‘அலிஃப்’ (சினிமா விமர்சனம்) – ஆசிப் மீரான்

கூகுள் ப்ளஸ்ஸில் தம்பி ஆசிப்மீரான் எழுதிய கூர்மையான விமர்சனத்தைப் பகிர்கிறேன். சுயபரிசோதனை செய்துகொள்வோமாக!
*

alif-malayalam-movie-review-by-asifmeeranஇன்றைக்கு இஸ்லாமியர்களை விமர்சிப்பதும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டி சிறுமைப்படுத்துவதும் அன்றாட நடைமுறையாகி விட்டது. ஒரு புறம் இது கண்டிக்கப்பட வேண்டியதுதானென்றாலும் இத்தனை
விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது
இஸ்லாமியர்களின் கடமையுமாகிறது

இஸ்லாம் பரவிய நாடுகளில் அந்தந்தப் பகுதிகளின் கலாசாரத்தையும் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியே வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் பரவி வரும் இஸ்லாமியத் தூய்மைவாதம் அதனை வேரோடு துடைத்தெறிந்து விட முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்களினால் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண இஸ்லாமியர்களும் அவர்களது வாழ்க்கை முறையும்தான்

நேற்றுவரை பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தவனை அப்படிச் சொல்லக் கூடாதென்று
சொல்வது, தலையில் சேலைத்துணி கொண்டு முக்காடிட்டு நடப்பவர்களையும் ‘ஹிஜாபு’க்குள் அடைப்பதென்று வளர்ந்து வரும் இந்தத் தூய்மைவாதத்தின் பின்னணி குறித்து இஸ்லாமியர்கள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
தூய்மைவாதத்தினால் பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளிடம் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.

இஸ்லாம் போதிக்கும் விசயங்களுக்கும் இஸ்லாம் என்ற பெயரில் போதிக்கப்படும் விசயங்களுக்கும்
நடைமுறையில் மிகப் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. மதத்தின் பெயரால் எதையுமே தம் இஷ்டத்திற்கு வளைத்துக்கொண்டு அதில் ஆதாயம் தேடும் மத அடிப்படைவாதிகளின் செயல்களால் பாதிக்கப்படுகிறவர்கள் எப்போதும் அந்த மதத்தின் பெண்களாகவே இருக்கிறார்கள். இதையேதான் ‘ஞானத்தின் முதலெழுத்து’ என்ற அடிக்குறிப்புடன் வந்திருக்கும் ‘அலிஃப்” என்ற மலையாளத் திரைப்படம் சொல்கிறது

”பெண்களுக்குக் கல்வியும், தொழிலும், சமூக வாழ்க்கையையும் மறுப்பவர்கள்தான் உண்மையான மத
அடிப்படைவாதிகள். எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் முதலில் குறிவைப்பது தங்கள் சமூகத்தின் பெண்களைத்தான்” ஈஎம் எஸ் காலத்தில் அவரோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து
பணியாற்றியவராக அடையாளப்படுத்தப்படும் அப்துல் ரஹ்மான் சாஹிப் நிகழ்த்துவதாக வரும் இந்த உரைதான்
படத்தின் மையக் கரு.

இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்கள்
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள். ஆனால் இஸ்லாத்தில் பெண்களூக்கு நடைமுறையில் உண்மையாக
வழங்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்பதை, அவர்களின் அவலத்தை பிரச்சார நெடியில்லாமல் தொடர் கேள்விகளின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் முகம்மது கோயா.

நரம்பு புடைக்க மம்மூக்கா வசனம் பேசி இஸ்லாத்தை உயர்த்திப்(?!)பிடித்த “தாதா ஸாஹிப்” முதலான
வணிகப்படங்கள் தொடங்கி, ஹஜ்ஜு செல்வதற்காக ஒரு சாமானிய இஸ்லாமியன் படும் பாட்டை அழகாகச்
சொன்ன ”ஆதாமிண்ட மகன் அபு” உட்பட, டிவி சந்திரன் இயக்கத்தில் விவாதங்களையும் விமர்சனங்களையும்
உருவாக்கிய ”பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்” வரை மலையாளத்தில் இஸ்லாமியக் கதாபாத்திரங்களையும்
இஸ்லாமிய வாழ்க்கையையும் முன்னிறுத்தி வெளிவரும் படங்களுக்குப் பஞ்சமில்லை. கேரளத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இது குறித்துப் பெரும் போராட்டங்களை முன்னெடுப்பதும் இல்லை. திரைப்படம் வேறு மார்க்கம் வேறு என்கிற குறைந்த பட்ச அடிப்படை புரிதல் அவர்களுக்கிருக்கிறது.

நபி பெருமானாரின் மனைவியான உம்முஸல்மாதான் ‘ஏன் குர் ஆனில் எப்போதும் ஆண்கள் மட்டுமே
பேசப்படுகிறார்கள்?’ என்று நபிகளாரிடமே கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அதன் பின்னரே நபிகள் பெருமானார் தனது உரைகளில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும்
படத்தில் அப்துல் ரஹ்மான் என்ற கம்யூனிஸ்டுதான் தன் மகளுக்கு எடுத்துச் சொல்கிறார். இந்த இடம்
தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறது. விமர்சிக்கப்பட வேண்டியது இஸ்லாம் அல்ல. அந்தப் பெயரில்
அட்டூழியம் செய்யும் அடிப்படைவாதிகளை என்பதை.(ஏன் பெண் நபிகள் இஸ்லாத்தில் இல்லை என்று
கேட்டதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட மைலாஞ்சி கவிஞர் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை)
ஆனால், அடிப்படைவாதிகளின் நியாயங்களைக் கேள்வி எழுப்பும்போது கூட, அதைத் தீர்ப்பெழுதுவது போலச்
சொல்லி விடாமல் பதிலை நம்மையே தேடச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்

ஃபாத்திமாவின் மகன் அலி அடுத்தவீட்டு சந்திரனிடம் கேட்கிறான் “கம்யூனிஸ்டுன்னா யார்?” என்று. சற்று
நேரம் தடுமாறி விட்டு “அடுத்தவன் கஷ்டங்களைத் தன்னுடைய கஷ்டமாக நினைத்து செயலாற்றுபவன்தான் உண்மையான் கம்யூனிஸ்டு” என்கிறார் சந்திரன்.

இஸ்லாம் குறித்தும் பெண்கள் அடிப்படைவாதிகளிடமிருந்து தப்பிக்க வேண்டியது குறித்தும் பேசும் அப்துல் ரஹ்மான் சாஹிபின் கதாபாத்திரத்தை ஒரு கம்யூனிஸ்டாக இந்த அடிப்படையிலேயே உருவாக்கியிருக்கிறார்
இயக்குனர்.

வடக்கு கேரளத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஃபாத்திமாவின் குடும்பத்தில் ஃபாத்திமா அவரது தாயார் ஆற்றா, அவரது பாட்டி உம்முகுஞ்ஞு மற்றும் ஃபாத்திமாவின் மகன் அலி மற்றும் மகள் ஸைனு. ஃபாத்திமாவின் தாயாரான ஆற்றா ஹாஜியார் வீட்டில் வேலை செய்து கொண்டு வரும் சொற்பப் பணத்தில்தான் வயிறு வளர்க்கிறது இந்தக் குடும்பம்.

ஃபாத்திமாவின் கண்வன் அபுவோ இதைப்பற்றிய கவலை ஏதுமில்லாமல் மனைவி வீட்டில் தான் கேட்டபடி
வீட்டையும் நிலத்தையும் விற்று வியாபாரம் செய்ய பணம் தராததால் முஸலியாரை அழைத்துவந்து
ஃபாத்திமாவை ”மொழி”(விவாகரத்து கேட்டு ’தலாக்’ சொல்வதையே மொழி சொல்வதென்பார்கள்
மலையாளத்தில்) சொல்கிறான் அபு. அவ்வப்போது பணம் கேட்டு அடியும் உதையும் வேறு.

பள்ளிவாசலில் நடக்கும் மார்க்க சொற்பொழிவில் பேச்சாளர் ”இஸ்லாத்தில் தன் இஷ்டத்துக்கு யாரும் யாரையும் ‘மொழி’ சொல்லக் கூடாது. அதற்கென்று விதிமுறைகள் இருக்கிறதென்று” அறிவுறுத்துகிறார். அவற்றுள் ஒன்றாக ‘உணர்ச்சி’ அதிகமுள்ள ஆண்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது என்று சொல்லவும், ஃபாத்திமா எழுந்து, ‘அப்படியென்றால் உணர்ச்சி அதிகமுள்ள பெண்கள் நான்கு ஆண்களைத் திருமணம் செய்யலாமா?’ என்று எதிர்க்குரல் எழுப்புகிறார். இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் மார்க்க சொற்பொழிவாளர் என்ன செய்வார்?

‘மறுமைநாளில்…’ என்று ஆரம்பித்து ஒரு பாட்டை பாடுகிறார். “துனியாவில் பிழைக்குறதுக்கு வழி
கிடைக்கட்டும். ஆஃகிரத்தைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்” என்கிறாள் ஃபாத்திமா. உடனே “என்றைக்கு ஒரு
பெண் சபையில் எழுந்து நின்று பேசுகிறாளோ அன்று ‘கியாமத்’ (மறுமை நாள்) நெருங்கி விட்டதாக அர்த்தம்”
என நபி சொன்னதாக பேச்சாளர் ஜகா வாங்கி, ‘குல்லும் ஹராம்’ என்று முடித்து விடுகிறார்.

பெண் வீட்டில் பேசினாலே அகம்பாவம் என்பவர்களுக்கு, சபையில் – அதுவும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்
பேசும் சபையிலேயே – இஸ்லாத்தைப் பற்றி கலகக் குரல் எழுப்பினால் சும்மா இருக்க முடியுமா? ஜமா
அத்தார்கள் கூடி பள்ளி விலக்கு செய்ய முடிவெடுக்கிறார்கள். இருக்கும் வறுமையில் இதுவும் சேர்ந்ததும் இன்னும் சிக்கலாகிறது அந்தக் குடும்பத்திற்கு. சைனுவுக்குக் கல்வியைத் தொடர வழியில்லாமல் போகிறது. தளர்ந்து போகும் ஃபாத்திமா மதத்தை விட வாழ்க்கை முக்கியமென்றுணர்கிறார். அதன் பின்
என்னாகிறதென்பதுதான் கதை

மதம் தந்திருக்கும் இலகுவான நடைமுறையை எப்படி தங்கள் வசதிக்கும் இஷ்டத்திற்கும் அடிப்ப்டைவாதிகளும்
அதனைப் பின்பற்றுகிறவர்களும் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை மைய இலக்காகவும், பிற வழக்கொழிந்த நடைமுறைகளைக் குறித்த கேள்விகளை முன்னெழுப்பியும் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் கோயா.

இஸ்லாமிய சமூகத்தின் அவலத்தை மிக முக்கிய விவாதப் பொருளாகக் கையிலெடுத்துக் கொண்ட – அதிலும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்களை மைய கதாபாத்திரங்களாக்கி உருவாக்கப்பட்ட – கோயாவின் கதையில் பெரிய புதுமைகள் ஏதும் இல்லைதான்.காட்சிகளின் வேகங்களைக் கூட்டியிருந்திருக்கலாம். ஒளிப்பதிவு சிறப்பாக
இருந்த அளவிற்கு எடிட்டிங் சிறப்பாக இல்லைதான். ஜின் முஸலியாரின் ‘ஓதவலி’ காட்சிகளைக்
குறைத்திருக்கலாம் என்று சில குறைகள் இருந்தாலுமே…..

“மோண்டா கழுவாத இவனா கபர் அடக்கம் செய்யப் போறான்?”
“அவனோட ‘கல்பு’ உன்னை விட சுத்தமாத்தான் இருக்கும்”

வசனத்தின் கூர்மையில் மிளிர்கிறது ‘அலிஃப்’.
படத்தின் பெரும்பலம் வசனங்கள். இஸ்லாமிய சமூகம், பெண்கள் மீது நடைமுறையில் சுமத்திவரும் அதீதமான
அடக்குமுறைகளுக்கெதிரான வீரியக் குரலாக எழுகின்றன வசனங்கள். இதுதான் சமயமென்று குத்திக்காட்டுவது அல்லது இஸ்லாத்தின் மைய நோக்கத்தைச் சீரழிப்பது போன்ற எண்ணமில்லாமல் அதே நேரம் இஸ்லாம் சொல்லியிருக்கும் உண்மை நடைமுறை என்ன என்பதையும் வசனங்களே விளக்குகின்றன. அதைப் போலவே
இதுதான் சமயமென்று பிற மதங்களை நோண்டிப் பார்ப்பது, பெண்களை மையக் கதாபாத்திரங்களாக்கியதால்
ஆண்களையெல்லாம் வில்லன்களாக சித்திகரிப்பது போன்ற கொடுமைகளையும் தவிர்த்திருக்கிறார் கோயா.

ஒட்டுமொத்த சமூகமே எதிர்க்கும்போதும் ஆதரவு தரும் ஹாஜியார், அடுத்த வீட்டில் சந்திரன்,
ஆட்டோரிக்‌ஷாக்காரர் என்று மாந்த நேய முகங்களும் படத்தில் வந்து போகிறார்கள். மனிதத்தின் கூறுகள் மதம்
தாண்டியும் கிளை விரிக்குமென்பதைச் சொல்லும் அபூர்வ தருணங்களாக அவை அமைகின்றன

ஃபாத்திமாவாக லேனா சிறப்பாக நடித்திருக்கிறார். மிகப்பெருமளவில் பேசப்பட்டிருக்க வேண்டிய ஸீனத்,
தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திகொண்டிருக்கிறார். நெடுமுடி வேணு தனக்கேயுரிய கம்பீரத்துடன் அப்துல் ரஹ்மான் சாஹிபாக வந்துபோகிறார். கலாபவன் மணி சிறிய வேடமென்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவருமே மிகையில்லாமல் எல்லோருமே அவரவர் பாத்திரங்களில் பொருந்திப் போயிருக்கிறார்கள்

மெதுவாக நகரும் காட்சி அமைப்புகள்,பெரிதாக ஈர்க்காத பின்னணி இசை என்று சில குறைகள் இருந்தபோதும்
திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல; மாறாக சமூகம் சார்ந்த சிக்கல்களை முன்னெடுப்பதும்தான் என்று உணர்த்த முனைந்த வகையில் ‘அலிஃப்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றுதான்.
*

asifmeeran-IMG_2999

நன்றி : ஆசிப்மீரான்.

1 பின்னூட்டம்

  1. தாஜ்... said,

    08/09/2015 இல் 20:32

    அருமை.
    தம்பிக்கு என் வாழ்த்துக்கள்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s