சீடர்களுக்கு ‘S’ சொன்னதை எழுதியிருந்தது இப்போது பொருந்தும்.

‘ரஜ்னீஷ் சொன்னான், பொருளாதார அடிப்படையின்றி ஆன்மீக வழியில் முன்னேற முடியாது என்று. இப்போ நான் சொல்றேன், மூளை ஷார்ப்பா இல்லைன்னா (இந்த லைனில்) ஒரு மயிரும் புடுங்க முடியாது’
*

இன்று காலை ரவூஃபிடம் சந்தேகம் கேட்கலாம் என்று கல்லுக்கடைத்தெரு வீட்டிற்கு போன் செய்தால் ஒரு வயதான பெண்குரல் ‘ஹலோ’ என்றது. நிறைய வயதான வெளிப்பெண்கள் வரும் இடம்தான். ஆனால் ‘ஹலோ’வைக்கேட்டதும் நான் பளிச்சென்று கேட்டேன், ‘யாரு கனியாச்சியா?’ அவர்களுடன் நான் ஃபோனில் பேசியதே கிடையாது! பிறகுதான் துபாயிலிருந்து ஆபிதீன் பேசுகிறேன் என்றேன். ‘ஆபிதீனா…? முபாரக் அலி மறந்துட்டாரு வாப்பா என்னெய..!’ என்று குரல் அழுதது. முபாரக் அலி சௌதியிலிருக்கும் அவர் மகன். அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை – சொல்ல! ரவூஃப் இந்த வாரம் வரவில்லையாம். ஓம்பூருக்கு முயற்சித்தேன். இந்த Bodyகளால் தொந்தரவுதான்! அங்கும் இல்லை. பரவாயில்லை. மறு 3 மாதம் கழித்து அவனிடமிருந்து கடிதம் வரும்வரை இப்போது எழுதிருப்பதையே பண்ணவேண்டியதுதான்!

*

குணங்குடி அப்பா :

‘முட்டை பொரிப்பேன் முழுக்கோழியும் பொரிப்பேன்
தட்டைப் பீங்கானிற் தருவேன் மனோன்மணியே’ – (மனோன்மணிக்கண்ணி)

*

20.07.1996

haz1996diary - img12 - oct4-safar-diary-cropped

1995இன் 12 சிறந்த தமிழ்ச் சிறுகதைகளாக இவற்றை இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறது. பிரபஞ்சனின் ‘பண்பும் பயனும் அது’, அன்பழகனின் ‘சஹர்’, சி. செல்வத்தின் ‘தண்ணிக்கரை’, இரா. நடராசனின் ‘ரத்தத்தின் வண்ணத்தில்’ (நான்கும் இந்தியா டுடேயில் வந்தவை), சா. கந்தசாமியின் எதிர்ச்சொல், லா.ச.ராவின் ‘மந்த்ர ஸ்தாயி’ ஆகிய சிறுகதைகள் ஆழமும் நல்ல மொழி நடையும் கொண்ட மறக்க முடியாத படைப்புகள். நல்ல தேர்வு.

*

பகல் ‘தேரா’வில் மஸ்தான் மரைக்கான் ரூமில் இருந்தபோதுதான் அந்த ‘இந்தியா டுடே’ புதிய இதழை (ஜூலை 06-20) எதேச்சையாகப் பார்த்தேன். தகவல்கள் பகுதியில் புத்தக விமர்சனம். 1995இன் 12 சிறந்த சிறுகதைகளடங்கிய இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற புத்தகம். ஆழமும் நல்ல மொழிநடையும் கொண்ட மறக்க முடியாத படைப்புகளில் ‘சஹர்’ம் ஒன்று! சஹரை மறந்தாலும் அன்பழகனை மறக்க முடியுமா? ‘நல்ல தேர்வு’! இந்தியா டுடேயின் மே 06-20 இதழில் வெளியானது அந்த என் நீண்ட கடிதம் – ‘நண்பன்’ அன்பழகனின் பெயரில். ‘திருவாளர் யதார்த்தம்’ என்று கவிஞர் ஹலீம் என்னை வெடைப்பார். உண்மையான திருவாளர் யதார்த்தம் அன்பழகன்தான். அந்த நட்சத்திர எழுத்தாளனுக்கு பண நெருக்கடி. நல்லவேளையாக அவனை அந்த சமயத்தில் என் வீட்டுப்பெண்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியில் போகாமல் , துபாயில் இருந்தேன்!

‘சஹரை’ப் பார்த்துக் கொதித்தேன். நான் அரபுநாடு போகிறேன் என்று கண்ணீர்விட்டு அழுத – சௌதியிலிருந்து திரும்பியபோது அதே கண்ணீருடன் அணைத்துக்கொண்ட அன்பழகனா இப்படி? எனது சில கவிதைகள் யாத்ராவில் பிரசுரமானதற்கும் கணையாழியில் ‘நடை’ குறுநாவல் பரிசு வாங்கியதற்கும் அவன்தான் காரணம். அவனுக்கு எழுதிய கடிதங்களில் அவைகள் இருந்தன. அதே பிரியத்தில் என் பெரியபாட்டியா உம்மாத்தாவை கதாநாயாகியாக வைத்து , நீல பத்மனாபனின் ‘தலைமுறைகள் ‘ பாதிப்பில் எழுதிய ‘குஞ்சாலிவீடு’ நாவலையும், சௌதி அனுபவங்களை மையமாகக் கொண்ட ‘கூளம்’ நாவலையும் அவனிடம் கொடுத்திருந்தேன். அவன் வளர்ச்சியடைந்த கம்யூனிஸ்ட். எனவே நாலைந்து வருடங்களுக்குப் பிறகு என் கடிதங்கள் – எழுத்துக்கள் அத்தனையையும் அவன் எடுத்துக் கொண்டான். உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பூர்ஷ்வா ஆபிதீன் ஒழிக! குமுதத்தில் சமீபத்தில் குறுநாவலாக வந்த ஒன்று , ‘குஞ்சாலிவீடு’ நாவலில் வரும் ஒரு பகுதி. ரஷீதுமாமாவுக்கு பேய் பிடித்த கதை. பேய் யாரை உண்மையில் பிடித்திருக்கிறது என்று இப்போதுதான் தெரிகிறது. இது திறமைமிக்க பேய். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’வை ‘ஒளிந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’ என்று மாற்றும் பேய். இனி நிறைய மர்மங்கள் வெளிவரும். பிறகு தலைப்பும் வைத்துவிட்டால் அதுதான் டி.எஸ்.எலியட், அதுதான் ஆல்பர்ட் காம்யு, அதுதான் சரோஜாதேவி.

‘SS’ல் வரும் கற்பனைகளுக்கு அன்பழகன்தான் பொருத்தமானவன். யாராக, எதுவாக வேண்டுமானாலும் மாறுவான். ஒருவருடத்திற்கு முன்பு கொதித்த கொதிப்பு இப்போது எனக்கு இல்லை. அப்போது கடுமையாக அவனை வெடைத்து அவனுக்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. ஊரில் சிலபேர் என்னை துக்கம் விசாரித்தார்கள். ரவூஃப் மட்டும் குமுதம் ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது அவசியம் என்றான். கொதிப்பில் உருவான ‘கேண்மை’ நாவல் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது, அதை அனுப்பலாமா?’ ‘வேண்டாம், கடிதம் எழுது’.

எழுதினேன், அன்பழகனின் ‘மேஜிகல் ரியலிஸம்’ பற்றி. ஆசிரியருக்கு கிடைத்திருக்க வேண்டும். எனவே பதில் இல்லை. what we are today is the result of what we were in the past..! இன்று இதை யோசித்துக்கொண்டிருந்தேன் கொதிக்காமல். பக்கத்தில் , முன்னாள் பெண் முதல்வரும் அவருடைய பெண் கணவரும் உள்ள ‘இந்தியா டுடே’ படபடத்துக்கொண்டிருந்தது காற்றில். எனக்கு படபடப்பு இல்லை. எல்லா இலக்கியத்தையும் மிஞ்சிய தன்மையை சர்க்காரின் பேச்சில் பார்த்துக்கொண்டிருக்கும்போது , எத்தனை வருடங்களுக்கு முன்போ எழுதிய குப்பைக்கு (‘குஞ்சாலிவீடு’ நாவலில் சர்க்காரைக்கூட கிண்டலடித்திருக்கிறேன்) நான் ஏன் புகழ் மாலை சூடிக்கொள்ள ஆசைப்பட வேண்டும்? என் எழுத்தை காசாக்கி, புகழாக்கிப் பார்க்கும் ஆசை என்னைவிட அன்பழகனுக்கு இருந்திருக்கிறது. எனவே அடைந்திருக்கிறான். ஆசை என்பது ஒருவகை பிரார்த்தனை..!

மனதுதான் எவ்வளவு தெளிவாக கோபத்தைப் பார்க்கிறது இப்போது! அன்பழகன் , நீ என் Intellectual Bodyயா Emotional Bodyயா? இந்த டைரி உனக்கு வேண்டுமா? ‘நோபல் பரிசு’ வாங்க சௌகரியமாக இருக்கும்! தலைப்பு?’ கொசத்தெருவிலிருந்து கூமுட்டை வரை’.

*

22.07.1996

ஆஃபீஸிலுள்ள ஸ்ப்ளிட் ‘ஏசி’களில் ஒன்று வீணாகிவிட்டது. ஹிட்டாச்சி கம்பெனியிலிருந்து டெக்னீஸியன்ஸ் வந்து அதை இன்னும் கொஞ்சம் வீணாக்கினார்கள். ஒருவாரமாக , வருவதும் பொருத்துவதும் சரியாகாமல் இருக்கவே திரும்ப எடுத்துப் போவதுமாக இருந்தார்கள். நேற்றுகாலை வருவதாக சொல்லியிருந்தார்கள். அந்த ஏசிக்கு கீழ்தான் எனது கம்ப்யூட்டர் இருப்பதால் நான் வேலை செய்ய இயலாத சூழ்நிலை. காலை 11 மணிவரை பார்த்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் இப்போது வந்தால்தான் உண்டு, இன்னும் 5 நிமிடம் தாமதமாக வந்தால் நாளை வரச் சொல்லிவிட வேண்டியதுதான், எனக்கு பெண்டிங் வவுச்சர்கள் நிறைய இருக்கிறது என்று மொயீன்சாஹிபிடம் சொல்லிவிட்டு என் கம்ப்யூட்டரில் உட்கார்ந்த அடுத்த நொடியில் அந்த டெக்னீஸியன்ஸ் குழு வந்தது.

*

நேற்றிரவு ‘அவீர்’ குடவுன் கணக்கு வந்தது. வியாபாரம் இப்போது படு மோசம்தான். 70,000 திர்ஹத்திற்கு குறைவில்லாமல் ஒருநாளைக்கு கேஷ் வியாபாரம் நடந்த இடம். மூன்று நான்கு மாதமாக சராசரியாக 10,000 வருவதே அபூர்வமாக இருந்தது. என்றாவது 40,000 வரும். அன்று அலிமுக்தார் என்னால்தான் விற்பனை அதிகம் என்று சொல்வான். அன்றுதான் அவன் குடவுன் பக்கம் போகாமல் இருந்திருப்பான்! இந்த வருடத்தில் கேஷ் விற்பனை எந்த நாளிலும் 40,000த்தை தாண்டவில்லை. அதிகபட்சம் 40,000தான். 30,000யிரத்திலிருந்து 40,000. ஆனால் செலவும் 10,000யிரத்திலிருந்து 60,000. கம்பெனி லாபகரமாகத்தான் ஓடுகிறது! தங்கள் செலவுகளையெல்லாம் தன் கணக்கில் போடாமல் கம்பெனி கணக்கில் போடும் முதலாளிகள் வேறு. குடவுனில் இருக்கிற தொழிலாளர்களில் முக்கால்வாசிப் பேர் முதலாளிகளின் வீட்டில், அவர்களின் வெவ்வேறு வியாபாரப் பணிகளில் இறங்கியிருப்பார்கள். கம்பெனியின் மெஷினரீஸ் அவர்களின் வெவ்வேறு கம்பெனிகளில் பயன்படும். அந்தத் தொழிலாளர்களின் கூலியும், மெக்கானிக்குகளின் செலவும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள இந்த முக்தார் அப்பாஸில் விழும். இது இருக்கட்டும். என் வேலை – கடைசியாக அவீர் கணக்கு வந்தவுடன் (முக்கியமாக அவீர் கேஷ் சேல்ஸ்) கம்ப்யூட்டரில் ஏற்றிவிட்டு பேக்-அப் எடுத்துவிடுவது. நேற்று அவீர் கேஷ் இன்வாய்ஸை கப்பமரைக்கார் என் கையில் கொடுத்ததும் அதை பார்க்காமலேயே இன்று சேல்ஸ் 15000 இருக்குமா என்று கேட்டேன். கப்பமரைக்கார் திகைத்து நின்றார். sales 15195 !. வெறும் 195 திர்ஹம்தான். நெருங்கி வந்துவிட்டேன்!

*

ஒருவாரமாக ஃபரீது , தம்பி ஹலால்தீனிடம் பணம் ஊருக்கு அனுப்புவதாக சொல்லிக்கொண்டிருந்தார். அவர் இந்தமாதம் கடைசியில் ஊருக்குப் போகிறார். இன்று காலை 10 1/2 மணிக்கு ஹலால்தீனுக்கு ஃபோன் செய்து ஃபரீது வருவார் இப்போது, பார்த்துக் கொள்’ என்று சொன்னேன். பகல் ‘தேரா’ போனால் ஃபரீது என்னிடம் கேள்வி கேட்கிறார்!

‘நான் இன்னக்கி இந்த நேரத்துலே போவேண்டு உம்மட்டெ சொல்லலியே.. நீம்பரு எப்படி ஹலால்தீன்ட்ட சொன்னீரு?’

‘ஏன், போனியுமா அங்கே?’

‘ஆமாம், இன்னக்கி போற ஐடியாவே இல்லை. காசும் இல்லை. 10 1/2 மணிக்கு திடீர்ண்டு நெனைப்பு. ஒரு புரட்டு புரட்டி , செம்பி ஜூவல்லரிக்கு போயி 2 பவுன் வாங்கிப்புட்டு ஹலால்தீன்ட்டெயும் காசு கொடுத்துட்டு வந்தேன்..அது இருக்கட்டும் , நீம்பரு எப்படி கரெக்டா இப்ப வர்றார்ண்டு சொன்னியும்?’ – ஃபரீது விடவில்லை.

‘எனக்குத் தெரியலே ஃபரீது, என்னமோ சொல்லத் தோணிச்சி’

‘ஓய்..ங்கும்மால ஓக்க! மறைக்கிறியும். ஐயோ…என்னைய என்னமோ பண்ணுறானுவ..!’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லே, சரி. சாயந்தரம் ப்ரோக்ராம் என்னா? தாவுத் இப்றாஹிமை பார்க்கப்போறியுமா?

ஃபரீது கையெடுத்துக் கும்பிட்டார். ‘வாப்பா.என்னய வுடு’

‘ஏங்கனி?’

‘அவரைப்பார்க்கத்தான் அவர்தம்பி உமர்பாயை பார்க்கப்போறோம். ஓய் , நீம்பரு என்னமோ பண்றியும்’

எனக்கும் திகைப்பாகத்தான் இருந்தது. அவரைப்பார்த்தால் , அவரை நினைத்தால் அவருடைய அன்றைய காரியங்கள் எனக்கு எப்படி அப்படி தெளிவாக சொல்ல வருகிறது? இருந்தாலும் ஆச்சரியம் ஹராம், நான் மறைத்துக்கொண்டு ‘அதற்கப்புறம்?’ என்று கேட்டேன்.

என் காலில் விழுவதுபோல ஃபரீது நடித்துக்கொண்டே சொன்னார். ‘எங்கே போவேன், உமக்குத் தெரியுமே, அதையும் சொல்லிடும், இல்லே தப்பு, நான் எங்கே போவனும் ஆபிதீன்’

‘ஜாமாங்குண்டுக்கு போறும்’

இதுவும் சரிதான்! எதனாலோ ஃபரீதுக்கு வயிற்றைக் கலக்கிவிட்டது. ‘ஜல்ஜலாக்கி..’ என்று வயிற்றைப்பிடித்துக் கொண்டே அவர் ரூமுக்கு ஓடினார். மூன்று வகை. 1. ஜலாக்கி. 2. ஜல்ஜலாக்கி 3. ஜல்ஜலாக்King!

*

மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் வழியிலுள்ள பள்ளத்தைப் பாராமல் விழுந்து புரள்வதும் நடக்கத்தான் செய்கிறது. நான் ஆபிதீன்தானே! நேற்று காலை ஷேவிங் பண்ண பிரஷ்ஷைத் தேடினேன்.இல்லை. வியாழன் இரவு ‘தேரா’ போகும்போது அங்கே மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்று காலை குளிக்கப்போகும்போது சோப் பாக்ஸை எடுக்க மறந்தேன். பரவாயில்லை. சோப் இல்லாமலேயே குளிக்கலாம் என்ற நினைப்பு வந்தது. உடனே similarityஐ மனம் பார்த்தது. இது ஒத்திப்போடும் குணம். நான் மறுபடி கீழிறங்கி வந்து ரூமில் தேடினேன். சோப் பாக்ஸை அல்ல!. அந்த ஞாபகமே இல்லை. நேற்று கானாமல் போனல் டிஃபன் பாக்ஸ் மூடியை. ஞாபகம் வந்துவிட்டது. முந்தாநாள் இரவு சாப்பிடும்போது தந்துரொட்டி வாங்கிவந்த பையில் கச்சடாவோடு சேர்த்து ரூமுக்கு பின்புறம் உள்ள திடலில் எறிந்தேன். நான் திடலுக்குப் போய் எல்லா குப்பைகளையும் கிளறினேன். கிடைக்கவில்லை. வருத்ததுடன் ரூமைத் தாழிடாமல் மேலே ஆஃபீஸ் பக்கமுள்ள குளியலறையில் நுழைந்தேன். ஐயோ, சோப் பாக்ஸை எடுக்க அல்லவா ரூமுக்குப் போனேன்! மறுபடியும் போய் சோப் பாக்ஸை எடுத்துவந்து போட்டுக் குளித்தேன். நான் நிறைய குளிக்கவேண்டியிருக்கிறது சர்க்கார்..

*

23.07.1996

இருந்த இடத்தை மறந்து திடீரென்று எங்கோபோவது எல்லோருக்கும் சுலபம்தான் போலும். ஞாபக சக்தியில் மன்னன் என்று நான் நினைத்த நண்பர் ஒருவருக்கு என் போஸ்ட்பாக்ஸுக்கு கடிதம் வந்தது. ‘உமக்கு ஒரு லெட்டர் இக்கிதுங்கனி’ என்று சொல்லி கொடுத்தேன். பிரித்துப் படித்துக்கொண்டிருந்த அவர் , ‘ஆபிதீன் எனக்கு ஒரு லெட்டர் இக்கிதுண்டு சொன்னியுமே…தாருமே’ என்றார். ஆ! அப்புறம் சுதாரித்தவாறு, ‘அப்படித்தான் சமயத்துலெ பொண்டாட்டிய ஏறிக்கிட்டிக்கும்போதே ‘ஆஹா இதே மாதிரி பொண்டாட்டிய செஞ்சா எப்படி இக்கிம்!’ டு நெனைச்சிக்கிறேன்’ என்றார். ‘அதே மாதிரிதான் பொண்டாட்டியும் நெனைச்சி இக்கிம் – இதே மாதிரி மாப்புள்ள செஞ்சா எப்படியிக்கிம்டு’ – நான்.

இதற்கு கொஞ்சநேரத்திற்கு முன்புதான் , பாயை தலைக்கு வைத்துக்கொண்டு தலையணையை காலுக்கு வைத்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஆளை வெடைத்துக்கொண்டிருந்தோம் நாங்கள்!

(தொடரும்)

குறிப்புகள் :

வெடை – கிண்டல்
பாவா – மிஷ்கின், பிச்சைக்காரன்
ஆவு கெச்சேனுங் – வியப்பாக, ‘அட கருமமே’ என்பதுபோல சொல்வது
SS – Secret Symbol பயிற்சி
யான்ஸ் – தெருப்பக்கத்து அறை
‘S’ – சர்க்கார் என்பதன் சுருக்கம்
ரியாலத் – பயிற்சி
ரஹ்மானியத் – நல்லசக்தி
ஈமான் – நம்பிக்கை
ஹதீஸ் – நபி (ஸல்) -ன் சொல், செயல், அங்கீகாரம்
ஹராம் – விலக்கப்பட்டது
இபாதத் – இறைவனைப்பற்றிய நினைப்பு, சிந்தனை
பட்டை – யந்திரம்
இஸ்மு – மந்திரம்
தேரா – துபாயில் ஒரு பகுதி
ஜாமாங்குண்டு – கக்கூஸ்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s