சலிப்பைப் போக்கும் சந்திரபாபு பேட்டி

‘தென்றல்திரை’யில் 15.11.1955 அன்று வெளிவந்தது. தமிழ் திரைப்பட ஆய்விதழான ‘காட்சிப்பிழை’யின் ( ஜுன்2013) பரணிலிருந்து , நன்றியுடன் பதிவிடுகிறேன்.

இதே ‘காட்சிப்பிழை’யில்  கலாப்ரியா ஐயா ‘வழிந்தும் வழியாமலும்’ சுவாரஸ்யான சுவரொட்டி ஒட்டியிருக்கிறார். நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து ‘திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன?‘*1 என்றெல்லாம் பாடிய ‘இஸ்லாமியப்பாடகி’ ராணிதான்  தேவதாஸ் படத்தில் வரும் ‘எனது வாழ்வின் புனித ஜோதி எங்கே சென்றாயோ?’வை பாடியவராம். வியந்தேன். ராணி, எங்கே சென்றாயோ? ‘தமிழகத்தின் மர்லின் மன்றோ’வான டி.ஆர்.ராஜகுமாரி பற்றிய விரிவான கட்டுரையும் இருக்கு. எழுதிய பா.ஜீவசுந்தரி, ‘ஒரு கண்ணைச் சுருக்கி சதிவலை கோர்த்துப் பின் பல்வரிசை தெரியச் சிரித்து தன் எதிரே இருக்கும் நாயகனையோ அல்லது மற்றவரையோ கவிழ்க்கும் வேலையில் ஈடுபடும் வேளையில் ரசிக மனங்களையும் ஒரு சேரக் கவிழ்த்துச் சென்றவர் ராஜகுமாரி’ என்று எழுதும்போது என் அஸ்மாவைக் குறிப்பிடுகிறாரோ என்று குழம்பி விட்டேன்! எங்கோ போகிறேனே, சந்திரபாபுவைப் பேட்டி எடுத்த தோழர் சியெனஸ் சொல்வதை முதலில் பார்ப்போம்:

தென்னாட்டுத் திரைப்பட ‘காமெடியன்’களில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளவர் தோழர் சந்திர பாபு ஆவார். அவரை ‘தென்றல் திரைக்கு பேட்டி காண ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். ‘வரவேற்பு என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்பதெல்லாம் அவர் வீட்டிற்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தெரிந்துகொள்ளலாம். அவரிடம் பேசிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் எத்தைகைய அறிவுத்திறன் படைத்தவர் என்பதையும் அவர் எத்தகைய வெள்ளையுள்ளம் கொண்டவர் என்பதையும் புரிந்து கொண்டேன், நானும் எத்தனையோ பேட்டிகளுக்குப் போயிருக்கிறேன். தோழர் சந்திரபாபு அவர்களின் பேட்டியில் அலுப்பு சலிப்பு இல்லாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. பேட்டி முடியும்வரையில் ஒரே ஆனந்தம்தான்! அவருடைய குதூகலமான போக்குக்கு இப்பேட்டியே சான்று ஆகும்.

***
chandrababu2

சாப்ளிளை விரும்பும்  சந்திரபாபு இதோ…

உங்கள் சொந்த ஊர்?

என் சொந்த ஊர் தூத்துக்குடி

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்திருக்கிறேன்.

நடிக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி உண்டாயிற்று?

மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ, என்னைப் பொருத்தமட்டில் பதில் சொல்ல முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மனிதனுக்குள் அந்த உணர்ச்சி (நடிப்புணர்ச்சி) எந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி மனதிற்குள் புகுந்துவிடுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியது. இதுபற்றி வேண்டுமானால் திரையில் ஒரு கட்டுரையே எழுத முயற்சிக்கிறேன்.

நடிகனுக்கு அரசியல் தேவையா?

நடிகனும் மனிதன்தானே! ஆனால் கலைஞன் ஒரு நாட்டின் பொதுச் சொத்து. அவன் நாட்டுக்குடையவன். நாட்டிலே பற்பல கட்சிகள் இருக்கும். கலைஞன் அவனுக்குப் பிடித்த கட்சியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தான் கலைமேடையில் தோன்றும்போது தன் கட்சிக் கருத்துக்களை அவன் வெளிக்காட்டக் கூடாது. ஏன் என்றால் அரசியல் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது கலை. இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதக்கூடாது என்பது என்
கருத்து.

உங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனாவது தொடர்பு உண்டா?

நாட்டிற்கு எந்த ஒரு கட்சி உண்மையான தொண்டுபுரிகிறதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றத் தயாராக இருக்கிறேன். இன்னும் சேரவில்லை. கட்சியைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

தென்னாட்டுத் திரைப்பட உலகத்தைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அமெரிக்காவுக்கு அடுத்தபடி – ஏன் அமெரிக்காவை விட முன்னேறிவிட முடியும். முன்னேற வசதிகள் இருக்கின்றன. அது வளர்ந்து கொண்டும் வருகிறது. ஆனால் நம் நாட்டு மக்களை ஏதோ சாதாரண கை பொம்மைகளாக நினைக்கும் ஒரு சில முட்டாள் ப்ரொடியூசர்கள் (இதைச் சொல்ல நான் சற்றும் அஞ்சவில்லை. இது என் சக நடிகர்களுக்கு) இந்த சினிமா உலகத்தை விட்டு ஒழிந்தால்தான் தென்னாட்டுத் திரைப்படங்கள் பிரசித்தியடையும் என்பதில் சந்தேகமேயில்லை.

உங்களுடன் நடிக்கத் தகுந்த நடிகை யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இந்தக் கேள்வி சிரிப்பைத்தான் உண்டாக்குகிறது. என்னுடன் நடிக்கத் தகுந்த நடிகையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

உங்களுக்கு நகைச்சுவைக் கட்டங்களில் மட்டும்தான் நடிக்க வருமா?

நீங்கள் என்னை ஒரு நகைச்சுவை நடிகன்  என்ற முறையில் பேட்டி காண வந்திருக்கிறீர்களா? அல்லது ஒரு நடிகன் என்ற முறையில் காண வந்திருக்கிறீர்களா?

(நடிகர் என்ற முறையில்தான் காண வந்தேன்)

ஒரு நடிகன் தனக்கு எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை செம்மையாகவும், அழகாகவும் நடித்து அதைப் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்துபவன்தான் உண்மையான நடிகன். ஆனால் எனக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படாததால் மேற்கூறியவற்றை நிரூபிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போது செய்தே தீருவேன்.

உங்களுக்குப் பிடித்த ஆங்கில நடிகர் யார்?

மேல்நாட்டில் நம் நாடு மாதிரி ‘இவனை விட்டால் அவன், அவனை விட்டால் இவன்’ என்கின்ற மாதிரியில் நடிகர்கள் இல்லை. அங்கு ஆயிரக்கணக்கில் நடிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இப்போது வயது 27 ஆகிறது. 14 ஊமைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ‘ஜூடா ஆ·ப் வாலன் டினே’விலிருந்து அடால்ஃப் மஞ்சு,  டக்லஸ் பயர்பாங்க்ஸ் சீனியர் ,  பாக்தாத் திருடன் (The Thief of Bagad) என்ற படங்களிலிருந்து போன மாதம் இளம் வயதிலேயே இறந்துபோன ஜேம்ஸ்டீன் வரைக்கும் எனக்குப் பிடித்த நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் குறிப்பிட முடியாமல் போனாலும் எவ்வளவோ பேரைப் பற்றிச் சொல்ல முடியும். இவர்கள் எல்லோரிலும் சார்லி சாப்ளினுக்கு  என் உள்ளத்தில் தனிப்பட்ட ஒரு இடமுண்டு. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த அறிவாளி .  நானும் அப்படி ஆக எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்னால் அப்படி ஆக முடியுமா? உங்களுக்குத்தான் வெளிச்சம்.

நடிப்பிற்கு இலக்கணம்  கூறமுடியுமா?

ஒரு துளி தண்ணீரை வைத்துக்கொண்டு ஆழ் கடலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது? நான் துளி நீருக்குச் சமமானவன். மன்னிக்கவும். நடிப்பிற்கு இலக்கணம் கூறமுடியாத நிலையில் உள்ளவன்.

தமிழ்ப்பட உலகில் குறைகள் என்ன?

குறைகள் என்ன இருக்கிறது! பட முதலாளிகள் தங்களுடைய சக்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். டைரக்டர்கள் நடிக, நடிகைகள் தங்கள் தங்கள் சக்திகளைத் தெரிந்து கொண்டால் போதும். மேலும் சக்தியை மறந்து ‘சப்பாத்தி தின்கிற’ பசங்களுக்கு அதிகமாகக் கொடுக்காமல் இருந்தால் போதும். காரணம், சமீபத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருந்தில் அவர்கள் நடந்துகாண்ட விதம் மிக மோசமானது. நான் அங்கு செல்லவில்லை. நான் சென்றிருந்தால் நிலைமை என்ன ஆகி இருக்குமோ எனக்குத் தெரியாது. ஏன் என்றால், நான் அப்படிப்பட்டவன். அவமரியாதையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவன். இந்தச் சம்பவம் பற்றியும் ஒரு கட்டுரை திரையிலேயே எழுதுகிறேன்.

ரௌடி வேஷங்களில் நன்றாக சோபிக்கிறீர்களே ஏன்?

‘களவும் கற்று மற’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவுதான் பெரிய மனிதன் ஆனாலும் சரி, என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், இப்போது தத்துவம் படித்துக்கொண்டிருக்கிறேன். மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி சாக வேண்டும் என்று கூட என்னால் எழுதமுடியும். இவ்வளவு இருந்தும் அந்தப் பழைய ‘பொறுக்கி புத்தி’ போகமாட்டேன் என்கிறது. காரணம் என் வாழ்க்கை ஜிம்கானா பால்ரும் டான்ஸ் போன்ற ஆடம்பர வாழ்க்கை முதல் சாதாரணப் பொறுக்கி உணர்ச்சி வரை ‘தண்ணி’ப்பாடமாகி விட்டது.  நான் உண்மையுள்ளவன் என்ற காரணத்தால்தான் நான் நடிக்கும் ஒரு சில பாத்திரங்கள் ‘பொறுக்கிகளே’ பார்த்து அலறும்படியாக அமைந்து விடுகிறது.

உங்களுக்குப் பிடித்த தமிழ்ப் படமெது?

ஊம்! ஒன்றுமில்லை.

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படமெது?

எதுவும் இல்லை!

உங்களுக்கு ஏதாவது லட்சியம் உண்டா?

கலைஞனாக வாழ்ந்து கலைஞனாகச் சாகவேண்டும் என்பது என் லட்சியம்.

திரையுலகில் நுழைவதற்கு உங்களுக்கு வழிகாட்டியவர் யார்?

அதுவா, (அலுத்துக்கொண்டே) அது ஒரு பெரிய கதை; ஆதியும் அந்தமுமாகச் சொல்ல முடியாது. எப்படி ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை, சோகம் , உச்சநிலைகள் (Climax) இருக்கின்றனவோ அதுபோன்றுதான் என் வாழ்க்கை. யார் கூட்டிக்கொண்டு போனார்கள் என்பதெல்லாம் பெரிய கதை. முதலில் என்னை அழைத்துச் சென்றவர் பி.எஸ்.ராமய்யா அவர்கள். அதன் பிறகு நாலரை வருஷங்கள் யாருமே சட்டை செய்யவில்லை. காரணம் நான் ஒரு லூஸ், கிராக் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் நம் கோஷ்டியாகிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை…. வணக்கம்.

***

நன்றி : காட்சிப்பிழை

***

*1 : கவிஞர் சலீம் இயற்றிய பாடல்

***

தொடர்புடையவை :

1-3-64-இல் வெளி வந்த இன்னொரு பேட்டி. நன்றி, விகடன்  (நன்றி : அவார்டா கொடுக்கறாங்க?)

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும் – எஸ்.ராவின் பதிவு

***

கடைசியாக – துபாயில் ஆபிதீன் விரும்பிக் கேட்கும் – ஒரு ‘காமெடி’ பாட்டு…

Thanks to : MegaSeLvA86

15 பின்னூட்டங்கள்

 1. அனாமதேய said,

  25/06/2013 இல் 13:44

  //கடைசியாக – துபாயில் ஆபிதீன் விரும்பிக் கேட்கும் – ஒரு ‘காமெடி’ பாட்டு// கடைசியாக.. துபாயில்…?

 2. அனாமதேய said,

  25/06/2013 இல் 13:47

  நான்…
  தாஜில்ல எழுதினேன்.
  எப்படி அனாமதேயமாகும்?

  • 25/06/2013 இல் 15:44

   உண்மை வேர்ட்பிரஸ்ஸுக்கும் தெரிஞ்சிடுச்சி போல ! (உங்கள் மின்னஞ்சல்/ பெயர்/ வலைப்பக்கத்தை தெரியப்படுத்தினால் சரியாக வரும் தாஜ்)

 3. 26/06/2013 இல் 10:26

  ஆபிதீன் அடிக்கடி அஸ்மாவை இழுக்குறீர்கள், இது நல்லதல்ல…! கடைசியில் வாசல்லெ கேட் கீப்பராக நிற்கவேண்டிவரும்.

 4. 26/06/2013 இல் 12:22

  எனக்கு சிறுவயதில் பிரமிப்புத் தந்த சிலரில் ஒருவர் சந்திரபாபு….
  மனிதம் மட்டுமே கொண்ட வெகுசில மனிதர்களிலும் ஒருவர். படித்ததும் மனம் நிறைவாக இருக்கிறது. நல்ல இடுகை.

 5. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  26/06/2013 இல் 18:45

  ரொம்ப அருமையான பாடல். ஒரு காலத்தில் சந்திரபாபுவின் ஏராளமான பாடல்களை மனனம் செய்து, அவர் குரலில் ஓரளவு அவரைப் போல் ஹனிபாக்கா பாடுவார். இப்ப பாடினால், சந்திரபாபுவின் ஆத்மா வந்து கழுத்தை நெரிச்சுக் கொன்றுபோடும்.

  அருமை நண்பன் உமா வரதராசனும் சந்திரபாபுவின் பெரும் ரசிகன். இலங்கை அரசு தொலைக்காட்சியில் வாராவாரம் அவர் வழங்கி வரும் அழியாத கோலங்கள் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட சந்திரபாபுவின் அனைத்துப் பாடல்களையுமே ஒளிபரப்பி விட்டார். அவருக்குப் போட்டியாக ஆபிதீன் வேறு.

  • 27/06/2013 இல் 09:33

   காக்கா, இப்ப நீங்க பாடினால் நானே அங்கேவந்து கழுத்தை நெரிப்பேன்!

  • 01/07/2013 இல் 16:41

   ஹிஹி நம்மளும் அப்டிதான்! மேடைலல்லாம் பாடிருக்கோம். இப்பவும் பாடுவோம்னு சொல்……லி முடிக்கிறதுக்குள்ள பொரடில சொடேர்! (அடி ஃப்ரம் அல்கூZ) 🙂

   • 02/07/2013 இல் 09:45

    வாய தொறந்தாலே அடி விழும் – ஆச்சியிடமிருந்து(ம்)!

 6. 27/06/2013 இல் 13:03

  அதுவரை சிரிப்பூட்டும் ஜோக்கராக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஜெயகாந்தனின் ‘கலையுலக அநுபங்களின்’ மூலம் தான் சந்திரபாபுவின் off screen personality தெரிய வந்தது.

  • 02/07/2013 இல் 09:47

   அமீன்பாய், இயலுமானால் அந்தப் பகுதியை ஸ்கேன் செய்து அனுப்புங்களேன். நான் டைப் செய்து பதிவிடுகிறேன். நன்றி.

   • 03/07/2013 இல் 08:45

    நாகையில் நூலகத்தில் படித்தது. புத்தகம் கைவசம் இல்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s