கிளிப் ஜாயிண்ட் – யு.ஆர். அனந்த மூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட் 1975ல் வெளியிட்ட , ஜி.எச். நாயக் தொகுத்த, ‘கன்னடச் சிறுகதைகள்’ நூலிலிருந்து இந்த பழைய நெடுங்கதையை பதிவிடுகிறேன்.

தமிழாக்கம் : டாக்டர் டி.பி. சித்தலிங்கையா

***

U_R_Ananthamurthy

கிளிப் ஜாயிண்ட்யு.ஆர். அனந்த மூர்த்தி

“வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்” என்று பைப்பை இழுத்து, யோசித்து, சொற்களைத் தேடி, ‘என் வாழ்க்கையில் அது இல்லை’ என்று சொல்லும்போது ஸ்டூவர்ட்டின் நீலக் கண்கள் சிந்தனையில் மூழ்கி ஆழமாகக் காட்சியளிப்பதில் நடிப்பு எவ்வளவு? உண்மை எவ்வளவு? இவனும் மோசமானவன்தானோ? என்னைப் போல?

கேசவன் கீழே பார்த்தான், மின்சாரம் நிரம்பி குளிர்ச்சியாகக் காணும் டியூப் ஸ்டேஷனின் (பாதாள ரயில்) தண்டவாளங்கள், பாய்ந்தால்-

“பாய்ந்தால் ஒரே கணத்தில் சாவு” என்று ஸ்டூவர்ட் கன்னத்தைச் சொரிந்து கொட்டாவி விட்டு “எக்ஸ்கியூஸ் மி” என்றான்.

எங்கோ படித்த நினைவு. எல்லா அனுபவங்களின் முடிவும் மரணத்தைப் போல இருக்கும். “இரண்டாவது டிரெயின் நம்முடையது.”

அணைந்து போன பைப்பைப் பையில் வைத்துக்கொண்டு ஸ்டூவர்ட் சூடேறி கரகரத்துப் போன குரலில் சபித்தான். பப்ளிக் ஸ்கூலில் படித்து விட்டு வந்த உண்மையான அரிஸ்டோகிராட்டிக் லிபரல் இவன் – ஓரம் தைக்காத உல்லன் டை, அழுக்கேறிய சாம்பல் நிறப் பிளானல் கால்சட்டை, ஹாரிஸ் ட்வீட் கோட், பை, நீளமாக வளர்ந்த எண்ணெய் படாத கிராப், தாடி, உயர்ந்த உடல். ஆனால் தன்னுடையது குட்டையான தடித்த உடம்பு. ஆடையில்லாமல் குளிக்கும்போது யுனிவர்சிடி ‘ஜிம்’மில் பார்த்திருக்கிறான். இந்திய இளைஞர்களுக்கெல்லாம் பொதுவாக இடுப்பைச் சுற்றித் தொப்பை.

கேசவன் பேடிங்டன் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உலாவினான். இங்கே ? பவுண்டின் கவிதையிலா? இந்த இரண்டு வரிக் கவிதை – ‘பனி மூடிய மங்கிய வெளிச்சத்தில் இந்த முகங்கள், உலர்ந்த கொம்பில் எரிந்த பூவின் இதழ்கள்’ ஸ்டூவர்ட்டைக் கேட்டால் கேலி செய்வான்: “கேசவ், இந்தியராகிய நீங்கள் இலக்கியங்களில் படித்ததை இங்கே நேரில் காணவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் இங்கிலாந்துக்கு வருகிறீர்கள்”. உண்மை. யூனிவர்சிடிக்கு போய் திரும்புபோதெல்லாம் தினமும் பார்த்து வந்த பூ ட·ப்போடில்ஸ் என்று தெரிந்த பிறகே வொர்ட்ஸ்வொர்த் என்று மனதில் மணி அடித்தது. கை கட்டிய படி நடந்து கொண்டே பிளாட்பாரம் முழுவதும் ஆர்வத்தோடு பார்த்தான் – பெஞ்ச்; அட்வர்டைஸ்மெண்ட் போஸ்டர். சிகரெட், சாக்லெட், பால், பழரசம், சூடான காப்பி இவற்றுக்கான ஸ்லாட் மெஷின்; பெஞ்ச்; உள்ளாடைகளை விளம்பரம் செய்யும் அரை நிர்வாணப் பெண்ணின் உடம்பின் மீது பென்சில்கோடுகளால் விபசாரம். இண்ட்ரெஸ்டிங். இந்தியாவில் கல்லூரிகள் கக்கூஸ் சுவர்கள். இந்தியக் கல்லூரி மாணவர்களைப் போல அதிருப்தியடைந்த ரகசிய காமுகர்கள் உலகத்தில் எங்குமே இல்லை. என்னை போல. கல்லூரியில் யாராவது ஒரு பையன் ஒரு பெண்ணோடு மரத்தின் கீழே எதிரெதிராக நிற்கும் அளவுக்கு துணிவு காட்டினால் போது. அறிவு வளராத பையங்களை விட்டுவிடுவோம். எவ்வளவோ அறிவாளியான ஆசிரியர்களின் கண்களும் அவன் மேல்தான். என் தம்பி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் ஜன்னல் வழியாகக் கண்களாலேயே பேசினான் என்பது தெரிந்து நான் எவ்வளவு கோபித்துக் கொண்டேன். கலாட்டா செய்தேன்.

ஏப்பம் வந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த ஜனங்கள், பொதுவான இடங்களில் பெஞ்சுகளின் மேல் – அந்தப் பக்கமே நடந்தான்.

பெஞ்ச் ஒன்றின் மேல் பீட்டில்ஸ் கிராப் வைத்திருந்த ஒரு பையன் சிவப்பு உடையணிந்த ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு அவள் காதுகளைக் கடித்தபடியே ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். கேசவன் நின்றான். அவள் நெளிந்தபடியே அவனுடைய ஸ்வெட்டருக்குள் கையை விட்டுத் தடவினாள். கேசவன் அங்கிருந்த கண்ணை எடுக்க முடியாமல் நின்றான். புரட்டாசி மாதத்தில் நாய்கள் மாத்திரமே.. அந்தப் பெண்ணின் மூடிய கண்களை விரல்களால் திறந்து நாக்கு நுனியால கலகலவென்று சிரித்துக்கொண்டே தள்ளினாள். கேசவன் முகத்தை திருப்பிக் கொண்டான். கள்ளத்தனமாகப் பார்த்தான். வெட்டுப் பட்ட பல்லியின் வால் துள்ளிவிழுந்து செயலற்றுப் போனதைப் போல. உள்ளேயிருந்து கலக்கியதைப் போல. “திஸ் இஸ் நோ கண்ட்ரி ·பார் ஓல்ட்மேன்”.

“எனக்கு இப்போது வயது 32 ஸ்டூவர்ட். தலைமுடி நரைக்க ஆரம்பிச்சுட்டுது. இளமையில் சிறுவயதில் இருந்த வியப்பும் உற்சாகமும் மறைஞ்சிட்டே வருது. இன்னும் ஒரு பெண்ணின் கையைக் கூட நான் தொட்டதில்லை. இதற்கு என்ன சொல்றே?” கேசவன் ஸ்டூவர்ட்டுக்கு சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

‘தேங்க்ஸ். வேண்டாம். நான் பைப்பிலேயே பிடிக்கிறேன். நீ சொல்வது வியப்பாக இருக்கிறது.’ என்று பைப்பைக் கடித்தபடி கேசவனுடைய சிகரெட்டைப் பற்றவைத்து பிறகு தன்னுடைய பைப்பைப் பற்ற வைத்துக்கொண்டு புகையை இழுத்து, “நீ மிகவும் அதிகமாக சிகரெட் பிடிக்கிறாய், கேசவா” என்றான். அவர்கள் இருவரின் ஐந்து, ஆறு மாத நட்பில் இதுதான் ஸ்டூவர்ட்டின் முதலாவது பர்சனல் ரியாக்ஷன். “நாக்கு எப்போதும் எதையாவது சுவைத்துக்கொண்டே இருக்கணும். அரைமணி நேரம்கூட சும்மா இருக்க மாட்டேன். யாரோடாவது எப்போதும் இருக்க வேண்டும். தனியாக, எதுவும் செய்யாமல், பிடிக்க சிகரெட் இல்லாமல் ஒருநாள் கழிக்க வேண்டி வந்தால் அநேகமாக நான் தற்கொலை செய்ஹ்டு கொள்வேன்.” சிவப்பு உடையணிந்த அந்தப் பெண் தன் நண்பனின் முகத்தைக் கைகளில் ஏந்தி ஆராதிக்கும் கண்களால் பார்த்தாள்.

“ஏன்?”

“தெரியாது பயம் – ஒருவித விசித்திரமான அச்சம்”

தாவி ஒரு ட்ரெயினில் ஏறப்போன கேசவனைத் தடுத்து நிறுத்தி, “நம்முடையது இரண்டாவது வண்டி. இது அல்ல” என்றான் ஸ்டூவர்ட். “இது என்னுடைய முதல் டியூப் பிரயாணம்” என்றான் கேசவன்.

“வாழ்க்கையில் ஒரு நோக்கம் வேண்டும் என்று அதனால் சொன்னேன். நோக்கம் இல்லாவிட்டால்…”

“எனக்கு நோக்கத்தில் நம்பிக்கை இல்லை. நோக்கமுள்ள கதைகளில் நம்பிக்கை இல்லை ஸ்டூவர்ட்.”

வண்டியின் கதவுகள் அலிபாபாவின் கதையில் வருவதைப் போலத் திறந்து கொண்டன். ஜனங்கள் உள்ளே நுழைந்தவுடன் மூடிக் கொண்டன. சிகரெட்டை விட்டுவிட்டால் மாதத்துக்கு 10 பவுண்டுக் காசு மிச்சப்படுத்தலாம். பத்து பவுண்டு காசை அந்த கள்ளச் சந்தை பஞ்சாபிக்குக் கொடுத்தால் இந்தியாவில் இருக்கும் தன் தாயாருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுக்கச் செய்வான். ஒரு மாசம், வாழ்க்கை ஓட்டுவதற்கு அது அவருக்குப் போதும். வறுமைத் துன்பம், தங்கைகளில் திருமணக் கவலை தீர்வதற்கு எடுத்து வைக்கும் முதல் அடி – நான்  சிகரெட்டை விடுவது. ஆனால் விட மாட்டேன். நான் இருக்கிறேனா செத்தேனா என்று நீ கவலைப் பட வேண்டாம். இந்த வீட்டை விட்டு நான் போகிறேன்’ என்று மாது எழுதியிருக்கிறான். என்னுடைய வாழ்க்கையைப் பற்றி இப்படி அவன் தீர்ப்பு கூறியிருக்கிறான். ஆனால் இன்று அந்தக் கவலை வேண்டாம். எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று ஸ்டூவர்ட்டோடு லண்டனுக்கு வந்திருக்கிறேன்…

“குறைந்தது கேன்சர் வரும் என்று பயத்திலாவது சிகரெட்டை விட்டால்..’ தனக்குள்ளேயே கவலைப்படுவதைப் போல ஸ்டூவர்ட் பேசினான்.

“அப்படி நான் எதையும் விடுவதில்லை, ஸ்டூவர்ட். நீ உன் கையில் பிடித்துக்கொண்டிருப்பது ஒரு பாம்பு என்று தெரிந்தால் என்ன செய்வாய் சொல்? டக்கென்று அதை அங்கேயே வீசி விடுவாய் அல்லவா? தர்ம சங்கடம், உள்ளேயே தப்பு, சரி என்னும் போராட்டத்திற்குப் பிற்கு ஒரு தீர்மானதத்துக்கு வருவதில்லை அல்லவா? அப்படி வர வேண்டும் ஆன்ம ஞானம்”

“ஆன்ம ஞானம், ஆன்மாவை விமர்சிக்கும் சக்தியினாலும் சக்தியிலிருந்தும் பண்பாட்டில் இருந்தும் வருகிறது என்று நான் நினைக்கிறேன் கேசவ்..”

“தப்பு, இதோ பார்! எனக்கு ஆன்ம ஞானம், ஆன்மாவை விமர்சிக்கும் சக்தி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த ஆன்ம ஞானமும் நான் முதலிலேயே நிச்சயப்படுத்திக்கொண்ட ஆன்மாவின் ஞானம். வீட்டிலிருந்தபோது சில தடவை நினைத்தது உண்டு. இப்படி நான் வேண்டிக் கொள்வதும், தாய் மேலும் ,தம்பிகளின் மேலும் கோபத்தைக் காட்டிக் கொண்டிருப்பதும் எனக்கு விபரீதமான ஸெல்·ப்-லவ் இருப்பதால்தான். இது தப்பு-என் வாழ்வு முழுவதும் விஷத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்று. அப்படிப் பார்த்தால் ஒரு வாரத்திற்கு எல்லாம் சரியாக நடக்கும். ஆனால் ஏதாவது கொஞ்சம்
மீறினாலோ குறைந்தாலோ போதும்.. என்னுடைய சுபாவம் மறுபடியும் படம் எடுத்துச் சீறும். அதற்காகத்தான் கையில் இருப்பது பாம்பு என்று தெரிந்து கொண்டவனுடைய உதாரணத்தைச் சொன்னேன். ஆன்ம ஞானம், டக்கென்று வரணும். உயிர் தலைகீழாகி, புதிதாக ஆவது அப்படித்தான். இல்லாவிட்டால் நாம் எப்போதும் முன்பே நிச்சயமானதைப் பற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்போம். ஆன்ம ஞானம் என்னும் மயக்கத்தில் திண்டாடிக் கொண்டிருப்போம். அதனால்தான் எனக்கு லட்சியத்திலோ, லட்சியம் பற்றிய கதைகளிலோ நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். எல்லா லட்சியமும் முன்னதாகவே நிச்சயிக்கப்பட்டதுதான்.. என் சொற்பொழிவை மன்னித்துக்கொள். இந்தியர்கள் முடிவில்லாமல் பேசுவதில் நிபுணர்கள்’ – திடீரென்று முழுவதும் தனிப்பட்டதான தன் அனுபவத்தைப் பற்றிய பேச்சு வெளியிட்டதில், கூச்ச சுபாவமுடைய அந்த ஆங்கிலேயன் என்ன நினைத்தானொ? கேசவன் ஆர்வத்தோடு ஸ்டூவர்டைப் பார்த்தான்.

“தேங்க்ஸ் ·பார் த அட்வைஸ்” என்று ஸ்டூவர்ட் குப்பைத் தொட்டி அருகே போய் தன் பைப்பை வீசி எறிந்துவிட்டு வந்து “என்னுடைய நாடகத்தை மன்னித்துவிடு “ என்றான்.

“இப்பொழுது உனக்கு பைப் விஷயத்தில் தோன்றியதைப் போல எனக்குத் தோன்றியதை செய்வதானால் ஒன்று, அதோ அங்கே சிவப்பு ட்ரெஸ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்க வேண்டும் அல்லது இந்த தண்டவாளங்களில் பாய வேண்டும்” என்று சொல்லி கேசவன் சிரித்தான். மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு பல நாட்களாகத் தான் யோசித்து வந்ததைப் பற்றிச் சொற்களைக் கூட்டி “எனக்கொரு சித்தப்பா இருந்தார். ஒருநாள் அவர் வீடு வாசலை எல்லாம் விட்டு பத்ரிகாசிரமத்திற்கு தவம் செய்யப் போனார்.. உன்னுடைய கதையே வேறு. நீ இங்கிலாந்தின் உயர்ந்த நாகரீகத்தின் சிறந்த விளைச்சல். என் சித்தப்பா இந்திய நாகரீகத்தின் மிகச் சிறந்த விளச்சலாக இருந்ததைப் போலவே. ஒருவன் தவசி. இன்னொருவன் நாகரிகமுடையவன். நாகரிகமுடையவன் தன் வாழ்க்கையின் குற்றங்குறைகளைத் திருத்திக்கொண்டு வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியில் நடத்திக்கொண்டு போவான். நான் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கே இன்னும் தெளிவாகவில்லை. என்றாலும் இப்படித் தோன்றுகிறது. நீ நாகரிகமுடையவன் , அவன் தவசி, நான்…”

“நீ” என்று ஸ்டூவர்ட் சிரித்துக்கொண்டே, “ஓ, ஐ மிஸ் மை பைப்’ என்றான்.

“நான் வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லாத, முழுமையான இயல்புடைய, நாகரிகமுடையவனாகவும் ஆக முடியாமல், தவசியும் ஆக முடியாமல் தவிக்கிறவன்” என்றான் கேசவன் சிகரெட்டை இழுத்து புகையை வெளியே விட்டபடி “ஒரு சிகரெட் எடுத்துக் கொள்” என்று ஸ்டூவர்ட்டுக் கொடுத்து தீக்குச்சியைக் கிழித்துப் பற்ற வைத்தான். ஸ்டூவர்ட் மௌனமாக இருப்பதற்கு விரும்பலாம் என்று அவனுடைய முக பாவத்திலிருந்து தெரிந்து கொண்டு கேசவன் பாய்ந்து வருகிற பேச்சுக்களை எல்லாம் விழுங்கிக் கொண்டான்.

(தொடரும் – ஷார்ஜாவின் அசல் இலக்கியவாதி டைப் செய்து கொடுத்தால்!)

***

நன்றி :யு.ஆர். அனந்த மூர்த்திநேஷனல் புக் டிரஸ்ட்

***

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

டாக்டர் யூ.ஆர். அனந்தமூர்த்தி : பிறப்பு: டிஸம்பர் 21, 1932. ஊர் : சிவமொக்க மாவட்டத்து தீர்த்தஹள்ளி வட்டத்து பேகுவள்ளி. மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ (ஆங்கிலம்). பர்மிங் ஹாமில் ரிச்சர்ட் ஹாகர்ப் தலைமையில் பி.எச்.டி. மைசூர்ப் பல்கலைக் கழகத்தின் மாநஸகங்கோத்தி பட்ட மேற்படிப்புத் துறையில் ரீடர் (ஆங்கிலம்), ஹோமி பாபா ·பெலோஷிப் பெற்றார் (1972-74). அயோவாவில் நடந்த World Writers Meetஇல் பேராசிரியராக 6 மாத கால அழைப்பின் பேரில் சென்றிருந்தார். நூல்கள் : எந்தெந்தூ முகியதகதெ, பிரசனெ, மௌனி (கதைத்தொகுப்புகள்), ஸ்ம்ஸ்காரா (ஜனாதிபதி பரிசு பெற்ற திரைப்படக் கதை), பாரதீபுர (நாவல்கள்), பிரக்ஞெ மத்து பரிஸர, ஸன்னிவேச (விமரிசன நுல்) உள்ளிட்ட பல.  நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அக்காதெமியின் தலைவராகப் பணியாற்றியவர். ஞானபீட விருது பெற்றுள்ளார்.

***

+

To The Point with U R Ananthamurthy (youtube)

1 பின்னூட்டம்

 1. தாஜ் said,

  09/07/2013 இல் 07:17

  இதற்கு நான்
  சிறப்பாக என் விமர்சன வரிகளை
  பதிவு செய்யனும் என்பதால்…
  இங்கே… இப்போது…
  எதையும் எழுதாது விடுகிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s