786வது பதிவு. இதுவா மெஹ்ராஜ்…..??????!

டூர் போகும் அவசரத்திலும்,   கஜல் கேட்காத நானாவின் அன்புக்காக பதிவிடுகிறேன்…

***

இதுவா மெஹ்ராஜ்…..?????? – ஹமீது ஜாபர் கட்டுரை

Mehraj

ஓரிறைக் கொள்கையும் இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. “லா இலாஹா இல்லல்லாஹு……” என்று தொடங்கும் மூல மந்திரம் முதலில் “லா” ‘இல்லை’ என்கிற எதிர்மறை வார்த்தயை முதலில் கையாளுகிறது. அடுத்து வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் என்ற பெயருடைய இறைவன் ஒருவனைத் தவிர என்று உறுதியுடன் சொல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக குர்ஆனில் ‘இஹ்லாஸ்’ (ஏகத்துவம்) என்று சொல்லக்கூடிய 112 ம் அத்தியாயத்தில் (1) “கூறுவீராக இறைவன் ஒருவன். (2) அவன் எந்த தேவையும் அற்றவன். (3) அவன் எவரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவும் இல்லை. (4) அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை.”

இங்கே அவன் என்று குறிப்பிடுவது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. ‘அவன் என்ற வார்த்தைக்கு பன்மை கிடையாது,  உயர்திணை. அவர், அவள் என்ற சொல் ஒருமை அதற்கு பன்மை அவர்கள்’ என்று பழைய லிஃப்கோ தமிழ் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று உருவாகவேண்டுமென்றால் அதற்கு மூலம் என்று ஒன்று வேண்டும். இப் பிரபஞ்சத்தின் மூலம் பெருவெடிப்பு என்கிறார்கள், அதேபோல் உயிரினங்களின் மூலம் தண்ணீர் என்கிறது அறிவியல். ஆனால் இறைவன் என்ற சொல்லுக்கு அல்லது சக்திக்கு மூலம் எதுவும் கிடையாது. அது மூலமற்ற ஒன்று. வேறு வார்த்தையில் சொன்னால் முதலும் முடிவும் அற்றது.

மனித இனம் தோன்றி பல்கிப் பெருகி உலம் முழுவதும் வியாபித்தபின் மூல இறைவனை மறந்து எதையெல்லாம் நினைக்கிறார்களோ அதையெல்லாம் என் இறைவன் என எண்ணிலடங்கா இறைவனை உருவகப்படுத்தினர்.  இத்தகைய அவல நிலையை நீக்கவே இறைதூதர்கள் தோன்றினார்கள் என்கிறது இறைமறை. இறுதியாக தோன்றிய நபி ரசூல்(சல்) அவர்கள் மேலே சொன்ன அத்தியாயத்தை, ஓரிறைக் கொள்கையை நிறுவி இஸ்லாத்தை நிறைவு செய்தார்கள்.
பெருமானார் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பரப்புங்கால் “மக்களின் அறிவுக்குத் தகுந்தாற்போல் பேசுங்கள்” என்ற இறை அறிவிப்பு வந்தது. அதன் பிறகு கேட்போரின் அறிவு ஏற்றுக்கொள்ளும் வகையில் இறைவனையும் அவனது படைப்பினங்களையும் வகைப்படுத்தி பேசினார்கள்.

அவர்களின் மறைவுக்குப் பின் வந்த இறைநேசர்கள் பெருமானாரைப் பின் பற்றியே மார்க்க பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதேநேரம் அகமியத்தின் உண்மை நிலையை மறைக்கவுமில்லை, தகுதியுள்ளவர்களுக்கு போதனையும் செய்தார்கள். நாகரீகம் வளர வளர காலப்போக்கில் இஸ்லாம் அதன் தூய்மையை இழந்து, எது இறை கொள்கையோ அது மறைந்து இறைவனுக்கு அருவுருவ நிலையை கற்பித்து அருவநிலை என்பது வெறும் சொல்லாடலாக இருந்துவருகிறது.

இதற்கு சிகரம் வைத்தார்போல் அறிவிற்சிறந்த மார்க்க அறிஞர் ஒருவர் “இறைவனுக்கு உருவம் இருக்கிறது, நாளை மறுமையில் அவனது கால்களைக் கண்டபிறகே சொர்க்கம் செல்வோம்” என்று சில வருடங்களுக்கு முன்பு பறை சாற்றினார்.

இப்போது வெறொரு அதிர்ச்சி சென்ற 6-6-13 அன்று முகநூலில் வந்த மேலே உள்ள படம் என்னை நிலைகுலைய செய்துவிட்டது. (வெளியீடு: ISLAM4PEACE)

ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை இறைவன் தந்தருளியிருக்கிறான். அந்தவகையில் ரசூல்(சல்) மெஹ்ராஜ் மூலமாக சிறப்பைக் கொடுத்தான். இது எப்படி நடந்தது என்ற உண்மை நிலை பெருமானார் அவர்களுக்கு மட்டுமே தெரியும். உண்மையைச் சொன்னால் மக்களுக்குப் புரியாது அதே நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும், மறைக்கக்கூடாது எனவே எல்லோருக்கும் புரியும்படி ரத்தினச் சுருக்கமாக விளக்கினார்கள்.

இறைவன் மெஹ்ராஜைப் பற்றி என்ன சொல்கிறான் குர்ஆனில்? “ஓர் இரவில் தன் அடியாரை புனிதமிக்க ஹரம் ஷரீஃபிலிருந்து மஸ்ஜிதில் அக்ஸா வரை அழைத்துக்கொண்டுபோன இறைவன் தூய்மையானவன்” என்று சொல்கிறான். இதற்கு ‘இஸ்ரா’ என்று பெயர். அதன் பிறகு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து அறுஷே மு அல்லாஹ்வில் இறைவனை சந்தித்தது மெஹ்ராஜ்.

மெஹ்ராஜ் என்ற சொல்லுக்கு ஏணி, ஏறிப்போகுதல் என்று அர்த்தம். ஏறிப்போகுதல் என்றால் சட உலகில் ஒவ்வொரு படியாக கால் வைத்து ஏறிப்போதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகுதல்; Basement லிருந்து superior நிலைக்குச் செல்லுதல்; கீழ்த்தரமான மனிதக்கட்டுபாடுடைய சட உலகிலிருந்து material அல்லாத spritual நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனை தடைகள் அல்லது திரைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்று பொருள் கொடுக்கிறார்கள் சூஃபியாக்கள்.  முதலில் ஒரு திரை வரும் அப்புறம் ஒரு திரை வரும் இப்படி ஏழு திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை; மறு திரை எனக்கு அறிவு இருக்கிறது என்ற நினைப்பு, கர்வம் என்ற திரை; மறு திரை கோபம் என்ற திரை இப்படி ஒவ்வொரு திரையை கடக்கும்போது தான் யார் என்பது தெரியும். எந்த நிமிடத்தில் தான் யார் என்பது புரிகிறதோ அந்த நிமிடத்தில் இறைவனை சந்தித்தீர்கள் என்று பொருள். எனவே எங்களுக்கு மெஹ்ராஜின் பாக்கியம் கிடைக்காதா? நாங்கள் செய்ய முடியாதா ? என்று நபி தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கேட்டபோது, “அஸ்ஸலாத்துல் மெஹ்ராஜுல் முஃமினீன்” – தொழுகை ஈமான் கொண்டவர்களுக்கு மெஹ்ராஜாய் இருக்கும் என்று நபிகள் பிரான் நவின்றுள்ளார்கள்.

மெஹ்ராஜின் தாத்பரியம் / உண்மை நிலை பற்றி  இங்கே பதிவிடப்பட்டு விட்டது. இல்லாமல் , படம் வரைந்து காண்பித்திருப்பது மிகப்பெரிய அபத்தமாக உள்ளது. வானத்தின் எல்லையை நிர்ணயிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன சுழலில் தட்டுத் தட்டாக வானத்தை விளக்கியிருப்பது மெஹ்ராஜை கொச்சைப் படுத்துவதாகும்.

இறைவன் உருவமற்றவன். உருவமற்ற ஒன்று உருவமுள்ள ஓரிடத்தில் எப்படி இருக்க முடியும்? தட்டுத்தட்டாக காண்பிக்கப்படும் வானத்தில் ஒரு தட்டுக்கும்/வானத்துக்கும் மறு தட்டுக்கும் /வானத்துக்கும் எத்தனை தூரம்? அங்கேதான் அல்லாஹ் இருக்கிறான் என்றால் மற்ற இடங்களில் இல்லை என்பது மட்டுமல்ல அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்ற பொருள் வருகிறது? அல்லாஹ்வுக்கு இருப்பிடம் தேவை என்பதாகிறது. “அல்லாஹு சமது’ – எந்த தேவையும் அற்றவன் என்ற இரண்டாம் வசனம் பொய்யாகிறது. மொத்தத்தில் சூறா இக்லாஸ் (ஏகத்துவம்) பொய்யாகிறது.

இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையையும், குர் ஆனையும் ஏளனப்படுத்தும் இத்தகைய வரைபடங்களை வைத்து பெருமைப் படும் இஸ்லாமிய சகோதரர்களை என்னவென்று சொல்வது? அல்லது பரப்புரை செய்யும் மார்க்க விற்பன்னர்களை எந்த கோணத்தில் பார்ப்பது?

சகோதரர்களே ! சற்றே சிந்தியுங்கள்.. தெளிவு கிடைக்கும் வரை சிந்தியுங்கள்…

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

1 பின்னூட்டம்

  1. அனாமதேய said,

    08/06/2013 இல் 18:41

    Only for those who think


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s