அய்யாமை – மு. சுயம்புலிங்கம் சிறுகதை

oru-panangattu-2எங்க அய்யா அவர் உப்புக்குத்தியை அறுத்துக்கிட்டு இருக்கார். அவருக்கு ரெண்டு பாதங்களும் மொரட்டுத்
தோலாருக்கு. அது வெடிப்பு வெடிப்பாருக்கு. பேந்துக்கிட்டுக் காஞ்சி போய் இருக்கிற அந்தத் தோல்களைப் பாளை அருவாளால் அவர் அறுத்து எடுக்கிறார்.

காஞ்ச தோல்களைச் சீவி எடுத்ததுக்குப் பெறகு அந்த வெடிப்புகளில் கருப்பட்டி வைத்துத் திணிக்கிறார்.

கருப்பட்டி வைத்துச் திணிச்ச எடத்தில் அந்தக் கருப்பட்டிக்கு மேல ஒரு கொள்ளிக் கட்டையை வைத்துச்
சுடுகிறார்.

சுரீர்னு அந்தச் சூடு அவர் செரசு வரைக்கும் ஏறி இருக்கும் போலுக்கு. கத்துறார். காலப் பிடிச்சிக்கிட்டு திருணைல கெடந்து பெரளுகிறார். வலி தாங்க முடியாம கூப்பாடு போடுதார்.

“யே.. மூளிக்காத்தா.. என்னயப் பெத்துப் போட்டுட்டுப் பீட்டியே.. என்னயப் பெத்துப் போட்டுட்டுப் பீட்டியே”ன்னு

அழுது அழுது கதறுகிறார்.

எங்க அய்யாவுக்கு அவர் அம்மா மேல அவ்வளவு பாசம்.

எங்க அய்யா ரொம்பச் சின்னப் பையனாக இருந்தபோதே எங்க அய்யாமை அருதலியாய்ட்டாவளாம்.

கள்ளுப்பான சொமந்துதான் அய்யாம அவிய பிள்ளியளக் காப்பாத்தியிருக்காவ.

இங்கிலீஸ்காரன் நம்மள ஆண்ட காலம் அது. அரசாங்கத்தில் ஏலம் எடுத்து ஊருக்கு ஊர் கள்ளுக் கடைகள் நடக்கு.

எங்க ஊர்ல இருந்துதான் சுத்துப்பட்டியில் உள்ள எல்லா கள்ளுக் கடைகளுக்கும் கள் சப்ளையாகி இருக்கு.

கள்ளுப்பான பெரிய பானையாருக்கும். எல்லாராலேயும் கள்ளுப் பானையைச் சொமந்துற முடியாது. அந்தக் கள்ளுப் பானையை கெதியாவுள்ள ரெண்டு ஆம்பளையாளுக்கள் எங்க அய்யாமை தலைக்குத் தூக்கி வுடுவாகளாம்.

கள்ளுப் பானையைப் பத்து மைலுக்குச் சொமந்துகிட்டுப் போய் கள்ளுக் கடையில் ஒத்தீல எறக்கி வச்சிட்டு வருவாளாம் எங்க அய்யாமை.

சின்னப் பையனாருக்கும்போது எங்க அய்யா ஒத்தீல காடோசெடியோன்னு சுத்திக்கிட்டுத் திரிஞ்சிருக்கார்.

சில்லான் அடிச்சிக்கிட்டு, ஓந்தான் அடிச்சிக்கிட்டு முள்ளுக்காட்டு வழியாத் திரிஞ்சிருக்கார்.

கம்மாக்குள்ள கம்மாத் தண்ணி வத்திட்டுன்னா கம்மாக்குள்ள கெடப்பாராம. மீன் பிடிச்சிக்கிட்டு நண்டு பிடிச்சிக்கிட்டு, வெளையாண்டுக்கிட்டுக் கெடப்பாராம்.

கம்மாயில தண்ணி வத்தினதும் ஊர்க்காரர்கள் வலை போட்டு மீன்கள அள்ளிருவாக.

கை வலைக்குத் தப்பிய நசும்புகள் ஒண்ணு ரெண்டு சேத்துக்குள்ள கெடக்கும்.

இவர் அந்தச் சேத்துக்குள்ள எறங்கித் தண்ணியை அலப்புவாராம். சின்னச் சின்ன அயரை மீன்கள் மேலே மிதக்கும். மீன்களை ரெண்டு கைகட்டும் சேத்தோட அள்ளிக் காஞ்ச கரம்பக் கட்டிகள் மேல போடுவாராம். அந்தச் செத்தியங்காணு மீன்கள் வெயிலில் துடிச்சித் துடிச்சிச் சாவுறதக் கிட்ட இருந்துக்கிட்டு பாத்துக்கிட்டே இருப்பாராம்.

மத்தியான வெயில் நேரம் கம்மாக்குள்ள சேத்துல வெளையாண்டுக்கிட்டு இருக்கும்போது கள்ளுப் பான கொண்டுக்கிட்டுப் போன அவிய அம்ம அந்த மத்தியான வெயிலில் வேகுவேகுன்னு நடந்து வருவாளாம்.

இவருக்குச் சின்ன வயசுல எப்போதும் செரங்குதான். உடம்பு பூராச் செரங்கு. சக்கரையெல்லாம்கூடப்  புண்ணாத்தான் இருக்குமாம்.

அம்மையக் கண்டதும் இவர் ஓடிப் போய் அம்மயக் கெட்டிப் பிடிச்சிக்கிடுவாராம்.

எங்க அய்யா சொல்லுவார். நான் அம்மணக் குண்டியோட இருப்பேன். உடம்பெல்லாம் சிக்கும் செரங்குமாருக்கும்.  என் உடம்பு பூராவும் சேத்தைப் பூசி வச்சிருப்பேன். எங்க அம்ம அவா பெத்த மகன மட்டும்தான் பார்ப்பாள். அவா  கண்ணுக்கு நான் மட்டும்தான் தெரிவேன். அவா இடுப்புல என்னயத் தூக்கி வச்சிக்கிடுவாள். எனக்கு முத்தமாகக் குடுப்பாள்.

பாதவத்தி எங்கள அவ்வளவு பிள்ளப் பாசத்தோட வளர்த்தான்னு சொல்லுவார் எங்க அய்யா.

ஒரு நாள் எங்க அய்யாம கள்ளுப் பானையோட கல்லாத்தக் கடந்து போகும்போது ஆத்து வெள்ளம் அவளக் கொண்டுகிட்டுப் பீட்டுது.

எங்க அய்யா கல்லாத்துப் பக்கம் எப்பப் போனாலும் சரி, துண்டை இடுப்புல கெட்டிக்கிடுவார். கை ரெண்டையும்  தலைக்கு உயரத் தூக்குவார். நெடுஞ்சாண்கிடையாத் தரையில் விழுவார். தரையில் விழுந்து விழுந்து தன் தாயை நினைத்துக் கும்பிடுவார்.

அய்யா திருணையில் படுத்திருக்கிறார். வேதனை அவருக்குக் கொறைஞ்சிருக்கு. உறங்குகிறார்.

*

mu.suyambulingam-1_thumb

நன்றி : மு. சுயம்புலிங்கம் , உயிர்மை பதிப்பகம், சென்ஷி

*
தொடர்புடைய பதிவுகள் :

நிம்மதியைக் குலைக்கும் அமைதி – மு.சுயம்புலிங்கத்தின் ‘தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்’ -பாவண்ணன்

என் சக பயணிகள் (மு.சுயம்புலிங்கம்) – .தமிழ்ச்செல்வன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s