நாலு வேலி நிலம் – தி. ஜானகிராமன்

இப்படி நான் வாங்கிப் போட்டால்தான் உண்டு!

*

*

Thanks to : Vasanth & Manonmani

*

‘நாலு வேலி நிலம்’ சினிமா பற்றி நண்பர்  இரா. முருகன்  முகநூலில் எழுதியது :

அழகான பாடல். ‘நாலு வேலி நிலம்’ படம்.

இந்தப் படம் பற்றி முன்னொரு முறை எழுதியது :

தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட இரண்டு இளம் நண்பர்கள் எனக்கு உண்டு. நாங்கள், தி.ஜானகிராமன் எழுதி, சிறந்த நாடக, திரைப்படக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தால் தன் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகமாகவும், பின் அவராலேயே திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்ட ‘நாலு வேலி நிலம் ‘ பற்றி அண்மையில் பேசிக் கொண்டிருந்தோம். தஞ்சைக் கிராமத்தைக் களனாகக் கொண்டு உருவான அப்படத்தில் வரும் ஓர் அழகான காதல் பாடல் – திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது. மாட்டு வண்டியில் போய்க் கொண்டே பாடுகிற காதலன் முத்துராமன் என்கிறார் நண்பர். நாயகி யாரென்று தெரியவில்லை. இந்த இனிமையான பாடல் முழுக்க மாட்டு வண்டியின் காளை மணியோசை இசைந்து வரும் அழகே தனி. பாடலும் அழகுதான். காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல் எனக்கு ‘பாபி ‘ இந்திப் படத்தில் வரும் ‘ஜூட் போலே கவ்வா காடே – காலே கவ்வே ஸே டரியா ‘ வை நினைவு படுத்தும்.

பாடல் முழுவதையும் தன் நினைவிலிருந்து கொடுத்த நண்பருக்கு நன்றி. நீங்களும் ரசிக்க (‘உரார் உறங்கையிலே’)  அது இங்கே .

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலாக இருக்கலாம் என்றார் நண்பர். இசை கே.வி.மகாதேவன். (சேவா ஸ்டேஜ் ஆத்மநாதனாகவும் இருக்கலாம்).

இது பற்றி, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகனும், தமிழ்ப் புதுக்கவிதையில் முன்னோடியுமான கவிஞர் –  ஓவியர் சு.வைதீஸ்வரன் அவர்கள் என்னிடம் சொன்னது இது –

‘நாலு வேலி நிலம் திரைப் படத்தை திரும்ப நினைத்துப் பார்க்கும்போது எனக்குள் சோகம் கவ்விக் கொள்ளுகிறது.. தகவல்கள் துல்லியமாக ஞாபகம் இல்லை. பாடலை இன்று படிக்கும் போது அதை ஒரு நாடோடிப் பாடல்  தொகுப்பில் கண்டு பிடித்து விடலாம் என்று தோன்றுகிறது. ஒரு படத்திற்கு பாடலாசிரியர் என்று பொதுவாக ஒருவர் பெயரை திரையில் காண்பித்தாலும் சில இடைச் செருகல் பாட்டுக்களும் அவருடைய பங்களிப்பாகவே தோற்றம் கொண்டு விடுகின்றன. இன்றைய சினிமாவில் கூட இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள் நேரிடுகின்றன…. நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன  எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர். இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது.. ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும். ‘

‘நாலு வேலி நிலம் ‘ பற்றி இதுவரை நான் அறியாத தகவல் ஒன்றை நண்பர் கொடுத்தார். அது இதுதான் –

படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

*

நன்றி : இரா. முருகன்

6 பின்னூட்டங்கள்

 1. தாஜ்... said,

  20/01/2016 இல் 09:04

  // நாலு வேலி நிலம் – தி. ஜானகிராமன் //

  # இப்படி நான் வாங்கிப் போட்டால்தான் உண்டு!

  – ஆபிதீன்

  நிஜம் – நன்றி..!

  – தாஜ்…

  *

  • 21/01/2016 இல் 10:22

   நல்ல படம் தாஜ். அடுத்தநாள் தேர் இழுக்கத் தேவைப்படும் மூவாயிரம் ஆட்கள் சகஸ்ரநாமம் தூண்டுதலால் கலந்துகொள்ள மறுத்துவிடுகிறார்கள். நடத்த வேண்டிய சுப்பையா, ‘இன்னும் ஒரு ராத்திரிதானே இருக்குது. இப்ப நான் என்ன பண்ணுவேன்’ என்று பதைபதைக்கும்போது, ‘என்ன மாமா, ஒரு ராத்திரியில பிசாசுங்கள்லாம் சேர்ந்து ஆயிரம்கால் மண்டபம் கட்டிச்சாம். மனுசன் பிசாசைவிட மட்டமாப் போயிட்ட இனமா?’ என்று ராஜகோபால் கேட்கும் கேள்வியை நினைத்து ரொம்பநேரம் சிரித்தேன். அப்போது ‘ஒரு நல்ல காரியத்துக்கு பிச்சை கூட கேட்கலாம்’ என்ற அற்புதமான வசனம் வருகிறது . வீடுவீடாகச் சென்று ஆள் சேர்த்து வெற்றிகரமாக விழா நடத்துகிறார்கள். ஒன்றரை வேலி நிலத்தைவிற்று நாலுவேலி நிலம் வாங்க ‘திறமையாக’ நினைக்கும் சுப்பையா , கடைசியில் நாப்பதாயிரம் ரூபாயை இழந்துவிட்டு கிடைக்கும் நாலணாவில், ‘நீ செய்த பாவமெல்லாம் சரியாகிவிட்டது’ என்று மன்னிக்கும் இடம் கலங்கடித்துவிடும். சகஸ்ரநாமத்தின் மனைவியாக வரும் எஸ்.என்.லெட்சுமி பேசும் வசனங்களெல்லாம் பட்டாசு. மோசமான பிரிண்ட்தான். ஆனாலும் நேரம் கிடைத்தால் நீங்கள் பார்த்தே ஆகவேண்டிய படம், நம் தி.ஜாவுக்காக. போனஸ் : ‘நம்பினார் கெடுவதில்லை’ பாட்டு!

 2. தாஜ்... said,

  21/01/2016 இல் 19:07

  தேர் மேற்கு வீதி முதலியார் இந்து தொடக்கப் பள்ளியில் நான் ரெண்டாம் வகுப்பு படித்த போது, எங்க ஊர் ஃபோர் ஸ்டார் தியோட்டரில் இப்படம் வெளியானது. ஊரில் பெரிய கோவில் சித்திரை திருவிழா நேரம் – அதன் பத்து நாள் கொண்டாட்டமும் – தேர் இழுப்பும் – தெருவீதிகளில் வெளியூர் ஜனங்கள் என்றும், அவர்களின் கைகளில் குழந்தைகள்…. குழந்தைகளின் கைகளின் கலர் பலூன் என்றும் அதம்படும்.

  அந்த நேரத்தில், தேர் தெற்கு வீதியில் இருக்கும் ஃபோர் ஸ்டார் தியோட்டரில் ‘நல்லப் படம்’ வெளியிடுவது மரபு! அதன் அடிப்படையில் நாலுவேலி நிலம் அதில் திரையிடப்பட்டது. நான் படித்த பள்ளிக்கூட வாயிலின் அருகே ஒரு மின்கம்பம் உண்டு. அதில் சினிமா விளம்பரம் ஒட்டுவதற்கென்று கம்பத்தின் மையத்தில் ‘மூணுக்கு நாலு’ சைஸில் மார்ஜினிட்ட தகரம் போல்ட்டுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். அதனில் ஃபோர் ஸ்டாரில் ஓடும் சினிமாவின் விளம்பர போஸ்டர் ஒட்டப்படும்.

  படம் மாறுகிற போது அடுத்தப் புது போஸ்டர் அதில் ஜொலிக்கும். பள்ளிக்கூடம் நுழையும் முன்னும், வெளிப்படும் தருவாயிலும் அந்த விளம்பர தகரத்தில் ஒட்டப்படும் சினிமா போஸ்டரைப் பார்ப்பதும் களிப்பதும் அலாதியான ஆனந்தம் கொண்டது. இப்போது அதில் ‘நாலுவேலி நிலம்!’

  நாலுவேலி நிலம் போஸ்டரை நான் வித்தியாசமுடனும் வேடிக்கையுடனும் பார்த்த ஞாபகம் நினைவில் நிற்கிறது. அப்படத்தின் பெயரே என் வியப்புக்கும் வேடிக்கைக்கும் காரணம்.! இந்த வேலி என்கிற பதம், வேலி அடைப்பு என்கிற அர்த்த்தில் வீடுகளில் புழங்குவதை மட்டுமே அன்றைக்கு நான் அறிவேன்.
  அது இங்கே நிலஅளவு சார்ந்தது என்பதை யோசிக்கவே முடியாத வயதில் அப்படி வேடிக்கையில் கிளைத்துவிட்டடேன்!

  சித்திரை திருவிழாவின் கோயில் தேர், எங்க ஸ்கூல் இருக்கும் தேர் மேற்கு வீதி வழியாகவும்தான் போயாகணும். தேர் மேற்கு வீதி என்பது சுமார் ஒரு மைல் நீளமும் – தாராள அகலமும் கொண்டது. என்றாலும் தேர் இவ்வீதியை கடக்க ஒரு நாள் எடுத்துக் கொள்ளும், தவறினால் இரண்டு நாள் கூட ஆகும். ரோடு என்னவோ பிரச்சனை இல்லை என்றாலும் வீதிக்குள் நுழையும் வளைவும் – வீதியில் இருந்து அடுத்த வீதிக்குள் திரும்பும் வளைவும் அத்தனை சீரானதோ சுலபமானதோ அல்ல. அங்கே தேர் கட்டாயம் சங்கம் கொள்ளும் சிக்கி தவிக்கும். சில நேரம் சக்கரங்களில் பழுதும் நிகழ்ந்துவிடுவதும் உண்டு!.

  பள்ளிக்கூடத்து பிள்ளைகள் நாங்கள் ஏக களோபரத்துடன் வகுப்பை விட்டும் வெளிவந்து. தேரோட்ட சப்தத்தில் சங்கமித்துவிடுவோம். எங்களில் சிலர் தேர்வடத்தை தொடுவதும், இழுப்பில் பங்கெடுப்பதும் புண்ணியம் என்கிற கணக்கில் வடம் பிடிக்க மேவுவார்கள். கணிசமான நேரம் கடந்தப் பிறகு வகுப்பாசிரியர் ஸ்தலம் வந்து – எங்களை அதட்டி வகுப்பறைக்குள் அழைத்து செல்வார்.

  பள்ளிக்கூட வாசலில் நின்று வேடிக்கைப் பார்க்கும் கும்பலோடு கும்பலாக நிற்பவன் நான். ஆடைச் சுற்றிய அவ்வளோ பெரிய தேரை வியப்பவனாகவே நிற்பேன்! எப்படியெல்லாம் முட்டுக் கொடுத்து – எம்பி குதித்து அதை நகர்த்துகிறார்கள் என்கிற வியப்பு அது! அப்போது, அங்கே சில பெரியவர்கள் சினிமா போஸ்டரை அந்நாந்து பார்த்து பேசினார்கள்.. ‘இந்தப்படத்திலேயும் தேரோட்டத்தைதான் காமிக்கிறாங்க…!” ‘ஆமாமாம்… போன வருஷம் நம்ம கோவில் தேரோட்டத்தைதான் இந்த சினிமா படத்துக்குன்னு… படம் புடிச்சாங்க..!”.

  கிட்டத்தட்ட அந்தப் படத்தோட செய்தி அதோடு என்னில் முடிந்த செய்தியாகிப் போனது! அதன் பின் தி.ஜா.வின் சினிமா கதை அது என்கிற லிஸ்ட்டில் நாலு வேலியை வாசித்திருக்கிறேன். அவ்வளவுதான். இன்றைக்குதான் அதனையொட்டிய உயிர்ப்பு செய்தி ஒன்றாக உங்கள் பதிவிலேயே கண்டேன். நேற்றே படத்தை பார்க்கணும் என்று இருந்தேன். ஆகலை. இன்று அவசியம் நடக்கும். இன்ஷா அல்லா…!

  *

  • 23/01/2016 இல் 11:03

   ஓ, சீர்காழித் தேரோட்டமா? பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள் தாஜ். நல்ல பிரிண்ட் கிடைத்தால் மீண்டும் பார்க்க வேண்டும். நாகூர் தேரோட்டத்தில் கூட நான் கலந்துகொண்டிருக்கிறேன் முன்பு என்று சாதிக்கிடம் சொன்னதற்கு இப்போது இழுத்தால் ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பார்கள் என்றார் சாதிக். அவர் கையிலும் ஒரு உருட்டுக்கட்டை இருந்தது! இங்கேயும் ஒரு தேரோட்டப் பதிவு இருக்கிறது. வாசியுங்கள் : சிவன் கோயில் தேரும் சின்னதாய் ஒரு வேனும் – https://abedheen.wordpress.com/2008/06/18/தேர்/

   • தாஜ்... said,

    23/01/2016 இல் 20:47

    தி. ஜானகிராமன் அவர்கள் பங்கெடுத்த திரைப்படமாம் ‘நாலு வேலி நிலத்தை’ இரவு லப்-டப்பில் பார்த்தேன். அது தந்த சிந்தனையோடு வெகுநேரம் தூக்கமற

    திளைத்தேன்!

    படத்தின் பிரிண்ட் மகா சுமார் என்ற போதும், அதிகத்திற்கு பாடல்கள் கொண்ட படம் என்ற போதும் ஆர்வமுடனேயே பார்த்தேன். கடுகத்தனை அளவிலான

    காட்சியையும் தவறவிடவில்லை! தி.ஜா,வின் நுட்பம் அத்தனையிலும் தழுவ இருப்பதாகப்பட, திறந்தக் கண் மூடாமல் பார்த்தேன். ‘இலக்கியவாதியின் படம்

    என்கிற இன்னொரு கோணம் வேறு! எப்படி அசர முடியும். எஸ்.வி.சகஸ்ரநாமமும், எஸ்.வி.சுப்பையாவும் தி.ஜா.வை புரிந்து கொண்டவர்களாகவே நடித்திருப்பது

    விசேசம். மனித குரோதமும் – அதன் நேர் எதிர் நிலைப்பாடாம் மனித அழகு என்கிற இரண்டுமே படத்தின் உயிரோட்டமாகவே இணைந்து ஓடுகிறது. தி.ஜா.

    தெரிகிறார்!

    எஸ்.வி.சுப்பையாவின் உடல்மொழி சார்ந்த தொனி, தி.ஜா.வை நகலெடுத்ததாகவே படுகிறது. அத்தனைக்கு சாதுவாக சுப்பையா படத்தில் வாழ்ந்திருக்கிறார்!

    அனுமானிக்கும் அறிதலின் வழியே அறியவும் முடிகிறது.

    செட்டுக்குள்ளவே திரைப்படம் என்கிற அந்தக் கால சினிமா சம்ரதாயத்தை மண்மூட செய்யும் தனமாக இந்தப் படத்தின் பல காட்சிகள் அவுட்டோரில் படம்

    பிடிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் காட்சியே சீர்காழி பெரிய கோவில் காட்சிதான்! தொடர்ந்து காமிக்கப்படும் தேரும்கூட சீர்காழி பெரிய கோவில் தேர்தான்!

    தேர் புறப்படும் தருவாயில் படத்தில் தெரியும் தேரடி மண்டபமும் – மண்டபத்தை ஒட்டித் தெரியும் வீடும் எனக்கு நன்கு புழக்கமான இடமே!

    அந்த வீடு, என்னு டன் இரண்டாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்த ராஜேஸ்வரியினுடையது! வகுப்பில் அவள்தான் லெட்ஷனம்! படிப்பில் அப்படி

    சொல்ல முடியாது. என்னுடன் படித்த என் தெருகாரனான ஈசூப், சதா ‘இந்தால… இந்தால..’ன்னு பள்ளிக்கூடத்தில் அவளைச் சுற்றி சுற்றி வருபவனாக இருப்பான்.

    சோகை மேவிய வெள்ளை நிறம் கொண்ட அவனை, அவள் திட்டிக் கொண்டு திரிவாள். என்றாலும் ‘இந்தாலே… இந்தாலே…’யை இவன் விடமாட்டான்.

    திருமுலைப்பால், தேரோட்டம் காலங்களில் ஈசூப்தான் என்னையும் நண்பன் ஹமீதையும் இழுத்துக் கொண்டு கோயில் பக்கம் போய், தேரடி மண்டபத்தின்

    மேலும் அழைத்து போவான். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி குனிந்து பார்த்தால்… ராஜேஸ்வரி வீட்டு கொல்லைத் தெரியும். அங்கே சில மரங்களும், வீட்டில்

    உள்ளவர்கள் உலர்த்தி கொடியில் காயப் போட்டிருக்கும் ஆடைகளும், உள்ளாடைகளும் தொங்குவது தெரியும். சில நேரம் அங்கு அவள் நின்றாலும் நிற்பாள்!

    எதேச்சையாக அவள் ஈசூபை பார்க்கக் கூடுமெனில், இவன் ‘இந்தாலே’ என்பான். அவள் ‘சீ போ’ என்பாள். அதையே வீடு திரும்பும்வரை வெற்றிகொண்ட

    சங்கதியாக மாறி மாறி – திரும்பத்திரும்ப பேசி புலகாயிதம் கொள்வோம். ராஜேஸ்வரியை முன்வைத்து ஈசூப்புக்கு போட்டி நானோ ஹமீதோ அல்ல. எங்க

    தொடக்கப்பள்ளி ஹெட்மாஸ்டர் மாணிக்கவாசன் தான் ஈசூபின் ‘இந்தாலே… இந்தாலேயை’ சில்மிஷம் செய்பவராக இருப்பார்! அவள் ஹெட்மாஸ்டரை ‘குரங்கு’

    என்று திட்டவும் திட்டுவாள். இரண்டையும் கண்டிருக்கிறேன்.

    ஒன்றை தொட்டால் அதையொட்டிய இன்னொன்று ஞாபகத்தில் எழுவதை நிறுத்த முடிவதில்லை. இந்த அசட்டு நினைவுகளை எல்லாம் இப்படி பதிவு

    பாண்ணாவிடில் என்னோடவே அது மடிந்துதானே போகும்.!

    எங்கே விட்டேன்….

    தேர்..! ஆமாம் அந்த தேர் – தேரோடும் வீதி, மற்றும் ஜமீன் முதலியார் வீட்டு வராண்ட, பண்ணை அய்யர் வீட்டு வெளி, உப்பனாற்றாங்கரை என்று பலதையும்

    படம் எடுதிருந்ததைக் கண்டு களித்தேன். சீய்யாலி ( தி.ஜா.வின் கதைகளில் வரும் சீர்காழி – சீர்காழியென்று வந்து நான் வாசித்ததில்லை! சீய்யாலி என்றுதான் –

    வழக்கு பாஷையில்தான் அது அவரிடம் அழகுறும். இன்றையைக்கும் எங்க ஊர் ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகை சீய்யாலி என்றே நிற்பதையும் சொல்லணும்.

    ) தி.ஜா வாத்தியார் உத்தியோகம் பார்த்த நேரத்தில் வைதீஸ்வரன் கோவில் பள்ளிக்கூடம் ஒன்றில் பணி எடுத்ததாக சொல்வார்கள். அதனால் கூட அதன்

    பக்கத்து ஊரான சீய்யாலி அவருக்கு பிடித்து போய் இருக்கலாம்.

    ஆசிரியர் பணிக்குப் பிறகு, அவர் சில காலம் விவசாய ஆபிஸராக பணியெடுத்திருக்கிறார். காவேரி படுகை நஞ்சைகளில் சஞ்சாரம் செய்தவர் அவர்.

    வெற்றிகரமாக விவசாயம் செய்த எங்கப்பக்கத்து சிலரை அவர் சந்தித்திருக்கிறார். இத் தகவல்களை நான் அறியவும் வந்திருக்கிறேன்! அவரோடான ஓர்

    சந்திப்பில், அவரே இதனை வெளிப்படுத்தினார். அந்த அளவில் அவருக்கு சீய்யாலி அவரது அகத்தோடு நெருக்கமான ஊராகிப் போய் யூகிக்க முடிகிறது.

    அதனாலேயே இந்தப்படத்தின் தேரோட்ட காட்சிகளை சீய்யாலியில் படமாக்க இயக்குனரிடம் தி.ஜா. பரிந்துரைத்திருந்தாலும் வியப்பில்லை!

    பழைய ஜமீனின் சொல் உத்தரவுக்கு, தேர் இழுக்க ஆட்கள் வராமல் போவது சரியே. என்றாலும், நிலப்புலன்கள் கொண்ட கோவில்களில் இதற்கு வாய்ப்பில்லை.

    எங்க ஊர் பெரிய கோவிலுக்கு ஆயிரத்தியொரு வேலி நிலம் உண்டு. கோவிலுக்கு வருடா வருடம் குத்தகை நெல் அளக்கசம்மதிக்கும் குத்தகையாளர்களிடமே

    அவ்வளவு நிலங்களும் விடப்பட்டிருக்கிறது. இந்த கோவில் குத்தகையாளர்களுக்கு நெல் அளப்பதை தாண்டி, இன்னும் சில கோவில் பணிகளும் உண்டு. விசேச

    காலங்களில் சாமி பல்லக்கு தூக்குவது, கோவில் மராமத்து பணிகள், முக்கியமாக குத்தகைகாரர்களின் அத்தனை குடும்பத்திலிருந்தும் தேர் இழுக்க ஆட்கள்

    வரவேண்டும் என்பது போன்ற கட்டாய பணிகளும் உண்டு.

    கோவில் நிலங்களை சொந்த நிலமாக அனுபவிப்பவர்கள்தான் குத்தகைதாரர்கள் என்றாலும், தேர் இழுக்கும் பணிகளை அவர்கள் தவரவிடுவது கிடையாது. இது

    எங்க ஊரில் நான் சகஜமாக பார்க்கும் ஒன்று. ஆக, தேர் இழுக்க ஜமீன் சார்ந்த ஆட்கள் மறுப்பதும் – அதனையொட்டிய குளறுபடிகளையும் தி.ஜா. கையாழ்வதில்

    எனக்கு கேள்வி உண்டு. அதே நேரம், வேறு சில ஊர்களின் தேரிழுப்பில் அவரது கூற்று சாத்தியமாக வாய்ப்புண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

    *

 3. 24/01/2016 இல் 09:40

  ஏ யப்பா…, ஓட்டிவிட்டீரே தேரை! தேங்க்ஸ்யா..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s